அஸ்திவாரம்

Friday, April 24, 2020

காலம் செய்த கோலமடி. கடவுள் செய்த குற்றமடி.


அந்த 42 நாட்கள் -  12
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 3 வரை)


21 நாள் பந்தயம் தொடங்கி விட்டதல்லவா?வீட்டுக்குள் இருக்கின்றீர்கள்? வேறு வழியில்லை? எப்படியுள்ளது?

மகள்கள் என்றால் பிரச்சனைகள் புதுவிதமாகவும், மகன்கள் என்றால் இம்சைகள் வேறுவிதமாகவும் இருக்கிறதா? சபாநாயகர்கள் வீட்டுக்குள்ளே மொத்தக்கூட்டத்தையும் வைத்துக் கொண்டு சமாளிக்க வந்து விழும் வார்த்தைகள் அனைத்தும் சபைக்குறிப்பில் கொண்டு வர முடியாததாகவும் உள்ளதா?



உறவுக்கூட்டம் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாகப் புலம்புகின்றார்கள்.

அதிலும் ஒற்றைப் பிள்ளையைப் பெற்றவர்கள் கதறுகின்றார்கள். இதுவரையிலும் எவ்விதக் கட்டுப்பாடுகளையும் விதிக்காமல், பழக்காமலிருந்தவர்கள் இப்போது ஒவ்வொரு சட்டத்தையும் அமல்படுத்த அமுளி துமுளியாகிக் கொண்டிருக்கிறது.

ஒருவர் சொல்கின்றார். "புதுக்கார். விலையுயர்ந்த கார். ஆசைப்பட்டு வாங்கினேன். அலுவலகம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். குடும்பத்துடன் வெளியே செல்ல முடியவில்லை" என்கிறார். இவர் மத்திய அரசுப் பணியாளர்.

"மருத்துவத் துறைக்கு ஒரு மாதச் சம்பளத்தை எடப்பாடி கொடுத்துள்ளார். நாங்கள் போராட்டம் செய்த போது எங்களை அடக்கி ஒடுக்கி வைத்தார் அல்லவா? அது தான் பகவான் வைரஸ் ரூபத்தில் வந்துள்ளார்" என்கிறார். இவர் மாநில அரசு ஊழியர்.

"வச்சாண்டா ஆண்டவன் ஆப்பு. மாச மாசம் ஜம்ன்னு சம்பளம் கிம்பளம்ன்னு அனுபவித்துக்கொண்டு இருந்தார்கள். இனி இவர்கள் நாலஞ்சு மாசத்துக்கு சம்பாதிக்க முடியாது. வச்சுருக்கிற பணத்தை வைத்து நாக்கை வழிக்கவா முடியும்"?

இவர் திருவாளர் பொதுஜனம்.  

ஒவ்வொருவர் பார்வையும் ஒவ்வொருவிதமாக உள்ளது. எல்லாவற்றுக்குள்ளும் ஏக்கம் தான் அதிகமாக உள்ளது. பொங்கி வழியும் பொறாமை மாறவில்லை. இருப்பவர்களுக்கு அனுபவிக்க வழியில்லையே என்ற ஏக்கம். இல்லாதவர்களுக்கு அடுத்த மாதம் ரேசன்கடையில் வரிசையில் தான் நிற்க வேண்டி வருமே என்ற ஆதங்கம்.

இரவு பகல் பாராமல் ஓடிக் கொண்டிருந்த சமூகம். உழைத்தால் கட்டாயம் உயர முடியும் என்று நம்பியிருந்த சமூகம். இரவுப் பணி என்பதனை இயல்பாக எடுத்துக் கொண்டே சமூகம். புதுப் புதுத் தொழில்கள். புதிய வாய்ப்புகள். நாம் கற்றுக் கொண்டு வளர்ந்து இங்கே வாழ்ந்து விட முடியும் என்று நம்பிய சமூகம் இப்போது மூச்சு வாங்கி நிற்கின்றது.

எதிரிகள் கண்களுக்குத் தெரிந்தால் எதிர்க்கமுடியும்? இது எதிரியா? எங்கே இருக்கின்றான்? ஆணா? பெண்ணா? திருநங்கையா? உருவம் உள்ளவனா? அருவமானவனா? எப்படி இருப்பான்? என்பது குறித்து எவருக்கும் தெரியவில்லை. நம்ப மறுக்கின்றார்கள்? புரளி என்கிறார்கள். புரியாமல் தடுமாறுகின்றார்கள். உருவான புதிய மாற்றத்தை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. எதிர்க்கவும் வழியில்லாமல் பைத்தியம் பிடிக்காத குறையாக இருக்கின்றார்கள்.

உளவியலில் மிகப் பெரிய கொந்தளிப்பு உருவாகியுள்ளதைக் கட்டுப்படுத்த வழி தெரியாமல் தடுமாறுகின்றார்கள். தினமும் குடித்துப் பழகியவர்களின் குடும்பத்தில் பெரிய பூகம்பம் உருவாகியுள்ளது. கடன் கொடுத்தவர்களைப் பார்த்து "அண்ணே எதுவாக இருந்தாலும் போனில் பேசுங்கண்ணே. நமது சந்தில் மூன்று பேர்கள் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியிருக்காங்கன்ணே" என்ற சந்தர்ப்பவாதிகளையும் உருவாக்கியுள்ளது.

தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருந்தவர்களை தனிமையாகியிரு. அமைதியாகியிரு என்று தான் வைரஸ் சொல்லியுள்ளது. சுயப் பெருமை பேசிப் பழகி, தம்பட்டம் அடித்து வாழ்ந்து வந்த சமூகம் இன்று தடுமாறுகின்றது. புதுப்பழக்கம் என்பதால் புரளிகளை வாட்ஸ்அப் ல் ஃபார்வேர்டு செய்து அமைதியாகிவிடுகின்றார்கள். ஆனால் தமிழர்கள் இன்னமும் பயப்படவில்லை என்பதனை காலையில் நடந்து செல்லும் போது பார்த்தேன்.

மளிகைக் கடைக்காரர் வாயில் முகமூடி போட்டுள்ளார். பத்துப் பேர்கள் இடித்துக் கொண்டு "அண்ணே எனக்கு முதலில் கொடுங்கள்" என்று அவசரப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். கடைக்காரருக்கு லாபத்தை விட்டுவிட மனதில்லை. வந்தவர்கள் லாபத்தை மட்டும் தருபவர்களா? இல்லை தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் என்று பாடலை பாட வந்தவர்கள் என்பதனை அவர் உணரத் தயாராகவே இல்லை என்பதனைப் பார்த்தேன். தூரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த என்னைப் பார்த்து கடைக்காரர் சொல்கின்றார். "அண்ணே வாங்க உங்களுக்கு ஒட்டாது" என்று கலாய்க்கின்றார். தெருவில் சிறுவர்கள் தோளில் கைபோட்டு உறவாடிக் கொண்டிருக்கின்றார்கள். பெண்கள் வாசலில் அமர்ந்து நவீன வாட்ஸ் அப் சமாச்சாரங்களைப் பரிமாறிக் கொண்டிருந்தார்கள். தேநீர்க்கடையில் மோடியைக் காரசாரமாக விமர்சித்துக் கொண்டிருந்தார்கள்.

நான் இருக்கும் பகுதியில் உயர் நடுத்தர வர்க்க வீட்டில் "கொரானா பாதிக்கப்பட்ட வீடு. உள்ளே நுழைய அனுமதியில்லை" என்று ஒட்டப்பட்ட காகிதத்தைப் பார்த்து இனம் புரியாத படபடப்பு வந்தது. எப்போதும் ஐந்து கார்கள் நின்று கொண்டேயிருக்கும் பரபரப்பான வீடது. இப்போது சுடுகாடு போலவே உள்ளது. நான் என் வீட்டுக்குள் வந்து இரண்டு முறை சோப்பு போட்டுக் கழுவினேன். கழுவினாலும் உடம்பு முழுக்க அதிர்வு அடங்குவதில்லை. திருப்பூரில் எந்தந்த பகுதியில் எத்தனை பேர்களுக்குத் தொற்று உள்ளது என்ற பட்டியல் வந்து கொண்டேயிருக்கிறது.

"என் தவற்றால் இது எனக்கு வந்தது" என்பதற்கும் "எவர் செய்த தவற்றால் இது எனக்கு வந்தது" என்பதனை உணர வாய்ப்பில்லாத இந்தச் சூழல் மனதில் உருவாகும் பயத்தை மறைக்க முடியவில்லை. உயிர் பயம் அறிமுகமாகின்றது. இந்த வைரஸ் படத்திற்கு இடைவேளை உண்டா? இல்லை நேரிடையாக க்ளைமாக்ஸ் தானா? உள்ளே வெளியே என்று வைரஸ் புரியாத மொழியில் விளையாட்டுக் காட்டுகின்றது. உன் குற்றமா? என் குற்றமா? யாரை நாம் குற்றம் சொல்ல என்ற பாட்டு அருகே ஒலித்த போது இதென்ன சிச்சுவேசன் சாங் என்று எரிச்சல் வந்தது.

வளர்ந்த மாநிலம் என்று சொல்லப்படும் தமிழகத்தில் தான் இந்த நிலைமை என்றால் வடமாநிலத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளைத் துண்டு காட்சிகளில் பார்க்கும் போது சிரிப்பதா? அழுவதா? என்றே தெரியவில்லை.
வடமாநிலங்களில் வாழ்பவர்கள் இன்னமும் "நோய்த் தொற்று" குறித்துப் புரிந்து கொள்ளவே இல்லை என்பது நன்றாகவே தெரிகின்றது.

மோடி கைதட்டச் சொன்னார் என்றதும் பலவிதமாகக் கைதட்டுகிறார்கள். சட்டி, பானையைப் போட்டுத் தட்டுகின்றார்கள். சாப்பிடுகின்ற தட்டை வைத்து ஒலி எழுப்புகின்றார்கள். கொண்டாட்ட மனநிலையில் அணுகுகின்றார்கள். ஊர்வலமாகச் செல்கின்றார்கள். அரக்கனை அழித்து விட்டோம் என்று கூச்சலிடுகின்றார்கள். கும்பல் கும்பலாக வெற்றி விழா கொண்டாடுகின்றார்கள். எல்லாவற்றையும் ஆன்மீக மனப்பான்மையிலேயே பார்க்கப் பழகிய மக்களை எப்படி இந்தியா அடுத்த சில வாரங்களில் எதிர்கொள்ளப் போகின்றது என்பதை நினைத்தாலே பயமாக உள்ளது.

"வீட்டுக்குள் இருங்கள். வெளியாட்கள், உறவினர்கள் யார் வந்தாலும் வீட்டுக்குள் அனுமதிக்காதீர்கள். உங்கள் ஒவ்வொருவரின் உயிரும் முக்கியம். கையெடுத்துக் கும்பிடுகிறேன்" என்கிறார் பிரதமர்.  அவர் கையெடுத்து  கும்பிட வேண்டிய அவசியமே இல்லை. அவர் கையெழுத்தை சில கோப்புகளில் போட்டாலே போதுமானது. அதையும் உடனே போட்டு முடித்தால் பத்துக் கோடி பேர்களாவது நிம்மதியாக வீட்டில் இருக்க முடியும். பல கோடி மக்களின் வாழ்த்துக்களையும் பெற முடியும். அதையும் உடனே போட வேண்டும். கூடவே அவர் அமைச்சர்களைப் போடச் சொல்ல வேண்டும்.

*சிறு, குறு நிறுவனங்கள் வங்கிக்குக் கட்ட வேண்டிய தொகையை 5 மாதங்கள் கழித்து வட்டியில்லாமல் சுலபத் தவணைகளில் செலுத்தலாம். வங்கிகள் அழுத்தம் கொடுக்காது. 

*மாதம் தோறும் செலுத்த வேண்டிய கடன்கள், தனியார் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களின் கடன் தொகைகளை ஐந்து மாதங்கள் கழித்து வட்டியின்றி கட்ட முடியும்.

•மாநில அரசாங்கம் கொடுக்கும் மக்களுக்கான உதவித் தொகையைக் கட்டாயம் வங்கிக் கணக்கு வழியே மட்டுமே கொடுக்க வேண்டும்.

•தனியார் மற்றும் அரசு இணையப் பயன்பாட்டில் உள்ள பணப்பரிவத்தனைக்கும் எவ்விதக் கட்டணமும் இல்லை.

•அடுத்த ஐந்து மாதங்கள் சுங்கவரி மையங்கள் செயல்படாது, இதைச் செயல்படுத்த மனமில்லாது போனாலும் சாலையில் பயணிக்கும் சரக்கு வாகனங்கள், அவசிய வாகனங்களுக்கு சுங்கவரிக்கட்டணம் ஏதுமில்லை.

•கூட்டுறவு பண்டக சாலைகள் மூலம் மக்களுக்குத் தேவைப்படும் உணவுப் பொருட்களை டோக்கன் சிஸ்டம் மூலம் அந்தந்த பகுதியில் உள்ளவர்களிடத்தில் நெருக்கடி இல்லாமல் மானிய விலையில் அளிக்கப்பட வேண்டும்.

•அந்தந்த மாநிலங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகள் அடுத்த ஐந்து மாதங்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் கொரானா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு வைத்தியம் பார்க்கப்படும்.

•சுகாதாரப் பொருட்கள் விலை உயர்த்தி விற்கும் நிறுவனங்கள், கடைகளின் உரிமையாளர்களைக் குண்டர் சட்டத்தில் முன் ஜாமீன் எடுக்க முடியாத வழக்கில் சிறையில் தள்ளி சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

•முக்கியமாகச் சாலையில் தேவையின்றி காற்று வாங்கச் சுற்றிக் கொண்டிருப்பவர்கள், இரண்டு சக்கர நான்கு சக்கர வாகனங்கள் மூலம் பயணிப்பவர்களின் வாகனங்களின் சாவிகளை வாங்கி வைத்துக் கொண்டு ஓரமாக நிறுத்தி வைத்துவிட்டு பத்து நாட்கள் கழித்து வந்து எடுத்துக் கொள் என்று பின்புறம் லத்தியால் பூஜை செய்து ஆதிமொழியில் மந்திர உச்சாடனங்களையும் கொடுத்து அனுப்பி வைக்க வேண்டும். இத்துடன் அவர்களிடம் அடுத்த முறை "இதே இடத்தில் உன்னை மீண்டும் பார்த்தால் கொரானா தொற்றுள்ளவர்களுக்கு உதவி செய்ய அனுப்பி வைப்பேன்" என்று அன்போடு சொல்லி அனுப்ப வேண்டும்.

*அதை விட முக்கியம் இராணுவத்தின் துணைப் படைகளை வெவ்வேறு இடங்களில் நிறுத்தி மக்கள் நடமாட்டத்தைக் கண்காணிக்காத வரைக்கும் இங்கு நீங்கள் எதிர்பார்க்கும் எவ்வித மாற்றமும் நிகழ்ப் போகப்போவதில்லை. பல இடங்களில் காவல்துறையினரிடம் பலரும் குஸ்தி போடுகின்றார்கள்.

நீங்கள் கையெடுத்துக் கும்பிடுவதால் ஒரு பிரயோஜனமுமில்லை பிரதமர் அவர்களே. ஒவ்வொருவரும் தத்தமது கைகளை சும்மா வைத்திருக்க மாட்டார்கள்.

சாட்டையை சுழட்டாதவரைக்கும் உங்கள் ஆட்சியில் மிகப் பெரிய பேரழிவு காத்திருக்கிறது. அது வரலாற்றின் பக்கத்தில் கவனமாகப் பதிவு செய்யப்படும் என்பதனை கவனத்தில் வைத்திருங்கள்.

முந்திக் கொண்டு முயற்சிகளை இப்போதே தொடங்கி விடுங்கள்.

25/03/2020


21 நாட்கள் ஊரடங்கு- தமிழ்நாடு

3 comments:

  1. படித்தவர்களிடையே கூட இன்னும் முழுமையான் விழிப்புணர்வு ஏற்படாதது வருத்தத்தை அளிக்கிறது ஐயா

    ReplyDelete
  2. வளர்ந்த மாநிலம் என்று சொல்லப்படும் தமிழகத்தில் தான் இந்த நிலைமை என்றால் வடமாநிலத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளைத் துண்டு காட்சிகளில் பார்க்கும் போது சிரிப்பதா? அழுவதா? என்றே தெரியவில்லை.
    வடமாநிலங்களில் வாழ்பவர்கள் இன்னமும் "நோய்த் தொற்று" குறித்துப் புரிந்து கொள்ளவே இல்லை என்பது நன்றாகவே தெரிகின்றது. - நிஜம்.

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.