"கூட்டணி தர்மம் என்கிறார்கள். கூட்டணி என்றாலே தர்மத்திற்குத் தொடர்பில்லாதது. மதச் சார்பின்மை கூட்டணி என்பார்கள். ஆனால் கூட்டணியில் சாதிக்கட்சியும் இருக்கும். என் அரசியல் வாழ்நாளில் இது போன்ற விடைகளுக்குப் பதில் தெரியாமல் இருக்கின்றேன்" என்றார் வாழப்பாடி இராமமூர்த்தி. தான் நினைத்ததை அப்படியே பேசிவிடக்கூடிய காங்கிரஸ் தலைவர்கள் இரண்டு பேர்கள். ஒன்று வாழப்பாடி மற்றொருவர் இளங்கோவன். வாழப்பாடி மகன் சிங்கப்பூரில் இருந்தார். இப்போது என்ன செய்கின்றார் என்று தெரியவில்லை. இளங்கோவன் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார்.
இருவர் காலத்திலும் காங்கிரஸ் தினமும் தலைப்புச் செய்திகளில் வந்து கொண்டேயிருக்கும். எது சாத்தியமோ? எது உண்மையோ அதை உரக்கச் சொல்வார்கள். தலைமை தவறான வழியில் சென்றாலும் தலை வணங்க மாட்டார்கள். எத்தனை பேர்களுக்கு இதெல்லாம் தெரியும்?
அகில இந்திய காங்கிரஸ் தலைமையில் இப்படிப்பட்ட ஒருவராவது இருக்கின்றார்களா? திமுக, அதிமுக வில் கூட தாங்கள் நினைத்ததைப் பேசி விடக் கூடிய நிலையில் உள்ளனர். தேசியக் கட்சி தேயுமா? தேயாதா? எதிர்த்து நின்று களம் காண வேண்டிய கட்சியின் செயல்பாடுகளை விமர்சிக்க வேண்டுமா? கூடாதா?
இங்குக் கட்சிகளுக்கு "கொள்கை" இருக்கிறது என்று நண்பர்கள் நம்புகிறார்கள். அது அவரவர் விருப்பம். ஆனால் கட்சிகளுக்கு "கொள்கை" இருக்கக்கூடாது. அடிப்படையில் தீவிரக் கொள்கைகள் கொண்ட கட்சி நம் ஜனநாயகத்தில் அதிக நாள் இருக்க வாய்ப்பில்லை. இதை நன்றாகப் புரிந்தவர் பெரியார். அதனால் தான் கடைசி வரைக்கும் தேர்தல் அரசியல் பக்கம் வரவே விரும்பவில்லை.
ஆனால் தான் மனதில் நினைத்திருந்த விசயங்களை அண்ணா மற்றும் கலைஞர் மூலம் நிறைவேற்றிக் கொண்டார்.
எவரையும் ஒதுக்கவில்லை.இருவரையும் திட்டியுள்ளார். ஆனால் பார்க்க வந்த போது மரியாதையளித்தார். தேவைப்படும் போது அனைவரையும் பயன்படுத்திக் கொண்டார். ஏறக்குறைய பாஜகவும் இது போலத்தான் இப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. தேவைப்படும் போது ஒவ்வொருவரையும் பயன்படுத்தும் அளவிற்கு ஒவ்வொரு இடத்தில் ஒரு செக் வைத்துக் கொண்டே அரசியல் செய்கின்றார்கள். இது தான் உண்மை.
ஆனால் இங்கே நண்பர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஒவ்வொரு கொள்கை இருப்பதாகச் சொல்கின்றார்கள். அது கொள்கை அல்ல. அவரவர் விருப்பம். இப்படி இருக்க வேண்டும். இது தான் சரி. இவர்கள் தகுதியற்றவர்கள் என்று நமக்கு நாமே கற்பிதம் செய்து கொள்கின்றோம்.
அரசியலில் இதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை.
ஸ்டாலின் பேசும் போது ஒவ்வொரு முறையும் "அதிமுக ஆதரவு கொடுக்காமலிருந்தால் இந்தச் சட்டம் பாஸ் ஆயிருக்காது" என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருக்கின்றார். அதாவது சட்டத்தின் சாதக பாதக அம்சங்களை மக்களுக்குப் புரிய வைக்கக் கலந்துரையாடல், கூட்டங்கள் போன்றவற்றை நடத்துவதை விட அதிமுக வை இங்கே தனிமைப்படுத்த வேண்டும்.
எடப்பாடி உடனே என்ன செய்கின்றார். அவரும் மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்று எண்ணமில்லாமல் அவருக்குத் தெரிந்த ஆயுதத்தை அதாவது தான் வைத்திருக்கும் துருப்புச் சீட்டை இறக்குகின்றார். எப்படி?
"110 விதியில் உலமாக்களுக்கு நிதி உதவி அதிகம். ஹஜ் பயணிகளுக்கு உதவி. அத்துடன் விண்ணப்பித்த அனைத்துப் பேர்களும் ஹஜ் பயணிகள் செல்ல அனுமதிக்க வேண்டும்" என்று மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுகின்றார்.
1-1=0
இன்று தூக்கம் கலைந்து எந்திரித்து வந்த சோனியா என்ன அறிவித்துள்ளார்? ஜனாதிபதி மாளிகை நோக்கி பயணம். அத்துடன் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை.
சரி காங்கிரஸ் தான் இப்படியுள்ளது? மற்றவர்கள்? முலாயம்சிங், மாயாவதி, நிதிஷ்குமார், சரத்பவார்? என்ன தான் சொல்லியுள்ளனர்??????
அதாவது அதிகாரத்தில் இருப்பவர்கள், அதிகாரத்தைச் சுவைத்தவர்கள், மைனாரிட்டி ஓட்டு வங்கி மூலம் தங்கள் அரசியல் வாழ்க்கையை உயர்த்திக் கொண்ட அத்தனை பேர்களும் அமைதியாகவே இருக்கின்றார்கள் என்றால் என்ன அர்த்தம். இதில் தலையிட்டால் ஹிந்துக்களின் விரோதமாக மாறிவிடுவோம் என்ற அச்சம். அப்படி உருவாக்கியுள்ளது யார்? இது தான் பாஜகவின் அல்டிமேட் வெற்றி.
சரி போராட்டம் எப்படி பரவுகின்றது?
ஒரு பக்கம் பெண்கள் கல்லெறியும் படங்கள் பகிரப்படுகின்றது. துப்பாக்கி ஏந்தி மிரட்டும் காட்சி அச்சத்தை உருவாக்குகின்றது. மற்றொருபுறம் மொத்த கும்பலும் ஒருவரை சாலையில் வைத்து குற்றுயிரும் கொலையுறுமாக அவர் கெஞ்சவதைப் பொருட்படுத்தாமல் மனித நேயமற்று அடித்து நொறுக்கின்றார்கள். எந்த தெய்வங்கள் மனிதர்களின் பலியைக் கேட்டது. எந்த மதம் கல்லெறிவதை அங்கிகரீத்தது? கும்பல் மனப்பான்மை களத்தில் இயங்குகின்றது. இயலாமை எண்ணம் கொண்டவர்கள் இணையத்தில் இயக்குகின்றார்கள். மொத்தத்தில் இருவரும் தீர்வு வந்து விடக்கூடாது என்பதில் குறியாக இருக்கின்றார்கள். யாரையே எதிர்க்க, தங்கள் வன்மத்தை தீர்க்க தங்களை அறியாமல் செயல்பட விபரீதங்கள் இறகு முளைத்து பறக்கின்றது. பலி அதிகரிக்கின்றது.
சரி?
பாஜக இந்துக்களின் காவலன் போலச் செயல்படுகின்றார்களா? தீவிர பாஜக நண்பர்கள் கட்சியின் மீது கொலைவெறியில் தான் இருக்கின்றார்கள்.
அப்படி என்றால் இத்தனை நாளும் இவர்கள் பேசிய வார்த்தைகள், கொடுத்த வாக்குறுதிகள், போராடிய போராட்டங்கள் என்னவாயிற்று?
பாஜக குறித்துச் சொல்லும் போது வருத்தப்படுகின்றார்கள்.
அரசியல் என்பது திருடன் போலிஸ் விளையாட்டு. யார் யாரைக் கவ்வுவார்கள்? கவிழ்ப்பார்கள் என்றே தெரியாமல் போய்க் கொண்டேயிருக்கும் விளையாட்டு.
கூட்டம் எப்போது நடந்தது என்று இப்போது நினைவில்லை. ஆனால் கூட்டத்தில் வாலி கலைஞரை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்று இப்படிச் சொன்னார்.
"சூரியன் உதித்தால் இலை கருகும்" என்று கவிதை பாடினார். கூட்டம் முடிந்ததும் கலைஞர் வாலியிடம் சொன்னது. "யோவ் எதிர்க்கட்சி சின்னத்தை எந்தக் கூட்டத்திலும் மக்களிடம் நினைவு படுத்தவே கூடாதய்யா" என்றாராம்.
அப்படி என்றால் என்ன அர்த்தம்?
.
அது தான் அரசியல். அதனால் அவர் விமர்சனங்களைக்கடந்து தனிக்காட்டு ராஜாவாக இங்கே கலைஞர் கோலோச்சினார்.
பாதிக்கப்பட்ட இடங்களை இன்று அஜித் தோவல் பார்வையிட்டார். ஒரு இஸ்லாமியப் பெண்மணி கண்ணீர் மல்கச் சொல்லுகின்றார். "நீங்கள் நடவடிக்கை எடுப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்" என்று அழகான ஆங்கிலம் ஹிந்தியில் சொன்னதைக் கேட்டேன். அதே அளவுக்கு அஜித் தோவல் நம்பிக்கையளித்தார்.
அவருக்கு இருக்கும் பின்புலத்திற்கு, வசதிகளுக்குக் கலவரத்தின் வித்துக்கள் எந்த நிமிடத்தில் யார் மூலம் தொடங்கப்பட்டு இருக்கும்? எங்கிருந்து வந்தார்கள் (வந்தவர்கள் அனைவரும் அருகே உள்ள மாநிலத்தில் உள்ள கூலிப்படைகள்) என்பது தெரியாமலா இருக்கும்? அவரிடம் தேசத்தின் மொத்தப் பாதுகாப்பும் உள்ளது. அவர் நினைத்தால் முக்கிய முடிவுகள் எடுக்க முடியுமே?
ஏன் நடவடிக்கை எடுத்த தாமதம் என்று கேள்விக்கு அரசாங்கத்திடம் இருந்து இப்படிப் பதில் வருகின்றது.
மோடி கிரிக்கெட் மைதானம் உள்ளே நுழைந்த போது இங்கே கலவரம் பற்றி எரியத் தொடங்கியது. அவரிடம் தெரிவிக்க முடியவில்லை.
அப்புறம்?
தொடக்கம் முதலே ட்ரம்ப் தொடர்பான பணியில் இருந்த காரணத்தால் இந்த விசயத்தில் அரசாங்கத்தால் உறுதியான முடிவு எடுக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது?
அப்புறம்?
செத்தவருக்கு ஒரு கோடி கொடுத்ததாகி விட்டது. அரசு வேலை உறுதி என்று சொல்லியாகி விட்டது.
அப்புறம்?
அரசியல் என்பது புரோட்டோகால் தொடர்பானது. அதனைக் கடந்து உங்களால் செயல்பட முடியாது. அப்படி மீறிச் செயல்பட்டால் நீங்கள் பலியாடாக மாற தயாராக இருக்க வேண்டும்.
அப்புறம்?
அப்பாவிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரையிலும் அரசாங்க அறிவிப்பின்படி 22 பேர்கள் இறந்துள்ளனர். பல கோடி மதிப்புகள் சூறையாடப்பட்டுள்ளது. சொல்ல முடியாத அளவுக்கு பல இடங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதே?
சட்டம் தன் கடமையைச் செய்யும்?
முடிந்தது கதை.
இதைத்தான் மோடி "நாட்டு மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும்" என்று ட்விட்டர் மூலம் அறிவுரை சொல்லியுள்ளார். பிரதமர் மோடி, இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, எவரும் களத்திற்குச் செல்லவில்லை. அரவிந்த் கேஜ்ரிவால் கூட செல்லவில்லை. நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நாட்டின் தலைநகரம் நிலைமை இப்படி? இறந்தவர்கள் இந்தியர்கள். ஆட்சியில் இருப்பவர்கள் நம் மக்கள் தேர்ந்தெடுத்த தலைவர்கள்? யார் யாரை பாதுகாக்கின்றார்கள்?
மேலே உள்ள விசயங்கள் உங்களுக்குப் புரிய வேண்டும் என்றால் நம் நாட்டு அரசியலை உணர்ச்சி பூர்வமாக அணுகாதீர்கள். அறிவுப் பூர்வமாக அணுக முடியுமா? என்று பாருங்கள்.
ஃபேஸ்புக் உலகத்திற்கு வெளியே ஒரு உலகம் உள்ளது. அந்த உலகத்தில் நடக்கும் விசயங்களைப் பற்றி கொஞ்சம் பொறுமையுடன் வாசித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர் என்று பார்க்கிறீர்கள்? திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் என்று பிரித்து வைத்துள்ளீர்கள்.
நான் இவர்களின் மொத்தத் தந்திரங்களையும் மெதுவாகப் பிரித்துப் பிரித்துப் பார்த்துப் புரிந்து கொண்டு வேடிக்கை பார்க்க கற்றுக் கொண்டேன்.
நீங்கள் எனக்கு முத்திரை குத்துங்கள்.
கவலையில்லை. ஆனால் இங்கே ஒவ்வொருவரும் அவரவருக்கு விருப்பமான முகத்திரையுடன் தான் இங்கே வாழ்கின்றோம் என்பதனையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நண்பர்களே.
1) ஒருவேளை ஜெயித்திருந்தால் இப்படி நடத்திருக்காதோ...?
ReplyDelete2) தலையில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்... கால் பகுதிக்கு வரவில்லை... வர முடியாததற்கு காரணம், உங்கள் பாணியில் சொல்ல வேண்டுமென்றால், கெண்டை நரம்பை துண்டித்து பல காலம் ஆச்சி...!
மெராஜி தேசாய், ஓமந்தூரர் ராமசாமி ரெட்டியார் குறித்து இங்கே இப்போதுள்ள தலைமுறைக்கு எத்தனை பேர்களுக்குத் தெரியும். உங்கள் பேரன் பேத்தி காலத்தில் இப்போது உள்ளவர்களைப் பற்றி தெரிய வாய்ப்பில்லை. கவலைப்பட வேண்டாம்.
Delete/அரசியலை உணர்ச்சி பூர்வமாக அணுகாதீர்கள். அறிவுப் பூர்வமாக அணுக முடியுமா? என்று பாருங்கள்./அறிவு தோற்கும் உணர்ச்சிதான்வெல்லும் என்பதே நியதி
ReplyDeleteசிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் இரண்டு பக்கமும் வெளியாகும் காட்சித் துண்டுகளை கவனிக்கும் போது நம் மக்கள் ஒரு காட்சி ஊடகத்தில் பேசுகின்றோம். அதுவொரு ஆவணம். பேட்டி எடுத்தவன், ஒளிபரப்பியவன் சென்று விடுவார்கள். அரசாங்கம் வீட்டுக்கதவை தட்டும் என்ற எண்ணமில்லாமல் இரண்டு தரப்பும் கொந்தளிக்கின்றார்கள். நீங்கள் சொல்வது போல கும்பல் மனப்பான்மையில் உணர்ச்சி தான் வெல்லும் என்பது உண்மை.
Delete