2020 ஆம் ஆண்டு எப்படியிருக்குமோ? என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பார்வை, ஏக்கம், ஆசைகள். ஆனால் எனக்குத் தொடக்கமே வித்தியாசமாகத் தொடங்கப் போகின்றது. .
அக்டோபர் மாதம் என்றாலே மகாத்மா காந்தி மற்றும் கர்மவீரர் காமராஜர் தான் நம் நினைவுக்கு வருவார்கள். ஒருவர் பிறந்த நாள். மற்றொருவருக்கு இறந்த நாள். ஆனால் எனக்குக் கடந்த அக்டோபர் மாதம் 16ந் தேதி அதிகாலை வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக மாறப் போகின்றது என்று தெரியாமல் எப்போதும் போலக் காலையில் எழுந்தவுடன் கணினியை உயிர்ப்பித்து வேறெதும் தகவல்கள் வந்துள்ளதா? என்று பார்த்துக் கொண்டிருந்தபோது புதிதாக ஒரு மின் அஞ்சல் வந்து இருந்தது.
மு. பழனியப்பன் என்ற பெயரில் வந்திருந்தது.
"புதுவயல் கற்பக விநாயகர் கோவில் கும்பாபிசேகம் முன்னிட்டு விழா மலர் உருவாக்குகின்றோம். உங்கள் பங்களிப்புத் தேவை. கட்டுரை, கவிதை போன்ற ஆக்கங்கள் இருந்தால் அனுப்பி வைக்கவும்" என்று மின் அஞ்சலில் தெரிவித்திருந்தார்.
என் ஊர், எங்கள் கோவில், யாரிவர்? என்று அவர் கொடுத்த அலைபேசி எண் அழைத்து விசாரித்த போது நான் ஒன்று முதல் எட்டு வரைக்கும் படித்த பள்ளியின் தாளாளர் மகன் என்பதனை புரிந்து கொள்ள முடிந்தது. 1983-84 ஆம் ஆண்டு நான் எட்டாம் வகுப்பு சரஸ்வதி வித்தியாசாலையில் படித்து முடித்து விட்டு வெளியே வந்தேன். எங்கள் ஊரில் உள்ளவர்கள் இப்பள்ளியைச் சங்கப்பள்ளிக்கூடம் என்று தான் அழைப்பார்கள். படிப்பதற்கு இருந்த ஒரே வாய்ப்பு இந்தப் பள்ளி மட்டுமே. எங்கள் குடும்பத்தில் மூன்று தலைமுறையும் ஏறக்குறைய முப்பது பேர்களுக்கு மேல் இங்கு தான் படித்து வளர்ந்தோம். என் கடைசி தங்கை இங்கே ஆசிரியையாக பணியாற்றினார்.
மன்னர் காலத்தில் மதுரையில் இருந்த முத்தமிழ்ச் சங்கம் போல இங்கும் தமிழ் இலக்கியங்களையும் அத்துடன் கல்வியையும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தன்னலமற்று சேவையாக பணியாற்றிக் கொண்டு வருகின்றார்கள். இப்போது மூன்றாவது தலைமுறையின் கையில் நிர்வாகம் வந்துள்ளது.
பள்ளியை விட்டு வெளியே வந்தது முதல் கடந்த 37 வருடங்களில் ஒரு முறை கூடப் பள்ளிக்குள் சென்றதே இல்லை. எங்கள் வீட்டுக்கு அருகே தான் உள்ளது. செல்லும் வாய்ப்பு அமையவில்லை. மகள்களிடம் பள்ளியைக் காட்டியுள்ளேன். முன்னாள் நின்று புகைப்படம் எடுத்துள்ளேன். பழைய நினைவுகள் வந்து போகும். அப்படியே மறந்து போய் விடுவேன்.
நான் பள்ளியை விட்டு வெளியே வந்த வருடத்தில் பள்ளி பெண்கள் பள்ளியாக மாறியது. நான் 9 முதல் 12 வரைக்கும் அருகே உள்ள மற்றொரு பள்ளியில் படித்தேன். இரண்டு பள்ளியும் நகரத்தார் சமூகம் மேற்பார்வையில் நடந்து கொண்டிருக்கும் பள்ளி. அரசு நிதி உதவி பெறும் பள்ளியாக இருந்தது.
நான் கர்ப்பப்பையில் வாழ்ந்த பத்து மாதங்கள் போல இந்தப் பள்ளி எட்டு வருடங்கள் என்னை வளர்த்து ஆளாக்கியது. எனக்குக் கல்வி கற்றுக் கொடுத்த ஆசிரியர்களில் ஒரே ஒருவர் மட்டும் தான் இன்று உயிரோடு இருக்கின்றார். அதே போல 9 முதல் 12 வரைக்கும் பள்ளியில் கல்வி கற்றுக் கொடுத்த ஆசிரியர்களில் இருவரை மட்டுமே கேள்விப்பட்டுள்ளேன். எவருடனும் தொடர்பு உருவாகவில்லை. பழைய என்னுடன் படித்த நண்பர்கள் வாயிலாக அவவ்போது கேட்டுத் தெரிந்து கொள்வதுண்டு.
என்னுடன் எட்டாம் வகுப்பு வரைக்கும் படித்த நண்பர்கள் இன்னமும் உள்ளூருக்குள் தான் இருக்கின்றார்கள்.
இது போன்ற பல நினைவுகள் வந்த மின் அஞ்சலைப் பார்த்த பின்பு, மு. பழநியப்பன் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசிய போது ஒவ்வொன்றாக மனதிற்குள் வந்து போனது. கும்பாபிஷேக மலருக்குக் கட்டுரை எழுதி அனுப்பினேன். அதற்கான விழா ஏற்பாடு செய்து இருந்தார்கள். பிறகு நிகழ்ச்சியைத் தள்ளி வைத்து இருந்தனர். அத்துடன் பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு நூற்றாண்டு விழா தொடக்கவுரை பேச வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.
சரஸ்வதி வித்தியாசாலை பள்ளி உருவாகி 97 வருடங்கள் முடியப் போகின்றது. விரைவில் நூற்றாண்டு விழா தொடங்க இருக்கின்றது. சுதந்திரப் போராட்டத் தியாகிகள் அனைவரும் இப்பள்ளிக்கு வருகை தந்துள்ளனர்.
இந்தப் பள்ளியில் நடக்கின்ற விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழாவில் வருகின்ற ஜனவரி 5 மற்றும் 6 அன்று கலந்து கொள்ளப் போகின்றேன்.
நூற்றாண்டு விழா கொண்டாட்டம் தொடங்கப் போகின்றது. அதன் தொடக்க சொற்பொழிவை நான் தொடங்கி வைக்கப் போகின்றேன்.
நூற்றாண்டு விழா கொண்டாட்டம் தொடங்கப் போகின்றது. அதன் தொடக்க சொற்பொழிவை நான் தொடங்கி வைக்கப் போகின்றேன்.
முனைவர் மு. பழநியப்பன் கும்பாபிஷேக மலருக்காகக் கூகுள் தளத்தில் புதுவயல் தொடர்பாக யாராவது இருக்கின்றார்களா? என்று தேடிக் கொண்டிருந்த போது என் பதிவுகள் அவர் கண்ணில் பட்டுள்ளது. நான் படித்த பள்ளிக்கூடங்கள், அனுபவங்கள் பற்றி எட்டு ஆண்டுகளுக்கு முன்பு எழுதியிருந்த கட்டுரைகள் அவர் கண்ணில் பட்டுள்ளது. மகிழ்ச்சியுடன் ஆச்சரியத்துடன் ஒவ்வொன்றையும் முழுமையாக வாசித்து அவர் பேஸ்புக் தளத்தில் பகிர்ந்துள்ளார். சில நாட்கள் கழித்து எனக்கு மின் அஞ்சல் பார்த்து அனுப்பி உள்ளார். அதற்குப் பிறகே இந்த வாய்ப்பு என்னைத் தேடி வந்தது.
முனைவர் மு. பழநியப்பன் அவர்கள் தற்போது திருவாடானை அரசு கலைக்கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராக பணியாற்றி வருகின்றார். அப்பா முத்தப்பன் அய்யா மிகச் சிறந்த சொற்பொழிவாளர். அவரைப் போல மகன் மு. பழநியப்பன் அவர்களும் கம்பன் கழகத்தில் முக்கியப் பொறுப்பிலிருந்து வருகின்றார். காரைக்குடியில் நடக்கும் கம்பன் விழாக்கள் அனைத்தும் இவர் மேற்பார்வையில், தலைமையில், வழிகாட்டலின்படி தான் நடக்கின்றது. சங்க இலக்கியங்கள் குறித்து ஆழ்ந்த அறிவு பெற்றவர். இவையெல்லாம் அவர் பதிவுகளைப் பார்த்த போது, அவரின் காணொலிக் காட்சியைக் கண்ட போது உணர்ந்து கொள்ள முடிந்தது.
நான் சட்டை போடாமல், தபால் பெட்டி டவுசருடன் திரிந்த சத்துக்கள், டயரை உருட்டிக் கொண்டு வேகாத வெயிலில் அலைந்த சந்துக்கள் என் எல்லாமே இன்னமும் அப்படியே உள்ளது. பள்ளியில் இருந்த மகிழம்பூ மரம் அப்படியே உள்ளது. ஆனால் பள்ளியின் கட்டிடங்கள் மாறியுள்ளது. தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி என்று மூன்று பிரிவாகப் பிரிந்து வளர்ந்துள்ளது. ஆயிரம் மாணவிகள் படிக்கின்றார்கள். அர்ப்பணிப்பு உள்ள ஆசிரியைகள் பணியாற்றுகின்றார்கள்.
அவர்கள் மத்தியில் தொடர் சொற்பொழிவாக , நூற்றாண்டு விழா தொடக்க உரை நிகழ்த்தப் போகின்றேன்.
எவ்வித நோக்கமின்றி 2009 ஆம் ஆண்டு எழுதத் தொடங்கினேன்.
யார் யாரோ வந்தார்கள். என்னை வளர்த்தார்கள். கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள். பிரிந்து போனார்கள். எதிரியாக மாறினார்கள். ஏளனம் செய்தார்கள். பாராட்டுரை வழங்கினார்கள். காணாமல் போனார்கள். சிலர் மறைந்தும் போனார்கள். நான் இன்னமும் எவ்வித எதிர்பார்ப்பின்றி எனக்குத் தெரிந்த மொழியில், எனக்கான நடையில் எழுதிக் கொண்டேயிருக்கின்றேன். கடந்த பத்தாண்டுகளில் வெளியிட்ட டாலர் நகரம் புத்தகம் மூலம் தமிழகத்தில் குறிப்பிட்ட வாசிப்பாளர்கள் அறியுமளவுக்கு வளர்ந்துள்ளேன்.
இணையப் புத்தகங்கள் மூலம் உலகம் முழுக்க சென்று சேர்ந்துள்ளேன். இன்று உலகம் முழுக்க வாழும் தமிழர்கள் கலந்து கொள்ளும் அமேசான் போட்டியில் நானும் தனி ஒருவனாகத் துணிச்சலுடன் கலந்து கொள்ளும் அளவிற்கு என் எழுத்துப் பயணம் 2019 ஆம் ஆண்டு நிற்கின்றது.
இந்தத் தளத்தில் நம்மால் ஆயிரம் பதிவுகள் எழுதிவிட முடியுமா? என்று மலைப்பாக யோசித்ததுண்டு. இப்போது 950 பதிவுகளைக் கடந்து வந்து விட்டேன். ஒவ்வொரு பதிவுகளும் மற்றவர்களை ஒப்பிடும் போது மூன்று பதிவுகளுக்குச் சமமாக நீளமாக இருக்கும். ஆனாலும் என் பாணியை மாற்றிக் கொள்ளாமல் இந்த எழுத்துப் பயணத்தில் பிடிவாதமாக வந்துள்ளேன்.
என்னோடு பயணித்த உங்கள் ஒவ்வொருவருக்கும் 2020 இனிய ஆண்டாக மலர தேவியர் இல்லத்தின் மனப்பூர்வ வாழ்த்துகளை இங்கே எழுதி வைத்திட விரும்புகிறேன்.
மாற்றம் ஒன்றே மாறாதது. நானும் மாறுவேன். என் அனுபவங்கள் அடுத்த ஆண்டு நிச்சயம் என்னை இன்னமும் மாற்றும்.
நமக்கு கிடைக்க வேண்டியது நம்மைத் தேடி வரும். நமக்கு கிடைத்தே தீரும். எண்ணம் போல வாழ்க்கை.
இளம் படைப்பாளர் விருது 2019
இளம் படைப்பாளர் விருது 2019
வாழ்த்துக்கள் , 8 அல்லது 9 ஆம் வகுப்பு என்பது நான் யார், எப்படிப்பட்டவன், எதை படிப்பது , சாப்பாட்டில் பிடித்தது எது , பிடித்த தின்பண்டம் ...... என்று கிட்ட தட்ட தீர்மானிக்கப்பட்ட வயது அது...தமிழ், ஆங்கிலம், மற்றும் கணக்குக்கான அடித்தளம் அமைந்த வகுப்புகள். பின் கல்லூரி வாழ்க்கையில் அல்லது அதற்க்கு பின் Ayan Rand ,Arthur Hailey , Jeffrey Archer போன்றவர்கள் இனைந்து கொண்டார்கள். சில பல பாடங்களும் படித்தோம்
ReplyDeleteஉங்களின் எழுத்தே இந்த விழாவில் உங்களை இணைத்திருக்கிறது , அதுவே சிறப்பு.
நன்றி சுந்தர். நீங்கள் தான் உ சிவமயம் என்று தொடங்கி வைத்தீர்கள். உங்கள் ராசி, ஆசீர்வாதம், அக்கறை எல்லாமே சேர்ந்து என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. நாகா தொடர்பில் வந்தால் மகிழ்வேன். அது மட்டும் மனதிற்குள் இன்னமும் உறுத்தலாக உள்ளது. இந்த வலைதள கட்டமைப்பை உருவாக்கிக் கொடுத்தவர் அவர்.
DeleteAyn Rand
ReplyDeleteமென்மேலும் பல உச்சங்களை தொடர எனது அன்பான வாழ்த்துகள்...
ReplyDeleteவித்தியாசாலை... ம்ஹிம்... வித்தியாசமான புதிய மாணவரின் தொடக்க உரை காணொளியை காண ஆவலாக உள்ளேன்...
கவனிக்க அன்று அடியேன் பிறந்தநாள்...!
ஆறாம் தேதி தானே? உங்களுக்கு வேறொரு பிறந்த நாள் பரிசு தேவியர் இல்லத்திலிருந்து வரும். மீதி காண்க. காத்திருக்கவும்.
Deleteமகிழ்ச்சி. வாழ்த்துகள்
ReplyDeleteகற்றார்க்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு
ReplyDeleteசிறப்பான தகவல் ஜோதிஜி. மனம் நிறைந்த வாழ்த்துகள். மேலும் சிறப்பான உச்சத்தை நீங்கள் தொட வேண்டும் - அதற்கும் எனது வாழ்த்துகள்.
ReplyDelete