தமிழ் இணையத்தில் நீங்கள் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டு இருப்பவரா? வாசிப்பாளர், எழுதுபவர், பார்ப்பவர் என்று மூன்று நிலையில் இணையத்தை நாள் தோறும் ஏதோவொரு வகையில் பயன்படுத்திக் கொண்டிருக்கும் உங்களுக்கு இதற்குப் பின்னால் இருக்கின்றவர்கள் யார்? இருந்தவர்கள் யார்? என்பது போன்ற தகவல்கள் தெரியுமா? அதைப் பற்றி நீங்கள் யோசித்தது உண்டா?
நான் தமிழ் இணையத்தில் 2009 ஆம் ஆண்டு நுழைந்தேன். அடுத்த இரண்டு வருடத்தில் நிதானத்திற்கு வந்தேன். அடுத்த சில வருடங்களில் இது குறித்த ஆராய்ச்சியில் இறங்கினேன். இன்று அடிப்படை விசயங்களை, நபர்களைப் பற்றி என்னால் புரிந்து கொள்ள முடிந்துள்ளது.
தமிழ் இணையம் எப்படித் தொடங்கியது? தமிழ் எழுத்துருக்களை எவரெல்லாம் உருவாக்கினார்கள்? கணினி மொழியில் எப்படி மாற்றினார்கள்? எத்தனை சவால்களைச் சந்தித்தார்கள்? எத்தனை விதமான அரசியல் இதற்குப் பின்னால் இருந்தது? அரசு சார்ந்த நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் பங்களிப்பு என்ன? தமிழ் மொழி வளர்ச்சிக்கு மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கம் என்ன செய்கின்றது?
தமிழ் மொழியை வளர்க்கின்றேன் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களும், கணினி மொழியாக மாற்றுகின்றேன் என்பவர்களும், ஆவணக் காப்பகத்தை உருவாக்குகின்றோம் என்று சொல்லிக் கொண்டு தற்போது இருப்பவர்களின் எத்தனை பேர்கள் நிஜமாகவே இந்தப் பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் இருக்கின்றார்கள்? எத்தனை பேர்கள் இதை வைத்து பணம் பார்க்கின்றார்கள்? போன்ற அனைத்து விபரங்களும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. தமிழ் மொழி இன்று கணினி மொழியாக மாறியுள்ளது.
அரசாங்கங்கள் உதவுவதில்லை. அவர்களின் எல்லைகள் குறிப்பிட்ட அளவில் நின்று விடுகின்றது. ஆனால் தனிப்பட்ட நபர்கள், தனியான நிறுவனங்கள் என்று உலகமெங்கும் பலரும் இதற்காகத் தன்னை அர்ப்பணித்து உள்ளனர்.
இன்று வரையிலும் உழைத்துக் கொண்டு இருக்கின்றனர். நமக்கு எத்தனை பேர்களைத் தெரியும்? அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதாவது தெரியுமா? அடுத்த 25 வருடங்களில் இதில் என்னன்ன மாற்றங்கள் வரப் போகின்றது? நம் காலத்திற்குப் பின்னால் நம் தாய்மொழி எந்த ரூபத்தில் மாறும் என்பதாவது யோசித்து இருப்போமா?
நான் இவற்றையெல்லாம் அவ்வப்போது யோசிப்பதுண்டு. இது குறித்த ஆராய்ச்சியில் இறங்குவதுண்டு. செயல்படும் நண்பர்களைத் தொடர்பு கொள்ள முடியுமா? கேட்டுத் தெரிந்து கொள்ள வாய்ப்புள்ளதா? என்று முயல்வேன்.
தமிழ் மொழி என்ற பெயரை வைத்துக் கொண்டு ஒரு பெரிய கூட்டம் இன்று வரையிலும் பணம் பார்த்துக் கொண்டிருப்பதைப் போலவே எவ்வித அங்கீகாரமும், நிதியுதவியும் இல்லாத போதும் கூட தங்களின் சுய ஆர்வத்தின் அடிப்படையில் தமிழ் மொழிக்காக தங்கள் வாழ்க்கையை அடகு வைத்து அர்ப்பணிப்பு உணர்வோடு வாழ்ந்து கொண்டிருந்தவர்கள், வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு 2019 ஆம் ஆண்டுக்கான ஐந்து நட்சத்திரக் குறியீட்டை வழங்கியுள்ளேன்.
1. முத்து நெடுமாறன்.
எனக்கு நேரிடையான தொடர்பு இல்லை. பேசியது கூட இல்லை. இவர் என் பேஸ்புக்கில் நண்பராக உள்ளார்.
இன்று உருவான அனைத்து மாற்றங்களுக்கும் பிள்ளையார் சுழி போட்டவர்களில் இவர் முக்கியமானவர். இவரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், இவரின் செயல்பாடுகள் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் இவரின் வலைதளம் மற்றும் ஃபேஸ்புக்கில் சென்று பார்க்கவும். இதற்காகத் தனிப்பட்ட நிறுவனம் வைத்துள்ளார். ஆராய்ச்சி குழுவினரும் இவரிடம் உண்டு. மிக மிக நவீனத் தொழில் நுட்பத்திற்குத் தமிழ் மொழியை மாற்றுவது தான் இவரின் முக்கிய கடமையாக உள்ளது.
நல்வாழ்த்துகள்.
2. காசி ஆறுமுகம்.
இன்று நீங்களும் நானும் பேசுவதற்கு இவர் தான் பிள்ளையார் சுழி போட்டவர்.
தமிழ் மணம் உருவாகக் காரணமாக இருந்தவர். இவரைப் பற்றி ஏற்கனவே என் பதிவில் எழுதியுள்ளேன். அதில் பல இணைப்புகள் கொடுத்துள்ளேன். உங்களுக்கு நேரம் இருந்தால் ஒவ்வொன்றாகப் படித்துப் பாருங்கள். இப்போது கோவையில் இருக்கின்றார். பெரிய நிறுவனத்தில் உயர்பதவியில் உள்ளார். அமெரிக்காவில் நான்கு ஆண்டுகள் பணிபுரிந்தவர். மொத்தமாக அனைத்து விசயங்களிலும் தன்னை விடுவித்துக் கொண்டு விட்டார். ட்விட்டரில் மட்டும் செயல்படுகின்றார்.
தொடக்க காலத்தில் அவருக்கு உருவான கசப்பான அனுபவங்களை நான் அறிவேன். உருவான உருவாக்கப்பட்ட அரசியல் அவருக்கு எவ்விதமான மன அழுத்தங்களையும் தந்தது போன்றது கூட எனக்குத் தெரியும். நேரில் சந்தித்து உள்ளேன். சிலருடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதைப் பெருமையாகக் கருதுவேன். அப்பேர்ப்பட்ட மனிதர் இவர்.
நம் கனவுகளின் நாயகன்
3. த.சீனிவாசன்.
கடந்து ஏழு ஆண்டுகளுக்கு மேலாக என் நெருங்கிய தொடர்பில் இருக்கின்றார். என் உடன்பிறப்பு போலவே இவரைக் கருதுகிறேன். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பேசிக் கொள்வதுண்டு. இவருடன் பெரிய குழுவினர் உள்ளனர். இவரின் மனைவியும் இதே கணினித் துறையில் இருக்கின்றார். இவர் சொந்த வாழ்க்கையில் கடைபிடிக்கும் கொள்கை காந்தியடிகளே பொறாமைப்படக்கூடியது. அற நெறி வழுவாத மாமனிதர். பலரும் பாராட்டும் அளவிற்கு தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர். பெரியார் பக்தர். அறிவை மட்டும் நம்பும் உன்னத சேவையாளர்.
இவர் செய்து கொண்டிருக்கும் காரியங்கள், சேவைகள் போன்றவற்றை இவரின் வலைதளம் மூலம் அறிந்து கொள்ள முடியும். இப்போது தான் வெளிப்புற நண்பர்கள் சிறிதளவு நிதி வழங்கி காப்பாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் உங்களுக்காக நம் தமிழ் மொழிக்காகச் செலவிடுவேன் என்று அரசியல்வாதிகள் பொதுக்கூட்ட மேடையில் முழுங்குவார்கள் அல்லவா? இவர் முழங்கவில்லை. அதையே தன் வாழ்க்கைக் கடமையாகக் கொண்டு இன்று வரையிலும் தன்னால் முடிந்த அனைத்து வேலைகளையும் இவர் குடும்பத்துடன், குழுவினர்களுடன் சேர்ந்து செய்து கொண்டு வருகின்றார்கள்.
வாழ்த்துகள் சீனிவாசன். உங்கள் மனைவி நித்யா, மகன், மகள், வரப்போகும் ஜீவன் அனைவருக்கும் தேவியர் இல்லத்தின் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். உங்கள் உயரம் 2020 ஆம் ஆண்டு மேலே மேலே செல்ல வேண்டும். இந்த வருடம் மாநில அரசு அழைத்து விருது கொடுத்துள்ளது. வரும் ஆண்டு மத்திய அரசு விருது வழங்குவார்கள் என்று நம்புகிறேன்.
கணியம் அறக்கட்டளை
என்னை விடப் பலமடங்கு வயதில் சிறியவர். ஆனால் எனக்கு இவர் செய்யும் உதவிக்கு மாதம் ஒரு தொகை கொடுத்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்குண்டு. ஒரு வேளை அமேசான் போட்டியில் என் படைப்பு வென்றால் அதில் கிடைக்கும் நிதியில் சீனிவாசனுக்கும், ராஜாராமனுக்கும் குறிப்பிட்ட பகுதியைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணமுண்டு.
சந்திப்பிழை திருத்தி, சொற்கள் பிழை திருத்தி என்று பல நவீனத் தொழில் நுட்ப வசதிகளைத் தமிழ் மொழிக்காக எவர் உதவியும் இன்றி, தன்னால் முடிந்த அளவுக்கு இந்தத் தமிழ்ச் சமூகத்திற்கு வழங்கியுள்ளார். இவரின் வலைதளம் சென்றால் பலவற்றை உங்களால் முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.
நீங்கள் உழைத்த, உழைக்கும் உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரமும், கிடைத்துக் கொண்டிருக்கும் நிதியும் மிக மிக குறைவு. நிச்சயம் 2020 ஆம் ஆண்டு உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத ஆண்டாக மாற தேவியர் இல்லத்தின் வாழ்த்துகள்.
5. முனைவர் விஜய் ஜானகி ராமன்.
அமெரிக்காவில் ஹார்வேர்டு தமிழ் இருக்கை என்ற சூனாமியைத் தொடங்கி வைத்தார். இவருக்குப் பின்னால் மிகப் பெரிய குழுவினர் இருக்கின்றார்கள். அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்கள், கனடா மற்றும் ஐரோப்பாவில் உள்ள நாடுகள் என்று அனைத்து இடங்களிலும் இவர் உருவாக்கிய பாணி வெற்றி பெறத் தொடங்கியது. பல இன்னல்களைச் சந்தித்த போது கலங்காதிரு மனமே என்று அடுத்தடுத்து நகர்ந்து இன்று வெற்றி பெற்றுள்ளார்கள்.
எதிர்காலத்தில் வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் புலம் பெயர் தமிழர்கள் வந்து தமிழகத்தில் உள்ள தமிழர்களுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்க வேண்டிய நிலை உருவாகும் என்பதில் எனக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. அய்யா என் நல்வாழ்த்துகள்.
Feast conducted to collect fund for Tamil chair at Harvard University #HarvardUniversity
()()()()()()
(இலவசமாக படிக்க முடியும்)
அனைவருக்கும் வாழ்த்துகள்...
ReplyDeletegood !!!
ReplyDeleteஅணைவருக்கும் இனிய வாழ்த்துகள்
ReplyDeleteதமிழ்மணம் திரட்டி ஏன் தற்போது செயற்படுவதில்லை? அது மீண்டும் செயற்பட வாய்ப்புகள் ஏதும் உள்ளதா?
ReplyDeleteஇது செயலிழந்த போது மிகவும் கவலையடைந்தேன். சிறு வயதிலிருந்து எனது மனதிலிருந்த பல கேள்விகளுக்கு தமிழ்மணம் திரட்டியிலிருந்த பல பதிவுகள் மூலம் விடை கிடைத்தது. முக்கியமாக எனக்கு பெரியாரை அறிமுகப்படுத்தியது எனது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை என்றே சொல்லலாம். நம்பினால் நம்புங்கள், இலங்கையில் பெரியாரை தெரிந்த தமிழர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். முழு மக்கள் தொகையில் 99% பேருக்கு நாத்திகம் என்றால் என்னவென்றே தெரியாது, கடவுள் நம்பிக்கை இல்லாதவன் காட்டுமிராண்டி என்றே இன்னும் இவர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால் பெற்ற பயனை சொல்லிக்கொண்டே போகலாம். இந்த பின்னுட்டத்தை முடிந்தால் அவ ர்களுக்கு காட்டுங்கள். தமிழ்மணம் மறுபடியும் உயிர்த்து எழ வேண்டும் என்பது எனது அவா.
தகவல் தெரிவித்து விட்டேன். நன்றி.
Delete