அஸ்திவாரம்

Saturday, December 07, 2019

டாலர் நகரம்- விமர்சனங்கள்

டாலர் நகரம் விமர்சனங்கள் என்பதனை ஏன் தொகுத்தேன்? என்பதற்கு முக்கியக் காரணம் ஒன்று உண்டு. இணையத்தில் கடந்த பத்தாண்டுகளாக என் தொடர்பில் வந்த, என்னுடன் தொடர்பை உருவாக்கிக் கொண்ட ஒவ்வொருவரும் என் எழுத்துப் பயணத்தில் வெவ்வேறு விதங்களில் உதவி உள்ளனர். அவர்களுக்கு மரியாதை செலுத்தும் பொருட்டு, அவர்கள் பெயர் புத்தகத்தில் வர வேண்டும் என்பது என் முதல் ஆசை.

டாலர் நகரம் புத்தக விழாவில் என்னை முன்னே பின்னே நேரிடையாக தெரியாமல் என் எழுத்தை மட்டும் நம்பி புத்தக விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பது என் இரண்டாவது ஆசை.

நான் சொன்னவுடன் இருந்த வேலையெல்லாம் விட்டுவிட்டு அவசரம் அவசரமாக விமானம் வழியே திருப்பூர் வந்து சேர்ந்த அப்துல்லாவுக்கு, ரவிக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பது அடுத்த ஆசை.

என்னை நம்பி முதலீடு செய்த மலைநாடன் ஒரு பக்கம். என்னை அறிமுகம் செய்து வைத்து புத்தகம் அடித்துக் கொடுத்த பிகேஆர் மற்றொருபுறம்.

ஏராளமான புண்ணிய ஆத்மாக்கள் இன்னமும் என் தொடர்பில் இருக்கின்றார்கள்.



அவரவர் கட்சி சார்ந்த கொள்கைகள் என்னைப் பாதிப்பதில்லை.

ஒவ்வொருவருடன் பேசும் தனிப்பட்ட உரையாடல்களில் கவுச்சி வாடை தான் அடிக்கும்.

காரணம் இணையத்தில் எனக்கு கொள்கையே இல்லை.

என்னுடன் உரையாடுபவர்களுக்கும் அதே கொள்கை தான். இணையத்தில் அவர்களின் செயல்பாடுகளை வைத்து நீங்களாகவே கற்பனை செய்து கொண்டால் அது உங்கள் அறியாமை.

நாளை மோடியை கலாய்த்து எழுதுவேன். அடுத்த நாளே அவரை வானுயற வாழ்த்தியும் எழுதுவேன். நீங்கள் ஏதாவது ஒரு வட்டத்திற்குள் என்னை அடைத்தே ஆக வேண்டுமென்றால் அடைத்துக் கொள்ளுங்கள். அது உங்கள் விருப்பம். நான் ஏற்கனவே வீட்டுக்கே அடங்காதவன். உங்களின் எந்த விமர்சனங்களாலும் என் இணைய பயணத்தை நிறுத்தி விட முடியாது. ஆனால் இணையத்தில் செயல்படும் கொள்கைக் குன்றுகளை என் பார்வையில் தோலுரிக்கத் தயங்க மாட்டேன்.

பிராமணர்களிடம் உதவி பெற்று, அவர்களால் வளர்ந்து, நடத்திக் கொண்டிருக்கும் சொந்தத் தொழிலுக்கு பிராமணர் மூலம் ஆடர் பெற்று நான் ஷாகா வை ஏன் வெறுக்கிறேன் தெரியுமா? என்பது போல என்னால் நீட்டி முழங்கத் தெரியாது. வாய்ப்பு கிடைத்தால் சம்மந்தப்பட்டவரின் தோலை உறிக்க ஆசைப்படுவேன்.

தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல்வாதிகள் அனைவருக்கும் தணிக்கையாளர்களாக இருப்பவர்கள் இன்று வரையிலும் பிராமணர்கள் தான் என்பதனை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் வாழ்க்கையின் தனிப்பட்ட கொள்கை என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் நம்பியவர்களை ஒரு நாளும் நட்டாத்தில் கழட்டி விட மாட்டார்கள் என்பதே நான் அனுபவத்தில் பார்த்த உண்மை. திருப்பூர் வரைக்கும் இது தான் உண்மை.

போராளி வேடம் போட்டு தனிப்பட்ட நட்புகளை மதிக்கத் தெரியாத கணவான்களை விட அவர்கள் எனக்கு கண்ணியவான்களாகவே தெரிகின்றார்கள். மற்றபடி ஒவ்வொரு அந்தரங்கங்களும் அவரவருக்கே சொந்தமானது. நீங்கள் அதனை பக்குவமாக பாதுகாத்து பழகத் தெரிந்தால் உங்களுடன் எந்த கட்சிக் காரர்களும் நட்பு பாராட்டுவார்கள் என்பதனை கவனத்தில் வைத்திருங்கள். எனக்கு அப்படிப்பட்ட ஏராளமான நண்பர்கள் உண்டு.

****

சிலருக்கும் நன்றாக எழுதத் தெரியும். ஆனால் இணையத்தில் அவர்களாகவே எதையும் எழுத மாட்டார்கள். மற்றவர்கள் எழுதினால் விமர்சனமாக பொளந்து கட்டுவார்கள்.

செயல்படமாட்டார்கள். வேடிக்கையாளனாகவே எப்போதும் இருப்பார்கள். அவர்கள் எழுத்து வசீகரமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் டாலர் நகரத்திற்கு விமர்சனம் எழுதியுள்ளனர். அவர்களின் எழுத்துக்களை ஆவணப்படுத்த வேண்டியது என் கடமை.

ஒரு புத்தகத்தின் விமர்சனம் என்பதனை விட ஒரு புத்தகத்தை விட எத்தனை விதமான பார்வைகள் உள்ளது என்பதனை வாசிப்பதே உங்களுக்குச் சுவராசியமாக இருக்கும். படித்து முடித்து விட்டு நாமும் இனி விமர்சனம் எழுத முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு உருவாகும்.

கிண்டில் அன் லிமிட் உள்ளவர்கள் மட்டும் இதனை தரவிறக்கம் செய்து கொள்ளவும். நான் இதனை விற்பனைக்குரிய புத்தகமாக கொண்டு வர விரும்பவில்லை.

ஆனால் கடந்த மூன்று வாரங்களில் 5 முதலாளிகளின் கதை பைரசி வடிவில் தமிழகம் முழுக்க நம்பவே முடியாத அளவிற்கு சக்கைப் போடு போட்டுள்ளது. எனக்கே வெவ்வேறு இடங்களில் மூன்று நபர்கள் அனுப்பி உள்ளனர்.

திருப்பூரில் உள்ள ஒரு பள்ளி தமிழாசிரியர் நேற்று இரவு அழைத்து பேசினார். அவர் இருக்கும் வாட்ஸ்அப் குரூப் ல் உள்ள (89 பேர்களும்) படித்து உள்ளனர். ஒரு நாள் பொழுதில் ஒவ்வொருவரும் இந்தப் புத்தகத்தை பரஸ்பரம் பேசி உள்ளனர். பொதுவாக இதுபோன்ற இலவசமாக கிடைப்பதை அப்படியே கிடப்பில் போடுவது தான் வாடிக்கை. என்ன அதிசயமோ? தெரியவில்லை. பெறற அனைவருமே வாசித்து உள்ளனர். இந்த லட்சணத்தில் வரிசையாக மின் அஞ்சலில் வாழ்த்துச் செய்தி வேறு அனுப்பி எரிச்சல்படுத்தினர்.

மகள்களிடம் காட்டி சிரித்துக் கொண்டு இருக்கின்றோம்.

நம்மவர்களின் திறமை என்பது அமேசான் முதலாளிக்கு தண்ணீர் கட்டக்கூடியது என்பதனை நிரூபித்து விட்டனர்.

பேசிய தமிழாசிரியர் எங்கள் பள்ளிக்கூடத்துக்கு நீங்கள் பேச வர வேண்டும் என்றார். அவர் தவறான வழியில் படித்த வருத்தம் அவர் மனதில் இருந்து வருமா? என்று பார்த்தேன். ஜாலியாகப் பேசினார். அத்துடன் இந்தப் போட்டிக்காக எழுதப்பட்டது என்று சொன்னேன். ஓகோ அங்கே காசு கொடுத்து வாங்க வேண்டியதாக இருக்குமே என்றார். அவர் 12 ஆம் வகுப்பு தமிழாசிரியர்.

ஒன்றும் சொல்லாமல் சிரித்துக் கொண்டே அலைபேசியை வைத்து விட்டேன்.

அமேசான் தளத்தில் தெரிவித்து உள்ளேன். எனக்கு மட்டுமல்ல. பலரின் நிலமையும் இதுதான்.
ஓட்டைகளை அடைக்கவும் என்று விபரங்களை எடுத்துச் சொன்னேன்.

இப்போதைக்கு இதனை கிண்டில் அன் லிமிட் மூலம் வாசிக்க விரும்புவர்களுக்குப் போய்ச் சேரட்டும் என்று திட்டத்தை மாற்றி உள்ளேன்.

********

"அடித்தட்டு வர்க்கமோ நடுத்தர வர்க்கமோ எவராயிருந்தாலும் தங்களை நம்பி வாழ்பவர்களுக்காகவே தங்களை வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டி கட்டாயத்தில் இருக்கிறார்கள்"

"அளவான வருமானம் வாழ்க்கை முழுக்க அமையப் பெற்ற அத்தனை பேர்களும் ஆயுள் முழுக்க ஒருவிதம ஒரு விதமான அடிமை"

நச்சென்ற வரிகள்

தொழில் நிலையில் பலமுறை ஏமாற்றங்களை எதிர்கொண்ட போதும், நம்பிக்கையும் உழைப்பையும் மட்டுமே துணையாகக் கொண்டு முன்னேறிய ஒரு இளைஞனின் கதை

திருப்பூரின் முதன்மைத் தொழிலை அலசி நன்கு ஆராய்கின்ற நூல்.

வாழ்வில் உயர, தொழிலில் உயர, இளைஞர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகளை விவரிக்கும் சுய முன்னேற்ற நூல்

தொழில் முனைவோர் கடைப்பிடிக்க வேண்டிய சூட்சுமங்களைச் சொல்லிச் செல்கின்ற நூல்

டாலர் நகரத்தை எப்படி வேண்டுமானாலும் இப்படிப் பெயரிட்டு அழைக்கலாம்.

நான் இதுவரையிலும் படித்த புத்தகங்களில் இது போன்ற வடிவமைப்பில், வாசிப்பவனை மனதில் கொண்டு அழகான தாளில் தெளிவான பெரிய எழுத்துக்களில் கொண்டு வந்த 4 தமிழ் மீடியா குழுமத்திற்குத் தமிழ்ப் புத்தக உலகமும், புத்தகப் பிரியர்களும் நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கின்றார்கள்.

இது போல இன்னும் பல புத்தகங்களை இது போன்ற நேர்த்தியுடன் கொண்டு என் வாழ்த்துகள்..

ஜோதிஜி உங்களுக்கு நடைமுறை எதார்த்த வாழ்க்கையை வசமாக்கத் தெரிந்ததோடு, வார்த்தைகளையும் வசப்படும் வித்தையும் வாய்த்திருக்கிறது.

என் வாழ்த்துகள்
அன்புடன்
சு உஷாராணி
#Amazon

6 comments:

  1. புத்தக விமர்சனங்களைத் தொகுத்து ஒரு புத்தகம் - நல்ல விஷயம். பாராட்டுகளும் வாழ்த்துகளும் ஜோதிஜி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட். கிண்டில் அன் லிமிட் இருந்தால் தரவிறக்கம் செய்து படிக்கவும். நீங்களும் இதே போல பல விமர்சனங்களை தொகுத்துப் போடவும். நம் வாழ்நாளுக்குப் பிறகும் அது யார் யாருக்கோ சென்று சேர்ந்து கொண்டே இருக்கும். அமேசான் தளம் இருக்கும் வரைக்கும் நாம் மறைந்தாலும் நம் எழுத்துக்கள் மூலம் வாழ்ந்து கொண்டே இருப்போம்.

      Delete
  2. பாராட்டுகள்... வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. 5 முதலாளிகளின் கதை புத்தகத்திற்கு உங்களின் ஒத்துழைப்பு மறக்க முடியாது தனபாலன். வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்டு இந்த வருடத்தில் இது தொடர்பாக எனக்கு கிடைத்த அனுபவங்கள் மிக முக்கியமானது. 5 முதலாளிகளின் கதைக்கு வந்த விமர்சனங்கள் அனைத்தையும் தொகுத்து வெளியிட உள்ளேன். நீங்களும் அதன் இணைய உலகத்தில் எந்நாளும் வாழ்ந்து கொண்டேயிருப்பீர்கள். நன்றி.

      Delete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.