கவிஞர் வைரமுத்து கடந்த சில வருடங்களில் அளவுக்கு அதிகமாக விமர்சிக்கப்பட்டார். அமைதியாக ஒவ்வொன்றாக உள்வாங்கிக் கொண்டே வந்தேன். மனிதனின் பலகீனங்களை நான் நன்றாகவே அறிவேன். பலகீனங்களின் மொத்த உருவமான கவிஞர் கண்ணதாசனை ஒப்பிடும் போது வைரமுத்து மிகச் சாதாரண நபர் தான். இருவரும் இரண்டு மலைகள். அவரவர் வாழ்ந்த காலத்தில் தங்களால் எந்த அளவுக்குச் சாதிக்க முடியுமோ? எந்த அளவுக்கு இந்தச் சமூகப் பரப்பளவில் ஊடுருவ முடியுமோ? அந்த அளவுக்கு, அதற்கு மேலாகத் தமிழர்களின் ஆழ்மனதில் ஊடுருவியவர்கள்.
அண்ணாவிற்குக் கிடைக்காத அத்தனை அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கலைஞருக்குக் கிடைத்தது. நான்கு தலைமுறைகளை உள்வாங்கி கடைசி வரைக்கும் தன்னை புதுப்பித்துக் கொண்டேயிருந்தார் கலைஞர். அவர் பயணம் இறுதியாகத் தொழில்நுட்ப வசதிகளைக் கையாள்வது வரைக்கும் நின்றது. அதே போலக் கண்ணதாசனுக்குக் கிடைக்காத நல்வாய்ப்புகள், தொழில் நுட்ப வசதிகளை வைரமுத்து பயன்படுத்திக் கொண்டார். தன் பலவீனங்களை அளவாக வைத்துக் கொண்டார்.
ஆனால் தொழில் நுட்ப உலகில் வைரமுத்துவின் பலகீனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது. கூடவே ஆண்டாள் சர்ச்சையில் மாட்டிக் கொண்டார்.
நான் என் மகள்களுக்காக ஒவ்வொரு சமயமும் என்னை புதுப்பித்துக் கொண்டேயிருப்பேன். அவர்களுடன் உரையாட அவர்கள் விரும்பும் ஒவ்வொன்றையும் உள்வாங்குவேன். அவர்களுடன் உட்கார்ந்து ரசிப்பேன். அது குறித்துப் பேசுவேன்.
அவர்கள் எந்தச் சமயத்திலும் என்னை ஒதுக்கிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பேன். அவர்கள் எதை ரசிக்கின்றார்கள்? எதை வாசிக்க விரும்புகின்றார்கள்? என்ன காரணம்? என்பதனை ஆராய்வதுண்டு.
ஆனால் என்னால் அவர்களுடன் முழுமையாக ஒன்ற முடியவில்லை என்பது அப்பட்டமான உண்மை. அவர்களுக்காக மாற விரும்புகிறேனே தவிர அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கை கொடுத்த அனுபவங்களும் நான் வாழ்ந்த வாழ்க்கை எனக்குக் கொடுத்த அனுபவங்களும் வெவ்வேறு புள்ளியாகவே உள்ளது என்பதனையும் என்னுள் குறித்து வைத்துக் கொண்டு தான் வருகிறேன். இந்த தலைமுறையின் தமிழ் அறிவு என்பது முற்றிலும் வேறு விதமாக உள்ளது. ஆழ்கடலின் மேற்பரப்பளவில் மட்டுமே உள்ளது என்பதனையும் புரிந்து கொள்ள முடிந்தது.
நமக்கு கிடைத்த தமிழாசிரியர்கள் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்பதும் உண்மை. மகள் நான் சொன்னேன் என்பதற்காக கேட்டார். ஆனால் முழுமையாக ரசிக்க முடியவில்லை என்றார்.
வைரமுத்துவின் தமிழாற்றுப்படை நூல் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. திருப்பூரில் கூட விழா நடத்தினார்கள். நல்ல விற்பனை. ஒவ்வொரு வீடுகளிலும் முதலாளிகள் அதற்கான பதாகைகளை ஒட்டி விற்பனையில் ஈடுபட்டனர். எனக்கு ஆர்வம் உருவாகவில்லை. 500 ரூபாய் புத்தகத்தைத் திருப்பூர் விழாவில் 300 ரூபாய்க்குக் கழிவு விலையில் வழங்கினார்கள். அப்போதும் ஆர்வம் உருவாகவில்லை.
ஆனால் தமிழாற்றுப்படையில் எழுதிய விசயங்களை தன் குரலில் வைரமுத்து அவர்கள் பதிவு செய்துள்ளார்.
உங்களுக்கு நீண்ட பயணம் செல்ல வேண்டிய வாய்ப்பு இருந்தால் இதனைச் சேமித்துக் கேட்டுப் பாருங்கள்.
மெய் மறந்து போவீர்கள் என்பதனை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். காலத்தை முன்னும் பின்னும் அளந்து அப்படியே நம் கண் முன்னால் நிறுத்தியுள்ளார். இதற்கான அவரின் உழைப்பைப் பற்றி மனதில் சற்று நேரம் யோசித்துப் பார்த்தேன்.
அவரின் பலகீனம் எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை.
அவரின் கவிதை வரிகள் பாடல் வரிகளாக வந்து கொண்டிருந்த போது வந்த பாடலையும், தமிழே தெரியாமல், தமிழ் இலக்கியம் என்றால் என்னவென்றே அறியாத கவிஞர்கள் என்ற பெயரில் காதை அடைக்கும் இசைக் கோர்வைகளை உள்வாங்கும் போது உண்டான கோபம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகின்றது.
வலைதளம் வந்தாலே எரிச்சலாக இருக்கின்றது என்பவர்கள் இதில் உள்ள ஒவ்வொன்றையும் கேட்டுப் பாருங்கள் என்று உங்களை அழைக்கின்றேன்.
கவிஞர் கண்ணதாசன் https://youtu.be/RAAibSo8cbE
திருமூலர் https://youtu.be/4_lGgM0lByQ
அறிஞர் அண்ணா https://youtu.be/Lp8OXYtyisI
திரைத்தமிழ்; https://youtu.be/AtAsqjqdr4k
கலைஞர் மு.கருணாநிதி https://youtu.be/KlEngeYpVHs
மகாகவி பாரதியார் https://youtu.be/nJ3XjZOoUow
தொல்காப்பியர் https://youtu.be/QPbTMzUs_bQ
அருமையான நூல்
ReplyDeleteஒலிப் பேழைக்கு நன்றி ஐயா
உங்களுக்குப் பிடித்தது அவர்களுக்குப்பிடிக்க வில்லை என்பது ஆச்சரியமில்லை
ReplyDelete