அஸ்திவாரம்

Wednesday, September 18, 2019

பெற்றோர்கள் ஆசிரியர்களாக மாற வேண்டாம்?

கடந்த சில நாட்களாக வீட்டில் மகள்களுக்குப் பாடங்கள் நடத்திய போது புரிந்து கொண்ட சில விசயங்கள்.....

1. மாணவர் ஆசிரியர் பாடங்கள் என்பது தனியான பாதை. நாம் ஆசிரியர் போல நினைத்துக் கொண்டு என்னதான் தெளிவாக அழகாக நகைச்சுவையோடு பாடங்கள் நடத்தினாலும் முழுமையாக முடிக்க முடியவில்லை. காரணம் ஒவ்வொன்றும் விரிவாக மிக விரிவாக உள்ளது. ஒரு வகையில் ஆசிரியர்கள் பாவப்பட்ட ஜென்மங்கள் தான்.

2. நல்ல பெற்றோர்கள் நிச்சயம் நல்ல ஆசிரியர்களாக மாறவே முடியாது. முயல வேண்டாம்.

3. பாடத்திட்டத்தில் உள்ள பாடங்கள் என்றாலே அது கல்லில் நார் உறிக்கும் சமாச்சாரமாகத்தான் உள்ளது. அந்தப் பாடத்தை உருவாக்கியவர், ஆலோசனை செய்தவர்கள், சுருக்கியவர் என்று எந்தப் பக்கம் பார்த்தாலும் இவர்களுக்குச் சுவராசியம் என்பது சுட்டுப் போட்டாலும் வராது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது. 

4. பத்தாம் வகுப்பில் முதலாம் உலகப் போர் என்ற பகுதி 18 பக்கங்கள் வருகின்றது. ஆனால் படிக்கும் மாணவர் குறைந்த பட்சம் சில சுவராசிய சரித்திர தனிப்பட்ட புத்தகங்களைப் படித்து இருந்தால் மட்டுமே இது போன்ற பாடங்கள் மண்டையில் ஏறும். இல்லாவிட்டால் பொட்ட உரு தான்.

5. பத்து லட்சம் மாணவர்களில் பத்து சதவிகித நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட புதிய பாடத்திட்டங்கள் என்பது ஒரு வகையில் இருட்டறையில் யார் அடிக்கின்றார்கள் என்று தெரியாமல் வாங்கும் முரட்டுக் குத்து போலவே இருக்கின்றது.

கடைசியாக மகன்களை, மகள்களிடம் அதிக மதிப்பெண்கள் வேண்டும் எதிர்பார்க்காதீர்கள். இயல்பாக எடுக்க முடிந்தவர்களுக்குப் பிரச்சனையில்லை. நீங்கள் ஒரு முறை எல்லாப் பாடங்களையும் படித்துப் பாருங்கள். "தம்பி நீ பாஸ் செய்தால் போதும்" என்று தான் சொல்வீர்கள். காரணம் தலையில் பாறாங்கல் போலவே பாடங்கள் உள்ளது.

***************

கிரீன் வே சாலை என்றால் என்ன?

தேசிய நெடுஞ்சாலையில் அழகான நீண்ட சாலை. ஐம்பது கிலோ மீட்டர் என்றாலும் நீண்ட சாலையில் ஓட்டுநருக்கு எந்த தொந்தரவும் இருக்காது. பக்கவாட்டில் ஐம்பது ஆண்டுகளாக வளர்ந்த பெரிய மரங்கள் அனைத்தையும் வெட்டி அப்புறப்படுத்தியிருப்பார்கள். பொட்டை வெயில். அடிக்கும். வெயில் கண்களைக்கூசும். நாம் செல்லும் வாகனத்தின் சூடு ஒரு பக்கம். வெளியே இருந்து தாக்கும் சூடு மறுபக்கம். இதற்குப் பெயர் தான் கிரீன் வே சாலை என்று அழைக்கின்றார்கள். மலேசியாவில் மகாதீர் முகம்மது தொடக்க ஆட்சி காலத்தில் புதிய திட்ட வரைவு அடிப்படையில் ஜோகுர்பாரு முதல் பினாங்கு வரைக்கும் தேசிய நெடுஞ்சாலையின் மூலம் இணைத்தார்கள். கூடவே நாம் பயன்படுத்தும் பாமாயில் தரும் செம்பனையை நட்டுவைத்தார்கள். இன்று வருமானம் தனியாக வந்து கொண்டு இருக்கின்றது.

ஆனால் இங்கோ தலைகீழ். சாலைவரி வாங்கிக் கொண்டு 50 கிலோமீட்டர் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ஐம்பது ரூபாய் வாங்கும் இந்த அரசின் அரக்கத்தனம் எங்கும் இருக்காது. நல்ல சாலை வேண்டும் என்றால் சுங்கவரி அவசியம் என்கிறார் நிதின்கட்கரி. சென்னையில் நுழையும் டோல்கேட் மட்டும் 12 மணிநேரத்திற்கு 20 லட்சம் (குறைந்தபட்சம்) வசூலிக்கின்றார்கள் என்று எழுதியிருந்தார்கள். எத்தனை வருடங்கள் வசூலிப்பார்கள்? எங்கே போகின்றது இந்தப் பணம்?. மொத்தத்தில் எல்லோரும் அம்மணமாக வாழும் நாட்டில் நீ ஏன் கோவணத்துடன் இருக்கின்றாய் என்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்

***************

தமிழகப் பள்ளிக் கல்வித்துறையில் அரசு நடத்தும் தேர்வு என்றால் என்ன? யாருக்குச் சாதகம்? யாருக்குப் பாதகம்? இங்கே என்ன நடக்கின்றது? எப்படியெல்லாம் நடத்தப்படுகின்றது?

முன்பு பத்தாம் வகுப்பு மற்றும் பணிரெண்டாம் வகுப்பிற்கு அரசு தேர்வு நடத்தியது. இப்போது +1 க்கும் அரசு பொதுத் தேர்வு நடத்துகின்றது.

ஒன்பதாம் வகுப்பு வரைக்கும் இயல்பாகப் படித்துக் கொண்டு வரும் மாணவர்களுக்கு இதனைக் கடந்து பத்தாம் வகுப்பு என்ற வார்த்தையை உச்சரித்து உச்சரித்து அவர்களுக்குத் தேவையில்லாத அளவு கடந்த அழுத்தம் உருவாக்கப்படுகின்றது.

இதுவே +1 மற்றும் +2 என்று மொத்தம் மூன்று வருடங்களும் தொடர்ந்து அழுத்தத்தில் அமுக்கி வைக்கப்படுகின்றார்கள். மாணவர்களுக்கு மன அழுத்தம் ஒரு பக்கம். மற்றொரு புறம் பதட்டம். அவர்களின் இயல்பான சராசரி வாழ்க்கை மாற்றப்படுகின்றது. எந்திரம் போல மாற்றப்படுகின்றார்கள். இந்த மூன்றாண்டுகளும் ஒரு மாணவர் சராசரியாக 12 முதல் 16 மணி நேரம் படித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள்.

தனியார் கல்வி நிறுவனங்களில் இதற்கெனச் சிறப்புக் கவனிப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றது என்பது பொய். மாணவர்களை மறுபடியும் மறுபடியும் ஆடாமல் அசையாமல் உட்கார வைத்துப் படி படி என்று படிக்க வைக்கப்படுகின்றார்கள். காரணம் விடுமுறை தினங்கள், ஓய்வு நேரம் என்று எந்தப் பாரபட்சமும் இல்லாமல் அவர்களின் சிந்தனை முழுக்கப் பாடத்தில் உள்ள கேள்வி பதில்கள் உள்ளே புகுத்தப்படுகின்றது. பல வித முயற்சிகள். பலவித தந்திரங்கள். பலவித மிரட்டல்கள். எந்த இடத்திலும் மாணவரின் கற்றல் திறமைக்கு ஏற்ப தனியார் கல்வி நிறுவனங்கள் தரமான விசயங்களைச் செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தியுள்ள பிள்ளைகளும், முயல்பவர்களும் முண்டியடித்து வெற்றி பெறுகின்றார்கள். கற்றலில் குறைபாடு உள்ளவர்களைத் தனியார் கல்வி நிறுவனங்கள் ஒன்பதாம் வகுப்பு இறுதி நிலையில் ஓரங்கட்டி வைத்து விடுகின்றார்கள். பத்தாம் வகுப்பில் அதே பள்ளியில் அவர்கள் நிர்ணயித்த கட்டணத்தில் படிக்கலாம். ஆனால் பள்ளி மூலமாகத் தேர்வு எழுத முடியாது. தனியாகத் தேர்வு எழுத வேண்டும். இது தான் இப்போது நடந்து கொண்டிருக்கும் நடை முறை.

ஆனால் அரசுப் பள்ளியில் அனைவரும் சரிசமமாக நடத்தப்படுகின்றார்கள். அடிக்கக்கூடாது. திட்டக்கூடாது. மிரட்டக்கூடாது என்ற மூன்று மந்திரங்களால் அரசுப் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் அனுபவிக்கும் வேதனைகள் நரகம் என்று கூட அழைக்கலாம். அதனையும் மீறித் தான் அரசு பள்ளிக்கூட ஆசிரியர்கள் குறிப்பிட்ட சதவிகிதத்தினர் மகத்தான சாதனைகள் புரிகின்றனர். உருக்குலைந்த குடும்பத்திலிருந்த வரும் ஒரு மாணவர், மாணவியரின் எண்ணங்களை முழுமையாக மாற்றிக் கல்வியின் மூலம் மட்டுமே வாழ்வில் உயர முடியும் என்ற எண்ணத்தைத் தொடர்ந்து விதைத்து அவர்களை மாற்றுவது என்பது சாதாரண விசயமல்ல.

அதனைத் தான் தற்போதைய குடிகாரச் சமூகமாக மாறியுள்ள தமிழகச் சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கும் மாணவர்களைச் சரியான பாதைக்குக் கொண்டு வரும் முக்கியப் பணியையும் அரசு பள்ளிக்கூட ஆசிரியர்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றார்கள். இதற்கு மேலாக நடைமுறைக்கு ஒவ்வாத சட்டங்களைத் திட்டங்களை வைத்திருக்கும் அரசின் கொள்கைகளையும் ஒவ்வொரு அரசு பள்ளிக்கூட ஆசிரியர்களும் கடைபிடிக்க வேண்டும் என்பது ஒரு பக்க கொடுமை. மற்றொருபுறம் முழுமையான ஒத்துழைப்பு இல்லாத ஊழல் மிகுந்த கல்வித்துறையில் உள்ள அதிகார வர்க்கத்தினருக்கு அடங்கிச் சென்றே ஆக வேண்டும் என்பதும் எதார்த்த உண்மை.

இவற்றையெல்லாம் கடந்து தான் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உறுதுணையாக, வழிகாட்டியாக இருக்கின்றார்கள்.

தனியார் பள்ளிக்கூடங்கள் பத்து மற்றும் +1, +2 என மூன்று வருடங்களில் வாங்கும் கட்டணம் என்பது வானம் அளவுக்கு உயர்ந்துள்ளது. குறிப்பாகத் தொடக்கக் கட்டணம் அத்துடன் மாத கட்டணம் கடைசியாகச் சிறப்பு வகுப்புக் கட்டணம் என்று வேறு தனியாக வசூலிக்கின்றார்கள். மூன்று வருடங்களும் ஒரு மாணவர் கடந்து வருவதற்குக் குறைந்தபட்சம் 3 முதல் 4 லட்சம் தேவைப்படுகின்றது.

ஆனாலும் மக்களுக்குச் சாதி என்ற கௌரவம் போலத் தற்போது தனியார் பள்ளி என்ற கீரிடம் தேவைப்படத்தான் செய்கின்றது.


7 comments:

  1. இப்போது இருக்கும் பாடங்கள் பயமுறுத்தும் வகையில் தான் இருக்கின்றன.

    நல்ல கட்டுரை. பாராட்டுகள்.

    ReplyDelete
  2. ***தனியார் பள்ளிக்கூடங்கள் பத்து மற்றும் +1, +2 என மூன்று வருடங்களில் வாங்கும் கட்டணம் என்பது வானம் அளவுக்கு உயர்ந்துள்ளது. குறிப்பாகத் தொடக்கக் கட்டணம் அத்துடன் மாத கட்டணம் கடைசியாகச் சிறப்பு வகுப்புக் கட்டணம் என்று வேறு தனியாக வசூலிக்கின்றார்கள். மூன்று வருடங்களும் ஒரு மாணவர் கடந்து வருவதற்குக் குறைந்தபட்சம் 3 முதல் 4 லட்சம் தேவைப்படுகின்றது.***

    நம்ம ஊரில் அமெரிக்காவை திட்டிக்கொண்டே அமெரிக்க சிஸ்டத்டைத்தான் எல்லாவற்றிலும் தொடர்றாங்க. பள்ளிக்கூடங்கள், கல்லூரி எல்லாமே பிஸினெஸ்தான் அமெரிக்காவில். அதை அப்படியே ஃபாலோ பண்றாங்க..ரியாலிட்டி ஷோ, அது இதுனு எல்லாவற்றிலும் அதே. இவர்களை காப்பதுறது ரொம்ப கஷ்டம்!


    ReplyDelete
    Replies
    1. நானும் தொடக்கத்தில் இப்படி குழம்பிப் போனதுண்டு. ஆனால் அமெரிக்காவும் இப்படித்தான் தொடக்கத்தில் இருந்துள்ளது. எத்தனையோ பயணக்கட்டுரைகளை நீங்க படித்து இருப்பீங்க. ஞாநி எழுதிய (கிண்டில்) ஆப்பிள் தேசம் அவசியம் படிங்க. லஞ்சமும் ஊழலும் அநியாயமும் கலந்து இருந்த அமெரிக்காவை எப்படி படிப்படியாக ஆட்சியாளர்கள் மாற்றினார்கள் என்பதனை ஒவ்வொரு பக்கத்திலும் அழகாக விவரித்துள்ளார். இதனைப் பற்றி தனியாக விமர்சனம் எழுதுவேன்.

      Delete
    2. https://www.amazon.in/Apple-Desam-Tamil-Gnani-ebook/dp/B074CT4FT2/ref=sr_1_4?qid=1568882625&refinements=p_27%3AGnani&s=digital-text&sr=1-4&text=Gnani

      Delete
  3. தனியார் பள்ளி என்னும் கிரீடம்...நிதர்சனமும் ஆதங்கமும்..ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. தனிப் பதிவாக எழுத நிறைய விசயங்கள் உள்ளது.

      Delete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.