அஸ்திவாரம்

Sunday, July 07, 2019

உங்கள் வீட்டில் இரட்டையர்கள் இருக்கின்றார்களா?



விபரம் தெரிந்த நாள் முதல் இரட்டையர்கள் என்றால் எனக்குப் பெரிய பிரமிப்பு மற்றும் ஆச்சரியம் உருவாகும்.  பள்ளி, கல்லூரி வரைக்கும் என்னுடன் இரட்டையர் எவரும் பயணித்தது இல்லை.  இன்னமும் நெருக்கமான தொடர்பில் கூட இரட்டையர்கள் எவரும் என் வாழ்வில் வந்ததும் இல்லை.

இரட்டை வாழைப்பழம் சாப்பிட்டால் இரட்டையர்கள் பிறப்பார்கள் என்ற (மூட) நம்பிக்கையைப் பல வருடங்கள் நம்பி எங்கு சென்றாலும் இரட்டை வாழைப்பழத்தை விருப்பத்துடன் வாங்கி உண்பதுண்டு.

எங்கள் முந்தைய மூன்று தலைமுறைகளில் என் வகையில், மனைவி வகையில் எங்குமே இரட்டையர்கள் இல்லை.  எனக்குத் தெரிந்த உறவுக்கூட்டங்களில் கூட இரட்டையர் இல்லை.  ஆனால் என் நண்பர் சென்னையில் உள்ள அதியமானுக்கு இரட்டைப் பசங்க இருக்கின்றார்கள்.  

நமக்கு இரட்டையர்கள் இருந்தால் எப்படியிருக்கும்? என்று பலமுறை யோசித்ததுண்டு.  நான் தங்கியிருந்த நம்பிக்கை இல்லம் என்ற குடியிருப்பில் காரைக்குடி பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் ஒருவருக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் இருந்தன.  நான் அங்கிருந்த இரண்டு வருட காலத்தில் அவர் இருவரில் யார் மூத்தவர்? என்பதனை கடைசி வரைக்கும் கண்டு பிடிக்கவே முடியவில்லை.  அந்த அளவுக்கு அச்சு அசலாக அவர்களின் உருவத் தோற்றம் இருந்தது.

என் மனைவி கர்ப்பமாகி மருத்துவரிடம் முதல் முறையாகச் சோதிக்கச் சென்ற போது இரட்டையராக இருக்கும் போல? என்று பூடகமாகச் சொன்னார்.  அந்த நாள் இன்னமும் என் நினைவில் உள்ளது.

மகள்கள் இருவரும் ஒரு நிமிட இடைவெளியில் திருவண்ணாமலையில் பிறந்தார்கள்.  ஆனால் இருவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. உருவம், புத்திசாலித்தனம், விருப்பங்கள் போன்ற ஒரு துளி கூட தொடர்பில்லை.  நேரேதிர் என்பார்களே? அது போலத்தான் இருக்கின்றார்கள்.

இதில் ஒருவர் மட்டும் என்னைப் போல என்  குடும்ப தலைமுறையினர் குணாதிசயங்கள் போலவே இருக்கின்றார்.  ஆனால் இருவருக்கும் பல பொதுவான குணாதிசயங்கள் உள்ளதைப் பல முறை கவனித்துள்ளேன்.  ஒருவர் தூக்கத்தில் எழும் போது அதே அந்த சமயத்தில் அடுத்தவரும் எழுந்து விடுகின்றார். இதே போலப் பல உதாரணங்கள் உண்டு.  இவர்கள் வளர வளர நானும் மாறினேன்.  என்னை முழுமையாக மாற்றிய பெருமை இவர்களையேச் சேரும்.

ஒருவர் கல்வி ரீதியாக மாவட்ட அளவில் பெருமை சேர்த்து தந்துள்ளார். அசாத்தியமான பல திறமைகளுக்குச் சொந்தக்காரராக உள்ளார். எங்கள் இருவரின் தலைமுறையில் எவருக்கும் இல்லாத பல புதிரான, ஆச்சரியமான திறமைகள் ஒருவரிடம் உள்ளது.  ஒருவரைப் பார்த்து அப்படியே படம் வரைகின்றார்.  கால்பந்து விளையாட்டில் திறமைசாலியாக இருக்கின்றார்.  கராத்தே சில படிகளைக் கடந்துள்ளார்.  விளையாட்டில் ஆர்வமிருப்பவர்கள் கல்வியில் பின் தங்கியிருப்பார்கள்.  ஆனால் இவர் இரண்டையும் கடந்து மேலேறிக் கொண்டு இருக்கின்றார்.  ஆனால் மற்றொருவர் குடும்ப குத்து விளக்கு என்ற கோட்டை விட்டு வெளியே வராமல் அடம் பிடித்து அம்மாவிடம் சண்டை பிடித்துக் கொண்டு இருக்கின்றார். எனக்கு கிடைத்த பஞ்சாயத்துத் தலைவர் பட்டம் வாழ்க்கையைச் சுவராசியமாக்கிக் கொண்டு இருக்கின்றது.

இன்று ஞாயிற்றுக் கிழமை.  குடும்பத்துடன் வாய்ப்பிருந்தால் இந்த காணொலிக் காட்சியை முழுமையாகப் பாருங்கள்.



12 comments:

  1. இரட்டையருக்கு வாழ்த்துக்கள்
    உறவில் ராமன், லக்ஷ்மணன் என பலர் உண்டு.
    இந்த வீடியோ பார்த்திருக்கிறேன்.... செம

    ReplyDelete
    Replies
    1. பெரும்பாலும் ஆண் என்றாலே இந்தப் பெயர் தான் வைக்கின்றார்கள் குமார். எங்கள் நிறுவனத்தில் ஒரு துறையில் இதே போல இரட்டையர் ராமர் லஷ்மணன் இருந்தார்கள். ஒருவருக்கு ஒருவர் அரிவாளால் வெட்டும் அளவிற்கு சண்டையுடன் தான் வாழ்கின்றார்கள்.

      Delete
  2. எங்கள் உறவுகளில் பலர் உண்டு.
    இதில் இவர்கள் பிறருக்கு கை, கால் சுளுக்கு என்றால் இரட்டையர்கள் தடவி விட்டால் குணமாகிவிடும்.

    எனது மாமா மகள் இரட்டையர்களில் ஒருவள் ஆண் இறந்து விட்டான். சிறிய வயதில் நான் அடிக்கடி சுளுக்கி விட்டது என்று (பொய்) சொல்லி மாமா மகளிடம் சுளுக்கு எடுக்கச் சொல்லி இருங்கிறேன்.

    பழைய நினைவோட்டங்கள் நிழலாடி விட்டது.

    ReplyDelete
    Replies
    1. இந்தியாவில் (இடம் மறந்து விட்டது) ஏதோவொரு கிராமத்தில் பிறப்பவர்கள் அனைவரும் இரட்டையர்களாகவே இருக்கின்றார்கள். கேரளா என்று நினைவு. மகள்களை வைத்து எனது ஐந்து தலைமுறைகள் பற்றி நீண்டதொரு ஆராய்ச்சியும் செய்துள்ளேன். மரபணு துறையில் மிகப் பெரிய ஈடுபாடு இருப்பதால் இன்னமும் பல விசயங்கள் எனக்கு புதிராகவே உள்ளது.

      Delete
    2. KodiNi village in Mallapuram , Kerala is the name where twins are very common.
      If it is not in the hereditary one reason is women take medicines for fertility. — Rajan

      Delete
  3. KODINHI —-is the correct name, typo in my previous message— Rajan

    ReplyDelete
  4. பஞ்சாயத்துத் தலைவர் - சரியான பட்டம்...

    ReplyDelete
    Replies
    1. மகள் ஒருவர் மோடி பக்கம். மற்றொருவர் நடிகர் விஜய் பக்கம். ஒருவர் சாப்பாடு பக்கம். மனைவி கலைஞர் பக்கம். எப்படி? நினைத்துப் பாருங்க.

      Delete
    2. ஆகா...!

      இவ்வளவு சிரமத்திற்கு நடுவிலும் - எத்தனை விதமான சிந்தனைகள் (FB and blog)


      !!!!!

      Delete
    3. கலாய்ப்பதும் கலாய்க்கப்படுவதுமே கொண்டாட்டமான வாழ்க்கை.

      Delete
  5. இரட்டையர்களுக்கு வாழ்த்துகள்

    எங்கள் முகநூல் நண்பர் திரு ஜோதிஜி (திருப்பூர்) அவர்கள் பதிவின் மூலம் இந்த விடியோ இணைப்பை கொடுத்திருக்கிறார்.

    இரட்டையர்கள் பற்றி:
    எங்கள் வீடும் இரட்டையர்கள் நிறைந்த வீடு தான். எனது தங்கைக்கு இரட்டை மகன்கள் – மூத்தவர் அருண் ஸ்ரீராம், இளையவர் அசோக் குமார் –
    எனது இளைய மகன் பிரகாஷ் திருமணம் செய்திருப்பது இரட்டையரில் மூத்தவர் – திருமதி ரேகா ஜெயசெல்வகுமார் –
    திருமதி ரேகா ஜெயசெல்வகுமார் – அவரது தங்கை கார்த்திகா ஜெய செல்வகுமார் – அவர்கள் இருவரும் எல்.கே.ஜியிலிருந்து இளங்கலை வரை ஒரே வகுப்பு தான், பணி கிடைத்ததும் ஒரே கம்பெனி தான், இன்னொரு ஆச்சரியம் – பிளஸ் 2 வில் இருவருக்கும் ஒரே மொத்த எண் தான்,
    இவர்களது சித்தப்பாவுக்கும் இரட்டையர்கள் தான்,
    எனது மனைவியின் சகோதரிக்கும் இரட்டை பெண்கள்,
    இன்னும் நிறைய உதாரணங்கள் இருக்கின்றன.

    இந்த நிகழ்ச்சி காணொளி பற்றி, திரு கரு.பழனியப்பன் அருமையாக நடத்தியிருக்கிறார், என்ன தகவல்கள் தேவையோ அதை கேள்விகள் மூலம் வெளிக்கொணர்ந்திருக்கிறார். நிறைய தகவல்கள் நிஜம் தான்,
    நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.

    இந்த அற்புதமான காணொளியை எனது முகநூல் பக்கத்தில் பகிர்கிறேன். கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் இயங்கும். நன்றி திரு ஜோதிஜி. பாராட்டுகள்
    திரு கரு.பழனியப்பன். பங்கு பெற்ற அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்.
    9.7.2019

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.