அஸ்திவாரம்

Monday, July 29, 2019

வைகோ 2019


"எனக்குப் பேச மூன்று நிமிடம் தான் கிடைக்கும். அதற்குள் என்ன பேச முடியுமோ? அதைப் பேசுவேன் "என்று எதார்த்தத்தைப் புரிந்து கொண்டு வைகோ இங்கிருந்து போகும் போதே ஒரு முடிவுடன் தான் போனார்.

அதெல்லாம் சரி. போன வேலையைப் பார்க்காமல் அங்காளி பங்காளி என்று ஒருவர் விடாமல் எல்லாரையும் ரவுண்டு கட்டி இரண்டு மூன்று நாளா ஒவ்வொரு வீடா ஏறி இறங்கிட்டுருக்காரு. குடும்பத்தையும் வேறு கொண்டு போய்ச் சேர்த்துருக்காரு.

வாழ்வின் கடைசி சமயங்களில் இங்கே பலருக்கும் ஒன்று பயம் வந்து விடுகின்றது. இரண்டு எதார்த்தம் புரிந்து விடுகின்றது. மூன்று நம் கொள்கைகள் பேசுவதற்கு மட்டும் தான். நடைமுறையில் வாய்ப்பில்லை என்ற உண்மையும் புரிந்து விடுகின்றது.

ஆனால் அதற்கு அரசியலில் நுழைந்து உணர்ந்து கொள்ள ஐம்பது ஆண்டுகள் தேவைப்படுகின்றது.😔

+++++++++++

ஏற்கனவே கூகுள் ப்ளஸ் என்ற அமைப்பு இருந்தது. கொஞ்சம் நெருக்கமான உரையாடல் தொடர்ந்து நடந்து கொண்டு இருந்தது. ஆனால் 50 வயதைக் கடந்தால் உருவாகும் அனைத்து முட்டாள் தனங்களும் அவர்களிடம் இருந்தது. தான் நம்புவது மட்டும் தான் சரி என்று நம்பும் கூட்டமாகவும் இருந்தது. இழுத்து மூடிவிட்டார்கள். அவர்கள் ஃபேஸ்புக் பக்கம் வராமல் டிவிட்டர் பக்கம் ஒதுங்கி விட்டார்கள். மொத்தமாகக் கலைந்தும் போய்விட்டார்கள்.

அவர்கள் ஃபேஸ்புக் வராமல் இருந்ததற்கு முக்கியக் காரணம் தங்களை ஆப்ரேசன் செய்து குற்றுயிரும் கொலையுமாகச் செய்து விடுவார்களே? என்ற பயம். கருப்பு வெள்ளை மட்டுமே நிறம். இங்கே பல வண்ணங்கள் உண்டு என்பதனை உணர மறுப்பவர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெகுஜன கூட்டத்தால் ஒதுக்கப்பட்டுக் கொண்டே தான் இருப்பார்கள்.

நான் அறிந்தவரையிலும் பேஸ்புக் தளத்தில் நாம் தேர்ந்தெடுப்பதைப் பொறுத்து நிதானமாக கற்றுக் கொள்ள முடியும். அது சதவிகித அடிப்படையில் குறைவு என்றபோதிலும். வேறு ஏதாவது தளம் கிடைக்காதா? என்று யோசித்துக் கொண்டிருந்த இந்த தளம் திடீரென்று அறிமுகம் ஆனது. முதலில் ஆங்கிலம் வழியே மின் அஞ்சலுக்கு வந்து கொண்டிருந்தது. பலவிதமான உரையாடல்கள். ஆனால் மாணவர்கள் நுழைவுத்தேர்வுக்குப் படிப்பது போன்று உருப்படியான சமாச்சாரங்கள். அதைத்தான் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்ததேன்.

ஒரு நாள் உள்ளே நுழைந்த போது உன் தாய் மொழி தமிழ்தானே? என்று கேட்டது. அப்படியே தமிழுக்குத் திருப்பி விட்டது. அப்போது தான் தமிழில் கூட உரையாடல் உள்ளது என்பதனை புரிந்து கொண்டேன். (நான் இது போன்ற விசயங்களில் கொஞ்சமல்ல நிறைய ட்யூப்லைட்).

தினமும் மின் அஞ்சலுக்கு வந்து கொண்டேயிருக்கின்றது. இன்று வந்த உரையாடலின் ஒரு பகுதி இது.


பணத்தைத் தோற்கடிக்கும் ஆயுதம் எது?

எபனேசர் எலிசபெத் (Ebenezer Elizabeth), எந்திரவியல் பயிற்சியாளர் (2016-தற்போது)

மாறுதலாகி வேறொரு பள்ளியில் சேர்ந்தேன் அந்த பள்ளியில் 'அ' பிரிவு ஆங்கில வழி கல்வியும் மற்ற பிரிவு தமிழ் வழிக் கல்வியும் கற்று தரப்படும்.
அப்பர் மிடில் கிளாஸ் மாணவர்கள் தான் பெரும்பாலும் ஆங்கில வழி கல்வி படிப்பதுண்டு. விளையாட்டு விழாவில் பங்கேற்க மாணவிகளை தேர்ந்தெடுத்துக்கொண்டிருந்தார் அந்த உடற்கல்வி ஆசிரியை. விளையாட்டில் மிகவும் ஆர்வம் இருக்க நானும் எனது பெயரை சேர்த்துக்கொள்ளுமாறு கேட்க, தமிழ் மீடியாம? Shoe வாங்க முடியுமா? நீங்க எல்லாம் ஏன் விளையாட வாரீங்க?னு கேட்டார் அந்த ஆசிரியை.

எதையும் புரிந்து கொள்ளும் பதின்ம வயதாகையால் ஒன்றும் சொல்லாமல் வெட்கத்துடன் திரும்பி வந்து விட்டேன் …..

எங்க போனாலும் அந்த ஒன்னு மட்டும் மறக்கவே இல்லை அந்த வார்த்தை என்னை துரத்திக்கொண்டே இருந்தது... விடலையே நானும்....., படிச்சேன் அடிச்சி பிடிச்சி..,தொரத்தி விரட்டி வேலையை வாங்குனேன்................., shoe வா வாங்கி குமிச்சேன் ... காலம் உருண்டோடியது .... நான் அணியும் உடைக்கு பொருத்தமாக shoe போடும் அளவிற்கு இறைவன் இரக்கம் காட்டினார். இப்ப shoe எல்லாம் பெரிய விஷயமாவே தெரியல, அது மேல இருந்த ஆசையே போய்விட்டது.சலித்துவிட்டது.

நெல்சன் மண்டேலாவின் கூற்று மிக உண்மையே.

“Education is the most powerful weapon which you can use to change the world.”

பணத்தைத் தோற்கடிக்கும் ஆயுதம் என நான் நம்புவது கல்வியையே.

ஆதலால் கற்பிப்பீர்.


**************

தமிழக அரசியல்வாதிகள் டெல்லியில் எப்படிச் செயல்படுகின்றார்கள்?

வைகோ மாநிலங்களவையில் கர்ஜித்தார். முழங்கினார். திணறடித்தார் என்று வரிசையாக யூ டியூப் ல் ஒவ்வொருவரும் தனக்குப் பிடித்த தலைப்பினை வைத்துப் பயமுறுத்துகிறார்கள்.

அப்படி என்ன சாதித்தார்?

இரண்டு விசயங்களைப் பற்றிப் பேசினார்? டெல்டா மாவட்டங்களில் உள்ள மத்திய அரசாங்கம் கொண்டு வரும் திட்டங்கள் குறித்துப் பேசினார். ஆயத்த ஆடைத்துறையில் மத்திய அரசு கொள்கை குறித்துப் பேசினார்.

ஆயத்த ஆடைத்துறையில் உள்ள சார்புத் தொழிலாக உள்ள சாயப்பட்டறைகளுக்கு மத்திய அரசாங்கம் தமிழகத்திற்கு ஒரு மாதிரியாகவும், மற்ற மாநிலங்களில் வேறு விதமாகவும் கொள்கை முடிவு எடுக்கின்றது என்றார்.

இதனை விரிவாகப் பேசினால் வட மாநிலங்களில் ஜீரோ டிஸ்சார்ஜ் என்பது எங்குமே இல்லை. அப்படியே கடலில் கலந்து விடுகின்றார்கள். அருகில் உள்ள கர்நாடகாவில் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள நெருக்கடியான இடங்களில் கூட திருப்பூரிலிருந்து சென்றவர்கள் சாயப்பட்டறைகள் வைத்துள்ளார்கள். குடும்பத்தினர்கள் பயன்படுத்தும் சாக்கடை செல்லும் வழிகளில் இந்த சாயத் தண்ணீரை அப்படியே திறந்துவிடுகின்றார்கள். அந்த கழிவு சாய நீர் அனைத்தும் காவேரியாக நமக்கே திரும்பி வந்து விடுகின்றது.

சரி திருப்பூரில் யோக்கியவான்கள் இருக்கின்றார்களா?

சாயப்பட்டறைகளின் தண்ணீரை வாங்கி சுத்திகரிக்கும் நிறுவனம் அந்தத் தண்ணீரைச் சுத்திகரிக்காமல் அப்படியே நொய்யல் ஆற்றில் கலப்பதும், சங்கப் பொறுப்பிலிருந்து கொண்டு மத்திய அரசு வழங்கும் மானியங்களை அப்படியே ஸ்வாகா செய்வதும் தான் நடக்கின்றது. நேர்மையாகத் தொழில் செய்பவர்களை மிரட்டுவது, முடக்குவது, அதிகாரிகளை வைத்து சித்திரவதை செய்வதும் தான் நடக்கின்றது.

அதாவது தனிப்பட்ட முறையில் நீ சுத்திகரித்து சமூகத்திற்குச் சேவை செய்யக்கூடாது. நாங்கள் சொல்லும் நிறுவனத்தில் நீ இணைந்து கொள்ள வேண்டும். அவர்கள் சொல்லும் காசை நீ தொழில் நடத்தினாலும் நடத்தாவிட்டாலும் மாதந்தோறும் கட்டியாக வேண்டும் என்று அமைச்சர், அதிகாரிகள், சங்கப்பொறுப்பாளர்கள் என்ற கூட்டணி களவாணிகள் இந்த தொழிலையே படிப்படியாகச் சிதைத்துக் கொண்டிருப்பது வைகோ அவர்களுக்குத் தெரியுமா? தெரியாதா? என்று தெரியவில்லை.

இது முழுக்க முழுக்க மாநில அரசாங்கம் சம்மந்தப்பட்டது.

அத்துடன் வங்கதேசத்திலிருந்து வரும் பருத்தி இந்தியத் தமிழக பஞ்சாலையை முடக்கிப் போடுகின்றது என்றார்.

காங்கு ஆட்சியில் சரத்பவார், சச்சின் டெண்டுல்கர் முதல் இன்னும் பலரும் எப்படிச் செயல்பட்டார்கள்? எப்படி வட இந்திய லாபி மொத்த பஞ்சுத் தொழிலை மாபியா கும்பல் போலச் செயல்பட்டு வளைத்து தமிழக பஞ்சாலை முதலாளிகளைக் கதறவிட்டார்கள் என்பது நிச்சயம் வைகோவுக்குத் தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை.

ஒரு கேள்விகளில் பத்து துணைக் கேள்விகளை உள்ளே வைத்துப் பேசி முடித்து அமர்ந்ததும் ஸ்மிருதி ராணி இதனையே குறிப்பிட்டு வேறு விதமாகப் பதில் அளித்தார். அமைச்சர் பதில் எனக்குத் திருப்தியில்லை என்றார் வைகோ.

இவர் என்ன செய்திருக்க வேண்டும்?

ஒவ்வொருவர் வீடாக ஏறி இறங்கிய நேரத்தில் ஸ்மிருதி ராணியை அவர் அலுவலகத்தில் சந்திருந்திருக்க வேண்டும். இங்கிருப்பவர்களிடம் மொத்த பிரச்சனைகளையும் கேட்டு அதனை வரைவுத் திட்டமாகத் தயாரித்து சாதக பாதக அம்சங்களை அமைச்சர், அதிகாரிகளைப் பார்த்துப் பேசி கொடுத்திருக்க வேண்டும். அவர்கள் சொல்லும் பதிலை வைத்து பத்திரிக்கைக்கு அறிக்கையாகக் கொடுத்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் தன் சமூக வலைதளத்தில் இந்தப் பிரச்சனைக்குப் பின்னால் உள்ள பாதக அம்சங்களை பட்டியலிட்டுருக்க வேண்டும்.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரைப் போய் பார்த்திருக்க வேண்டும். அரசின் கொள்கை முடிவுகள் பரிசீலிசனை செய்ய வாய்ப்புள்ளதா? என்பதன் எதார்த்தத்தைப் புரிந்திருக்க வேண்டும். வண்டு முருகன் போலத் தமிழக மேடை போல இங்கே வாதாட முடியாது என்பதனையும் புரிந்திருக்க வேண்டும்.

பாராளுமன்றத்தில் கேள்வி கேட்பது என்பது காலம் காலமாக அங்குள்ள பதிவேடுகளில் பதிய உதவுமே தவிர லாபியை நெருங்காமல், நெருக்காமல் இருக்கும்பட்சத்தில் பத்து பைசாவுக்கு கேட்ட கேள்விக்குப் பிரயோஜனம் இருக்காது.

அதிகாரம் இருந்தாலே அங்குள்ள ஹிந்திவாலாக்கள் நம்மை மேலும் கீழும் நக்கலாகப் பார்ப்பார்கள். துறை சார்ந்த அமைச்சருக்குப் பின்னால் உள்ள இணை, துணை செயலாளர்கள் வட்டத்தைப் பார்த்து முடிப்பதற்கே நமக்கு நாக்கு தள்ளிவிடும். இவரோ தனி நபராகப் போயுள்ளார்.

புல்லட் ரயில் போல படபடவென்று நிறுத்தாமல் உணர்ச்சி வசப்பட்டு பேசி, அரசுக்கு எச்சரிக்கை விட்டு வெங்கையா நாயுடுவிடம் எச்சரிக்கை வார்த்தைகள் வாங்கியது தான் இறுதியில் வைகோவுக்கு கிடைத்த பரிசு.

23 ம் புலிகேசியில் வடிவேல் சொல்லும் வாசகம் தான் நினைவுக்கு வருகின்றது.

"வெளியில் அரண்மனையில் வேலை என்று சொல்லிக் கொள்ள வேண்டியது".



12 comments:

  1. Www.ta.quora.com அட தமிழில் இருக்கிறதா! எனக்கும் புதிய தகவல் ஜோதிஜி. நன்றி.

    ReplyDelete
  2. கோராவிலிருந்து எனக்கும் பல பயனுள்ள குறிப்புகள் தினமும் வருகிறது.​ தமிழில்தான் ஆரம்பத்திலிருந்தே வருகிறது.

    ReplyDelete
  3. //ஆனால் அதற்கு அரசியலில் நுழைந்து உணர்ந்து கொள்ள ஐம்பது ஆண்டுகள் தேவைப்படுகின்றது// சரியான வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. ஆனால் இப்போது கூட நாடகம் தான் நடத்திக் கொண்டு இருக்கின்றார். எரிச்சலாக உள்ளது.

      Delete
  4. //தமிழ் மீடியாம? Shoe வாங்க முடியுமா? நீங்க எல்லாம் ஏன் விளையாட வாரீங்க?// - என்ன கொடுமை இது. ஆசிரியர்களிலுமா?

    ReplyDelete
    Replies
    1. இதெல்லாம் சிபிஎஸ்சி சிலபஸ் உங்களால் படிக்க முடியாது என்று மெட்ரிக் பாடத்திட்டத்தில் சென்ற வருடம் படித்த என் மகளிடம் ஒரு ஆசிரியை சொன்னதைக் கேட்டு அடுத்து கொடுத்த தாக்குதலில் மிரண்டு போனார். மொத்த கூமுட்டைகள் எல்லாம் எங்கே இருக்கின்றது என்றால் அது தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் தான். ஒப்பீட்டளவில் அரசு பள்ளிக்கூட ஆசிரியர்கள் வெளி உலகம் தெரிந்தவர்கள். ஆனால் அரசு வேலை என்று சொகுசு வட்டத்தில் வாழ்பவர்கள். ஆனால் இங்கு அர்ப்பணிப்பு உணர்வோடு பாதிக்கு பாதி பேர்கள் இருக்கின்றார்கள்.

      Delete
  5. //வெளியில் அரண்மனையில் வேலை என்று சொல்லிக் கொள்ள வேண்டியது"// - நீங்க எழுதியிருப்பது சரிதான். காரியம் முக்கியமா வீரியம் முக்கியமா என்று பகுத்தறியத் தெரியாதது வை.கோவின் பலவீனம். (மக்கள் நலனில். சொந்த நலனில் சரியாக இதனைக் கடைபிடித்திருக்கிறார் சமீப காலங்களில்).

    கிராமத்துல ஒரு பழமொழி உண்டு. நாயை அடிப்பானேன் ..யைச் சுமப்பானேன் என்று... எதுக்கு வீரியமாகப் பேசி காணொளி விடணும், அப்புறம் ஒருவர் பாக்கியில்லாமல் பாஜக தலைவர்களைப் பார்த்து தாஜா பண்ணணும்?

    ReplyDelete
    Replies
    1. சோனியாவிடம் அந்தரங்கத்தில் மிக நெருக்கமாக இருந்தார். உளவுத்துறைகள் இவரை சரியாக பயன்படுத்திவந்தனர். உள்வட்ட நண்பர்கள் இன்னமும் பலவிதமாக சொல்கின்றார்கள்.

      Delete
    2. அவ்வளவுதானா ஜோதிஜி? ஈழப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்ததே வைகோதான் என்றொரு தகவல் உலாவிக் கொண்டிருக்கிறதே, அதைப்பற்றி எல்லாம் எதுவுமே சொல்ல மாட்டீர்களா?

      Delete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.