அஸ்திவாரம்

Monday, February 04, 2019

நல்ல மனம் வாழ்க

"மிகவும் வருத்தம் தரும் செய்தி!

தேவையே இல்லாமல் அவருடன் கடவுள் இல்லை என்று விவாதம் செய்து இருக்கிறேன். அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு என்று ஒதுங்கிப் போயிருக்க வேண்டும். தவிர்த்து இருக்கனும். அதன் பிறகு அவருடன் கடைசிவரை சமாதானம் எதுவும் செய்து கொள்ள முடியவில்லை- ஒவ்வொருவர் நம்பிக்கையில் அவரவர் பிடிவாதமாக இருந்ததால்.

அவர் தந்தை மிகவும் வயதாகி 90 வயதுக்குமேல் வயதானக் காலத்தில் மிகவும் கஷ்டப் பட்டு சில வருடங்கள் முன்புதான் உலகை விட்டுச் சென்றார். அப்போது மிகவும் வயதாகி இறப்பது வரமா/ இல்லை சாபமா என்று ஒரு பதிவெழுதினாரென்று நினைக்கிறேன். தந்தைபோல் கஷ்டப்படாமல் நாம் நிம்மதியாகப் போயிவிடனும் என்பதுபோல் ஒரு ஆதங்கமே அவரிடம் இருந்து வெளிப்பட்டது.

யாரின் முடிவாலும் பாதிக்கப் படுவது அவரவர் குடும்பத்தினரும், நண்பர்களுமே. அவர்களுக்கு என் ஆழ்ந்த வருத்தங்கள்."

நண்பர் வருண் எழுதிய வார்த்தைகளைப் படித்து முடித்த போது மனம் சற்று கலங்கிப் போனது. திரு. தமிழ் இளங்கோ குறித்துப் பல நினைவுகள் வந்து போனது.

நண்பர் ராஜ நடராஜன் பணியில் இருந்த போதே வளைகுடா நாட்டில் திடீரென்று மருத்துவமனையில் சேர்த்தும் இறந்து போனார். அவருக்கும் இருதயப் பிரச்சனை தான். அவர் விருப்பப்படி உடலைக் கோவையில் தான் தகனம் செய்தார்கள். கடைசி வரை அருகே இருந்தேன். அவர் தளத்தில் பார்த்த நிகழ்வுகளை பின்னூட்டத்தில் எழுதினேன். அவர் குறித்த தகவல்களை உண்மையான விசயங்களை அப்படியே பலருக்கும் கொண்டு சேர்த்தேன். காரணம் அவர் எவருடனும் நேரிடையான தொடர்பில் இல்லாதவர். முகத்தை எந்த இடத்திலும் வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருந்தார்.

ராஜ நடராஜன் என்னுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார். எழுத்துக்கு அப்பால் சில தொழில் முயற்சிகளில் இருவரும் இருந்தோம். கைகூடவில்லை. அவர் திடீர் மரணம் எனக்குத் தனிப்பட்ட முறையில் அதிகளவு சோகத்தை உருவாக்கியது. அதன் பிறகு கலக்கத்தை உருவாக்கியது தமிழ் இளங்கோ அவர்களின் மரணம்.

ஒரு பயணத்தில் முகநூலில் நான் வாசித்த குமார் எழுதியதன் மூலம் தமிழ் இளங்கோவின் மரணம் என்னை அதிர்ச்சியடையவைத்து.

தமிழ் இளங்கோ அவர்களைப் புதுக்கோட்டை விழாவில் சந்தித்துள்ளேன். அதற்கு அப்பாலும் என் மேல் தனிப்பட்ட பிரியம் கொண்டவர். காரணம் என் வெளிப்படையான எழுத்துக்கள் அவரை ரொம்பவே ஈர்த்தது என்று ஒவ்வொருமுறையும் அலைபேசியில் பேசும் போது சொல்வார். தோன்றும் போது அழைத்துப் பேசுவதுண்டு.

சமீபத்தில் அவர் திருச்சியில் காவேரி மருத்துவமனையில் இருதய நோய்க்காக அவர் சென்றது முதல் அங்கே நடந்த மனிதாபிமானம் அற்ற செயல்பாடுகளை மேலோட்டமாக அவர் பதிவில் எழுதியிருந்தார். நான் அடிப்படை விசயங்களைப் புரிந்து கொண்டு அவரை அழைத்துப் பேசினேன். அப்போது நானே உங்களை அழைத்துப் பேச வேண்டும். நீங்க மட்டும் தான் அப்படியே பயப்படாமல் எழுதக்கூடியவர். அங்கு நடப்பது மருத்துவமனை செயல்பாடுகள் அல்ல. திட்டமிட்டுப் பணம் பறிக்கும் கழுகுக்கூட்டங்கள் என்று தொடர்ந்து பத்து நிமிடங்கள் அந்த மருத்துவமனையில் நடந்த சமாச்சாரங்களைப் பற்றிப் பேசினார்.

"ஏன் மறுநாளே அழைத்துச் சொல்லியிருக்கலாமே?" என்று நான் கேட்ட போது "நீங்க இருக்கும் பதவியில் எந்தச் சமயத்தில் அழைப்பது என்று யோசித்துக் கொண்டே இருந்தேன்?" என்றார். இந்த வருட ஆங்கில வருட புத்தாண்டு அன்று அழைத்துப் பேசி வாழ்த்து சொன்னேன். "தொடர்ந்து கணினி முன்னால் அமர்வது கடினமாக உள்ளது" என்று பேசினார்.

அவரின் கடைசிப் பதிவு சென்றவருடம் நவம்பர் மாதத்துடன் முடிந்துள்ளது.

தமிழ் இளங்கோ அவர்களைப் பற்றி என்னால் சில வார்த்தைகள் சொல்ல முடியும். நான் அவரைப் பார்த்தவரையில், பழகிய வரையில், அவர் எழுத்துக்களை வாசித்த வரையில் இப்படி எழுதத் தோன்றியது.

அவர் தனக்கென ஒரு உலகத்தை வைத்திருந்தார். அந்த உலகத்தில் எப்போதும் நல்ல எண்ணங்களை மட்டும் நிரப்பி வைத்திருந்தார். எவருக்கும் எந்தக் கெடுதலும் பண்ணிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். எழுதும் எழுத்துக்களில் கூட எவரையும் புண்படுத்தி விடக்கூடாது என்பதில் அதிகக் கவனம் காட்டினார். தனக்கான கடமைகள் என்பதில் வரையறை வைத்திருந்தார். ஆன்மீகம் மிகச் சிறந்த வழிகாட்டி. தனக்கு உதவும் மருந்து என்பதில் உறுதியாக இருந்தார்.

எல்லாமே சரிதான்.

ஒரே ஒரு விசயத்தில் தான் மிக மிகப் பின்தங்கியிருந்தார் என்று தோன்றுகின்றது.

தன் மனரீதியான செயல்பாட்டில் அறுபது வயது கடந்தும் ஒரு குழந்தைக்குண்டான மனோபாவத்தில் தான் வாழ்ந்து இருக்கின்றார். சுற்றிலும் உள்ள உலக மாற்றங்கள் எல்லாவற்றையும் புறக்கணித்தே வாழ்ந்துள்ளார். துஷ்டனைக் கண்டால் தூர விலகிப் போ என்று சின்ன வயதில் சொல்லி வளர்ப்பார்களே? அதே போலக் கடைசி வரைக்கும் வாழ்ந்துள்ளார்.

நீங்கள் ஆன்மீக பிரியரா? வெறியரா? அது குறித்து நான் எந்தக் கேள்வியும் கேலியும் வைக்கப்போவதில்லை. அது உங்கள் தனிப்பட்ட விருப்பம். அது உங்களின் அந்தரங்கமான செயல்பாட்டில் ஒன்று.

ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உண்மையான ஆன்மீகம் என்பது உங்களை உங்களுக்கே உணர்த்துவது. உங்கள் மன அழுக்குகளைக் களைய உதவுவது. நடந்த பிரச்சனைகள் முதல் நடக்கப் போகும் பிரச்சனைகள் வரைக்கும் எதுவும் உங்களைத் தனிப்பட்ட முறையில் தாக்க முடியாத கவசத்தை உங்களின் மன எழுச்சி உருவாக்கக்கூடியது. அது போன்ற ஒரு மனரீதியான ஆன்மீகப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

ஆனால் நம்மவர்கள் செய்யும் வழிபாடு அனைத்தும் உள்ளும் புறமும் அலசாத சுயதிருப்திக்காகச் செய்யப்படும் வழிபாடுகளே. அது போன்ற சமயங்களில் தான் தனக்கு உருவாகும் ஆரோக்கியக் குறைபாடுகளை வெல்ல முடியாதவர்களாக மாறிவிடுகின்றார்கள். உண்மையிலேயே தியானத்தைச் சரியான முறையில் கற்றவர்கள் அவரவர் நம்பும் இறைசக்தியை அவர்கள் வாழ்நாளில் கண்டடைய முடியும் என்பதே என் பார்வை. அல்லது அவரவர் விரும்பும் தனிப்பட்ட மன அமைதியை பெறமுடியும்.

இது குறித்துத் தமிழ் இளங்கோ அவர்களிடம் சற்று மென்மையாகப் பேசியுள்ளேன்.

"நான் இனிமேல் இதையெல்லாம் எங்கே போய்க் கற்பது?" என்றார்?

அவர்(வங்கிப் பணியில்) அரசு பதவியில் இருந்தார். பணி (விருப்ப) ஓய்வு பெற்று தனக்கான வாழ்க்கையை வாழ்ந்தவர். அரசு பதவியில் மனைவி, மற்றும் பொறுப்பான மகன் என்று தன் கடமைகளை மிகச் சரியான நிறைவேற்றியவர் தன் மனம் சார்ந்த ஒழுங்குமுறைகளைச் சரியாக வகுத்துக் கொள்ளாத காரணங்களே அதிக அளவு தனிப்பட்ட பயங்களை உருவாக்கியுள்ளது என்பதனை அவர் உரையாடும் போது பலமுறை உணர்ந்துள்ளேன்.

நல்லவர், பண்பானவர் போன்ற வார்த்தைகளின் அர்த்தங்கள் மாறிய உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். வயது ஆகும் போது பலருக்கும் ஆன்மீகம் என்பது ஒரு விதமான மருந்து தான். அதில் எனக்குத் துளியளவும் சந்தேகம் இல்லை. ஆனால் மாறிய சூழலில் தன் மனோபக்குவத்தையும் அவரவர் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது என் எண்ணம்.

இயல்பாகவே அறுபது வயது கடந்தவர்கள் மீண்டும் குழந்தைப் பருவத்திற்குத் திரும்பத் தொடங்குகின்றார்கள் என்பது வாடிக்கை. தமிழ் இளங்கோ அவர்கள் மொத்த குழந்தைகளைப் போல மருத்துவமனைகள் என்றாலே நடுநடுங்கும் அளவிற்கு வாழ்ந்துள்ளார். இதுவே அவரின் மரணத்தை முன் தேதியிட்டு தள்ளியுள்ளது என்று தான் எனக்குத் தோன்றுகின்றது.

மருத்துவமனை சென்றது, திரும்பிவந்தது, அவர் எப்போதும் செல்லும் மருத்துவர் கொடுத்த தவறான ரிப்போர்ட், அந்த நேரத்தில் மருத்துவர் இல்லாமல் ரிப்போர்ட் வேறு நபர் கொடுத்தது, ரிப்போர்ட்டில் எழுதிய தவறான பார்வை என்று அவரின் உரையாடல்கள் இன்னமும் என் மனதில் வந்து போகின்றது. இதுவே அவரின் மனப்போராட்டத்தை அதிகமாக்கியது என்று பேசும் போது சொன்னார். மரணப் பயம் என்பது எவராலும் அறுதியிட்டுக்கூற முடியாது.

எழுதும் எனக்கு என் மரணம் எப்போதும் எந்த நிலையில் வரும் என்று எனக்குத் தெரியாது? ஆனால் அதன் அறிகுறித் தெரிந்தாலும் அதன் பயத்தை அதிகப்படுத்திக் கொள்ளக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றேன். காரணம் நம்மைச் சார்ந்தவர்கள் நம்மால் அதிக அளவு துன்பப்பட்டு விடக்கூடாது என்ற எண்ணமே முக்கியக் காரணம்.

இந்த இடத்தில் தான் நம் மக்கள் கோட்டை விடுகின்றார்கள். தவிர்க்கவே முடியாது மரணம் என்றாலும் கடைசி நிமிடம் வரைக்கும் தவிதவித்து விடுகின்றார்கள்.

எங்கள் வீட்டில் தாத்தா முதல் அக்கா வரைக்கும் அவர்களின் கடைசிக் காலம் நடந்து ஒவ்வொரு நிகழ்வும் இன்றும் மனக்கண்ணில் ஓடிக் கொண்டேயிருக்கின்றது. ஒவ்வொரு சமயத்திலும் மகள்களிடம் உரையாடும் போது மரணம் குறித்த உள்ளும் புறமும் உள்ள விசயங்களைப் பற்றி இப்போதே அவர்களுடன் பேசத் தொடங்கியுள்ளேன்.

நிச்சயம் தமிழ் இளங்கோ இன்னும் பத்தாண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய ஆரோக்கியம் உள்ளவர். எந்தத் தேவையற்ற பழக்கமும் இல்லாதவர். வாழ்க்கையை அழகாக, தெளிவாக, அமைதியாக வாழ்ந்தவர்.

அவர் சேர்த்து வைத்த ஆரோக்கியம் அனைத்தும் அவர் வளர்த்து வைத்திருந்த மனபயங்கள் தான் அவரைத் தின்று தீர்த்து விட்டது. இதன் காரணமாகவே மரணம் நோக்கி முன் தள்ளியுள்ளது என்றே நான் நினைக்கின்றேன். தன் அப்பாவைப் போல மற்றவர்களுக்குப் பாரமாக இருந்து விடுவோமா என்ற எண்ணம் அவரை அலைக்கழித்துக் கொண்டே இருந்தது என்பதனை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

அவர் வாழ்க்கையை. அவர் கடமைகளைச் செம்மையாகச் செய்துள்ளார். வாழ்க்கை என்னும் தொடர் ஓட்டத்தில் அவர் மகன் அப்பா செய்ய விரும்பிய கடமைகளை இனிமேல் செய்வார் என்று நம்புகின்றேன். 

திரு  தமிழ் இளங்கோ அவர்களுக்குத் தேவியர் இல்லத்தின் ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியை இங்கே எழுதி வைக்கின்றேன்.

நண்பர்கள் எழுதிய அஞ்சலிக்குறிப்புகள். 


http://avargal-unmaigal.blogspot.com/2019/02/blog-post.html







18 comments:

  1. செய்தி கேள்விப்பட்டதும் மனமொடிந்து போனேன்... நேற்று முழுக்க யாரிடமும் மனம் விட்டு பேச முடியவில்லை...

    அடிக்கடி நான் தொலைபேசியில் தொடர்பு கொள்வேன்... அவரும் அவ்வப்போது தொடர்பு கொள்வார்... புதுக்கோட்டை இணையப்பயிற்சியின் போதும், வலைப்பதிவர்கள் சந்திப்பின் போதும் பலவற்றை பற்றி பேசியுள்ளோம்...

    புகைப்படம் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்... பல நினைவுகள் வந்து இப்போதும் மனம் பாரமாக உள்ளது...

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் இதே மனநிலை தான். தனிப்பட்ட முறையில் என் மேல் அதிக பாசம் வைத்திருந்தார். குடும்பத்தில் ஒருவர் இறந்தால் என்ன மாதிரியான மனோநிலை இருக்குமோ அப்படி இருந்தது.

      Delete
  2. வருண் சில சமயங்களில் கோபப்பட்டு தன் கருத்துகளை சொல்லும் போது என்னடா இவர் இப்படி பேசுகிறீர்கள் என்று நினைக்க தோன்றும் ஆனால் அவர் இளங்கோ ம்றைவின் போது எழுதி வெளியிட்ட கருத்து மனதை தொட்டதுமட்டுமல்லாமல் சற்று உயர்ந்தே என் மனதில் தோன்றுகிறார்

    இளங்கோ அவர்களின் பதிவை மட்டும் படித்து வந்த எனக்கு அவரின் இழப்பு அதிர்ச்சியை அளித்து என்றால் அவரோடு நேரில் பேசிப் பழகிய போனில் பேசிய உங்களை போன்றவர்களுக்கு அந்த இழப்பு ஊர் பேரிழப்பாக வே இருக்கும்


    ஜோதிஜி உங்களது இந்த பதிவைப்படித்த பின் மனம் கனக்கிறது.....உங்களது எழுத்தும் உணர்வும் இளங்கோ அவ்ர்களின் இழப்பை இன்னும் அதிகரிக்க செய்துவிட்டது...

    ReplyDelete
    Replies
    1. வருண் பாசக்காரர் அதிக கோபக்காரர். மனதில் ஒன்றுமில்லாமல் அப்படியே கொட்டுபவர்கள் அடுத்தவர்களுக்கு தீங்க இழைப்பதே இல்லை. நெருங்கிய நண்பர்களும் அமைவதும் இல்லை. நானே இப்போது தான் கொஞ்சம் கொஞ்சம் மாற்றிக் கொண்டு வருகிறேன். நிச்சயம் பேரிழப்பு தான்.

      Delete
  3. இதயத்தில் அடைப்பு இருந்தால் பொதுவாக அறுவை சிகிச்சை (பை பாஸ்) செய்து கொள்கிறார்கள். இருப்பது தெரியாமலே போய்விட்டால் அது வேற விசயம். இருக்குனு இ கே ஜி, மற்றம் கேட் ஸ்கேன் மூலம் தெரிந்து விட்டால் செய்து கொள்கிறார்கள். இதயத்தில் அறுவை சிகிச்சை என்பது பெரிய ஆப்பரேசந்தான். கையெழுத்தெல்லாம் வாங்கிக் கொள்வார்கள். ஆனால் அறுவை சிகிச்சை செய்துகொள்ளாமல் இருத்தலைவிட, செய்து கொள்ளுதலால் ஏற்படும் சக்ஸஸ் ரேட் மிக மிக அதிகம்.

    ஆனால் பல லட்சங்கள் செலவாகலாம். அதுபோல் செலவழிக்க தேவையான பணம் வேண்டும். டாக்டர்கள் கொள்ளையடிப்பதுபோல் தோனலாம். மிகவும் நம்பிக்கையான ஒரு டாக்டரை முதலில் கண்டு பிடிக்கணும். அது மிக மிக முக்கியம். இந்த டாக்டர் நமக்கு நல்லதுதான் செய்வார் என்கிற நம்பிக்கை மிக அவசியம். அத்துடன் அத்தனை பெரிய ஆப்பரேசன் என பயமும் நிச்சயம் வரலாம்தான்.

    நான்கூட ஆப்பரேசன் செய்து கொள்வதுதான் நல்லதுனு சொல்ல நினைத்தேன். ஆனால் இது தனிப்பட்ட ஒருவருடைய பிரச்சினை. ஒருவரின் சூழல் தெரியாமல், நம் இஷ்டத்துக்கு அறிவுரை சொல்வது- அதுவும் நன்கு விபரம் தெரிந்தவர்களுக்கு- அத்தனை நல்லதா? எனத் தெரியவில்லை.

    நம்முடைய க்ளூஸ் ரிலடிவ் என்றால் வலியுறுத்திச் சொல்லலாம். அதற்கான பண உதவியும் ஓரளவு செய்யலாம். நிச்சயம் கேட்பார்கள், நீயா ஆகும் செலவுக்குப் பணம் கொடுக்கப் போற?னு. அவர்கள் நம்மைக் கேட்டால் அதற்கு பதில் சொல்ல தயாராக இருக்க வேண்டும். சரியாகத் தெரியாத நண்பர்களுக்கு சும்மா இஷ்டத்துக்கு அறிவுரை சொல்லுவது சரியானு எனக்குத் தெரியவில்லை. மேலும் இதுபோல் பெரிய முடிவுகள், அந்நிலையில் உள்ளவரே எடுக்க வேண்டியது (பணம் மற்றும் பலவிசங்களை யோசித்து). அவருக்காக நாம், அறுவை சிகிச்சை செய்யணும், இல்லை கூடாது, னு முடிவு எடுக்க முடியாது.

    ReplyDelete
    Replies
    1. என்னையே பலரும் கன்சர்வேட்டிவ் தனமான வாழ்க்கை என்பார்கள். எதையும் ஒதுக்காமல் எதிலும் ஒட்டாமல் எதையும் வெறுக்காமல் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் மனம் என்பது எல்லோருக்கும் எல்லா சமயங்களிலும் வாய்ப்பது இல்லை. இதில் நம்மவர்கள் ஆன்மீகம் குறித்து காட்டும் அக்கறையில் அவரவர் உடல் நலத்தில் காட்டுவதில்லை என்பது எனக்கு பெரிய வருத்தமாக உள்ளது. என் பதிவை வாசிக்கும் 70 வயதுக்கு மேற்பட்ட இன்னும் சிலர் தொடர்பில் இன்னமும் இருக்கின்றார்கள். பேசத் தொடங்கும் போதே இன்று நடைபயிற்சி சென்றீர்களா? என்று தான் உரிமையுடன் கேட்பேன். சமாளிப்பார்கள். குழந்தை போலவே குறிப்பிட்ட வயதிற்கு பிறகு மாறத் தொடங்கி விடுகின்றார்கள். தமிழ் இளங்கோ அவர்களுடன் உரையாடும் போது இப்படித்தான் எனக்குத் தோன்றியது. எதையும் வலுக்கட்டாயமாக அவருடன் திணித்தது இல்லை. கேட்டுக் கொள்வதுண்டு. நீங்க சொல்வது போல மருத்துவரை தேர்ந்தெடுப்பது மிக முக்கியம். ஆங்கில மருத்துவம் போல ஒழுங்கான மாற்று மருத்துவங்களையும் தெரிந்து வைத்து இருக்க வேண்டும். பலருக்கும் இது புரிவதே இல்லை. தொட்டதற்கு எல்லாம் மருத்துவர் என்று அலைந்து காசை வீணாக்குகின்றார்கள். பலனும் பூஜ்யம் தான். மனோதிடம் மிக அவசியம். மெதுமெதுவாக ஒவ்வொன்றையும்விட்டு ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்தல் அதை விட மிக முக்கியம்.

      Delete
  4. உண்மை ஐயா
    இன்னும் பல காலம் வாழ்ந்திருக்க வேண்டியவர்
    ஆழ்ந்த இரங்கல்கள்

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக அவர் நம் நினைவுகளில் வாழ்வார்.

      Delete
  5. நண்பர் திரு தமிழ் இளங்கோ பழக இனியவர். சிறந்த பண்பாளர். தரமான கட்டுரைகளுக்கு சொந்தக்காரர். அனைவரையும் ஆழமான விவாதம் மூலம் ஈர்ப்பவர். மாற்றுக் கருத்துக்களை சரி என்று தோன்றினால் ஏற்பார். இல்லையெனில் நியாயத்தை முன் வைப்பார். மழபாடி என்றாலே அவர் நினைவு வரும். திருச்சியில் நான் ஆற்றிய பௌத்தம் தொடர்பான பொழிவினைக் கேட்க வந்ததோடு, நூலொன்றைப் பரிசாக அளித்து அதனைப் பாராட்டி தன் தளத்தில் எழுதியவர். அவருடைய எழுத்து என்றும் நம் நினைவில் நிற்கும், அவருடைய அழகான புன்னகையைப் போல.

    ReplyDelete
    Replies
    1. எல்லோருக்கும் நல்லவராகவே கடைசி வரைக்கும் வாழ்ந்து மறைந்துள்ளார்.

      Delete
  6. நம்ப இயலா இழப்பு தான் ..மனம் மிக வருந்துகிறது ..

    சனி அன்று இத்தகவல் கேட்டதிலிருந்து அவரின் சிந்தனை தான் அதிகம் ..

    ReplyDelete
    Replies
    1. உங்களைப் போலவே பலருக்கும் அவர் குறித்த எண்ணமும் தாக்கமும் அதிகம் தான்.

      Delete
  7. நேரில் சந்தித்து உரையாடி இருக்கிறேன் டொலைபேசியில் தொடர்பு இருந்ததில்லை தொலைபேசியில் தொடர்பு சாதாரணமாக கொள்வதில்லை இளங்கோவின் இழப்பு வருத்தம் தருகிறது

    ReplyDelete
    Replies
    1. நிதானமாக வாழ்ந்து மறைந்துள்ளார்.

      Delete
  8. நேரில் சந்தித்துள்ளோம். புதுக்கோட்டை வலைப்பதிவட் விழாவில்தான். கேட்டதிலிருந்து அதிர்ச்சி. வருத்தமான இழப்புதான். நீங்கள் சொல்லியிருக்கும் அத்தனையும் சரியே. அவர் இன்னும் கொஞ்சம் தன்னைக் கவனித்துக் கொண்டிருக்கலாம்.

    துளசிதரன், கீதா

    கீதா: ஜோதிஜி! இளங்கோ சகோவின் இழப்பு பற்றி வருத்தம் ஒரு புறம் என்றாலும் நீங்கள் சொல்லியிருக்கும் ஒவ்வொரு வரியும் அதாவது ஆன்மீகம் என்பது என்ன என்பதிலிருந்து நம் உடல் நலன் எத்தனை முக்கியம் என்று சொல்லியிருப்பது வரை அத்தனையும் அக்மார்க்! அப்படியே ஆமோதிக்கிறேன்...மிக மிக அழகான வார்த்தைகள், வரிகள்....

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வார்த்தைக்கு நன்றி. நிச்சயம் அவர் வாழ்வார்.

      Delete
  9. "அவர் சேர்த்து வைத்த ஆரோக்கியம் அனைத்தும் அவர் வளர்த்து வைத்திருந்த மனபயங்கள் தான் அவரைத் தின்று தீர்த்து விட்டது."

    எனக்கு இளங்கோ அவர்கள் குறித்துத் தெரியாது, கேள்விப்பட்டு இருக்கிறேன் ஆனால், பழக்கமில்லை.

    நீங்கள் கூறியதை படித்த பிறகு இந்த வரிகள் பொருத்தமானதாகத் தோன்றுகிறது.

    பலர் தேவையற்ற கவலை, பயத்தாலே தங்களை மேலும் சிக்கலுக்குள்ளாக்குகிறார்கள். எப்போதோ நடக்கப் போவதை நினைத்து நிகழ்கால வாழ்க்கையை வீணடிக்கிறார்கள்.

    நாம் என்ன நினைத்தாலும், பயந்தாலும் நடக்கப்போவது தான் நடக்கும். நன்மையில் முடிந்தால், இவ்வளவு நாட்களாக கவலைப்பட்டது அவசியமற்றதாகிறது.

    கெடுதலில் முடிந்தால் நினைத்து வருத்தப்படுவதால் அது குறையப்போவதில்லை.

    என்னுடைய அப்பா கூட, பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வில் கூடுதல் எச்சரிக்கையாக இருப்பார்.

    அக்கூடுதல் எச்சரிக்கையே அவருக்கு மட்டுமல்லாது குடும்பத்தினருக்கும் ஒரு நெருக்கடியை, பயத்தை கொடுக்கும்.

    வாழ்க்கையில் எச்சரிக்கையாக இருக்கலாம் ஆனால், எச்சரிக்கையே வாழ்க்கையாக இருந்தால், நிம்மதியே இருக்காது.

    ReplyDelete
    Replies
    1. பதிவின் சாராம்சத்தை அழகாக பிரதிபலித்தமைக்கு நன்றி கிரி.

      Delete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.