அஸ்திவாரம்

Saturday, April 07, 2018

மேலும் சில குறிப்புகள் 11




வைகோ அவர்கள் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்குப் பாராட்டு விழா நடத்திய காணொலித் தொகுப்பை கண்ட போது பல நினைவுகள் வந்து போனது. 

வைகோ இன்றைய சூழலில் ஸ்டாலினை முதல்வர் ஆக்காமல் ஓய மாட்டேன் என்று சூளுரை செய்த போதிலும் அவர் மேல் நம்பிக்கை வைக்கத்தான் எவரும் தயாராக இல்லை. அடுத்து என்ன செய்வார்? என்ன பேசுவார்? எங்கே செல்வார்? என்பதனை அவர் அருகில் இருப்பவர்களே யூகிக்க முடியுமா? என்பது ஆச்சரியமே. 

அதிர்ஷ்டம் என்ற வார்த்தை சிலருக்குத் தான் அவர்கள் வாழ்க்கையில் பொருந்திப் போய்விடுகின்றது. சிலருக்குப் போராட்டமே வாழ்நாள் முழுக்க அமைந்துவிடுகின்றது. 

தமிழக அரசியல் களத்தில் வைகோ போல வேறு எவரேனும் உழைத்தவர் வேறு எவரேனும் இருப்பார்களா? என்று தெரியவில்லை. நடைபயணங்கள், களப்பணிகள், சூறாவளி சுற்றுப்பயணங்கள், கூட்டங்கள், மாநாடுகள் என அனைத்தும் செயல்படுத்திக் காட்டிய போதிலும் அவரால் நடிகர் விஜயகாந்த் போலக்கூடக் கடந்த 25 வருட அரசியல்வாழ்க்கை ஓட்டரசியலில் வெல்ல முடியவில்லை. தமிழக அரசியலில் அவர் எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது வருத்தமாகவே உள்ளது. 

என்னைப் போல வைகோ வை விரும்பியவர்கள் பலரும் உள்ளனர். கலைஞர் போல எழுத்தாற்றல், பேச்சாற்றல் அத்துடன் கலைஞருக்கு இல்லாத ஆங்கில மொழிப் புலமை, மற்றும் கலைஞருக்கு அமையாத தேசிய அரசியல் தொடர்புகள் மற்றும் சர்வதேச அரசியல் தொடர்புகள் என அனைத்தும் இருந்தும் வைகோ அவர்களால் தமிழக அரசியலில் வெல்ல முடியவில்லை. 

அவருக்கு எல்லாமே கடைசி வரையில் தொடர்புகளாகவே இருந்தது. சரியான சமயத்தில் அனைவரும் தொடர்பு எல்லைக்கு வெளியே தான் இருந்தார்கள். இப்போதும் அப்படித்தான் இருக்கின்றார்கள். காரணம் அவர் வாங்கி வந்த வரமிது. 

தேசிய அரசியலை தனக்குத் சாதகமான நிலையில் எப்போதும் கலைஞர் பயன்படுத்திக் கொண்டார். ஆனால் எப்போதும் டெல்லி அரசியலை விட்டு எப்போதும் விலகியே தான் இருந்தார். 

தொடக்கத்தில் முரசொலி மாறன் இருந்த தைரியம். அவருக்குப் பிறகு வைகோ இருந்த போதிலும் முழுமையாக நம்பத் தயாராக இல்லை என்பதே வரலாறு சொல்லும் செய்தி. காரணம் வைகோ அவர்களின் உணர்ச்சிக்குவியல் சார்ந்த செயல்பாடுகள். 

திடீரென்று சில மாதங்களுக்கு முன் எம்.ஜி.ஆர் விழா என்று ஒரு கூட்டத்தைக் கூட்டி எம்.ஜி.ஆர் குறித்துப் பெரிய சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்திக் காட்டினார். இப்போது எஸ்ரா விற்கு இந்த விழாவினை நடத்தியுள்ளார். 

எழுத்தாளர்களுக்கு இரண்டு விசயங்கள் முக்கியமானது. 

பொற்கிழி அத்துடன் கூட்டம். 

தமிழக எழுத்தாளர்களுக்கு வருமானம் என்பது மேகமூட்டம் போல. எப்போதும் வரும் என்று எவராலும் கணிக்க முடியாது. அதே போல அரங்கு நிறைந்த கூட்டம் என்பது ஒரு எழுத்தாளன் வாழ்க்கையில் நினைத்தே பார்க்க முடியாத சூழல் தான் தமிழகத்தில் உள்ள எதார்த்தம். 

ஆனால் ஆச்சரியமாக இரண்டும் இந்தக்கூட்டத்தில் நடந்தேறியுள்ளது. இந்தக்கூட்டத்திற்காகப் படிப்படியாக வைகோ உழைத்த உழைப்பைத் தினந்தோறும் வாசித்து வந்தேன். அரசியல் காட்சிகள் மாறினாலும் வைகோ என்ற ஒரு நபருக்காக அனைத்துக் கட்சியினரும் வந்துள்ளனர். ஆச்சரியமாக வைரமுத்தும் வந்துள்ளார். 

ஆனால் இந்தக்கூட்டத்தில் வைகோ பேசிய பேச்சு என்னைப் பெரிதாக ஈர்க்கவில்லை. எஸ்ரா அவர்களின் ஏற்புரை நெகிழ்ச்சியுடன் இருந்தது. 

வைகோ காலத்திற்குள் இன்னும் சில எழுத்தாளர்களைக் கொண்டாட வேண்டும் என்று விரும்புகின்றேன். 


12 comments:


  1. காணொலியினைத் தரவிறக்கம் செய்து கொண்டேன்
    நன்றி ஐயா

    ReplyDelete
    Replies
    1. அதன் தொடர்ச்சியையும் கேளுங்கள்.

      Delete
  2. வைகோ அவர்கள் புரியாத புதிர்...!

    ReplyDelete
    Replies
    1. புதிருக்குள் பல விசயங்கள் உண்டு தனபாலன். முழுமையாக வெளிவரவில்லை.

      Delete
  3. 'கலைஞர்போல் எழுத்தாற்றல், பேச்சாற்றல்.....' இப்படி அடித்து விட்டுக்கொண்டே போனால் எப்படி? இதையெல்லாம் சொல்லிவிட்டுக் கூடவே 'அவருக்கு இல்லாத ஆங்கில மொழிப் புலமை'..இப்படியேதான் பலரும் சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். கலைஞர் படைப்பாற்றல் மிக்கவர். அவர்போல படைப்பாக்கங்கள், வசனம், திரைக்கதை ஆற்றல், பேச்சில் சமத்காரம் இவையெல்லாம் பலரிடமும் இல்லை. ஔவையாருக்குக்கூட ஆங்கிலப் புலமை இல்லையென்று கேள்விப்படுகிறேன்....

    ReplyDelete
    Replies
    1. ஆங்கில அறிவு என்பது இரண்டு விதமாக பிரிக்கலாம். அலுவலக பயன்பாட்டுக்கு தேவைப்படும் அளவு. அடுத்து இலக்கிய நடையில் எந்த இடத்திலும் எவ்வளவு நேரம் என்றாலும் தாய் மொழி போல உரை வீச்சு நடத்துவது. அறிஞர் அண்ணா வை உதாரணமாக எடுத்துக் கொள்ள முடியும். இந்த உதாரணத்தை வைத்து கலைஞர் வைகோ இருவரையும் ஒப்பிட்டுப் பாருங்களேன். ஆனால் கலைஞர் என்று ஒருவர் இல்லாவிட்டால் வைகோ என்பவர் தமிழகத்தில் இந்த அளவுக்கு வந்துருக்க மாட்டார் என்பதும் உண்மை தானே?

      Delete
  4. அருமையான இலக்கிய நிகழ்வினைப் பகிர்ந்து, மதிப்பிட்ட விதம் பாராட்டும் வகையில் உள்ளது.

    ReplyDelete
  5. வணக்கம் நண்பரே.. !

    உங்களது பதிவு http://gossiptamil.com/aggre/ இல் பகிரப்பட்டுள்ளது, பார்வையிடவும். தமிழுக்கான புதிய திரட்டியாக http://gossiptamil.com/aggre/

    வெளிவந்துள்ளது. உங்களது இணையத்தளங்களின் பதிவினை இத் திரட்டியினூடாக பகிர்ந்து கொள்ளவதன் மூலம் உங்கள் இணையத்தளதிற்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    நன்றி
    http://gossiptamil.com/aggre/

    ReplyDelete
  6. எனக்கும் வைகோவைப் பிடிக்கும் ஆனால் அவரது கருத்துகள் நிலையானவையாயிருப்பதில்லையோ என்று சில சமயம்தோன்றும்

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.