Friday, January 26, 2018

நற்சிந்தனை மனிதர்


சில வருடங்களுக்கு முன்பு வலைபதிவில் நாடார் சமூக வாழ்க்கை வரலாறு குறித்துத் தொடர் பதிவாக எழுதினேன். எழுதும் முன்பு அவர்கள் சார்ந்த வரலாற்றை அறியும் பொருட்டுப் பல புத்தகங்களைப் படிக்க வாய்ப்பு அமைந்தது. இன்று வரையிலும் அந்தப் பழைய பதிவுகளை யாரோ சிலர் தொடர்ந்து வந்து படித்துக் கொண்டேயிருக்கின்றார்கள். 

எந்தத் தலைப்பை யார் யார் எங்கிருந்து படிக்கின்றார்கள் என்ற வசதி வலைபதிவில் உண்டு.

நாடார் சமூகத்தின் இன ஒற்றுமை ஆச்சரியமளித்தது. ஒடுக்கப்பட்டு இருந்த அந்தச் சமூகம் இன்று பொருளாதார நிலையில் உச்ச நிலையில் அடைந்து ஆட்சி, அதிகாரம், கல்வி, பொருளாதாரம் என்று அனைத்துத் தளங்களிலும் கோலோச்சுகின்றார்கள். சாதி என்ற ஒற்றைப்புள்ளி அவர்களை இணைத்து ஒரு பெரிய சமூக மாற்றத்தை உருவாக்கியுள்ளது. 

இன்று ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்குச் சுதந்திரத்திற்குப் பிறகு வழங்கப்பட்ட வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், முழுமையாக முன்னேற முடியாமல் தடுமாறுகின்றார்கள். அரசியல்வாதிகளின் சமயோசித புத்தி ஒரு பக்கம் இருந்தாலும் பணமும், பதவியும் அவர்களுக்கு விரல்விட்டு எண்ணக்கூடியவர்களுக்குக் கிடைத்தாலும் அது அடுத்தடுத்து அந்தச் சமூகம் சார்ந்த மக்களுக்குச் சென்று சேர்வதில்லை. கிடைத்தவர்கள் தங்கள் அடையாளத்தை மறைக்க முற்படுகின்றார்கள். தங்களைப் பார்ப்பனியமாக மாற்றிக் கொள்ளத்தான் நினைக்கின்றார்கள். அவர்கள் இனம் சார்ந்த சக உறவுகளைக் கூடப் பொருட்டாக மதிப்பதில்லை. இது தான் நிதர்சனம். 

ஒரு சமூகம் முன்னேற அரசாங்கம், அதன் கொள்கைகள், அரசியல்வாதிகள் வைக்கும் குற்றச்சாட்டுக்களை விடப் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை முன்னேற்றிக் கொள்ள எந்த அளவுக்குத் தயார் படுத்திக் கொள்கின்றார்கள் என்ற சமூக நிகழ்வுகளை உற்றுக் கவனித்தால் சோகம் தான் மிஞ்சும். அரசியல்வாதிகள் உருவாக்கும் பிரித்தாளும் சூழ்ச்சிகளும், விலைக்குச் சோரம் போன தலைவர்களும், கிடைத்த வாய்ப்புகளைத் தங்கள் சுயநலனுக்குப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் குடும்பத்தை வளப்படுத்திக் கொண்டவர்களும் தான் அதிகம். 

ஆனாலும் நம்பிக்கை வைத்து போராடிக் கொண்டிருக்கின்றார்கள். ஏறக்குறைய இந்தியா முழுக்க 40 சதவிகிதத்திற்கு மேலே உள்ள தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்க்கையை ஒப்பு நோகையில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அரசாங்க சலுகைகளைப் பெற்ற குடும்பத்தின் வாரிசுகளே அடுத்தடுத்து வளர்ந்து தங்களை வளப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். கடைக்கோடி கிராமவாசிகள் இன்னமும் மனித கழிவுகளை அள்ளுவது முதல் அடிமை வாழ்க்கை முறையைத் தான் தேர்ந்தெடுத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். 

சுய சிந்தனைகளை அடகு வைத்து, தன் நிலையை உணரத் தெரியாமல், கிடைத்த வாய்ப்புகள் தனக்கு அமையாவிட்டாலும் தன் சந்ததியினருக்காகத் தங்களைத் தியாக உருவாக மாற்றிக் கொண்டு வளர்க்க விரும்புபவர்கள் மிக மிகக் குறைவான சதவிகிதமே. இதற்குப் பின்னால் பல காரணங்கள் இருந்தாலும் இன்னமும் முன்னேறாமல் இருப்பதற்குக் காரணம் ஒவ்வொரு தனி மனிதர்களும் தான். 

வட்டத்தை உடைத்து வெளியே வந்தவர்கள் தங்கள் வந்த பாதையை மறக்கவே விரும்புகின்றார்கள். வர விரும்புவர்களை அரசியல்வாதிகள் அடைத்து வைக்கவே விரும்புகின்றார்கள். இது போன்ற பல காரணங்களை அலசாமல் அவர்கள் மேல் பரிதாபப்பட்டு அண்ணல் அம்பேத்கர் கொள்கைகள், தந்தை பெரியார் கொள்கைகள், திருமாவளவன் என்று புகழ்பாடி இன்னமும் முக நூலில் நற்சிந்தனை என்ற பெயரில் எழுதிக் கொண்டிருப்பவர்கள் என் பார்வையில் பரிதாப ஜீவன்களாகவே தெரிகின்றார்கள். 

இந்த வருடத்தின் மத்திம பகுதியில் இருந்து தான் இவரைக் கவனிக்கத் தொடங்கினேன். தெளிவான சிந்தனை. எல்லாமே நேர்மறை சிந்தனைகள். அளவு கடந்த நம்பிக்கைகள். இராணுவத்தின் பணியாற்றியதால் சமூக அக்கறை கூடுதலாகவே உள்ளது. எழுத்து நடை, சொல்ல வந்த விசயத்தை அழகாக எடுத்து வைக்கும் பாங்கு, என்று எல்லாவிதங்களிலும் இவர் எழுத்துப் படிக்கத் தூண்டுவதாகவே உள்ளது. ஆனால் எல்லாமே விழலுக்கு இறைத்த நீராகவே உள்ளது. 

பவர் புரோக்கர் என்றொரு சாதி அரசியலில் உள்ளது. அதில் முக்கியமானவர் திக வீரமணி. கலைஞர் நம்பி வீணாப் போனவர்களில் இவரும் ஒருவர். கலைஞருக்குக் கிடைக்க இருக்கும் வாக்குகளை அவ்வப்போது காலி செய்வதில் வல்லவர். ஏ1 குற்றவாளியைச் சமூக நீதி காத்த வீராங்கனை என்ற பட்டம் கொடுத்துச் சிலாகித்தவரை நண்பர் பெருமையாக எழுதும் போது இவர் விக்ரமன் படத்திற்கு வசனம் எழுதாமல் இருந்து விட்டாரோ? என்று நினைத்துக் கொள்வதுண்டு. 

இந்த வருடம் எனக்குப் பிடித்த முகநூல் பதிவர்களில் இவரும் ஒருவர். நன்றியும், வாழ்த்துகளும் அன்பும். Poovannan Ganapathy

4 comments:

Unknown said...

நான் படித்த தில்லை!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ஒரு நல்ல நண்பரை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.

Rathnavel Natarajan said...

அருமையான அறிமுகம். நன்றி.

Rathnavel Natarajan said...

நற்சிந்தனை மனிதர் -
https://www.facebook.com/poovannan.ganapathy?fref=mentions
எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி