அஸ்திவாரம்

Sunday, March 19, 2017

என் டைரிக் குறிப்புகள்

ரு நாள் பொழுதில் 13 மணி நேரம் பணிபுரியும் அலுவலகம் விழுங்கி விடுகின்றது. எட்டு மணி நேரம் தூக்கத்திற்காக என்று கணக்கில் வைத்துக் கொண்டால் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் தான் குடும்பத்துடன் செலவிட முடிகின்றது. உரையாடல் இல்லை. விருப்ப பகிர்வுகள் இல்லை. பெரும்பாலான தொடர்புகள் அறுந்து விட்டது. வாசிப்பு அறவே இல்லை. வாங்கும் பத்திரிக்கைகள், வார இதழ்கள் ஒவ்வொன்றும் நம்பிக்கைத்தன்மை இழந்து நாளாகி விட்டது. பத்திரிக்கைகள் என்பதே தாங்கள் சம்பாரிக்க விரும்பும் விளம்பரங்களுக்காக என்று மாறிய பின்பு இடையிடையே வரும் குறிப்பிட்ட செய்திகளை இனம் கண்டு பிடித்து வாசிக்கப் பொறுமை இல்லை. 

மாறிய உலகில் தாக்குப்பிடிப்பது மிகவும் சவாலானது. நமக்கான அடையாளத்தைத் தொலைத்து விடாமல் பாதுகாப்பது அதை விடக் கடினமானது. எழுதும் பழக்கம் கூட நம்மை விட்டுச் சென்று விடுமோ? என்று அச்சமாக உள்ளது. இத்தனை எதிர்மறைகள் இருந்தாலும் அன்றாட வாழ்க்கையில் பல சுவாரசியங்கள் இருக்கத்தான் செய்கின்றது. பணிபுரியும் அலுவலகம் மற்றும் தொழிற்சாலையில் உள்ள பலதரப்பட்ட மனிதர்களுடன் பழகுவது என்பது ஆயிரம் பத்திரிக்கைகளையும் தினமும் படிப்பது போல உள்ளது. 

டிமட்ட தொழிலாளர் முதல் அதிகாரம் செலுத்தும் மனிதர்கள் வரைக்கும் பழக வேண்டிய சூழ்நிலையில் இருப்பதால் எழுதுவதற்கு ஏராளமான விசயங்கள் மனதில் தோன்றியபடியே உள்ளது. ஏற்கனவே நான் எழுதிய தொழிற்சாலையின் குறிப்புகள் மின் நூல் போல அதன் இரண்டாவது பாகத்தை எழுத வேண்டிய நிலை உருவாகிக் கொண்டு இருக்கின்றது. எத்தனை மனிதர்கள்? எத்தனை துன்பங்கள்? எத்தனை சுவாரசியங்கள்? இத்துடன் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் அரசியல். 

தொழிற்சாலையில் காலை ஆறு மணிக்கு உள்ளே வந்து பத்தரை மணி வரைக்கும் ஒவ்வொரு பகுதியாகச் சுத்தம் செய்து விட்டு நின்று கொண்டிருக்கும் வயதான பெண்மணியிடம் எந்த ஊருமா நீங்க? என்று விசாரிக்கும் போதும், காலை உணவு நீங்க எத்தனை மணிக்கு சாப்பிடுவீர்கள்? என்று கேட்கும் போது அவர் முகத்தில் ஒரு பிரகாசம் தோன்றுவதைக் கவனிக்க வேண்டுமே? அவர்கள் எதிர்பார்க்கும் அங்கீகாரம் அது மட்டுமே என்பதனை புரிந்து உரையாடலைத் தொடர்ந்தால் அவர்கள் ஊரில் வாழ்ந்த கதையும், வாக்கப்பட்டு வந்து பின்பு பட்ட பாடுகளையும் விவரிக்கும் பாங்கை அமைதியாகக் கேட்கும் போது தான் நாம் எதற்குப் புலம்ப வேண்டும்? என்று தோன்றுகின்றது. 

டந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் திருப்பூரில் எப்போதும் இல்லாத அளவுக்குக் குளிர் அதிகமாக இருந்தது. 20 வருடங்களுக்கு முன்பு நான் திருப்பூரில் பார்த்த ஊட்டிக் குளிர் போல இருந்தது. காலை பத்து மணி வரைக்கும் குளிர் உடலைத் தழுவ மனதில் இனம் புரியாத ஆச்சரியம் இருந்தது. ஏனிந்த மாற்றம்? ஆனால் கடந்த சில வாரங்களாக வெப்பம் பொசுக்கும் நிலையைப் பார்த்தால் அடுத்த இரண்டு மாதங்களில் வாணலியில் வைத்து நம்மைச் சூரிய பகவான் வதக்கப் போகின்றார் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகின்றது. 

குளிர் சாதன வசதிகளை எந்த இடங்களிலும் பயன்படுத்த விரும்பாத காரணத்தால் ஆரோக்கியம் இயல்பாக உள்ளது. ஆனால் மனதிற்கும் உடலுக்கும் நடக்கும் யுத்தம் என்பது 45 வயதுக்கும் மேல் தொடங்கியே தீரும். பெண்களும், ஆண்களும் கவனமாக இருக்க வேண்டிய வயது இது. நடைமுறை வாழ்க்கையில் நான் பார்த்துக் கொண்டிருக்கும் பல பிரச்சனைகளின் அடிநாதமே பாலியல் ரீதியாகத்தான் உள்ளது. உறுப்புகள் செயல் இழக்கும் போது அதனைப் புரிந்து கொள்ள மறுப்பவர்களுக்கும், வெறுப்புகளை மட்டும் வளர்த்து வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் உருவாகும் பிரச்சனைகள் குடும்ப வாழ்க்கையைக் காவு வாங்கி விடுகின்றது. 

ரண்டு நாடுகளுக்கிடையே எதிர்காலத்தில் போர் வருமா? என்று தெரியாது. ஆனால் ஒவ்வொரு குடும்ப உறவுகளும் படிப்படியாகச் சிதைந்துவிடும் என்று உறுதியாக நம்புகிறேன். மாறிய தொழில் நுட்ப வசதிகள் ஒவ்வொரு குடும்பத்திலும் ஏராளமான அக்கப்போர்களை உருவாக்குகின்றது. 

வீட்டில் எட்டாவது படிக்கும் மகள் எனக்கு ஒரு ஆண்ட்ராய்டு வேண்டும் என்றார்? எதற்காக என்று கேட்டால் "எங்கள் தோழியர் எல்லோரும் ஒரு குரூப் உருவாக்கியிருக்கின்றோம்? நான் மட்டும் இன்னும் சேரவில்லை. உடனே எனக்கு வேண்டும்" என்று கோரிக்கை வைக்கப் பல வாரங்கள் இழுத்தடித்துக் கடைசியில் "என் போனை பயன்படுத்திக் கொள். பள்ளி விட்டு வந்ததும் பார்த்துக் கொள்" என்றேன். உடனே மற்றொருவரும் அவர் பங்குக்குக் கோரிக்கை வைக்க அவர் சார்ந்த குரூப் ஒன்றும் அதில் உருவானது. அலுவலகம் விட்டு வந்ததும் இவர்கள் செய்ய வேண்டிய அனைத்தையும் விட்டு விட்டு அதில் கவனம் செலுத்துவதைக் கவனித்தபடியே உள்ளேன். 25 வருட இடைவெளியில் நான் பார்க்க விரும்பும் உலகம் என்பது அவர்கள் பழக விரும்பும் உலகத்திற்கு எதிராக உள்ளது. 

மக்கான அடையாளம் என்ன? நாம் எதனை இங்கே விட்டுச் செல்லப் போகின்றோம்? என்ற கேள்வியைப் பெரும்பாலும் எவரும் தனக்குள் கேட்டுக் கொள்வதில்லை. விரும்புவதும் இல்லை. அதிகபட்சமாகச் சொந்த வீடு, சுகமான வாழ்க்கை வாழத் தேவைப்படும் அதிகப்படியான வசதிகள், இத்துடன் அடக்க முடியாத தேவையற்ற ஆசைகள் என்று பட்டியலுடன் வேறு எதையும் நினைப்பதில்லை. வயதான பலரையும் சந்திக்கும் போது, எதிர்காலம் குறித்த ஆச்சரியங்களும் அச்சங்களும் மனதில் உருவாகின்றது.

வசதிகள் இல்லாதவர்கள் அடிப்படையான வாழ்க்கை வாழவே அல்லாடுகின்றார்கள். அவர்ளுக்கு நினைவுகள் என்பது இறப்பு வரைக்கும் தேவையில்லாமலே போய்விடுகின்றது. வசதிகளுடன் இருப்பவர்கள் சுற்றியுள்ள உறவுகள் மற்றும் அடுத்தத் தலைமுறைகள் தன்னைப் புறக்கணிப்பதை உணர்ந்து தவிக்கின்றார்கள். பணம் சார்ந்த எண்ணங்களில் அவர்கள் நினைத்தபடியே வாழ்ந்து இருந்தாலும் இருப்பியல் மற்றும் விருப்பங்கள் சார்ந்த விசயங்களில் தோற்றவராக இருக்கின்றார்கள். அவர்களின் கடைசி வாழ்க்கை பரிதாபமாக உள்ளது. 

ந்திரம் போல வாழ வேண்டியுள்ளதே என்று பலமுறை யோசித்ததுண்டு. ஆனால் சில வாரங்களுக்கு முன்பு என் மின் நூலைப் படித்து விட்டு ஒரு வாசகர் எழுதிய கடிதம் பார்த்து நானும் இவ்வுலகில் குடும்ப விருப்பங்களையும் மீறி எனக்கென்ற ஒரு அடையாளத்துடன் வாழ்ந்துள்ளேன் என்று நம்பிக்கையை எனக்கு உருவாக்கியது. 

வணக்கம் சார், 
உங்களுடைய படைப்புகளான "வெள்ளை அடிமைகள்" மற்றும் "ஈழம் வந்தார்கள் வென்றார்கள்" வாசித்தேன் பிரமிப்பாய் இருந்தது. அதில் உங்களது மெனக்கெடல்கள் தெரிந்தது. எத்தனை எத்தனை தகவல்களைக் கோர்த்தளித்திருக்கிறீர்கள். நிச்சயமாக இரண்டு மிகச்சிறந்த புத்தகங்களை வாசித்த திருப்தி. உங்களது மற்ற படைப்புகளையும் நேரம் கிடைக்கும் போதலில், நேரத்தை ஒதுக்கி வாசிப்பேன் சார். "வெள்ளை அடிமைகள்" புத்தகத்தில் என்னைமிகவும் கவர்ந்த கட்டுரை "பண்ணை அடிமைகள்" அதில் நீங்கள் சொல்லியிருக்கும் தகவல்களை மையமாக வைத்து பத்து பக்கமளவுள்ள ஒரு சிறுகதை எழுத நினைத்திருக்கிறேன் அப்படிச் செய்வது சரியா தவறா எனவும் தெரியவில்லை தான். நிறைய வாசிக்கிறேன், கொஞ்சம் எழுதுவேன். எழுதுவது மனதுக்குகந்த பொழுதுபோக்கு முகநூலில் தான் சில சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். உங்கள் எழுத்துக்கள் மிக உயர்வானவை. அதனால் தான் உங்களை மனதிலும் மிக உயர்வாக வைத்திருக்கிறேன் நன்றிகள் சார். 
அன்புடன், 
H. ஜோஸ் 

21 comments:

  1. உங்களின் மெனக்கடல்தான் உங்களின் அங்கிகாரம் அதுதான் ஜோதிஜிக்கான முத்திரை

    ReplyDelete
  2. உங்களுக்கு பலதரப்பட்ட மக்களை சந்திப்பதிதால் பல விஷயங்களை எழுத செய்திகள் கிடைக்கின்றது என்றால் உங்கள் டைரியை படிக்கும் எனக்கும் அதில் பல தகவல்கள் எழுத கிடைக்கின்றன....

    ReplyDelete
  3. எப்படியும் ஏதாவது எழுதவேண்டும் என்ற தங்களது மெனக்கெடல்தான் இத்தனை சாதனைகளுக்குக் காரணம். தனியே இருந்தபோதாவது ஏதோ எழுதினேன். இப்போது எதுவும் முடிவதில்லை. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ஜோதிஜி அவர்களே.

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து வரும் உங்கள் அன்புக்கு அக்கறைக்கு நன்றி சேகர்.

      Delete
  4. //இவர்கள் செய்ய வேண்டிய அனைத்தையும் விட்டு விட்டு அதில் கவனம் செலுத்துவதை// இவங்ககிட்டே இருந்து நாம கத்துக்கிட வேண்டியது நிறைய இருக்கு. உலகம் என்று நாம நினைத்துக் கொண்டிருக்கும் ஒன்றுக்கும், இவர்களின் உலகிற்கும் உள்ள இடைவெளியைத் தொழில்நுட்ப வளர்ச்சி வெகு வேகத்தில் நீட்டித்துக் கொண்டே போகிறது.

    ReplyDelete
    Replies
    1. தொழில் நுட்ப வளர்ச்சி என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றோம்? இந்தியாவில் உருவான எந்த தொழில் நுட்ப வளர்ச்சியும் தனி மனித பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகின்றதா? என்பதனை நீங்களே கேட்டுப் பாருங்கள். கடந்த மூன்று வாரங்களில் எங்கள் நிறுவனம் சார்பாக நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டவர்களில் எம்பிஏ மற்றும் பிஈ முடித்த பட்டதாரிகளின் எண்ணிக்கை 150. அவர்கள் துறையில் அடிப்படைத் தொடக்க சம்பளம் 4000 முதல் 5500 வரைக்கும். ஆடைத் துறையில் 7000 முதல் 9000 வரைக்கும். அவர்கள் கையில் வைத்திருக்கும் எந்த தொழில் நுட்ப வளர்ச்சியும் அவர்களை உல்லாசமாக வாழ்வது எப்படி என்பதனைத்தான் கற்றுக் கொடுக்கின்றதே தவிர உருப்படியாக உழைத்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இப்போதைய சூழ்நிலையில் இந்த அளவுக்கு வேலைவாய்ப்பின்மை. எங்கள் குழந்தைகள் வாழப்போகும் அடுத்த பத்தாண்டுகளில் எப்படியிருக்கும்? என்பதனை நான் யோசித்துக் கொள்வதுண்டு.

      Delete
  5. ’டாலர் நகரம்’ எழுதிய உங்களுக்கு , அந்த அலுவலக வாழ்க்கை அலுப்பு தட்டுகிறது என்றால், அதற்குக் காரணம், உங்களுக்கு உங்கள் பெண் பிள்ளைகள் பற்றிய கவலை அல்லது பயம்தான் என்று நினைக்கிறேன். ஆண்ட்ராய்ட் போனை பெண் பிள்ளைகள் பயன்படுத்தும் விஷயத்தில், எல்லோருக்கும் உண்டான இயல்பான பயம், உங்களுக்கும் இருக்கிறது போல் தெரிகிறது.
    பணி ஓய்வு பெற்று விட்டால், என்னதான் நாம் அந்த வேலையில் திறமையானவராக இருந்தாலும், மீண்டும் அதே இடத்தில், அதே தோரணையில் அங்கே உட்கார முடியாது என்பதனை நினைவில் வையுங்கள். கவலை வேண்டாம்.. உமர் கய்யாம் எழுதிய ஒரு பாடல் இங்கே. நினைவில் வந்தது. (தமிழில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை)

    எழுதிச் செல்லும் விதியின்கை
    எழுதி எழுதி மேற்செல்லும்;
    தொழுது கெஞ்சி நின்றாலும்
    சூழ்ச்சி பலவும் செய்தாலும்
    வழுவிப் பின்னால் நீங்கியொரு
    வாரத்தை யேனும் மாற்றிடுமோ?
    அழுத கண்ணீ ராறெல்லாம்
    அதிலோர் எழுத்தை அழித்திடுமோ?
    (கவிஞர் உமர் கய்யாம்)

    ReplyDelete
    Replies
    1. திருப்பூரில் பணி ஓய்வு என்பதே கிடையாது. முதலாளி, அலுவலர், தொழிலாளி மூன்று பேரும் இறப்பு வரைக்கும் உழைக்கும் அளவிற்கு இந்தத் தொழிலில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளது. நான் அலுப்புத்தட்டுகின்றது என்பதற்குப் பின்னால் பத்து பதிவுகள் எழுதக்கூடிய விசயங்கள் உள்ளது. ஒரு நிறுவனம் அல்லது அது சார்ந்த தொழில் நுட்பம் என்பது மாறிக் கொண்டேயிருக்கும் உலகில் தானாக மாற வேண்டும். ஆனால் திருப்பூரில் தேங்கிய குட்டை போலவே உள்ளது. காரணம் முதல் தலைமுறை சேர்த்து வைத்துள்ள பொருளாதாரத்தை இழந்து விடுவோமோ? என்ற பயம். எந்த முடிவும் எடுக்க முடியாமல், எடுக்க விடாமல் இருக்கும்நிர்வாக அமைப்பு உங்களுக்கு எவ்வித ரசனையை தந்து விடும். என்னுடன் பணிபுரிபவர்களிடம் கேட்டுப் பார்த்தால் தெரியும்? நிர்வாகத்தில் நான் காட்டும் ஈடுபாடு. ஆனாலும் நமக்கென்ற சில விருப்பங்கள் இருக்கும் அல்லவா?

      பெண் பிள்ளகைள் குறித்து பயமா? இங்கே ஆண்களைப் போல அதகளமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களைப் பற்றி பயப்பட எனக்கு இருக்கிறது? குழந்தைகள் குறித்து விரிவாக எழுதுகின்றேன். அப்போது இப்போதைய சமூக அமைப்பில் உள்ள தாக்கங்கள் குறைபாடுகள் என் நோக்கங்கள் குறித்து உங்களுக்கு புரியக்கூடும். நன்றி.

      Delete
  6. அய்யா நேதாஜி பத்திரிகைகளை
    நம்பிக்கை போய் விட்டது என்றால் என்ன பத்திரிகை பெயரை கூற வேண்டும்
    கலஞைரையும்,சோனியாவையும் சொல்லி
    அடித்த நேதாஜி பயப்பட காரணம் இல்லை
    நேதாஜி விரும்பாத விஷயம் ( அதிமுகவின் வீழ்ச்சி) கேட்க விரும்பவில்லை இதை மீடியா மீது குற்றம்
    சுமத்துவது தவறு ( உங்கள் இராஜ குரு ஞானியை கேட்கலாம்)

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஞாநி என் மதிப்புக்குரியவர் தான். மாதந்தோறும் வார இதழ்கள், தினசரி பத்திரிக்கைகள் என்பதற்காக மட்டும் ஆயிரம் ரூபாய் செலவளித்து வருகின்றேன். ஆனால் சார்புதனமும், மொக்கைகளும் சூழ வரும் இதழ்களைப் பார்க்கும் போது ஆதங்கமாக உள்ளது. மீடியா குறித்த பின்புலங்களைப் பற்றி அதன் அரசியல் நிலைப்பாடுகளைப் பற்றி அறிந்தவர் எவரேனும் இருந்தால் கேட்டுப் பாருங்கள். என் ஆதங்கம் உங்களுக்கு புரியக்கூடும்.

      Delete
  7. என் டைரிக் குறிப்புகள் - தொழிற்சாலையில் காலை ஆறு மணிக்கு உள்ளே வந்து பத்தரை மணி வரைக்கும் ஒவ்வொரு பகுதியாகச் சுத்தம் செய்து விட்டு நின்று கொண்டிருக்கும் வயதான பெண்மணியிடம் எந்த ஊருமா நீங்க? என்று விசாரிக்கும் போதும், காலை உணவு நீங்க எத்தனை மணிக்கு சாப்பிடுவீர்கள்? என்று கேட்கும் போது அவர் முகத்தில் ஒரு பிரகாசம் தோன்றுவதைக் கவனிக்க வேண்டுமே? அவர்கள் எதிர்பார்க்கும் அங்கீகாரம் அது மட்டுமே என்பதனை புரிந்து உரையாடலைத் தொடர்ந்தால் அவர்கள் ஊரில் வாழ்ந்த கதையும், வாக்கப்பட்டு வந்து பின்பு பட்ட பாடுகளையும் விவரிக்கும் பாங்கை அமைதியாகக் கேட்கும் போது தான் நாம் எதற்குப் புலம்ப வேண்டும்? என்று தோன்றுகின்றது. - நிஜம். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி

    ReplyDelete
  8. அருமகியான டைரிக் குறிப்புகள்! பல சமயங்களின் என் மனதிலும் தோன்றுபவை. ஆனால் எழுத வரவில்லை. ஆனால் நீங்கள் மிக அழகாகச் சொல்லிவிட்டீர்கள்!. பலரும் தங்கள் அடையாளங்களை இழந்துதான் வாழ்கின்றார்கள். அடையாளத்துடன் வாழவும் விருப்பமில்லைதான் நீங்கள் சொல்லியிருப்பது போல் ஏதோ வீடு, கார் என்று சேர்ப்பதில் இருக்கும் ஆர்வம் தங்கள் அடையாளத்தில் சேர்க்கும் ஆர்வம் இல்லைதான். நீங்கள் அதனையும் உங்கள் உழைப்பினால், தேடலினால், அதைப் பதிந்து இந்தச் சமுதாயத்தில் உலவ விட வேண்டும் என்ற ஆர்வத்தினால் உங்கள் அடையாளத்தை ஊன்றிவிட்டீர்கள் ஜோதிஜி!!! அதற்குப் பாராட்டுகள் வாழ்த்துகள்!

    குழந்தைகளின் ஆன்ட்ராய்ட் ஃபோன் தேவையும் உங்கள் ஆதங்கமும் புரிகிறது. ஆனால் அவர்களும் நிறைய கற்றுக் கொள்கிறார்கள், நமக்குக் கற்றும் தருகிறார்கள். ஆம் ஜி இளைய தலைமுறையினர் அறிவியல், தொழில்நுட்பக் கடலில் சிக்கிக் கொண்டு அச்சுழலில் நீந்திக் கடக்க விரும்புகிறார்கள். ஆனால் நீங்கள் சொல்லியிருப்பது போல் எதிர்காலத்தில் நிச்சயமாகக் குடும்ப உறவுகள் முறியும் நிலை அது உண்மை....

    உங்கல் அனுபவங்கள் நிறைய எழுத வைக்கிறது இல்லையா!!

    வாழ்த்துகள் ஜி

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆனால் அவர்களும் நிறைய கற்றுக் கொள்கிறார்கள், நமக்குக் கற்றும் தருகிறார்கள். ஆம் ஜி இளைய தலைமுறையினர் அறிவியல், தொழில்நுட்பக் கடலில் சிக்கிக் கொண்டு அச்சுழலில் நீந்திக் கடக்க விரும்புகிறார்கள்.

      சத்தியமான உண்மை. இதனைப் பற்றி வரும் பதிவுகளில் எழுதுகின்றேன். வரிக்கு வரி படிக்கும் உங்களுக்கு என் வந்தனம்.

      Delete
  9. டைரி குறிப்பு அழகா எழுதியிருக்கீங்க ..
    நமக்கான அடையாளங்கள் என நானும் சிந்தித்ததுண்டு .நமது கொள்கையிலிருந்து மாறாமல் நோ காம்ப்ரமைஸ் போல இருந்தாலே போதும்னு அப்பா சொல்வார் .ஆகவேதான் நானும் பிடிக்காத விஷயங்களை தவிர்த்துவிடுவேன் ஊரோடு ஒத்து வாழ்தல் என்று சொன்னாலும் போலியான காம்ப்ரமைஸில் உடன்பாடில்லை ..
    போன் குறித்த உங்கள் பார்வைதான் எல்லா பெற்றோர்களுக்குமுண்டு ....
    இக்கால பிள்ளைகள் எதையும் கண்ட்ரோலாக பயன்படுத்த தெரிந்தவர்கள் கொஞ்சம் ஆரம்பத்தில் அதிலே மூழ்கினாலும் விரைவில் அவங்களுக்கே போரடிச்சுடும் ..என் மகள் பரீட்சை நேரத்தில் ரிவிஷன் நேரத்தில் கொடுத்து விடுவாள் நானும் டேபிள் மேல் தான் வைத்திருப்பேன் ..அவளுக்கு தொட தோன்றாது எது முக்கியம் என்பதை அறிந்தவர்கள் இக்காலப்பிள்ளைகள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி. என்னைப் பற்றி படித்தவுடன் நேராக இங்கே வந்துருப்பீங்கன்னு நினைக்கிறேன். வருக. வெளிநாடு வாழ் குழந்தைகள் மற்றும் இங்கேயுள்ள குழந்தைகள் அது சார்ந்த சூழ்நிலைகள் பற்றி வரும் பதிவுகளில் எழுதுகிறேன். நேரம் இருந்தால் வாசித்துப் பாருங்கள். நன்றி ஏஞ்சலின்.

      Delete
    2. எழுதுங்கள் .உங்கள் பார்வையில் இக்கால பள்ளி குழந்தைகள்மாணவர்கள் குறித்த பதிவை வாசிக்க ஆவலுடன் இருக்கோம்

      Delete
  10. மிகவும் எதிர்மறையாக எழுதியிருக்கிறீர்களே ஜி!

    பதிவின் முதல் வரி தொடங்கி சமூகம் பற்றியும் குடும்ப உறவுகள் பற்றியுமான உங்கள் எல்லாக் கருத்துக்களும் உண்மைதான். ஆனால், அதற்காக இவையெல்லாம் எதிர்மறையாகத்தான் முடியும் அல்லது போகும் என நீங்கள் இந்தளவுக்கு நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை. எங்கள் வீட்டிலும் இதே போல் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் - சித்தி பிள்ளைகள். சித்தி வீடு பக்கத்தில்தான். எனவே வெகுநேரம் இங்குதான் இருப்பார்கள். அவர்களும் இப்படித்தான். எந்நேரமும் ஆண்டிராய்டு கைப்பேசி, விழிய விளையாட்டுக்கள் என வளர்கிறார்கள். மிகவும் வன்முறையான விளையாட்டுக்கள்! சொன்னாலும் கேட்பதில்லை. அண்ணனும் தம்பியும் தங்களுக்குள் பழகும் விதத்திலும் முரட்டுத்தனம் நிறைய. வெளியே போய் விளையாடுவது, குழு விளையாட்டு போன்றவையெல்லாம் மிகவும் அரிது. ஆனால், இவ்வளவையும் மீறி ஆங்காங்கே அவ்வப்பொழுது சில நற்குணங்கள் அவர்களிடம் மேலெழுவதைப் பார்க்கிறேன். ஏதோ சில சூழ்நிலைகளில் அவர்களிடமும் நற்குணங்கள் வெளிப்படுகின்றன.

    ஆக, நம்பிக்கை இழக்காதீர்கள்! குடும்ப உறவுகளும் சரி இன்ன பிற விழுமியங்களும் சரி வடிவம் மாறுமே தவிர அடிப்படை அறம் அறுபடாது! ஏதோ ஒரு வகையில் அது வாழும்!

    ReplyDelete
  11. Dear Admin,
    Greetings!
    We recently have enhanced our website, "Nam Kural"... We request you to share the links of your valuable articles on our website to reach wider Tamil audience...

    தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி, http://www.namkural.com/

    நன்றிகள் பல,
    நம் குரல்
    Note: - To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.