ஜோதிஜி (திருப்பூர்) எழுதிய பழைய குப்பைகள் – எனது பார்வை
காணாமலே நட்பு என்ற வகையில், வலையுலகில் எனக்கு அறிமுகமானவர் நண்பர் திரு ஜோதிஜி (திருப்பூர்) அவர்கள். அவருடைய எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு, அவருடைய தேவியர் இல்லம் என்ற வலைத்தளத்தில் வெளியாகும் அருமையான கட்டுரைகளைத் தொடர்ந்து வாசித்து வரும் வாசகர்களில் நானும் ஒருவன். புதுக்கோட்டையில் (2015) மிகவும் சிறப்பாக நடைபெற்ற வலைப்பதிவர் மாநாட்டில் ஒருமுறை நேரில் அவரைச் சந்தித்ததுதான்.
ஜோதிஜியின் படைப்புகள்:
அவருடைய மின்னூல்கள் பலவற்றை எங்கள் வீட்டுக் கணினியில் உள்ள மின்னூலகத்தில் தரவிறக்கம் செய்ததோடு, ரசித்துப் படித்தும் இருக்கிறேன். அச்சு நூல் வடிவில் வெளியான அவருடைய ‘டாலர் நகரம்’ - திருப்பூர் வரலாற்றில் ஒரு முக்கியமான நூல் ஆகும். எனது வலைப்பதிவினில் இந்த நூலினுக்கும், மற்றும் இவரது ‘தமிழர் தேசம்’ என்ற மின்னூலினுக்கும் நூல் விமர்சனக் கட்டுரைகளும் எழுதி இருக்கிறேன்.
பழைய குப்பைகள்:
ஜோதிஜி (திருப்பூர்) அவர்களின் கட்டுரைகள் யாவும் எதார்த்தமானவை; வாழ்வியல் சிந்தனைகளை அனுபவ வரிகளாகக் கொண்டவை. அந்த வகையில் இப்போது வெளிவந்துள்ள ’பழைய குப்பைகள்’ என்ற நூலும் சிறப்பான ஒன்று. ’நான்’ என்ற முன்னுரைப் பக்கம் தொடங்கி, அங்கீகாரமும் அவஸ்தைகளும் என்ற ஆறாவது கட்டுரை வரை, எழுத்தாளர் ஜோதிஜி அவர்களின் எழுத்துலக, குறிப்பாக வலைப்பக்க அனுபவங்களைக் காண முடிகிறது.
// நாம் ஒன்றை அனுபவித்து ரசித்து எழுதியிருப்போம். ஆனால் அது சிந்துவாரற்று கிடக்கும். சிலவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மேம்போக்காக எழுத அது பலராலும் சிலாகித்துப் பேசப்பட்டு இருக்கும். காரணம் படிப்பவனின் வாழ்க்கை என்பது எழுதுபவனால் யூகிக்க முடியாத ஒன்று. எழுத்தும் வாசிப்பும் சில சமயம் பொருந்தி போய்விடும். பல சமயம் அந்த வாய்ப்பில்லாமல் போய்விடும். கவலைப்படத் தேவையில்லை. எழுதிக் கொண்டே இருக்கும் போது தான் அந்தச் சூட்சமத்தை உணர முடிகின்றது //._ (மசாலா தூவினால்தான் மரியாதையா?)
// மாற்ற முடியாத துயரங்கள், தொடர்ந்து வரும் போதும், ஒவ்வொரு சமயத்திலும் துன்பங்கள் அலைக்கழித்த போதிலும், தூக்கம் வராத இரவுகள் அறிமுகமாகும் போதும், அருகே வந்த இன்பங்கள் நம்மைவிட்டு அகன்ற போதிலும்,ரசனை உள்ளம் கொண்டவர்களால் மட்டுமே ஒவ்வொன்றில் இருந்தும் மீண்டு வர முடிகின்றது. // - (நாலும் புரிந்த நாய் வயசு)
என்று தான் இன்னமும் எழுதி வருவதன் சூட்சுமத்தைச் சொல்லுகிறார் ஆசிரியர் ஜோதிஜி (திருப்பூர்) அவர்கள்.
ஆசை மரம் – என்ற தலைப்பில், படிக்கப் படிக்கக் கூடவே எனது பழைய நினைவுகளும் பின்னோக்கி சென்றன. நீங்கள் இந்தக் கட்டுரையில் சொல்வது போல ‘வெறுமைதான்’ மனதில் வந்து, ஏதோ ஒன்றை இழந்ததை, ஆனால் இன்னதென்று உணர முடியாமல், நெருடலைத் தந்தது
பெரும்பாலும் புத்தகக் காதலர்கள் யாவரும் செய்யும் ஒரு காரியம், தாங்கள் படிக்கும் புத்தகங்களை வாங்கி வாங்கிச் சேர்ப்பதுதான்.
ஆனால் மற்றவர்களுக்கு இவை பழைய குப்பைகள். இந்தப் புத்தகக் காதல் பற்றி ’பழைய குப்பைகள்’ என்ற தலைப்பினில் ஆசிரியர் சொல்லி, இருக்கிறார்.
சுருக்கமாகப் பேசு என்ற கட்டுரையைப் படிக்கத் தொடங்கியவுடன், நான் எனது சின்ன வயதினில், ரெயில் பயணமாகத் திருச்சியிலிருந்து முதன்முதலாகச் சென்னைக்குச் சென்றபோது, இடைப்பட்ட செங்கல்பட்டு தொடங்கி மதுராந்தகம் ஏரியைத் தாண்டும் வரை உண்டான அந்தக் குளிர்ச்சியை, முதன் முதலாக அந்தக் கால மெட்ராஸுக்குள் ’பட்டணப் பிரவேசம்’ செய்த அந்த நாளை நினைத்து, எனக்குள் மனம் பரிதவித்தது. இவற்றுள் வரும் உங்களது நடைமேடை (ரெயில் நிலையம்) உங்களுக்கென்று அமைந்த அருமையான சிந்தனை மேடை.
இன்று ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் செல்லாது என்றவுடன், எங்கே பணம் என்று பலரும் அலையக் காண்கிறோம். பணம் பற்றிய ஆசிரியரின் அருமையான சித்தாந்தம் கீழே.
// பணம் என்பது காகிதம் என்பதை மறந்து உலகில் உள்ள அத்தனை கவலைகளையும் போக்கவல்லது என்பதாக நினைத்துக் கொண்டவர்கள் இருக்கும் உலகில் எதை இயல்பாகப் பேசினாலும் இளிச்சவாயன் பட்டமே மிஞ்சும், அளவான பணத்தைப் பெற்றவன் அவனை அவனே ஆள முடியும், அளவுக்கு மிஞ்சிய பணத்தைப் பெற்றவன் பணமே அவனை ஆளத் தொடங்கும், பணம் ஆளத் தொடங்கும் போது தான் மர்மக் கதையில் வரும் திடுக்கிடும் திருப்பங்களும் நம் வாழ்வில் நடக்கத் தொடங்குகின்றது, இருப்பதை வைத்துச் சிறப்பாக வாழ்வோம் என்று எண்ணிக் கொள்பவர்கள் வாழ்க்கை முழுக்கப் பொம்மையாய் காட்சிகளைக் கண்டு நகர்ந்து விடுவது உத்தமம், // (நீயும் பொம்மை நானும் பொம்மை)
’சாதிப் பொங்கலில் சமத்துவச் சர்க்கரை’ – என்ற கட்டுரையில் களம்.1 களம்.2 களம்.3 என்று அமைத்து போலியான சாதி ஒழிப்பாளர்களைப் பற்றியும், குழந்தைகள் மனதில் ஜாதி, மதம் உண்டாக்கும் நெருடல்களைப் பற்றியும், இசுலாமியர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப் படுவது பற்றியும் வெளிப்படையாக நடுவுநிலையோடு சொல்லி இருக்கிறார் இந்த நூலின் ஆசிரியர்.
இன்னும் அரசியல் குறித்தும், பயணம் பற்றியும், விழா தரும் போதை பற்றியும், விளம்பரம் படுத்தும் பாடு பற்றியும், ஆன்மீகத் தேடலில் தனக்கு நேர்ந்த அனுபவம் பற்றியும்., தமிழ்த் தேசியம் பற்றியும், மதம் மற்றும் சாதீயம் பற்றிய தனது பார்வையையும் - மேலும் அங்கங்கே ஆசிரியரின் சுவாரஸ்யமான மலரும் நினைவுகளையும் இந்த நூலில் சொல்லி இருக்கிறார்.
ஆசிரியர் ஜோதிஜி (திருப்பூர்) அவர்கள், தான் சார்ந்து இருக்கும் ஏற்றுமதித் தொழிலின் பல்வேறு பரபரப்புகளுக்கு இடையிலும் வாசகர்களை இழுக்கும் நடையில் பல கட்டுரைகளையும் எழுதி வருவது இவருக்குள் இருக்கும் எழுத்தின் மீதான ஆர்வத்தையும், இவரது வாசகர் வட்டத்தின் வரவேற்பையும் வெளிப்படுத்தும். குப்பை என்பதற்குத் தமிழில் செல்வம் என்ற பொருளும் உண்டு.
இவர் எழுதிய இந்த ’பழைய குப்பைகள்’ என்ற நூல், வாழ்வியல் சிந்தனைகள் அடங்கிய ஒரு பொக்கிஷம்; சிலப்பதிகாரம் சொல்வதைப் போல ’கோடிபல அடுக்கிய கொழுநிதிக் குப்பை’ – என்றே சொல்லலாம்.
அன்புடன் – தி.தமிழ் இளங்கோ
திருச்சி,
வலைப்பதிவு - எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL http://tthamizhelango.blogspot.com
பழைய குப்பைகள் (மின் நூல்)
இதுவரை வெளியிட்டுள்ள மின் நூல்கள்
ஈழம் -- வந்தார்கள் வென்றார்கள் (51.356)
தமிழர் தேசம் (16.652)
காரைக்குடி உணவகம் (23.713)
பயத்தோடு வாழப் பழகி கொள் (11.407)
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் (10,446)
கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு (33.475)
வெள்ளை அடிமைகள் (16. 943)
நன்றி.
ReplyDeleteஅருமை. நன்றி.
ReplyDeleteரொம்ப அருமையா எழுதியிருக்கிறார் தமிழ் இளங்கோ ஐயா...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
திரு தமிழ் இளங்கோ அவர்களின் வலைப்பூவில் படித்துவிட்டேன். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஎந்த விஷயமாயிருந்தாலும் தன்னுடைய மனதில் என்ன தோன்றுகிறதோ அதனை அப்படியே எழுதுபவர் திரு தமிழ் இளங்கோ. இங்கே உங்களைப் பற்றிச் சொல்லியிருக்கும் பதிவிலும் எந்தவித மேற்பூச்சுகளும் இல்லாமல் மனதில் பட்டதை அப்படியே பட்டவர்த்தனமாகச் சொல்லியிருக்கிறார். அவர் சொல்லியிருக்கும் அத்தனையும் உண்மை என்பதில்தான் பதிவின் ஆன்மா அடங்கியிருக்கிறது.
ReplyDeleteநண்பர் ஜோதிஜி திருப்பூர் அவர்களுக்கும், கருத்துரை சொன்ன அன்பர்களுக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteநண்பர் அவர்களுக்கு வணக்கம். நான் உங்களுக்கு அனுப்பிய, மின்னஞ்சலில், புதுக்கோட்டை வலைப்பதிவர் மாநாடு நடந்த வருடத்தை 2015 என்பதற்குப் பதிலாக 2014 என்று தவறுதலாக குறிப்பிட்டு விட்டேன். எனவே இந்த பதிவினில் ‘புதுக்கோட்டையில் (2014) மிகவும் சிறப்பாக நடைபெற்ற வலைப்பதிவர் மாநாட்டில்’ என்ற வரியில் உள்ள 2014 என்பதனை 2015 என்று திருத்தி அமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தவறுக்கு வருந்துகிறேன். மன்னிக்கவும்
ReplyDeleteசுட்டிக்காட்டியமைக்கு நன்றி அய்யா. திருத்தி விட்டேன். விமர்சனங்களை பகிர்ந்து கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி.
Delete