அஸ்திவாரம்

Saturday, December 10, 2016

அரசியல் (கோர) முகம்


சென்ற பதிவில் முக்கியமான தொடர்பில் உள்ள நண்பர்கள் சில கேள்விகளை எழுப்பியுள்ளார்கள். ஒவ்வொன்றும் ஒரு பதிவுக்கான சமாச்சாரம். இறந்து போனவரை அளவு கடந்து விமர்சனம் செய்யக்கூடாது என்பதற்காகச் சுருக்கமான "கழுகுப்பார்வை" தனமாக என் கருத்தை எழுதியிருந்தேன். ஆனால் என் மனதிற்குள் இருந்த பல கேள்விகளைக் குறிப்பிட்டு ஆச்சரியப்படத்தக்க வகையில் ஏன் விரிவாக எழுதவில்லை? ஏன் இதனைப் பற்றி எழுதியிருக்கலாமே? என்று நண்பர்கள் கேட்ட ஒவ்வொரு கேள்விகளுக்கும் இந்தப் பதிவு. 

ஒவ்வொருவரின் பின்னூட்டத்திற்கும் தொடர்ச்சியாக ஒவ்வொரு பதிவு வாயிலாகப் பதில் அளிக்கின்றேன். காரணம் இதன் மூலமாவது நண்பர்கள் என் அரசியல் பார்வையைப் புரிந்து கொள்ள முடியும். 

வீதிதோறும் பணம் கொடுப்பதற்கான நிர்வாகமுறையில் அதிமுக மிகச் சிறப்பாகவே செயல்பட்டது.. எதிர்க்கட்சிகள் அப்படி அல்ல.. 

நிகழ்காலத்தில். ... 

நடந்து முடிந்த மூன்று இடைத் தேர்தல் குறித்து அறிந்து கொள்வதற்காக மாற்றுக் கட்சியில் உள்ள நண்பரை அழைத்து இருந்தேன். அவர் மூன்று தொகுதியிலும் களத்தில் இருந்து பார்வையிட்டவர். தான் சார்ந்து இருக்கும் கட்சிக்காக உழைத்துக் கொண்டிருப்பவரும் கூட. உண்மை நிலவரங்களை அவரிடம் இருந்து தெரிந்து கொள்ள முடியும் என்பதால் முழுமையாக அங்கே என்ன நடந்தது? என்று கேட்ட போது தற்போதையத் தமிழ்நாட்டின் "கோர அரசியல் முகம் " தெரிந்தது.

அவர் சொன்னதைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் 

"அடுத்தத் தேர்தலில் இலங்கையில் இருந்து ராஜபக்ஷே 10.000 கோடி ரூபாய்க் கொண்டு வந்து அவர் கட்சியைத் தொடங்கித் தேர்தலில் நின்றால் கூட நம் மக்கள் காசு வாங்கிக் கொண்டு ஓட்டளிக்கத் தயாராக இருக்கும் சூழ்நிலையில் இருக்கின்றார்கள்" 

இது சாத்தியமா? என்று கேட்டால் என்னைப் பொறுத்தவரையில் சாத்தியமே? காரணம் மேகி நூடுல்ஸ் விசம் கலந்துள்ளது. யாரும் உண்ண வேண்டாம் என்றார்கள். இப்போது அதுவே நம் மக்களின் திட்டமிட்ட பரிபூரண உணவாக மாறியுள்ளது.

மீதி உங்களின் யூகத்திற்கே விட்டு விடுகின்றேன். 

இடைத் தேர்தல் என்றாலே ஆட்சியில் இருக்கும் கட்சி தான் வெல்லும் என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம் தான். என்ன காரணம்? பணத்திற்கு அப்பாற்பட்டு அதிகாரங்களைப் பயன்படுத்த முடியும். எதனையும் வளைக்க முடியும்? தேர்தல் பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் வேறு மாநிலத்தவர்கள் அல்ல. தேர்தல் முடிந்ததும் அவர்கள் மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களிடம் தான் சென்றாக வேண்டும். அவர்கள் சொல்கின்றபடி வாழ்ந்தாக வேண்டும் என்ற சூழ்நிலையில் எந்த அரசு ஊழியர்களும் எதனையும் கண்டு கொள்வதில்லை என்பதே முக்கியக் காரணம் என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஜனநாயகத்தில் முதல் தவறு இங்கேயிருந்து தான் தொடங்குகின்றது. 

இதற்குப் பிறகு தமிழ்நாட்டில் மட்டும் மற்றொரு மாற்றவே முடியாத மூடத்தனம் உள்ளது. தோற்கின்ற கட்சிக்கு நான் ஓட்டுப் போட வேண்டும்? 

அது என்னமோ தெரியலப்பா? அங்கே போய்ப் பட்டனை அமுக்கும் போது கை ரெட்ட இலைக்குத்தான் தான் போகுது? என்றவர்கள் நூற்றுக்கணக்கான பேர்கள். இதில் படித்தவர்களும் அடங்குவர். 

ஒரு சலூன் கடையில் உள்ள ஒரு செய்தித்தாளை குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு நூறு பேர்களாவது படித்துக் கொண்டே தான் இருக்கின்றார்கள். ஒரு அரசின் நிதி, நிர்வாகம், சட்டம் ஒழுங்கு இந்த மூன்றையும் எவரும் கண்டு கொள்வதே இல்லை. அது அவர்களுக்குத் தேவைப்படுவதும் இல்லை. 

பாலம் கட்டாத காரணத்தினால் பத்து மைல் சுற்றிச் சென்றாலும், பாதாள சாக்கடை தெரு முழுக்க ஆறாக ஓடினாலும் அது குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. 

யாரிடம் போய்க் கேட்பது? நமக்கேன் வம்பு? 

ஊழல் என்றால் கைது செய்து அழைத்துப் போகும் போது அப்படியா? என்கிறவர்கள் தான் அதிகம். காரணம் நாம் ஊழலை மனதளவில் விரும்புகின்றோம். நம் விரைவான முன்னேற்றத்திற்கு அது தான் முக்கியமான காரணம் என்பதனை ஒவ்வொருவரும் உளமார நம்புகின்றோம். 

இல்லாவிட்டால் இன்று வரையிலும் சகாயம் அவர்களை இந்த மாநிலமே கொண்டாடி இருக்க வேண்டுமே? இவர்கள் பார்வையில் அவர் பிழைக்கத் தெரியாதவர். நடைமுறை வாழ்க்கைக்குத் தகுதியில்லாத மனிதர். அனுசரித்துப் போவது தான் வாழ்க்கை என்பதனை காலம் காலமாகச் சொல்லப்பட்டுக் கடைசி வரைக்கும் வரிசையில் நிற்பதே நம் வாழ்க்கை என்று மாறிப் போன மனிதர்களின் மத்தியில் அரசியல்வாதிகள் மட்டும் நேர்மையாக இருக்க வேண்டும் என்பது நியாமா? 

ஒவ்வாரு முறையும், கலைஞரை, எம்.ஜி.ஆரை, ஜெயலலிதாவை ஊழல் வாதிகள் என்று சொல்லும் நாம் அவர்கள் ஆட்சியில் பணியில் இருந்து வெளியே தெரியாமல் விருப்ப ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் பதவி முடிந்து தனியார் நிறுவனங்களில் பல மடங்கு சம்பளம் அதிகமாகப் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கும் அதிகாரிகள், பதவி நீடிப்புப் பெற்றவர்கள் என்று எவரையும் இந்தச் சமூக அமைப்பு இன்று வரையிலும் கண்டு கொள்ளவே இல்லையே? 

வரலாறு முக்கியம் அமைச்சரே என்ற மின் நூலில் அந்தந்த சமயத்தில் பணியாற்றிய ஒவ்வொரு அதிகாரிகளும் செய்த செயல்பாடுகளை விளக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது. 

திமுகக் குறித்து எழுதும் போதெல்லாம் நண்பர்கள் வருத்தப்படுகின்றார்கள். சந்திக்கும் போது இதனைத்தான் என்னிடம் குறிப்பிட்டுப் பேசுகின்றார்கள். அதிமுக ஆதரவாளன் என்பது போலத்தான் கட்டம் கட்டுகின்றார்கள். ஆனால் குறைந்தபட்சம் எழுத்திலாவது நேர்மையாக இருந்து முடிந்தவரைக்கும் மனதிற்குத் தோன்றியவற்றை எழுதி விடலாமே? என்ற எண்ணத்தில் தான் திமுக மற்றும் அதிமுகக் குறித்து என் கருத்தை ஒவ்வொரு சமயத்திலும் எழுதிக் கொண்டே வருகின்றேன். 

நான் எழுதுவதால் எந்த மாற்றமும் இங்கே நிகழ்ந்து விடப் போவதில்லை. ஆனால் "இது தான் நான் நினைத்தது" என்று மனதிற்குள் புழுங்கிக் கொண்டிருக்கும் என்னைப் போன்ற நூற்றுக்கணக்கான பேர்களுக்கு நான் எழுதியதை வாசிக்கும் சமயத்தில் மனதளவில் ஒரு திருப்தி கிடைக்குமே? அதனைத் தான் எதிர்பார்க்கின்றேன். 

"என்னால் உங்களைப் போலத் தொடர்ச்சியாக எழுதி வெளியிட முடியவில்லை. ஆனால் மனதிற்குள் வெளியே சொல்ல முடியாத அளவுக்கு ஆதங்கமும் கோபமும் உள்ளது. அதனை நீங்கள் தைரியமாக எழுதும் போது மகிழ்ச்சியாக உள்ளது" என்று அழைத்துப் பேசியவர்கள் குறைவான நபர்களாக இருந்தாலும் சிலரின் ஆதங்கத்தையாவது போக்க முடிகின்றதே அந்தத் திருப்தியின் காரணமாகத்தான் அரசியல் பதிவுகள் எழுத வேண்டும் என்று தோன்றுகின்றது. 

சென்ற பதிவு ஒரே நாளில் ஆயிரம் பேர்கள் படித்துள்ளார்கள். ஆனால் சிலர் மட்டும் தைரியமாகத் தனது சுக முகவரியின் மூலம் விமர்சனம் செய்துள்ளார்கள். காரணம் அந்த அளவுக்கு ஒவ்வொருவர் மனதிற்குள்ளும் ஜெயலலிதா உருவாக்கிய தாக்கம் நேர்மறையாக எதிர்மறையாக உள்ளது என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

என் எழுத்தில் வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி, ஒரு பக்கச் சார்பு எதுவும் இருக்காது. வாசிக்கும் போதே புரிந்து கொள்ள முடியும். ஆனால் குறிப்பிட்ட கட்சியைச் சார்ந்தவர்களுக்கு இது சரிதான் என்று ஆழ் மனம் சொன்னாலும் அவர்களின் வெளி மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கும். தனிப்பட்ட விரோதம் அங்கிருந்து தான் உருவாகி விடுகின்றது. 

காரணம் இன்றைய சூழ்நிலையில் ஒருவரின் தனித்திறமையினால் மட்டும் அடுத்தக் கட்டத்திற்கு நகர்வதற்கு வாய்ப்பே இல்லாமல் அத்தனை சூழ்நிலைகளும் மாறி விட்டது. யாரோ ஒருவர் அதுவும் அதிகாரத்துடன் ஏதோவொரு வகையில் சம்மந்தப்பட்டவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் உங்களால் எதுவும் செய்ய முடியாது?காரணம் பிழைப்பு என்பது எல்லாவற்றையும் விட மேலானது. கட்சியைச் சார்ந்து செயல்படுபவர்கள், செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள், இவர் மூலம் ஏதோவொரு சமயத்தில் நமக்கு உதவி கிடைக்கக்கூடும்? நான் ஏன் இதனை எழுதி கெடுத்துக் கொள்ள வேண்டும்? என்று நினைப்புடன் இருப்பவர்கள்? எல்லாவற்றையும் எழுதிவிடத்தான் வேண்டுமா? என்று யோசிப்பவர்கள் என்பவர்கள் மத்தியில் தான் சிலராவது எழுத வேண்டியதாக உள்ளது. 

எம்.ஜி.ஆர் குறித்து அவரின் மறுபக்கம் குறித்து எழுதிய கண்ணதாசன் கூட எம்.ஜி.ஆர் வழங்கிய பணம் மற்றும் பதவியின் காரணமாகத் தான் எழுதி வந்த தொடரை அப்படியே நிறுத்தி விட்டார் என்பதனை எத்தனை பேர்களுக்குத் தெரியும். அன்று அவர் அப்படிச் செய்யாமல் இருந்தால் அவர் இறப்புக்குப் பின்னாலும் பெரும் கடனாளியாகத்தான் மறைந்து இருப்பார். ஜெயலலிதா குறித்து எழுதிய வலம்புரி ஜான் கூட அச்சுறுத்தல் காரணமாகத்தான் நிறுத்த வேண்டியதாகி விட்டது. இது தவிரக் க. சுப்பு அவர்கள் கூட முழுமையாக எழுத முடியாத அவஸ்தையில் தான் பல தொந்தரவுகளைச் சந்தித்தார். 

குமுதத்தில் ஜெயலலிதா மற்றும் சசிகலா குறித்துத் தொடர் ஒன்று தொடங்கியதை பலரும் நினைவில் வைத்திருக்கக்கூடும். என்ன ஆச்சு? நீதிமன்றத் தடை மூலம் நிறுத்தச் செய்தார்கள். ஆனால் இணையம் என்ற சுதந்திரக்காற்று முழுமையாக அனைவருக்கும் கிடைத்திட இப்போது தான் நான்கில் ஒரு பங்கு விசயமாவது வெளியே தெரிய வருகின்றது. 

நடந்து முடிந்த மூன்று இடைத்தேர்தலில் அதிமுக வென்றது. மக்கள் இன்னமும் அதிமுகப் பக்கம் தான் இருக்கின்றார்கள் என்று ஒவ்வொரு ஊடகமும் மார் தட்டிக் கொண்டாடியது. ஆனால் அதிகபட்சம் ஒரு வாக்காளனுக்கு 5000 ரூபாய் வரைக்கும் கொடுத்துள்ளார்கள். 200 முதல் ஆயிரம் வரைக்கும் ஆட்களைப் பொறுத்து வழங்கி உள்ளார்கள். ஆனால் திமுக வில் இருந்தும் பணம் வழங்கப்பட்ட போதும் அது 500 ரூபாயைத்தாண்டவில்லை. 

மக்களின் மாறிய மனோபாவத்தைத் திமுகவால் எதிர்கொள்ள முடியவில்லை. இது வாக்காளனுக்குக் கொடுத்த பணம் மட்டுமே. 

ஆனால் தேர்தல் நடந்த மூன்று தொகுதியிலும் ஒவ்வொரு இடங்களிலும் செய்த செலவுகளைக் கேட்ட போது மயக்கமே வந்து விட்டது. வீடு பிடிப்பது, அதற்கு மொத்தமாக ஒரு தொகை (சராசரியை விட மூன்று மடங்கு) குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும். வந்து சேர்கின்றது நகரம், ஒன்றியம், வட்டம், மாவட்டம் என்று அந்தந்த பொறுப்பாளர்களைக் கவனிக்க வேண்டியது என்பது ஒரு தனிப்பட்டியல் ரீதியாக உள்ளது. ஒரு இடத்தில் ஒரு வீட்டில் 15 பேர்கள் தங்குகின்றார்கள் என்றால் அவர்களுக்கு மூன்று வேளைச் சாப்பாடு. அவர்கள் அணிய வேண்டிய சட்டை வேட்டிகள், அதனைத் தினமும் துவைத்து சலவை செய்து கொடுக்கத் தனியாக ஒரு கூட்டம். இரவு என்றால் ஒரு கட்சியில் குவாட்டர். மற்றொரு கட்சியில் ஆஃப். ஆளுங்கட்சி என்பதால் அற்புதமான பிரியாணி மற்றும் அசைவ சமாச்சாரங்கள். 

ஒவ்வொரு இடத்திலும் பயன்படுத்த வேண்டிய அனைத்து விதமான வண்டிகளுக்குத் தேவைப்படும் பெட்ரோல் செலவு, அதற்காக அங்கங்கே சொல்லி வைக்கப்பட்ட பெட்ரோல் பங்குகள் என்று ஒரு நாள் செலவை ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறித்து வைத்துப் பார்த்தால் (ஒரு பகுதியில் உள்ளவர்களுக்கு மட்டும்) சில கோடிகளைத் தொடும். 

இன்னமும் அதிகாரப்பூர்வமாகச் செயல்படாமல் இருக்கும் ஒரே விசயம் பெண்கள் சமாச்சாரம் தான். இரவு என்றால் மது கட்டாயம் என்பது போல மிக விரைவில் பாலியல் சார்ந்த சமாச்சாரங்களும் ஒவ்வொரு கட்சி சார்ந்தவர்களின் உரிமையாக மாறிவிடும் வாய்ப்புள்ளதாகத் தெரிகின்றது. காரணம் நான் பதவிக்கு வந்தே ஆக வேண்டும் என்ற முனைப்பில் உள்ளவர்களும், கட்சி தோற்று விடக்கூடாது என்ற எண்ணத்தில் உள்ளவர்களும் எதையும் செய்யக்கூடிய காலத்தில் நாம் உள்ளோம். 

இந்த இடத்தில் தான் நான் சென்ற பதிவில் குறிப்பிட்ட திமுக அதிமுக வேறுபடுகின்றது. 

நிகழ்காலத்தில்.... சொன்னது போல ஒரு குறிப்பிட்ட விசயத்தை மிகத் தெளிவாகக் கண்ணும் காதும் மட்டும் தெரிவது போலச் செய்யும் கலையைக் கற்றவர்கள் அதிமுக வில் உள்ளவர்கள். எந்தச் சமயத்தில் இவர்கள் அங்கே பணம் கொண்டு போய்ச் சேர்த்தார்கள்? எப்போது கொடுத்தார்கள்? என்பதனை மாற்றுக் கட்சியினர் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு பார்த்துக் கொண்டே இருந்தால் கூட அவர்கள் "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்று தான் தூள் கிளம்புகின்றார்கள். ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் இதனைத்தான் கவனித்துக் கொண்டே வருகின்றேன். நகர்ப்புறங்களை விடக் கிராமப்புறங்கள் மற்றும் சிறு நகர்ப்புறங்களை நோக்கித்தான் அவர்கள் பார்வை இருக்கின்றது. 

இதற்கு இரண்டு காரணங்களை என்னால் சொல்ல முடியும். 

முதல் நாள் மந்திரியாக இருந்தவரை அடுத்த நாள் நீ எந்திரி என்று அனுப்பும் ஜெயலலிதாவின் நிர்வாகச் சீர்கேட்டை ஊடகங்களும் பொது மக்களும் படுபயங்கரமான தைரியசாலி என்கிறார்கள். 

ஒவ்வொரு தொண்டனும் நமக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்து விடக்கூடும் என்று உறுதியாக நம்பத் தொடங்குகின்றான். 

இதற்கு மேலாகத் தன் பதவி போய்விடக்கூடாது என்று அதிகாரத்தில் உள்ளவர்கள் பயந்து பையில் உள்ளதை எடுத்து வெளியே கொட்டுகின்றார்கள். 

திமுக ஆட்சியில் இருக்கும் போது குறிப்பிட்டத் துறை சார்ந்த அமைச்சர்களின் பெயர்களை மனப்பாடமாக நம்மால் சொல்லிவிட முடியும். 

ஆனால் அதிமுகவில் அஷ்டவதானி வந்தாலும் கூட ஜெயலலிதா முதல் முறையாக ஆட்சிக்கு வந்தது முதல் கடைசி நாள் வரைக்கும் எந்தச் சமயத்தில் எந்த அமைச்சர் எந்தத் துறையில் இருந்தார் என்பதனை எவராலும் சொல்ல முடியாது. பதவி இழந்து வாழ்க்கையிழந்தவர்களின் பட்டியல் என்பது பல பக்கங்கள் பிடிக்கக்கூடிய சமாச்சாரமாக உள்ளது.  

உத்தேச கணக்குப் போட்டுப் பார்த்தாலும் ஒரு தொகுதிக்கு ஆளுங்கட்சி குறைந்தபட்சம் 50 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர்.

மேலும் திமுக என்றால் கலைஞர் எதிர்ப்பு என்கிற குறுகிய வட்டத்திற்குள் தான் இருக்கின்றார்கள். கலைஞர் என்பவர் தற்போதைய சூழ்நிலையில் ஒரு ஐகான். அவர் தனது செயல்பாட்டை நிறுத்தி வெகு காலமாகிவிட்டது. அவரின் அன்றாடக் கடமைகள் மற்றும் உதவியைக்கூட அவருடன் இருக்கும் ஒரு பையன் மட்டுமே நிறைவேற்றி வருகின்றார். தேவைப்படும் சமயத்தில் தான் ஒவ்வொருவரும் அவரிடம் செல்கின்றார்கள். அவரின் மன உறுதி தான் அவரை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது. இதுவே தான் நினைவாற்றல் சக்தியை சராசரி மனிதர்கள் நம்பமுடியாத அளவுக்குப் பேச வைத்துக் கொண்டிருக்கின்றது. 

அவர் படிப்படியாக வளர்ந்தவர். அதற்கு என்ன பெயர் வேண்டுமானாலும் நீங்கள் சூட்டலாம்? 

தந்திரம், சமயோசித புத்தி, குழிபறித்தல், சுயபாதுகாப்பு, தன்முனைப்பு, சொந்த அறிவு, நிர்வாகத்திறமை, 

ஆனால் எந்த வார்த்தையில் சொன்னாலும் அவரைச் சில விசயங்களில் நாம் பாராட்டியே ஆக வேண்டும். 

அரசியல்வாதிகளில் நல்ல குடும்பத்தலைவர் என்று எவருமே இல்லை. கொள்ளுப்பேரன் வரைக்கும் எவரும் பார்த்தது இல்லை. தன் ஆரோக்கியத்தை அவர் அளவுக்கு எந்த அரசியல் தலைவரும் பேணியதும் இல்லை. எந்தக் கல்லூரிக்குச் செல்லாமலே தாய் மொழியில் அவர் அளவுக்கு உச்சத்தைத் தொட்டவர் உலகில் எவரும் இல்லை. நிர்வாகம் சார்ந்த எந்தப் படிப்பும் படித்ததில்லை. ஆனால் நிர்வாகத்தின் அத்தனை கோணங்களையும் அலசத் தெரிந்தவர். கால நேரம் பார்க்காமல் உழைக்கக்கூடியவர். உழைப்பின் மூலம் மட்டுமே உற்சாகமாய் இருக்க முடியும் என்பதனை ஒவ்வொருக்கும் உணர்த்திக் காட்டியவர். சாதி பலம் இல்லாமல் சாதித்துக் காட்டியவர். தெரிந்தோ தெரியாமலோ தமிழக அரசியல் களத்தில் உருவான மாற்றத்திற்குக் காரணமாக இருந்தவர். எழுதும் எழுத்துக்கள் மூலம் சமூக அமைப்பைப் புரட்டி போட முடியும் என்பதனை செயல்பாட்டில் காட்டியவர். எல்லாவிதங்களிலும் எதிர்ப்பை மட்டுமே சந்தித்து வாழ்ந்தவர். இன்னமும் கூட எதிர்ப்பு தான் அவரை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது. 

எந்தக் குடும்பத்திற்காக அவர் உருகி உருகி தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி ஒவ்வொருவரையும் வளர்க்கக் காரணமாக இருந்தாரோ அந்தக் குடும்பங்கள் தான் இன்று அவருக்கு அவரின் புகழுக்கு எதிரியாக ஒவ்வொன்றையும் கடந்த 15 ஆண்டுகளாகச் செய்து கொண்டு வருகின்றார்கள். 

ஒரு கடைக்கோடி தொண்டனுக்கு இன்னமும் கருணாநிதி என்ற பெயர் சொல்வது பிடிக்காது. இன்று வரையிலும் கலைஞர் என்று தான் அழைக்கின்றார்கள். 

கலைஞர் குடும்பத்தில் அவரைப் போல ஒரு நபர் கூடத் திறமைசாலிகளாக வளராதது அவர் குற்றமல்ல. உழைப்பு, திறமை இல்லாமல் அதிகாரத்தின் உச்சத்தை அடைய முடியும் என்று அவர் வாரிசுகளுக்குக் காட்டிய வழி இன்று அவருக்கே வலி மிகுந்த வாழ்க்கையை உருவாக்கியுள்ளது. 

ஆனால் பணம், பதவி என்ற இரண்டு விசயங்களிலும் அவர் எடுத்த ஒவ்வொரு முடிவும் அவரை அதளபாளத்திற்குத்தான் தள்ளிச் சென்று உள்ளது. இன்று வரையிலும் மாறவில்லை. மாறவும் மாட்டார். அது அவரின் அடிப்படை சுபாவம். 

இந்த விசயத்தில் தான் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா இருவரும் கலைஞரை விட எட்ட முடியாத உயரத்துக்குச் சென்றுள்ளார்கள். 

இதன் காரணமாகத்தான் கலைஞர் திட்டம் என்றால் அவன் அப்பன் வீட்டுச் சொத்தா? என்று கேட்பவர்கள் அதுவே அதிமுக என்றால் மகராசன், மகராசி என்கிறார்கள். இவர்கள் மக்களுக்கு எது பிடிக்குமோ? அதனைச் செய்து விட்டு நம் ஊழலை மறைத்துக் கொள்வோம் என்ற கொள்கையுடைவர்கள். 

ஆனால் கலைஞரோ நிர்வாகத்தின் மூலம் நீண்ட காலப் பலனை தமிழகத்திற்குக் கொடுப்போம் என்று நினைத்தவர். என்னவொன்று கலைஞரின் ஒவ்வொரு திட்டத்திற்குப் பின்னாலும் ஒரு திருட்டுத்தனம் இருப்பதை ஊடகங்கள் வெளிப்படுத்தி விடுகின்றன. ஆனால் அதிமுக என்றால் மௌனித்து விடுகின்றார்கள். 

காரணம் பகிர்ந்து உண்ணுதல் என்பது தான் காரணமாக இருக்க முடியும். 

மொத்தத்தில் இன்று வரையிலும் தமிழகத்தில் வென்றது ஜனநாயகம் என்ற பெயரில் ஊழல் மட்டுமே. காரணம் நமக்குச் சரியான தலைவர்கள் தேவையில்லை. ஜாலியான, மினுமினுப்பான நபர்கள் இருந்தால் போதும். அரட்டை அடிப்பதற்காக நாம் அரசியல் பேசுகின்றவரைக்கும் கண்ணுக்கு எட்டியவரைக்கும் தலைவர்கள் கிடைக்க மாட்டார்கள். இன்னும் பல தறுதலைகள் தான் வந்து சேர்வார்கள்.


15 comments:

  1. ஜாலியான, மினுமினுப்பான நபர்கள் இருந்தால் போதும். // இது தவறு.. சசிகலாவிடம் இந்த இரண்டுமே இல்லை.. ஆனாலும் இனிமேல் இவர்தான் எங்கள் பெரியம்மா...

    ReplyDelete
    Replies
    1. இனி தமிழக தலைநகரம் மன்னார்குடி.

      Delete
  2. நீங்களும் ஒரு கருணாநிதியின் ஜல்ரா என்பதை அறியும்
    போது மனம் ரொம்ப வலிக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நடுநிலையான நுண்நோக்கிய பார்வை உங்களால் புரிந்துகொள்ளமுடியவில்லை.

      Delete
    2. புரிதலுக்கு நன்றி. தவேஷ் நீங்களுமா? அவசப்பட்டு விட்டீங்க?

      Delete
  3. மொத்தத்தில் இன்று வரையிலும் தமிழகத்தில் வென்றது ஜனநாயகம் என்ற பெயரில் ஊழல் மட்டுமே. காரணம் நமக்குச் சரியான தலைவர்கள் தேவையில்லை. ஜாலியான, மினுமினுப்பான நபர்கள் இருந்தால் போதும். அரட்டை அடிப்பதற்காக நாம் அரசியல் பேசுகின்றவரைக்கும் கண்ணுக்கு எட்டியவரைக்கும் தலைவர்கள் கிடைக்க மாட்டார்கள். இன்னும் பல தறுதலைகள் தான் வந்து சேர்வார்கள். - வேதனை.

    ReplyDelete
  4. ம்ம்ம்ம்ம்..............மீதியையும் எழுதுங்கள். படித்துவிட்டு மொத்தமாகக் கருத்துச் சொல்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. கடைசி வரைக்கும் கருத்து சொல்லாமல் நகர்ந்து விட்டீங்க?

      Delete
  5. கலைஞரின் ஒவ்வொரு திட்டத்திற்குப் பின்னாலும் ஒரு திருட்டுத்தனம் இருப்பதை ஊடகங்கள் வெளிப்படுத்தி விடுகின்றன. ஆனால் அதிமுக என்றால் மௌனித்து விடுகின்றார்கள். It is the reality.

    ReplyDelete
  6. தேவியர் இல்லம் உங்கள் அரசியல் புரிதல்
    தவறானது.நீங்கள் குறிப்பிடும் பணம்
    ஆதிக்கம் உண்மை..திமுகவின் செல்வாக்கு நகரங்கள் சார்ந்த்து
    அதுவட தஞ்சை,கிழக்கில்,முஸ்லிம்,கிறிஸ்துவர்
    வாழும் பகுதியில் அதிகம்
    அதிமுக செல்வாக்கு தென்தமிழகம் தேனி,ஆண்டிப்பட்டி,திருச்சி, கொங்கு மண்டலம் அதன் ஒட்டுவங்கி50% மேல் உள்ளது..
    அதிமுக தொண்டர்கள் நிலவுடமை சார்ந்வர் திமுக கடற்கரை நிலப்பரப்பில்
    ஆதிக்கம் செலுத்தும் ஒட்டு மொத்த தமிழக
    நிலப்பரப்பில் திமுக30% பரப்பில் உள்ள மக்கள் ஆதரவு அதிமுக 65% நிலப்பரப்பில்
    மக்கள் ஆதரவு உண்டு...திமுக தனது குறுகிய பரப்பில் அதிக தொகுதி உண்டு
    ஆனாலும் கூட்டணி முக்கியம்
    அதிமுக ஒட்டுகளை கட்டுப்பாட்டில் நிலை படுத்தினால் போதும் உணர்ச்சிவயப்பட்ட
    இருபக்கம் கூர்மையான வாள் கொண்டு
    போரடும் அது சில சமயம் தன் வாளினால் காயப்படும் வாய்ப்பு உள்ளது இப்பொழுது
    உள்ள அதிமுக இதற்காகதான் அஞ்சுகிறது
    திமுக அரசியல் வழிமுறைகள் பழமையான
    பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை பின்பற்றும்..அதிமுக வெற்றிக்கான புது வழிமுறையும் ,எந்தவாய்பை தவறவிடாது...வெற்றிமட்டும் தான் பார்க்கும் அதன் பின்விளைவு பற்றி கவலை படாது..அரசியல் என்பது தனிமனித வாழ்வில் குறைவான ஆதிக்கம்
    தான் இருக்கும் தினசரி கடமைகள்,குடும்பம், மகிழ்ச்சியை உருவாக்கும் முயற்சி இதுதான் அதிக நேரத்தை எடுக்கும்.

    ReplyDelete
    Replies
    1. விமர்சனம் என்கிற ரீதிக்கு அப்பாற்பட்டு பதிவை அழகாக உள்வாங்கி உங்கள் தரப்பு கருத்துக்களை புள்ளிவிபரங்களோடு கொடுத்த உங்களுக்கு என் நன்றி.

      Delete
  7. திமுக பற்றி உங்கள் கருத்து கொங்கு மண்டலத்தில் அதிமுக பரப்பும் திண்ணை
    பிராச்சாரம் மேலும் கட்சியின் கட்டமைப்பு பலம்..இங்கு சேப்பாக்கம் பகுதியில் அதிமுக நபர் ஒருவர் கூட விவாதம் செய்ய வரமாட்டான் தேர்தல் நேரத்தில் மட்டும் தன்
    அடையாளம் காட்டுவார்கள் மற்ற நேரம் அதிமுக என்பதை காமிக்க மாட்டார்கள்..
    இந்த காழ்புணர்வு உங்கள் அனைத்து பதிவிலும் தெரிகிறது...கலஞர் விழ்ச்சி அடைந்துவிட்டார் என எக்காளத்துடன் எழுதுகிறிர்கள் எட்டு முதலமைச்சர்களுக்கு
    இறுதி அஞ்சலி செலுத்தய ஒரே முதல்வர்
    இப்பொழுது உங்கள் முடிவை எடுங்கள்
    அதுவும் உங்களுடைய நான் முழமையாக
    நினைத்துக்கொண்டு

    ReplyDelete
    Replies
    1. தற்போதைய சூழ்நிலையில் ஸ்டாலின் அவர்களின் கையில் கலைஞர் பதவியைவிட்டுக் கொடுக்காத சூழ்நிலையை நீங்க எப்படி பார்க்குறீங்க நாச்சியப்பன்.

      Delete
  8. //என்னவொன்று கலைஞரின் ஒவ்வொரு திட்டத்திற்குப் பின்னாலும் ஒரு திருட்டுத்தனம் இருப்பதை ஊடகங்கள் வெளிப்படுத்தி விடுகின்றன. ஆனால் அதிமுக என்றால் மௌனித்து விடுகின்றார்கள்.

    காரணம் பகிர்ந்து உண்ணுதல் என்பது தான் காரணமாக இருக்க முடியும். //

    இதுதான் உண்மை.... ஊடகங்கள் பெரும்பாலும் அதிமுகவைச் சார்ந்துதான் தங்கள் வாழ்க்கையை நகர்த்துகின்றன...

    இப்ப சி..சின்னம்மாவுக்கு ஜால்ரா... பார்த்தீர்கள்தானே...

    ReplyDelete
    Replies
    1. அதிமுக என்பது மட்டும் காரணம் அல்ல. பணம் என்ற மூன்றெழுத்து இன்னும் பல சமாச்சாரங்கள் உள்ளது. திமுக என்பதும் என்றுமே ஒரு வழிப்பாதை தான்.

      Delete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.