அஸ்திவாரம்

Sunday, October 16, 2016

கேள்விகளுக்கு இங்கே பதில் உண்டு?


சில மாதங்களுக்கு முன்பு அழைத்த நண்பரின் உரையாடலில் முக்கியக் கேள்வியைக் கேட்டு இருந்தார். நீங்கள் யார்? 

தமிழர் தேசியம் ஆதரவாளரா? 

ஹிந்து மத எதிர்ப்பாளரா? 

சாதியை மறைமுகமாக ஆதரிப்பவரா? 

இன்று மற்றொரு நண்பருடன் உரையாடும் போது எனக்குள் கேட்டுக் கொண்ட விடை தெரியாத கேள்விகளுக்குச் சில வெளிச்சம் உருவானது. 

மிழர்களுக்கான தேசியம் என்பது வெறும் வார்த்தைகளாகக் கடைசி வரை வாழும். அது எழுத்தாக, விமர்சனத்துக்குரியதாக, வார்த்தைகளாக மட்டுமே வாழும். காரணம் தகுதியான தலைமைப்பண்பு உள்ளவர்கள் இங்கே எவரும் இல்லை. எதிர்காலத்தில் உருவாகக்கூடுமா? என்பது பற்றி எனக்கு எவ்வித எண்ணமும் இல்லை. இனி வரும் காலங்களின் கொள்கைகளை முன்னிறுத்தி அரசியல் களங்கள் செயல்பட வாய்ப்பில்லை. 

இதை வாசிக்கும் போது உங்களுக்குள் தோன்றும் எரிச்சலை என்னால் உணர்ந்து கொள்ள முடிகின்றது. காரணம் தொழில் நுட்ப வளர்ச்சி என்பது நீங்களும் நானும் நினைத்தே பார்த்திராத அத்தனை தளங்களை உடைத்துக் கொண்டே வருகின்றது. என்னைப் பொறுத்தவரையிலும் தமிழ்நாடு என்பது இந்தியாவில் ஒட்ட வைக்கப்பட்டுள்ள ஒன்று. டெல்லியின் பார்வையில் தொடக்கம் முதல் இன்று வரையிலும் ஏன் நாளைக்குக்கூடக் கண்ணில் விழுந்த தூசி போல எரிச்சல் தரக்கூடிய சமாச்சாரம். 

எந்த உரிமையைப் பற்றிப் பேசக்கூடாது. பேசுபவர்களை அவர்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி அமைதியாக்கிவிடுவார்கள். அது தான் தொடக்கம் முதல் நடந்து வருகின்றது. காரணம் பணம் என்ற பலவீன அடிப்படையில் இங்கே எவரும் எதைப்பற்றியும் குரல் எழுப்பத் தகுதியில்லாதவர்களாக இருக்கும் வரையிலும் நாம் வாழும் வரையிலும் கற்பனைகளை மனதில் வைத்துக் கொண்டு நம் எல்லைக் கோடுகளைப் புரிந்து கொண்டு வாழ்ந்து இறந்து விடுவோம் என்பதே எதார்த்தம். 

மாற்றங்கள் உருவாகும். நாம் அப்போது இங்கே இருக்கப் போவதில்லை. காலம் தீர்மானித்துள்ள கணக்கு வழக்குகளை முடிவுக்குக் கொண்டு வர நாம் யார்? 

தம் என்பதனை முதலில் வெறுத்தேன். கால மாற்றத்தில் விரும்பினேன். மறுபடியும் மாற்றம் நிகழ்ந்தது. இப்போது வெறுக்கவும் இல்லை. விரும்பவும் இல்லை. அதனைப் பார்வையாளராகப் பார்க்கும் பக்குவம் வந்து விட்டது. 

எனக்கான அடையாளம் நான் உருவாக்கியது இல்லை. பிறக்கும் போது அது ஒட்டி வைக்கப்பட்டு இதுவே இன்று வரையிலும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது. அதனை மாற்றவும் முடியாது. மாற்றவும் விரும்பவில்லை. அதனைப் பற்றி யோசிக்க வேண்டிய அவசியமும் இல்லை. எனக்கான சமூக வாழ்க்கையில் என் தேடலில் மதம் சார்ந்த விசயங்கள் இல்லை என்பது தான் என் வளர்ச்சியின் அடையாளமாகக் கருதுகின்றேன். 

நான் பணிபுரியும் நிறுவன நிகழ்ச்சிகள், உறவுக்கூட்டங்களின் முக்கிய நிகழ்வுகள் போன்ற எல்லா நிகழ்வுகளில் பங்கேற்கும் போது ஒரு வேடிக்கையாளனாக என்னைக் கருதிக்கொள்கிறேன். 

என் புத்திக்கு அப்பாற்பட்டு, என் தனிப்பட்ட திறமைகளைத் தாண்டி கால மாற்றம் என்னை வேறு பாதைக்கு நகர்த்திச் செல்லும் போது, மன ஆறுதல் தேவைப்படும் போது தேவைப்படும் தெய்வ நம்பிக்கைகள் (அல்லது) பிரபஞ்ச சக்தி (அல்லது) ஏதோவொரு அப்பாற்பட்ட சக்தி ஏதோவொன்று நம்மை இயக்குகின்றது என்று உறுதியாக நம்புகிறேன். 

அதனை மதம் என்ற குறுகிய வட்டத்திற்குள் கொண்டு வர விரும்புவதில்லை. மதம் எனக்கு எதனையும் கற்றுத் தரவில்லை. அதில் இருந்து கற்றுக் கொள்ள ஒன்றுமே இல்லை என்பது தான் என் தனிப்பட்ட கருத்து. 

சமூகம் தான் என்னை வழிநடத்துகின்றது. நல்லது கெட்டதும் கலந்து நிறைந்த இந்த மனிதக்கூட்டம் தான் மாற்றத்தை உருவாக்குகின்றார்கள். பாடங்களை உள்ளே இருந்து எடுக்காமல் புராண, இதிகாசங்களை நோண்டி நொங்கெடுப்பது என்பது வாழ்வின் கடைசிக் காலகட்டத்தில் செயல்பட முடியுமால் இருக்கும் போது வேண்டுமென்றால் மன அமைதிக்கு எடுத்துக்கொள்ளலாமே என்பேன். 

செயல்பட வாய்ப்பு இருக்கும் அத்தனை தளங்களிலும் ஏன் நம்மால் செயல்பட முடிவதில்லை? நமக்கான சிந்தனை என்பது மாறிக் கொண்டே இருப்பது? அதனை ஏன் நாம் மாற்றமாக எடுத்துக் கொள்ளக்கூடாது? நாளைய நமது மாற்றத்தைப் பற்றி நாம் யோசிப்பதைப் விட இன்றைய ஒரு நாள் கடமையை நாம் சரியாகச் செய்துவிடலாமே? 

"மனிதன் என்பவன் மகத்தான சல்லிப்பயல்" என்பது அடிப்படை ஆதாரம். இவர்களைத்தான் நாம் கையாள வேண்டும். இவர்களிடம் தான் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். இவர்கள் உருவாக்கும் மாயவலை தான் மதம் என்ற அடையாளத்தை உருவாக்குகின்றது. தேவைப்படும் நேரத்தில் தேவைப்படுகின்றதை எடுத்துக் கொள்வோம். அதற்காக அது தான் நம் முக்கியத் தேவை என்பதை முட்டாள்தனமாகக் கொள்கையை விட்டு வெளியே வந்து நின்று வாழ்ந்து பார்க்கலாமே? 

சாதீய அடையாளம் என்பது நவீன தொழில் நுட்ப வளர்ச்சியில் அழிந்து போய் விடும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் உறுதியாக நம்பினேன். ஆனால் இன்று பிரமாண்டமாக விஸ்வரூபம் போல வளர்ந்து வருகின்றது. பலரும் அதனை வளர்க்கவே விரும்புகின்றார்கள். மகத்தான ஆச்சரியம் என்னவென்றால் உயர்கல்வி கற்றவர்கள், புலம் பெயர்ந்து பல இன மக்களுடன் வாழ்பவர்கள், அதீத திறமை கொண்டவர்கள் என்று அத்தனை பேர்களும் இதனை விட்டு வெளியே வர விரும்புவதில்லை என்பதனை கடந்த சில ஆண்டுகளாகக் கவனித்து வருகின்றேன். 

சற்றுப் பயமாக உள்ளது. நெருங்கிய நட்பு உடைபட்டு விடுமோ ? என்று யோசித்துள்ளேன். மாற்றுக் கருத்து என்பதனைக் கூடத் தனிப்பார்வையாகப் பார்க்க இங்கே யாரும் தயாராக இல்லை. இதற்குப் பின்னால் உரிமைகள் என்றொரு வார்த்தைகளைக் கொண்டு வந்து நிறுத்துகின்றார்கள். நீ சாதியை வைத்துத் தானே உனக்கான உரிமையைப் பெற்றாய்? உன் குழந்தைகளும் அதன் வழியே தானே கல்லூரிக்குச் செல்லப் போகின்றார்கள்? அனுபவிக்கும் போது ஆரத்தழுவி விட்டு இப்போது அட அசிங்கமே? என்று ஏன் சொல்கிறாய்? இது போன்ற பல கேள்விகள் என்னைத் தாக்குகின்றது, 

சாதியப் பார்வையில் பிராமணர்களை மையப்படுத்தி வந்த ஒவ்வொரு கேள்விகளும் இன்று வலுவிழந்து போய்விட்டது. ஆனால் நம்மவர்கள் இன்னமும் அதனைக் கெட்டியாகப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கின்றார்கள். 

இடை நிலை சாதி என்று ஆதிக்கம் செலுத்த தொடங்கினார்களோ அப்பொழுதே நியோ பிராமின் (நவ பார்ப்பனர்கள்) என்றொரு புதிய கூட்டம் உருவாக்க தொடங்கியது. இந்தக் கூட்டம் தான் இன்று சாதியை வளர்க்கின்றார்கள். வளர்க்க விரும்புகின்றார்கள். அதன் மூலம் கிடைக்க வேண்டிய ஆதாயத்தை அறுவடை செய்கின்றார்கள். அரசியல், ஆன்மீகம், கலை, இலக்கியம் என்று அத்தனை தளங்களிலும் இது தான் நடந்து கொண்டிருக்கின்றது. 

இது எப்போது மாறும் என்பதனை என்னால் யூகிக்க முடியவில்லை. 

ஆனால் தனக்கான ஒரு அடையாளம் என்பதனை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு சமூகமும் உருவாக்கி வந்தது. இன்று அதில் ஆட்டம் காணத் தொடங்கி விட்டது. இவர் ஆசிரியர், இவர் தலைவர், இவர் நடிகர், இவர் எழுத்தாளர் என்ற மாயப் பிம்பம் உடைபட்டு விட்டது. தொழில் நுட்ப வளர்ச்சி அனைத்தையும் உடைத்துப் போட்டு விட்டது. 

யார் வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம் என்கிற நிலையை உருவாக்கி உள்ளது. இதன் காரணமாகப் பலருக்கும் நடுக்கம் உருவாகின்றது. என் இடத்தை இவர் பிடித்து விடுவாரோ? என்ற இடைவிடாத போராட்டத்தில் சாதீயத்தை உள்ளே கொண்டு வருகின்றார்கள். அரசியலில் தொடங்கும் இந்த வெடிகுண்டு சமாச்சாரம் படிப்படியாகக் கோவில் வரைக்கும் வந்து நிற்கின்றது. 

எனக்கான தேவையை எந்தத் தெய்வங்களும் வந்து செய்யப் போவதில்லை. எனக்கான அங்கீகாரத்தை என் சாதி தரப்போவதில்லை. அப்படியே தொடக்கத்தில் தந்தாலும் அதைத் தக்க வைத்துக் கொள்ளத் தொடர்ந்து அந்தச் சாதிய அடையாளம் காப்பாற்றித் தரப் போவதில்லை. என் இருப்பு என்பதும் எனக்குத் தேவைப்படும்அங்கீகாரம் என்பது என் திறமைகளின் அடிப்படையில், நான் இந்த வாழ்க்கையைப் புரிந்து கொண்டு கையாள்வதன் அடிப்படையில் தான் உருவாகும். 

இந்த எதார்த்தத்தைப் புரிந்து கொண்டவன் எவனோ அவனுக்கு எந்த அடையாளமும் தேவைப்படாது. 

(இரண்டு படங்களும் ஆனந்த விகடன் ஆசிரியர் திரு கண்ணன் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. நன்றி கண்ணன்.)

21 comments:

  1. ஆக்கபூர்வமான செயல்களால் மக்களின் மனதில் இடம்பிடிக்க இயலா மூடதனமான, முட்டாள் அரசியல்வியாதிகள், தங்களின் இருப்பை பதிவுசெய்ய எடுகின்ற முதல் மற்றும் கடைசி ஆயுதம் சாதி.

    தமிழன் சாதியால் பிரிந்துகிடக்கும் வரை, தமிழகம் சல்லிகாசுக்கு மதிக்கப்படாது.

    ReplyDelete
    Replies
    1. மாற்றம் வரும் ஆனந்த்.

      Delete
  2. பொதுவாக இளமையில் சாதிக்கு எதிரான மனோபாவம் எழுச்சி பெறுகிறது, வயது ஆக ஆக அந்த மனோபாவம் மாறத் தொடங்கி சாதிக்கு ஆதரவான நிலையை அடைகிறது. பலர் அதனை வெளிப்படையாக சொல்வதில்லை. சாதி மாறி காதல் திருமணம் செய்து கொண்டவர்களுக்கும் இது பொருந்தும். இது மாற இன்னும் நிறையக் காலம் காத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் மாறுதலுக்காக காத்திருப்போம்.

      Delete
  3. சாதியை பலர் விரும்ப காரணம் அதனால் கிடைக்கும் பலனை எளிதாக அறுவடை செய்யத்தான், தன் சாதிக்கும் அந்த சாதியை சார்ந்த மக்களுக்கு எந்த ஒரு உதவியையும் செய்யாதவர்கள் கூட தனக்கு ஒரு பிரச்சனை வரும் போது சாதியை சத்தமிட்டு அழைப்பார்கள் உதாரணமாக தமிழக எம்பி சசிகலா புஷ்பா தன் சாதிக்குஓ அதனை சார்ந்த மக்களுக்கோ எந்த உதவியும் குரலும் கொடுக்காதாவர் தங்க்கென்று பிரச்சனை வரும் போது தன் பிரச்சனை தன் சாதிபிரச்சனை என்று சொல்ல் அதன் மூலம் திசை திருப்ப முயற்சித்தார் இது போலத்தான் பலர் தங்களின் வளர்ச்சிக்காகவே அதை பயன்படுத்த முயற்சிக்கிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. ஒரு தனிப்பட்ட நபரின் அல்லது கட்சியின் வளர்ச்சி என்பது பல கோடி மக்களை தவறாக வழிநடத்தி மொத்த சமூகமும் மாறுதலுக்கு உள்ளாகிறது என்பது தான் வேதனை.

      Delete
  4. வணக்கம் ஜி
    நல்ல ஆய்வுப்பார்வை, அரசியல், மதம், ஜாதி மூன்று விடயங்களை அலசியுள்ளீர்கள்.

    அரசியல் சார்ந்து 90% உடன்படுகின்றேன்,உள்ளுக்குள் எரிச்சலாகவும், ஆற்றாமையாகவும் இருந்தாலும் இதுதான் அரசியல் பொருத்து நிதர்சணம்.

    மதம் அப்படியே...

    சாதி புது வடிவங்களில் (தேவைகளில்) தன்னை நிருத்திக்கொண்டிருக்கின்றது சாதி எனபதை நான் பார்ப்பது தனக்காக பலிகொடுக்க ஒரு கூட்டத்தை வைத்திருப்பது என்பதுதான்.

    ReplyDelete
  5. வணக்கம் ஜி
    நல்ல ஆய்வுப்பார்வை, அரசியல், மதம், ஜாதி மூன்று விடயங்களை அலசியுள்ளீர்கள்.

    அரசியல் சார்ந்து 90% உடன்படுகின்றேன்,உள்ளுக்குள் எரிச்சலாகவும், ஆற்றாமையாகவும் இருந்தாலும் இதுதான் அரசியல் பொருத்து நிதர்சணம்.

    மதம் அப்படியே...

    சாதி புது வடிவங்களில் (தேவைகளில்) தன்னை நிருத்திக்கொண்டிருக்கின்றது சாதி எனபதை நான் பார்ப்பது தனக்காக பலிகொடுக்க ஒரு கூட்டத்தை வைத்திருப்பது என்பதுதான்.

    ReplyDelete
  6. Mail recd from friend வர்ணாசிரம தர்மப்படி சாதி என்பது தொழில் சார்ந்ததே. அப்படி தான் நாமும் வைத்திருந்தோம். ஆனால் தொழில் யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற நிலையில் அங்கே தொழிற்சார் சாதி காணாமல் போனது. ஆனால் தொழிலால் அடையாளப்படுத்தப் பட்ட சாதிய படிநிலைகள் அங்கேயே இருந்தன. அப்போது அந்த தொழில் செய்த சாதியினர் கெளரவமான தொழில்களாக கருதப்பட்டவைகளை தங்களுடைய சாதிக்கான தொழிலாக மாற்றினார்கள் (பனையேறிகள் > உப்பு > மளிகை > ஹோல்சேல் வியாபாரம் > ரீடெய்ல் ) அப்போது அந்த சாதியின் மீதான ‘கறை’ முழுமையாக வெளியேறாவிட்டாலும், வெகுஜன வெளியில் குறைந்தது.

    இப்போது இதிலிருந்தும் நாம் உடைய வேண்டுமென்றால் தொழில் என்கிற அமைப்பே உடைய வேண்டும். எப்படி அலைக்கற்றை எல்லோருக்கும் பொதுவாக இருக்கிறதோ, அது போல தொழிலமைப்பு என்பது மனிதர்களிமிருந்து இயந்திரங்களுக்கு கைமாறும்போது தொழிற் சார்ந்த அதிகாரம் என்பது ‘குறிப்பிட்ட’ சாதிகளிடமிருந்து விலகும். ஆனால் அப்போது வேறு சிக்கல்கள் உருவாக சாத்தியங்களிருக்கிறது.

    தொழில் என்பது முதலாளி / தொழிலாளி சார்ந்தது. முதலாளி வருமானமீட்டுகிறார். உள்ளூரில் படோடபமாக வாழ்கிறார். தொழிலாளிக்கு சம்பளம் வருகிறது. தொழிலாளி வாழ்வியல் தேவைகளுக்காக உள்ளூரில் செலவு செய்கிறார். ஆக உள்ளூரின் ஒரு சின்ன எகானமி இந்த முதலாளி / தொழிலாளிகளால் நிறைகிறது. இப்போது தொழில் நடத்துவது என்பதை இயந்திரங்கள் எடுத்துக் கொண்டால், இந்த எகனாமி என்னவாகும் ?

    ஒரு வேளை இது நடக்கும் போது தனிநபர் திறன்களோ, சாதுர்யமோ தேவைப்படாது. எல்லோரும் ஒன்றே. அப்போது யார் இந்த இயந்திரங்களை நிர்வகிக்கக் கூடிய திறனுடையவர்களோ அவர்கள் மேலெழுவார்கள். அங்கேயும் ஒரு சிக்கல் இருக்கிறது. ஒருவேளை இந்த இயந்திரங்கள் தானியங்கி சிந்திக்கும் இயந்திரங்களாக இருந்தால் என்ன செய்வது ?

    சாதியின் அடிப்படையே தொழில் தான். தொழிலே காணாமல் போனால் சாதி எதை வைத்து நிற்கும் ?

    இது எதுவும் உடனடியாக நடக்கப் போவதில்லை. ஆனால் கேஷியர்களை அழித்து ஏடிஎம்கள் வந்ததுப் போல, இது வரும் காலம் தொலைவில் இல்லை.

    ReplyDelete
  7. யதார்த்தத்தை மிக நுட்பமாகப் பதிந்துள்ளீர்கள். நன்றி.

    ReplyDelete
  8. உங்களுக்குள் இத்தனை நாள் இருந்த பட்டறிவு அனுபவத்தை , ஒரு பதிவாக எழுதி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

    இந்தியாவில் வேரூன்றி உள்ள ஜாதிய உணர்வைப் பற்றி நன்றாகவே சொன்னீர்கள். இந்தியன் பினல்கோட் போல, மனுதர்ம சாஸ்திரத்தை சிலர் கொண்டு செல்வதாலேயே இங்கு பிரச்சினைகளும், சகிப்புத்தன்மை இன்மையும் நிலவுகிறது. கல்வி மற்றும் பொருளாதார ரீதியில் சமமாக உள்ள, வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவர் ஒன்றாக சேர்ந்தால் கூட ஜாதியைச் சொல்லி பிரிக்க நினைக்கிறார்கள்.

    நடிகர் கமலஹாஸன் நடித்த ’நாயகன்’ திரைப்படத்தில் வரும் ஒரு வசனம் “அவனை நிறுத்தச் சொல் நான் நிறுத்தறேன்” இப்படித்தான் இங்கு சூழல் ஓடிக் கொண்டு இருக்கிறது. இருந்தாலும் நீங்கள் சொல்வது போல, இன்றில்லா விட்டாலும், ஒருநாள் இந்த ஜாதி ஒழியும் என்று எதிர் பார்ப்போம்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி. எனக்கும் அந்த நம்பிக்கையுண்டு.

      Delete
  9. //மாற்றங்கள் உருவாகும். நாம் அப்போது இங்கே இருக்கப் போவதில்லை.// இதுதான் ஜீ விதி என்பது.
    அதே போலத்தான் ஜாதி, மதம், அரசியல் எல்லாமே!
    உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா...
    நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அரசியல் கட்சி மாறலாம்
    எப்போது வேண்டுமானாலும் மதம் மாறலாம்
    ஆனால் எப்போதுமே மாறாதது ஜாதி!

    //"மனிதன் என்பவன் மகத்தான சல்லிப்பயல்"// இதில் நாம் அனைவரும் இருக்கின்றோம்!!

    //சற்றுப் பயமாக உள்ளது. நெருங்கிய நட்பு உடைபட்டு விடுமோ?// இந்த பயம்தான் மற்றவர்கள் சல்லிப்பயல் ஆக நாம் தரும் வாய்ப்பு மற்றும் நாம் சல்லிப்பயல் ஆக வாய்ப்பாகிறது!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே. நம் சுயநலமும் ஒரு காரணம். உண்மை தான்.

      Delete
  10. முதல் பத்தியைத் தவிர, மற்றபடி முழுப் பதிவும் அப்படியே என் உள்ளத்தை வெளியில் எடுத்து வைத்துப் படித்தது போல் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. அதென்ன முதல் பத்தி. உங்கள் மாற்றுக் கருத்தை இங்கே எழுதி வைக்கலாமே?

      Delete
  11. மனதில் உள்ள யதார்த்தத்தை வெளிப்பூச்சு எதுவும் இல்லாமல் சொல்வதற்கு ஒரு தைரியம் வேண்டும். அந்த தைரியம் நிறையவே உங்களிடம் இருக்கிறது. அரசியல், மதம், ஜாதி மூன்றுமே நல்லவர்களும் நேர்மையாளர்களும் விலகிக் கொள்ளும் ஒரு தளமாக உருவாகி வருகிறது. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் ஒன்றே ஒன்றுதான். இந்த மூன்றிலும் இருக்கும் சில கூர்மையான விஷயங்களைப் பயன்படுத்தி நேர்மைக்கு ஆதரவாகப் பேசுகின்றவர்களைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டுப் போய்விடுகின்ற அபாயம் இன்று இங்கே இருக்கிறது.

    முன்பெல்லாம் எந்த விஷயத்திலாவது ஏதாவது தவறு நடைபெற்றுவிட்டால் 'இரு இரு கோர்ட்டுக்குப் போய் உன்னைப் பார்த்துக்கொள்கிறேன்' என்பார்கள். ஆக, கோர்ட்டிலே நிச்சயம் நியாயம் கிடைக்கும் என்ற ஒரு நம்பிக்கை காலம் காலமாய் நமக்குள் ஊறிப்போயிருந்தது. அந்த நம்பிக்கையிலேயே காலச்சக்கரம் இத்தனை நாட்களும் சுழன்று கொண்டிருந்தன. இன்றைக்கு அந்த நம்பிக்கை மிக பலத்த அடியை வாங்கியிருக்கிறது. நீங்கள் சொல்லியிருக்கும் மூன்றும் அதோடு சேர்ந்து பணமும்தான் இன்றைக்கு எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது.இதை எதிர்த்துக் களமாடும் துணிவோ திறமோ யாருக்கும் இருப்பதில்லை. அதனால் நம்முடைய பாதுகாப்பை நாம் பார்த்துக்கொண்டால் போதும் என்ற மனப்பாங்குடன் எல்லாரும் நகர்ந்துகொண்டே இருந்துவிடுகிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி. உங்களை அடையாளம் கண்டு கொண்டேன். அழகான தெளிவான விமர்சனம்.

      Delete
  12. நடைமுறை, உங்கள் அனுபவம் எல்லாம் கலந்து தெளிவாக எழுதியிருக்கிறீர்கள் ஜி! வெளியில் சாதி ஒழிப்பு பற்றியும், சாதியில்லை என்றும் பேசுபவர்கள் கூட தனிப்பட்ட முறையில் சாதிசார்ந்துதான் வாழ்ந்துவருகிறார்கள். அதற்குக் கட்டுப்பட்டுத்தான் வாழ்கிறார்கள். ஏனென்றால் அதனால் கிடைக்கும் ஆதாயம். மதம் மாற்றம் கூட அப்படித்தான் நிகழ்கிறது. கடைக்கோடி குடிமகன் வரை பொருளாதார ரீதியாக மாற்றம் ஏற்பட்டால் இந்தச் சாதி ஒழிய வாய்ப்புண்டு.

    நிறைய சிந்திக்க வைக்கிறது தங்கள் பதிவு!

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.