புதிய எழுத்துப்பிழை திருத்தி அறிமுகம்
தமிழில் நாவி சந்திப்பிழை திருத்தி உட்பட மொத்தம் நான்கு திருத்திகள் உள்ளதாக தமிழ்ப்பேராயம் கூறுகிறது. ஆனால் உலகில் யாவரும் இணையத்தில் பயன்படுத்தும் வண்ணம் தமிழில் முழுமையான ஒரு திருத்தி உருவாக்குவது மிகவும் சவாலான காரியம். தமிழ் மென்பொருட்களுக்கு வணிகச் சந்தை இல்லையென்பதாலும், ஆய்வுச் செலவும், ஆக்கச் செலவும், இணையவெளியீட்டுச் செலவும் பெரிய தடையாகவுள்ளதால் இதுவரை ஒரு முழுமையான மென்பொருள் வெளியாகவில்லை.
அதற்கான ஒரு சிறுமுயற்சியாக இணையவழியில் அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு வாணி என்ற தமிழ் எழுத்துப்பிழை திருத்தி உருவாகியுள்ளது.
தற்போது பீட்டா பதிப்பாக(சோதனை நிலையில்) வெளிவந்துள்ள இத்திருத்தி தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு விரைவில் செழுமையான வடிவமாக வெளிவரும். அதுவரை முக்கியமான சில சொற்களும் விடுபட்டிருக்கும் வழுக்களும் இருக்கலாம், ஆனால் பல்வேறு இலக்கண விதிகளைப் பயன்படுத்தி இத்திருத்தி இயங்குவதால் சுமார் 70 மில்லியனுக்குமேல் சொல்வடிவங்களைப் புரிந்துகொள்ளும்.
நாவியில் பயன்படுத்தியது போல உங்கள் வாக்கியங்களை வாணியில் கொடுத்து "திருத்துக" பொத்தானை அழுத்தவும், பின்னர் பிழை திருத்தியபிறகு "சம்மதம்" பொத்தானை அழுத்தி, திருத்தங்களைப் பெற்றுக் கொள்ளலாம். சுயதிருத்தம் என்ற தேர்வு பொத்தானைத் தேர்வு செய்யாவிட்டால் இக்கருவி தானாக எந்தப் பிழையையும் திருத்தாது, வெறும் பரிந்துரை மட்டும் வழங்கும். காட்டப்படும் பரிந்துரைப் பட்டியலில் வாணியின் பரிந்துரைகளும், பயனர் அளித்த சொல்லும் இருக்கும். கூடுதலாக பயனர் திருத்திக் கொள்ள எழுத்துப்பெட்டியும் உள்ளது. ஒரு சொல்லை மட்டுமோ அல்லது மொத்தமாகவோ மாற்றிக் கொள்ளலாம்.
மேலும் உதவிக்குறிப்புகள் இங்கே
இத்திருத்தி என்ன செய்யும் என்றால்,
இறுதி எழுத்துச் சந்திகள் தவிர (அதற்கு நாவியைப் பயன்படுத்தலாம்) மற்ற சந்திகளைக் கணித்துப் பரிந்துரைக்கும்.
உதாரணம்:எடுத்துகொள்ள -> எடுத்துக்கொள்ள, அகட்சி -> அக்கட்சி என்று பரிந்துரைக்கும்.
புணர்ச்சி விதிப்படி இதன் சொற்பிழை சோதனை அமைவதால் புணர்ச்சி தவறிய சொற்களையும் சுட்டிக் காட்டும். உதாரணம்:நூறுக்கும் - > நூற்றுக்கும் என்று சரியாகப் பரிந்துரைக்கும். "கருத்தில் கொண்டு" என்று எழுதினாலும் "கருத்திற் கொண்டு" என்று எழுதினாலும் புரிந்துகொள்ளும். "பொருற் பெயர்" என்று தவறாக எழுதினால் இவ்வழியில் "பொருட் பெயர்" எனப் பரிந்துரைக்கும்.
ல-ள-ழ, ன-ந-ண, ர-ற போன்ற வேற்றெழுத்து வேறுபாடுகளைக் கண்டு பரிந்துரைக்கும். சில இடங்களில் (ஒளி,ஒலி,ஒழி) இயல்பான சொல் இருந்தால் தவிர இதர இடங்களில் சுட்டிக் காட்டி பரிந்துரைக்கும். உதாரணம்:ஒலிந்துவிட்டேன் -> ஒளிந்துவிட்டேன்/ஒழிந்துவிட்டேன், சுவறில் -> சுவரில் எனப் பரிந்துரைக்கும்.
பிழையான சொற்களைக் கண்டுபிடித்த பிறகு இருவகையாகப் பரிந்துரைகள் வழங்கப்படும். ஒன்று இலக்கணம் சார்ந்த திருத்தங்களான புணர்ச்சி திருத்தம், ஒற்று, வேற்றெழுத்து திருத்தம் போன்றவற்றைச் செய்யும். இரண்டாவது இலக்கணம் சாராத திருத்தங்களான தட்டச்சுப் பிழை திருத்தம், வழக்குமொழி திருத்தம், சில பிறமொழிச்சொல் திருத்தம் போன்றவற்றையும் செய்யும்.
பிறமொழிச் சொற்கள் சிலவற்றையும் திருத்தும் உதாரணம்: டாக்டர் -> முனைவர்/மருத்துவர்
வழக்குமொழிகளைப் பொறுத்தமட்டில் பெரும்பான்மையான திருத்தங்கள் தென்தமிழக வழக்கிற்கு வழங்குகிறது. வடதமிழகம், இலங்கை வழக்குகளைக் காலப்போக்கில் இணைத்துக்கொள்ளப்படும். உதாரணம்: விழுந்திருச்சே ->விழுந்துவிட்டதே, அடிச்சுகிட்டு -> அடித்துக்கொண்டு
தட்டச்சுப் பிழைகள் என்பது கண்ணுக்குத் தெரிந்த எழுத்துப் பிழைகள் மட்டுமல்ல கண்ணுக்குத் தெரியாத தவறான ஒருங்குறி வடிவங்களும்தான். பல்வேறு தட்டச்சு இடைமுகங்களில் தமிழ் உள்ளீட்டு முறைகளில் சிலசமயம் தவறாக எழுத்துக்கள் சேர்ந்துகொள்ளும்.
உதாரணம்: க + ஒ என்பதை க+ எ+ அ என்று எடுத்துக்கொள்ளும் கொள்கை -> கொள்கை. துணைக்காலுடன் ஒற்றுக்குறி சேர்ந்து ரகரவொற்றாகத் தெரியும் ா் -> ர் போன்ற பல பரிந்துரைகளும் உண்டு
வழமையான பிற மொழி சொற்பிழை திருத்தி போல பிழையாக எழுதிய சொற்களை அடிக்கோடிட்டுக் காட்டிவிடும். சில முக்கிய பிரமுகர்கள், கதைமாந்தர்கள், முக்கிய நகரங்கள் தவிர பொதுவாக உயர்திணைப் பெயர்கள், இடங்களின் பெயர்கள் தற்போதைக்குச் சேர்க்கவில்லையென்பதால் அச்சொற்கள் அடிக்கோட்டுக் காட்டப்படும்.
எனவே அடிக்கோடிட்டுக் காட்டுபவை எல்லாம் பிழையென்று அர்த்தமில்லை திருத்தியின் பட்டியலில் இல்லாத சொல்லெனப் பொருள் கொள்க
இச்செயலியின் ஆய்விற்கே பொருளாதாரச் சிக்கல்கள் நிலவியபோது இணைய வெளியீடு முடியாமல் ஓராண்டு கடந்துபோனது. பெருந்தன்மையுடன் வலைத்தமிழ் நிறுவனம் தனது வழங்கியைக் கொடுத்துதவியதால் தற்போது வெளியாகியுள்ளது.
தொடர்ந்து ஊக்கப்படுத்திவரும் வலைத்தமிழ் ச. பார்த்தசாரதி அவர்களுக்கும்,
இலக்கண ஆலோசனைகள் அளித்துவரும் முனைவர் செங்கைப் பொதுவன் அவர்களுக்கும்,
தொடர்ந்து ஆலோசனைகளும், பலருக்கு அறிமுகமும் செய்துவரும் ஜோதிஜி அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பயன்படுத்திப்பாருங்கள்.
வழமைபோல குறைகளையும் ஆலோசனைகளையும் எமக்கு அறியத்தாருங்கள்,
பயனுள்ளதாக இருந்தால் வாணியை அடுத்தவருக்கும் அறியத் தாருங்கள்
நீங்கள் கூறிய பிறகே இது குறித்து தெரிந்து கொண்டேன். சந்திப் பிழை திருத்த எனக்கு மிகவும் உதவுகிறது. தமிழில் மிகச் சிறந்த முயற்சி.
ReplyDeleteஇவ்வளவு சிறப்பான வசதியை இன்னும் பலர் பயன்படுத்திக் கொள்வதில்லை.. சரி செய்து கொள்ள வாய்ப்பு இருந்தும் எழுத்துப் பிழைகள் சந்திப் பிழைகளுடன் எழுதுகிறார்கள் :-(
படிப்படியாக மாற்றம் வரும் என்று நம்புவோம் கிரி.
Deleteஇதை தரவிரக்கம் செய்து கொள்கிறேன்....நன்றி சகோ.....அறியாமல் இருந்தோம்.அறியத்தந்தமைக்கு நன்றி
ReplyDeleteதரவிறக்கம் செய்ய முடியாது. பயன்படுத்திப் பாருங்க உமையாள்.
Deleteநல்ல பயனுள்ள தகவல்...உங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி...
ReplyDeleteமலர்
https://play.google.com/store/apps/details?id=com.ezdrivingtest.me.bdl.app.android
இந்த கூகுள் ப்ளே எதற்காக மலர்விழி?
Deleteவணக்கம்
ReplyDeleteயாவரும் அறிய வேண்டிய விடயத்தை தெளிவாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்
Deleteமிகவும் உபயோகமான ஓர் செயலி! பகிர்வுக்கு மிக்க நன்றி!
ReplyDeleteநண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைங்க சுரேஷ்
Deleteதமிழில் பிழை திருத்திகள் இருப்பதையே, தங்கள் மூலம்தான் அறிந்து கொண்டேன் ஐயா
ReplyDeleteநன்றி
தரவிறக்கம் செய்து கொள்கின்றேன்
நன்றி, பயன்படுத்திப் பார்க்கவும்.
Deleteபயன்படுத்துகிறேன்...
ReplyDeleteபகிர்ந்தமைக்கு நன்றி தனபாலன்
Deleteநண்பரே! நாங்கள் ஓரளவு எழுத்துப் பிழை இல்லாமல் எழுதத் தெரிந்திருந்தாலும் பல சமயங்களில் தட்டெழுத்துச் செய்யும் போது பிழைகள் வந்து, பின்னர் திருத்தம் செய்யும் போதும் கூட கண்ணிலிருந்துத் தப்பித்து விடும். நண்பர் ஒருவரின் புத்தகம் அச்சேருவதற்கு முன் பிழை திருத்தம் செய்ய வந்தது. அப்போது, சந்திப் பிழைகள் திருத்த ஏதேனும் செயலிகள் தளத்தில் இருக்கின்றனவா என்று தேடிய போது கிடைத்தது நாவி, வாணி. நாங்கள் இந்த "நாவி" செயலியைத்தான் உபயோகப்படுத்துகின்றோம். வாணியும் உபயொகப்படுத்துகின்றோம். மூன்று நாட்களுக்கு முன் தான் கிடைத்தது. இதை எங்கள் தளத்தில் குறிப்பிடலாம் என்று நினைத்திருந்த போது, தங்களது அழகான பதிவு. நாங்கள் குறிப்பிட்டிருந்தாலும் இப்படி அழகான விளக்கங்களுடன் எழுதியிருக்க மாட்டோம். மிக அழகாகச் சொல்லிப் பதிவிட்டு எல்லோரும் அறிந்து கொள்ளச் செய்ததற்கு மிக்க நன்றி நண்பரே!
ReplyDeleteமிக்க நன்றி
Deleteதமிழில் பிழையில்லாமல் எழுதுவதற்கு நல்ல வலைத்தளம் .இணையத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும் .மென்பொருளாக வந்தால் நல்ல பயன் .
ReplyDeleteஒரு வருடம் கழித்து நிறை குறைகளை அலசி ஆராய்ந்து அதன் பிறகு மென்பொருளாக கொண்டு வரலாம் என்ற எண்ணத்தில் நீச்சல்காரன் உள்ளார்.
Deleteநிச்சயம் அனைவரும் பயன்படுத்தி பார்த்து மேம்படுத்த உதவ வேண்டும் .
ReplyDeleteஎவ்வளவுதான் பிழை திருத்தம் செய்தாலும் சில பிழைகள் கண்ணில் படுவதில்லை நான் எனது முந்தைய பதிவுகள் அனைத்தையும் பிழை திருத்தம் செய்ய உத்தேசித்திருக்கிறேன். பயன்படுத்திவிட்டு பின்னர் இதனைப் பற்றி எழுதுகிறேன்.
நல்ல முயற்சிகளை பாராட்டி பரிந்துரைத்தமைக்கு நன்றி
நிச்சயம் பகிர்ந்து பலரின் பார்வைக்கு கொண்டு செல்லுங்க.
Deleteஎன்னுடைய வலைதளத்தில் எழுத்துப் பிழைகளை சரி செய்வதற்கு அதிக நேரம் ஆகும். கையெழுத்தில் சரியாக எழுதமுடிகிற சொற்கள் எப்படியோ கணணியில் பதியும் போது தவறாக இருக்கும். மன ஓட்டத்தின் வேகத்தில் இவைகளை கண்டு பிடிப்பது அந்தக் குறிப்பிட்ட படைப்பின் படைப்பாளியான என்னைப் போன்றவர்களுக்கு மிகுந்த சிறமமாக இருக்கின்றது. தங்களின் இந்தப் பதிவின் புண்ணியத்தால் வாணி, நாவி இரண்டையும் என்னுடைய வளைதலத்தில் ஏற்றிவிட்டேன். மிக்க நன்றி. வாழ்கதமிழ்.
ReplyDelete