நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், சுறுசுறுப்பாக இருந்தாலும் அல்லது செயல்படாத நிலையில் வாழ்ந்தாலும் நம்மைச் சுற்றிலும் உள்ள உலகம் இயங்கிக் கொண்டே தான் இருக்கின்றது. நாம் சுகமாய் இருக்கின்றோம் அல்லது சோகத்தில் இருக்கின்றோம் என்பதற்காக எதுவும் இங்கே மாறிவிடப்போவதில்லை. இங்கே ஒவ்வொன்றின் முடிவும் நொடிப் பொழுது மட்டுமே. அடுத்தடுத்து அதன் போக்கிலேயே நகர்ந்து கொண்டேயிருக்கின்றது. இந்தியாவில் ஏதோவொரு இடத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை எனக்கு வெறுமனே செய்தி மட்டுமே. என்னை, என் குடும்பத்தை தாக்காத வரைக்கும் ஒவ்வொரு செயல்பாடுகளும் கடந்து போக வேண்டிய, மறுநாள் பத்திரிக்கையில் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய செய்தியாகவே உள்ளது. ஒவ்வொருவருக்கும் இப்படித்தான். இதனால் தான் இந்தியாவில் எந்த பிரச்சனையும் பொதுப் பிரச்சனையாக மாறாமல் துணுக்கு செய்தியாகவே மாறி விடுகின்றது.
பச்சாதாபத்திற்கோ, பரிதாபப்படுவதற்கோ எவருக்கும் நேரம் இருப்பதில்லை. எதிர்பார்ப்பதில் பலன் ஒன்றுமில்லை. ஏமாற்றங்களை, சோகங்களை எதார்த்தமாக எடுத்துக் கொண்டு நகர்ந்து கொண்டிருந்தால் தான் இங்கே உயிர்ப்புடன் வாழ முடியும். நம் தேடல் மட்டுமே நம்மை இயக்குகின்றது. தேடிச் சென்றால் மட்டுமே துன்பம் விலகுகின்றது. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகின்றது. நம் ஆசைகளின் எல்லைகளையும், நமது தகுதியையும் இணைத்துப் பார்க்கும் போது மட்டுமே நம் வாழ்க்கையில் அமைதி உருவாகின்றது.
கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் அறிமுகமான தமிழ் இணையத்தின் ஆழமும் அகலத்தையும் குறித்து அப்போது எனக்கு அதிகம் யோசிக்கத் தெரியவில்லை. நீச்சல் தெரியாதவன் கடலில் குதித்தது போலவே இருந்தது. ஆனால் இன்று? பலரும் என்னை கவனித்துள்ளனர். சிலரை என் எழுத்து மூலம் திருப்திப் படுத்தி உள்ளேன். வாசித்த அந்த பத்து நிமிடத்தில் நான் வாழ்ந்த வாழ்க்கையை திரும்பிப் பார்த்துள்ளேன். என் குடும்பத்தை நினைத்துள்ளேன். ஊரில் வாழ்ந்து கொண்டிருக்கும் என் குழந்தைகளை நினைத்து ஏங்கியுள்ளேன் என்று உரையாடலில், விமர்சனத்தில் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுக்க பரந்து விரிந்துள்ள இணையத்தில் யாரோ ஒருவர் ஏதோவொரு இடத்தில் இருந்து கொண்டு ஒவ்வொரு நிமிடத்திலும் தன் கருத்து என்று ஏதோவொன்றை சொல்லிக் கொண்டேதான் இருக்கின்றார்கள். நாம் விழித்திருந்தாலும், கண்டு கொள்ளாமல் கடந்து போனாலும் தமிழ் இணையம் அதன் சுறுசுறுப்பை இழந்து விடுவதில்லை. நாளுக்கு நாள் இதன் வேகம் கூடிக் கொண்டேதான் இருக்கின்றது. எதைப் பற்றி எழுத வேண்டும் என்று தெரியாதவர்களுக்கும், எதையாவது எழுதி மற்றவர்கள் நம்மை நோக்கி திரும்பி பார்க்க வைத்துவிட வேண்டும் என்பவர்களுக்கும் மத்தியில் தான் தமிழ் இணையம் இயங்கிக் கொண்டிருக்கின்றது.
முறைப்படி பயன்படுத்தத் தெரியாதவர்கள் படும் அவஸ்த்தைகளும், இதுவே தான் வாழ்க்கை என்பதை தப்பாக உணர்ந்தவர்களுக்கும் இடையே உள்ளவர்கள் தான் அளவோடு பயன்படுத்தி வளமோடு இருப்பவர்கள். இந்த இடைப்பட்ட நபராகவே இதில் இருந்து வருகின்றேன்.
பெரும் பொறுப்புகளில் இருந்து கொண்டு நம் விருப்பம் சார்ந்த செயல்பாடுகள் என்று பட்டியலிட்டுக் கொண்டு அது நிறைவேறாத பட்சத்தில் சமூகத்தின் மீது, வாழும் வாழ்க்கையின் மீது, நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மேல் கோபப்பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை.
கடந்த ஐந்து வருடங்களில் ஏராளமான தோல்விகள் அது தந்த வலிகள். ஏராளமான ஏமாற்றங்கள் அதனோடு சேர்ந்து வந்த அவமானங்கள் என்று எல்லாவற்றையும் அனுபவித்துள்ளேன். சிறிது சிறிது என்னை மாற்றிக் கொண்டே வந்துள்ளேன். என் நடை,உடை,பாவனை, பேசும் விதம், உடல் மொழி என்று எல்லாவிதங்களிலும் கவனம் செலுத்தியுள்ளேன். முடிந்தவரையிலும் என்னைப் பற்றி அடுத்தவர்கள் சொல்லுகின்ற விமர்சனங்களின் மீது கவனம் செலுத்தியுள்ளேன். அடுத்தடுத்த நிலையை அடைய போராடியிருக்கின்றேன். அடைந்தும் உள்ளேன்.
ஆனால் ஒவ்வொன்றையும் விருப்பப்பட்டு செய்துள்ளேன். வாழ்கின்ற ஒவ்வொரு நாளையும், அது வெற்றியோ தோல்வியோ ரசனையோடு பார்க்க, வாழப் பழகியுள்ளேன். ஆற்ற முடியாத காயங்களோடு வாழ்பவர்களையும், உழைக்க முடியாதவர்கள் காட்டக்கூடிய பொறாமையையும், அடக்க முடியாத இச்சைகளுடன் இருப்பவர்களையும், என்ன தான் நெருக்கமாக பழகினாலும் கட்சி, மதம், சாதி ரீதியான கொள்கை வேறுபாடுகளை மனதில் வைத்துக் கொண்டு வன்மத்தோடு பார்ப்பவர்களையும் அமைதியாக கவனிக்கும் மனத்துணிவை பெற்றுள்ளேன்.
இதனை எழுத வந்த பிறகே நான் அதிகம் பெற்றுள்ளேன். இதன் காரணமாகவே இந்த எழுத்துலக பயணத்தை அதிகம் நேசிக்கின்றேன். கிடைக்க வேண்டிய அங்கீகாரம் என்பதனை எதிர்பார்க்காமல் நான் பார்க்கும் சமூகத்தை என் மொழியில் எழுதி வைத்து விட வேண்டும் என்பதை தீரா வெறி போல தீர்க்க வேண்டிய கடமை எனக் கருதி கடந்த ஐந்து வருடமாக எழுதி வந்துள்ளேன்.
இணையத்தில் செய்து கொண்டிருக்கின்ற "மார்க்கெட்டிங் யூக்தி"களின் மேல் கவனம் செலுத்தாமல் உழைப்பின் மேல் நம்பிக்கை வைத்து இந்த எழுத்துலக பயணத்திற்காக ஒவ்வொரு நாளின் இரவிலும் தூக்கத்தை துறந்து இஷ்டப்பட்டு உழைத்துள்ளேன். இணையம் தான் எனக்கு எழுதக் கற்றுத் தந்தது. இணையத்தில் அறிமுகமானவர்களே வழிகாட்டியாய் இருந்தார்கள். வழி நடத்தினார்கள். விமர்சித்தவர்கள் கற்றுத்தந்த பாடத்தின் மூலம் அடுத்தடுத்து நகர்ந்து வந்துள்ளேன்.
இணையத்திற்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்று நான்கு மின் நூல்களை அளித்துள்ளேன். இதற்கு வாய்ப்பளித்த திரு. சீனிவாசன் மற்றும் அவருக்கும் உறுதுணையாக இருக்கும் திரு ரவி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
கீழே குறிப்பிட்டுள்ள நான்கு மின் நூல்களும் இன்று வரையிலும் 35,000 பேர்களுக்குச் சென்று சேர்ந்துள்ளது.
தேவியர் இல்லம் வலைபதிவை படிக்கப்பட்ட பக்கங்களின் எண்ணிக்கை எட்டு லட்சம். வந்த விமர்சனங்களின் எண்ணிக்கை 11,000.
சென்ற வருடம் 4தமிழ்மீடியா படைப்பாய்வகம் மூலம் எனது முதல் புத்தகமான டாலர் நகரம் என்ற புத்தகம் வெளிவந்தது. விரைவில் என் அடுத்த புத்தகத்தை மற்றொரு பதிப்பகம் கொண்டு வருவதாக உறுதியளித்துள்ளனர். அது குறித்து விரைவில் அறிவிக்கின்றேன்.
கடந்து போன ஐந்து வருடங்களில் நான் எழுதாமல் இருந்த இடைவெளியை கணக்கிட்டுப் பார்த்தால் முழுமையாக நான்கு வருடங்கள் இணையத்தில் செயல்பட்டுள்ளேன். இதுவரையிலும் இரண்டு தளங்களின் வாயிலாக எழுதப்பட்ட 664 பதிவுகளில் 90 சதவிகிதத்தை முறைப்படி ஆவணமாக்கி விட முடிந்துள்ளது.
ஏனைய பிற சமூக வலைதளங்கள்,மற்றும் என் பதிவின் வாயிலாகவும் என்னை தொடர்ந்து கொண்டிருக்கும் 6500 க்கும் மேற்பட்ட நட்புகளுக்கும், என் எழுத்துப் பயணத்தில் பல விதங்களிலும் எனக்கு உதவிய எண்ணிக்கையில் அடக்க முடியாத நட்புகளுக்கும் இந்த இடத்தில் என் மனமார்ந்த நன்றியுடன் என் சிரம் தாழ்ந்த வணக்கத்தையும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்பதனையும் இங்கே எழுதி வைத்து விடுகின்றேன்.
03.07.2014
03.07.2014
தொடர்புடைய பதிவுகள்
கடந்து வந்த பாதை
வணக்கம்
ReplyDeleteஐயா.
உண்மைதன்
இலட்சிய வேட்கை உங்களின் தாகம்.... அந்த தாகம் ஒரு நாள் நிறைவடையும் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி
Deleteஐந்து ஆண்டுகள்!
ReplyDeleteநாட்டையே புறட்டிபோடக்கூடிய கால அளவு இது.
இதில் நீங்கள் நின்று, நடந்து, ஓடி சாதித்துள்ளீர்கள்!
உங்களின் இருப்பை மிகச்சிறப்பாகவே பதித்திருக்கிறீர்கள்!
இன்னும் பல உச்சத்தை எட்ட என் உளமார்ந்த வாழ்த்துகள்!
நெகிழ வைத்த விமர்சனம். நன்றி நண்பரே.
Deleteவாழ்த்துக்கள். ஆறாம் ஆண்டிலும் எழுதிக்குவிக்க அன்பான வேண்டுகோளையும் விடுக்கிறேன்.
ReplyDeleteநன்றி
Deleteஆ! ஐந்து ஆண்டுகள்! முதல்வரும், பிரதமரும் கற்காத பல விஷயங்களை நீங்கள் கற்றது பெற்றது மட்டுமல்ல அதை இங்கு பதிந்து எங்களயும் கற்கவும், பெறவும் வைத்துள்ளீர்கள்! இந்தப் பதிவே பல விஷயங்களைப் பகிர்கின்றது! நல்ல ஒரு பதிவு! தங்கள் கற்பதையும், பெறுவதையும் இங்கு தங்கள் அழகிய எழுத்துக்கள் மூலம் பல ஆண்டுகள் பதிந்து நாங்களும் பெறுவதற்கு, எங்களது இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅழகான அங்கீகாரம் கலந்த விமர்சனத்திற்கு மிக்க நன்றி.
Deleteவாழ்த்துக்கள் சார்! தொடர்ந்து பயணிப்போம்! நன்றி!
ReplyDeleteநன்றி
Deleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி
Deleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஐந்து ஆண்டுகளாக சமூகப் பார்வையுடன் எழுதி வரும் தங்கள்பணி போற்றுதற்குரியது. பல அரிய தகவல்களையும் ஏழை எளிய மக்களின் வாழக்கைப் போராட்டங்களையும் பதிவு செய்திருகிறீர்கள்.. தங்கள் பணி தொடரட்டும். உங்கள் நண்பராக இருப்பதில் பெருமைப் படுகிறேன்.
ReplyDeleteஉங்கள் அக்கறைக்கு நன்றி முரளி. இந்த அங்கீகாரமே போதுமானது.
Deleteவாழ்த்துக்கள் ஐயா
ReplyDeleteநன்றி ஆசிரியரே
Deleteநாம் விழித்திருந்தாலும், கண்டு கொள்ளாமல் கடந்து போனாலும் தமிழ் இணையம் அதன் சுறுசுறுப்பை இழந்து விடுவதில்லை. நாளுக்கு நாள் இதன் வேகம் கூடிக் கொண்டேதான் இருக்கின்றது. வாழ்த்துக்கள்
ReplyDeleteவருகைக்கு நன்றி சிவா
Delete/// ஒவ்வொன்றையும் விருப்பப்பட்டு செய்துள்ளேன்...///
ReplyDeleteஇது தான் வேண்டும்...!
நன்றி தனபாலன்
Deleteஐந்தில் கற்றதும் பெற்றதும்
ReplyDelete= திரு ஜோதிஜி அருமையான சிந்தனையாளர், சிந்தனைகளை எழுத்திற்கு கொண்டு வரும் வரம் பெற்றவர்.
வாழ்த்துகள் திரு ஜோதிஜி. நிறைய எழுதுங்கள்.
எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
உங்களது இந்த ஐந்து ஆண்டுகள் எழுத்துப்பயணத்திலிருந்து நிறையவே கற்றுக் கொண்டிருக்கிறேன். வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள். காத்திருக்கிறேன்...
ReplyDeleteஉங்கள் விமர்சனம் எனக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகின்றேன். நன்றி பாண்டியன்.
Deleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி கணேசன்
Deleteஐந்தாண்டுகள்...
ReplyDeleteஅருமையான பகிர்வுகள்...
வாழ்த்துக்கள் அண்ணா...
நன்றி குமார்
DeleteCongrats br
ReplyDeleteஇணையத்திற்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்று நான்கு மின் நூல்களை அளித்துள்ளேன். இதற்கு வாய்ப்பளித்த திரு. சீனிவாசன் மற்றும் அவருக்கும் உறுதுணையாக இருக்கும் திரு ரவி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
ReplyDeleteகீழே குறிப்பிட்டுள்ள நான்கு மின் நூல்களும் இன்று வரையிலும் 35,000 பேர்களுக்குச் சென்று சேர்ந்துள்ளது.
ஈழம்- வந்தார்கள் வென்றார்கள் வெள்ளை அடிமைகள்
தமிழர் தேசம் கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு = வாழ்த்த்துகள் திரு ஜோதிஜி. அருமையான கடமை ஆற்றுகிறீர்கள்.
எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
தொடர் வாசிப்புக்கு உங்கள் தனிப்பட்ட மின் அஞ்சலுக்கும் நன்றி அய்யா
Deleteசெய்கின்ற எந்தச் செயலையும் முறையான அர்ப்பணிப்புடன் செய்தால் மட்டுமே நீங்கள் எட்டியிருக்கும் இந்த மனநிலையை எட்ட முடியும். இணையத்தையும் அதன் வாசகர்களையும் (நல்ல வாசகர்கள்) எந்த அளவு மதிக்கிறீர்கள் என்பதையும் உங்கள் எழுத்து காட்டுகிறது. உங்கள் எழுத்தில் தென்படும் சத்தியம்தான் உங்களை வழி நடத்துகிறது என்பதையும் புரிந்துகொள்ளமுடிகிறது. மிகுந்த அர்ப்பணிப்புடன் தொடரும் உங்கள் பணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇதனை எனக்கு கிடைத்த பெரும் ஆசிர்வாதமாக எடுத்துக் கொள்கின்றேன். உங்கள் தொடர்பு, உங்கள் மனமாச்சரியம் இல்லாத அக்கறை, கருத்து வேறுபாடுகளை இயல்பாக எடுத்துக் கொள்ளும் பாங்கு போன்றவற்றை நான் இன்னமும் பயிற்சி எடுத்து கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலையில் தான் உள்ளேன். ஏறக்குறைய உங்கள் அனுபவம் (எழுத்துலகில்) 30 வருடங்கள் இருக்கும் என்றே நினைக்கின்றேன். நிச்சயம் உங்களோடு இணைத்து நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஆனாலும் உங்களின் அக்கறை, விமர்சனம் பல முறை ஆச்சரியப்படுத்தியுள்ளது. மிக்க நன்றி அமுதவன்.
Deleteநேற்று அபிலாஷ் சந்திரனின் "ஹெமிங்வேயின் தலைப்புகள்" (http://www.thiruttusavi.blogspot.com/2014/07/blog-post_2.html) என்ற பதிவை வாசித்தேன்.அதில் "The Sun also Rises" பற்றி எழுதியிருந்த்தார். உங்களின் இந்த பதிவும் கிட்டத்தட்ட அதே போன்றதொரு சிந்தனை.
ReplyDeleteநானும் படித்தேன். நன்றி.
Deleteவாழ்த்துக்கள் ஜோதிஜி. உங்கள் வளர்ச்சியை துவக்கத்தில் இருந்து பார்த்தவன் என்கிற முறையிலும், நீங்கள் துவக்கத்தில் எழுதிய கட்டுரைகளுக்கு கருத்துக் கூறியவன் என்கிற முறையிலும் நீங்கள் கூறியுள்ளதை உணர முடிகிறது. பாராட்டுகள் ஏற்கனவே மேலே அதிகம் உள்ளன.. நான் விமர்சனமாக கூறுகிறேன்.
ReplyDeleteசில கட்டுரைகளில் நிறைய கருத்துக்களை கூறுகிறீர்கள் படிக்க சுவாரசியமாகவும் இருக்கிறது ஆனால், என்ன கூறி முடிக்கிறீர்கள் என்பதில் தான் முழுமை இருக்கிறது. சில கட்டுரைகளில் இறுதியாக நீங்கள் என்ன கூற வருகிறீர்கள் என்பது எனக்கு புரிவதில்லை. சுருக்கமாக, மையக் கருத்தில் இருந்து விலகாமல் ஒரு கட்டுரையை முடிக்க வேண்டும் என்று கூறுகிறேன்.
பாராட்டுகளை விட விமர்சனங்களே ஒருவரை இன்னும் மேம்படுத்தும். இதையே நானும் எதிர்பார்க்கிறேன் ஆனால் பாருங்க எனக்கு அந்த அளவு கிடைப்பதில்லை. எனவே அது போன்ற கருத்துகளை ஊக்குவிப்பதில்லை. எனவே இதை நான் உங்களுக்கு கூறி விட்டேன் :-) .
மேலும் பல சிறப்புகளை பெற வாழ்த்துகிறேன். நீங்கள் எங்கள் ஊருக்கு பக்கத்து ஊர் என்பதில் எனக்கு கூடுதல் பெருமை.
நானும் விமர்சனங்களைத்தான் அதிகம் எதிர்பார்க்கின்றேன் கிரி. மக்கள் சில வார்த்தைகளில் முடித்து விடுகின்றார்கள். சிலர் மட்டுமே தெளிவாக செய்கின்றார்கள். குறிப்பாக அப்பாதுரை போன்றவர்கள். அது போன்ற விமர்சனங்கள் தான் என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த உதவுகின்றது.
Deleteமேலே "வாழ்த்துகள்" என்று கூறி முடித்துக் கொண்டவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
ReplyDeleteஜோதிஜி மிகச் சிரமப்பட்டு ஒவ்வொரு கட்டுரையையும் எழுதுகிறார். நீங்களும் அதைப் படிக்கிறீர்கள். இது போன்ற முக்கியத் தருணங்களில் "வாழ்த்துகள்" என்ற ஒரு வார்த்தையோடு அவரது உழைப்பை முடித்துக் கொள்ளாமல் அவரது நிறை குறைகளை பாராட்டி விமர்சனமாக கூறுங்கள். இதுவே எழுதுவருக்கு நீங்கள் தரும் மரியாதை. இது ஜோதிஜி என்றில்லை நீங்கள் படிக்கும் எவருக்கும் பொருந்தும்.
நானும் பலமுறை இப்படி யோசித்துள்ளேன். பொதுவாக அனைவருக்கும் என் சார்பாக சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி கிரி
Deleteஆறாவது வருடத்தில் நுழைவதற்கு முதலில் வாழ்த்துக்கள். நீங்கள் கற்றது என்னென்ன என்று நிறைய அலசி ஆராய்ந்து எழுதியிருக்கிறீர்கள். பெரிய நிறுவனத்தில் பொறுப்பான பணியில் இருந்து கொண்டு எழுத்துலகிலும் இத்தனை சாதனை செய்திருப்பது போற்றப்பட வேண்டியது.
ReplyDeleteதிரு கிரி அவர்கள் சொன்னதையே நானும் வழிமொழிகிறேன். கூறும் கருத்துக்கள் நன்றாக இருந்தாலும் இறுதியில் ஏதோ விட்டுப்போனது போல சில கட்டுரைகள் அமைந்திருக்கின்றன. பிரசுரிப்பதற்கு முன் எடிட்டிங் கொஞ்சம் கவனமாகச் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. இதை முன்பே நான் கூறியிருக்கிறேன். இந்தக் குறையை நிச்சயம் உங்களால் நிறையாகச் செய்ய முடியும்.
நிறைகள் நிறையட்டும். மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் புதிய புத்தகத்தை படித்து கருத்துரை கூற ஆவலாக இருக்கிறேன்.
அன்புடன்,
ரஞ்சனி
நீங்கள் சுட்டிக்காட்டியுள்ள குறையை கிரி சொன்ன விமர்சனத்தை மனதில்கொண்டு இனி என் அடுத்த பயணத்தை தெளிவாக திட்டமிடுகின்றேன். உங்கள் இருவரின் அக்கறைக்கும் மிக்க நன்றி.
Deleteஉழைப்பின் நிறைவு அனுபவித்தால் மட்டுமே புரியும் என்பதுண்டு. உங்கள் உழைப்பில் நான் பல நேரம் நிறைவு பெற்றதும் ஒரு அனுபவம்..
ReplyDeleteநம்மை நேரடியாக பாதிக்கும் ஒவ்வொரு நிகழ்வும் அனுபவம் நேரடியாக பாதிக்காத வரையில் செய்தி என்றிருப்பதன் வசதி காரணமாகவே நமக்குள் சமூக அக்கறை என்ற உணர்வு இருக்கிறது. அத்தனை செய்தியும் அனுபவமானால் வாழ்க்கை வெறுத்த்துவிடும். அத்தனை அனுபவமும் செய்தியாகவே இருந்தால் வாழ்க்கைக்குப் பொருளே இல்லாது போய்விடும் இல்லையா? எங்கோ நடக்கும் பாலியல் வன்முறைக்கு செய்தியாகவேனும் சிறிது கண்ணீரும் ஆத்திரமும் வெளிப்படுத்துவதிலும் மனிதம் துளிர்க்கிறது ஜோதிஜி. அதுவும் ஒரு வகையில் பிறவியின் பெருமையே.
தொடர்ந்து எழுதும் முனைப்பு குறையாதிருக்க வாழ்த்துகிறேன்.
இந்த வருடத்தில் பல விமர்சனங்கள் என்னை ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதில் இந்த விமர்சன்ம் மிக முக்கியமானது அப்பாதுரை. பல முறை படித்து வியந்து போனேன். மிக்க நன்றி
Deleteஆறாம் ஆண்டு வலை உலக உலாவுக்கு வாழ்த்துகள்..
ReplyDeleteநன்றி இராஜராஜேஸ்வரி.
Delete