அஸ்திவாரம்

Tuesday, July 01, 2014

பாவம் அப்பாக்கள்

வாசித்து முடிக்க முடியாத பெரிய புத்தகத்தைப் போல, வாசித்தாலும் புரிந்து கொள்ள முடியாத எழுத்து நடையைப் போலத்தான் அப்பாக்கள் இருக்கின்றார்கள். 

கிராமத்து, நகர்புறங்களில் வாழும் அப்பாக்கள் என்று வகையாகப் பிரிக்கலாமே தவிரக் காலம் காலமாக அப்பாக்களுக்கும் மகன்களுக்கும் உண்டான 'சீனப்பெருஞ்சுவர்' இன்று வரையிலும் உடைந்த பாடில்லை. சாதாரண மனிதர்கள் முதல் வாழ்வில் சாதித்த சாதனையாளர்கள் வரைக்கும் தங்களின் வாழ்க்கை உயர்வுக்குக் காரணமென அவரவர் அம்மாக்களைத்தான் சுட்டிக் காட்டுகின்றார்கள். விதையாக இருக்கும் அப்பாக்கள் காலப்போக்கில் விரும்பப்படாதவர்களின் பட்டியலில் போய்ச் சேர்ந்து விடுகின்றார்கள். 

நான் எழுதத் தொடங்கிய போது அப்பாவைப்பற்றித்தான் எழுதினேன். அது சரியா? தவறா? என்று கூடத் தெரியாமல் அவரால் உருவாக்கப்பட்ட தாக்கத்தை எழுத்தாக மாற்றி என் எழுத்துப் பயணத்தைத் தொடங்கினேன். எழுதி முடித்த போது நம்பிக்கை வந்தது. எழுதுவற்கு நமக்கு விசயம் இருக்கிறது என்ற எண்ணம் உருவானது. தொடர்ந்து எழுத முடிந்தது. உள்ளுற இருக்கும் ஓராயிரம் அனுபவங்களை எழுத்தாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை வந்தது. 

நம்மால் முடியுமா? என்பதன் தொடர்ச்சி தான் தவறாக வந்து விடுமோ? என்ற எண்ணம். நம் தைரியமே முதல் அடியை எடுத்து வைக்க உதவும். உள்ளுற உழன்று கொண்டிருக்கும் வரையிலும் எந்தக் கருத்துக்களும் சிந்தனைகளாக மாறாது.  நம் திறமைகளும் வெளியே வருவதில்லை. 

நமக்கு இப்படி ஒரு திறமை உண்டா? என்பதைக்கூடத் தெரிந்து கொள்ள முடியாத அளவுக்குத்தான் நம் அன்றாட நெருக்கடிகள் பலரையும் அல்லாட வைத்துக் கொண்டிருக்கிறது. நாம் உணரவே வாய்ப்பில்லாத திறமைகளை நாம் வாழ்க்கையில் உருவாகும் நெருக்கடியான சந்தர்ப்பங்கள் காட்டிக் கொடுத்து விடும். நம்மால் இது முடியுமா? என்ற யோசனை மாறி நாம் இத்தனை நாளும் உணராமல் இருந்துள்ளோமே? என்று வெட்கபட வைக்கும்  

அப்படித்தான் இந்த எழுத்துப் பயணம் உருவானது. 

முழுமையான மனிதர்கள் என்று இங்கு எவருமே இல்லை. எல்லோருமே ஏதோவொருவகையில் அரைகுறையாகத்தான் இருக்கின்றோம். ஆனால் நாம் அதை நாம் ஏற்றுக் கொள்ள விரும்புவதில்லை. அவரவர் சாதனைகளின் அளவுகோல் வேறானதாக இருக்குமே தவிர அதுவும் ஒரு சாதனை தான் என்பதனை உணர்ந்தவர்களின் எண்ணிக்கை சொற்பமே. 

வாழ்வில் சாதித்தவர்களிடம் உள்ள சல்லித்தனமான புத்திகளும், வாழ்க்கை முழுக்கச் சங்கடங்களுடன் வாழ்ந்தாலும் தரமாக வாழ்க்கை நடத்துபவர்களும் என நம்மைச்சுற்றியுள்ள கூட்டுக்கலவை மனிதர்கள் மூலமே நாம் பலவற்றை கற்றுக் கொள்ள முடிகின்றது. நாம் அதனை எந்த அளவுக்கு உணர்ந்துள்ளோம்? எப்படி உள்வாங்கியுள்ளோம்? என்பதில் தான் நம் வளர்ச்சியும் அடங்கியுள்ளது. 

ஒரு தனி மனிதனின் குணாதிசியங்களில் பெற்றோர்களின் அறிவுரையும் ஆலோசனைகளும் கால் பங்கு தான் ஆதிக்கம் செலுத்துகின்றது. ஒருவன் வளரும் சூழ்நிலை தான் அவனை உருவாக்குகின்றது. காலம் அவனை உருவமாக்கின்றது. 

தவறான பாதைகளில் சென்றால் தான் சீக்கிரம் முன்னேற முடியும்? என்று எந்த பெற்றோராவது தங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து வளர்க்கின்றார்களா? எந்த ஊரில் வாழ்ந்தாலும், குழந்தைகளுக்குக் காலம் காலமாகப் புராண இதிகாசங்களையும், நன்னெறி நூல்களில் உள்ள உபதேச கருத்துக்களையும் தானே பெற்றோர்களும் ஆசிரியர்களும் சொல்லிக் கொடுக்கின்றார்கள். 

நாகரிகம் வளர்ந்துள்ளது என்று நம்பப்படும் இந்தக் காலத்தில் வக்கிர மனிதர்களின் எண்ணிக்கையும் அதிகமாகத் தானே உள்ளது. இங்குத் தான் புரிதலில், உணர்தலில் உள்ள தவறுகளும் சேர்ந்து கூட்டுக்கலவையாகி மனித எண்ணங்களாக மாறிவிடுகின்றது. 

இங்கே எழுத்தாளர்களுக்குப் பஞ்சமில்லை. எழுதியவர்களின் எண்ணிக்கையை விட அதை வாசித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகம். ஆனாலும் எந்த மாறுதல்களும் உடனடியாக உருவாகவில்லையே? 

மேம்போக்கான எழுத்தை தவமாக நினைத்து எழுதுபவர்கள் எல்லாச் சமயங்களிலும் கொண்டாட்ட மனோநிலையை உருவாக்குபவர்களாக இருக்கின்றார்கள். அதையே கடைசி வரையிலும் கொண்டாடிக் கொண்டிருப்பவர்கள் தாங்கள் வாழ்வதே சரியான வாழ்க்கை என்று கருதிக் கொள்பவர்களாகவும் இருக்கின்றார்கள். அதுவே மொத்த சமூகத்தின் எண்ணமாக மாறும் போது புகையால், குப்பையால் சூழப்பட்ட எண்ணமாக மாறிவிடுகின்றது.  

எழுதுவது எப்படி? என்று யோசிப்பவர்களும், தொடர்ந்து எழுதுவது எப்படி? என்று மற்றவர்களிடம் ஆலோசனை கேட்பவர்களும் முதலில் அவர்களின் கடந்த காலத்தைப் பற்றி யோசித்தாலே போதுமானது. வாழ்ந்த வாழ்க்கை, பெற்ற அவமானங்கள், கற்ற பாடங்கள், கடந்து வந்த துயரங்கள் போன்றவற்றை யோசித்தாலே பத்து "பொன்னியின் செல்வன்" கதை போல நமக்குக் கிடைக்கும். 

ஆனால் நாம் முகமூடி அணிந்து கொண்டு புது அவதாரம் எடுக்கவே விரும்புகின்றோம். புரட்சியாளராக, புதுமை விரும்பியாக நிஜவாழ்க்கையில் சாதிக்க முடியாதவற்றை எழுத்து வழியே அடைய விரும்புகின்றோம். உள்ளே இருக்கும் மனப்பிறழ்வை இறக்கி வைத்து இறுதியில் அவற்றை ரசித்துப் பழகிடவும் மாறிவிடுகின்றோம். 

38 comments:

  1. சிந்திப்பதில் இருக்கும் ஓரளவு தெளிவை எழுத்தில் கொண்டுவர இன்னும் முயன்றுகொண்டு தான் இருக்கிறேன். நாம் எல்லோரும் அரை குறை மணிதர்கள் தான்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி குமார். சிந்திக்கத் தொடங்கி விட்டால் நீங்க இரண்டு பிரச்சனைகளை சந்தித்தே ஆக வேண்டும். மற்றவர்கள் பார்வையில் நீங்க வித்தியாசமாக தெரியத் தொடங்குவீர்கள். பல சமயம் பலவற்றோடு ஒத்துப் போகாத நிலை உருவாகும். நீங்கள் புறக்கணிக்கப்பட வேண்டியவர் என்ற எண்ணம் மற்றவர் மனதில் உருவாகக்கூடும். இதையும் தாண்டி வர வேண்டும். அதன் பிறகே எழுத கற்று இருந்தால் உங்களின் எண்ணங்கள் வீர்யமாக வெளிப்படும். முயற்சித்துப் பாருங்களேன்.

      Delete
    2. நீங்கள் குறிப்பிட்டிருப்பது உண்மைதான், சிலரிடம் நமது சிந்தனைகளை பேச்சால் தெரிவிக்க முயற்சி செய்யும் போதே, "ம் நீங்க நல்லா பேசுறீங்க" என்று நம்மிடம் விடைபெற்று, பிறரிடம் சென்று அவதூறு பேசுவது பெரும்பாலும் தொடர்கிறது . அதுபோக இங்கே தனிமனித ஒழுக்கம் என்பதும் கெட்ட வார்த்தையாக மாறிக்கொண்டிருக்கிறது. இங்கே நான் பார்க்கும் அவலங்களை நினைத்து மனங்குருகும் போது எழுதிய சில வரிகள் உங்கள் வாசிப்புக்கு..

      ""இன்றைய தாய்மார்கள் பெற்றெடுத்து
      சமூகத்திற்கு கொடுக்க வேண்டியது
      மனிதமுள்ள மனிதனையல்ல
      ஆட்டுத்தோல் போர்த்திய
      ஓநாய் பொறுக்கிகளைத் தான் போல....""

      Delete
    3. மொத்தமாக வெறுக்க வேண்டிய அவசியமில்லை பாண்டியன். நல்ல சிந்தனையுள்ள மனிதர்கள் அடைய முடியாத வாய்ப்புகளையும், கெட்ட சிந்தனையுள்ள மனிதர்கள் (தனிப்பட்ட) முறையில் அவஸ்த்தைப்பட்டுக் கொண்டிருக்கும் வாழ்க்கையும் சேர்ந்தது தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த சமூக வாழ்க்கை. கரம் சிரம் புறம் என்பதனை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் பாண்டியன்.

      Delete
  2. //வாழ்ந்த வாழ்க்கை, பெற்ற அவமானங்கள், கற்ற பாடங்கள், கடந்து வந்த துயரங்கள் போன்றவற்றை யோசித்தாலே பத்து "பொன்னியின் செல்வன்" கதை போல நமக்குக் கிடைக்கும். //
    உண்மையுங்க, 50 ஆண்டுகளுக்கு முன் என் அக்கா முறையானவர், இதையே மிக எளிமையாகக் கூறினார். அன்றைய வசதியில் திரைப்படம் அவர்கட்டு கனவு, யாரோ ஒரு படத்தில் பெயரைச் சொல்லி அதைப் பார்க்கவில்லையா? எனக் கேட்ட போது, "என் வீட்டிலேயே 1000 படமோடுது"- அதைவிடவா?
    அப்பா பற்றிய கூற்றுக்கள் உண்மை. என் ""சீனப் பெருஞ்சுவரை" இடித்த போது, அப்பா தன் வாழ்க்கையை முடித்து விட்டார்.
    அவரும் தவமாய்த் தவமிருந்ததும் இப்போ புரிகிறது. உங்கள் பதிவு அப்பா பற்றிய நினைவைத் தூண்டி,
    அவரைப் புரியவில்லையே என கண்பனித்தது.

    ReplyDelete
    Replies
    1. இன்னும் இரண்டு நாளில் பதிவுலகிற்கு வந்து முழுமையாக ஐந்தாண்டுகள் முடியப்போகின்றது யோகன். மலரும் நினைவாக எழுதிப் பார்த்தேன். ஒவ்வொரு முறையும் ஆழ்ந்த வாசிப்பு அனுபவம் உள்ள உங்களைப் போன்ற பலரும் என் எழுத்துக்கு வாசகராக இருப்பதும், இப்படித்தான் எழுத வேண்டும் என்ற வெகுஜன எழுத்தில் இருந்து விலகி நடக்கவும் உங்களைப் போன்ற பலரும் காரணமாக இருக்கின்றார்கள். உங்கள் விமர்சனம் அதிக மகிழ்ச்சியைத் தந்தது யோகன். நன்றி.

      Delete

  3. சாதாரண மனிதர்கள் முதல் வாழ்வில் சாதித்த சாதனையாளர்கள் வரைக்கும் தங்களின் வாழ்க்கை உயர்வுக்குக் காரணமென அவரவர் அம்மாக்களைத்தான் சுட்டிக் காட்டுகின்றார்கள். விதையாக இருக்கும் அப்பாக்கள் காலப்போக்கில் விரும்பப்படாதவர்களின் பட்டியலில் போய்ச் சேர்ந்து விடுகின்றார்கள்.
    = அருமை திரு ஜோதிஜி. பாவம் அப்பாக்கள் = எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி.

    ReplyDelete
  4. முதல் இரண்டு பேராக்கள் சற்று மாறுபட்டு இலக்கியத் தன்மையுடன் மிளிர்கறது. போகப் போக தங்களுக்கே உரித்தான சமூக உணர்வு மேலோங்கி உள்ளது .
    அம்மாக்களின் பின்னால் சேர்க்கப் படும் பூச்சியங்களே அப்பாக்கள்.
    சிறப்பான சிந்தனை நேர்த்தியான பதிவு

    ReplyDelete
    Replies
    1. எளிதாக பூஜ்யங்கள் என்று சொல்லிட்டீங்க முரளி. ராஜ்ஜியங்களை ஆளும் அம்மாக்களை தந்தவரும் அப்பா தானே?

      Delete
    2. பின்னால் சேர்க்கப் படும்பூச்சியங்களால்தான் எண்ணின் மதிப்பே உயர்கிறது
      அதையேமறைமுகமாக குறிப்பிட்டேன்.

      Delete
  5. அப்பாக்களை பற்றியும் எழுத்தை பற்றியும் நல்லதொரு அலசல்! உண்மைதான் அப்பாக்களை புரிந்து கொள்ள நினைக்கும் போது நாம் அப்பாக்கள் ஆகிவிடுகிறோம்!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் விமர்சனத்தைப் படித்ததும் எப்பொழுதோ படித்த அப்பா என்ற கவிதை நினைவுக்கு வருகின்றது சுரேஷ். நன்றி.

      Delete
  6. இதைப் படிக்கும் ஆண்கள் யோசிக்கும்போது அப்பாக்களாக யோசிக்கிறார்களா, மகன்களாக யோசிக்கிறார்களா? ஏனோ நான் மகனாகத்தான் யோசித்தேன்! மற்றவர்கள் எப்படி?

    ReplyDelete
    Replies
    1. நானும் மகனாகத்தான் யோசித்து எழுதினேன் ராம். மகள்களிடம் திட்டு வாங்காத நாள் வரும் போது தான் முழுமையான அப்பாவாக இருக்க முடியும் என்றே நம்புகின்றேன்.

      Delete
  7. அப்பாக்கள் பற்றியும் அழகான ஒரு எழுத்து! எழுதுவது எப்படி? என்று யோசிப்பவர்களும், தொடர்ந்து எழுதுவது எப்படி? என்று மற்றவர்களிடம் ஆலோசனை கேட்பவர்களும் முதலில் அவர்களின் கடந்த காலத்தைப் பற்றி யோசித்தாலே போதுமானது. வாழ்ந்த வாழ்க்கை, பெற்ற அவமானங்கள், கற்ற பாடங்கள், கடந்து வந்த துயரங்கள் போன்றவற்றை யோசித்தாலே பத்து "பொன்னியின் செல்வன்" கதை போல நமக்குக் கிடைக்கும்.// எழுதுவது பற்றி தாங்கள் சொல்லியுள்ள இந்தக் கருத்து மிக மிக சரியே!

    நல்ல ஒரு பதிவு!

    ReplyDelete
  8. தேவியர்களின் ஒரு நல்ல அப்பாவாக இந்த எழுத்தை உணர்ந்தோம்!

    ReplyDelete
    Replies
    1. வந்து கேட்டுப் பாருங்க. பொளந்து காட்டுவாங்க. மகள்களை திருப்தி படுத்துவது அத்தனை எளிது இல்லைங்கோ. நான் வெளியே போராட்டக்காரனாகவும் உள்ளே மறுகிக் கொண்டிருப்பவனாகவும் தான் வாழ முடிகின்றது. தலைமுறை இடைவெளி என்பது எத்தனை மூட்டை சிமெண்ட் போட்டு கொட்டினாலும் நிரப்ப முடியாத ஓட்டை அது.

      Delete
  9. பெரும்பான்மையான அப்பாக்கள் ஏன் டம்மி பீஸாக இருக்கின்றார்கள் என்பது புரியாத புதிர்! அவர்களுக்கு வாய்ஸ் இல்லையோ? அப்பாக்களுக்காக வாய்ஸ் கொடுத்த உங்களுக்கு ஒரு ஷொட்டு....

    ReplyDelete
    Replies
    1. அப்பாக்கள் தொடக்கத்தில் தங்கள் கடமைகளை சரியான முறையில் செய்து விட மறந்து விடுகின்றார்கள். பிறகென்ன? காலம் முழுக்க டம்மி தான் மம்மி முன்னால்.

      Delete
  10. எல்லா வீட்டிலுமே அப்பாக்களைவிட அம்மாக்களே முன்னிறுத்தப்படுகிறார்கள்...
    அப்பாக்களுக்காக நீங்கள் கொடுத்திருக்கும் குரல் அருமை அண்ணா...
    நானும் இன்னும் அரைகுறை எழுத்தாளந்தான் அண்ணா...

    ReplyDelete
    Replies
    1. நீங்க மட்டுமல்ல குமார். 30 வருடமாக எழுதிக் கொண்டிருக்கும் எந்த எழுத்தாளரும் அரைகுறை எழுத்தாளர் தான் குமார். வாழ்வியல் தத்துவத்தை வாழும் வாழ்க்கை போல எழுதுவதும், ஒரு எழுத்தாளர் எழுதிய எழுத்து அடுத்தவரை கவர்ந்து விடுவதும் அத்தனை சுலபம் இல்லைங்கோ.

      Delete
  11. ***முழுமையான மனிதர்கள் என்று இங்கு எவருமே இல்லை. எல்லோருமே ஏதோவொருவகையில் அரைகுறையாகத்தான் இருக்கின்றோம். ஆனால் நாம் அதை நாம் ஏற்றுக் கொள்ள விரும்புவதில்லை. ***

    ஏற்றுக்கொள்வதில் என்ன அவ்வளவு கஷ்டம்??? என்று எனக்கு விளங்கவில்லை!

    தான் என்னும் அகந்தை தலைதூக்கும்போது ஒரு சில அரைவேக்காட்டு எழுத்தாளர்கள்தாம் இதுபோல் சிறுபிள்ளைத்தனமாக "தானும் அரைகொறைதான்" என்கிற உண்மையை ஏற்றுக்கொள்ள மறுப்பது. அவர்களின் வாசகர்கள்தான் அவர்களை இன்னும் ஏற்றிவிட்டு இவர்கள் என்னவோ "தெய்வப்பிறவிகள்" என்பதுபோல் ஒரு மாயையை உருவாக்கி இவர்களை இன்னும் முட்டாளக்கி ஊர் சிரிக்க வைப்பது!

    ReplyDelete
    Replies
    1. காலம் என்பது சமரசம் செய்து கொள்ளாத தரக்கட்டுப்பாட்டு அதிகாரி போலத்தான் வருண். குப்பைகள் மேலே வரும். ஆனால் நீண்ட காலம் நின்று விடாது. எங்குமே தங்கி விடாது. நாம் தான் தவறாக புரிந்து கொள்கின்றோம்.

      Delete
  12. ***தவறான பாதைகளில் சென்றால் தான் சீக்கிரம் முன்னேற முடியும்? என்று எந்த பெற்றோராவது தங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து வளர்க்கின்றார்களா?***

    எல்லாப் பெற்றோர்களும் குழந்தைகள் திருடுவது பொய் சொல்லுவது போன்ற தவறுகளை செய்யும்போது அவர்களை கண்டித்து தண்டித்து சரி செய்வதில்லை. பெற்றோர்கள் பலவகை. ஒரு வேளை அவர்களுக்கு அவர்கள் பெற்றோர்கள் இதை சொல்லிக்கொடுக்கவில்லையோ என்னவோ, தெரியவில்லை!

    ReplyDelete
    Replies
    1. கிராமத்து வாழ்க்கை வாழ்ந்த ஒவ்வொரு குழந்தைகளின் ஆழ் மனதில் அழிக்கவே முடியாத சில நல்ல பழக்கங்கள் கடைசி வரையிலும் இருக்கத்தான் செய்யும். சில சந்தர்ப்ப சூழ்நிலையில் நம்மால் அடையாளம் காண முடியும்.

      Delete
  13. அப்பாவைப் பற்றிய கவிதை
    http://naveenprakash.blogspot.in/2008/05/blog-post_20.html

    ReplyDelete
    Replies
    1. படித்தேன் சீனிவாசன். நன்றி.

      Delete
  14. ஐயா, இன்றைய குழந்தைகள் அதைச் செய், இதைச் செய்யாதே என்று கூறுகின்ற அப்பாக்களை விரும்புவதில்லை. பொதுவாக இன்றைய குழந்தைகளுக்கு அறிவுரைகள் கூறுபவர்களையே பிடிப்பதில்லை. இன்றைய நமது கல்விச் சூழல் படிக்கவும், மதிப்பெண் பெறவும் மட்டுமே கற்றுக் கொடுக்கின்றது,
    ///வாழ்ந்த வாழ்க்கை, பெற்ற அவமானங்கள், கற்ற பாடங்கள், கடந்து வந்த துயரங்கள் போன்றவற்றை யோசித்தாலே பத்து "பொன்னியின் செல்வன்" கதை போல நமக்குக் கிடைக்கும்.//
    மிகவும் சரியான வார்த்தைகள் ஐயா
    அனுபவம் பேசுகின்றது
    நன்றி ஐயா

    ReplyDelete
    Replies
    1. அறிவுரை என்பது வேறு. அவர்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் உரையாடுவது வேறு. நாம் திணிக்க விரும்புகின்றோம். அவர்கள் திரும்பிக் கொள்கின்றார்கள். நாம் தான் காலமாற்றத்திற்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். நன்றி.

      Delete
  15. என்ன இப்படி சொல்லிட்டீங்க... அப்பாக்கள் வாழ்வது தனது வாரிசுகளின் மனதில் - (மகள்களின் வாழ்வு முழுவதும்...!)

    ReplyDelete
    Replies
    1. நூறு சதவிகிதம் உண்மை தனபாலன்.

      Delete
  16. இது அனைத்து குடும்பங்களிலும் நடப்பதுதான். நண்பர் கரந்தை ஜெயக்குமார் அவர்கள் கூறியுள்ளதுபோல் இதை செய், அதை செய் என்றோ அல்லது இதை செய்யாதே, அதை செய்யாதே என்பவர்களையோ பிள்ளைகள் விரும்புவதில்லை. ஆனால் அப்பாக்கள் கூறுவதை மனதில் வைத்துக்கொள்வார்கள். அப்பா சொன்னது போலவே எதை செய்ய வேண்டுமோ அதை மட்டுமே செய்வார்கள். எதை செய்ய வேண்டாமோ அதை செய்யாமலும் இருப்பார்கள். அதனாலேயே வாழ்க்கையிலும் முன்னேறவும் செய்வார்கள். ஆனால் அதற்குண்டான கிரெடிட் மட்டும் அப்பாவுக்கு கிடைக்காது.

    அதே சமயம் டிடி சொல்வதிலும் உண்மை இல்லாமல் இல்லை. மகன்களை விட மகள்கள் அப்பாக்களை நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள்தான்.

    ReplyDelete
    Replies
    1. மகன்களைப் பெற்ற அப்பாக்களுக்கு வாழ்க்கை முழுக்க ஒரு விதமான தண்டனை கிடைத்துக் கொண்டே தான் இருக்கும் போல. பல இடங்களில் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன். வருகைக்கு நன்றி.

      Delete
  17. Dear Brother,

    The contents of your article "Paavam Appakkal" is very nice and I enjoyed each and every word. Bringing the things in writing what we perceive in mind is an art. Day by day you are mastering in that art. My father is no more. He was poorly educated. But he was a Master in his personal life and lived an example to me. I admire him a lot and i used to say the good deeds and attributes of my father to my children. But as you rightly said "மகள்களை திருப்தி படுத்துவது அத்தனை எளிது இல்லைங்கோ. நான் வெளியே போராட்டக்காரனாகவும் உள்ளே மறுகிக் கொண்டிருப்பவனாகவும் தான் வாழ முடிகின்றது. தலைமுறை இடைவெளி என்பது எத்தனை மூட்டை சிமெண்ட் போட்டு கொட்டினாலும் நிரப்ப முடியாத ஓட்டை அது." Till day I am getting the very same experience on day by day.

    Thanks a lot.

    Best wishes

    M.Ravindran

    ReplyDelete
  18. வாழ்க்கையின் நிதர்சண உண்மைகளை உங்கள் பாணியில் அழகாக சொல்லிவிட்டீர்கள். அப்பா!... என் வாழ்வில் பூஜ்ஜியம்தான். என்னதான் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தாலும் கசப்புணர்வுதான் மிஞ்சுகிறது. எந்த விதத்திலும் அவர் பெயரைச் சொல்ல முடியவில்லை. ஆனால் அவர் பெயரைச் சேர்த்துத்தான் தினமும் என் பெயரை எழுத வேண்டியிருக்கிறது. இறந்தவர்கள் தெய்வத்துக்குச் சமம் என்று சொல்லுவார்கள். ஆனால் என்னால் நிந்திக்காமல் இருக்க முடியவில்லை. தந்தையின் எல்லாப் பொறுப்புக்களையும் ஏற்று எங்களை வளர்த்த தாய் தான் எங்களுக்கு எல்லாமும்.

    அதீத பொறுப்புடன் கூடிய கடமை உணர்ச்சியும், குடும்பத்தலைவனில்லாத பொருளாதார சூழ்நிலையும் உறவினர்களின் ஏளனமுமாக ஒருவித இயலாமை கலந்த வெறுப்புதான் எங்கள் தாயிடமும் காண முடிந்தது. என்ன செய்வது? வளர்ந்தோம், படித்தோம். நல்ல உறவுகளோ, அறிவுரைகளோ எதுவுமே இல்லாமல் பட்டறிவுதான் எங்களை மேம்படுத்தியது.

    எப்படித்தான் ஈடுகொடுக்க முயன்றாலும், இன்றைய சந்ததியினரோடு உருவாகும் தலைமுறை இடைவெளியை குறைக்க முடியவில்லை. மௌனிகளாகவும், ரகசியமிக்கவர்களாகவும்தான் இருக்கிறார்கள் இக்காலத் தலைமுறைகள். ரகசியம் எனும்போதே பொய், புரட்டு, ஏமாற்றுதல் என்று எல்லாம் வரிசையாக அவர்களை கவிழ்த்துப்போட தயாராகிவிடுகிறது, உண்மைதானே(!) ஜோதிஜி.

    உங்களின் எழுத்து மட்டுமே என்னைப் போன்றவர்களை தொடர்ந்து எழுதத் தூண்டுகோலாக இருக்கிறது. அப்பாவைப் பற்றி இப்படி வெளிப்படையாக எழுதலாமா தெரியவில்லை. அதனாலேயே நான் ஒரு சராசரி அப்பாவாகவே இருக்கிறேனோ என்னவோ?

    ReplyDelete
    Replies
    1. கவலை வேண்டாம். உங்களை விட பல மடங்கு அப்பாவின் மேல் கோபம் கொண்டிருந்தவன் தான். ஒரு இயலாமை தான் நம்மை அப்பா மட்டுமல்ல மற்ற அத்தனை பேர்களின் மேலும் கோபப்பட வைக்கின்றதோ என்பதனை இப்போது யோசித்துப் பார்க்கின்றேன். திருப்பூருக்குள் நுழைந்த போது நான் பார்த்த புதிதான சமூகத்தை சமாளிக்கத் தெரியாமல் அப்பா நம்மை வளர்த்த விதம் சரியில்லை என்பதாகத்தான் நான் கற்பிதம் செய்து கொண்டு ஒவ்வொரு நாளும் மறுகிக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் எனக்குள் உருவாக்கிய ஒழுக்க விதிகள் தான் இன்று என்னை இந்த உயரத்திற்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

      என்னை விட மற்றவர்கள் அதிக உயரத்திற்கு சென்றவர்கள் இருந்த போதிலும் நிலையில்லாத வாழ்க்கையை அவஸ்த்தைகளுடன் தான் வாழ்ந்து கொண்டிருகின்றனர். விருப்பப்பட்ட துறைகளில் ஈடுபடுவது முதல் விருந்து போல தினமும் உண்பது வரைக்கும் உண்டான அத்தனை வாழ்வியல் சந்தோஷங்களையும் அனுபவித்து வாழ முடிகின்றது. இன்று நினைத்துப் பார்க்கும் போது அம்மாவை விட அப்பா தான் பெரிதாகத் தோன்றுகின்றார்.

      உங்கள் வாரிசுகளிடம் பேசிப் பாருங்கள். அவர்களிடம் இன்னும் சில ஆண்டுகள் கழித்துப் பேசிப் பாருங்க. நிச்சயம் உங்களை போற்றத்தக்க மனிதராக முழுமையாக சொல்லிவிட மாட்டார்கள். அவர்களின் ஆசைகள் பெரிது. கனவுகள் அதை விட பெரிதாக இருக்கும். ஆனால் உங்கள் உழைப்பில் வளர்ந்த அவர்கள் உங்களை ஒரு நாளும் வணங்கத்தக்க அப்பாவாக சொல்லிவிட மாட்டார்கள். பரஸ்பரம் கொடுத்து வாங்கிக் கொள்ளுதல் என்கிற ரீதியில் இன்றைய குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை பார்க்கின்றார்கள். அன்பு, பாசம், நெகிழ்ச்சி போன்ற வார்த்தைகளுக்குண்டான வீரியம் மிக மிக குறைவு.

      உங்கள் அப்பா பொருளாதார ரீதியாக உங்களை மேலே கொண்டு வராமல் இருந்து இருக்கலாம். ஆனால் இன்று நீங்க வாழ்ந்து கொண்டிருக்கும் அடிப்படை மனோபவங்களை அவரிடம் இருந்து தான் (மறைமுகமாக) பெற்று இருப்பீங்க. தனிமையில் அமர்ந்து இனிமையாய் அவரை நினைத்துப் பாருங்க. நான் சொல்வது புரியும் நண்பரே.

      அப்பா என்ற மனிதர்கள் நமக்கு தோற்றுப் போன மனிதர்களாக தெரிகின்றார்கள் என்றால் தோல்வியை மட்டுமே கொண்டாட விரும்புகின்றோம் என்று அர்த்தம்.

      Delete
  19. ஜோதிஜி தலைப்பிலும் துவக்கத்திலும் நடுவிலும் அப்பா பற்றி எழுதி, முடிக்கும் போது எழுத்து பற்றிக் கூறி முடித்து இருக்கிறீர்கள். கட்டுரை முழுமை அடையாதது போல உணர்வு.

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.