"அனைவரும் வாக்களிக்க வேண்டும்" என்பதற்காகச் சுற்றறிக்கை வாயிலாகச் சம்பளத்தோடு கூடிய ஒரு நாள் விடுமுறை அளித்த போதிலும் தொழிலாளர்களின் பெரும்பாலனோர் மனதில் "நாம் வாக்களிக்கச் செல்ல வேண்டும்" என்ற எண்ணம் உருவாகவில்லை. இரண்டு காரணங்கள். கிடைத்த ஒரு நாள் விடுமுறையில் வேறு எப்படிப் பயன்படுத்தலாம்? அல்லது மினி சுற்றுலாவாகச் சென்றால் அருகே எந்த ஊருக்குச் சென்று வர முடியும்? என்ற எண்ணம் தான் அவர்களின் மனதில் மேலோங்கியிருந்தது. இது போன்ற பல தகவல்கள் என் காதுக்கு வந்து கொண்டேயிருந்தது.
"நாம் செய்ய வேண்டியதை செய்தாகி விட்டது. இனி அவரவர் விருப்பம்" என்று யோசித்துக் கொண்டே ஒரு நாள் முழுமையாக விடுமுறை கிடைக்கப் போகின்றது என்ற தகவலை மனைவியிடம் அழைத்துச் சொன்னேன். குழந்தைகள் குறுஞ்செய்தி மூலம் தான் பேசிக் கொண்டிருந்தனர். காரணம் தொழிற்சாலையில் புதிய பதவியை ஏற்றதில் இருந்து அவர்களை விட்டு வெகுதூரம் நகர்ந்து விட்டேன் என்ற ஆதங்கம் அவர்களுக்குள் இருந்து கொண்டேயிருந்தது.
இதை ஏற்கனவே நான் உணர்ந்திருந்த போதிலும் "ஒன்றை இழந்தால் தான் ஒன்றைப் பெற முடியும்" என்ற கொள்கையின் படி சில மாதங்கள் இப்படித்தான் இருந்தாக வேண்டும். நான் விரும்பிய மாற்றங்கள் சரியானபடி வந்து விட்டால் அதன் பிறகு என் பங்களிப்பு குறைந்து விடும் என்று சமாதானப்படுத்தி வைத்திருந்தேன். ஆனால் ஒவ்வொரு அலையும் பேரிலையாக என்னை தாக்கிக் கொண்டேயிருந்தது.
காரணம் தொழிலாளர்களின் மனோநிலை அந்த அளவுக்குச் சீர்கெட்டுப் போயிருந்தது. அவர்களின் உரிமைகளைப் பற்றியும் யோசிக்கத் தெரியவில்லை. அதே போல அவர்களுக்குண்டான கடமைகள் குறித்தும் கண்டு கொள்ளாமல் கிடைத்த வரை லாபம் என்று ஒவ்வொரு துறையிலும் மொன்னையாக "வந்தோம் வேலை செய்தோம்" என்று இருந்தார்களோ ஒழிய ஒரு நாளில் வெளிவர வேண்டிய ஆடைகளின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிக மிகக் குறைவாகவே இருந்தது. சாட்டையை எடுத்து சொடுக்க ஆரம்பித்தேன். இந்தச் சாட்டையின் மற்றொரு பெயர் அன்பு.
துறைவாரியாகத் திறமைசாலிகள், உழைப்பின் மேல் ஆர்வம் உள்ளவர்கள், அங்கீகாரம் இல்லாமல் சோர்ந்து போயிருந்தவர்கள் போன்ற பலரையும் அடையாளம் கண்டு ஒவ்வொருவரையும் அழைத்து அவர்கள் தற்பொழுது வாங்கிக் கொண்டிருக்கும் சம்பளம், ஆனால் உண்மையிலேயே அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சம்பளம் போன்றவற்றைப் புரிய வைத்தேன். ஒரு வாரத்தில் ஒரு தொழிலாளர் 12 மணி நேரம் பணிபுரிந்தால் அவரின் வாரச்சம்பளம் என்ன கிடைக்கும்? அதே சமயம் பல காரணங்களால் எட்டு மணி நேரம் பணிபுரியும் போது ஒரு மாதத்தில் எவ்வளவு குறைவாகக் கிடைக்கும்? என்பதைப் புரிய வைக்க இந்த அணுகுமுறை ஒவ்வொரு இடத்திலும் பட்டு எதிரொலித்தது.
இது தவிர விடுமுறை எடுக்காமல் தொடர்ந்து வருபவர்கள், சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு ஊக்கத் தொகை என்று ஒவ்வொன்றாக நான் உருவாக்கிய தொழிலாளர்கள் சார்ந்த ஒவ்வொரு செயல்பாடுகளும் பேக்டரி மேனேஜர் பதவியில் இருந்தவருக்கு உற்சாகத்தை அளிக்க அவர் பங்குக்குக் களத்தில் சூறாவளியாகப் பயணிக்கத் தொடங்கினார். மறுமலர்ச்சியின் அடுத்த அத்தியாயம் உருவாகத் தொடங்கியது. வாரந்தோறும் 1500க்கு குறைவாக வாங்கிக் கொண்டிருந்தவர்கள் எளிதாக 3000 ரூபாய் அளவுக்கு எகிற, இது அடுத்தடுத்து பல விளைவுகளை ஏற்படுத்தத் தொடங்கியது. ஒவ்வொரு துறையும் விரைவாகச் செயல்படக் காரணமாக அமைந்தது.
ஒரு துறை மற்றொரு துறையோடு சம்மந்தப்பட்டு இருக்கும். ஒரு துறை வேகமாகச் செயல்படும் போது அடுத்தத் துறையும் செயல்பட்டே ஆக வேண்டிய சூழ்நிலை உருவாகத் தொடங்கியது. ஒருவரின் சம்பளம் அடுத்தவருக்கு உத்வேகத்தைக் கொடுக்க அவரும் வேலையில் கவனம் செலுத்தியே ஆக வேண்டிய சூழ்நிலை உருவானது. வேலை செய்யாமல் சம்பளம் மட்டும் வாங்கிக் கொண்டிருந்தவர்கள் தடுமாறத் தொடங்கினர்.
சிலர் அவர்களாகவே "இனி இங்கே காலம் தள்ள முடியாது" என்று வெளியேறத் தொடங்கினர். அவர்களின் இடத்தில் புதியவர்களைக் கொண்டு வந்து அமர்த்த இன்னும் வேகம் அதிகமாகத் தொடங்கியது. இந்தச் சமயத்தில் தான் பேக்டரி மேனேஜர் என்னிடம் வந்து சொன்னார்.
"தேர்தலுக்குச் செல்பவர்களின் இத்தனை பேர்கள் நிச்சயம் திரும்பி வர மாட்டார்கள்" என்றார். அவர் வைத்திருந்த பட்டியலைப் பார்த்த போது தலை சுற்றியது. காரணம் 50க்கும் மேற்பட்ட பெண்கள். வயதைப் பார்த்த போது 20 வயதுக்கு அருகே இருந்தார்கள். இதைவிட அவர்கள் அத்தனை பேர்களும் முதல்முறையாக வாக்களிக்கப் போகின்றவர்கள்.
"ஏன் திரும்பி வரமாட்டார்கள்? வேறெதும் பிரச்சனையா?" என்றேன்.
"அத்தனை பேர்களும் காதலில் சிக்கியவர்கள். பசங்க இடையில் எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருந்தார்கள். நானும் எல்லா இடத்திலும் செக் பாயிண்ட் வைத்திருந்தேன். இப்பொழுது நீங்க பல இடங்களில் திறந்து விட்டுட்டீங்க. இனி அவர்களைக் கட்டுப்படுத்தவே முடியாது?" என்றார்,
பேக்டரி மேனேஜர் மண்ணின் மைந்தர். அதே குணம். மனம். திடம். வாயிலிருந்து வரும் வார்த்தைகள் அனைத்தும் அதிகாரத் தோரணையாகவே வரும்.
மற்றொரு பிரச்சனை ஒரு நாள் உற்பத்தி குறையும் போது என் கேள்விகளை அவர் எதிர்கொண்டே ஆக வேண்டும். நான் சிரித்துக் கொண்டே கத்தியை ஆழத்தில் குத்தி வெளியே எடுக்கும் போது அவர் என் மேல் காட்ட முடியாத கோபத்தை உற்பத்தியில் காட்டியே வேண்டிய நிலையில் இருந்தாக வேண்டும்.
நான் செய்து கொண்டிருந்த ஒவ்வொரு செயலும் அவருக்கு எரிச்சலை உருவாக்கிக் கொண்டிருந்தது.
காரணம் ஒரு தொழிலாளி ஒரு இடத்தில் இல்லையென்றால் அதன் பாதிப்பு பல இடங்களில் எதிரொலிக்கும். சங்கிலித் தொடர் அறுந்து போய்விடும். தொழிற்சாலை சார்ந்து பணிபுரிந்து கொண்டிருந்த ஒவ்வொரு அலுவலக ஊழியர்களுக்கும் நான் "டெரர் பாண்டியனாக" இருந்தேனே தவிரத் தொழிலாளர்களைப் பொறுத்தவரையிலும் "இவர் நமக்கு நல்லது செய்ய முயற்சிக்கின்றார்" என்ற எண்ணத்தை மெதுமெதுவாக உருவாக்கிக் கொண்டிருந்தேன்.
"ஏனுங்க காதலிப்பது தவறா?" என்றேன்.
அவருக்குக் கோபம் அதிகமாக "இவங்க செய்வது காதல் இல்லைங்க. அது வேற" என்று பல உதாரணங்களைக் காட்டி புலம்பித் தள்ளிவிட்டார்.
அவர் சுட்டிக் காட்டிய பல சுவராசிய சம்பவங்களை மனதிற்குள் ரசித்துக் கேட்டுக் கொண்ட போதிலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் அடுத்தச் சுற்றறிக்கை ஒன்றை தயார் செய்யச் சென்னேன்.
"எல்லோருக்கும் விடுமுறை என்பது கட்டாயம். ஆனால் ஊருக்குச் சென்று ஓட்டளித்து விட்டு வருபவர்களின் பெருவிரல் மை சோதிக்கப்படும். மனிதவளத்துறை மூலம் கணக்கெடுக்கப்படும். அவர்களுக்கு மட்டும் சம்பளம். மற்றவர்களுக்குச் சம்பளம் இல்லாத விடுமுறை மட்டுமே".
இது முறையற்ற செயல் என்ற போதிலும் குறிப்பாக விடுதியில் தங்கியிருந்த பெண்கள் அத்தனை பேர்களும் கட்டாயம் அவரவர் வீட்டுக்குச் சென்று பத்திரமாகப் பணிக்கு திரும்பி வர வேறு வழி எனக்குத் தெரியவில்லை.
இதிலும் குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் இருந்து பணிபுரிந்து கொண்டிருந்த பெண்கள் வீட்டில் இருந்து எனக்கே நேரிடையாகப் பல அலைபேசி அழைப்புகள் வரத் தொடங்கியது. அவர்கள் அத்தனை பேர்களும் சொன்ன வார்த்தைகள் ஒரே மாதிரியாகவே இருந்தது.
"என் பெண்/பையனை அவசியம் அனுப்பி வைங்க. இல்லைன்னா எங்களுக்குப் பிரச்சனை ஆயிடும்" என்றார்கள்.
தொடக்கத்தில் இது வினோதமாகத் தெரிந்தது.
என்னடா இது? ஓட்டளிக்க இத்தனை ஆர்வமா என்று மேற்கொண்டு அடுத்தடுத்து விசாரிக்க நடுவட்டம், தொட்டபேட்டா தொடங்கிச் சுற்றியுள்ள பல ஊர்களில் உள்ள ஒவ்வொரு சிறிய சிறிய கிராமங்களையும் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் விலை கொடுத்து வாங்கிய ரகசியம் புரிந்தது.
பாவம் அப்படியும் அவர் தோற்றுவிட்டார்.
இதை விட மற்றொரு ஆச்சரியம் என்னவென்றார் நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளரும், கட்சியில் உள்ள முக்கியத் தலைகளும் ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறிவிட்டனர்.
ராஜா எப்போதும் ராஜா தான்.
அதனால் தான் நீலகிரி மாவட்ட வாக்காளர்களில் அதிகமானோர் நோட்டோ வில் கும்மாங்குத்து குத்தி அவரைக் கூஜாவாக மாற்றிவிட்டனர். இது தவிர மற்றவர்கள் "எப்ப அப்பன் ஆயி காலத்திலிருந்தே ரெட்ட இல தான்" என்ற எண்ணத்தில் மாறாமல் சிந்தாமல் சிதறாமல் பட்டனை அமுக்கி விட்டு வந்து விட்டனர்.
தொடர்புடைய பதிவுகள்
அனுபவங்களையும் உண்மை நிலையையும் எழுதினாலும் அதுவும் சுவாரசியமான சிறுகதை போல அமைந்திருக்கிறது.தொழிற்சாலை நிர்வாகிகளில் சமூக சிந்தனை உடையவர்களை பார்ப்பது அரிது. இருபக்கங்ளிலும் நியாயங்களையும் நியாயமின்மையையும் தெளிவாக உணர்ந்து வைத்திருப்பது உங்கள் கூடுதல் பலம்.
ReplyDeleteநேர்மையான செயல்பாடுகள் நிச்சயம் வர்வேற்பைப்பெறும் என்பதை உங்கள் அனுபவங்கள் உணர்த்துகின்றன.
மறுமலர்ச்சியின் அடுத்த அத்தியாயம்....
ReplyDeleteமறுமலர்ச்சியின் அடுத்த அத்தியாயம்
ReplyDelete///அவருக்குக் கோபம் அதிகமாக "இவங்க செய்வது காதல் இல்லைங்க. அது வேற" என்று பல உதாரணங்களைக் காட்டி புலம்பித் தள்ளிவிட்டார். ///
ReplyDeleteஅவங்க காதல் செய்யுறாங்க அல்லது வேற ஏதும் செய்யுறாங்க அது அவங்களின் தனிப்பட்ட விஷயம் அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை அதிகாரிகளின் வேலை அவர்கள் அவங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் ஒழுங்காக வேலை செய்க்கிறார்களா என்று கவனிப்பது மட்டுமே எல்லாவற்றையும் மேலை நாட்டில் இருந்து காப்பி அடிக்கும் அதிகாரிகள் இதையும் காப்பி அடிக்க வேண்டும்
அன்பு எனும் சாட்டை என்றும் தேவை தான்...
ReplyDeleteசுற்றறிக்கை - சமயோசித ஆளுமைத் தன்மை... வாழ்த்துக்கள்...
ஒரு துறை மற்றொரு துறையோடு சம்மந்தப்பட்டு இருக்கும். ஒரு துறை வேகமாகச் செயல்படும் போது அடுத்தத் துறையும் செயல்பட்டே ஆக வேண்டிய சூழ்நிலை உருவாகத் தொடங்கியது. ஒருவரின் சம்பளம் அடுத்தவருக்கு உத்வேகத்தைக் கொடுக்க அவரும் வேலையில் கவனம் செலுத்தியே ஆக வேண்டிய சூழ்நிலை உருவானது. வேலை செய்யாமல் சம்பளம் மட்டும் வாங்கிக் கொண்டிருந்தவர்கள் தடுமாறத் தொடங்கினர்.
ReplyDeleteதராசின் ஒரு தட்டு உயர்ந்தால் அடுத்த தட்டு தாழுமே..
அன்புச்சாட்டை சமநிலை பேண அற்புதமான ஆயுதம்..!
// பெருவிரல் மை சோதிக்கப்படும். ..//
ReplyDeleteஅட! இது சூப்பர் யோசனை!
ஆமாம்....ஆள்காட்டி விரலில் அல்லவா மை வைப்பாங்க, இல்லையோ?
நான் ஓட்டளித்த போது தெரிந்தோ தெரியாமலோ என் பெருவிரலில் தான் அந்தம்மா மையை வைத்தார்கள். நீங்க சொன்ன பிறகு தான் எனக்கும் இந்த நினைப்பு வந்தது.
Deleteஇவ்வளவு வேலைப்பளுவிலும் பதிவுக்கு நேரம் ஒதுக்குவது ஆச்சர்யம்தான். உங்களின் சுறுசுறுப்புக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteபதிவுகளும் நிர்வாகிகளுக்கு வழிகாட்டியாக இருக்கிறது. தொடருங்கள்.
இரவில் எழுத நேரம் ஒதுக்கிய பின்பு தான் மொத்த பாரங்களையும் இறக்கி வைத்தது போன்று உள்ளது. அடுத்த நாள் உழைப்புக்கு உடம்பில் புது ரத்தம் பாய்ச்சியது போல இருக்கு சிவானந்தம்.
Delete//ஒரு வாரத்தில் ஒரு தொழிலாளர் 12 மணி நேரம் பணிபுரிந்தால் அவரின் வாரச்சம்பளம் என்ன கிடைக்கும்? அதே சமயம் பல காரணங்களால் எட்டு மணி நேரம் பணிபுரியும் போது ஒரு மாதத்தில் எவ்வளவு குறைவாகக் கிடைக்கும்? // இது தொழிலாளர் நல சட்டத்துக்கு விரோதம் இல்லையா ஜி..? எப்படியோ https://www.youtube.com/watch?v=r5KTt2xmsgw
ReplyDeleteகாணொளியை ரசித்தேன்.
Deleteவாக்கு அளிக்கச் சென்றவர்கள் கையில் மையுடன் திரும்பி வந்தார்களா? மையில்லாமல் வந்தார்களா? அல்லது வரவேயில்லையா?
ReplyDeleteமுடிவு அடுத்த பதிவில்...
பலர் வந்தார்கள். சிலர் தப்பித்து விட்டார்கள்.
Deleteசுவாரஸ்யமாக இருக்கிறது! உங்களின் ஆளுமைத்திறன் வியக்கவைக்கிறது! தொடர்கிறேன்!
ReplyDeleteநன்றி சுரேஷ்
Deleteபெருவிரலில் மை சோதனை !! எதை எல்லா நிறுவனங்களும் பயன்படுத்தலாம் போலவே!!
ReplyDeleteசூப்பர் அண்ணா!
நன்றி மைதிலி
Deleteஅரசியலில் ஆரம்பித்து சமூகம் தொடடு அரசியலில் முடித்து விட்டீர்கள்.... ஆமாங்க இந்த தொழிலாளர்களின் காதலில் முதலாளித்துவம் தலையிடலாமா....
ReplyDeleteதலையிடக்கூடாது தான். கடைசியில் பஞ்சாயத்துக்கு நட்டாமையாக கொண்டு போய் நிறுத்தி விடுகின்றார்களே? என்ன செய்யட்டும்?
Deleteசாட்டையை எடுத்து சொடுக்க ஆரம்பித்தேன். இந்தச் சாட்டையின் மற்றொரு பெயர் அன்பு. //
ReplyDeleteதங்கள் அணுகுமுறை மிகவும் அருமையான அணுகு முறை! தொழிலாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நிர்வாகம் தலையிடுவது சரியா? நிர்வாகத்தி
ற்கு வேண்டியது அவர்களது உழைப்பு மட்டுமே! தங்கலது அன்பான ஆளுமைத் தன்மையும், இத்தனை வேலைகளுக்கிடையிலும் தாங்கள் எழுதுவதும் மிகவும் ஆச்சரியமான விஷயம்தான் நண்பரே! "A busy man finds time for everything" என்ற ஆங்கில வாசகம்தான் நினைவிற்கு வருகின்றது! யாராவது ஒருவர் எனக்கு நேரமே இல்லை என்றால் அவர் கண்டிப்பாக சோம்பேறியாகத்தான் இருப்பார் என தெரிகின்றது!
என் எண்ணத்தை அப்படியே உங்கள் கருத்தாக எழுதியிருக்கீங்க. நன்றி.
Deleteநாடு முழுவதும் தேர்தலுக்காக விடுமுறை தருகிறார்கள். ஆனால் யாரையும் ஓட்டு போட்டார்களா இல்லையா என்று விரல் மேல் உள்ள மையை சோத்னை செய்வது கிடையாது. அவ்வாறு செய்வதும் சட்டப்படி தப்புதான்.
ReplyDeleteஇதிலும் மாற்றம் வந்தால் மக்களிடத்தில் ஒரு பயம் வரும். ஆனால் இது ஜனநாயக உரிமையை பறிக்கும் செயல் என்று ஒரு கூட்டம் குரல் எழுப்புமே?
Delete