அஸ்திவாரம்

Wednesday, January 29, 2014

மேலும் சில செய்திகள்

வ்வொரு வருடங்களும் நம் வாழ்வில் வந்து கொண்டே தான் இருக்கின்றது. எப்பொழுதும் போல 2014 என்று எண்கள் மாறியுள்ளது. ஆனால் இந்த வருடத்தின் இந்த நாள் எனக்கு புதிய திசையின் ஆரம்பம்.

ணையம் என்பதனை நீங்கள் எப்படிப் புரிந்து வைத்து உள்ளீர்கள்? "கட்டுப்பாடற்ற சுதந்திரம்" என்ற ஒரு வார்த்தைக்குள் வைத்திருந்தால் அதை மாற்றிக் கொள்ள வேண்டிய சூழ்நிலையை அதிகாரவர்க்கம் படிப்படியாகச் செய்து கொண்டே தான் வருகின்றார்கள். ஒரு அளவுக்கு மேல் உங்களைச் செயல்பட முடியாத அளவுக்கு அவர்களால் மாற்றி விட முடியும் அல்லது நீங்களே ஒதுக்கியே ஆக வேண்டும் என்ற சூழ்நிலைக்கு உங்களைக் கொண்டு வந்து நிறுத்திவிட முடியும். இணையம் என்பது "திறந்த வெளி மைதானம்" என்பது தான் சரியாக இருக்கும். நீங்கள் எங்கு நின்றாலும் ஏதோவொரு வழியில் தெரிவீர்கள். ரகசியங்கள் எதையும் காக்கமுடியாத பெருவெளி. பெரும்புள்ளியாக, சிறுபுள்ளியாக அல்லது கரும்புள்ளியாக. ஏதோவொன்றாக உங்களை அடையாளம் காட்டிக் கொள்ள முடியும்.

ந்த நிலையில் இருந்தாலும் நல்லவிதமாக உங்களை அடையாளம் காட்டிக் கொள்வதில் ஏராளமான பிரச்சனைகள் இங்கே உண்டு.தினந்தோறும் எண்ணிக்கையில் அடக்க முடியாத கூட்டம் வந்து போய்க் கொண்டே இருப்பதால் உங்களை நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும். பிரச்சனைகளை உணர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். பலசமயம் எதிர்விளைவுகளை உருவாக்கலாம். போட்டி, பொறாமை, வன்மம், குரோதம், எரிச்சல் என்று ஏதோவொன்று ஒன்று உங்களைத் தாக்கிக் கொண்டேயிருக்கும். அனைத்தையும் கடந்து வந்து கொண்டே தான் இருக்க வேண்டும்.

தொடர்ந்து செயல்படமுடியாதவர்கள், தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியாதவர்கள், மற்றவர்கள் வளர்வதைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் என்று ஏராளமான பட்டியல் இங்கே உண்டு. கண்டும் காணாமல் நகர்ந்து கொண்டே தான் இருக்க வேண்டும். உங்களைத் தடை செய்யும் பட்டியலில் சிலர் காரணமின்றி வைத்திருப்பர். அதன் மூலம் அவர்களின் மனதிற்கு அல்ப சந்தோஷம் கிடைக்கக்கூடும். இவர் இன்னமும் எழுதிக் கொண்டிருக்கின்றாரா? என்ற எண்ணத்தில் எட்டிப்பார்ப்பவர்களும், எப்படி இவரால் செயல்பட முடிகின்றது என்ற ஏக்கத்தில் இருப்பவர்களும் என ஏராளமான "செயல்பாடுகளை" நாள்தோறும் செய்து கொண்டிருப்பவர்களைத் தாண்டி உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளத்தான் வேண்டும்.

ருபது வருடங்களுக்கு முன் இருந்த பத்திரிக்கை உலக ஆளுமைகள் இன்று அடங்கி விட்டனர். அவர்களின் சட்டங்கள் அனைத்தையும் சமானியன்கள் இன்று தவிடுபொடியாக மாற்றிவிட்டனர். ஏராளமான புதுப்புதுச் சிந்தனைகள், கற்பனைகள், எண்ணங்கள் என்று ஏதோவொரு வழியில் தங்களை வெளிப்படுத்திக் கொண்டவர்கள், இதன் மூலம் அடையாளப்படுத்திக் கொண்டவர்களைக் கடந்த ஐந்து வருடங்களில் நாம் ஏராளமான நபர்களை அடையாளம் கண்டு உள்ளோம்.

காரணம் இணையம் என்பது "திறந்த வெளி" மைதானமாக இருப்பதால் உங்களின் திறமைகளும் அதற்கான உழைப்பும் மட்டுமே இங்கே முக்கியமானதாக பேசப்படுகின்றது. உணர்ந்தவர்கள் வளர்கின்றார்கள். உணராதவர்கள் "வருத்தப்படாத வாலிப சங்க"த்தில் சேர்ந்து திரைப்பட விமர்சனங்களை எழுதி நாங்களும் இங்கே இருக்கின்றோம் என்று தங்களை நிரூபித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ன்று எந்தக் குறிச்சொல் கொடுத்து தேடினாலும் தமிழ் கட்டுரைகளைக் கூகுளில் நம்மால் பெற்று விட முடியும். எல்லோரும் அங்கீகாரத்தை மட்டுமே ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் காத்திருந்தால் இந்த மாறுதல்கள் நடந்து இருக்காது. அந்தச் சமயத்தில் அவரவர் வேலைகளை அவருக்குத் தெரிந்த மொழியில் எழுதி வைத்து விட நமக்கு எளிதாகக் கிடைக்கின்றது. எதைப்பற்றி வேண்டுமானாலும் தேடலாம். எதனோடு வேண்டுமானாலும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டு விடலாம்.

ளமிறங்கியவர்கள் அத்தனை பேர்களும் மெத்தப்படித்தவர்களோ பெரிய வாசிப்பு அனுபவம் கொண்டவர்களோ, சமூகத்தில் பெரிய அளவு பின்புலம் கொண்டவர்களும் அல்ல. "இவருடன் பழக்கம் இருந்தால் தான் நமக்கு அங்கீகாரம் கிடைக்க வழி பிறக்கும்" போன்ற  எண்ணங்களைக் கூட தொழில் நுட்ப வசதிகள் மாற்றி விட்டது. இன்றைய இணையம் என்பது புதிய இளைஞர்களின் சிந்தனைகள் நிரம்பிய களமாக மாறியுள்ளது.

வர் தகுதியானவர், தரமானவர் என்று கருதும் எவரும் எதனையும் இங்கே ஆவணப்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியவர்கள் அல்ல. அவர்கள் தங்கள் பெயரை முன்னிறுத்த என்ன செய்ய வேண்டும்? என்பதற்காகவும், தனக்கு என்ன ஆதாயம் என்பதைப் பார்த்து செயல்படக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். குறிப்பிட்ட வட்டத்திற்குள் மட்டுமே செயல்பட காலம் அவர்களை ஒதுக்கி வைத்து விடுகின்றது. காலப்போக்கில் அதுவே பின்னுக்கு தள்ளியும் வைத்து விடுகின்றது. இந்த களம் திறந்த வெளி மைதானமாக இருப்பதால் எதையும் மறைக்க முடியாது.  மாற்றவும் முடியாது.

காரணம் இங்கே ஒவ்வொன்றையும் கவனித்துக் கொண்டிருப்பவர் ஆயிரக்கணக்கில் இருக்கின்றார்கள். மதம், சாதி, அதிகாரம், அரசியல் போன்ற எந்த லாபியும் இங்கே வேலை செய்யாது. அவரவர் வைத்திருக்கும் "கூட்டணி தத்துவம்" கூட குப்பைக்கூடைக்கு போய்விடும். உணர்ந்தவர்கள் அமைதியாக செயல்படக்கூடியவர்கள்.

நான் கடந்த நாலரை வருட இணைய அனுபவத்தில் "கற்றதும் பெற்றதும்" ஏராளம். எழுத்துப்பயிற்சி எவரும் கற்றுத் தர முடியாதது. இவர் என் ஆசான் என்று சொல்லிக் கொண்டாலும் அவர் கைப்பிடித்து எழுதி கற்றுத் தரமுடியாத எழுத்துப் பயிற்சியை எழுதுவதன் மூலம் மட்டுமே படிப்படியாக நம்மால் பெற முடியும். நானும் உணர்ந்துள்ளேன். சில படிகள் ஏறியுள்ளேன். கடந்த 2013 தொடக்கத்தில் புத்தக உலகம் அறிமுகமாகி 4 தமிழ்மீடியா படைப்பாய்வகம் வெளியிட்டுள்ள  "டாலர் நகரம்" என்ற என் முதல் நூல் வெளிவந்தது. 2014 ல் மின் நூல் உலகம் அறிமுகமாகி "ஈழம் - வந்தார்கள் வென்றார்கள்" வெளிவந்துள்ளது.

இரண்டுமே வெற்றியையும் அங்கீகாரத்தையும் தந்துள்ளது.

டந்த டிசம்பர் 29 அன்று வெளியிடப்பட்ட என் முதல் மின் நூல் ஒரு மாத காலத்திற்குள் நான் எதிர்பார்த்த எண்ணிக்கையை விட மிக அதிகமான பேர்களிடம் போய்ச் சேர்ந்துள்ளது.

9000 +
ஒரு தமிழ்ப் புத்தகம் வெளியிட்ட ஒரு மாதத்தில் 9000 பிரதிகள் விற்பனையானால் என்னவாகும்? பல எழுத்தாளர்களின் ராயல்டி பிரச்சனைகள் இன்னும் விஸ்வரூபம் எடுத்து இருக்கும். பதிப்பகங்கள் இன்று கோடீஸ்வரனாக மாறி இருப்பார்கள்.  இந்த அளவுக்கு ஒரு எழுத்தாளரின் புத்தகம் இங்கே விற்க வேண்டும் என்றால் அவர் தன் வாழ்நாளில் பாதி நாட்கள் காத்திருக்க வேண்டும்.

ணையம் என்பது நம் கற்பனைக்கு எட்டாத ஆச்சரியம் நிறைந்த ஒன்று. இது இலவசம் என்பதாக நீங்கள் நினைக்கக்கூடும். ஆனால் ஈழம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் இருப்பவர்கள் உலகம் முழுக்க இன்னமும் அதிகமான பேர்கள் இருக்கின்றார்கள் என்பதோடு வாசிப்பவர்களின் சூழலும் மாறிக் கொண்டே வருகின்றது என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும். ஈழம் பற்றி அடிப்படை எதுவும் தெரியாதவர்களுக்கு இந்த மின் நூல் உதவக்கூடும் என்கிற வகையில் எனக்குத் திருப்தியே.

உதவிய சீனிவாசன், ரவிசங்கர், வினோத்,தனபாலன், அவர்கள் உண்மைகள், ஞானசேகரன், துளசிதரன் போன்றோருக்கு நன்றி.

அட்டைப்படம் வடிவமைப்பு வீடு சுரேஷ்குமார்.

"இதுவும் கடந்து போகும்".

0o0

சென்ற ஜனவரி 4ந் தேதி சென்னையில் நடந்த எழுத்தாளர் ஞாநி அவர்களின் 60 வது பிறந்த நாள் விழாவுக்காகச் சென்னை சென்றிருந்த போது FREE EBOOK.COM தளத்தில் எனது முதல் மின் புத்தகமான "ஈழம் - வந்தார்கள் வென்றார்கள்" வெளியிட்ட பின்பு முதல் முறையாக சீனிவாசனை சந்தித்தேன். அவர் கொண்டு வந்திருந்த ஈ ரீடர் என்ற கையடக்கக் கருவியில் என் மின் நூலை படிக்க வாய்ப்பு கிடைத்த நேரம் என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம். இது போன்ற தளத்திற்குச் சர்வர் வாங்கி அதற்கு முதலீடு செய்து தொடர்ந்து கொண்டு செல்வது என்பது நாம் நினைப்பது போலச் சாதாரண விசயமல்ல. எவரிடமும் எவ்வித பொருளாதார உதவிகளையும் எதிர்பார்க்காமல் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இவர்களின் தன்னலமற்ற சேவைக்கும் மற்றும் இவரைச் சார்ந்த குழுவினருக்கு என் வணக்கமும் வாழ்த்துகளையும் இங்கே எழுதி வைக்கின்றேன்.

டந்த இரண்டு வருடங்களில் இணையதளங்களில், வார இதழில், பத்திரிக்கைகளில், புத்தகங்களில் அச்சு வடிவத்தில் என் படைப்புகளைப் பார்த்த போதிலும் இந்தக் கருவியில் இருந்த வாய்ப்புகளும் வசதிகளும் அதிகம். இதுவரையிலும் கணினியில் பிடிஎஃப் கோப்பாகப் பலவற்றைப் படித்து இருந்த போதிலும் புத்தகங்கள் படிக்கும் போது கிடைக்கும் வசதிகளும், மகிழ்ச்சியும் வந்ததே இல்லை என்ற கருத்துக் கொண்ட என் எண்ணத்தை முற்றிலும் மாற்றியது. சீனிவாசன் என்னுடன் பேசும் போது "இதை விட இன்னும் மேம்பட்ட பலதரப்பட்ட வசதிகள் உடைய கருவிகள் வந்து விட்டது" என்றார்.

நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் காலமும் சூழ்நிலையும் நவீன தொழில் நுட்ப வளர்ச்சியினால் எங்கேயோ நம்மை இழுத்துக் கொண்டு சென்று கொண்டே இருக்கின்றது என்பதை உணர்ந்து கொண்டேன். 

"காசுக்கேத்த பணியாரம்".

0o0




chrome plugin http://readium.org/

Desktop application - http://fbreader.org/

Use these apps to read epub 





"வரலாறு என்பது வெற்றி பெற்றவர்களால் உருவாக்கப்படுவது".

0o0

"வந்தார்கள் வென்றார்கள்" என்ற தலைப்பு ஏற்கனவே மதன் அவர்களால் எழுதப்பட்ட சரித்திர தொடருக்கு அவர் கொடுத்திருந்த தலைப்பு ஆகும். 

காரணம் ஈழ வரலாற்றில் அங்குச் சென்ற ஸ்பானிஷ், போர்த்துகீசியர்கள், டச்சுப்படைகள் தொடர்ந்து கடைசியாகச் சென்ற ஆங்கிலேயப் படைகள் என்று அனைவருமே கொள்கை ரீதியாகவும், அவர்கள் நினைத்தபடியே பொருளாதார ரீதியாகவும் ஒவ்வொரு காலகட்டத்திலும் வந்தார்கள் வென்றார்கள். இதைப்போலவே குறுகிய இனமாக இருந்த சிங்களர்களும் படிப்படியாக வளர்ந்து இறுதியில் இன்று இலங்கை என்பது பௌத்தர்களின் நாடு என்று வென்று சாதித்துக் காட்டியுள்ளனர். இதை மனதில் கொண்டே இந்த மின் நூல் பேசுவதால் இந்தப் பெயரை தேர்ந்தெடுத்தேன்.  மூத்த பத்திரிக்கையாளர் திரு மதன் அவர்களுக்கு நன்றி.

"வளரும் பொழுது கடன் வாங்குவது தவறல்ல".

0o0

முதல் மின் புத்தகத்திற்குக் கிடைத்த ஆதரவு "அடுத்த உழைப்பையும் கொடுத்து விடு" என்பது போலவே இருந்தது. இது என் இரண்டாவது மின் புத்தகம். 

முதல் பகுதியில் 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் வாழ முடியாத சூழ்நிலையில் ஒவ்வொரு சமயத்திலும் வெளிநாடுகளுக்குச் சென்ற தமிழர்களைப் பற்றிப் பேசும் தொகுப்பு இது. இரண்டாவது பகுதியில் இன்று பாரதப் பிரதமராக உள்ள மன்மோகன் சிங் கொள்கைகள் உருவாக்கிய மறைமுக அடிமைத்தனத்தையும் பேசுகின்றது. 


தரவிறக்கம் செய்ய

"கடமை என்பது செய்தே ஆக வேண்டியது. பலன் என்பது கிடைத்தால் மகிழ்ச்சி. இல்லாவிட்டால் அடுத்த முயற்சி".

0o0

நான் வலைதளத்தில் பார்த்த வரைக்கும் மிகக்குறுகிய காலத்தில் தன் திறமைகளை உணர்ந்து, தெளிவான பாதையில் நடைபோட்டு முன்னேறியவர் திருமதி ரஞ்சனி நாராயணன் அவரின் முதல் புத்தகம் வெளியாகி உள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டு உள்ளார்கள்.


வார இதழ்களில் அவரின் கட்டுரைகளைப் படிக்கும் பொழுதும் சரி, அவர் தேர்ந்தெடுக்கும் விசயங்களும், நேர்த்தியான நடையும் அவருக்குள் இத்தனை நாளும் உள்ளேயிருந்த பத்திரிக்கையாளர் தற்பொழுது வெளியே வந்துள்ளது என்பதாகத்தான் நான் நினைத்துக் கொள்வதுண்டு. கடந்து போன நாட்களில் இவர் பங்குக்கு எனக்கு விவேகத்தை இன்னமும் கொஞ்சம் வளர்த்துக் கொள்ள உதவியுள்ளார். மூத்தோர் சொல் முதலில் கசக்கும். பிறகு நெல்லி போல இனிக்கும். வாழ்த்துகள் ரஞ்சனி நாராயணன்.

பெண்ணுரிமை என்பது அடக்கத்தில் தொடங்குவது. அறிவால் வெல்வது.

0o0


திர்காலத்தில் தமிழ் மொழியை வளர்க்க என்பதாக சமீப காலங்களில் பலதரப்பட்ட மேடைப் பேச்சுக்கள், கொள்கைகள், விளக்கங்கள், மாநாடுகள் போன்றவற்றை நீங்கள் செய்தித் தாள்களில் படித்து இருக்கக்கூடும். ஆனால் எதனைச் செய்யவேண்டும்? என்பதை உணர்ந்து உருப்படியாக ஒருவர் தன் சொந்த முயற்சினால் தன் முகம் எதையும் வெளியே காட்டிக் கொள்ளாமல், விளம்பரங்கள் எதுவுமின்றி, இணைய தளம் வாயிலாக சாதித்து காட்டிக் கொண்டிருக்கின்றார்.  இதில் என் சொந்த அனுபவமும் ஒன்று என்பதை இங்கே குறிப்பிட்டு எழுத வேண்டும்.  நான் சென்னையில் இருந்த போது என் மகள் குறிப்பிட்ட மருத்துவ பலன் உள்ள செடிக்கு ஆங்கிலப் பெயர் என்ன என்று கேட்டார்? உடனே நினைவுக்கு வந்தது வலைத்தமிழ் என்ற தளமே.  


"இங்கே சிலர் மட்டுமே நம் அடையாளம் தேவையில்லை என்று தாங்கள் செய்ய வேண்டிய கடமைகளை மட்டுமே அடையாளப்படுத்திவிட்டு மறைந்து விடுகின்றார்கள். இறுதியில் அவர்கள் மட்டுமே காலத்தை வென்றவர்களாக காட்சியளிக்கின்றார்கள்".
0o0

வலைத்தமிழ் குறித்து ஒரு குறிப்பு:

v 1,70,000 வார்த்தைகள் கொண்ட தமிழ் அகராதி (http://www.valaitamil.com/tamil_dictionary.php)
v   4900+ மேற்பட்ட தமிழ் இலக்கியங்களின் தொகுப்பு  (http://www.valaitamil.com/literature)
v      105000+ குழந்தைப் பெயர்கள் (http://www.valaitamil.com/baby_names.php)
v  4800+ தமிழ் திரைப்படங்களின் விபரம் (http://www.valaitamil.com/movies/index.php)
v      8000+ தமிழ் இணையதளங்கள் (http://www.valaitamil.com/tamilsites/index.php)
v      2000+ தமிழ் சமையல் குறிப்புகள் (http://www.valaitamil.com/recipes)
v 1300 தமிழக கோயில்களின் தகவல் தொகுப்பு (http://www.valaitamil.com/temples.php)
v      900 + மருத்துவக் குறிப்புகள் (http://www.valaitamil.com/medicine)
v      100 தமிழகக் கலைகள் (http://www.valaitamil.com/kids_tamilnadu-arts)
v      200 சுட்டிக் கதைகள் (http://www.valaitamil.com/kids_kids-stories)
v      அறிய புகைப்படத் தொகுப்பு  (http://www.valaitamil.com/photo_home.php)
v      காணொளித்தொகுப்பு (http://www.valaitamil.com/video_home.php)
v   இரண்டு கைபேசி மென்பொருள்களை iphone & Androiid –ல் உருவாக்கி அதை ஒன்றரை லட்சம் தமிழர்களுக்கு மேல்  பயன்படுத்துகின்றார்கள். (http://www.valaitamil.com/app)

"வெளிநாட்டில் வாழும் குறிப்பிடத்தக்க தமிழர்களால் மட்டுமே வரும் காலத்தில் தமிழ் என்றொரு மொழி இருந்தது என்று தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கு தெரிய வரக்கூடும்".

0o0

இணையத்தின் வாயிலாக (மட்டுமே) அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்று நான் எண்ணத்தில் வைத்துள்ள (நான்கு) தலைப்புகள் முதலில் மின் புத்தகமாக மாற்றப்பட்டு ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும்  நண்பர் சீனிவாசன் அவர்களால் வெளியிடப்படும். பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் என்பதால் ஒவ்வொரு மாதத்தின் கடைசி நாளிலும் பேசுவோம்.

வல்லமை இணைய இதழில் டாலர் நகரம் மதிப்புரை

பயணங்கள் முடிவதில்லை.

நன்றி.

38 comments:

  1. வாழ்த்துக்கள் ஜோதிஜி.... வலையுலகில் நீங்கள் இமயத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறீர்கள், வருங்காலத்தில் வலைப் பற்றி பேசும் போது உங்கள் பெயர் குறிப்பிடபடாமல்பேச முடியாது. பாராட்டுக்கள்


    வேலைக்கு சென்று கொண்டிருப்பதால் விரிவாக கருத்து சொல்ல இயலவில்லை

    ReplyDelete
    Replies
    1. உங்கள் உள்ளார்ந்த அக்கறைக்கு நன்றி. ஆனால் பல வருடங்களுக்கு முன்பே வலையுலகில் ஆக்கபூர்வமாக சாதித்தவர்கள் அதிகம். இது மாறிக்கொண்டேயிருக்கும் தொழில் நுட்பம் சார்ந்த மாறுபாடுகள் அடங்கிய வாழ்க்கையிது. அடுத்து வரப்போகின்றவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து விட்டு அமைதியாக அடையாளமற்று ஒதுங்கி வேடிக்கைப் பார்ப்பதே நம் மன நலத்திற்கும் உடல் நலத்திற்கும் நல்லது.

      Delete
  2. இரண்டாவது மின் நூலையும் வெளியிட்டதுக்கு பாராட்டுக்கள் !
    உங்களால் அடிக்கடி பாராட்டப்படும் என் பதிவுகள் மின் நூலாக வெளிவரும் நேரம் வந்து விட்டது என நினைக்கிறேன் !

    ReplyDelete
    Replies
    1. சீக்கிரம் ஜோதியில் ஐக்கியமாகி விடுங்க. வாழ்த்துகள்.

      Delete
  3. இந்த ஆண்டின் இது தான் முதல் பதிவு என்று நினைக்கிறேன்... அதற்கான (காரணம்) உழைப்பு பதிவில் உள்ளது... வாழ்த்துக்கள்...

    பல சங்கங்கள் உள்ளன... அதிலும் அடிதடி... ஹிஹி... (சில நுணுக்கமான எழுத்துகளை கற்றுக் கொள்ள வேண்டும்...)

    வலைத்தமிழ் பற்றிய அனைத்து இணைப்புகளுக்கும் நன்றி...

    9000 + ப்ளஸ் இரண்டாவது மின் புத்தகத்திற்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. இரண்டாவது புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  5. இணையமும், தமிழும் உயிர்ப்போடு உள்ளவரை உங்களின் சாதனை அழியப்போவதில்லை. மிகக்குறுகிய காலத்தில் பணிச்சுமைகளோடு நீங்கள் உழைத்ததின் பலனை அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறீர்கள். பிரதிபலன் பாராத உழைப்பையும் அதில் சமுதாயச் சிந்தனைகளையும் கலந்து எழுதும் கலை உங்களுக்கு கைவரப்பெற்றிருக்கிறது. முழுக்க முழுக்க இதற்கு காரணம் நீங்கள் மட்டுமே. என்னைப்போன்றவர்கள் வெறுமனே உங்களை அண்ணாந்து பார்த்து பெருமைப்பட்டுக் கொள்கிறோம், அவ்வளவே.
    பதிவைப் படித்துக்கொண்டே வந்தால் '' உதவிய சீனிவாசன், ரவிசங்கர், வினோத்,தனபாலன், அவர்கள் உண்மைகள், ஞானசேகரன், துளசிதரன் போன்றோருக்கு நன்றி” என்று தங்களுக்கு உதவிய ஜாம்பவான்களின் பட்டியலில் என் பெயரையும் சேர்த்திருக்கிறீர்கள். பிழை ஏதேனும் நேர்ந்து தவறுதலாக என் பெயர் வந்துவிட்டதா ஜோதிஜி அவர்களே.
    உங்களுக்கு நான் எந்த விதத்திலும் உதவாவிட்டாலும் என் பெயரைச் சேர்த்ததில் உங்களின் அன்பை புரிந்து கொள்ளமுடிகிறது. என் பதிவையே என்னால் ஒழுங்காக எழுதமுடியாத சூழ்நிலையில் உங்களுக்கு உதவியதாக நீங்கள் எழுதியது ஒருவித குற்ற உணர்ச்சியும் ஏற்படுவதைக் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் ஒரு பதிவில் இந்த புத்தகத்திற்கு இணைப்பு கொடுத்துஇருந்தீங்க. மறந்து விட்டீங்கன்னு நினைக்கிறேன்.

      Delete
  6. ஜோதிஜி, இணையத்தில் எழுதுபவர்களைப் பற்றி இத்தனைத் துல்லியமாக யாரும் எங்கேயும் எழுதி நான் படித்த நினைவில்லை. அத்தனைத் துல்லியமாக துலாக்கோல் நிறுத்திச் சொல்லியிருக்கிறீர்கள். மிகச்சரியான அலசல்.
    'ஈழம் ; வந்தார்கள் வென்றார்கள்' மின்புத்தகம் 9000 டவுன்லோடுகளைத் தாண்டியுள்ள விவரம் ஆச்சரியம் தருகிறது. இத்தனைப் பேர் நம் எழுத்தைப் படிக்கிறார்கள், அதுவும் உலகத்தின் எங்கெங்கோ இருக்கும் நாடுகளில் இருந்து....என்ற நிறைவுக்கும் மகிழ்ச்சிக்கும் ஈடு இணையே கிடையாது. நான்காயிரம் என்றார்கள், ஐந்தாயிரம் என்றார்கள், இதோ இப்போது ஒன்பதாயிரம் எனும்போது இது அப்படியே ஐம்பதாயிரங்களையும் கடந்து செல்லும் வாய்ப்பும் இருக்கிறது.

    புத்தகங்களில் இதுவரை அதிகம் விற்பனையாகியுள்ள தமிழ் புத்தகம் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்தான் என்பார்கள்.(இந்த வருட புத்தகக் கண்காட்சியிலும் -இத்தனை வருடங்களுக்குப் பிறகும் -அதிகம் விற்ற புத்தகங்களில் இரண்டாம் இடம் இந்த நூலுக்குத்தான்)
    அதுபோல் புதிதாக வந்த மின்நூல்களில் முதலிடம் பெற்ற நூலை எழுதியவராக நீங்கள் இருப்பதற்கு வாழ்த்துக்கள்.
    திருமதி ரஞ்சனி நாராயணனின் டாலர் நகரத்துக்கான முன்னுரைப் படித்தேன். மிகத் தீர்க்கமாகப் பிழியப்பட்டிருக்கும் சாறு.
    அழகான வார்த்தைகளில் எழுதியிருக்கிறார். அவருக்கும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மதம் என்ற வார்த்தை இருக்கும் வரையிலும் கண்ணதாசனின் அத்தனை கருத்துக்களுக்கும் அழிவே இருக்காது. நானும் தொடக்கத்தில் அவர் மேல் பைத்தியமாகத்தான் இருந்தேன். உணர உணர அனைத்தும் மாறிவிட்டது. நீங்க சொன்ன மாதிரி யாரோ ஒருவர் ஏதோவொரு மூலையில், நாட்டில் இருந்து கொண்டு நம் எழுத்தை வாசிக்கின்றார் என்பது (மட்டுமே) தான் நம் உழைப்புக்கு கிடைத்த மரியாதை.

      நீங்க சொன்ன மாதிரி திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்கள் டாலர் நகரம் என்ற புத்தகத்தை விமர்சனம் செய்துள்ளதை விட ஒரு விமர்சனம் எப்படி எழுதப்பட வேண்டும் என்பதை அட்டகாசமாக பதிவு செய்துள்ளார். அவர் பாணியில் உங்கள் புத்தகத்தை எழுத முடியுமா? என்று பார்க்கின்றேன்.

      Delete
  7. வாழ்த்துகள். மைதான உவமையோடு நீங்கள் சொல்லியிருப்பது சிறு திடுக்கிலுடலான உண்மை. நன்றாக எழுதப்பட்டுள்ள அலசல் பதிவு இது. உங்கள் மின் புத்தகங்ளைத் தரவிறக்கிக் கொண்டிருப்பவர்களில் நானும் ஒருவன். ரஞ்சனி நாராயணன் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது நூற்றுக்கு நூறு சரி.

    ReplyDelete
  8. ///"வெளிநாட்டில் வாழும் குறிப்பிடத்தக்க தமிழர்களால் மட்டுமே வரும் காலத்தில் தமிழ் என்றொரு மொழி இருந்தது என்று தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கு தெரிய வரக்கூடும்".////
    வருத்தப்பட வேண்டிய உண்மைதான் ஐயா

    ReplyDelete
    Replies
    1. வலைத்தமிழ் குறித்து உங்கள் பதிவில் எழுதி பலருக்கும் கொண்டு சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கையை உங்களிடம் வைக்கின்றேன். ஒரு முறை உள்ளே புகுந்து பாருங்க. கடுமையான உழைப்பை கொட்டியிருக்கின்றார்கள்.

      Delete
  9. இணையத்தை திறந்தவெளி மைதானமாகச் சொல்லி 'எங்கிருந்தாலும் கவனிக்கப்படுவீர்கள்' என்ற நிதர்சனத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டி, இணைய எழுத்தாளர்களை உஷார் படுத்தியிருக்கிறீர்கள். இங்கு எழுதுபவர்களைப் பற்றியும் மிகச்சிறப்பாக ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்!


    முதல் மின்னூலின் வெற்றி இரண்டாவது மின்னூலுக்கும் கிடைக்கும் என்பதில் சிறிது ஐயம் இல்லை. வாழ்க, வளர்க!

    படித்துக்கொண்டே வரும்போது, அட! இது என்ன, நான் காண்பதென்ன கனவா, நனவா?
    தேவியர் இல்லத்தில் நான் இடம்பெறுவது இது இரண்டாம் தடவை - முதல் தடவை உங்களது டாலர் நகரம் புத்தகத்திற்கு 'ஓர் இல்லத்தரசியின் பார்வையில் டாலர் நகரம் என்ற புத்தக மதிப்புரை எழுதி. இப்போது எனது முதல் புத்தகத்திற்கு வாழ்த்து தெரிவித்து நீங்கள் போட்டுள்ள இந்த பதிவு. உங்களது தீவிரமான எழுத்தை நான் ரொம்பவும் ரசித்துப் படிப்பவள். உங்களைப்போல எழுத முடியவில்லையே என்று பல சமயங்களில் நினைத்தது உண்டு. இப்போது உங்கள் வாயாலேயே பாராட்டு என்பது மிகப்பெரிய விருது! எனது முதல் புத்தகத்தைப் பற்றிய செய்தியை போட்டு கௌரவப்படுத்தியதற்கு நன்றி. டாலர் நகரத்தைப் பற்றி வல்லமை இதழில் நான் எழுதிய மதிப்புரையைப் படித்துப் பாராட்டியிருக்கும் திரு அமுதவன் அவர்களுக்கும், திரு ஸ்ரீராம் அவர்களுக்கும் என் நன்றி!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் எழுத்து வண்டி டாப் கியரில் போய்க்கிட்டு இருக்குங்க. அப்படியே போய்க்கிட்டே இருக்கனும்.

      Delete
  10. புத்தாண்டின் முதல்பதிவு! வாழ்த்துக்கள்!

    // இணையம் என்பதனை நீங்கள் எப்படிப் புரிந்து வைத்து உள்ளீர்கள்? // என்று கேள்வி கேட்டு நிறையவே சரியான விளக்கம் தந்துள்ளீர்கள்.

    தங்களது - ஈழம் வந்தார்கள் வென்றார்கள் – என்ற மின்நூலை ஏற்கனவே தரவிறக்கம் செய்துவிட்டேன். இப்பொழுது - வெள்ளை அடிமைகள் – என்ற மின்நூலையும் தரவிறக்கம் செய்துள்ளேன். புத்தகத்தைப் படிப்பது போல் மின்நூலை என்னால் படிக்க இயலவில்லை. நேரம் கிடைக்கும்போது படித்து முடித்து விடுவேன். நன்றி!

    சகோதரி ரஞ்சனி நாராயணன் பற்றி நல்ல கருத்துரை தந்து இருந்தீர்கள். அவருடைய ஆக்கம் முழுவதும் நூல்களாக வெளிவந்தால் தமிழ் மக்களுக்கு உபயோகமாக இருக்கும்.



    ReplyDelete
    Replies
    1. ஆறாவது மாதம் வரைக்கும் எழுதும் எண்ணம் இல்லை. மாதம் ஒன்று அல்லது இரண்டு வரலாம். நிறைய படிக்க வேண்டியது உள்ளது. மிக்க நன்றி.

      Delete
  11. வாழ்த்துக்கள் சார்! விரிவான பல தகவல்கள்! மீண்டும் வந்து படிக்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  12. அருமையான பதிவு.
    மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. மேலும் சில செய்திகள்
    மின் நூல் (ebook) பற்றி அற்புதமான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
    நன்றி & வாழ்த்துகள் திரு ஜோதிஜி.

    ReplyDelete
  14. nethaji sir....இரண்டாவது மின் புத்தகத்திற்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  15. கம்யுட்டர் அனுபவம் பற்றி ஒரு பதிவு போட்டிருந்தீர்கள். இப்போது மின் நூல் வெளியீடு.

    நவீன தொழில்நுட்பங்களை மிக விரைவாக புரிந்து கொண்டு சரியான பாதையில் பயணிக்கிறீர்கள். வாழத்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆவணப்படுத்தி விட்டு ஒதுங்கி விட வேண்டியது தான். அடுத்து ஒரு முக்கியமான எழுத்துப் பணியில் உள்ளே நுழைய வேண்டும். அதற்கு நாலைந்து வருடங்கள் ஒதுக்க வேண்டியிருக்கும். ஏறக்குறைய நான்கு மின் நூல்கள், ஒரு புத்தகம், போன்றவற்றின் மூலம் எழுதப்பட்ட 70 சதவிகித எழுத்துக்களை ஆவணமாக்க முடிந்ததே ஒரு விதமான மகிழ்ச்சியை தந்துள்ளது. நன்றி சிவானந்தம்.

      Delete
  16. எதையும் விரிவாக அலசும் திறமை தங்களுக்கு உள்ளது.இரண்டாவது மின்னூல் வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள். ஈழம் வந்தார்கள் வென்றார்கள் படித்து வருகிறேன்.
    இன்னும் பல்லாயிரம் பேர் வாசிப்பார்கள் என்பதில் ஐயாமில்லை. மேலும் சிகரம் தொட வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. சோதிட கிளிபோல் தங்கள் எந்தசொல்லை தேர்ந்தெடுப்பது என்றே தெரியாமல் குழம்புகிறேன். முதலில் 9000+கு வாழ்த்துக்கள். இணையம் என்றொரு மாயவலையில் வெளிச்சம் பாய்ச்சுகிறது உங்கள் வரிகள்.ஆனால் இணையம் இல்லை என்றால் உங்கள் படைப்பை படிக்கும் golden choice எனக்கு கிடைக்காமலே போயிருக்கும்!! இணையத்திற்கு நன்றி !!

    ReplyDelete
  18. Visit : http://thiruvarangaththilirunthu.blogspot.in/2014/02/blog-post.html

    ReplyDelete
  19. "குறுகிய இனமாக இருந்த சிங்களர்களும் படிப்படியாக வளர்ந்து இறுதியில் இன்று இலங்கை என்பது பௌத்தர்களின் நாடு என்று வென்று சாதித்துக் காட்டியுள்ளனர். இதை மனதில் கொண்டே இந்த மின் நூல் பேசுவதால் இந்தப் பெயரை தேர்ந்தெடுத்தேன்"

    சரியான காரணமாகத் தோன்றுகிறது. நான் இன்னும் இந்த மின் நூல் படிக்கவில்லை, பொறுமையாகப் படிக்கிறேன்.

    வெள்ளை அடிமைகள்.

    ஜோதிஜி நீங்க கொஞ்ச மாதங்கள் / வருடம் முன்பு அடிமைகள் பற்றி தொடர் எழுதினீர்கள் ஆனால், அதை நீங்கள் தொடரவில்லை. அந்த தொடரா இது?!

    எனக்கு இது போன்ற அடிமைகள் வளர்ந்த வரலாறு விஷயங்கள் படிக்க ரொம்ப விருப்பம். இதை வந்தார்கள் வென்றார்கள் க்கு முன்பே படித்து விடுவேன் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொன்னது சரிதான் கிரி. அவசியம் படிங்க. நன்றி.

      Delete
  20. அன்புள்ள திருப்பூர் ஜோதிஜி அவர்களுக்கு வணக்கம்! தங்களது
    “வெள்ளை அடிமைகள்” என்ற மின்நூல் முழுவதையும் நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை, ஓய்வு கிடைத்தபோது படித்து முடித்தேன்.

    வரலாற்றுக் கட்டுரை எழுதும்போது துணை நின்ற நூல்கள், ஆவணங்கள் பட்டியல் தந்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய ஆசையும் அஃதே. ஆழமாக படிப்பவர்கள் மட்டுமே அது குறித்த மேற்கொண்டு தேடுதலில் ஆர்வம் காட்டுகின்றார்கள். அந்த வகையில் நீங்கள் படித்து இருப்பது புரிகின்றது. நன்றி.

      Delete
  21. மைதிலி கஸ்தூரி ரெங்கன் தங்களைப் பற்றி விவாதிக்கிறார் இன்றைய வலைச்சரத்தில். வாழ்த்துக்கள். தங்களின் பதிவுகளைக் கண்டேன். பயனுள்ள பதிவுகள். நன்றி.
    www.drbjambulingam.blogspot.in
    www.ponnibuddha.blogspot.in

    ReplyDelete
  22. நிறைய விடயங்கள், நீண்ட பதிவு என்றாலும் என்ன ஒரு தெளிவு, என்ன ஒரு தீர்க்கம்..மிகவும் அருமை..உங்களின் 'ஈழம் வந்தார்கள் வென்றார்கள்' படித்தேன்..அறியாத பல தகவல் அறிந்தேன்..நன்றி.

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.