அவன் பெயர் மாரிமுத்து. என்னுடன் பத்தாம் வகுப்பு வரை படித்தவன். ஆண்டுறுதி பரிட்சையில் நொண்டியத்த காரணத்தால் படிப்பை நிறுத்தி விட்டான். உள்ளுருக்குள் இருந்த அரிசி ஆலைக்கு தினக்கூலிக்கு போய்க் கொண்டிருந்தவனுக்கு திடீரென்று அதிர்ஷ்டம் அடிக்க அதே தினக்கூலியாக உள்ளூரில் இருந்த ரேசன் கடையில் வேலைக்குச் சேர்ந்தான்.
ஊரில் இருந்த பிள்ளையார் கோவில் ஊரணிக்கரையைச் சுற்றிலும் இருந்த கடைகள் தான் முக்கியமான ஆள் நடமாட்டம் உள்ள பகுதி. கோவிலை ஓட்டியது போல ரேசன் கடை இருந்தது. கோவிலைத் தாண்டி வருபவர்கள் காலில் போட்டிருக்கும் செருப்பை முன்பே கழட்டி கையில் வைத்துக் கொண்டு அப்படியே பிள்ளையாருக்கும் ஒரு வணக்கத்தை போட்டு விட்டு வேகமாக ரேசன் கடையை நோக்கி ஓடி வருவார்கள்.
கோவிலை ஓட்டியிருந்த ஒரு பகுதியை தடுப்பாக மாற்றி அறை போல் உருவாக்கி ரேசன் கடைக்கு வாடகைக்கு விட்டிருந்தார்கள். ஒரே ஒரு அறை. வெளியே ஒரு கூரை அமைப்பு. கடைக்கு வெளியேயும், பக்கவாட்டிலும் வந்திறங்கும் மண்ணென்ணெய் பேரல்களை நிறுத்தி வைத்திருப்பார்கள். உள்ளூருக்குள் இருப்பவர்களுக்கும் பக்கத்தில் உள்ள சில கிராமங்களுக்கும் இதுவே ஒரே கடையாக இருப்பதால் எப்போதும் கூட்டம் குவிந்திருக்கும்.
எங்கள் வீட்டிற்கு அருகே பேரூந்து நிறுத்தம் இருந்தாலும் ரூட் பஸ் மட்டுமே இங்கே நின்று செல்லும். அருகே உள்ள கிராமங்களுக்கும், அழகப்பா கல்லூரிக்குச் செல்லும் டவுன் பஸ்களும் இந்த ரேசன் கடைக்கு அருகேயுள்ள மேட்டுக்கடை நிறுத்தத்தில் தான் வந்து நிற்கும். காரணம் டவுன்பஸ் என்பது அருகே உள்ள அத்தனை கிராமங்களுக்கும் சென்று வருவதால் மீண்டும் ஊரணிக்கரையைச் சுற்றி வந்து பஸ்டாண்ட் என்ற பெயரில் இருந்த கூரைக்கூடத்திற்கு வராமலே போய் விடும். டவுன் பஸ்ஸில் பயணிக்க வேண்டிய அனைவரும் இங்கே வந்து தான் நிற்பது தான் வாடிக்கை. குறிப்பாக அழகப்பா கல்லூரிகள் மற்றும் அது சார்ந்த பகுதிகளுக்கு டவுன் பஸ் மட்டுமே செல்லும். இதற்கு மேலாக ரூட் பஸ்க்கும் டவுன் பஸ்க்கும் உள்ள கட்டண வித்தியாசம் இருபது பைசா தான் என்றாலும் அதனை கவனத்தில் கொண்டு பயணம் செய்பவர்களும் உண்டு.
ரூட் பஸ் என்றழைக்கப்படும் எந்த பேரூந்துகளும் கல்லூரி பகுதிகளின் உள்ளே செல்லாது. இதன் காரணமாக ஊரிலிருந்து செல்லும் ஒவ்வொரு டவுன்பஸ்களும் நிறைமாத கர்ப்பிணியாகவே இருக்கும். நான் கல்லூரிக்கு செல்ல இங்கே வரும் வழியில் மாரிமுத்துவை பார்ப்பதுண்டு. பேரல் மேல் நின்று கொண்டு என்னடா? என்று உற்சாகமாக கையசைப்பான். சிரித்துக் கொண்டே செல்லும் போது அங்கே கூடியிருக்கும் கூட்டத்திற்குள் நுழைந்து மெதுவாக நகர வேண்டும்.
வீட்டில் ரேசன் அட்டையிருந்தாலும் மண்ணெண்ணெய் மட்டும் எப்போதும் வாங்குவது வாடிக்கை. வேறு எதுவும் வாங்குவார்களா? என்று தெரியாது. குறிப்பாக இது போன்ற வேலைகளுக்கு நான் சென்றதே இல்லை. அண்ணன் முடித்து வைத்து விடுவார்.
அன்று திடீரென்று இந்த பொறுப்பு என் வசம் வந்த போது அட்டையையும், கொண்டு போயிருந்த பெரிய கேனையும் மாரிமுத்துவிடம் ஒப்படைத்து விட்டு அருகே இருந்த ஊரணிக்கரையின் மேல் நண்பர்களுடன் இருந்து கொண்டு அங்கேயிருந்த கூட்டத்தை கவனித்தது இப்போது நினைவுக்கு வருகின்றது.
அந்த கடையின் அமைப்பும், அங்கிருந்த அடிதடி, அவசரம், ஏழ்மை, வாங்கிய பொருட்களை தங்கம் போல பத்திரமாக எடுத்துக் கொண்டு சென்ற அத்தனை மக்களின் முகமும் சில மாதங்களுக்கு முன் என் நினைவிற்கு வந்தது.
காரணம் தொடர்ச்சியான தொந்தரவின் காரணமாக திருப்பூருக்கு ஊரிலிருந்த ரேசன் அட்டையை இங்கே மாற்றியாக வேண்டும் என்று சொல்லி அதுவும் வெற்றிகரமாக நடந்து முடிய வீட்டுக்கு அருகே இருந்த ரேசன் கடைக்கு நான் செல்ல வேண்டிய கட்டாயம் உருவானது. மாற்றி வந்த போதிலும் அருகே உள்ள ரேசன் கடையில் பதிந்து புதிய முகவரியை எழுதி சீல் வைத்து வாங்கினால் தான் ஆவணமாக சமர்ப்பிக்கப்பட முடியும்.
‘இன்று போய் நாளை வா‘ என்று இங்கே கடையில் இருப்பவர்கள் அலைக்கழிக்க நாட்டாமை பொறுப்பு இயல்பாக என்னிடம் வந்து சேர்ந்தது.
வீட்டிலிருந்து நான்கு சந்துகள் தாண்டியிருக்கும் பகுதியில் இருந்த அந்த ரேசன் கடை வழியாக பல முறை சென்றிருந்த போதிலும் இப்படியொரு கடை இங்கே இருக்கின்றது என்பதை நான் பார்த்ததே இல்லை. வீட்டில் அழைத்துக் கொண்டு அங்கே சென்ற போது தான் வளர்ந்த மாநிலம் என்று அழைக்கப்படும் நம் தமிழ்நாடு என்னைப் பார்த்து சிரித்தது.
ஊரில் பார்த்த ரேசன் கடைபோல அதே ஒரே அறை. கூரையால் வேயப்பட்ட அமைப்பிற்கு கீழே அடுக்கி வைக்கப்பட்ட மூட்டைகள். இருபது வருடத்திற்கு முன்னால் இருந்தே அதே ரசீது கிழிக்கும் முறை, நெருக்கடியான இருட்டான அறை, ஒரு நபருக்கு மேல் உள்ளே நிற்க முடியாத அளவுக்கு சிதறிக்கிடக்கும் மூட்டைகள், ஐந்தில் ஒரு பங்கு வீணாகிக்கிடக்கும் தானியங்கள் என்று அக்மார்க் அரசாங்க அலுவலகமாக இருந்தாலும் எடை போடும் எந்திரம் மட்டும் சற்று நவீனமாக மாறியுள்ளது. பருப்பு வகைகள் பாக்கெட் போட்டு வந்து விடுகின்றது. முன்பிருந்த எடை குறைவு என்ற பிரச்சனையின்றி நாம் உச்சபட்ச வளர்ச்சியை பெற்றுள்ளோம். வாங்கும் பொருட்களில் எடை குறைவு என்று குளறுபடிகளையும் உருவாக்க முடியாது என்பது மட்டுமே ஆறுதல்.
ரசீது போட்டுக் கொண்டிருப்பவர் நெருப்பில் இருப்பது போலவே பேசிக் கொண்டிருந்தார். அருகே ஒரு பெண்மணி பெற்ற ரசீதுக்கான பொருட்களை எடைபோட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார். இவரின் குரலும் பேச்சும் தூள் பட சொர்ணாக்கா பாணியில் இருந்தது. எப்போதும் போலவே கூட்டம் அதிகமாகவே இருந்தது. ஆனால் ஊரில் பார்த்த கூட்டத்திற்கும் இங்கே பார்த்த கூட்டத்திற்கும் முற்றிலும் வித்தியாசம்.
ஆடி காரைத்தான் அங்கே பார்க்கவில்லை. மற்றபடி பெரும்பாலான கார்களில் வந்தவர்கள் அங்கே நின்று கொண்டிருந்தார்கள். பெரிய விலை உள்ள அத்தனை விதமான இரண்டு சக்கர வாகனங்களும் தாறுமாறாக நிறுத்தப்பட்டு அந்த சந்தின் வழியாக கடந்து செல்ல நினைப்பவர்களுக்கு மிகுந்த சவாலை உருவாக்கியிருந்தார்கள்.
இவர்களை கவனித்துக் கொண்டே அரசாங்கத்தின் ஒவ்வொரு இலவச திட்டங்களைப் பற்றியும் யோசித்துக் கொண்டிருந்தேன்.
நல்ல கொசுவத்தி சுற்று!
ReplyDeleteஅதாவது ஃப்லாஷ் பேக்!
ஹிஹீ
தங்கிலீஷ் எழுதும் போது கூட தப்பு கண்டு பிடிக்க முடியும்
Deleteப்ளாஷ் என்று தானே வரும் அஜீஸ்
பழைய நினைவுகளை கிளறிய பதிவு.நான் நான்காம் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது இரண்டு மூன்று மணிநேரம் வெய்யலில் காய்ந்து 5 லிட்டர் மண்ணெண்ணெய் வாங்கியது நினைவுக்கு வருகிறது.எவ்வளவு அடிதடி, முன்டியடித்தல். அனால் அவற்றையும் மீறி மண்ணெண்ணெய் வாங்கி முடித்ததும் ஒரு வெற்றி களிப்பு :)
ReplyDeleteநீங்க மட்டுமல்ல. இருபது வருடத்திற்கு முன் படித்தவர்கள் ஊரில் நிச்சயம் இந்த வேலையை செய்திருப்பார்கள்.
Deleteரேசன் கடை விற்பனையாளர்கள் கொஞ்சம் கரடு முரடாகத்தான் இருப்பார்கள்! நல்ல பகிர்வு நன்றி!
ReplyDeleteராஜியும் அதைத்தான் சொல்லியுள்ளார். நன்றி சுரேஷ்
Deleteரசீது போட்டுக் கொண்டிருப்பவர் நெருப்பில் இருப்பது போலவே பேசிக் கொண்டிருந்தார். அருகே ஒரு பெண்மணி பெற்ற ரசீதுக்கான பொருட்களை எடைபோட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார். இவரின் குரலும் பேச்சும் தூள் பட சொர்ணாக்கா பாணியில் இருந்தது.
ReplyDelete>>
வேறு வழியில்லை அவர்கள் அப்படித்தான் இருந்தாகனும். கூட்டுறவு துறையில என்னவர் இருப்பதால அங்கிரூக்கும் நெளிவு சுளிவுகள் எனக்கு நல்லாவே தெரியும். ஒரு கடையில் 100 அட்டைகள் இருந்தால் 80 அட்டைகளுக்குதான் பொருட்கள் அனுப்ப படுது. இதுல அதிகாரிகள் மற்றும் உள்ளூர் பிரமுகர்களுக்கு நல்ல அரிசியும், கோதுமையும் கண்டிப்பா சப்ளை செஞ்சாகனும். சரியான காத்து வசதி இல்லாமை, ஊட்டி தேயில,உப்பு, காஃபி தூள்லாம் கட்டாயம் வித்தே தீரனும்ன்னு ஒரு நெருக்குதல் கூட்ட நெரிசல், அரிசி, பருப்பு நல்லா இல்லைன்னு குறை சொல்லும் கோஷ்டி ஒரு பக்கம், கொஞ்சம் அரிசி சேத்து தாங்கன்னு கெஞ்சும் ஆள் மறுபக்கம்இப்படிலாம் ஒரு மனுசனை சுத்தி இருந்தா அவங்க நெருப்பு மேலதான் இருக்குற மாதிரிதான் எரிஞ்சு விழுவாங்க.
இதுல அதிகாரிகள் மற்றும் உள்ளூர் பிரமுகர்களுக்கு நல்ல அரிசியும், கோதுமையும் கண்டிப்பா சப்ளை செஞ்சாகனும்.
Deleteஇங்கே தான் பிரச்சனை தொடங்குது என்று தெரிந்து கொண்டு நானும் அமைதியாகிவிட்டேன். நன்றி ராஜி