அஸ்திவாரம்

Thursday, September 26, 2013

வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்

கடந்த ஒரு வருடமாக புத்தகங்கள் எதுவும் வாங்குவதில்லை. வீட்டுக்குள் அங்கங்கே அடைந்து கிடைக்கும் புத்தகங்களை ஒவ்வொரு முறையும் பிரித்து அடுக்கி தூசியை தட்டி வைக்கும் போது உருவாகும் குற்ற உணர்ச்சி அளவில்லாதது. புத்தகங்களை ஆசைப்பட்டு வாங்கிய போது உண்டான ஆர்வம் அதை வாசிக்க நேரம் கிடைக்கவில்லை என்ற நொண்டிச்சாக்கில் அடுக்கி வைக்கப்பட்ட பொருளாகவே இருந்து விடுகின்றது.  

ஆனால் இயற்கை, நமது ஆதாரமான விவசாயம், தற்போது விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து தேடத் தொடங்க உள்ளே இருந்த ஒவ்வொரு புத்தகத்திற்கும் மீண்டும் உயிர் வந்தது.  

நான் படித்த சில புத்தகங்களைப் பற்றி இங்கே தருகின்றேன்.

டாலர் நகரம் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டவர்களில் ஒருவர் மருத்துவர் வெ. ஜீவானந்தம் அவர்கள். 

நிஜ வாழ்க்கையிலும் மிகச் சிறந்த சமூக சேகவர். காந்தியவாதி. ஈரோட்டில் வாழ்ந்து கொண்டிருப்பவர். தமிழக பசுமை இயக்கம் மற்றும் மருத்துவ துறையில் எளிய மக்களுக்கு விளம்பரம் ஏதுமில்லாது பல சேவைகள் செய்து கொண்டிருப்பவர்.  அவரின் தந்தையும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான வெங்கடாஜலம் அவர்கள் இறந்த செய்தி கிடைத்த போது அவரின் வீட்டுக்கு குடும்பத்தோடு சென்றேன். அப்போது அவர் ஒரு புத்தகத்தை எனக்கு பரிசாக அளித்தார்.

1. இயற்கைக்குத் திரும்பும் பாதை

இது மொழிபெயர்ப்பு புத்தகம்.  மொழிபெயர்த்தவர் மருத்துவர் ஜீவானந்தம் அவர்கள்.  

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இயற்கையின் மேல் மாறாத பற்று கொண்டு, மேலைநாடுகளுக்கு தன் கருத்துக்கள் மூலம் பல மாறுதல்களை உருவாக்கி சாதித்துக் காட்டிய மசானபு ஃபுகோகா எழுதியது.

இவரைத்தான் நம்முடைய இயற்கை வேளாண் அறிஞர் டாக்டர் கோ. நம்மாழ்வார் அவர்கள் தன்னுடைய குருவாக அடையாளம் காட்டுகின்றார்.

இந்த நூலைப் பற்றி  நம்மாழ்வார் கூறியிருப்பது............

எனக்கான என் பாதையை வகுத்துக் கொடுத்த ஞானத் தந்தை மசானபு ஃபுகோகா.  இந்த நூல் பல இரவுகள் என்னை தூங்கவிட்டதில்லை.  இதுவரை நாம் கொண்டிருந்த அனைத்து நம்பிக்கைகளையும் உடைத்து பெரியதோரு நம்பிக்கையை வழங்கும் வல்லமை கொண்டது இந்த நூல். அயராது சமூகத்திற்கு உழைக்கும் என் நெஞ்சுக்கு மிகவும் நெருக்கமானதாக உள்ளது. என் தோழர்கள் தமிழில் இதனை வெளியிடுவது கூடுதல் அகமழிச்சியை உண்டாக்குகின்றது.  

நிதானமாக வாசியுங்கள்.  நிறைய நண்பர்களுக்கு பரிசளியுங்கள்.  இந்த நூலை படிப்பதும், பரப்பவதும் என்னைப் பொறுத்தவரை புண்ணியம்.  நானும் நீங்களும் சந்திக்கும் அந்த சந்திப்பில் இயற்கைக்குத் திரும்பும் பாதையைப் பற்றி உரையாடுவோம்.  அதற்காக காத்திருக்கிறேன்.

(தொடர்புக்கு இயல்வாகை பதிப்பகம் 99 65 68 89 020.  805 620 050 53)

2. கோவணாண்டி கடிதங்கள் (விகடன் பிரசுரம்)  

இந்த புத்தகத்தை பலமுறை படித்துள்ளேன். ஆனால் ஒவ்வொரு முறையும் படிக்கும் போது நடந்த, நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளோடு ஒப்பிட்டு பார்த்துக் கொள்ள முடிகின்றது. மீண்டும் மீண்டும் படிக்க வைத்துக் கொண்டிருக்கும் புத்தகம் இது. 

கடித வடிவில் எழுதப்பட்ட ஒவ்வொரு தலைப்பையும் படித்தவுடன் உருவாகும் குற்ற உணர்ச்சி அளவில்லாதது. நாண்டுக்கிட்டு செத்து விடலாம் என்கிற அளவுக்கு நக்கல் நையாண்டியுடன் அரசியல், அதிகாரவர்க்கத்தினரை பார்த்து பல கேள்விகளை எளிய மொழியில் பல உண்மைகளை புட்டுப்புட்டு வைக்கின்றது.

கோவணாண்டி என்ற பெயரில் எழுதுவர் யாரென்று எவருக்கும் தெரியாது. ஆனால் அவர் தன்னைப் பற்றி இவ்வாறு சொல்கின்றார்.

விவசாயிகளுக்கு என்றாவது ஒரு நாள் விடிவு வந்து சேர்ந்திடாதா? என்ற ஏக்கத்துடன் அலையும் ஏகலைவன்.

இந்த புத்தகத்தில் கேட்டுள்ள ஒரு கேள்வி.?

ஒவ்வொரு கட்சியிலும் ஏராளமான பிரிவுகள் உண்டு. மருத்துவர் அணி, இளைஞர் அணி என்று.  எந்த கட்சியிலாவது சுற்றுச்சூழல் அணி என்று ஒன்று உள்ளதா?

3. விவசாயிகளைப் பாதுகாப்போம்.

ஈரோட்டைச் சேர்ந்தவரும், பாரதி வாசகர் வட்டம் என்ற அமைப்பை நடத்திவரும் விவசாயி திரு.  சு. சண்முகவேல் எழுதியுள்ளார். 

இந்திய விவசாயத்தைப் பற்றி படித்தவர்கள் பார்வை வேறு விதமாக உள்ளது. கார்ப்பரேட் தனமாக மாற்றி, மேலைநாடுகளில் உள்ளதைப் போல பண்ணை ரீதியான முயற்சியில், நவீன விஞ்ஞானத்தை புகுத்தினால் மட்டுமே இனி உயிர்பெறும் போன்ற வாதத்தை தனது உண்மையான உருப்படியான ஐந்து நிலை செயல்திட்டத்தினை  நூலாசிரியர் கொடுத்துள்ளார்.  

ஒரு விவசாயி விளைவிக்கும் பொருளை கடைசி வரைக்கும் சந்தைப்படுத்தும் நிலையில் என்ன சாத்தியக்கூறுகள், நமக்கான வாய்ப்புகள், அரசாங்கம் செய்ய வேண்டியது, செய்யாமல் இருப்பது போன்ற அனைத்தையும் படங்கள் மூலம் பட்டவர்த்தனமாக எழுதியுள்ளார். ஆதாரப்பூர்வமான சாத்தியக்கூறுகள்.

இவர் சொல்லியுள்ள அனைத்து வழிகளிலும் சாத்தியமானதே.  

ஆனால் நமது விவசாயத்துறையில் உள்ள அதிகாரவர்க்கத்தினரின் தூக்கம் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் தனிப்பட்ட லாபங்களை வைத்துப் பார்க்கும் போது இது வெறுமனே கனவாகவே போய்விடுமோ? என்று எண்ணத் தோன்றுகின்றது.

4. வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்.

கோ. நம்மாழ்வார். (புத்தகதொடர்புக்கு 944 25 31 699)

இந்த புத்தகத்தை நண்பர்கள் சிலர் பலமுறை என் பார்வைக்கு கொண்டு வந்த போதிலும் பல புத்தகங்களுடன் அடுக்கி வைக்கப்பட்டதாகவே என் பார்வையில் இருந்தது.  

ஒவ்வொருவரும் இந்த புத்தகத்தை படிக்க வேண்டும்.

குறிப்பாக பசுமைப்புரட்சி என்ற பெயரில் பெயரும் புகழையும் சம்பாரித்துக் கொண்ட எம்.எஸ்.சுவாமிநாதன் குறித்து அங்கங்கே லேசாக சுட்டிக் காட்டிக் கொண்டே சென்றாலும் இவரைப் பற்றி இணையத்தில் தேடிப் பார்த்த போது 




எம்.எஸ். சுவாமிநாதனுக்கு மட்டும் ஏனிந்த சிறப்பு. இது குறித்து நம்மாழ்வார் இவரின் பின்புலம், கடந்து வந்த பாதை போன்றவற்றை சுட்டிக்காட்டிக் கொண்டே வருகின்றார்?

நம்முடைய இந்திய ஜனநாயக ஆட்சியென்பது குறிப்பிட்ட சில நிறுவனங்களால் நடத்தப்படுவது. இதுபோன்ற நபர்களுக்கு மட்டுமே மரியாதை கிடைக்கும் என்பதை இந்த புத்தகம் பல இடங்களில் தெளிவாக புரியவைக்கின்றது.

இந்த புத்தகத்தை படித்து முடித்த போது எனக்கு மற்றொன்று மனதில் தோன்றியது.   

குறிப்பாக அமெரிக்கா என்ற நாட்டை எல்லாவகையிலும் நாம் குற்றம் சாட்டுகின்றோம்.ஒவ்வொரு முறையும் அங்கே அதிபர்கள் மாறிக் கொண்டேயிருக்கின்றார்கள். சிலர் இரண்டு முறை அதிபர் பதவியை வகிக்கின்றார்கள். 

ஆனால் அந்த நாட்டின் அதிகாரவர்க்கத்தினரின் கொள்கைகள், நோக்கங்கள் என்பது வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளில் இருந்து அடிக்கப்படவேண்டிய கொள்ளை என்பதாக இருந்தாலும் அது ஒவ்வொரு சமயத்திலும் கவனமாக பத்திரமாக கொள்கை ரீதியாகவே கொண்டு வரப்படுகின்றது என்பது தான் மகத்தான ஆச்சரியமாக  உள்ளது.

அங்கே அரசியல் வேறு .  நாட்டு நலன் என்பது வேறு.  இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்வதில்லை. 

அமெரிக்காவினால் உருவாக்கப்படும் எண்ணெய் அரசியல் என்பது பல நாடுகள் பாதிக்கப்பட்டு அங்கே விழும் பிணங்கள் குறித்து எந்த அமெரிக்கனும் அலட்டிக் கொள்வதில்லை என்பதைப் போல உலகில் உள்ள அத்தனை நாடுகளில் உள்ள இயற்கை வளங்களை எப்படி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது போன்ற அவர்களின் திட்டங்களை இந்த புத்தகங்களில் உரையாடல் பகுதியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

குறிப்பாக 1952  முதல் நம் நாட்டின் விவசாயம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை அழகாக விவரிக்கப்பட்டுள்ளது. 

ஆசிய மற்றும் ஆப்பிரக்க கண்டங்களின் உள்ள வளரும் நாடுகளின் மரபினி மாற்றப் பயிர்களைத் திணிக்க ஐக்கிய அமெரிக்க சர்வதேச வளர்ச்சி நிறுவனமானது  US AID , US AGENCY FOR INTERNATIONAL DEVELOPMENT விவசாய உயிர்த் தொழில் நுட்ப ஆதரவுத் திட்டம் 2  ABSP - AGRL. BIO-TECHNOLOGY SUPPORT PROJECT II என்ற பெயரில் நிதி உதவி செய்கின்றது. 

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்  மரபினி மாற்று நெல்லை உருவாக்க பலவித நிதி உதவிகளை பெற்று வருகின்றது.

இதில் இரண்டு நிதி உதவிகள் அமெரிக்காவின் ராக்பெல்லர் பவுண்டேசனிலிருந்து பெறப்படுகின்றது. மரபினி மாற்றுச் சோளத்தை உருவாக்கவும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் நிதி பெற்றுள்ளது.

துணுக்குச் செய்திகள் போல, தனித்தனி கட்டுரைகளாக நம்மாழ்வார் எழுதியுள்ளவற்றை படிக்கும் போது நான் இந்தியாவில் அமெரிக்காவின் தயவால் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் என்ற எண்ணமும், நான் உண்ணும் ஒவ்வொரு சோறும் அமெரிக்கா கொடுத்த பிச்சை என்ற எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை.  

அப்படியென்றால் நம்முடைய இந்தியாவின் வேளாண்மை துறை அமைச்சகம், வேளாண் விஞ்ஞானிகளின் உழைப்பு?????????????

5. உணவு நெருக்கடி  வளர்ந்த நாடுகளின் சுரண்டல்

பாரதி புத்தகாலாயம் வெளியீட்டில் சிறிய புத்தகமாக ஏ. பாக்கியம் அவர்கள் எழுதியது. (மொத்த பக்கம் 23) படித்து முடிக்கும் போது நிச்சயம் இரண்டு நாளைக்கு நமக்குத் தூக்கம் வராது.  விலை பத்து ரூபாய் போட்டுள்ளனர். ஆனால் நிச்சயம் இதன் உண்மையான மதிப்பு இதை விட பலமடங்கு அதிகம்.

நாம் இந்தியாவை நம்ம மன்மோகன் சிங் பன்னாட்டு நிறுவனங்களிடம் அடகு வைத்து விட்டார் என்று போகிற போக்கில் நிலைத்தகவலாக, பதிவுகளாக எழுதி கடந்து போய்க்கொண்டு இருக்கின்றோம்.

ஆனால் உலகம் முழுக்க ஏன் வளர்ந்த நாடுகளில் கூட சிறிய நிறுவனங்கள் எப்படி சந்தையில் இருந்து தூக்கி எறியப்படுகின்றார்கள்? 

யார் கையில் உலகத்தின் கட்டுப்பாடு இருக்கின்றது?

நிறுவனங்களின் பின்புலம் போன்றவற்றை இவர் தான் படித்த ஆங்கில கட்டுகளை ஆதாரமாக வைத்து இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.  

இது போன்ற விசயங்களை எழுதி, படித்து என்ன ஆகப்போகின்றது என்று எண்ணம் கொண்டவர்களுக்கு மட்டும் ஒரு நற்செய்தி.  

நம்முடைய ஆசைகளுக்கு எல்லையே இல்லை.  ஆனால் நம் வாழ்வதற்கு தேவைப்படும் உணவு, அந்த உணவை ஏற்றுக் கொள்ளும் வயிற்றுக்கு ஒரு சிறிய எல்லை மட்டுமே உண்டு.  இந்த வயிற்றின் எல்லையைப் பற்றி நாம் தெரிந்து வைத்திருந்தபோதிலும் நாம்  கொண்டுள்ள முறையற்ற ஆசைகளே இங்கே பலரையும் வாழ விடாமல் தவிக்க வைத்துக் கொண்டிருக்கின்றது.

எப்பேற்பட்ட வில்லாதி வில்லனும், திறமைசாலிகளும் இறந்த பின்பு தன்னை குழியில் போட்டு புதைக்கும் போது அதை அவனால் பார்க்க முடியாது.

அதையும் ஒருவர் படமாக எடுத்து இணையத்தில் போட்டு இருந்தார்.

ஆனால் ஒவ்வொரு நாளும் அனுபவிக்க உகந்த நாளே என்று நாம் எத்தனை ஆட்டம் போட்டுக் கொண்டு இருக்கின்றோம்?

மொத்த நாடுகளும் நமக்கு அடிமை என்று ஆட்டம் போட்ட சர்வாதிகாரிகளும், வியாபாரத்தில் லாபம் தான் குறி என்று வாழ்க்கை முழுக்க பணத்தைத் தேடி ஓடிக் கொண்டு இருப்பவர்களுக்கும் பிணமான பின்பு இந்த வானத்தைப் பார்க்க வாய்ப்பு கிடைக்குமா?

ஆனால் இயற்கை இடைவிடாது தனது பணியை செய்து கொண்டே தான் இருக்கின்றது.



இது போன்ற புத்தகங்களும், பதிவுகளையும் நம் மூளையில் உள்ள நியூரான் நரம்புகளில் பொதிந்து வைத்திருப்போம். இயற்கை ஒவ்வொரு கால கட்டத்திலும் நமக்கு பல பாடங்களை கற்றுத் தந்து கொண்டே இருந்தாலும் நாம் உணர்ந்து கொள்ள விரும்புவதில்லை.

நம் ஆசைகளே நம் வாழ்க்கையை தீர்மானிக்கின்றது. வழி நடத்தவும் செய்கின்றது.

எல்லையில்லா இந்த ஆசைகளைப் பற்றியும், ஆசைகளினால் உருவான வளர்ச்சிகளை, இழந்த அமைதிகளையும் உணர்ந்து கொள்ள இது போன்ற புத்தகங்கள் நமக்கு உணர்த்தும்.

காரணம் கடைசியில் நாம் செல்லுமிடமான இங்கே ஒலிக்கும் இந்த பாடலைக் கூட நாம் கேட்க முடியாது. சாம்பலமாக மாறியிருப்போம்.




விதைகள் உறங்குவதில்லை

மரபணு மாற்ற விதைகள்  பயங்கரத்தின் கதை

மரபணு மாற்ற விதைகள்  பயங்கரத்தின் கதை  1

மரபணு மாற்ற விதைகள்  பயங்கரத்தின் கதை   2

மரபணு மாற்ற விதைகள்  பயங்கரத்தின் கதை   3

மரபணு மாற்ற விதைகள்  பயங்கரத்தின் கதை  4


29 comments:

  1. புத்தகங்கள் குறித்து விபரமாக சொல்லியிருக்கிறீர்கள்...
    கடைசியில் பாடல் அழகான அருமையான பாடல்...
    பகிர்வுக்கு நன்றி அண்ணா...

    ReplyDelete
  2. ///அங்கே அரசியல் வேறு . நாட்டு நலன் என்பது வேறு. இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்வதில்லை. ///

    மிக சரியான ஒரு புரிந்துணர்வு

    ///உலகில் உள்ள அத்தனை நாடுகளில் உள்ள இயற்கை வளங்களை எப்படி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது ///

    அது மட்டுமல்லாமல் தன்னுடைய நாட்டின் இயற்கை வளங்களை எப்படி பாதுக்காப்புது என்பதிலும் தனி கவனம் செலுத்டி வருகிறார்கள் அமெரிக்கர்கள் இந்த பயன்பாட்டைதான் ஒவ்வோரு நாடும் கடைபிடிக்க வேண்டும் ஆனால் தங்களின் சுயநலத்திற்காக எல்லாவற்றையும் அழித்து அமெரிக்காவிற்கு விற்கிறார்கள் மற்ற நாட்டு தலைவர்கள்.

    இங்கே ஒன்றை சொல்லவிரும்புகிறேன் கடந்த வாரம் நாய்க்குட்டி ஒன்றை வாங்கினேன் அதை வாக்கிங்க் கூட்டிக் கொண்டு செல்லும் போது நான் கேரி பேக் எடுத்து செல்ல வேண்டும் ஒரு வேளை அந்த நாய்க் குட்டி ரோட்டில் நம்பர் 2 போய்விட்டால் அதை நாம்தான் எடுத்து அதை வீட்டுக் கழிவுக்ளோடு சேர்த்து போடவேண்டும் இதை எல்லோரும் கடைபிடிக்கிறார்கள் நாயை வாக்கிங்க் கூட்டி செல்லும் ஒவ்வொருத்துவரின் கையிலும் கேரி பேக் கண்டிப்பாக இருக்கும் காரணம் நாயின் கழிவு நீரோடு மண்ணில் கரைந்தால் அந்த மண் மாசுப்படும் என்பதால்தான்.

    இப்ப சொல்லுங்க அவர்கள் எந்த அளவிற்கு தங்கள் நிலங்களை பாதுகாக்கிறார்கள் என்று? இதைப் போன்ற நல்ல பழக்கவழக்கங்களை இந்தியா போன்ற நாடுகள் கடைபிடிக்காமல் கலாச்சார சீர்கேடுகளுக்கான பழக்கங்களை மட்டும் கடிபிடிக்கிறார்கள் இறுதியாக் அமேரிக்க காரன் சுயநலக்காரன் என்று மட்டும் குறை சொல்லுகிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. இந்தியாவில் மிகப் பெரிய பிரச்சனை என்னவென்றால் நம்ப முடியாத இடைவெளி. ஆனால் புழுக்கம் என்பது உள்ளூற வைத்துக் கொண்டு ஏக்கத்தை வளர்த்துக் கொண்டு எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருப்பதால் அரசாங்கத்தால் பல விசயங்கள் முடிவதில்லை. காரணம் அரசாங்கத்திலும் இப்படியான இடைவெளி அதிகம் என்பது அங்கேயிருந்து தான் இந்த புழுக்கம் தொடங்குகின்றது. அதுவே காலம் காலமாக தொடர்கின்றன.

      Delete
  3. // கடந்த ஒரு வருடமாக புத்தகங்கள் எதுவும் வாங்குவதில்லை. வீட்டுக்குள் அங்கங்கே அடைந்து கிடைக்கும் புத்தகங்களை ஒவ்வொரு முறையும் பிரித்து அடுக்கி தூசியை தட்டி வைக்கும் போது உருவாகும் குற்ற உணர்ச்சி அளவில்லாதது. புத்தகங்களை ஆசைப்பட்டு வாங்கிய போது உண்டான ஆர்வம் அதை வாசிக்க நேரம் கிடைக்கவில்லை என்ற நொண்டிச்சாக்கில் அடுக்கி வைக்கப்பட்ட பொருளாகவே இருந்து விடுகின்றது. //

    சிலசமயம் இது போல்தான் ஆகி விடுகிறது. எப்படியோ? படித்து விட்டீர்கள். நமது அடுத்த தலைமுறை நாம் சேர்த்து வைத்த நூல்களைப் படிக்குமா, அவர்களுக்கு நேரம் இருக்குமா அல்லது அவர்களுக்கு பிடிக்குமா என்று தெரியவில்லை.

    தாங்கள் இறுதியில் இணைத்து இருந்த பிறப்பு – இறப்பு தத்துவத்தை உணர்த்தும் பாடல், நெருடலானது. தனிமையில் இருக்கும் போது மீண்டும் இந்த பாடலை நிதானமாக கேட்டு அசை போட வேண்டும். பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. இரவு நேரத்தில் கேட்காதீர்கள். தூக்கம் வராது.

      Delete
  4. நல்லதொரு நூல் அறிமுகத்திற்கு நன்றி...

    அனைத்தும் சிறப்பான புத்தகங்கள்... உங்களின் கேள்விகள் சிந்திக்க வேண்டியவை... பாடல் அற்புதம்...

    ReplyDelete
  5. The song is written by Thiru.Vairamuthu. -Ganesan.

    ReplyDelete
    Replies
    1. என்ன மாதிரியான மனோநிலையில் வைரமுத்து எழுதியிருப்பார் என்று பலமுறை யோசித்ததுண்டு.

      Delete
  6. Very soothing music .... Meaning full lyrics ....! Worth-full books ....
    thanks for sharing na ....!

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்காகவே சில வாரங்கள் எழுதாமல் இருக்கின்றேன். நேரம் கிடைத்து வருவீர்களா என்று பார்க்கின்றேன்.

      தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்.

      Delete
  7. எங்கிருந்து பிடித்தீர்கள் இந்தப் பாடலை? முதல் முறையாகக் கேட்கிறேன். ஆட்டி வைத்துவிட்டது! இணைப்பு - பாடல் வரிகளுடன் கிடைக்குமா?

    ReplyDelete
    Replies



    1. Ganesan RSeptember 28, 2013 at 12:37 PM

      Ranjani Madam, Pl see the link for the Vairamuthu's song http://www.enganeshan.blogspot.in/2011/06/blog-post_24.html. In coimbatore District, (in a few places), this song is broadcast in electric crematorium after burning the body. - Ganesan

      Delete
    2. மின் மயானத்தில் கேட்ட போது எப்போதும் போல இயல்பாக கடந்து வந்து விட்டேன். ஆனால் வீட்டில் இந்த பாடலை பலமுறை திரும்பத் திரும்ப கேட்ட போது மீண்டு வர சில நாட்கள் ஆனது.

      Delete
  8. அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி. புத்தகங்களை வாங்கி வாசிக்க ஆவலாய் இருக்கிறேன். இந்தப் பதிவையும் கூடத்தான்! (அப்புறமாக வந்து....)

    ReplyDelete
    Replies
    1. பாட்டை கேட்டால் உங்கள் பதிவில் போட்டு விடுவீங்க.

      Delete
  9. இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை ...இந்த பாடல் வரிகளை ரசித்தேன் ...உங்கள் பதிவும் அந்த எல்லையைத்தான் சுட்டிக் காட்டுவதாக நினைக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. இயற்கை போதிப்பதும் இல்லை. எதையும் வலியுறுத்துவதும் இல்லை. நானும் உங்களைப் போலத்தான் யோசித்ததுண்டு. ஆனால் நம் தேவைகளுக்கு அப்பாற்பட்டும் மீண்டும் மீண்டும் வேட்டை நாய் போல வெறித்தனமாய் முன்னேறத் தொடங்க இங்கே உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகள் உருவாகின்றது. ஆனால் காலம் காலமாக இயற்கை என்பது வெறுமனே வேடிக்கையாளனாகவே இருப்பதை ஊன்றிக் கவனித்தால் புரியும். ஒவ்வொரு முறையும் சாப்பிட்டு முடித்தவுடன் பசி அடங்கி விடுகின்றது. ஆனால் ஆசைப்பசி மட்டும் அடங்குவதே இல்லை.

      Delete
  10. Ranjani Madam, Pl see the link for the Vairamuthu's song http://www.enganeshan.blogspot.in/2011/06/blog-post_24.html. In coimbatore District, (in a few places), this song is broadcast in electric crematorium after burning the body. - Ganesan.

    ReplyDelete
    Replies
    1. page not available என்று வருகிறதே, கணேசன். என்ன செய்வது?

      Delete
    2. Pl go to enganeshan.blogspot.in. Then go to blog archives pertaining to the month of 06/2011. (Date: 24.06.2011.) Or go to articles of ' Padithathil Pidithathu'. -Ganesan.

      Delete
  11. http://www.enganeshan.blogspot.in/2011/06/blog-post_24.html

    பதிவுலகத்தில் திருட்டுத்தனம் என்ற ஒரு காரணத்தினால் பலரும் பூட்டு போட்டு வைத்து விடுகின்றார்கள். சில தளங்களில் நல்ல விசயங்களை எழுதியிருந்த போதிலும் அது கேட்பாரற்று கிடக்கும். அதை சமூக வலைதளங்களில் பகிரவும் முடியாது. அது போல கணேசன் சமீப காலமாக இப்படி செய்து இருப்பார் போல.

    அந்த பாடலை தமிழ்மணம் செல்வராஜ் தனது அப்பா இறந்த பதவில் போட்டு இருந்தார். திருப்பூரில் கோவை மின மயானத்தில் கேட்டு இருந்த போதிலும் அதை அறிமுக படுத்தும் பொருட்டு இங்கே வெளியிட்டு வைத்தேன்.

    ReplyDelete
    Replies
    1. திரு கணேசன் அவர்களின் மேற்சொன்ன பதிவில் வரிகள் கிடைத்தன. ஒவ்வொரு வார்த்தையும் மனதை பிழிந்து எடுக்கிறது. எங்கள் குடும்ப இறப்புகள் ஒவ்வொன்றாக கண் முன் வந்து போயின. எனது பதிவிலும் போடுகிறேன்.
      இந்தப் பாடலிலிருந்து மனம் மீள நீண்ட நேரம் ஆகும்!
      நன்றி ஜோதிஜி!

      Delete
    2. குடும்ப இறப்புகள் மட்டுமல்ல. நம் நாட்டில் வாழ்ந்த பல தலைவர்கள், என் கண்ணுக்குத் தெரியாமல் இறந்த முன்னோர்கள் என்று ஒவ்வொருவரையும் நினைத்துப் பார்த்துக் கொண்டேன்.

      Delete
    3. சகோதரி ரஞ்சனி நாராயணன் அவர்களூக்கு GOOGLE இல் தமிழில் “ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க” - என்று பாடலின் முதல் வரியைக் கொடுத்து தேடவும்.

      Delete
    4. பாடல் வரிகள், பாடலின் இணைப்பு இரண்டும் கிடைத்துவிட்டன.
      நன்றி இளங்கோ!

      Delete
  12. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  13. பதிவிற்கு ஆதாரங்களாக இருந்த புத்தகங்களை குறிப்பிட்டது சிறப்பு. தொடரின் ஒன்றிரண்டு பதிவுகளை படிக்கவில்லை. விரைவில் படித்து விடிவேன்

    மனதை கலங்க அடித்த பாடலை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி,இதன் தொடர்ச்சியாக தமிழ் இளங்கோ, ரஞ்சனி நாராயணன் பதிவுகள் இந்த பாடலின் தாக்கத்தை உணர்த்துகின்றன. நாத்திகரால் இப்படி எழுத முடியுமா என்று ஆச்சர்யமாக இருக்கிறது.

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.