அஸ்திவாரம்

Wednesday, September 18, 2013

அட்சய பாத்திரம் -- இங்கே விற்பனைக்கு உண்டு

வர்த்தக ஒப்பந்தகங்களிலிருந்து உணவு தானியங்கள் விலக்கி வைக்கப்பட்ட சகாப்தத்தை 1986ல் டெல்லியில் நடைபெற்ற உருகுவே சுற்றுப் பேச்சுவார்த்தை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தது.  அதைத் தொடர்ந்து 1994, 1995 களில் ஏற்பட்ட விவசாய ஒப்பந்தம் விவசாய விளை பொருட்களுக்காக சுதந்திர சந்தையை தீவிரமாக்கின.  இதன் உச்சக்கட்டமாக 1996ல் உலக உணவு உச்சி மாநாடு (WORLD FOOD SUMMIT ) ரோமில் நடைபெற்றது.  

இதில் கலந்து கொண்ட அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகள் உணவு பாதுகாப்பிற்கு உணவு வர்த்தகம் அதிலும் சுதந்திர வர்த்தகம் அவசியம் என வலியுறுத்தின.  அனைத்து நாடுகளையும் நிர்ப்பந்தித்து இதை ஏற்க வைத்தன.

உணவு பாதுகாப்பிற்கு உணவு வர்த்தகம் அடிப்படை என்பதை நாங்கள் ஏற்கிறோம். எங்களது உற்பத்தியாளர்களும், நுகர்வாளர்களும் பொருளாதார ரீதியில் பலமுடைய அனைத்து ஆதாரங்களையும் பயன்படுத்தும் வகையில் நாங்கள் உணவு வர்த்தகத்தையும் இதர வர்த்தக கொள்கைகளையும் கடைப்பிடிப்போம் என்று சொல்லிக் கொண்டு கையழுத்திட்டனர்.,  

ஆனால் உணவு பாதுகாப்பிற்காக கூடி மாநாடு அதற்கான தீர்மானத்தை இயற்றியதுடன், உணவு நெருக்கடிக்கும் விலையேற்றத்திற்குமான வழி வகையுமே துரதிர்ஷடவசமாக உருவாக்கி விட்டது.  

எனவே உணவு பாதுகாப்பிற்காக உள்நாட்டில் இருந்த தடைகளும், நாடுகளுக்கு இடையேயான தடைகளும் உடனடியாக நீக்கப்பட்டன.

இன்றைய உணவுச் சந்தையை அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் தான் கட்டுப்படுத்துகின்றன.  இவர்களின் இளைய கூட்டாளிகளாக ஆஸ்திரேலியா, அர்ஜன்டைனா ஆகிய நாடுகள் உள்ளன.  இந்நாடுகளின் பெரும் நிறுவனங்கள் இச்சந்தைகளில் கோலோசசுகின்றன.  இந்த நாடுகள் இருவகைகளில் உலக சந்தையை கைப்பற்றுகின்றன.  

ஒன்று உணவு தானியங்களுக்கு கூடுதலான மானியங்கள் கொடுப்பது மூலம் ஏழைநாடுகளை போட்டிலிருந்து வெளியேற்றுகின்றனர். இரண்டாவது தொழில் மயமான இறைச்சி உற்பத்தி முறையால் சுதந்திரமான மற்றும் சிறு உற்பத்தியாளர்கள் அழியும் நிலையை உருவாக்கி விடுகின்றனர்.

அமெரிக்காவும், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளும் மாட்டிறைச்சிக்கு கூடுதல் மானியம் வழங்கி உலகச் சந்தைக்கு கொண்டு வந்ததால் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் இறைச்சி வணிகம் துடைத்தெறியப்பட்டது. அமெரிக்கா, ஐரோப்பா, பிரேசில் போன்ற நாடுகளில் அதிகமானிய உதவியுடன் ஏற்றுமதி செய்ததால் கானா நாட்டில் 90 சதவிதமும், செனகல் நாட்டில் 70 சதவீதமும் கோழிப்பண்ணை தொழில் அழிந்தது.  

இதே காரணத்திற்க்காக இங்கு பருத்தி வளர்ப்போர்களின் சாகுபடி வீழ்ந்து, பருத்தி விவசாயத்திலிருந்து பலர் விரட்டப்பட்டனர்.

இறைச்சி உணவு தயாரிப்பில் நவீனத் தொழில்மய முறைகளை பெரும் நிறுவனங்கள் புகுத்துகின்றன.  இதற்கான கால்நடை வளர்ப்பு இதர வசதிகளை அருகாமையில் ஏற்படுத்திக் கொள்கின்றனர்.  அமெரிக்காவில் உள்ள நான்கு பெரும் நிறுவனங்கள் 2005ம் ஆண்டில் மாட்டிறைச்சியை 83.5 சதவீதம் கட்டுப்படுத்தின.

டைசன் (TYSON)  நிறுவனம் நாளைக்கு 36000 மாடுகளை வெட்டுகின்றது. இதே போல கார்கில் (CARGILLS) 28300 மாடுகளையும் ஸ்விப்ட் அண்ட் கோ (SWIFT & CO.)   16759 மாடுகளையும் நேஷனர் பீப் பேக்கர்ஸ் (NATIONAL BEEF PACKERS & CO.) 13000 மாடுகளையும் வெட்டுகின்றன.  

பன்றி இச்சியில் ஸ்மித்பீல்ட் (SMITHFIELD FOODS)  என்ற அமெரிக்க நிறுவனம் ஏகபோகமாக உள்ளது.  ஒரு நாளைக்கு இரு நிறுவனங்களும் 102900 பன்றித் தலைகளை வெட்டுகின்றன. இதனுடன் டைசன், கார்கில், ஸ்விப்ட் சேர்த்து 64 சதவீதம் சந்தையை கட்டுப்படுத்துகின்றன. 

இதனால் அமெரிககாவிலேயே சிறிய இறைச்சி உற்பத்தியாளர்கள் சந்தையிலிருந்து துடைத்தெறியப்பட்டுள்னனர்.  ஸ்மீபீல்ட்    என்ற அமெரிக்க நிறுவனம் கிழக்க ஐரோப்பிய நாடுகளுக்கு தனது திட்டத்தை விரிவுபடுத்தியது.  அங்கு பெரும் இறைச்சி உற்பத்தியில் ஈடுபட்டதால் ருமேனிய  நாட்டின் 90 சதவீதமும், போலந்து நாட்டின் 56 சதவீதமும் உற்பத்தியாளர்கள் பன்றி, மாடு, கோழி தொழிலிருந்து விரப்பட்டுள்ளனர்.

இந்த ஸ்மீத்பீல்ட் நிறுவனம் போலந்து அரசிடமிருந்து ஏற்றுமதி மானியத்தை பெற்றுக் கொண்டு பன்றிக்கறிகளை லைபீரியா, கினியா, ஐவரி கோஸ்ட் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து உள்ளூர் விலையை விட சரிபாதி குறைத்து கொடுக்கிறது.  இதனால் அந்நாட்டு தொழில்கள் படுத்து விட்டன.

இந்த சுதந்திர வணிகத்தால் 90ம் ஆண்டுகளில் மெக்சிகோ விவசாயிகள் 15 கோடி பேர்கள் விவசாயத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இந்த சுதந்திர வணிகத்தால் கடந்த பல ஆண்டுகளில் மூன்று கோடி விவசாயிகள் நிலத்தை இழந்துள்ளனர்.

இந்த உலகச் சந்தையில் வளரும் நாடுகள் வளர்ந்து நாடுகளுடன் சமமமாக போட்டியிட முடியுமா?  அனைத்து வளரும் நாடுகளிலும் வளர்ந்து நாடுகளின் பெரும் நிறுவனங்கள் சூப்பர் மார்க்கெட் மூலமாக ஊடுருவி வருகின்றன. உலகில் சூப்பர் மார்க்கெட் மூலம் விற்பனையாகும் பலசரக்குகளில் 50 சதவீதத்தை ஐந்து நிறுவனங்கள் வைத்துள்ளன.  

இதில் வால்மார்ட் பிரதானமானது.  உலக சில்லரை வர்த்தகத்தை பத்துக் கம்பெனிகள் வைத்துள்ளன.

அதிலும் குறிப்பாக வால்மார்ட், குரேகர் (KROGER)  பிரெஞ்சு கம்பெனி கேரிபோர் (CARREFOUR) பிரிட்டிஷ் கம்பெனி டெஸ்கோ ஆகியவற்றின் ஆதிக்கம் அதிகம்.

உலகில் விதை விற்பனையில் 47 சதவீத விதைகளின் உரிமை மன்சேட்ட, டுபான்ட், சைசென்டா கம்பெனிகளுக்கு சொந்தமானது.  

2007ம் ஆண்டு நெஸ்ட்லே(NESLTLE)உணவு கம்பெனியின் லாபம் 9.7 பில்லியன் டாலர் ஆகும்.  இது 65 ஏழைநாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட    அதிகம்.  

2009 ஜனவரி 31 முடிய வால்மாட் கம்பெனியின் லாபம் 13.3 பில்லியன் (1 பில்லியன் 100 கோடி) டாலராகும்.  இது 88 ஏழைநாடுகளின் (உலகில் சரிபாதி நாடுகள்) மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட (GDP)அதிகம்.  

இந்த நிலைமையில் உலகச் சந்தையில் ஏழைநாடுகள் எப்படி போட்டியிட முடியும்?

வளர்ந்த நாடுகளும் அதன் ஏகபோக நிறுவனங்களும், வளரும் நாடுகளின் சந்தையை கைப்பற்றி கொள்ளை லாபமடித்து, உணவு நெருக்கடியையும், விலையேற்றத்தையும் எற்படுத்துகின்றன.  இதே காலத்தில் நீண்ட கால நோக்குடன் வளரும் நாடுகளின் உணவு முறையை தங்களது உற்பத்திகளை உண்ணும் உணவு பழக்கத்திற்கு மாற்றி அமைத்திடும் காரியங்களையும் இந்நாடுகள் திட்டமிட்டு செய்கின்றன.

விலை உயர்வுக்கும் உணவு நெருக்கடிக்கும் மற்றொரு முக்கிய காரணமாக இருப்பது உயிரியியல் எரிசக்தி தயாரிப்பாகும்.  உணவு கணிசமான அளவு தானியங்களை எத்தனால் மற்றும் பயோ டீசல் தயாரிக்க அமெரிக்காவும், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளும் திருப்பிவிட்டன.

2007ம் ஆண்டு அமெரிக்கா தனது நாடாளுமன்றத்தில் எரிசக்தி சட்டத்தை   (ENERGY INDEPENDENCE AND SECURITY ACT) நிறைவேற்றியது.  எதிர்காலத்தில் 20 சதம் எரிசக்தியை இந்தி உயிரியில் எரிசக்தியிலிருந்து தயாரிப்பது என்று முடிவு செய்தது.

2008ம் ஆண்டு மட்டும் சோள உற்பத்தியில் 30 சதவீதத்தை எத்தனால் தயாரிக்க ஒதுக்கீடு செய்தது.  சுமார் 135 க்கும் மேற்பட்ட உயிரியியல் எரிசக்தி சுத்திகரிப்பு ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன.  மேலும் 74 ஆலைகள் உடனடியாக அமைக்கப்பட்டு வருகின்றன.  ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளும் எண்ணெய் வித்துக்களை உயிரியியல் எரிசக்தி தயாரிக்க திருப்பிவிட்டுள்ளன. பிரேசில் தனது கரும்பு உற்பத்தியில் 50 சதவீதத்தை எத்தனால் தயாரிக்க பய்னபடுத்துகின்றது.

இதற்காக கரும்பு விளைச்சலை அதிகப்படுத்த அமேசான்காடுகளை அழிக்கும் நடவடிக்கைகளும் தொடர்கின்றன.

உயிரியில் எரிசக்திக்கு உணவு தானியங்களை திருப்பிவிட்டது.  கடுமையான விலை உயர்வை ஏற்படுத்தியது.  இதை முதலில் அமெரிக்கா மூடிமறைத்தது. அமெரிக்கா இதனால் விலை உயர்வு முப்பது சதம் மட்டுமே கூடியுள்ளது என்றது.  ஐஎம்எப் 20 முதல் 30 சதம் மட்டுமே கூடியுள்ளது என்றது.  ஆனால் உலக வங்கியின் இரகசிய அறிக்கை மூலம் 141 சதவீதம் விலை உயர்வில், அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பின் இந்த எரிசக்தி திட்டத்தால் மூன்றில் ஒரு பகுதி விலை ஏற்றம் ஏற்பட்டது என்று அம்பலப்பட்டது.

வளர்ந்த நாடுகளின் இந்தப் போக்கு எதிர்காலத்தில் வளரும் நாட்டு மக்களை பட்டினிக்குத் தள்ளிவிடும்.  ஏற்கனவே அமெரிக்காவில் எக்சான்மொபில் (EXXON MOBIL)  ஆர்ச்சர் டேனியல் மிட்லேன்ட்(ADM)  கார்கில் கம்பெனிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சோளத்தை பயிரிட்டு உயிரி எரிசக்திக்கு வழங்குகின்றன.  தற்போது வளரும் ஏழைநாடுகளின் நிலங்களை எல்லம் வளைத்துப் போடும் (LAND LEASE SYSTEM OF RIGHT PURCHASE)  தொழில் வேகமாக பரவி உள்ளது.  2006ம் ஆண்டு முதல் இதுவரை 2 கோடி ஹெக்டேர் நிலங்கள் பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்பிரக்க நாடுகளில் விற்பனை ஆகியுள்ளது.

இது ஜெர்மனியின் மொத்த விவசாய நிலத்தைவிட இருமடங்கு அதிகமாகும். தென்கொரியாவின் தேவூ என்ற நிறுவனம் ஆப்பிரிக்காவின் மடகாகஸ் நாட்டில் 99 வருட வாடகைக்கு 30 லட்சம் ஏக்கர் வாங்கியது.  இதில் உயிரி எரிசக்திக்கான பயிர்களை பயிரிட திட்டமிட்டு, தற்போது அந்நாட்டு மக்களின் எதிர்ப்பால் நிறுத்தி வைக்கப்படுள்ளது.

ஐக்கிய அரபு எமிரட்ஸ் மற்றும் பிலிப்பைன்சில் ஒரு லட்சம் ஏக்கம் நிலத்தை வாங்கியுள்ளது.  எகிப்து மற்றும் உகாண்டாவில் 20 லட்சம் ஏக்கரில் சோளம், கோதுமை விளைவிக்க நிலம் வாங்கி உள்ளது.  இந்தியாவின் 80 முதலாளிகள் எத்தியோப்பியாவில் 75 லட்சம் ஹெக்டேர் நிலத்தை வாங்கி உணவு தானியத்தை பயிட்டு பல நாடுகளில் விற்கின்றனர்.

பல நாடுகளில் இந்த நிலத்தை வாங்கினாலும் இதில் குறிப்பாக பெரும் பங்குதாரர்களாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்களே உள்ளன.

SUNLAM OIVATE EUITY (USA)  நிறுவனம், சவுதி  MUA ZEPHYR FUND   நிறுவனமும், பிரிட்டனின்  CDC நிறுவனமும் முக்கிய பங்குதாரர்களாகும். இந்த நிலம் வாங்கும் போட்டியில் அதிக ஆதிக்கம் செலுத்துவது  EMERGENT ASSETS MANAGEMENT என்று சொல்லப்படும் பிரிட்டிஷ் நிறுவனம் தான்.

ஆப்பிரிக்காவில் வாங்கியுள்ள நிலத்தில் எரிசக்தி தயாரிக்க தேவையான தாவர எண்ணெய் வித்துக்களை பயிரிட்டுள்ளனர்.  ஆப்பிரிக்காவில் அதிக குறைவான விலையில் நிலமும் குறைந்த கூலிக்கு தொழிலாளர்கள், போக்குவரத்திற்கு சுலபமான கடல் மார்க்கம் என்பதால் தான் அங்கு இந்த ஏகாதிபத்திய நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்கள் நிலைத்தை பெருமளவில் வாங்குகின்றன.

எதிர்காலத்தில் ஆப்பிரிக்கா முதல் வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகள் அனைத்தும் மேலும் பட்டினியால் சாகும். அமெரிக்கா ஐரோப்பா எரிசக்தி உபரியில் மிதக்கும்.

(எழுத உதவிய ஆதாரப்புத்தகங்கள் குறித்து இந்த தொடரின் கடைசி பதிவில் வெளியிடப்படும்)

தொடர்புடைய பதிவுகள்

மரபணு மாற்ற விதைகள் -- பயங்கரத்தின் கதை 5



3 comments:

  1. தமிழில் வலைப்பூக்கள் நூற்றுக் கணக்கில் இருக்கிறது, அதில் 60 சதவீதத்திற்கும் மேல் குப்பையாக எதையாவது எழுதி, அவர்களது நெருங்கிய நட்பு வட்டாரம் ஓரிரு மறுமொழி இடுவதில் திருப்தியடைந்துவிடுகிறார்கள். இந்த சூழலில் சமூக வலைதள அந்தஸ்தை நோக்கி தேவியர் இல்லம் நடை போடுவது மகிழ்ச்சியளிக்கிறது. எடுத்துக் கொள்ளும் பொருள் குறித்து, முடிந்த அளவு விபரங்களை திரட்டி ஒரு பதிவு மேற்கொள்வது சமூகத்தின் மீது தங்களின் அக்கறையை பதிவு செய்வதாக அமைகிறது. தொடரட்டும் நல்ல பணி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. இந்த மாதிரி உருப்படியான கட்டுரைகள் தமிழ் ஊடகங்களில் வெகு சிலவற்றிலேயே வருகின்றன. பெரும் விவசாயத் தலைவர்களிலேயே பலருக்கு இந்த விஷயங்கள் தெரிவதில்லை.

    தாமஸ் ஜெபர்சன்: ''நாம் எந்த மாதிரி உணவு உண்ண வேண்டும் எந்த வகையான உடை உடுக்கவேண்டும் என்பவற்றை அரசாங்கத்தின் முடிவுக்கு விட்டோமானால் நமது உடல் சர்வாதிகார நாட்டில் உள்ள மக்களின் ஆன்மாக்கள் போலாகிவிடும் ''. ஆனால் நாம் இன்று அவற்றை சில கம்பெனிகளின் முடிவுக்கு விட்டுள்ளோம். ஐயகோ!

    மாரகேஷ்,WTO, FTA, Intellectual Property Rights போன்றவை கிழக்கிந்திந்திய கம்பெனியின் பாட்டன்கள்.

    உலகில் எந்த நாட்டிலும் விவசாயம் சந்தைப் பொருளாதாரத்தின் கீழ் வீசப்படவில்லை. அமெரிக்காவிலும் ஐரோப்பிய யூனியனிலும் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் இலவசங்கள் மானியங்கள் ஏராளம் ஏராளம். ஆனால் அவர்களின் சீடர்களான மன்மோகனும் மண்டேக்கும் சிவகங்கையும் நமது ஏழை விவசாயிகளை சந்தைப் பொருளாதாரத்தை நோக்கி தள்ளிவிடுவதில் குறியாக உள்ளனர். அப்போதுதானே கார்பொரேட் விவசாயம் வரும்.

    காந்தியடிகள்: ''நீராவியையும் மின்சாரத்தையும் வைத்து பூமியை உறிஞ்சி செய்யும் விவசாயமே இனி நிலைக்கும் என்று இன்றைய விஞ்ஞானம் கூறுகிறது (எனது கருத்து: காந்தி முதலாளித்துவத்தையும் கம்யூனிசத்தையும் இதில் இணையாகவே சாடுகிறார்). சத்தான தூய்மையான உணவு நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி உழைப்பவர்களால் மட்டுமே கிட்டும்''.

    காந்தி இதைக் கூறும்போது ரசாயன விவசாயம் சிறிது ஆரம்பம் ஆனது. மரபணு மாற்ற புரட்டு விவசாயம் வரவே இல்லை.

    தானிய உணவு மேலை நாடுகளில் கால்நடைகளுக்குக் கொடுக்கப் படுவதை நாம் காப்பி அடிப்பது கழிப்பறையில் காகிதத்தை வைத்துத் துடைப்பதற்கு ஒப்பானது.

    விவசாயம் இயந்திர மற்றும் எரி சக்தி அடிப்படைக்கு மாற்றப்படுவது நாம் நம்மை அறியாமல் அடிமைச் சாசனத்தில் கையொப்பம் இடுவதே.

    ஒரு நாட்டின் இறையாண்மையை நிர்ணயம் செய்வது உணவு. அதில் தட்டுப்பாடு வந்தால் அரசியல் சாசனம் நாடாளும் மன்ற ஜனநாயக முறை நீதித் துறை நமது முப்படைகள் யாவுமே நாட்டின் இறையாண்மையைக் காப்பாற்ற முடியாது. ஐ டி கம்பெனிகளும் ஆயத்த ஆடை மோட்டார் வாகன ஏற்றுமதிகளும் காற்றில் பறக்கும்.
    ஒரு கிலோ கோதுமையை உருவாக்க அமேரிக்கா இன்றைய ரூபாய் மதிப்பில் சுமார் 30 ரூ செலவிடுகிறது. ஆனால் அதில் மூன்றில் ஒரு பங்கு செலவில் ஏழை நாடுகளில் இருந்து அந்தக் கோதுமையை வாங்க அவர்களால் முடியும். ஆனால் அவர்கள் செய்ய மாட்டார்கள். ஏனென்றால் அவர்களின் இறையாண்மை அவர்களுக்கு முக்கியம். ஏன் இந்த மெத்தப் படித்த இந்திய அறிவிலிகள் இதைப் போன்ற உருப்படியான விஷயங்களை அமெரிக்க எஜமானர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள்?

    காந்தியடிகள் பிப்ரவரி 1916ஆம் ஆண்டில் பனாரெஸ் இந்து பல்கலைக் கழகத்தில் மாணவர்களிடையே ஆற்றிய உரையில் (Easily one of the best lectures of M K Gandhi) ஒரு பத்தி:

    ''இந்த நாட்டின் தலைவிதி இங்குள்ள அரசியல் தலைவர்கள் டாக்டர்கள் விஞ்ஞானிகள் வக்கீல்கள் கைகளில் இல்லை. அதை நிர்ணயிப்பவர்கள் இந்திய விவசாயிகளே''.

    அது அன்றும் இன்றும் என்றும் சாசுவதமான சத்திய வார்த்தைகள்.




    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.