அஸ்திவாரம்

Wednesday, August 21, 2013

காடு என்பதை எதைச் சொல்வீர்?

குழந்தைகளின் பாடப்புத்தகம் முதல் பேருந்துகளின் பின்புறம் வரைக்கும் தவறாமல் இடம் பெறும் வாசகம்

"மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்"  

பெரும்பாலும் மரங்கள் இருந்தால் தான் மழை பெய்யும் என்பதோடு நம்முடைய சிந்தனை நிறுத்தப்பட்டுள்ளது.  இது தவிர காட்டுப்பகுதி என்றால் சுற்றிப் பார்க்கலாம் அல்லது சுகாதாரமான காற்று என்பதோடு கொஞ்சம் சிலர் யோசிக்கக்கூடும்.  

ஆனால் காடுகளைப் பற்றியோ அதன் உண்மையான சித்திரத்தைப் பற்றியோ படித்தவர்களுக்குக் கூட முழுமையாக புரியுமா? என்பது ஆச்சரியம்.  

காரணம் படித்தவர்கள் எப்போதும் போல வளர்ச்சி குறித்து சிந்திக்க, படிக்காதவர்கள் அத்தனை பேர்களும் கிராமத்தில் குந்திக் கொண்டு பேச இந்த மரங்கள் பயன்படுகின்றது என்கிற ரீதியில் ஒரு வட்டத்திற்குள் கொண்டு வந்து நிறுத்திவிட முடிகின்றது.

நான் வாழும் பெருநகரங்களில் நாள்தோறும் உருவாகும் வளர்ச்சி, காங்கீரிட் காடுகள், நகர மயத்திற்கு பலியாகும் மரங்கள் என்பதை பார்த்துக் கொண்டே வந்தாலும் நான் வாழ்ந்த ஊருக்கு சென்று திரும்பும் போது அங்கே பார்க்கும் காட்சிகள் தான் அதிக ஆதங்கத்தை உருவாக்குகின்றது.  

கிராமங்கள் தனது அடையாளத்தை இழந்து விட மனிதர்களும் கிராமத்தை விட்டு வெளியே வந்து விட ஆளில்லா பெரிய வீடுகளும், பேச்சுத் துணைக்கு ஆளில்லா முதியவர்களும் வாழ்வதற்கான இடமாக இன்றைய கிராமங்கள் இருக்கின்றதோ என்று நினைத்துக் கொள்வதுண்டு.  

காரணம் சீக்கிரம் வளர வேண்டும். மனதில் நினைப்பதை உடனே அடைந்து விட வேண்டும் என்ற எண்ணம் ஏராளமான ரசாயன மாற்றங்களை உருவாக்கிக் கொண்டிருப்பதால் இங்கே வளர்ச்சி என்ற சொல்லைத் தவிர வேறொன்றையும் எவரும் நினைத்துப் பார்க்கத் தயாராக இல்லை என்பது தான் எதார்த்தம்.

எல்லாவற்றையும் பெற்று விடுவோம். ஆனால் இழந்த இயற்கையை மீண்டும் பெற்று விடமுடியுமா? என்ற கேள்வி மனதிற்குள் ஒலித்துக் கொண்டிருக்க அது குறித்த விபரங்களை அறிந்து கொள்ளும் பொருட்டு நான் வைத்துள்ள புத்தகங்களில் தேடிப் பார்த்தேன். 

திரு. நக்கீரன் அவர்கள் எழுதிய மழைக்காடுகளின் மரணம் (பூவுலகின் நண்பர்கள் வெளியீடு) என்ற புத்தகம் என் பார்வையில் பட்டது.  ஆசிரியர் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்து விட்டு, மொத்தமாக நடந்து கொண்டிருக்கும் கொடுமைகளை தடுக்க முடியாதவராக அதை விட்டு வெளியே வந்து தற்போது தான் கண்ட ஒவ்வொன்றையும் ஆவணப்படுத்துவதில் முழு நேரத் தொழிலாக முனைப்பாக ஈடுபட்டுள்ளார். 

தற்போது நன்னிலத்தில் வசிப்பதோடு முழு நேரமாக இந்த இயற்கை சார்ந்த விசயங்களுக்காக மாநாடு, கருத்தரங்கம், எழுத்துப்பணி என்று தன்னை மாற்றிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.  

பெரும்பாலும் இயற்கையை நேசிப்பவர்கள் இயற்கையாகவே அவர்களின் வாழ்க்கையும் மாறிவிடும் என்பதற்கு அவரோடு உரையாடிய போது புரிந்து கொள்ள முடிந்தது. அவர் எழுதியுள்ள சில விசயங்களை இங்கே பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்.

ஒவ்வொரு நூற்றாண்டிலும் இயற்கைக்கு எதிரான சவால்கள் இங்கே ஏராளமாக நடந்து கொண்டே தான் இருக்கின்றது.  விஞ்ஞானத்தின் வளர்ச்சி இங்கே ஏராளமான வசதிகளை வாய்ப்புகளை தந்து கொண்டேயிருந்தாலும் இந்த நிமிடம் வரைக்கும் இயற்கையை முழுமையாக புரிந்து கொள்ளவும் முடியவில்லை.  அதை வெல்லவும் முடியவில்லை.

வளர்ச்சி வளர்ச்சி என்கிறோமே, இந்த செய்தியை கேளுங்கள்.

அமேசான் காட்டுக்குள் சில ஆயிரம் சதுரை மைல் காடுகளை ஓரிடத்தில் அழித்தார்கள்.  எதற்கு அய்யா அழிக்கிறீர்கள் என்றுக் கேட்டால், தொழிற்சாலை அமைக்கின்றோம் என்றார்கள்.  அது தான் வளர்ச்சி ஆயிற்றே எதுவும் கேட்கக்கூடாது என்று பேசாமல் இருந்தால் அதைச் சுற்றிலும் இருந்த மழைக்காடுகளில் இருந்து நாளொன்றுக்கு ஈராயிரம் டன் எடையுள்ள மரங்களை வெட்ட ஆரம்பித்தார்கள். 

பதறிப் போய் இது எதற்கு? என்று கேட்டால் மரக்கரி தயாரிக்கிறோம் என்றார்கள்.  மரக்கரி எதற்கு என்றால் அதை எரித்து நாளொன்றுக்கு 55 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கின்றோம் என்றார்கள்.  

மின்சாரம் எதற்கு? அந்த தொழிற்சாலையை இயக்குவதற்காம்.  அப்படியானல் அந்த தொழிற்சாலையை தொடர்ந்து இயக்குவதற்கு எவ்வளவு காடுகள் தொடர்ந்து அழிக்கப்படவேண்டும்.  அது என்ன தொழிற்சாலை? எஃகு தொழிற்சாலை.  அந்த எஃகு என்ன ஆகிறது? ஜப்பானுக்கு ஏற்றுமதி ஆகிறது. அதை வைத்து அங்கு கார்கள் தயாரிக்கின்றார்கள்.  

அந்த கார்களை அங்கிருந்த இறக்குமதி செய்து கொண்டு நாம் சொகுசாக வாழ்கிறோம்.

நம் ஆடம்பர சொகுசுக்கு கொடுக்கும் விலையோ நாம் உயிர் வாழ அடிப்படைக் காரணமாக  இருக்கும் உயிர்வளி.

உயிர்வளி என்றால் என்ன?

காற்றில் 21 சதவிகிதம் தான் நாம் சுவாசிக்கும்  உயிர்வளி (ஆக்ஸிஜன்) இருக்கிறது.  இந்த அளவும் கூட மரங்களும், இதர தாவரங்களும் நமக்கு கொடுக்கும் பிச்சையினால்தான் கிடைக்கின்றது. அவை தான் கரியமில வாயுவை தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே இந்த உயிர்வளியை சக்கையைப் போல நமக்காக தொடர்நது துப்பிக் கொண்டே இருக்கின்றது. 

நம்முடைய உடலில் இருக்கும் நுரையீரலைப் போல இந்த உலகத்திற்கும் ஒரு நுரையீரல் இருக்கிறது.

உலகின் நுரையீரல் எனப்படுவது அமேசான் மழைக்காடுகளே. 

இந்த உலகத்திலுள்ள அனைத்து உயிர்களுக்கு தேவையான மொத்த உயிர்வளியில் ஐந்தில் ஒரு பங்கு அதாவது 20 சதவிகிதம் இங்குதான் உற்பத்தி ஆகிறது. உலகில் உள்ள மற்ற காடுகள், கடல் தாவரங்கள் ஆகியவை இணைந்து மீதமுள்ளவற்றை உற்பத்தி செய்து நாம் சுவாசிக்கத் தருகின்றது.  இப்படிப்பட்ட காடுகள் தான் இன்று அழிவுக்கு உள்ளாகி வருகின்றது.

காகிதம் தயாரிக்க என்பது போல ஒவ்வொன்றுக்கும் இன்று காட்டை அழித்துக் கொண்டிருக்கின்றார்கள். 

பிரிட்டன் நாட்டில் செயல்படும் பார்க்லேஸ் வங்கி போன்ற பல பன்னாட்டு நிறுவனங்கள் லத்தின் அமெரிக்கா நாடுகளிடம் "காட்டை எங்களிடம் தாருங்கள். நாங்கள் மனிதர்களுக்கு தேவையான உணவை தயாரித்து தருகிறோம்" என்றார்கள்.

லத்தின் அமெரிக்க நாடுகளும் தங்கள் பங்குக்கு வரிவிலக்கு, மானியம் போன்ற சலுகைகளை வாரி வழங்கின.  முதலில் காடுகளை அழித்து அவற்றை மேய்ச்சல் நிலங்களாக மாற்றினார்கள்.  அதில் இறைச்சிக்காக கால்நடைகளை வளர்த்தார்கள்.  மக்களுக்கான இறைச்சியை மலிவாக ஏற்றுமதி செய்தனர்.  

எந்த ஊர் மக்களுக்கு?

அதுதான் செய்தியே.  வளர்ந்த நாடுகளின் மக்களுக்குத்தான். 

லத்தின் அமெரிக்க அரசுகளுக்கு கிடைத்ததோ சொற்ப லாபம் மட்டும் தான். அந்நாட்டு மக்களின் வரிப்பணத்தை அரசு சலுகைகள் என்ற பெயரில் சுருட்டிக் கொண்டு அந்த அந்நிய நிறுவனங்கள்தான் உண்மையில் கொழுத்த லாபத்தை அறுவடை செய்துக் கொண்டன.

நிலங்கள் சத்து இழக்க நிறுவனங்கள் மூட்டை கட்டிக் கொண்டு தங்கள் நாட்டுக்கு சென்று விட்டன. இப்படி வளம் உறிஞ்சப்பட்டு ஒரு காலக்கட்டத்தில் தரிசாகக் கைவிடப்பட்ட இப்படிப்பட்ட நிலங்களின் பரப்பு பிரேசிலில் மட்டும் சமார் 63 000 சதுர மைல்கள்.

இந்த இடத்தில் மற்றொரு சுவராசியம் உண்டு.

ஜெர்மானியர்களுக்கு வாழைப்பழம் என்றால் மிகவும் பிடிக்கும்.  ஆனால் ஐரோப்பாவில் வாழைப்பழங்கள் விளைவது இல்லை.  பணக்கார ஜெர்மானியர்களின் உணவில் அவசியம் வாழைப்பழம் இருந்தே ஆக வேண்டும்.  அதுவும் நல்ல நீளமான கொழுத்த இயற்கை சுவையுள்ள வாழைப்பழங்கள் தான் வேண்டும்.  

அது எப்படி கிடைக்கும்.  

ஒரு மழைக்காட்டை அழித்தவுடன் அந்நிலத்தில் முதன் முதலாக பயிர் செய்யப்படும் வாழையிலிருந்தே அத்தகைய பழங்கள் கிடைக்குமாம்.  ஒரு நிலையில் வாழைப்பழங்கள் கிடைக்காமல் போகவே அதைப் பயிரிடுவதற்காகவே அமேசானின் காடுகளை அழிக்கத் தொடங்கினார்கள்.  காடுகள் அழிந்தாலும் பரவாயில்லை.  

நமக்கு தேவை வாழைப்பழம் தான் என்ற உரந்த எண்ணத்தின் வரலாற்று பதிவு இது.

அமேசான் காடுகள் என்ற வார்த்தையில் இந்தியாவை வைத்தும் நாம் பார்த்துக் கொள்ள முடியும். கூடவே வடகிழக்கு மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கின்றோம் என்று சொல்லும் மத்திய அரசாங்கத்தையும் நாம் நினைத்துக் கொள்ளலாம். மனதில் வந்து போகும் போராட்டங்களையும் உயிர்ப்பலிகளையும் மனதில் கொஞ்சம் நிறுத்திப் பார்க்கலாம்.  தப்பில்லை.


22 comments:

  1. "நம் ஆடம்பர சொகுசுக்கு கொடுக்கும் விலையோ நாம் உயிர் வாழ அடிப்படைக் காரணமாக இருக்கும் உயிர்வளி."

    இங்கே நாம் என்பது குற்றவாளிகள் தப்பிக்க உதவுகிறது. இந்த ”நாம்”தான் முதலாளிகளுக்கு கவசமாகப் பயன் படுகிறது. “நாமை“ “நீ“யாக்கினால்தான் இதற்கு விடிவு உண்டு.

    ReplyDelete
    Replies
    1. ஆடம்பர எண்ணங்கள் நுகர்வு கலாச்சாரத்தில் நம்மை வெள்ளமாக அடித்துக் கொண்டு சென்று கொண்டிருக்கும் வரை சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது சவால் தான்.

      Delete
  2. .
    சில மாதங்களுக்கு முன்னால் ஈசா மையத்தின் மேல் வழக்கு தொடுத்தார்கள் காடுகளை அழித்து பெரிய எந்திரங்களைப் பயன்படுத்தி கட்டிடங்களை எழுப்புவதாக

    இது குறித்து முக நூலில் தெரியப்படுத்திய போது நண்பர் ஒருவர் வெகுண்டெழுந்து ஈசாவின் சமூக பணிகள் குறித்து தெரிவித்திருந்தார்.

    சில வாரங்களுக்கு முன் தொலைக் காட்சி ஒன்றின் நேர்காணலில் தோழர் தா.பாண்டியன் இ.கம்யூனிஸ்டு கட்சியின் மாநில பொ.செ. தெரிவித்த தகவலில் ஈசாவின் "சமூகத் தொண்டு"-ஐ பற்றித் தெரிந்து கொண்டேன்.

    நண்பர் தெரிவித்தார் ஈசா மூலம் இலட்சக் கணக்கான மரக் கன்றுகள் நடப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன என்று.

    தோழர் தெரிவித்தார். உலக வங்கி மரக் கன்று நட மரக்கன்றும் ரூபாய் பதினொன்றும் வழங்குகிறது. ஆனால் மரக்கன்று மட்டும்தான் வருகிறது ஆனால் பதினோறு ரூபாய் வருவதில்லை என்று.

    இரண்டையும் இணைத்துப் பார்த்தால் தெரிகிறது "சமூகத் தொண்டு" என்னவென்று

    மேலும் காடுகளில் நூறு மரங்கள் இருப்பதை விட நகரங்களில் இலட்சம் மரம் வளர்ப்பது ஒன்று சிறந்தது அல்ல. காரணம் காடுகளில் மனிதன் இருப்பதில்லை எனவே அங்கு பல்லுயிரிகள் வாழும். ஆனால் நகரத்தில் இருக்கும் மரத்தில் குருவியைக் கூட கூடு கட்ட விடுவதில்லை. பூச்சிக் கொல்லி என்னும் நஞ்சும் தெளிக்கப்பட்டு உயிர் காக்கும் மரத்தைக்கூட நஞ்சாக்கி விடுகிறான் மனிதன். எனவே வனத்தை அழித்து நகரத்தில் மரம் வளர்க்கச் சொல்லும் ஈசா போன்ற மோசடிகளை நாம் அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும். வனத்தை வளர்ப்போம். உயிர் இனத்தைக் காப்போம்.

    . இக் குறிப்பு ஈசாவிற்கானது மட்டுமல்ல அனைத்து வன அழிப்பு இயக்கங்களுமானது. இதில் ஈசாவை குறிப்பிட்டதன் காரணம் அது அறிவியல்பூர்வமாக மோசடித்தனமாக வனத்தை அழித்து பணமாக்கும் பணியை மேற்கொண்டுள்ளதாலும் அந்தப் பகுதியைச் சார்ந்தவன் என்பதாலும்.

    ReplyDelete
    Replies
    1. ஈஷா மற்றும் சாமியார் கம்பெனி பற்றி வினவு தளம் சவுக்கு இரண்டு பேரும் எழுதியுள்ளதை ஒரு முறை வாசித்துப் பாருங்களேன்.

      Delete
    2. சவுக்கு தளத்தில் படித்துள்ளதன் அடிப்படையில் எழுந்த விவாத்தம் தான் மேலே குறிப்பிட்டது.

      Delete
  3. "நினைவில் காடுள்ள மிருகம்" அது கடைசி வரைக்கும் மாறாது. அதுபோல் மனிதன் மனதில் "நினைப்பதை உடனே அடைந்து விட வேண்டும்" என்ற எண்ணத்தை பதித்து விட்டான்.கடைசி மனிதனையும் அழித்து தான் இயற்கை தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. மிருகத்தை கூட அடக்கி விட முடியும். ஆனால் மனதில் உள்ள மிருகத்தை மனிதன் அடக்க விரும்புவதில்லையே.

      Delete
  4. படம் : தாய்க்கு பின் தாரம்

    வானம் பொழியுது பூமி விளையுது தம்பி பயலே...
    நாம வாடி வதங்கி வளப்படுத்துறோம் வயலே...
    வானம் பொழியுது பூமி விளையுது தம்பி பயலே...
    நாம வாடி வதங்கி வளப்படுத்துறோம் வயலே...
    ஆனால் தானியமெல்லாம் வலுத்தவருடைய கையிலே...
    தானியமெல்லாம் வலுத்தவருடைய கையிலே...
    இது தகாதுன்னு எடுத்து சொல்லியும் புரியலே...

    அதாலே மனுசன மனுஷன் சாப்பிடுராண்டா தம்பி பயலே...
    இது மாறுவதெப்போ திருந்துவதெப்போ நம்ம கவலே

    ReplyDelete
  5. மாடா உழைச்சவன் வாழ்க்கையிலே -
    பசி வந்திடக்காரணம் என்ன மச்சான்...?

    அவன் தேடிய செல்வங்கள் வேறு இடத்திலே
    சேர்வதினால் வரும் தொல்லையடி...!


    பஞ்ச பரம்பரை வாழ்வதற்கே இனி
    பண்ண வேண்டியது என்ன மச்சான்...?

    தினம் கஞ்சி கஞ்சி என்றால் பானை நிறையாது...
    சிந்திச்சு முன்னேற வேணுமடி...!


    வாடிக்கையாய் வரும் துன்பங்களை
    இன்னும் நீடிக்க செய்வது மோசமன்றோ...?

    இருள் மூடிக் கிடந்த மனமும் வெளுத்து
    சேகரித்தால் இன்பம் திரும்புமடி...!


    நல்லவர் ஒன்றாய் இணைந்துவிட்டால்
    மீதம் உள்ளவரின் நிலை என்ன மச்சான்...?

    நாளை வருவதை எண்ணி எண்ணி
    அவர் நாழிக்கு நாழி தெளிவாரடி...!


    அட காடு விளஞ்சென்ன மச்சான்...
    நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்...
    கையும் காலுந்தானே மிச்சம்...

    நானே போடப்போறேன் சட்டம்...
    பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்...
    நாடு நலம் பெறும் திட்டம்...
    நன்மை புரிந்திடும் திட்டம்...
    நாடு நலம் பெறும் திட்டம்...

    படம் : நாடோடி மன்னன்

    திட்டம் கனவில்...

    ReplyDelete
    Replies
    1. பாடல்கள் அனைத்தும் இன்னும் 50 வருடங்கள் ஆனாலும் பொருந்தக்கூடியதாக உள்ளது. நன்றி தனபாலன்

      Delete
  6. //கிராமங்கள் தனது அடையாளத்தை இழந்து விட மனிதர்களும் கிராமத்தை விட்டு வெளியே வந்து விட ஆளில்லா பெரிய வீடுகளும், பேச்சுத் துணைக்கு ஆளில்லா முதியவர்களும் வாழ்வதற்கான இடமாக இன்றைய கிராமங்கள் இருக்கின்றதோ என்று நினைத்துக் கொள்வதுண்டு//
    எங்கள் கிராமம் சாட்சாத் இப்படித்தான் இருக்கிறது. ஆளரவமற்ற ஊராய் மாறி சில வருடங்களாகிவிட்டது.
    காடுகளின் அருமையை இனிமேலும் உணராவிட்டால் மனிதர்கள் வாழ்ந்தே பிண்ணியமில்லை.

    ReplyDelete
    Replies
    1. இன்னும் பத்து வருடங்களில் நாம் ஏராளமான வேடிக்கையை பார்க்கப் போகின்றோம்.

      Delete
    2. //
      வேடிக்கையை பார்க்கப் போகின்றோம்.
      //

      அதான் வழக்கமா நடந்துகிட்டு இருக்கே

      Delete
  7. // ஜெர்மானியர்களுக்கு வாழைப்பழம் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் ஐரோப்பாவில் வாழைப்பழங்கள் விளைவது இல்லை. பணக்கார ஜெர்மானியர்களின் உணவில் அவசியம் வாழைப்பழம் இருந்தே ஆக வேண்டும். அதுவும் நல்ல நீளமான கொழுத்த இயற்கை சுவையுள்ள வாழைப்பழங்கள் தான் வேண்டும். //

    வாழைப்பழத்தின் அருமை பணக்கார ஜெர்மானியர்களுக்குத் தெரிகிறது. நம்மவர்களுக்கு புரிவதில்லை. பிள்ளைகளுக்கு உரித்து ஊட்ட வேண்டும்.


    ReplyDelete
    Replies
    1. இங்கு ஒரு வாழைப்பழம் நான்கு ரூபாய். ஆனால் தரமானது அல்ல.

      Delete
  8. கிராமத்து நினைவுகளுக்கு தாங்கள் எழுதிய பின்னூட்டத்தை தங்கள் அனுமதியின்றி பதிவாக மாற்றியிருக்கிறேன்... மன்னிக்கவும் அண்ணா...

    இந்தப் பதிவை நாளை படித்து கருத்து இடுகிறேன்.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. காடுகள் மனிதகுலத்தின் ஆயுள் கா(ப்பீ)டுகள்.

    ReplyDelete
    Replies
    1. தலைப்பாக இதையே வைத்திருக்கலாம் போல. நல்லாயிருக்கு

      Delete
  11. Hi,

    Where to get the மழைக்காடுகளின் மரணம் (பூவுலகின் நண்பர்கள் வெளியீடு)?

    Regards
    Ranjit.S

    ReplyDelete
    Replies
    1. கடிதம் வாயிலாக தங்களுக்கு புத்தக ஆசிரியர் திரு நக்கீரன் அவர்களின் கைபேசி எண் அனுப்பி உள்ளேன்,

      Delete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.