அவர் ஒதுங்கி விட்டார் என்பதற்கும் அவரை ஒதுக்கி விட்டார்கள் என்பதற்கும் உண்டான வித்தியாசங்களை உணரத் தெரிந்திருந்தால் பிரபல்யம் என்பதற்கான உண்மையான அர்த்தம் உங்களுக்குத் தெரியக்கூடும்.
ஈசலை ஆயுள் குறைந்த உயிரினம் என்கிறார்கள். ஆனால் ஈசலை விட இன்று பிரபல்யங்களின் புகழ் என்பது மணிக்கணக்கில் என்கிற அளவுக்கு மாறியுள்ளது.
இங்கே புகழை வெளிச்சம் என்கிறார்கள். கூடவே அவர் அதிர்ஷ்டக்காரர். அதனால்தான் தாக்கு பிடிக்க முடிந்தது என்கிறார்கள். இந்த வெளிச்சத்திற்குள் வாழ்பவர்களின் உண்மையான வாழ்க்கையை அறியாத சராசரிகள் தினமும் ஏக்கத்தில் பாதி தூக்கத்தில் பாதி என்று தான் jவாழ்கின்றார்கள்.
இங்கே பிரபல்யம் என்பது இரண்டு துறைகளுக்கு அடங்கிப் போய்விடுகின்றது.
ஒன்று திரைப்படம் மற்றொன்று அரசியல்.
நாட்டுக்குத் தேவைப்படும் வேறெந்த துறைகளில் உள்ளவர்களைப் பற்றி எவரும் பேசுவதில்லை.
இதற்கு முக்கிய காரணம் ஊடகங்கள் தரும் முக்கியத்துவம்.
மற்ற எந்த துறையைக் குறித்து ஊடகங்கள் எழுதினால் வெகுஜனம் வாசிக்கத் தயாராக இல்லை என்கிற நிலைக்கு வந்து விட்டது. மக்களுக்கு படிப்படியாக கொடுக்கப்பட்ட போதையினால் விட்டில் பூச்சிகள் போலவே மாறி இவற்றைப் பற்றியே பேசுகின்றார்கள். ஒரே விசயத்தைப் பற்றியே பொய்யாக வெவ்வேறு விதமாக எழுதியபோதும் விரும்பியே படிக்கின்றார்கள்.
படிக்க வைப்பதும் படிப்பவர்கள் விரும்புவதை கொடுப்பதும் தான் ஊடக தர்மம். அது தான் இங்கே நடந்து கொண்டிருக்கின்றது.
ஆனால் புகழ் என்பதன் அர்த்தத்தை எவராலும் இன்று வரையிலும் அறுதியிட்டு சொல்ல முடியவில்லை. காந்தியின் புகழ் நேருவின் புகழுக்கு சம்மந்தம் இல்லாதது. காமராஜரின் புகழோடு அண்ணாவின் புகழை ஒப்பிடமுடியாது. ஆனால் இவர்களின் புகழ் இன்று வருடந்தோறும் பிறந்த தினம், இறந்த தினம் என்ற இரண்டு நாட்களில் நினைவு கூறுதலோடு முடிந்து விடுகின்றது.
ஆனால் திரைப்பட புகழில் இதையும் எதிர்பார்க்க முடியாது.
தியாகராஜ பாகவதரைக் கொண்டாடிய தமிழ்நாடு கடைசி காலத்தில் அம்போ என்று விட்டது. சிவாஜிக்கு கிடைத்த பெருமை அவரை அரசியலில் அந்தர்பல்டி அடிக்க வைத்தது. எம்.ஜீ.ஆர். புகழ் என்பதையும் தாண்டி தமிழ்நாட்டை அரசடித்தது. பல சமயம் பலரையும் அச்சம் கொள்ளவும் வைத்தது. அவர் அமெரிக்காவில் இருந்து வந்ததும் பதவியை அவரிடம் கொடுத்து விடுகின்றேன் என்று கலைஞரை கெஞ்சவும் வைத்தது.
மணி நேர புகழ் நிலையில் சமீபத்தில் இறந்த கவிஞர் வாலியின் மரணமும் நடிகை மஞ்சுளாவின் மரணம் அதிகமான செய்திகளை மறைமுகமாகச் சொல்லியது.
வெளிச்சத்தில் நடித்து வெளிச்சத்தை விரும்புவர்களின் வாழ்க்கையை பத்திரிக்கைகள் கொண்டாடும் அளவுக்கு அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை இந்த சமூகத்திற்கு என்ன செய்தி சொல்கின்றது என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை என்று தான் தோன்றுகின்றது.
நடிகராக நடிகையாக மாறத்தொடங்கியதும் அவர்கள் வாழ்க்கையும் பொது பந்தியில் பறிமாறக்கூடியதாகவே மாறி விடுகின்றது.
இதுவொரு சிறைப்படுத்தப்பட்ட வாழ்க்கை என்றாலும் நாளுக்கு நாள் இதை விரும்புவர்கள் தான் அதிகமாகிக் கொண்டே தான் இருக்கின்றார்கள்.
இதுவே தான் துக்கடா வேடத்தில் நடித்தவரையும் பிரபல்ய நடிகர் மோசடியில் சிக்கினார் என்பதும் ஒரே ஒரு காட்சியில் வந்த நடிகையை சினிமா நடிகை ரெய்டில் கைது என்றும் மாறிவிடுகின்றது.
அதிக அளவு வெளிச்சமும் அது தரும் சூட்டைத் தாங்கியும் வளரும் நடிக நடிகைகள் முதல் சுவரொட்டிகளை சுவற்றில் ஒட்டி கட்டப்பஞ்சாயத்து வரைக்கும் வளர்ந்து கட்சியில் முக்கிய இடத்தை பிடிக்கும் அரசியல் பிரபல்யம் வரைக்கும் அத்தனை பேர்களுக்கும் உழைத்த உழைப்பும் எல்லா சமயத்திலும் புகழாக மாறுவதில்லை. மாற்றிக் கொண்டவர்கள் இங்கே நிலைத்ததும் இல்லை. அபூர்வமாக நிற்பவர்களை சமூகம் கொண்டாட அதுவே பலருக்கும் உந்து சக்தியாக மாறி நான் அவரைப் பார்த்து தான் இந்த துறைக்கு வந்தேன் என்கிற வரைக்கும் பேட்டியாக வருகின்றது.
ஒவ்வொரு முறையும் பத்திரிக்கையில் பிரபல்யங்களின் சாவுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் வேறு சிலவற்றையும் உணர்த்தி விடுகின்றது.
கவிஞர் வாலியும், நடிகை மஞ்சுளாவும் இறப்புக்கு பின்னால் வந்த செய்திகள் பலவற்றையும் சுட்டிக்காட்டியது.ஆனால் இங்கே பத்திரிக்கைகள் சொல்லததும் கூட உண்மையாகவே இருக்கின்றது.
தற்போது பிரபல்ய சாவு என்பது முகநூல் செய்திகளுக்கு முக்கியத்துவம் பெறுவதாக இருப்பதால் திடீர் புரட்சியாளர்கள் முதல் சிறப்பான சிந்தனையாளர்கள் வரைக்கும் நமக்கு எளிதாக கிடைத்து விடுகின்றார்கள்.
முகநூலில் கவிஞர் வாலிக்கு கிடைத்த அஞ்சலி கூட நடிகை மஞ்சுளாவுக்கு கிடைக்கவில்லை. மஞ்சுளா குடும்பத்தைப் பற்றி, அவரின் கடந்து வந்த வளர்ச்சியைப் பற்றி, அவரின் பங்களா குறித்த ஒவ்வொரு செய்திகளும், அவரால் வீழ்ந்த ஒவ்வொரு பிரபல்யமும் இன்றும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள். அவரின் குடும்ப சச்சரவுகள் அனைத்தையும் கிசுகிசுவாக்கி படிக்க உதவிய பத்திரிக்கைகள் மூலம் பொதுப்புத்தியில் எத்தனை விதமான எண்ணங்கள் ஓடியிருக்கும் என்பதை யோசிக்க முடிகின்றது.
தூங்கும் போது கூட காலாட்டிக் கொண்டே தூங்க வேண்டும் என்று சொல்லப்படுகின்ற பிரபல்யங்களின் வாழ்க்கையில் வாலி கடந்து வந்த வாழ்க்கை சொல்லும் ஒரு வரிச் செய்தி என்னவென்றால் சமரசங்களுடன் வாழ்ந்தால் முடிந்தவரைக்கும் எந்த துறையிலும் நிலைத்து நிற்க முடியும் என்பதே.
சமரசம் என்பதை அவர் கருத்து ரசமாகவும் காட்டினார். காலவெள்ளத்தில் நிற்க பலசமயம் காமரசமாகவும் மாற்றினார்.
தமிழ் திரை இசையின் முதல் தலைமுறை சுப்பையா நாயுடு, கே.வி.மகாதேவன் என்று தொடங்கியது. அதுவே எம்.எஸ்.விஸ்வநாதன், சங்கர் கணேஷ் கைகளுக்கு மாறி இளையராஜா கைக்கு வந்த போது அவரைத்தவிர வேறு எவரும் இல்லை என்கிற நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியது.
பிளக்க முடியாத மலையாக இருந்த இளையராஜாவை மணிரத்னம் புண்ணியத்தில் ஏ.ஆர். ரகுமானை அறிமுகம் செய்து வைக்க தொடர்நது ஹாரிஸ் ஜெயராஜ், யுவன்சங்கர் ராஜா வரைக்கும் கொண்டு சேர்த்து
இன்று இந்த பட்டியலில் பலரும் இருக்கின்றார்கள்.
ஆனால் வாலியின் திறமை இரண்டாம் தலைமுறையில் தொடங்கியது. இறக்கும் சில தினங்களுக்கு முன்பு வரைக்கும் இயங்க வைத்துக் கொண்டிருந்தற்கு காரணம் வாலிப கவிஞர் என்ற பெயர் பெற்றிருந்ததே முக்கிய காரணமாக இருந்தது. அவரின் உடம்புக்குத்தான் 82 வயதானே தவிர வார்த்தைகள் 28 ஆக இருந்த காரணத்தால் இது சாத்தியமானது.
கண்ணதாசனுக்கும் எம்ஜிஆருக்கும் உருவான மனஸ்தாபம் வாலியை நிலை நிறுத்த வைத்தது. இங்கு ஒருவர் மேல் கொண்ட வெறுப்பே அடுத்தவரை உருவாக்க வளர்க்க காரணமாகவும் இருந்து விடுகின்றது.எப்படி இளையராஜவுக்கு எஸ்பி. பாலசுப்ரமணியம் ஆகாத சமயத்தில் எப்படி மனோ என்ற பாடகர் வந்தாரோ அதைப் போலத்தான் இங்கே ஒவ்வொருவரின் தொடக்கமும் முடிவும் இருக்கின்றது.
வாழ்க்கையின் தொடக்கம் முதல் நேர்மையோடு வாழ்ந்த வாலி, ஏறக்குறைய 15000 பாடல்களுக்கு மேலே எழுதியதோடு, பல புத்தகங்களையும் எழுதி, நான்காம் தலைமுறையினரோடு பணிபுரிந்த வாலியின் இறுதி ஊர்வலத்தில் கவிஞர் வைரமுத்து மழையில் நனைந்தபடியே கடைசி வரைக்கும் நடந்து சென்றார் என்பது தொடங்கி இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு அவசரம் அவசரமாக ஓடிச்சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்கள் பற்றியும் நடிகர்கள்,தயாரிப்பாளர்கள் வரைக்கும் அத்தனை செய்திகளையும் படித்து முடித்த பிறகு மனதில் தோன்றிய வாசகம்.
பிரபல்யம் எனப்படுவது யாதெனில் வாழும் போது பந்தயக் (பண) குதிரையாக பலன் தருபவர். இறந்த பிறகு நினைவில் (மட்டும்) இருப்பவர்.
எதிர் காலத்தில் ஒருவர் அதிக பட்சமாகா 18 நிமிடங்கள் புகழுடன் இருப்பார் என்று யாரோ சொன்னதாக சுஜாதா சொன்னதை படித்திருக்கிறேன்.
ReplyDeleteபதிவுலகத்திலும் சினிமா அரசியல் இரண்டும்தான் அதிகமாக படிக்கப் படுகின்றன.
வலைக்குள் சினிமா
Deleteதலைப்பு நல்லாயிருக்கா?
ஆடிய ஆட்டம் என்ன...?
ReplyDeleteபேசிய வார்த்தை என்ன...?
தேடிய செல்வம் என்ன...?
திரண்டதோர் சுற்றம் என்ன...?
கூடு விட்டு ஆவி போனால்..........
கூடவே வருவதென்ன...?
கடைசி நேரத்தில் மருத்துவமனையில் வாலி இதையும் சொல்லியுள்ளார்.
Deleteநல்ல அலசல். புகழ் இந்த இரு துறையில் இருப்பவர்களுக்கே கிடைக்கிறது! ஆனால் இதே பிரபலத்தால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் சிறு அசைவுகள் கூட பூராகரமாக்கப்பட்டு பிரபலத்தாலேயே இந்த பிரபலங்கள் நார் நாறாக கிழிக்கப்படுகிறார்கள் என்பதையும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். நடிகை மச்சுளா பற்றிய உங்களுக்கு தெரிந்த செய்தியை பகிர்ந்திருக்கலாமே! வாலி சாதனை மெச்சக்கூடியதே!
ReplyDeleteஒரு வகையில் பாவப்பட்ட ஜென்மங்கள் நடிகைகள்.
Delete//எப்படி இளையராஜவுக்கு எஸ்பி. பாலசுப்ரமணியம் ஆகாத சமயத்தில் எப்படி மனோ என்ற பாடகர் வந்தாரோ//
ReplyDeleteஎஸ் பி பி க்கு அந்த சமயத்தில் singers knot எனும் குரல் கட்டு வந்ததால் சில வருடங்கள் பாட முடியவில்லை. மனோவை அந்த இடத்தில் கொண்டு வந்து இளையராஜா எஸ் பி பி யின் இடத்தை தற்காலிகமாக நிரப்பி வந்தார் எனக் கேள்வி!
மனோவின் தொடக்க பாடல்களை கேட்டால் எஸ்பிபி போலவே அந்த சாயலில் தான் வந்து கொண்டிருந்தது. இருவருக்கும் உள்ள வித்தியாசம் தெரியாத அளவுக்கு. ஆனால் நகல் காலவெள்ளத்தில் கரைந்தும் போனது.
Deleteமனோவை நகல் என்று சொல்லாதீர்கள்.மோகனுக்கு எப்படி பாலுவோ அதேபோல் ராமராஜனுக்கு மனோ.ஒரே பாடலை ராஜாவும், மற்ற பிரபல பாடகர்களும் பாடியிருக்கிறார்கள்.ஜேசுதாஸ் - ராஜா(ஊரெல்லாம் உன் பாட்டுதான்,எங்கே என் ஜீவனே) பாலு - ராஜா (நானாக நானில்லை தாயே, இதயம் ஒரு கோயில்) ஜெயசந்திரன் - ராஜா (வள்ளி வள்ளி என வந்தான்) இவை இசைதட்டு,கேசட்டுகளிலும் வெளியாகியிருக்கிறது.ஆனால் மனோ - ராஜா பாடல் இசைத்தட்டு ,கேசட்டுகளில் இல்லை.அடுத்து பாலுவை விட மனோவின் உச்சரிப்பு தெளிவாய் இருக்கும். கண்ணே என்பதை சில இடங்களில் கள்ணே என்றே பாலு உச்சரித்திருப்பதை கவனித்து கேளுங்கள்.நீயொரு காதல் சங்கீதம், குடகுமலை காற்றில் வரும், அன்பு தேன் மொழி எந்தன் தேன்மொழி(இன்னும் நிறைய இருக்கு)பாடல்கள் கேட்ட பின்பும் நகல் என்று சொல்கிறீர்களா.
Deleteவலையுலகில் கணினி அனுபவம் என்ற தலைப்பில் தொடர்பதிவு ஒரு சங்கிலித் தொடர் போல நீண்டு கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் ஏற்கனவே இன்னொரு பதிவரால் தொடர் எழுத அழைக்கப்பட்டவரை, நானும் அழைத்து குழப்ப விரும்பவில்லை. எனவே தொடருக்கு அழைக்கப்படாத எனக்கு அறிமுகமானவர்களை அன்புடன் எழுத அழைக்கின்றேன். அவர்களுள் நீங்களும் ஒருவர்.
ReplyDelete( எனது கணினி அனுபவங்கள் ( தொடர் பதிவு )
http://tthamizhelango.blogspot.com/2013/07/blog-post_25.html )
நான் இவரை ஏற்கனவே எழுத இவரை எழுத அழைத்து இருக்கிறேன். ஆனால் இவர் மிக பிரபலமாக இருப்பாதால் ரொம்ப பிஸியாக இருப்பார் போலிருக்கிறது
Deleteதலைவர்கள் இருவரும் இந்த பதிவை படிக்கவில்லையோ?
Deleteஐந்து - 'வலை'த்ததும் வளையாததும்
http://deviyar-illam.blogspot.in/2013/06/blog-post.html
எங்க ஊரு பழக்கம் என்னன்னா பந்திக்கு முந்தி விடு.
எப்பூடி?
சென்று பார்த்தேன். அண்மையில்தான் எழுதி இருக்கிறீர்கள்.. ஏற்கனவே அப்போது படித்ததுதான். ஏனோ ஞாபகத்திற்கு வராமல் போய்விட்டது. நன்றி!
Deleteநாங்கள் உங்களுக்கு எப்போதும் தொண்டர்கள் தான்...... வயசு ஆக ஆக ஞாபக சக்தி குறைந்துடுமுல
Deleteநல்ல பகுப்பாய்வு
ReplyDeleteநன்றி
Deleteஎதையும் ஊதிப் பெருக்குவதுதானே ஊடகங்களின் வேலை இல்லையோ? அதுவும் திரைப்படப் பிரபலங்கள் என்றால் கேட்கவே வேணாம்.
ReplyDeleteஎன்ன ஒன்னு மஞ்சுளா மரணம் சரியான நேரத்தில் அமையலை:(
ஏற்கெனவே வாலி சமாச்சாரம் போய்க்கிட்டு இருந்தது காரணம்.
wrong time, wrong place னு சொல்வது இதற்கும் பொருந்தும்.
நம்ம மதர் தெரெஸாவுக்கும் இப்படியேதான் ஆச்சு இங்கே எங்கூரில். தப்பான நேரத்தில் போய்ச் சேர்ந்தாங்க. அப்ப ஊடகத்தை மொத்தமாப் ப்டிச்சுக்கிட்டு இருந்தது டயனாவின் மரணம்.
வேறொன்னும் நடக்காத சமயம் போய்ச்சேர்ந்தால் புகழ்மாலை உறுதி. என்னமோ போங்க......
///வேறொன்னும் நடக்காத சமயம் போய்ச்சேர்ந்தால் புகழ்மாலை உறுதி. என்னமோ போங்க...//
Deleteஅப்படி ஒரு நாள் என்னாளுன்னு சொன்னா அந்த நாளுபார்த்து நான் போய் சேருவேன்...
வேறொன்னும் நடக்காத சமயம் போய்ச்சேர்ந்தால் புகழ்மாலை உறுதி. என்னமோ போங்க......
Deleteநீங்க சொல்வதும் உண்மை தான். ஒருவர் இறந்து ஒரு வாரம் முழுக்க வேறெந்த செய்திகளுக்கும் முக்கியத்துவம் இல்லாத போது தான் இறந்தவர் குறித்து பத்திரிக்கைகளால் எழுத முடியும். இல்லாவிட்டால்வேறு செய்திகள் முன் பக்கத்தில் வந்து விடும். பல நினைவுகள் வந்து போகின்றது.
நம் நாட்டில் சினிமா, அரசியல் இதனை விட்டால் வேறு பொழுது போக்கு இல்லை. எல்லோருடைய மனத்தினையும் அப்படி “ செட் “ செய்து விட்டார்கள். மஞ்சுளா, பங்களா என்றதும் ஞாபகம் வருகிற்து. எம்ஜிஆரைப் பற்றி அந்நாளில் பேசப்பட்ட கிசுகிசுக்களை இந்நாளில் யாரும் சொல்வது கிடையாது.
ReplyDeleteகிசுகிசுவின் ஆயுள் மணிக்கணக்கில். நம்ம கவிப்ரியன் கேட்டுள்ளார். ஒரு பதிவாக எழுதுங்களேன்.
Deleteநடிகை மஞ்சுளாவின் சாவில் ஏதோ ஒரு மர்மம் இருப்பதுபோல் சித்தரிக்கப்பட்டதும் அவரைப் பற்றி யாரும் எழுதாததும் ஒரு காரணமாக இருக்கலாம். மேலும் சினிமாதுறையில் அவருடைய பங்களிப்பு அப்படியொன்றும் மெச்சிக்கொள்ளும்படி இல்லை என்பதும் ஒரு காரணம். பெரிய இரண்டு நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த பெருமையைத் தவிர அவரைப் பற்றி பெருமையாக சொல்ல ஒன்றும் இல்லை.
ReplyDeleteமேலும் வாலி மரணநாள் வரையிலும் தொழிலில் இருந்தவர். ஓய்வுபெற்றுவிடவில்லை. ஓய்வுபெற்று பல ஆண்டுகள் ஆகியும் மரித்தபோது பலராலும் புகழப்பட்டவர் சமீபகாலங்களில் டிஎம்எஸ் மட்டுமே.
உங்களுடைய வரிகளில் தமிழ் சும்மா துள்ளி விளையாடுகிறது. படிக்கும்போதே எங்கும் நிறுத்த முடியாமல் ஒரே மூச்சில் படித்து முடித்துவிட தூண்டும் அளவுக்கு உள்ளது.
உங்கள் அக்கறைக்கு நன்றி.
Deleteபிரபல்யம் எனப்படுவது யாதெனில் வாழும் போது பந்தயக் (பண) குதிரையாக பலன் தருபவர். இறந்த பிறகு நினைவில் (மட்டும்) இருப்பவர்.
ReplyDeleteஉண்மைதான்.... அருமையான பகிர்வு...
சமரசங்களுடன் வாழ்ந்தால் முடிந்தவரைக்கும் எந்த துறையிலும் நிலைத்து நிற்க முடியும்....இதுதான் உண்மை ஜீ !
ReplyDeleteநலமா ஹேமா?
Deleteபிர்பல்யம் என்பதின் விளக்கம் அருமை.
ReplyDelete