அஸ்திவாரம்

Wednesday, July 31, 2013

இன்று பிறந்த நாள்

"இன்றைக்கு எனக்கு பிறந்த நாள் சார்"

தட்டு நிறைய சாக்லேட்டும், வித்தியாசமான கேக் வகைகளையும் கையில் வைத்துக் கொண்டு என் அறையில் நுழைந்து நீட்டிக் கொண்டிருந்த பெண்ணுக்கு 22 வயது இருக்கக்கூடும். மென்மையாக சிரித்துக் கொண்டே ஒரே ஒரு சாக்லேட் மட்டும் எடுத்துக் கொண்டு "வாழ்த்துக்கள்" என்றேன்.

"சார் கேக் எடுத்துக்கங்க?  வீட்டில் உள்ள குட்டீஸ்களுக்கும் எடுத்துக்கிட்டு போங்க" என்றார்.

"இல்லம்மா போதும்" என்று சொல்லி விட்டு அனுப்பி வைத்தேன்.

அலுவலகத்தில் தினந்தோறும் யாரோ ஒருவர் பிறந்த நாள் என்று புதிய உடையில், கைநிறைய இனிப்புகளோடு வந்து கொண்டே இருக்கின்றார்கள். அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு இருக்கைக்கும் சென்று மறக்காமல் கொடுக்கின்றார்கள்.  பெரிய பதவிகளில் இருப்பவர்கள் எவரும் கொண்டாடி நான் பார்த்ததில்லை. அவர்களின் கொண்டாட்டமெல்லாம் எப்போதும் போல தினந்தோறும் இரவு நேரத்தில் தான் தொடங்குகின்றது.

சாதாரண பதவிகளில் இருப்பவர்களுக்கும், எளிய மனிதர்களுக்கும் இங்கே ஏதோவொரு கொண்டாட்டம் தேவையாக இருக்கின்றது. 

குறிப்பாக பெண்களுக்கு இது போன்ற கொண்டாட்டங்களில் ஆர்வம் அதிகமாகவே இருக்கின்றது. மிகக்குறுகிய காலத்திற்குள் மாறிய சமூகத்தை நிறைய யோசிக்க முடிகின்றது.

பள்ளிப்பருவத்தில் மாலை வீட்டுக்குள் வரும் போது இலங்கை வானொலியில் ஒலித்த அந்த குரல் இன்னமும் நன்றாக நினைவில் உள்ளது.

பிறந்த நாள்... பிறந்தநாள்............
யாவரும் பிள்ளைகள் போல தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்.......

இதுவே இன்று ஹேப்பி பர்த்டே என்று மாறியுள்ளது,

கடந்த பத்தாண்டுகளுக்குள் தான் மிக அதிக அளவில் இந்த கொண்டாட்ட மனோநிலை உருவாகியுள்ளது.  ஆங்கில வருட புத்தாண்டு, காதலர் தினம், அப்பா தினம், அம்மா தினம் என்று ஏராளமான தினங்கள் வந்து கொண்டேதான் இருக்கின்றது.

ஆயா தினம் ஒன்று தான் இன்னும் தனியாக வரவில்லை. அதற்குப் பதிலாக முதியோர் தினமாக ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்து விட்டார்கள்.

பெற்றோர்களை காப்பகத்தில் கொண்டு போய் விட்டு வந்த ஆத்மாக்களும், அம்மாவிடம் பால் குடித்த மிருகங்களும் அன்று தான் நினைவுக்கு வந்து அவர்களை பார்த்து விட்டு வாழ்த்துகளை சொல்லிவிட்டு வந்து விட்டால் அன்றைய தின கொண்டாட்டமும் முடிவுக்கு வந்து விடும். 

அதற்குப் பிறகு அடுத்த வருடம் சென்று பார்த்தால் போதும்.

ஏறக்குறைய வருடத்தில் 365 நாட்களுக்கும் வியாபாரிகள் உருவாக்கிய கொண்டாட்டங்கள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. 

ஒவ்வொரு அட்சய திரிதியை தினத்தில் தங்கம் வாங்குபவர்கள் அடுத்த வருடத்திற்கு வாங்குபவர்கள் இருக்கின்றார்களோ இல்லையோ தங்கம் விற்பவன் மட்டும் அடுத்த வருடத்தில் அடுக்குமாடி கடையை கட்டுபவனாக இருக்கின்றான்.

இதற்குப் பின்னால் சமூக  உளவியல் காரணங்களை புரிந்து கொள்ள முடிகின்றது.

இன்று நகரங்களில் வசிக்கும் 80 சதவிகித மக்கள் அத்தனை பேர்களும் ஏதோவொரு சமயத்தில் கிராமத்திலிருந்தே இடம் பெயர்ந்தவர்களாகவே இருக்கின்றனர்.  

கிராமங்களில் கொண்டாட்டங்களுக்கு பஞ்சமில்லை. கோவில் விழாக்கள், தேர்த்திருவிழா, மஞ்சுவிரட்டு, பாட்டுக்கச்சேரி, கரகாட்டம், வாணவேடிக்கை என்று தொடங்கி வருடந்தோறும் நடக்கின்ற பல திருவிழாக்கள் மக்களை ஒன்று சேரவைத்தது. 

எளிமையான அந்த விழாக்களில் மனங்களை பறிமாறிக் கொள்ள முடிந்தது.  ஆனால் இன்று மனம் பின்னுக்குப் போய் பணம் முன்னுக்கு வந்து விட விழாக்களின் போக்கும் மாறிவிட்டது. ஒவ்வொரு கொண்டாட்டங்களும் வியாபாரிகளின் கைக்கு போய்விட்டது.

நகரங்களில் நடக்கும் விழாக்களின் தன்மை  தனிப்பட்ட மனிதர்களின் மனோநிலையை கவர்வதை விட கூட்டத்தையே முன்னிலைப் படுத்துகின்றது. இதுவே இன்று "வீக் எண்ட்" கலாச்சாரத்தை விரைவாக வளர்த்துக் கொண்டு வருகின்றது.  

வாரம் முழுக்க வேலை. வார இறுதியில் ஒய்வு என்பது மேலைநாட்டு கலாச்சாரம்.  அது இப்போது இந்தியாவில் குடித்து கும்மாளமிடுவர்களின் விழாவாக மாறியுள்ளது.

இங்கு எட்டு மணி நேர வேலையும் இல்லை. எந்த துறையிலும் வெற்றிகள் தொட்டு விடும் உயரத்திலும் இருப்பதில்லை. இதன் காரணமாகவே இந்திய வேலைகள் என்பது 24 மணிநேரமும் அலர்ட் ஆறுமுகமாகவே வாழ வேண்டியுள்ளது.

நான் பார்க்கும் பெரும்பாலான பிறந்த நாள் கொண்டாட்டங்கள் அனைத்தும் மிகுந்த ஆடம்பரமான விழா போலவே கொண்டாடப்படுகின்றது. அவரவர் (வருமான) தகுதிக்கு மீறியே கொண்டாடப்படுவதும், அதே போல நாமும் கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் மற்றவருக்கு உருவாகி அதன்படியே கடன் வாங்கி செலவளிக்கும் அளவுக்கு இன்று  கொண்டாட்டங்களில் முகமே மாறியுள்ளது.

மளிகைக்கடையில் உள்ள கூட்டத்தை விட கேக், ஐஸ்கீரிம் விற்கும் கடைகளில் ஒவ்வொருவரும் செலவளிக்கும் காந்தி தாளை பார்க்கும் போதெல்லாம் ஒவ்வொரு இந்தியனும் ஒரு ஐரோப்பியராகவே தெரிகின்றார்கள்.

எண்ண அளவில் ஐரோப்பியனாக இருந்தாலும் எலும்பு முழுக்க இந்தியனாகத்தான் இருக்கின்றான். அவர்களிடமிருந்து எதை எதை கற்றுக் கொள்ள வேண்டுமோ அதையெல்லாம் விட்டு உடுப்பதை குடிப்பதை கற்றுக் கொண்டு இன்று ஒவ்வொரு நடுத்தரவர்க்கமும் தன்னை ஒரு கணவானாகவே நினைத்துக் கொள்கின்றது. தங்களுடைய குழந்தைகளும் அவ்வாறே வளர வேண்டும் என்று விரும்புகின்றது..

மேலைநாடுகள் அவர்கள் விரும்பிய கல்வியை இந்தியாவில் கொண்டு வந்து திணித்து விட்டே நகர்ந்தார்கள்.  நம்மவர்களுக்கும் அவர்கள் உருவாக்கித் தந்த கல்வியை மாற்ற விரும்பவில்லை. காரணம் அப்படியே இருந்தால் தான் கல்வி கற்றாலும் கூமூட்டையாக இருக்கமுடியும் என்பதால் இன்று வரையிலும் அந்த கல்வி முறையைத் தான் நாம் கொண்டாடிக் கொண்டுருக்கின்றோம்.

குமாஸ்தாக்களை உருவாக்கும் கல்வியை கற்றவர்கள் தான் இது போன்ற புதிய கலாச்சாரத்தின் காவலர்களாக இருக்கின்றார்கள்.  படித்து முடித்தவுடன் எப்படியும் ஏதோவொரு வெளிநாட்டுக்குச் சென்று விட்டால்போதும் என்பதே ஒவ்வொருவருக்கும் கனவாக இருக்க ஆனால் கனவு தேசங்களோ இன்று கண்ணீர் தேசமாக மாறிக்கொண்டிருக்கின்றது.

இன்றைய ஐரோப்பா  பார்த்து பார்த்து செலவளிக்கும் இந்திய வாழ்க்கை முறைக்கு மாறிக் கொண்டிருக்க நாமோ அன்றைய வாழ்க்கை அன்றைய சந்தோஷம் என்ற ஐரோப்பிய வாழ்க்கையை வாழத் தொடங்கியுள்ளோம்.

அவ்வப்போது சில நம்பிக்கை நட்சத்திரங்கள் என் கண்ணில் படுவதுண்டு.

அன்று அலுவலகத்தில் இருக்கும் பெண்மணி இன்று மதியம் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று அனுமதி கேட்ட போது நேற்றே அவர் திருமண நாள் குறித்து சொல்லியிருந்தது என் நினைவுக்கு வந்தது.  

அலுவலகத்தில் முகப்பில் வரவேற்புத் துறை பணியில் இருப்பவர். கிராமத்தில் தான் விரும்பிய பையனை சாதி எதிர்ப்புகளையும் மீறி திருமணம் செய்து கொண்டு திருப்பூர் வந்தவர். முழுமையாக அவரைப் பற்றி தெரிந்த காரணத்தாலும், அவரின் தனிப்பட்ட பழக்கவழக்கங்கள் என்னை கவர்ந்த காரணத்தாலும் அவர் மேல் எப்போதும் ஒரு தனிப்பட்ட மரியாதை உண்டு.

அனுமதி கொடுத்து விட்டு எப்போதும் போல சிரித்துக் கொண்டே கேட்டேன்.

"என்னம்மா வீட்டில் மதுரை ஆட்சியா? இல்லை சிதம்பரம் ஆட்சியா?" என்றேன்.

யோசிக்காமல் பட்டென்று சொன்னார்.

"எங்கள் இருவரின் மனசாட்சி சார்".

இதற்குத்தானே ஆசைப்பட்டாய்?

39 comments:

  1. //
    இன்று நகரங்களில் வசிக்கும் 80 சதவிகித மக்கள் அத்தனை பேர்களும் ஏதோவொரு சமயத்தில் கிராமத்திலிருந்தே இடம் பெயர்ந்தவர்களாகவே இருக்கின்றனர்.

    கிராமங்களில் கொண்டாட்டங்களுக்கு பஞ்சமில்லை. கோவில் விழாக்கள், தேர்த்திருவிழா, மஞ்சுவிரட்டு, பாட்டுக்கச்சேரி, கரகாட்டம், வாணவேடிக்கை என்று தொடங்கி வருடந்தோறும் நடக்கின்ற பல திருவிழாக்கள் மக்களை ஒன்று சேரவைத்தது
    //

    //
    ஆனால் இன்று மனம் பின்னுக்குப் போய் பணம் முன்னுக்கு வந்து விட விழாக்களின் போக்கும் மாறிவிட்டது.
    //
    ஆம் மாறிவிட்டது. மக்களைப் பிரித்து விட்டது.

    ReplyDelete
    Replies
    1. மாணிக்கம்

      கிராமத்தில் உள்ளவர்கள் வரைக்கும் இன்றைய சூழ்நிலையில் காரியத்தில் தான் கண்ணாக கவனமாக இருக்கின்றார்கள். நீண்ட நேர பேச்சு என்பதெல்லாம் மாறிவிட்டது. பிரித்து விட்டது என்பதை விட மக்களும் தனித்தனியாக பிரிந்து இருக்கே ஆசைப்படுகின்றார்கள். இது குறித்தே பலவாறு ஒரு மாதமாக யோசித்துக் கொண்டிருக்கின்றேன். கண்டு கொண்டு இருக்கும் காட்சிகள் ஆச்சரியத்தை தந்து கொண்டிருக்கின்றது.

      Delete
    2. இதற்கு மிக முக்கிய காரணம் தொலைக்காட்சி, மக்களைப் பேசும் நேரத்தை பறித்துக் கொண்டது.

      Delete
  2. இன்று என் பையனுக்கு பிறந்த நாள்..

    ReplyDelete
    Replies
    1. அமுதா உங்கள் பையனுக்கு தேவியர் இல்லத்தின் வாழ்த்துகள்.

      Delete
  3. Replies
    1. மனதில் சரியான ஆட்சி ஆளுமை இல்லாத போது என்று எடுத்துக் கொள்கின்றேன்.

      Delete
  4. இருவரின் மனசாட்சி என்பது 1000-ல் ஒருவருக்குதான் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. உணர்ந்து ஒழுங்காக வாழ்கின்றவர்களை தினந்தோறும் ஒவ்வொரு இடத்திலும் பார்த்துக் கொண்டேதான் இருக்கின்றேன்.

      Delete
  5. நமக்கு ஏதாவது ஒரு கொண்டாட்டம் தேவைப் படுகிறது. அந்தக் கொண்டட்ட்த்தை நிர்ணயிப்பது வியாபாரிகள் என்பது கசப்பன உண்மை..தெளிவாக விளக்கியுள்ளீர்கள்

    ReplyDelete
    Replies
    1. வியாபார சமூகத்தில் நாம் அனைவரும் விலைபொருட்களே

      Delete
  6. எல்லாமே மேலோட்டமான கொண்டாட்டங்களாகப் போய் விட்டது, என்ன செய்ய?

    @அமுத கிருஷ்ணா
    உங்கள் பிள்ளைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ரசிக்கும் மனோநிலையை வளர்த்துக் கொண்டால் மன உளைச்சல் உருவாகாது.

      Delete
  7. மதியம் சாக்லேட் கொடுத்தாலும், மாலை கேக் வெட்டினாலும் கேட்டுப்பாருங்கள் காலையில் கோயிலுக்கு போயிருப்பார்கள். நம் இந்திய மனங்கள் எல்லாவற்றையும் மதத்துடனும் சடங்குடனும் பிணைத்திருக்கிறது.எனவே இது குறித்து பெரிதாய் யோசிக்கத்தேவையில்லை என நினைக்கிறேன்.

    ReplyDelete
  8. // பள்ளிப்பருவத்தில் மாலை வீட்டுக்குள் வரும் போது இலங்கை வானொலியில் ஒலித்த அந்த குரல் இன்னமும் நன்றாக நினைவில் உள்ளது. //
    மறக்கமுடியாத அந்த இலங்கை வானொலி ஒலிபரப்பு. இனி அந்தமாதிரி எங்கே கேட்க முடியும்.
    நிறையபேர் அந்த பெண்ணிடம் நீங்கள் கேட்ட கேள்வியை கேட்டு கேட்டு , அவருக்கு "எங்கள் இருவரின் மனசாட்சி சார்".என்ற பதில் ஆயத்தமாக ( ஆயத்த ஆடைகள் பிரிவு ஊழியர் அல்லவா) வைத்து இருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள்!

    (தலைப்பைப் பார்த்ததும் உங்களுக்கு பிறந்தநாள் என்று நினைத்து விட்டேன்)






    ReplyDelete
    Replies
    1. 365 நாளும் எனக்கு பிறந்த நாளே. தூங்கி எழுந்ததும் தினந்தோறும் இந்த உலகை புதிதாய் தானே காணவேண்டியுள்ளது.

      பெரும்பாலும் கிராமத்தில் இருந்து வரக்கூடிய பெண்கள் நான் பார்த்த வரைக்கும் கொஞ்சம் கட்டிசெட்டாகத்தான் இருக்கின்றார்கள். கணவன் சரியாக இருக்கும் வரையிலும்.

      Delete
  9. பொறந்தநாள் கொண்டாடுவதெல்லாம் சாதாரண திராவிட மக்களின் கலாச்சாரம் பண்பாடெல்லாம் இல்லை! அதை கொண்ட்டாடுறவா கேக் வெட்டி, முழுகுவர்த்தி வச்சு, அதை ஊதி பாட்டெல்லாம் பாடி வாழ்த்துவது மேற்கத்தியவரிடம் இருந்து நம்க்கு வந்த கலாச்சாராம்.

    எங்க அம்மா, அப்பா, தாத்தா பாட்டியெல்லாம் தீவாளி, பொங்கல், வருடப்பிறப்பு, ஏகாதசி, ஆடி அம்மாவாசை இதெல்லாம்தான் பெருசா கொண்டாடினார்கள். பொறந்த தேதிகூட தமிழ்வருடக்கண்க்கில்தான் இருக்கும். ஜாதகம்னு ஒண்ணு எழுதி வச்சு இருப்பாங்கல்ல? அதுலதான் இருக்கும் பொறந்தநாள். ஏதாவது ட்ரங்கு பெட்டிக்குள்ளே, பழைய காகிதத்தில்..

    பொறந்தா நாள் என்பது ஒரு முக்கியமான நாள் என்பது தெரிந்து இருந்தால், ஏன் பள்லியில் 4 வய்திலேயே அஞ்சு வய்துனு சொல்லி சேர்ந்த்துவிட்டு, சீக்கிரமே ரிட்டையர்ட் ஆக வழிவகுக்கிறாங்க? பொறந்த நாள் எல்லாம் பெரிய விசயமே இல்லை என்பதால்தான். அதுதான் நம்ம கலாச்சாரம். அதனாலதான் நாம் சந்தோஷமாக இருந்தோம்- அறியாமையால்.

    இப்போ பொறந்த நாள்னு கொண்டாடிய பிறகுதான் நமக்கு இறந்த நாளும் வரும்னு யோசிக்க ஆரம்பிச்சு நிம்மதியெல்லாம் போயி சாவைக்கண்டு பயந்து நடுங்கி, நெறையப்பேரு மனநல மருத்துவரிடம் போயி நிக்கிறானுக!



    ReplyDelete
    Replies
    1. இப்போ பொறந்த நாள்னு கொண்டாடிய பிறகுதான் நமக்கு இறந்த நாளும் வரும்னு யோசிக்க ஆரம்பிச்சு நிம்மதியெல்லாம் போயி சாவைக்கண்டு பயந்து நடுங்கி, நெறையப்பேரு மனநல மருத்துவரிடம் போயி நிக்கிறானுக!

      அடி தூள். இது தான் வருண் ராக்ஸ்

      Delete
  10. ***அகலிக‌ன்July 31, 2013 at 5:17 PM

    மதியம் சாக்லேட் கொடுத்தாலும், மாலை கேக் வெட்டினாலும் கேட்டுப்பாருங்கள் காலையில் கோயிலுக்கு போயிருப்பார்கள். நம் இந்திய மனங்கள் எல்லாவற்றையும் மதத்துடனும் சடங்குடனும் பிணைத்திருக்கிறது.எனவே இது குறித்து பெரிதாய் யோசிக்கத்தேவையில்லை என நினைக்கிறேன்.***

    நான் பொறந்த நாளுக்கு கோயிலுக்குப் போனதில்லை! எங்கப்பா, அம்மா, சகோதரிகள் யாருமே கோயில்ல போயி பண்டாரங்கள் மாதிர் ஆண்டவனே காப்பாத்துனு கெஞ்சிக் கூத்தாடியது இல்லை! உமக்குத் தெரியாத ஒரு உலகமும் உம்மைச் சுற்றி இருக்கு! அதெல்லாம் ஒரு சிலருக்கு சாகிறவரைக்கும் தெரிவதில்லை!

    ReplyDelete
    Replies
    1. நான் சொல்ல தினைத்தது புதிய கலாச்சாரங்களை ஏற்றுக்கொண்டாலும் நம் பாரம்பரியத்தை விட்டுகொடுத்துவிடுவதில்லை என்பதித்தான். ஆனாலும் "எங்க அம்மா, அப்பா, தாத்தா பாட்டியெல்லாம் தீவாளி, பொங்கல், வருடப்பிறப்பு, ஏகாதசி, ஆடி அம்மாவாசை இதெல்லாம்தான் பெருசா கொண்டாடினார்கள்.என்று சொல்லும் நீங்கள் எனக்கான ரிப்லேயில் எங்கப்பா, அம்மா, சகோதரிகள் யாருமே கோயில்ல போயி பண்டாரங்கள் மாதிர் ஆண்டவனே காப்பாத்துனு கெஞ்சிக் கூத்தாடியது இல்லை!என முரணாக கூறுவது வியப்பளிக்கிறது.

      Delete
  11. இதுல என்ன முரணைக் கண்டீர்கள்?? கொஞ்சம் யோசிக்கணும், அவ்ளோதான்! உனக்கு தீவாளி, பொங்கல், வருடப்பிறப்புனா ஊருக்கே அன்னைக்குத்தான் திருவிழா? அதை மறக்கவோ ஞாபகப்படுத்தவோ தேவை இல்லை! ஊரோட கொண்டாடி ஆக வேண்டிய கட்டாயம்! ஆனால் ஒருவரின் பொறந்த நாள் என்பது ஒரு ஸ்பெஷிஃபிக் தேதி!!! அதுவும் ஏதாவது ட்ரங்கு பெட்டியில் ஒளிந்துகொண்டு இருக்கும், அதுவும் தமிழ் வருடக்கணக்கில். அதை ஞாபகம் வைத்திருப்பது அரிது. அதுக்காக புது ஆடை எடுத்து கொண்டாடுமளவுக்கு சாதரரண அன்னாடங்காச்சித் தமிழனுக்கு வக்கிருப்பதில்லை! அவர்கள்தான் பெரும்பாண்மை! தேதியையே மறந்தாச்சுன்னா அன்னைக்கினு பார்த்து ஆண்டவ்னிடம் போயி எப்படி ஒப்பாரி வைப்பது???

    ReplyDelete
    Replies
    1. தீவாளி, பொங்கல், வருடப்பிறப்பு சரி ஏகாதசி, ஆடி அம்மாவாசை இதெல்லாம் கூடவா ஊரே கொண்டாடும்.

      Delete
    2. இதுக்கெல்லாம் ஒரு காரணம் கூறமுடியும்னா கோயில் போகவும் அவன் அவனுக்கு ஆயிரம் காரணம் இருக்கத்தான் செய்யும்.

      Delete
    3. ஒருவரின் பொறந்த நாள் என்பது ஒரு ஸ்பெஷிஃபிக் தேதி!!!
      அதை அவன் விருப்பப்படி கொண்டாடுவதில் என்ன தவறு. எல்லாரும் பிறந்தநாளுக்கு புது துணி எடுத்து கொண்டாடுவது கிடையாது. அதற்கான வாய்ப்பும் எல்லாருக்கும் வாய்ப்பதில்லை.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. எங்க தமிழ் கலாச்சாரத்தில், நான் வளர்ந்த சூழலில் அப்படித்தான். ஏகாதசிக்கு நைட் எல்லாம் முழிச்சிருந்து தாயம் ஆடலாம் சினிமாப் பார்க்கலாம். அது ஒரு மாதிரி ஃபன். ஆடி அமாவாசைக்கு பக்கத்தில் உள்ள கடற்கரைக்குப் போயி போயி கடலில் ஒரு முழுக்குப்போட்டு, நீதி, விளையாண்டு எஞ்ஞாய் பண்ணலாம் அதுவும் ஃபன். எந்தப் பண்டிகையுமே நாலு பேரு ஒண்னுகூடி சேர்ந்து கொண்டாடுவதற்காகத்தான். இவையெல்லாம் பலர் கொண்டாடும் பண்டிகை என்பதால் எல்லாரும் மனமுவந்து கொண்டாடுவாங்க. பொறந்தநாள் என்பது சுயநலம், தற்பெருமை மட்டுமே உள்ள ஒண்ணு! You remember your birthday and celebrate it as you think you are so important to this world. Are you REALLY? Only we celebrate OUR BIRTH DAY and treat others for our birthday as we find WE ARE VERY IMPORTANT. In the US, usually your friends (surprisingly) take you out on your birthday and buy you some good food (usually lunch) and share the "bill/check" among themselves!

      Delete
    6. ***அகலிக‌ன்July 31, 2013 at 8:41 PM

      ஒருவரின் பொறந்த நாள் என்பது ஒரு ஸ்பெஷிஃபிக் தேதி!!!
      அதை அவன் விருப்பப்படி கொண்டாடுவதில் என்ன தவறு. ***

      Seems like I dont read what you read in my responses! Where did I say, it is WRONG to celebrate one's birthday?!! Quote, please!

      Delete
    7. All I know is we celebrated. I never cared WHY and the REASON BEHIND and all?? If you care about it, here it is..

      ///சூரியனும், சந்திரனும் ஒரே பாதையில் பூமிக்கு நேராக வரும் போது அமாவாசை உருவாகிறது. இதில் ஆடி அமாவாசை என்பது முன்னோர்களை நினைத்து, பிதுர் தர்ப்பணம் செய்வதற்கு ஏற்ற காலமாகும்.

      ஆடி அமாவாசை அன்று காலையில், எழுந்து ஆறு, குளங்களில் நீராடி சூரிய உதயத்திற்கு முன்னதாகவே எள், தர்ப்பைப்புல் ஆகியவற்றை கொண்டு தர்ப்பணம் செய்து வருதல் நல்லது. அத்துடன் வீடுகளில் அவர்கள் வாழ்ந்த காலத்தில், அவர்களுக்கு பிடித்தமான சைவ உணவு வகைகளையும் வைத்து வழிபட வேண்டும்.

      அவர்கள் மனம் மகிழ்ந்தால்,நம் வாழ்விலும் மகிழ்ச்சி பெருகும். ஆடி அமாவாசை நாளில், நீர் நிலைகளில் நீராடி, தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட வேண்டும் என கூறப்படுகிறது. கிராமக்கோயில்களில் இப்போது ஆடி அமாவாசை விழாவை, ஆடு வெட்டி கொண்டாடுகிறார்கள். ///

      Delete
    8. வருண்

      அகலிகன் விமர்சனம் போட்டதும் கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்து. உண்மையிலேயே இங்கே பிறந்த நாள் என்றதும் கோவிலுக்குச் செல்லாதவர்கள் கூட அன்றைய தினத்தில் கோவிலுக்குச் சென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள். அல்லது அந்த சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள். தொடக்கத்தில் திருப்பூரில் தண்ணீர் பஞ்சம் அதிகம் இருந்தது. பணிபுரியும் பெண்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாமல் தலை குளித்து வருவார்கள். அதாவது அன்றைய தினத்தில் மட்டும் தலை குளித்து வருவார்கள். மற்ற நாட்களில் தலைக்கு குளிப்பதில்லை. காரணம் வெள்ளிக்கிழமை என்பதை ஒரு புனித தினமாக கடவுளோடு சம்மந்தப்பட்ட நாளாக நம்மவர்கள் வைத்துள்ளார்கள். பெண்கள்? சொல்லவே வேண்டாம். அதே போலத்தான் அகலிகன் சொன்னது.
      மனமாறுதல்கள் என்பது அவரவர் அனுபவங்கள் கொடுப்பது. பலருக்கும் கிடைத்தாலும் அதை தாண்டி வர முடியாமல் அல்லது விரும்பாமல் இருப்பது தான் இன்றைய சமூகத்தில் இயல்பான நிலையாக உள்ளது. வாழ்வது வாழ நினைப்பது கணவானாக. ஆனால் பழக்கவழக்கங்கள் எல்லாமே ஒரு சின்ன வட்டத்திற்குள். அறிவுக்கும் அன்றாட செயல்பாட்டிற்கும் சம்மந்தம் இல்லாத வாழ்க்கை முறையை இரண்டாங்கெட்டான் சூழ்நிலையை இங்கே ஒவ்வொருவரையும் உந்தி தள்ளிக் கொண்டிருக்கின்றது.

      Delete
  12. நுகர்வுக்கலாச்சாரத்தின் இன்னுமொரு பக்கம்.. பல நேரங்களில் இந்த மாதிரியான கொண்டாட்டங்களை தவிர்க்கும் அதே சமயத்தில் வலைப்பின்னலிட்ட இந்த வாழ்க்கையில் நாமும் சில சமயங்களில் சிலந்தியிடம் மாட்டிய பூச்சிகளாய்...
    உங்களின் பதிவை என் முக நூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளேன்....

    ReplyDelete
    Replies
    1. உங்கள் விமர்சனத்தை படிக்காமல் நீங்கள் சொன்ன விசயத்தை தான் நானும் அகலிகன் வருணுக்கு பதிலாக கொடுத்துள்ளேன். ஆச்சரியம் தான். நன்றி எழில்.

      Delete
  13. இருவரின் மனசாட்சிபடி ஆட்சி நடந்தால் அங்கே சந்தோஷம் குடிகொண்டிருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை....

    ReplyDelete
  14. வார இறுதியில் நண்பர்களோட வீட்டில் பாட்டிலை கையில் எடுத்தாலே கொண்டாட்டம்தான் இதுல வேற தனியா பிறந்த நாள் கொண்டாட்டம் தேவையா என்ன?

    எனக்கு என் பிறந்த நாள் கொண்டாட்டமும் இல்லை ரம்ஜான், தீபாவளி, கிறிஸ்மஸ் கொண்டாட்டமும் இல்லை ஒன்லி நீயூ இயர் ஈவ் தான் கொண்டாட்டம்... பாட்டிலோடதான்.


    யாராவது என் பிறந்த நாளை கொண்டாட விரும்பினால் பேசாம வார இறுதியில் நம்ம வீட்டிற்கு வந்துடுங்க கொண்டாடிடலாம். எனக்கு என் பிறந்த நாள் மறந்து விட்டதால் ஒவ்வொறு வாரமும் பிறந்த நாள்தானுங்க்

    ReplyDelete
    Replies
    1. ஞாநி அவர்கள் எப்போதும் சொல்லும் வாசகம்.

      மதம் சார்ந்த பண்டிகைகளை விட இது போன்ற பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தனி மனிதனுக்குத் தேவை. நம்மை அளந்து கொள்ள பல சமயம் உணர்ந்து கொள்ள.

      Delete
  15. நல்ல பதிவு. தொலைக்காட்சி, வியாபார சமூகம், நுகர்வுக்கலாச்சாரம் என்று பல விஷயத்தை தொட்டு செல்லுகிறது. ஆனால் ஒரு சந்தேகம், பார்த்து பார்த்து செலவளிப்பது இந்திய வாழ்க்கை முறை, அன்றைய வாழ்க்கை அன்றைய சந்தோஷம் என்பது ஐரோப்பிய வாழ்க்கை முறை என்ற வரைவிலக்கணத்தை வகுத்தது யார்? என்னை பொறுத்தவரை ஒரு காலகட்டத்தில் ஐரோப்பியர் ஒரு மாதிரியான வாழ்க்கை முறையை பின்பற்றினர், காலம் மாற அவர்கள் மாறினர் (அல்லது மாற வேண்டியிருந்தது), அது போல் இந்தியரும் மாறுகிறார்கள் அவ்வளவுதான். இந்தியாவின் இந்த மாற்றம் நல்லதல்ல என்பதில் எனக்கு உடன்பாடுதான்.

    ReplyDelete
  16. Private schools focus on personal and team discipline along with academic curriculum and technology.
    List of schools in Vellore

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.