அஸ்திவாரம்

Wednesday, December 26, 2012

சாப்பாட்டுக்கடைகள்

காதலும் பெணகளும்

எனக்கு தமிழிலில் பிடிக்காத வார்த்தைகளில் ஒன்று இந்த காதல் என்ற வார்த்தை.  

நான் கடந்து வந்த என் வாழ்க்கைப் பாதையில் ஆயிரக்கணக்கான நபர்களின் காதல் என்ற கருமாந்திரத்தை பார்த்துள்ளேன்.  ஐந்து பேர்கள் மட்டுமே இன்று வரைக்கும் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். மற்றவர்களைப் பற்றி பல திரைப்படங்கள் எடுக்கும் அளவுக்கு உள்ள பல சமாச்சாரங்கள் உள்ளது. 

கவிஞர் வைரமுத்து அவர்களை எனக்கு பிடிக்க பல காரணங்களில் ஒன்று இந்த காதல் என்பதே.  எழுத்துக்களில், வார்த்தைகளில், பாடல்களில் என்று மட்டுமல்லாது அவர் வாழ்க்கையிலும் இந்த காதலை ரசித்து இன்று ஜெயித்தும் காட்டியவர். அவர் ஊர், அவர் சாதி என்கிற நிலையில் வைத்துப் பார்க்கும் போது அவர் திருமணம் செய்த காலகட்டத்தில் நிலவிய இறுக்கமான சூழ்நிலையை வைத்து மதிப்பீடும் போது எனக்குள் பல ஆச்சரியங்களை தந்தவர். 

ஆனால் திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களில் சில காதலர்களை சேர்த்து வைததும்  இருக்கின்றேன்.  நான் விதிக்கும் கட்டுப்பாடுகளை இருவரும் பின்பற்றும் பட்சத்தில் அவர்களின் உறுதிப்பாடுகளை சோதித்த பிறகு அவர்களுக்கு உதவி இருக்கின்றேன்.  எவரும் மோசம் போகவில்லை. எளிமையான ஆனால் இன்றுவரையிலும் இனிமையான காதல் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். 

வீட்டில் அடிக்கடி சொல்லும் ஒரு பிரபல்யமான வாசகம் உண்டு.

"உங்களையெல்லாம் பார்த்தால் எந்த பெண்ணுக்கும் காதல் பண்ணத் தோனாது.  ஆளை விட்டால் போதும் என்று ஓடத்தான் தோன்றும்" என்பார். காரணம் எப்போதும் பெண்கள் விசயத்தில் சற்று அதிகமான கெடுபிடிகளை நிறுவனத்தில் காட்டுவதுண்டு. கொடுத்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தும் பட்சத்தில் மன்னிப்பு என்பதே என் அகராதியில் இல்லை.  

ஏதாவது பஞ்சாயத்து என்றால் முதல் வேலையாக அதனை அவர்கள் குடும்பத்திற்கு தெரிவித்து விட்டு முடிவு கட்டி விட்டுத்தான் அடுத்த வேலைக்குச் செல்வதுண்டு. பலரின் சாபத்திற்கு ஆளாகி இருக்கின்றேன். காரணம் பெண்களின் வாழ்க்கை என்பது ஆண்களை விட அதிக கவனமாக வாழ்ந்தே ஆக வேண்டிய சூழ்நிலையில் இருப்பவர்கள். 

ஒவ்வொரு பெண்ணின் நல்லதும் கெட்டதும் அவரோடு முடிவதில்லை. தகப்பனை விட தாயின் வளர்ப்பில் தான் இங்கே பல நல்ல குழந்தைகள் உருவாகின்றார்கள்.  என் வீட்டில் குழந்தைகளை கண்டிப்பதே இல்லை. ஒரு முறை கண்டித்தால் அடுத்த முறை கண்ணீரோடு முன் கூட்டியே வந்து செய்த தவறுகளை சொல்லி மன்னிப்பு கேட்டு விடுவார்கள்.

அதற்காக ரசனை இல்லாதவன் என்ற வட்டத்திற்குள் கொண்டு வர வேண்டாம். என் ரசனை என்பது வார்த்தைகளில், பார்வைகளில் மட்டுமே. ஆனால் என்னைச் சுற்றிலும் உள்ள பழக்கத்தில் உள்ள பல நண்பர்களின் தனிப்பட்ட குணாதிசியங்களை நன்றாகவே உள்வாங்கிக் கொண்டே தான் இருக்கின்றேன். கருத்து எதுவும் சொல்வதில்லை. 

அவரவர் அனுபவங்கள். அவர்வர் வாழ்க்கை. 

நான் பார்த்தவரைக்கும் ஸ்த்ரி லோலன்களின் வாழ்க்கை என்பது மற்ற அத்தனை கெட்ட பழக்கங்கள் உள்ளவர்களின் வாழ்க்கையை விட கேவலமான வாழ்க்கையில் தான் கொண்டு போய் சேர்ந்துள்ளது. காரணம் தனி மனித ஒழுக்கத்தை பஞ்சர் ஆக்குவதும், பல முறை பரதேசி கோலம் என மாற்ற வைப்பதும் பெண்கள் சகவாசகமே.  

பல அரசியல்வாதிகளைப் பற்றி மற்றவர்களை விட கொஞ்சம் கூடுதலாக தெரிந்து வைத்திருப்பதால் அந்த வாய்ப்பிருப்பதால் இந்த நிமிடம் வரைக்கும் அவர்களை ஒரு ஆச்சரியமான பார்வையில் தான் பார்த்துக் கொண்டு இருக்கின்றேன். 

பல சாம்ராஜ்ய ஏற்றுமதி நிறுவனங்கள் மண்ணோடு மண்ணாக போனதற்கு முக்கிய பல காரணங்களில் முதன்மையானது முதலாளிகளின் பெண் சகவாசமே. 

சாப்பாட்டுக்கடைகள்

என்னுடைய உண்மையான காதலின் தொடக்கமே இது தான்.  தொடக்கம் முதல்  என்னுள் இருக்கும் இந்த காதலை எழுத்தில் காட்டிக் கொண்டதில்லை.  ஆனால் சாப்பாடு குறித்து எவர் எழுதினாலும் நான் படிப்பதும் இல்லை. உணவகங்களை தேடி அலைவதும் இல்லை. காரணம் நான் விரும்பும் திருப்தி அந்த அளவுக்கு கிடைப்பதும் இல்லை. 

அசைவம் விட்டொழித்த பத்து வருடங்களில் திடீர் என்று ஒரு போலந்து பெண்மணியுடன் திருப்பூரில் உள்ள வேலன் மூன்று நட்சத்திர உணவு விடுதியில் ஒரு மதிய வேளையில் சாப்பிட நேர்ந்தது. அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்த உணவு வகைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்த போது பறிமாறியவர் என்னிடம் கேட்ட போது என்னன்ன இருக்கிறது? என்றேன்.

அவர் உடனே நீங்க எந்த ஊரு? என்றார். 

காரணம் அவரும் தென் மாவட்ட மக்களின் தோற்றத்தைப் போலவே இருந்த காரணத்தால் அங்கே இருவருக்குள்ளும் ஒரு பந்தம் உருவானது. 

நான் ஊரைச் சொன்னதும் "காரைக்குடி சுவையில் நாடடுக் கோழி கொண்டு வருகின்றேன். நீங்க அசைவத்தை விட்டு விட்டேன் என்கிறீர்கள். இந்த சுவை உங்களை மீண்டும் அசைவ பழக்கத்தை தொடர வைக்கும்" என்றார். 

சுவாரசியம் இல்லாமல் எங்கள் தமிழ் உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த போலந்து பெண்மணி மொத்த விபரத்தையும் என்னிடம் கேட்டு தெரிந்து கொண்டு  "அவசியம் கொண்டு வாங்க"என்று என் அனுமதியை பெறாமலேயே உத்தரவு பிறப்பிக்க கால் மணி நேரத்தில் ஒரு பளிங்கு பீங்கான் பாத்திரத்தில் கொதிக்க கொதிக்க கறி மற்றும் குழம்பு சேர்த்து பெரிய தட்டில் சாமிக்கு படைப்பது போல கொண்டு வந்தார். மற்றொரு தட்டில் எலும்பிச்சை, நறுக்கிய பச்சை வெங்காயம், இன்னும் சில சமாச்சாரங்கள். கூடவே ஒரு சின்ன கைத்தறி துண்டு. 

எதற்கு துண்டு?  என்றேன்.

உங்களுக்கு தேவைப்படும் என்றார்.

ஆவி பறக்க இருந்த அந்த குழம்பை ஒரு கரண்டியில் எடுத்து அந்த சூட்டோடு வாயில் ஊற்றி போது அப்படியே ஊரில் வாழ்ந்த வாழ்க்கை என் ஞாபகத்திற்கு வந்தது. ஏறக்குறைய பத்து வருடங்களுக்குப் பிறகு அப்போது தான் அசைவத்தை தொட்டேன். . 

இருக்கும் இடம், நாகரிகம் அத்தனையும் தூக்கி கடாசி விட்டு உறிஞ்சி, ஒரு கட்டு கட்டியதைப் பார்த்த போது அந்த பெண்மணி தான் சாப்பிட்டுக் கொண்டிருந்ததை நிறுத்தி விட்டு "எனக்கும் கொஞ்சம் கொடு" என்றார். கேட்டதோடு என் எச்சில் ஸ்பூனை வாங்கிக் கொண்டு அவர் எடுத்து ஒரு உறிஞ்சு உறிஞ்ச ஆ...வூ.... என்ற கத்த அருகில் இருந்தவர் அத்தனை பேர்களும் எங்களையே வேடிக்கை பார்த்தனர்.

காரணம் காரம். 

அடப்பாவி இதையா இப்படி குடிக்கிறே? என்று திட்டிக் கொண்டே இருந்த தண்ணீரை மடக் மடக் என்று தொடர்நது குடித்துக் கொண்டே இருந்தார்.  2009  ஆம் ஆண்டு நடந்த இந்த நிகழ்வுக்குப் பிறகு கூட அசைவத்தில் பெரிதான ஆர்வம் வர வில்லை.  ஆனால் குழந்தைகள் ஊருக்குச் செல்லும் போது அங்கே கிடைக்கும் அத்தனை சமாச்சாரங்களையும் ஒரு கட்டு கட்டிவிட்டு வரும் போது கூட நான் தொடுவதில்லை. 

காரணம் பெரிதான ஆர்வம் உருவானதில்லை.  அசைவ உணவில் நான் பெற வேண்டிய அத்தனை திருப்தியையும் பெற்ற காரணத்தால் அதுவொரு ஏக்கமாக இருந்ததே இல்லை. தற்போது கூட குறிப்பிட்ட இடங்களில் அதன் தரம் பார்த்து சில சமயம் முயற்சிப்பதுண்டு. சமீபத்தில் பாப்பீஸ் நட்சத்திர உணவகத்தில் சாப்பிட்டு மனதிற்குள் திட்டிக் கொண்டே வந்தேன்.

வலைதளங்களில் இந்த சாப்பாட்டுக்கடைகள் பற்றி வாய்ப்பு கிடைக்கும் போது பார்த்த போது உணவு என்பது ஒரு லாபம் கொழிக்கும் தொழிலாக மாறியுள்ளதை புரிந்து கொள்ள முடிந்தது. அப்போது தான் செட்டி நாட்டு மெஸ், சிக்கன் செட்டிநாடு, காரைக்குடி மெஸ், காரைக்குடி உணவகம் என்று ஆளாளுக்கு தங்களுக்கு தோன்றிய இந்த பெயரை வியாபார ரீதியாக வைத்து கொள்ளை லாபம் சம்பாரித்துக் கொண்டிருப்பதை உணர முடிந்தது. 

கோவையில் சுரேஷ் என்றொரு நண்பர் இருக்கின்றார்.  தெக்கிக்காட்டன் பிரபாகரன் மூலம் அறிமுகமானவர்.  கோவையில் ஒரு சைவ உணவகத்தை நீண்ட நாட்களாக நடத்திக் கொண்டு வருகின்றார். உண்மையான சமூக அக்கறையும்,  ஆச்சரியப்படக்கூடிய பல நல்ல விசயங்களையும் செய்து கொண்டிருப்பவர்.தன்னுடைய உணவகத்தில் பணி புரிகின்ற  அத்தனை தொழிலாளர்களுக்கும் கிடைக்கும் லாபத்தை தினந்தோறும் என்கிற கணக்கில் பங்கு போட்டு கொடுத்துக் கொண்டு இருப்பவர். இன்னும் பல விசயங்கள் இவரைப் பற்றி எழுதலாம். 

கோவையில் நடக்கும் மருத்துவ மாநாடு, கூட்டங்கள், உணவு சம்மந்தப்பட்ட விழாக்கள், இது தவிர முக்கிய மருத்துவர்களின் கூட்டங்கள், அக்குபஞ்சர், இயற்கை மருத்துவம் என்று பலவற்றுக்கு என்னை வரச் சொல்லி வாரம் தோறும் அழைப்பார். இதுவரைக்கும் எதற்கும் சென்றதே இல்லை. அதற்கான சூழ்நிலையும் அமைந்தே இல்லை.  தற்போது திருப்பூர் கோவை சாலையை கொத்துக்கறி போல செய்து வைத்திருப்பதை பார்க்கும் போது பயணிக்கும் ஆசையே போய்விட்டது.  திருப்பூர் கோவைக்கு ஒரு மணி நேரம் பயணம் என்பது தற்போது இரண்டு மணி நேரமாக மாறியுள்ளது. அரசாங்க வண்டி என்றால் இன்னமும் கூட அதிகமாகும்.

ஒவ்வொரு வாரமும் மனம் தளராமல் அழைத்துப் பேசுவார்.  அப்போது பல விசயங்களைச் சொல்லி எனக்கு புரிய வைப்பார்.  அவரின் உரையாடல் மூலம் நான் எடுத்துக் கொண்ட சில விசயங்களைக் கோர்த்து, பல தளங்களை ஒப்பிட்டு இந்த காரைக்குடி உணவகம் என்றொரு கருத்தாக்கம் உருவானது. 

நான் உணவகங்களை விரும்புவதே இல்லை.  நான் ஏற்றுமதி துறையில் இருந்து கொண்டே முயற்சித்த துறைகளில் இந்த உணவக தொழிலும் ஒன்று. ஃபாஸ்ட் புட் என்கிற ரீதியில் நண்பருடன் சேர்ந்து செயல்பட்டேன். நேர்மையான முறையில் வீட்டுச் சமையல் போல என் ஈடுபாட்டை அதில் காட்டிய போது குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைத்தது. அதிக ஆர்வமும் அக்கறையும் இந்த துறையில் இன்னமும் உண்டு. ஆனால் காசுக்கு ஆசைப்பட்ட நண்பனின் 20 வருட நட்பை இழந்தது தான் மிச்சம். பங்குதாரர் பகையாளியாக மாறிப்போனார்.

உணவகம், அதன் பின்னால் உள்ள லாப நட்டம் அத்தனையும் தெரியும். குறிப்பாக உணவு தயாரிக்கும் முறைகளுக்குப் பின்னால் உள்ள அத்தனை கேவலமான விசயங்களும் எனக்கு நன்றாக தெரிந்த காரணத்தால் குடலைப் பிடுங்கும் பசி எடுத்தாலும் திருப்பூருக்குள் இருந்தால் அழைத்துச் சொல்லிவிட்டு வேகமாக வீட்டுக்கு ஓடி வந்து விடுவதுண்டு. 

நான் விரும்புவதும் எதிர்பார்ப்பதும் வீட்டுச் சாப்பாடாக இருக்க வேண்டும். அலைந்து திரிந்து கொட்டிக் கொண்டு கடன் வாங்கி வட்டியோடு மருத்துவமனைகளுக்கு கட்டிய காலமெல்லாம் போயே போயிந்தே.

மொத்தமாக நாம் எழுதிய பதிவுகள், எத்தனை பேர்கள் இதுவரைக்கும் படித்துள்ளார்கள் என்பதை நாம் திரும்பிப் பார்க்கும் போது நமக்கு பல புரிதல்களை, ஆச்சரியங்களை உருவாக்கும். ஒரு வருடம் முழுக்க படித்தவர்களின் எண்ணிக்கை என்பதை விட ஒரு மாதத்திற்குள் படித்தவர்களின் எண்ணிக்கை என்பதை வைத்து பார்க்கும் போது  சாப்பாட்டுக்கடை சமாச்சாரத்தில் நான் சொல்ல வந்த விசயங்கள் நிறைய பேர்களுக்கு சென்று உள்ளது. 

சில சமயம் அவசரத்தில் குறிப்பிட்ட தலைப்புகளை பார்க்காமல் படிக்காமல் கடந்து போயிருப்போம். அதற்காக அடுத்த ஒரு மாதத்தில் இந்த திரும்பிப் பார்த்தல் தொடரும். இதுவொரு முன்னோட்டம். 

ஒவ்வொரு துறையைச் சார்ந்தும் நான் எழுதிய பதிவுகளைப் பற்றியும், அடைப்புக்குறிக்குள் கொடுத்த இது வரைக்கும் படித்தவர்களின் எண்ணிக்கை குறித்தும் எழுதி வைத்து விடலாம்  என்ற எண்ணம் தோன்றியது. ஐந்தாவது வருடம்  வருகின்ற ஜுலை மாதம் உடன் முடிவடைகின்றது. 500 தலைப்புக்கு அருகே வந்துள்ளேன்.  அந்த சமயத்தில் 500 ல் 50 என்பதாக மனதில் யோசித்து வைத்துள்ளேன். 

அடுத்தடுத்து விரைவாக வெளியிட்டுக் கொண்டிருக்கும் போது பல தலைப்புகளை பலரின் பார்வைக்குத் தெரியாமல் போய்விடும் வாதம் ஏற்புடையதாக இருந்தாலும் கூட நான் ஆச்சரியப்பட்ட எதிர்பார்க்காத பல தலைப்புகள் பலரின் பார்வைக்குச் சென்றுள்ளது. மேலே வந்து நிற்கும் போது தான் நமக்கே புரியும். 

ஒரு தலைப்பு இதுவரைக்கும் 6 மாதங்கள் கடந்தும் வெறுமனே 250 பேர்கள் தான் படித்துள்ளார்கள். இது போன்ற சுய மதிப்பீடுகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளும் போது எழுதுவதற்கான உண்மையான அக்கறையும் அர்த்தமும் நமக்கு கிடைக்கும்.

இதுவரையிலும் எழுதிய மொத்த தலைப்புகள் என்கிற ரீதியில் முதல் இடத்தில் இருக்கின்ற தலைப்பு என்ற தகுதிக்கு  6144  பார்வையாளர்களும் மாத ரீதியாக முதல் இடத்திற்கு வருவதற்கு  1653 பேர்கள்  தேவைப்பட்டு இருக்கின்றார்கள். 

உண்டு உறங்கி விடு. செரித்து விடு என்ற இந்த தலைப்பு தமிழ்மணம் நட்சத்திர வாரத்தில் எழுதியது.

இந்த தலைப்பு பெரிதாக இருந்தாலும் மக்களின் பாராட்டை பெற்றது.  அப்போது எனக்கு கோவையில் உள்ள சுரேஷ் அறிமுகம் ஆகவில்லை. அனுபவங்களின் கோர்வையாக எழுதி வைத்தேன். கடந்த ஒரு மாதமாக சுரேஷ் மூலம் இந்த காரைக்குடி உணவகம். என்ற கருத்தாக்கம் உருவானது.  மக்கள் கதக்களியே ஆடி விட்டார்கள்.தீனிக்கார பய புள்ளைங்க.







12 comments:

  1. ஒவ்வொரு பெண்ணின் நல்லதும் கெட்டதும் அவரோடு முடிவதில்லை. தகப்பனை விட தாயின் வளர்ப்பில் தான் இங்கே பல நல்ல குழந்தைகள் உருவாகின்றார்கள். என் வீட்டில் குழந்தைகளை கண்டிப்பதே இல்லை. ஒரு முறை கண்டித்தால் அடுத்த முறை கண்ணீரோடு முன் கூட்டியே வந்து செய்த தவறுகளை சொல்லி மன்னிப்பு கேட்டு விடுவார்கள்.//

    சிறப்பான வளர்ப்பு ...!

    ReplyDelete
    Replies
    1. பணம் என்பது எத்தனை முக்கியமோ அவர்களின் மனம் சார்ந்த கொள்கைகளை உருவாக்க வேண்டியதும் நமது கடமை தானே.

      Delete

  2. //எனக்கு தமிழிலில் பிடிக்காத வார்த்தைகளில் ஒன்று இந்த காதல் என்ற வார்த்தை.//இந்த அர்த்தத்தை தரும் ஒரு கருத்தை,ஒரு ஈழப்பெண்மணியின் ”கவிதை பதிவு”(ஹேமா பதிவு என நினைக்கிறேன்) ஒன்றில் கூறி அதற்கான கடுமையான எதிற்வாதத்தை எதிற்கொள்ள நேரிட்டது நினைவிருக்கிறதா ஜோதிஜி சார்?:))))))))))))))--செழியன்.

    ReplyDelete
    Replies
    1. நினைவில்லை செழியன். தற்போது ஹேமா வேலைப்பளுவின் காரணமாக இல்லம் பக்கம் வருவதே இல்லை. அவர் தளத்திற்குள் சென்றால் இங்குள்ள இணைய வேகத்தில் உள்ளே நுழைய ரொம்ப சிரமமாக உள்ளது. நன்றாக எழுதக்கூடியவர்.

      Delete
  3. ம்ம்ம்....

    சாப்பாடுன்னாலே அதுவும் தலைப்புல செட்டிநாட்டு சாப்பாட்டுக்கடை வேறயா எல்லாரும் விரும்பி வந்திருப்பாங்க அண்ணே...


    ReplyDelete
    Replies
    1. எத்தனை பேரு கொலவெறியோடு திட்டிட்டு போனாங்களோ?

      Delete
  4. #//காசுக்கு ஆசைப்பட்ட நண்பனின் 20 வருட நட்பை இழந்தது தான் மிச்சம். பங்குதாரர் பகையாளியாக மாறிப்போனார்.//
    * நண்பர்களுடனும் , உறவினர்களுடனும் சேர்ந்து தொழில் செயும்போது ஒரு நிலையில உறவையோ அல்லது தொழிலையோ இழப்பது தவிர்க்கமுடியாதது ஆகிறது . நிறைய பேர் இரண்டையும் இழந்து விடுகிறார்கள் . எவ்வளவு லாபம் கிடைத்தாலும் உறவுகளுடனும் நட்புகளுடனும் சேர்ந்து தொழில் செய்வதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே வைத்துள்ளேன் . கொள்கைக்கு வலு சேர்த்த உங்களது வார்த்தைகளுக்கு நன்றி ...
    ##//என் வீட்டில் குழந்தைகளை கண்டிப்பதே இல்லை. ஒரு முறை கண்டித்தால் அடுத்த முறை கண்ணீரோடு முன் கூட்டியே வந்து செய்த தவறுகளை சொல்லி மன்னிப்பு கேட்டு விடுவார்கள்.//
    ** ஒரு முறை கண்டித்தால் அடுத்த முறை கண்ணீரோடு முன் கூட்டியே வந்து செய்த தவறுகளை சொல்லி மன்னிப்பு கேட்டு விடுவார்கள்- அப்டின்னா கண்டிக்கலாமே ? ஏன் கண்டிப்பதே இல்லை?

    ### //கோவையில் சுரேஷ் என்றொரு நண்பர் இருக்கின்றார். தெக்கிக்காட்டன் பிரபாகரன் மூலம் அறிமுகமானவர். கோவையில் ஒரு சைவ உணவகத்தை நீண்ட நாட்களாக நடத்திக் கொண்டு வருகின்றார். உண்மையான சமூக அக்கறையும், ஆச்சரியப்படக்கூடிய பல நல்ல விசயங்களையும் செய்து கொண்டிருப்பவர்.தன்னுடைய உணவகத்தில் பணி புரிகின்ற அத்தனை தொழிலாளர்களுக்கும் கிடைக்கும் லாபத்தை தினந்தோறும் என்கிற கணக்கில் பங்கு போட்டு கொடுத்துக் கொண்டு இருப்பவர். இன்னும் பல விசயங்கள் இவரைப் பற்றி எழுதலாம். //
    *** நல்ல கடையையும் நல்ல மனசையும் ஒரு பதிவெழுதி எல்லாருக்கும் அறிமுகப்படுத்தலாமே .....

    ReplyDelete
    Replies
    1. அவர் எண் உங்களுக்கு அனுப்பி வைக்கின்றேன். ஒரு முறை போய்ப் பார்த்து அவருடன் பழகிப் பாருங்க.

      Delete
  5. ஜோதிஜி,

    //மன்னிப்பு என்பதே என் அகராதியில் இல்லை. //

    மன்னிப்பு...தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தைனு பல்லைக்கடிச்சுக்கிட்டு பஞ்ச் டயலாக் எல்லாம் சொல்வீங்களோ :-))

    சாப்பாட்டுக்கடைகள்னு பேரு வச்சுட்டு ,சாப்பாட்டுக்கடையில சாப்பிட கூடாதுன்னு சொல்லுறிங்களே, என்ன கொடுமை சார் இது:-))

    //நான் விரும்புவதும் எதிர்பார்ப்பதும் வீட்டுச் சாப்பாடாக இருக்க வேண்டும்.//

    வீட்டுல சாப்பிட்டா வீட்டு சாப்பாடு, ஹோட்டலில் சாப்பிட்டால் ஹோட்டல் சாப்பாடு, ஹோட்டலில் பார்சல் வாங்கிட்டு வந்து வீட்டுல சாப்பிடுங்க :-))

    ReplyDelete
    Replies
    1. கடலைத்தாண்டிஇருக்ற ஒரு பயபுள்ள காதலைப் பற்றி எழுதியதற்கு செந்தமிழிலில் அரை மணி நேரம் என்னை வெளுத்து வாங்கி விட்டார்.

      அதுக்குப் பேரு பார்சல் சாப்பாடு தானே? குடல் இப்பத்தான் சொன்ன பேச்சு கேட்குது. உங்களுக்கு பொறுக்கலையா?

      Delete
  6. ////காசுக்கு ஆசைப்பட்ட நண்பனின் 20 வருட நட்பை இழந்தது தான் மிச்சம். பங்குதாரர் பகையாளியாக மாறிப்போனார்.//
    * நண்பர்களுடனும் , உறவினர்களுடனும் சேர்ந்து தொழில் செயும்போது ஒரு நிலையில உறவையோ அல்லது தொழிலையோ இழப்பது தவிர்க்கமுடியாதது ஆகிறது . நிறைய பேர் இரண்டையும் இழந்து விடுகிறார்கள் . எவ்வளவு லாபம் கிடைத்தாலும் உறவுகளுடனும் நட்புகளுடனும் சேர்ந்து தொழில் செய்வதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே வைத்துள்ளேன் .//


    இதுவரை நானும் எவ்வளவோ முயற்சித்தும் புரிந்து கொள்ள முடியாத /புரியாத ஒன்று இதுவும்(?!)
    எங்க சித்தப்பா இருந்த வரைக்கும் சொந்தக்காரனுக்கு வண்டியோட்ட (driving) சொல்லித்தருவதில்லைங்கற கொள்கை வைத்திருந்தார். ஏன் னு புரியாது ஆனா ஒரு நேரம் சரின்னு தோணும் ஒரு நேரம் ஏன் இப்படின்னு யோசனை வரும். சில நேரங்களில் தெரிந்தவர் / நண்பருக்கு கடன் கொடுத்து கையை சுட்டுக்கொண்ட அனுபவம் இருந்தும்.
    இதை வைத்து புரிந்து வேலை / தொழில் வாழ்க்கைல நம்முடைய நடவடிக்கைகளை சரியா அமைத்து கொள்ளலாம் என்று(ம்) தோன்றும். ம்ஹூம்.
    இன்னும் சரியா புரியலைங்கரத ஒரொரு முறையும் சுட்டிக்காட்டி குட்டிக்கொண்டிருக்கும் நினைவு.

    காரைக்குடி / செட்டிநாட்டுப் பக்கம் புத்தி கொள்முதல்னு ஒன்னு இருக்குன்னு சொல்லி கேள்வி.

    http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் உங்கள் தளத்தைப் பார்க்கின்றேன். வருகின்றேன்.

      நீங்க சொன்னது முற்றிலும் உண்மை. வீட்டில் அப்படித்தான் சொல்வார்கள். அத்துடன் உசார் பதனம் கெட்டி அப்படின்னு வெளியே கிளம்பும் போது சொல்வார்கள். இப்போது கூட அம்மா பேசும் இந்த மூன்றும் தவறாமல் வரும். பல நினைவுகளை கிளறி விட்டீங்க.

      Delete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.