அஸ்திவாரம்

Sunday, December 02, 2012

காரைக்குடி உணவகம் - புகைத்த பின் குடி கடி பிடி


ரில் குளிர்காலங்களில் காலையில் எழுந்து வெளியே பார்த்தால் பொட்டல்காடுகளில் பனிமூட்டம் முழுமையாக தெரியும். எப்போதும் போல இயல்பானதாக தெரிந்தாலும் இது விஷப்பனி வெளியே செல்லாதே என்பார்கள். அப்போது அதன் அர்த்தம் புரியாது.

ஆனால் நேரம் காலம் தெரியாமல் சுற்றித் திரிந்த போதிலும் உடம்புக்கு எந்த பிரச்சனையும் வந்ததில்லை.  வயது அதிகரிக்க நம்முடைய மன பலத்துக்கும் உடல் பலத்துக்கும் ஒரு போட்டி நடப்பதை எத்தனை பேர்களால் உணர்ந்து கொள்ள முடிகின்றது? 

அடங்கிப் போய்விடு. அடக்கி வாசிப்பா என்பது இது தானோ?


ற்போது மாறியுள்ள பருவநிலையில் திருப்பூருக்குள் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. காலை வேளையில் உடம்பு வெடவெடக்கின்றது.  ஒவ்வொரு தீபாவளியின் போது மட்டுமே ஊரில் வெந்நீர் குளியல் உண்டு. மற்ற தினங்கள் எப்போதும் போல கிணற்று நீர் தான். 

ஆனால் நகர வாழ்க்கையில் பழகிய சுடுநீர் பழக்கத்தின் அருமை இப்போதுள்ள மின்தடை என்பது நம்மை நமக்கே உணர வைத்துக் கொண்டிருக்கின்றது. வேலைகளை விரைவாக முடிக்க கற்றுத் தருகின்றது. குளிர்ந்த நீரில் குளிக்கும் போது உடம்பு எந்த அளவுக்கு ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடிகின்றது. முக்கியமாக குழந்தைகளை விளையாட வெளியே அனுப்புகின்றது. 

இயல்பான பழக்கத்தோடு வாழ்பவர்களை விட ஆரோக்கியமற்ற பழக்கமுள்ளவர்களுக்கு குளிர்காலம் என்பது  நரகம் தான். 

ருசியை பார்த்து பார்த்து சாப்பிடப் பழகியவர்களுக்கு இதயம், புகைக்க பழகியவர்களுக்கு நுரையீரல், குடிக்க பழகியவர்களுக்கு கல்லீரல் என்று இறுதியாக இந்த உறுப்புகள் படும் அவஸ்த்தைகளை விட இவர்களை வைத்து வாழும் குடும்பத்தினர் படும் கஷ்டங்கள் தான் சொல்லி மாளாதாது.

போதை 1

யணங்களில், பார்க்கும் இடங்களில், பழகிய நண்பர்கள் வட்டாரத்தில் புகைப்பழக்கம் இருப்பவர்களுக்கு இந்த குளிர்காலம் என்பது மிகக் கொடுமையானது என்பதை உணர்ந்து கொள்ளமுடிகின்றது.

அன்றாட வாழ்க்கையில் நம்முடைய சுற்றுப்புறத்தில் வாகனங்கள் மூலம் நாம் சுவாசிக்கும் புகை என்பது நம்முடைய உடம்பில் உள்ள இயல்பான எதிர்ப்பு சக்தியை நாளுக்கு நாள் குறைந்துக் கொண்டே வருவது ஒரு பக்கம் இருந்தாலும் ஒருவர் புகைபழக்கத்திற்கு அடிமையாக இருக்கும்பட்சத்தில் அவர்கள் இந்த குளிர்காலத்தில் படும் அவஸ்த்தைகளை எழுத்தில் வடிக்க இயலாது. 


நம்முடைய உடம்பில் உள்ள உறுப்புக்களின் அருமையை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நோயாளிகளை மருத்துவமனையில் சென்று பார்க்கும் போது தான் புரிகின்றது. ஆனால் பலரும் குறிப்பிட்ட நோயின் ஆரம்பம் தெரிந்த போதிலும் அந்த பழக்கத்திலிருந்து அவர்களால் விடுபட முடிவதில்லை என்பது தான் நிதர்சனம். 

பயமுறுத்தும் விளம்பரங்கள்,கேட்கும் அறிவுரைகள் என்று எல்லாவற்றையும் கடந்ததும் நம்மிடம் தொற்றிக் கொண்டே வருவது தான் இந்த கெட்ட பழக்கங்கள்.  சட்டென்று விடமுடியாத சாகசகாரிகள் போல.

காரணம் மனித மனம் எப்போதும் கீழானவற்றைத் தான் அதிகம் விரும்புகின்றது. அதை நோக்கிச் செல்லவே விரும்பும். கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும் கயிற்றை அறுத்து மேய விடுவதும் அவரவர் பெற்ற அனுபவங்கள் கற்றுத் தரும் பாடங்கள்.

நான் பார்த்தவரைக்கும் வருடத்திற்கு வருடம் புகை பழக்கம் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே தான் இருக்கின்றது. மிகச் சிறிய வயதுள்ளவர்கள் இந்த பழக்கத்தை நாகரிகம் என்ற பெயரில் கற்றுக் கொண்டு கடைசி வரைக்கும் விட முடியாமல் அவஸ்த்தைபட்டுக் கொண்டிருப்பதை பார்க்கும் போது சாவை விரும்பித் தழுவும் வீரர்களாகத் தான் தெரிகின்றார்கள்.

பழக்கம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒவ்வொருவரும் கடைசியில் இறந்து தான் போகப் போகின்றார்கள். 

ஆனால் புகைத்து உருவாகும் நோய்களும், மெல்ல மெல்ல இருமிக் கொண்டே தான் வாழும் வீட்டில் உள்ள மற்ற அத்தனை பேர்களையும் நரகத்தில் தள்ளும் மனிதர்களை பார்க்கும் போது தான் அதிக வேதனையாக இருக்கின்றது.  புகைக்காமல் இருந்தால் கூட இந்த குளிர்காலம் என்பது அவர்களின் நுரையீரலை படுத்தும் பாடு சொல்லி மாளாதது.

பயணத்தில் என் அருகில் இருப்பவர் இருமியதைப் பார்த்து நாலைந்து இருக்கைகள் அப்படியே காலி செய்து விட்டு பேரூந்தின் முன்புறம் ஓடிப்போனார்கள்.  

பயணம் முடிகின்ற வரைக்கும் அவரால் அந்த இருமலை நிறுத்த முடியவில்லை. வண்டி இடையில் நின்றதும் அவர் வேகமாகச் சென்று ஒரு சிகரெட்டை பற்ற வைத்த போது தான் அவரை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடிந்தது. 

இந்த சுழலுக்குள் சிக்கிவிட்டால் அந்த சுழற்சியே உங்கள் அடிப்படை ஆரோக்கியத்தை அதோகதியாக்கி மயானத்திற்கு அழைத்துச் சென்றுவிடும்.


போதை 2

ன்று வரையிலும் தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலக அளவிலும் செட்டிநாட்டு உணவகம், காரைக்குடி மெஸ் என்ற பெயருக்காகவே கூடும் கூட்டம் அதிகமாகவே இருக்கின்றது. வலைதளங்களில் சாப்பாட்டுக்கடை என்பது இன்றைய சூழ்நிலையில்  பிரபல்யமாக உள்ளது. 

ஆனால் இந்த சாப்பாட்டுக்கடைகள் தரும் உணவும், ஆரோக்கியமும்  அதன் விலைகளும் தற்போதைய சூழ்நிலையில் மயக்க மருந்து இல்லாமலேயே மயக்கத்தை வரவழைத்துக் கொண்டிருக்கின்றது. திருப்பூரில் அடையார் ஆனந்த பவனுக்குள் ஒரு முறை ஒரு குடும்பம் சென்று வந்து விட்டால் தினக்கூலி சம்பாரிப்பவர்கள் தங்களது வாரச் சம்பளத்தை எடுத்து வைக்க வேண்டும். ஆனால் அங்கே செல்பவர்கள் ஓட்டத்தின் மூலம் இடம் பிடிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 

இது தான் மாறி வரும் கலாச்சாரத்தில் நாம் பெற்றுள்ள சுதந்திரம்.

உணவகங்களின் விலைகள் முறைப்படுத்தப்படாத காரணத்தால் கொடுப்பதே ருசி. வைப்பதே விலை என்பதாக இருக்கிறது. ஆனால் நான் இந்த சாப்பாட்டுக் கடை கலாச்சாரத்தை விட்டு வெளியே வந்த காரணத்தால் அசந்தர்ப்பமாக  ஏதோவொரு தருணத்தில் உள்ளே நுழையும் போது பத்து வருடங்கள் பின்னால் வாழ்வது போல தெரிகின்றது.  

சமீப காலமாக தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த சாப்பாட்டுக்கடைகளுக்குச் சென்று குடும்பதோடு சாப்பிடுவது என்பது ஒரு மோகமாகவே ஆகியுள்ளது. வசதி இருப்பதால் என்பது ஒரு பக்கம். குடும்பத்தில கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் என்பது போன்ற விசயங்கள் மறுபக்கம். ஆனால் இந்த இரண்டுக்குள்ளும் ஒளிந்திருப்பதென்னவோ முழுமையான சோம்பேறித்தனம் என்பது தான் உண்மை. 

வீட்டுச் சாப்பாட்டை மறந்து இந்த சாப்பாட்டுக்கடைகள் தரும் சுவையை பழகிய நாக்குகள்  கொடுக்கும் பரிசு தான் இறுதியில் இதயத்திற்கான செலவு. .

இன்று திரும்பும் பக்கமெல்லாம் வயது வித்தியாசம் இல்லாத அளவிற்கு ஆஞ்சியோகிராமம், பைபாஸ் சர்ஜரி  எனப்து சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருக்கின்றது.

தற்போதுள்ள மருத்துவமனைகளில் உணவக விலைப்பட்டியல் போலவே ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக விலைப்பட்டியல் போட்டு சந்தைப்படுத்த தொடங்கி விட்டார்கள். 

உங்கள் உடம்பை எத்தனை விதமாக டெஸ்ட் எடுக்க முடியும் என்பதிலிருந்து ஒவ்வொன்றுக்கும் என்ன விலை என்பது வரைக்கும் சாதாரணமாக ஆகியுள்ளது. இதில் குறிப்பிட்ட தள்ளுபடி வேறு. ஆனாலும் நாம் நம்முடைய அடிப்படை பழக்கங்களை ஒரு ஒழுங்கு முறைக்கு கொண்டு வர விரும்புவதில்லை. 

வாழும் வரைக்கும் அனுபவித்து விடு என்பது மேலைநாட்டு கலாச்சாரம். ஆனால் சாகும் வரையிலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது நம்முடைய கலாச்சாரம். ஆனால் தற்போது அதில் பாதி இதில் என்ற கலவையில் கலாச்சாரம் கதறுகின்றது.  

ஓரு முறை இதயத்தை திறந்தவர்களின் ஆரோக்கியமென்பது அவர்களின் வாழ்க்கையை முடித்து வைக்க எடுத்து வைக்கப்பட்ட முதல்படி என்று அர்த்தமாகும்.  வேகமாக செயல்பட முடியாது, கோபப்பட முடியாது, மன அழுத்தம் இல்லாமல் வாழ வேண்டும் என்பது போன்ற பல கட்டுப்பாடுகளை கட்டாயம் கடைபிடித்தே ஆக வேண்டும்.  


பெரும்பாலும் பணக்காரர்களின் வியாதியாக இருந்த இந்த இதய நோய் இன்று சாதாரண வாழ்க்கையில் இருப்பவர்களையும் தாக்கத் தொடங்கியுள்ளது. முக்கிய காரணம் அவரவர் வைத்துள்ள உணவுப்பழக்க வழக்கங்கள் தான்.

நான் பார்த்த பல பணக்காரர்கள் செய்து கொண்ட பை பாஸ் சர்ஜரியால் அவர்கள் படும் அவஸ்த்தைகள் சொல்லி மாளாது. நடை பிணமாக கவனமாக பார்த்து பார்த்து வாழ வேண்டிய சூழ்நிலையில் தான் இருக்கிறார்கள். அதிகப்படியான கொழுப்பு,அதிக மன அழுத்தம்,தேவையில்லாத விசயங்களில் அதிக நாட்டம் என்று கடைசியில் இதயத்திற்கு நட்டத்தை உருவாக்கி நடைபிணமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆனாலும் அவர்களின் அடிப்படை பண்புகள் எதுவும் மாறியதாக தெரியவில்லை. 

போதை 3

திருப்பூருக்குள் எந்த பகுதிக்குள் நுழைந்தாலும் சந்துக்கு ஒரு மதுக்கடையை பார்க்கலாம். தமிழ்நாட்டில் திருப்பூர் என்பது அரசாங்கத்திற்கு மது மூலம் முக்கிய வருவாய் தரும் ஊராக இருக்கிறது.  வயது வித்தியாசம் பாராமல், சாதி மதம் பார்க்காமல், அந்தஸ்து அதிகாரம் எதுவும் தேவைப்படாத ஒரே இடம் தான் இந்த மதுக்கடைகள். 

12 வருடத்திற்கு முன்பு ஒரே தின வைராக்கியத்தின் மூலம் தலைமுழுக முடிந்தது. பாவம் இன்னமும் என் நண்பர்களால் முடியாமல் அவஸ்த்தைபட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

எந்த பழக்கத்தையும் உங்கள் கை பக்குவத்தில் வைத்திருப்பது ரொம்பவே முக்கியம்.

மதுக்கடைகளை விட நான் அதிகம் ரசிக்கும் இடம் அந்த சால்னா கடைகள் தான்.  முதலாளிகள் கூடும் பாரில் கூட நாம் எதையும் கற்றுக் கொள்ள முடியாது. இருட்டுக்குள் இருந்து அங்கே அவர்கள் பேசும் ரகசியங்களில் எந்த சுவராசியத்தையும் கண்டதில்லை.

ஆனால் சால்னா கடைகளில் ஒவ்வொருவரின் உரையாடலில் தெரியும் வார்த்தைகள் பலரின் உண்மையான வாழ்க்கை தரத்தை உணர வைக்கின்றது.

புத்தனுக்கு கிடைத்த ஞானமெல்லாம் தற்போது மனிதர்களுக்கு இந்த டாஸ்மாக் பார்கள் தான் தந்து கொண்டிருகின்றது. 

கொஞ்சம் மொலாசிஸ் கொஞ்சம் நிறம். நிறைய தண்ணீர். 

இந்த கலவையினால் தமிழர்கள் வாழ்வில் இழந்த நாடுகள், சொத்துக்கள், அரண்மனைகள், ராஜ்ஜியங்கள் என்று தொடங்கி இன்றைய சூழ்நிலையில் அடுத்த வேலைக்கு சோத்துக்கு சிங்கியடித்தால் கூட புத்தி வராமல் இருப்பவர்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.

இதயம், நுரையீரல் கூட ஒரு எச்சரிக்கை மணி கொடுக்கும்.  புரிந்து கொண்டு ஒத்துழைத்தால் சாவை கொஞ்சம் தள்ளிப் போட முடியும்.  

ஆனால் கல்லீரல் என்பது அப்படியல்ல.  கழுதை போல கல்லீரல் பொதி சுமக்கும். 

ஆனால் ஓர் எல்லைக்குச் சென்ற பிறகு ஒன்றுமே செய்ய முடியாமல் துப்பத் தொடங்கி விட்டால் உங்கள் உயிர்க்கூடு தூசியில் கலந்து விடும். பெரும்பாலான அரசியல்வாதிகள்,திரைப்பட பிரபல்யங்கள்  இறந்த செய்திகளுக்குப் பின்னால் இருக்கும் நோய்களில் முதன்மையான இந்த கல்லீரல் சம்மந்தப்பட்டதாகவே இருக்கும். 

பாதை

திர்ப்புகளைக் கண்டு அஞ்சாதே.  இது போராட்ட களத்தில் சொல்லக்கூடிய வார்த்தை.  ஆனால் நாம் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டிய வாசகம் உடம்பில் எதிர்ப்பு சக்தியை வளர்க்கத் தயங்காதே என்பது தான்.  நமது உடம்பில் இயல்பான நாட்டு மருந்துக்கள் மூலம் உருவாக்கக்வடிய எதிர்ப்பு சக்திகளை அடுத்த காரைக்குடி உணவகத்தில் எழுதுகின்றேன். 

என்னுடைய கல்லூரி பேராசியர் நடனராஜ் என்பவர் மிக அற்புதமான மனிதர். கறுத்த மனிதர் புல்லட்டில் வரும் அழகே தனி. 

ஆனால் செயின் ஸ்மோக்கராக இருந்தார்.  கல்லூரியில் இடையே அவர் அறைக்குச் சென்றால் தலைவலியோடு குமுட்டலும் வந்துவிடும்.  ஆனால் எந்த நோயும் தாக்காமல் தன்னளவில் அளவீடுகளை சரியாக வைத்திருந்தார். மாணவர்களை கண்டதும் வேகமாக பின்னால் ஒளித்து வைத்துக் கொண்டு வாயில் கை வைத்துக் கொண்டு பேசுவார்.  தற்போது எந்த நிலையில் இருக்கின்றார் என்பதை பார்க்க வேண்டும் என்பதை மனதில் வைத்துள்ளேன்.

ரில் நாடகத்தில் ராஜபார்ட் வேடம் போடும் ஒருவருக்கு காலையில் சாராயம் குடிக்காமல் இருந்தால் பைத்தியமே பிடித்து விடும். அருகே உள்ள ஒரு ஊரில் தான் சாராயம் விற்பார்கள். அதிகாலையில் முதல் பேரூந்தில்  ஏறிச்சென்று குடித்து விட்டு வந்து சலூன் கடையில் உட்கார்ந்தால் அவர் பாடும் பாடலுக்கென்றே அங்கே ஒரு கூட்டம் கூடும்.  ஆனால் சாவதற்கு முதல் நாள் வரைக்கும் குடித்தபடியே தான் இருந்தார். ஆனால் சாப்பாடு விசயங்களிலும் பலே கில்லாடி. அசைவபட்சியாகவே இருந்தார். 

கடைசியாக செயல்படமுடியாமல் இருந்த அந்த காலகட்டத்தில் அவர் பட்ட பாடுகளை விட அவரால் அவர் குடும்பம் அனுபவித்தது தான் நரகவேதனை. மேலைநாட்டு கலாச்சாரமாக இருந்தால் வேறுவிதமாக கதையை முடித்து இருப்பார்கள்.

ரில் நான் பார்த்த பழகிய 90சதவிகித பேர்கள் அசைவ வெறியர்களாகத் தான் இருந்திருக்கிறார்கள்.

இன்று வரையிலும் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் ஏதோவொரு வழியில் உடல் உழைப்பு இருப்பதால் அத்தனையும் சக்தியாக மாறிவிடுகின்றது.  ஆனால் நகர வாழ்க்கையில் புத்திக்கு மட்டும் வேலையிருப்பதால் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் இயல்பாகவே நரகம் எட்டிப்பார்த்து விடுகின்றது.

மிர்தம்  ருசியானது தான். ஆனால் அளவு தெரியாதவர்களின் வாழ்க்கை இறுதியில் அழைத்துச் செல்லும் இடம் தான் இன்று  பூங்காவனம் போல அலங்கரிக்கப்பட்ட இடமான  மின் மயானம்.

எல்லோருமே கடைசியில் பிடி சாம்பல் தான். 

ஆனால் கடைசியில் கையில் வாங்கி கரைக்க எடுத்துச் செல்பவர்கள் குறைந்த பட்சம் திட்டித் தீர்க்காமல் நல்ல விதமாக சாவது தான் நமக்கு முக்கியம்.

தொடர்புடைய பதிவுகள்

காரைக்குடி உணவகம்

காரைக்குடி உணவகம் தீபாவளி விருந்து

காரைக்குடி உணவகம்  விருந்தும் மருந்தும்

படங்கள்   4TamilMedia.com

24 comments:

  1. இரண்டாவது போதை குடும்ப பொருளாதாரத்தையும் கொஞ்சம் ஆட்டும்

    வார இறுதியில் வீட்டில் சமைக்கக் கூடாது என்று பலரும் விரும்புவதே இதன் காரணம்.

    ReplyDelete
    Replies
    1. மாதம் ஒரு முறை கூட ஹோட்டலுக்கு போய்ச் சாப்பிடறது இல்லையா? என்பது போன்ற வார்த்தைகள் அத்தனை குடும்பத்திலும் இயல்பான பேசு மொழியாக ஆகிவிட்டது.

      Delete
  2. ரசித்தேன். இந்த வலைகளில் சிக்காமல் இருப்பதற்காக மகிழ்ந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. இந்த வயதில் நீங்க ஆரோக்கியமாக இருக்க காரணமே நீங்க இந்த வலைகளில் சிக்காமல் இருந்தது தானே?

      Delete
  3. யப்பாப்பா! நிறைய தகவல்கள், உங்களுடைய பதிவு, மிகப்பெரியது என்பதால் நான் தவணை தவணையாக படித்தேன், இழுத்துப்பிடித்து படிக்க வைத்தது சில தகவல்கள். ம்ம்ம்ம் இப்பத்தான் பெருமூச்சி விட்டேன்.

    வாழ்க்கை பயணத்தில் எவ்ளோ போராட்டம்.

    ReplyDelete
    Replies
    1. நிறைய யோசிக்க வைத்தீர்கள். அடுத்த முறை சுருக்கமாக தருகின்றேன். நன்றி.

      Delete
  4. ஜோதிஜி,

    சரக்கு, புகை எல்லாம் தனி மனித எல்லைக்குள் என வைத்துக்கொள்ளலாம்.

    உணவகங்கள் வைக்கும் விலை கொள்ளை இருக்கிறதே, சரக்கடிக்காத பேச்சிலராக வாழ்பவனையும் வதைக்குது.

    சென்னை போன்ற ஊரில் கையேந்தி பவன் எல்லாம் இல்லைனா ஒரு 50 லட்சம் பேரு பட்டினி தான், சும்மா சில லட்சம் உயர் வர்க்க சம்பளக்காரர்களுக்கு ஏற்றார் போல சென்னையில் எல்லா விலையும் மாறிக்கிட்டு வருவது ரொம்ப கொடுமை.

    அதுவும் பதிவுலகில் சாப்பாட்டுக்கடைன்னு எழுதுறவங்கள எல்லாம் கிராமத்துக்கு கூப்பிட்டு வந்து ஒரு நாள் வயலில் களைப்பிடுங்க விட்டால் என்னனு நினைப்பேன்.

    சாண்ட் விட்ச் 150 ரூபாயா அநியாய விலையா இருக்கேன்னு சொன்னால் , கூட அதனால் என்ன தரமான உணவுன்னா விலை அதிகமா தான் இருக்கும் என்கிறார்கள்.

    உணவுப்பொருட்களுக்கு விலை,அளவு நிர்ணய சட்டம் இருக்கு,அதை எந்த உணவகமும் கடைப்பிடிப்பதில்லை.

    ரயில்நிலையத்தில் கேண்டீன் நடத்த டெண்டர் விடும் விண்ணப்பத்தில் படித்தேன் , இட்லி , பொங்கல் ,உப்புமா எல்லாம் என்ன எடை, சட்னி ,சாம்பார் என்ன அளவு, அதிக பட்ச விலை, இதுக்குள்ள தயார் செய்து விற்க வேண்டும் என ஏற்றுக்கொண்டால் தான் கேண்டீன் நடத்த விண்ணப்பிக்கவே முடியும்.

    அதுக்கும் ஒத்துக்கிட்டு அந்த கேண்டீன் நடத்த பலர் முன் வருகிறார்கள், செம போட்டி அதுக்கு.

    ReplyDelete
    Replies
    1. ஒத்த சிந்தனைகளை உங்கள் விமர்சனத்தில் கண்ட மகிழ்ச்சி.

      Delete
    2. ஜோதிஜி,

      ஹி...ஹி என்னோட சிந்தனைக்கு ஒத்து எழுதிட்டிங்கன்னு தான் சொல்வேன், இந்த சாப்பாட்டுக்கடை பதிவர்களோட இதை வச்சு நான் நிறைய கலாய்ச்சு இருக்கேன், அநியாய விலை கடையை எல்லாம் நல்லா இருக்குன்னு எழுதுறாங்களேன்னு.

      இன்னும் சொல்லப்போனால் என்னால ஒருத்தர் இப்போ அதிக விலையுள்ள கடைகளை பற்றி எழுதுவதை தவிர்க்கிறார் :-))

      Delete
    3. திருப்பூரில் பாப்பீஸ் ஹோட்டல் கேள்விபட்டு இருக்கீங்களா? பஃபே என்கிறார்கள். ஒரு சாப்பாடு 450 ஆனால் வரி என்று பில் போடும் போது பாதி வருகின்றது. ஏறக்குறைய 600 என்கிற அளவுக்கு. நல்ல கிராமத்தில் பிறந்த உழைப்பின் மூலம் வாழபவர் கூட இந்த பண மதிப்புக்கு சாப்பிட முடியாது. 20 வகையான விசயங்கள. கடைசியில் பழங்கள் ஐஸ்கீரிம் பாயாசம் வரைக்கும். எனக்கு சாப்பாட்டுக்கடைகள் என்றாலே அலர்ஜி. எனக்கு இதில் நல்ல அனுபவம் இருப்பதால் உணவின் உண்மையான விலை மனதில் ஓடிக் கொண்டேயிருக்கும். அப்புறம் எங்கே சுவைப்பது? வீடு தான் எப்போதுமே நல்ல ஆரோக்கியமான விலை குறைந்த உணவகம். குழந்தைகள் சாப்பிடுவதை வேடிக்கை பார்ப்பது தான் இப்பொழுது வாழும் வாழ்க்கை. 20 வயதுக்குள் தின்று தீர்த்து விட வேண்டும். 30 க்குள் இன்னும் கொஞ்சம் முயற்சிக்கலாம். 40 முதல் தடா தான். மீறினால் அப்புறம் மருந்துக் கடை தான் கதியாக இருந்து தொலைக்கும்.

      Delete
  5. சாம்பலுக்கு முன் என்னவொரு ஆர்ப்பாட்டம்...!

    ReplyDelete
    Replies
    1. இந்த முறை உங்கள் விமர்சனம் சிறப்பாக வந்துள்ளது.

      Delete
  6. உங்கள் பதிவு அருமை, ஒவ்வொரு வாசகமும் அருமை, படிப்பதற்கு இனிமையாக இருக்கு. ரசித்து ருசித்து படித்தேன், கருத்துக்கள் சும்மா நச்சுன்னு இருக்கு, இன்றுதான் உங்கள் வலை தளம் வந்தேன். பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி முபராக். கற்றதும் பெற்றதும் தானே வாழ்க்கை.

      Delete
  7. எதிலும் ஒரு "சுயக்கட்டுபாடு" இல்லையென்றால் பாதிப்புதான் உணவு,போதை சமசாரங்கள், நெட், மற்றும் குடும்பபாசம் எல்லாவற்றிலும் அளவு மீறினால் பாதிப்புதான்

    ReplyDelete
    Replies
    1. ஆனால் இங்கே மீறுதல் தான் பலருக்கும் வாழ்க்கையாக இருக்கிறது.

      Delete
  8. திரு ஜோதிஜி அவர்களின் அருமையான பதிவு. ஒரு துளி படித்துப் பாருங்கள்:
    அமிர்தம் ருசியானது தான். ஆனால் அளவு தெரியாதவர்களின் வாழ்க்கை இறுதியில் அழைத்துச் செல்லும் இடம் தான் இன்று பூங்காவனம் போல அலங்கரிக்கப்பட்ட இடமான மின் மயானம்.
    முழு பதிவையும் ஆழ்ந்து படித்துப் பாருங்கள். எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். யோசியுங்கள் நண்பர்களே.
    நன்றி திரு ஜோதிஜி.

    ReplyDelete
  9. அருமையான பதிவு , பின் பற்றுவார் , பயனுறுவர் . நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருத்தப்பட்டு பாராம் சுமப்பவர்களே. என்னிடம் வாருங்கள். யார் சொன்னது தெரியுமா?

      Delete
  10. நாகாரீகம்!என்ற பெயரில் கண்டதையும் தின்றுவிட்டுஅலைந்தால் வியாதி தேடிவரும்.

    ReplyDelete
    Replies
    1. வியாதிகள் மட்டும் வந்தால் பரவாயில்லையே. எல் கே சொன்னது போல அடிப்படை வீட்டு பொருளாதாரமும் ஆடிப் போகின்றதே.

      Delete
  11. புலியினைப் பார்த்து நரிகளும் சூடு போட்டுக் கொள்வதுதான் வேதனையான் விசயம் ஜோதிஜி.

    (இப்பொழுதெல்லாம் நிறைய பதிவுகள் வெளியாகுதே! எனான் சூட்சுமம்?)

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் படிப்பது இந்த வருடத்தின் 50 வது பதிவு. முதல் 7 மாதங்கள் எழுதவே முடியல. இந்த வருடமே 51 பதிவுகள் தான். வேலைகள் இருந்தாலும் வருடத்தின் முடிவு வரைக்கும் ஒரு முடிவோடு எழுதியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கேன். இந்த மாதம் முழுக்க குழந்தைகளைப் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம். ஐந்து நிமிடம் ஒதுக்கிவிட்டு உள்ளே வாங்க. அப்போது உங்கள் குழந்தை நினைவுக்கு வரும்.

      Delete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.