அஸ்திவாரம்

Friday, October 05, 2012

பயணமும் எண்ணமும்


"தம்பி நம்ம நாட்டு ஜனாதிபதி யாருப்பா?"

"பிரதீபா பாட்டீல்"

"இல்லப்பா? இப்ப மாறியிருக்குறாங்களே அவங்க பேரு?"

"தெரியலையே....."

"சரி தெரிஞ்சுக்க அவரு பேரு பிரணாப் முகர்ஜி"

பையன் யோசிக்காமல் சட்டென்று அடித்தான்.

"இவரு இன்னும் பேமஸ் ஆகலை.  அதுதான் எனக்கு தெரியல" என்றான்.

சென்னையை நோக்கி ரயிலில் சென்று கொண்டுருந்த எனக்கு எதிரே நடந்த உரையாடல் இது.  

பையன்  நாகரிகமான உடையில் பளிச்சென்று இருந்தான்.  நிச்சயம் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டுருக்ககூடும்.   கேள்வி கேட்டவர் அவனை விடவில்லை.  அவன் பக்கத்து பெட்டியில் இருந்து அங்கும் இங்கும் அலைந்து கொண்டுருந்தவன்.  என் எதிரே இருந்த இருக்கை காலியாக இருக்க,  வந்தமர்ந்தவனுக்கு சோதனையாக இந்த கேள்வி பதில் போட்டுத் தாக்கியது. என் எதிரே இருந்தவர் தொடர்ச்சியாக ஏதோவொரு புத்தகத்தை படித்துக் கொண்டே வந்தார். அது முடியும் போது என்னிடம் உள்ள புத்தகத்தை வாங்கி படிக்கத் தொடங்கி விடுவார்.  இடையில் சற்று நேர ஓய்வில் இந்த பையன் மாட்டிக் கொண்டான்.

பையனுக்கு பதில் தெரியவில்லை என்ற கவலை எதுவும் இருந்ததாக தெரியவில்லை.  அவனுடைய நோக்கம் வேறு எங்கோ இருந்தது. ஒவ்வொரு இருக்கையாக தாவிக் கொண்டுருந்தான். கேள்வி கேட்டவர் புலம்பிக் கொண்டுருந்தார்.  

"பாருங்க சார்.  என்ன வெளியே நடக்குதுன்னு ஒரு பசங்களுக்கும் தெரியமாட்டுது". என்றார்.

அவரை கவனிக்கும் போதே உள்ள ரயில் பெட்டியின் உள்ளே வெவ்வேறு பகுதிகளில் இருந்தவர்களை கவனித்தேன்.  சென்னை எக்ஸ்பிரஸ் வண்டியில் தொடக்கம் முதல் கடைசி வரைக்கும் ஒரே மாதிரியான இணைப்பு என்பதால் பயணிப்பவர்களுக்கு பல விதங்களில் பயன் உள்ளதாக இருக்கிறது.  பொழுது போகவில்லை என்றால் முதல் பெட்டியிலிருந்து கடைசி வரைக்கும் ஒரு நடை போய்விட்டு வரலாம்.  நானும் போய்விட்டு வந்தேன்.

பலவிதமான முகங்கள்.  ஒவ்வொரு முகமும் சொல்லும் ஏராளமான கதைகள். இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளையும் ரயில் பயணங்களில் மட்டுமே தான் கேட்க முடியும்.  பேரூந்து போல புகை நம் முகத்தை நேரிடையாக தாக்காது. டீசல் புகையில்லாமல் நகருக்கு வெளியே பயணிக்கும் ரயில் வண்டி பயணமென்பது குழந்தைகளுக்கு எப்போதும் விருப்பமாகத் தான் இருக்கிறது.  பேரூந்து பயணத்தில் ஒரு ஒழுங்கு முறை இருக்காது. போக்குவரத்து நெரிசல் தொடங்கி, ஒவ்வாத சப்தம் என்று மாறி மாறி நம்மை கடுப்பேற்றும். 

ஒவ்வொரு நிறுத்தமும் கத்தலும் கலந்து கவனத்தை திசை திருப்பும்.  கூட்டம் சேர சேர உள்ளே புழுக்கம் அதிகமாகும்.  புகை பிடிப்பவர்கள் அருகில் அமர்ந்திருந்தால் இன்னமும் அவஸ்த்தைகள் அதிகமாகும்.  ஆனால் ரயில் பயணம் ஒரு வீட்டுக்குள் இருக்கும் சுகம் போலத்தான் இருக்கிறது.  அதுவும் விரைவு ரயில் என்றால் இன்னமும் வியப்பாகத்தான் இருக்கிறது. நகரங்களில் பயணிக்கும் போது கூட அவுட் லைன் போல ஓட்டி வெட்டி நகரும் போது அந்த நகரத்தின் வேறொரு தோற்றம் நமக்கு தெரிய வரும்.  மாறி வரும் காட்சிகளில் என்றுமே அலுப்பாய் இருக்காது.  

பக்கத்து பெட்டியில் ஒரு கல்லூரி மாணவ கூட்டம் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியை நடத்திக் கொண்டுருந்தார்கள்.  ஏறக்குறைய 30 பெண்களும் 20 ஆண்களுமாய் இருந்த அந்த கூட்டத்தில் சந்தோஷம் கரைபுரண்டு ஓடிக் கொண்டுருந்தது.  திடும் திடுமென்ற சப்தமும், சிரிப்புமாய் சில்லறை சிதறல்களாய் என்னை வந்து தாக்கிக் கொண்டேயிருந்தது.  எது குறித்தும் கவலையில்லை. எப்போதும் இந்த வாழ்க்கையில் இந்த மகிழ்ச்சி நிரந்தரம் என்பதாக திரைப்பட பாடல்களை மாறி மாறி ஒவ்வொரு பெண்ணாக சொல்லிச் சொல்லி அடுத்த பெட்டிக்கு கேட்கும் அளவுக்கு தங்களது பயணத்தை மற்றவர்களுக்கு பயமாக்கிக் கொண்டுருந்தார்கள்.  அருகே இருந்த மாணவர்கள் வாய் பார்த்து கோராஸ பாடிக்கொண்டுருந்தார்கள்.

பெட்டியில் பெரும்பாலான இளையர்களின் காதில் நிச்சயம் ஒரு ஹெட்போன் இருக்க அலைபேசி பாடல்களை அவசரம் அவசரமாக ரசித்துக் கொண்டே கத்திக் கொண்டுருந்தார்கள்.  ரசனைக்கும் கத்தலுக்கும் இடையே உள்ள இடைவெளியை அவர்களின் முகபாவனையை வைத்து கவனித்துக் கொண்டுருந்தேன்.  ஏதோவொரு விதத்தில் ஒவ்வொருவரும் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளவே விரும்புகிறார்கள். 

வயதுக்கும் பொறுப்புக்கும் நிறைய சம்மந்தம் இருக்கும் போல. வேலையில்லாமல் இருப்பது மட்டும் பொறுப்பற்ற தனமல்ல. தெளிவற்ற சிந்தனைகள் கூட ஒருவகையில் பொறுப்பற்ற தனம் தான்.

பயணங்களில் மற்றும் காத்திருக்கும் சமயங்களில் பெரும்பாலும் புத்தகம் படிப்பது என்பது 40 வயதுகளை கடந்தவர்களின் கைகளில் தான் பார்க்க முடிகின்றது. வாசிப்பு அனுபவம் என்பது மெதுமெதுவாக மறைந்து கொண்டுருக்கிறது.  அதற்கு பதிலாக உருவாகியிருக்கும் நவீனங்களின் மூலம் தான் பலருக்கும் ஆசைகள் முடிவுக்கு வருகின்றது. நவீனங்கள் தான்  இன்றைய இளையர்களை நகர்த்திக் கொண்டேயிருக்கிறது. மேலைநாடுகளில் ஐ போன் கொண்டாட்டங்களைப் போல இங்கே அலைபேசியில் பதிவு செய்யப்பட்ட பாடல்களை கேட்டு முடியும் போது பலருக்கும் ஜென்ம சாபல்யமே முடிவுக்கு வருகின்றது.  

இளையர்களின் கொண்டாட்ட மனோநிலையில் புத்தகங்கள் என்பது காணாமல் போய்விட்டது.  பாடப் புத்தகத்திற்கு அப்பாலும் ஒரு உலகம் உள்ளது என்பதை தற்போதைய கல்வித்திட்டம் சொல்லிக் கொடுப்பதும் இல்லை.  ஆதரிக்க விரும்புவதும் இல்லை. மதிப்பெண்கள் தான் இன்றைய கல்வியில் மிக முக்கியம்.  அதற்காக சுய சிந்தனைகளை வளர்க்காத மக்காக இருந்தாலும் அது குறித்து அக்கறையில்லை.

இதன் காரணமாகவே நூலகத்தை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே இருக்கிறது.

வீட்டில் குழந்தைகளுடன் பேசும் போது அவர்களின் சொந்த கற்பனைகளை பரிட்சையில் எழுதச் சொல்வதுண்டு.  ஆனால் அவர்கள் ஒன்றைத் தவறாமல் சொல்வார்கள்.

"மிஸ் சொந்தமாக எழுதினால் மார்க் போடமாட்டங்கப்பா" என்பார்கள்.

எழுதியிருந்தாலும் சுழித்துயிருப்பதை பலமுறை பார்த்து இருக்கின்றேன். கருத்து அதுவாகத்தான் இருக்கும்.  ஆனால் வார்த்தைகள் தான் வேறுவிதமாக இருக்கும். ஆதரிக்க மனமில்லாதவர்களை ஆசிரியர்களாக பெற்றுருக்கும் போது குறுகிய உள்ளம் கொண்டு மாணவர்களைத் தான் உருவாக்க முடியும். மனப்பாடம் தான் மகத்தான் சாதனை என்பதாக மாற்றப்பட்ட ஒரு கல்விச் சமூகம் நம் முன்னால் உருவாக்கிக் கொண்டுருக்கிறது. 

படிக்க வேண்டும். அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். நல்ல வேலை அதிக சம்பளம்.  எளிதான வாழ்க்கையில் தனக்கான இருப்பிடம் என்பதாக ஒரு வரையறை உருவாக்கப்பட்டு விட்டது.

அதிக பணத்தை கொண்டாடுபவர்களின் கூட்டம் வெளியே தான் வீரர்களாக இருக்கிறார்கள். மனதளவில் மடையர்களாகத்தான் இருக்கிறார்கள்.  பணம் தரும் போதையில் சமூகம் அவர்களை கொண்டாடப்படுவதால் பார்ப்பவர்களின் பார்வையில் பரிசுத்தமானவர்களாகத் தெரிகிறார்கள்.


என் முன்னால் அமர்ந்திருந்த மற்றொரு மாணவன் வண்டி ஓடத் தொடங்கியது முதல் தொடர்ச்சியாக தனது மடிக்கணினியை பார்த்துக் கொண்டே வந்ததால் அந்த அளவுக்கு வேலை இருக்குமோ என்று யோசித்துக் கொண்டுருந்த போது தான் உண்மை புரிந்தது.  கல்லூரி விடுதியில் பார்க்க முடியாத படங்களை இது போன்ற சமயங்களில் பார்த்து விடுவானாம்.  வரிசையான பட்டியல்களை காட்டினான்.  கலந்து கட்டியிருந்த அந்த படவரிசை பத்து "பயம்" தந்த கலக்கலாகயிருந்தது. 

பேரூந்து பயணங்களை விட ரயில் பயணம் தான் தற்போதைக்கு பல விதங்களில் சிறப்பு,.  ஏறக்குறைய கட்டண விகிதத்தில் ரயிலுக்கும் பேரூந்துக்கும் ஐந்து மடங்கு வித்தியாசம் இருப்பதுடன் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கையில் பயணிப்பது ஒரு தனியான சுகம்.  முனபதிவு செய்யாத சமயங்களில் பலமுறை நெருக்கியடித்து, வியர்வை குளியலில் நனைந்து பலமுறை பயணித்திருந்த போதிலும் ஒவ்வொரு பயணமும் தற்கால சமூகத்தை அப்பட்டமாக பிரதிபலிப்பதை கவனித்தால் நன்றாக புரியும்.

தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பயணிக்கும் ரயிலில் ஒரு முறை சென்று வாருங்கள். அந்த வாய்ப்பு இந்த முறை எனக்கு கிடைத்தது.  திருப்பூர் முதல் சென்னை வரைக்கும் பயணிக்கும் போது பார்த்த மனிதர்களின் மனோபாவம் என்பது சென்னை முதல் காரைக்குடி வரைக்கும் பயணிக்கும் பயணத்தில் மொத்தமாக மாறிவிடுகின்றது. 

உடைகள், நடைகள், பேச்சு, பாவனைகள், கவலைகள் என்று மொத்தமாக புதிதாக இருக்கிறது.  எந்த இடத்தில் இருந்தாலும் உங்களைச் சுற்றிலும் என்ன நடக்கின்றது என்பதை கவனிக்க பழகி விட்டால் உங்கள் சொந்த கவலைகள் காணாமல் போய்விடும். உங்களைவிட அதிக கவலைகள் சுமப்பவர்களை பல பயண்ங்கள் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். 

சுற்றிலும் கவனிக்க வேண்டும் என்ற ஆசையிருந்தால் உங்களுக்குள் இருக்கும் பல விதமான கலைஞர்கள் வெளியே வந்து எட்டிப்பார்க்ககூடும்.  காரணம் இங்கே எவரும் கவனிக்க விரும்புவதே இல்லை.   

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அவசரங்கள். தன்னுடைய அவஸ்த்தைகளையும் சுமந்து கொண்டு தான் பலரும் பயணிக்கின்றார்கள். பதில் தெரியாத கேள்விகளைப் போல பயத்துடன் தான் பயணிக்கின்றனர்.  அப்புறம் எங்கே பயணம் சுகமானதாக இருக்கும்.  கவலைகளை பயணிக்கும் போது ஜன்னலில் தூக்கி எறிந்து விடுங்கள்.  காணும் காட்சிகளின் மூலம் கிடைக்கும் பதில்கள் உங்களுக்கு தேவைப்படும் ஏதோவொன்றாக மாறக்கூடும். 

ஒவ்வொருவரின் பயணமும் ஓராயிரம் அனுபவங்களை இலவசமாக தந்துவிடுகின்றது.  கவனிக்க மனம் தான் வேண்டும்.

13 comments:

  1. பொதுவாய் வெளிஊர்களிலிருந்து சென்னை வரும் ரயில்களில் சென்னையின் பகட்டோடு தன்னை பொருத்திக்கொள்வதற்கான முயற்சியும், ஆவலும் வெளிப்படுவதாய் உணர்கிறேன். இதே சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கு செல்லும் ரயிலில் அது சென்றடையும் இடத்தின் வட்டார மக்களே அதிகம் பயணிக்கிறார்கள் என்பதால் அது கிட்டத்தட்ட அந்த ஊருக்குள்ளேயே இருப்பதைபோன்ற உணர்வைத்தருகின்றதாய் எனக்கு தோன்றுவதுண்டு. மேலும் வாசிப்பனுபவத்தை குறிப்பிடுவதானால் நீங்கள் சொல்வதுபோல் 40 வயதே புத்தகத்தை தேடுகிறது.90களின் தொடக்கத்தில் லைப்ரெரியின் ஊழியர் 7.45 க்கே ( 8 மணி வரை வேலை நேரம் )லைட்டை அணைத்துவிடுவதால் 0.15 நிமிடம் படிக்கமுடியாமல் போய்விடுகிறதே என்ற ஆதங்கம் அவர்மேல் புகார் அளிக்கவைத்த‌ நாட்கள் நினைவிற்குவருகின்றது.

    ReplyDelete
  2. ஜோதிஜி,

    படிக்கும் பழக்கம் குறைந்து போய்விட்டதைப்போல தோன்றினாலும் ,படிக்கத்தான் செய்கிறார்கள்.

    கன்னிமரா நூலகம், தேவ நேயப்பாவணர் நூலகம் போனால் பார்க்கலாம், இளைஞர்கள் தான் சுறு சுறுப்பாக படிக்கிறார்கள், எல்லாம் போட்டித்தேர்வுகளுக்காக.

    ஹி...ஹி எதுக்கோ படிக்கிறாங்க தானே.

    ஆனால் அங்கே 40 வயதை கடந்தவர்கள் வந்து தூங்கிட்டு இருப்பாங்க.


    கல்லூரிக்காலங்களில் படிக்கும் வழக்கம் குறைந்துவிட்டது எனலாம். அப்படிப்படிக்க இப்போது கல்வி சூழல் அனுமதிக்கவில்லை .
    ---------

    // கருத்து அதுவாகத்தான் இருக்கும். ஆனால் வார்த்தைகள் தான் வேறுவிதமாக இருக்கும். ஆதரிக்க மனமில்லாதவர்களை ஆசிரியர்களாக பெற்றுருக்கும் போது குறுகிய உள்ளம் கொண்டு மாணவர்களைத் தான் உருவாக்க முடியும்//

    உண்மை தான் ஆசிரியர்கள் சொந்தமாக எழுதினால் ,சுழுத்து தப்பு ஆக்கிடுவார்கள்.

    நான் படிக்கும் போதே அப்படித்தான்,ஆங்கிலம் தமிழில் சினானிம்ஸ்,ஆண்டனிம்ஸ் என சொந்தமாக எழுதுவேன் , மார்க் போட மாட்டார்கள்,ஆனால் நான் விடும் ஆள் இல்லை, கையில் டிக்‌ஷனரியோட போய் இதோ பாருங்க சார்னு நிப்பேன், திட்டிக்கிட்டே மார்க் போடுவார்.

    அடிக்கடி நான் மல்லுக்கட்டவே சொன்னார், பப்ளிக் எக்ஸாம் அப்போவும் பேப்பர் திருத்தும் போதும் நீ போய் கேட்பியா, பேப்பர் திருத்த ஆன்சர் கீ கொடுப்பாங்க,அதுல இருக்கிறது எழுதினா தான் மார்க், உன் அறிவாளி தனத்தை பேப்பர்ல காட்டினா எல்லாம் மார்க் போடமாட்டாங்கன்னு ஒரே போடா போட்டுட்டார் :-))

    நம்ம கல்வி முறையே இப்படித்தான் எனும் போது சொந்தமாக என்ன செய்ய முடியும்.

    ReplyDelete
  3. மழைக்காலத்தில் மழை பெய்ய எத்தனிக்கும் போது இருக்கும் ரயில் பயணம் ஒரு சுகானுபவம்.

    படிக்கும் ஆர்வத்தை பிள்ளைகளுக்கு பழக்க வேண்டியது பெற்றோரின் பொறுப்பு அல்லது பொறுப்பாக்கிக் கொள்ளவேண்டும்.

    ReplyDelete
  4. agaligan said...

    உங்களின் விமர்சனத்தை பார்த்து வியந்து போனேன். சில குறிப்பிட்ட விசயங்களை தொட்டு காட்டி இருக்கீங்க. படித்தபிறகு தான் நானே யோசித்தேன். குறிப்பாக சென்னை செல்பவர்களின் மனோநிலை குறித்து. உங்கள் பதிவுகள் கூட கவிதையாய் இருக்கிறது. நேற்றே உங்களுக்கும் நம்ம வவ்வுஜிக்கும் நீண்டதாக அடித்து முடித்த பிறகு நத்தம் விஸ்வநாதன் கட் என்றார். புடுங்கிக் கொண்டு போய்விட்டது.

    வவ்வுஜி உங்கள் பதில் அடுத்த பதிவு எழுத தூண்டியது.

    வாங்க கந்தசாமி அய்யா. பொறுமையாக படித்து இருப்பீங்க போல.

    பின்னோக்கி நலமா? நீங்கள் சொல்வது உண்மைதான். குழந்தைகளை காலாண்டு விடுமுறை சென்று வந்த அனுபவத்தை ஒரு கட்டுரையாக எழுதச் சொல்லியுள்ளேன். தமிழ்மொழி நிலைமையை அப்போது வந்து நீங்கள் பார்த்து விட்டு கருத்து சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  5. ஜோதிஜி,

    //நத்தம் விஸ்வநாதன் கட் என்றார். புடுங்கிக் கொண்டு போய்விட்டது. //

    நத்தம் விஸ்வநாதன் தான் தமிழக மின்(வெட்டு) துறை அமைச்சர் என சொல்லி எனது பொது அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ள உதவியதற்கு நன்றி! :-))

    நமது கல்வி மதிப்பெண் அடிப்படையிலானது ,நான் படிக்கும் போது அடிக்கடி கேட்கும் ஒரு பாராட்டு ..பேச்சு எல்லாம் நல்லா பேசு மார்க்கு மட்டும் வாங்காத என்பதாகும் :-))

    ReplyDelete
  6. ரயில் பயணம் சிறுவர் முதல் முதியவர் வரைவிரும்புவர்

    ReplyDelete
  7. Arumai!
    Young generation is very much deviated from reading and writing which is impacting basic fire on thoughts. This is primarily because Cell Phone, Internet, TV and Laptop usage crossed beyond basic needs. Movies in Bus Journey created pain and journey became painful. Readers and writers are becoming minority....
    - Bodinayakanur Karthikeyan from Phoenix, Arizona

    ReplyDelete
  8. நமது கல்வி மதிப்பெண் அடிப்படையிலானது ,நான் படிக்கும் போது அடிக்கடி கேட்கும் ஒரு பாராட்டு ..பேச்சு எல்லாம் நல்லா பேசு மார்க்கு மட்டும் வாங்காத என்பதாகும் :-))


    same blood////////////

    Thanks Palani samy and Karhick

    ReplyDelete
  9. திரு. ஜோதிஜி,
    மு. கு. : கீழே நான் சொல்லும் கருத்துக்கள் எண்ண வெளிப்பாடுகள் மட்டுமே. படித்தபின் உங்கள் கேள்வி இதற்கு / இந்த வரையரைக்கு அடங்கி, படிக்கும் போது நீ இருந்தாயா என்று இருந்தால், பதில் : இல்லை மற்றும் அதில் இருந்த அபத்தம் அப்போது உறைக்கவில்லை.

    கல்வி முறையினை பொறுத்தவரை, நாம நமக்கு என்ன வேணும், எப்ப வேணும், எப்படி வேணும் னு தெரியாம / யோசிக்காம எதையோ வித்தியாசமா செஞ்சு பார்க்க / என்னனு தெரியாத அல்லது இன்னும் முடிவு செய்யாத ஒரு குறிக்கோள அடைய முயற்சி செய்கிறதா நினைச்சிக்கிட்டு இருக்கிறோம் என்றே தோன்றுகிறது. அங்க அப்படி இருக்கு, இங்க இப்படி இருக்கு அதுனால அந்த/இந்த முறை சிறந்தது, நம்மகிட்ட இருக்குற முறை தவறு என்று இது மாதிரி சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.

    ஏன் என்றால், சொல்லிக்கொடுத்ததை கீழ்படிதலுடன் படித்தலும், மனனம் செய்தாலும், மறுபடி எழுத்தில் வடித்தலும் கூட ஒரு தேவையான தகுதியே. அது ஒன்றும் வெட்கப்பட வேண்டியதோ, கேவலமாக நினைத்து ஒதுக்கப்பட வேண்டிய ஒன்றோ அல்ல.
    அப்படி இல்லாமல் நான் குருவை மிஞ்சிய சீடன் என்றோ, எனக்கு பாடப்புத்தகத்திலுள்ளதை விட அதிகம் தெரியும் என்றோ காட்டிக்கொள்ள விரும்பினால், அதற்க்கு இடம் விடைத்தாள் அல்லவே. ஓவ்வோர் தனித்திறமையும் விடைத்தாளில் வெளிப்படும் அதனை ஆசிரியர் கண்டு வித்தியாசப்படுத்தி மதிப்பெண் வழங்க வேண்டும் என்றால் அங்கு மறுபடியும் யூகம் (subjective assessment) முன்னிலை பெறுகிறது. இது எங்கே கொண்டு விடும்.

    இன்னும் சொல்லப்போனால் கணிதத்தை விட கற்பனை மிக அதிகம் கேட்கும் கலை இல்லை, மற்றும் இசையை விட/ ஓவியத்தை விட கணித வாய்ப்பாட்டினை அதிகமாக மையப்படுத்த வைக்கும் பாடம் இல்லை.
    அது புரியாமல் நான் மிக அறிவாளியாக்கும் என்றால், சொல்லிக்கொள்ள வேண்டியதுதான்.

    இந்திய முறைக்கல்விக்கும், நமக்கு கவர்ச்சியாக தெரியும் மேலை / மாண்டசோரி / செயல் முறை கற்றல் இவற்றிற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால்,
    இந்த கல்வி முடித்ததும் ஒரு பணி இடத்திற்கு சென்று வேலை செய்ய தொடங்கும் வேளையில் தெரியும்.
    உ தா : ஜெர்மனியில் ஒரு தொழிற்சாலையில், இஞ்சினியர் ஆக சேரும் ஒருவர் குறைந்த பட்சம் 2 ஆண்டுகளுக்கு அடிமட்ட / ஆரம்ப நிலை வேலைகளை ( மெசின் டூல் இண்டஸ்ட்ரி என்றால் - காஸ்ட் அயன் பெட் ஸ்க்ரேப்பிங்) செய்து அதன் சூட்சுமம் அறிய வேண்டி இருக்கும். இதையே நம்ம ஆள் செய்ய மாட்டார். பத்து ஆண்டுகள் கழிந்த பின் அதன் வேறுபாடு தெரிய வரும். முந்தையவர் தன்னுடைய துறை விற்பன்னராக அறியப்படுவார், நம்மவர் அவரிடம் (அறிவுரை/பொருள்) வாங்குபவராக இருப்பார்.

    முந்தயவருக்கு 1+1 க்கும் கால்குலேட்டர் தேவைப்படும். ஆனால் ஒரு கணித, அல்லது பேப்பர் ல் வடிக்கும் செயலில் நம்மவர் துடியாகவே இருப்பார். ஆனால் பரிதாபம் அதை வாங்க ஆளில்லாமல்10வருடத்தில் மழுங்க அடிக்கப்பட்டு இருப்பார். மேனேஜர் ஆகிருப்பார்.

    இன்னும் சொல்ல நிறைய விஷயங்களும், எண்ணத்திசைகளும் உள்ளன. யோசித்தால் தங்களுக்கு எளிதாய் பிடிபட்டு விடக்கூடியதுதான்.

    அவற்றில், என்னால் முடிந்த வரையில் ஒரு எண்ணத்திசை : மேற்கண்ட இரண்டில் எந்த ஒன்று (எ) ஒரு வழி நம்முடைய (இந்தியா) இப்போதைய தேவைக்கு சிறந்தது? மேற்கண்ட இரண்டில் எதோ ஒன்று நமக்கு பிடிக்காமல் போய்விடுகிறது, அதற்கு என்ன காரணமாக இருக்கும்? அதை முடிவு செய்வது எது?
    பல்லின(diversity) ஏற்பு / பல்வேறு வகை செயல் முறைகள் (பாடத்திட்டங்கள்) / கற்பித்தல் முறைகள் ஏற்பு ஏன் தேவை? / தேவை இல்லை?


    மற்றபடி : இரயில் பயண அனுபவமும், பல்வேறு மனித முகங்களில் எழுதப்பட்டிருக்கும் வாழ்வின் துண்டுகளும், நிச்சயமாய் ஆர்வத்திற்குரியவைதான். எந்தவிதமான வேறு சிந்தனைகளும் இல்லாமல், ஒரு முன்பதிவு பயணசீட்டு வாங்கிக்கொண்டு இரண்டு மூன்று முறை இந்தியாவின் இந்த கோடியிலிருந்து அந்த கோடிவரை அலைந்து / அளந்து விட்டு வர முடியுமானால், ஆர்வம் தூண்டும் இடங்களில் இறங்கி காலாற நடந்து இந்த மண்ணை கண்களால் பருகி, மனிதர்களை உணர்ந்து, பழக்க வழக்கம் பார்த்து படித்து சேர்க்க முடியுமானால், தங்களுக்கு ஞானம் கிட்டியது என்று கூறத்துணியலாம்.
    பேருந்திலும் நகரப் பேருந்துகளாய் மாறி மாறி தொலை தூரம் கடக்க முயற்சித்துப்பாருங்கள். அதிகாலை வேளை ட்ரிப் களில்/ முதல் ட்ரிப் களில் பல பேருந்து நிலையங்களை காணவும், பால் கேன்களை உணரவும். இடமில்லா பேருந்தில் பட்டுத்துணி / பாய் பண்டல் களுக்கு இடையில் அதன் மேலேயே உட்கார்ந்து வரவும். மறுபடி ஒரு முறை ஞானம் கிட்டியது என்று கூறத்துணியலாம்.

    http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/

    ReplyDelete
    Replies
    1. அடேங்கப்பா எனக்கு போட்டி போட்டு ரசித்து எழுதியிருக்கீங்க. ஆனால் உங்க தளத்தை பொழுது போக்கு போல எழுதுவீங்க போல. நீங்க சொன்ன மாதிரி அந்த ஆசைகள் மனதில் உண்டு. காலம் நேரம் வரும் போது செல்வேன். தற்போது தான் அதிக பயணங்களை விரும்புகின்றேன். நான் பெரும்பாலும் தொடக்கம் முதல் பயண்ங்களை விரும்பியதில்லை.

      வீட்டுப்பறவை.

      Delete
    2. நன்றி.

      நீங்களே உங்களுடைய ஒரு இடுகையில், plan , do, check, act பற்றி எழுதி அதை நான் படித்ததாக நினைவு. ஆனால் எவ்வளவு தேடியும் இப்போது கண்டுபிடிக்க முடியவில்லை. அதில் உள்ள அந்த விஷயங்கள் இந்த இடுகைக்கும் பொருந்தி வருவதால் இங்கு குறிப்பிட்டு இணைக்கலாம் நினைத்தேன். முடிந்தால் இடம் சுட்டவும்.

      Delete
    3. நண்பரே நான் இருப்பது ஒரு தொழில் நகரத்தில். பலருக்கும் என் எழுத்துப் பயணம் வியப்பானது. எப்படி எழுத நேரம் கிடைக்கின்றது என்று. ஆனால் ஒரு விசயம் பிடித்து இருந்தால் நம் நேரம் நம் கைகளில். தினந்தோறும் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் இயல்பாக ஒதுக்க முடியும். ஆனால் எவரும் செய்வதில்லை. காரணம் நம் சிந்தனை எப்போதும் பணம் குறித்தே அது சார்ந்தே தான் இருக்கும். கிடைக்காவிட்டாலும் கூட அடுத்த கட்ட வாய்ப்பிற்காக காத்திருப்பவர்கள் பலர். ஆனால் ஒவ்வொரு நாளும் பாதிக்கும் பல விசயங்களை எழுத்தாகி விடுவதுண்டு. பலருடன் உரையாடும் போது உணரும் விசயங்களை பதில் பேசாமல் உள் வாங்கிக் கொண்டு எழுத்தில் சேர்த்து விடுவதுண்டு.

      இதன் காரணமாக நான் எழுதிய பல பதிவுகளை நான் சில சமயம் நேரம் கிடைக்கும் போது படித்துப் பார்த்தால் அது எனக்கே எந்த சமயத்தில் எழுதினோம் என்று புதிதாக இருக்கும். அந்த அளவுக்கு இந்த தொழில் நகரம் தினந்தோறும் பல்வேறு வகையான அழுத்தங்களை நம் மேல் திணித்துக் கொண்டேயிருக்கின்றது.

      காலடித் தடங்களை பதிந்து வைத்து விட்டால் உழைக்க முடியாமல் ஓய்வெடுக்கும் தருணத்தில் நமக்கும் தலைமுறை இடைவெளி உருவாகும் பட்சத்தில் வாரிசுகளுக்கும் இந்த தடங்கள் உதவக்கூடும் என்பதே என் முதன்மையான நோக்கம்.

      நீங்கள் குறிப்பிட்ட விசயங்கள் எனக்கு தற்போது நினைவில் இல்லை. மாத வாரியாக கீழே உள்ள இடுகைகளை சிரமம் பார்க்காமல் நாள் வாரியாக பார்த்துக் கொண்டே வந்தால் உங்கள் பதில் உங்களுக்கு கிடைக்கும் என்று நம்புகின்றேன்.

      Delete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.