அஸ்திவாரம்

Sunday, September 09, 2012

ஆழம் -- 2வது படைப்பு -- டல்லடிக்கும் டாலர் நகரம்,



ஒவ்வொரு வாரத்தின் இறுதி மூன்று நாட்களும் திருப்பூர் நகர போக்குவரத்தில் நாம் நீந்தி தான் வரவேண்டியிருக்கும்.  மூச்சு திணறிவிடும்.  பிபி எகிறிவது போல படிப்படியாக வியாழன் தொடங்கும் சாலை போக்குவரத்து நெரிசல் சனிக்கிழமை அன்று உச்சமாய் இருக்கும்.  ஒவ்வொரு சனிக்கிழமையும் தொழிலாளர்களின் சம்பள தினம். தள்ளுவண்டி கடை முதல் டாஸ்மாக் கடை வரைக்கும் எங்கெங்கும் மனித தலைகளாகவே தெரியும்

சனிக்கிழமையன்று கடைநிலை தொழிலாளி கைகளில் கூட 500 ரூபாய் தாள்கள் சர்வசாதரணமாக புழங்கும், குறிப்பாக அவினாசி, பல்லடம், பெருமாநல்லூர் சாலைகளில் எள் போட்டால் எண்ணெய் ஆகிவிடும் அளவிற்கு ஜனக்கூட்டம் பிதுங்கி வழியும், எங்கு பார்த்தாலும் வாகன இரைச்சலும், மனிதர்களின் அவசர ஓட்டத்திற்குள் தான் நாமும் ஓட வேண்டியிருக்கும்,

இப்போது அத்தனையும் மாறிவிட்டது. ஏறக்குறைய ஞாயிற்றுக் கிழமை போலத்தான் தற்போதைய திருப்பூர் சாலை போக்குவரத்து இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் திருப்பூரை விட்டு இரண்டு லட்சம் மக்கள் வெளியேறி விட்டனர், அநத அளவுக்கு இந்த ஊரின் முகமே மாறிப் போய்விட்டது. தென் மாவட்ட மக்கள் முதல் தஞ்சாவூர், திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள அத்தனை கிராம மக்களின் புகலிடமாக இருந்த இந்த உழைப்பாளர்களின் நகரம் சொல்ல முடியாத துயரங்களில் தவித்துக் கொண்டிருக்கிறது

ஏற்றுமதி நகரமாக பொருளாதார ரீதியாக உயர்ந்து கொண்டிருந்த திருப்பூர் தற்போது தற்கொலை நகரமாக, திருட்டூராக மாறி இரண்டு வருடத்திற்கு மேலாகி விட்டது. 

1978 ஆம் ஆண்டு திருப்பூருக்கு ஆய்த்த ஆடை ஏற்றுமதி தொழிலுக்ககான அங்கீகாரம் கிடைத்ததுமுதல் இலக்காக 1985 ஆம் ஆண்டு 15 கோடி ஏற்றுமதி செய்தது, தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் வாழ்ந்து கொண்டிருந்த விவசாயக் குடும்பங்கள் ஓரு அளவிற்கு மேல் தங்கள் நிலங்களுடன் போரட வழியில்லாமல் திருப்பூர் பக்கம் நகர்ந்து வர திருப்பூரின் வளர்ச்சி மேலேறத் தொடங்கியது. வருடத்திற்கு வருடம் உழைப்பவ்ர்களின் கூட்டம் அதிகமாக ஆய்த்த ஆடைகளின் ஏற்றுமதியின் வளர்ச்சியும் செங்குத்தாக ஏறத் தொடங்கியது,  

இந்த வளர்ச்சி நம்ப முடியாத அளவிற்கு அடுத்த இருபது ஆண்டுகளில் 19,000 கோடியை எட்டியது, காரணம் தினந்தோறும் ஒருவர் 18 மணி நேரம் உழைப்பது என்பது திருப்பூரில் சர்வசாதரணமான விசயமாகும்,


இந்திய அளவில் மொத்த பின்னலாடை உற்பத்தில் 80 சதவிகிதம் திருப்பூரில் இருந்து தான் ஏற்றுமதி ஆகின்றது, திருப்பூரைப் போல இந்தியாவில் உள்ள மற்ற நகரங்களான பெங்களூரு, தில்லி, மும்பை, லூதியானா போன்ற இடங்களிலும் இந்த ஆய்த்த ஆடை தொழில் நிறுவனங்கள் இருந்த போதிலும் திருப்பூருக்குள் இருக்கும் உள்கட்டமைப்பு வசதிகள் வேறு எங்கும் இல்லை என்பதே உண்மை,  

நூல் முதல் கடைசியாக பெட்டியாக லாரியில் ஏற்றி துறைமுகங்களுக்கு அனுப்பி வைப்பது முதல் அத்தனை சார்பு தொழிலிலும் அருகருகே இருப்பதால் முதலீடு போட்டவர்களுக்கு மிக எளிதாக அமைந்து விடுகின்றது,  இதன் காரணமாகவே இந்தியாவில் மற்ற இடங்களில் உள்ளவர்களும், மற்ற நாடுகளில் உள்ளவர்களுக்கும் திருப்பூர் என்பது ஒரு வரப்பிரசாதமாகவே இருக்கின்றது,

ஏறக்குறைய வாழைமரத்தைப் போல இந்த பின்னலாடை தொழிலும்எதுவும் வீணாகிப் போய்விடுவதில்லை, நூல் முதல் சாயமேற்றிய துணி வரைக்கும் அத்தனையிலும் காசு பார்க்க முடியும். ஏற்றுமதியான பிறகு கூட தரமில்லாத அந்த ஆடைகளுக்கு கூட உள்ளூர் சந்தை என்று தனியாக உள்ளது என்பதால் சிறு, குறு முதலாளிகள் நிறைய உலகம் இது, இதன் காரணமாகவே இங்குள்ள ஏற்றுமதி தொழிலைச் சார்ந்த சார்பு தொழில்கள் இங்கு அதிகம், சார்பு தொழிலும் அதனைச் சார்ந்த உப தொழிலுமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ வழி செய்து கொண்டிருக்கிறது

பல கோடி ரூபாய் முதலீடு போட்டு தொழில் செய்பவர்கள் முதல் சில ஆயிரங்களை வைத்துக் கொண்டு தொழில் செய்பவர்கள் வரைக்கும் அத்தனை பேர்களுக்கும் காமதேனு போல அவரவர் உழைப்புகேற்றவாரு வசதிகளை இந்த பனியன் ஏற்றுமதி தொழில் உருவாக்கி தருகின்றது,

சர்வதேச பின்னலாடை வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு 2,5 சதவிகிதமேஇதில் 1,5 சதவிகிதம் திருப்பூரிலிருந்து தான் ஏற்றுமதியாகின்றதுமத்திய அரசாங்கத்திற்கு தேவைப்படும் அந்நியச் செலாணியை ஈட்டித் தரும் முக்கிய ஊராக திருப்பூர் இருந்தாலும் கூட இன்று வரையிலும் இந்த ஊரின் வளர்ச்சியில் மத்திய, மாநில அரசாங்கங்கள் ஒரு துரும்மைப் கூட கிள்ளிப் போடவில்லை என்பது தான் உண்மை, இயல்பான உழைப்பில் அவரவருக்கு தோன்றிய வகையில் ஏறக்குறைய குடிசைத் தொழில் போல அபார உழைப்பின் காரணமாகவே இந்த அளவுக்கு திருப்பூர் வளர்ந்துள்ளது,

உலகில் எந்த மூலையில் என்ன பிரச்சனை நடந்தாலும் அது உடனடியாக ஏற்றுமதி தொழிலில் பிரதிபலிக்கும்நிலையில்லாத டாலரின் மதிப்பு, வங்கிகளின் கெடுபிடித்தனம், அரசாங்கத்தின் தெளிவற்ற கொள்கை என்று ஏற்றுமதியாளர்களுக்கு தினமும் நித்ய கண்டம் பூரண ஆயுசு தான், அத்தனையும் தாண்டி மேலேறி வரவேண்டும், இதுவே மத்திய மாநில அரசாங்கத்தின் வருடந்தோறும் மாற்றிக் கொண்டிருக்கும் கொள்கைகள் ஏற்றுமதியின் குரல்வளையை ஒரு பக்கம் நெறிக்க, மூலப் பொருட்களின் விலையேற்றங்கள் அடுத்த பக்கம் நெறிக்க மொத்தத்தில் முழி பிதுங்கி நிற்பவர்கள் ஏற்றுமதியாளர்கள் மட்டுமே

பழைய கல்கத்தாவிலிருந்து வந்த இந்த பின்னலாடை தொழில் இன்று சிறிய கிராமமாக இருந்த திருப்பூரை இப்போது மாவட்ட தலைநகராக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளதுஆனால் மாவட்ட தலைநகருக்குண்டான எந்த உள்கட்டமைப்பு வசதிகளும் இந்த ஊரில் இல்லை.  அரசாங்கம் என்பது ஆமை போல நகர மண்ணின் மைந்தர்கள் முடிந்தவரையிலும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்,

தேவையில்லாத செலவீனங்களை குறைக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு முதல் முறையாக நிதி அமைச்சராக ப,சிதம்பரம் பதவியேற்றபோது ஏற்றுமதி செய்வதன் மூலம் மத்திய அரசாங்கம் கொடுத்துக் கொண்டிருந்த ஊக்கத் தொகையில் கைவைத்தார்அப்பொழுதே திருப்பூருக்கு முடக்குவாதத்தின் முதல்படி ஆரம்பம் ஆனதுஅது படிப்படியாக வளர்ந்து கடந்த ஆட்சியில் நிலவிய மின தடை பிரச்சனை முற்றிலும் இந்த தொழிலை முடக்கியே போட்டு விட்டது, இன்று ஆட்சி மாறிய போதிலும் காட்சிகள் எதுவும் மாறவில்லை, இன்று மூலப்பொருட்களின் விலையேற்றம், சாய்ப்பட்டறை பிரச்சனைகள், பருத்தி ஏற்றுமதியினால் உருவான செயற்கை தட்டுப்பாடு என்று மாறி மாறி இன்று பின்னலாடை நகரை பிணி நகராக்கிவிட்டது,

திருப்பூர் மூலம் அந்நியச் செலவாணியை ஆதாயமாக எதிர்பார்க்கும் மத்திய அரசாங்கம் ஏற்றுமதியாளர்களுக்குத் தேவைப்படும் எந்த கொள்கைதிட்டங்களையும் நடைமுறையில் கொண்டு வந்ததே இல்லை.  உலகம் மாறிக் கொண்டேயிருக்கிறது, மாற்றம் என்பது மாறாதது தானே? ஆனால் எதிர்கால சவால்களை சந்திக்க தயார்படுத்தாத தொழில் முனைவோர்களுக்கு அரசாங்கம் வழங்காத ஆதரவினால் இந்தியாவில் உள்ள எத்தனையோ தொழில்கள் மூடுவிழாவை நோக்கி போய்க் கொண்டிருப்பதைப் போலவே இந்த ஏற்றுமதி தொழிலும் இறங்குமுகத்தை நோக்கி போய்க் கொண்டு இருக்கிறது,

தாராளமயமாக்கல் என்றொரு வார்த்தை உலகத்திற்கு அறிமுகம் ஆக திருப்பூருக்கும் போட்டியாக அண்டை நாடுகள் அத்தனையும் முழித்துக் கொள்ள சனி திசை திருப்பூருக்கு ஆரம்பம் ஆனதுபாகிஸ்தான், பங்ளாதேஷ், இலங்கை இத்துடன் சீனா போன்ற நாடுகளின் பக்கம் இறக்குமதியாளர்களின் பார்வை திரும்பியதுகுறைந்த விலை என்பதே தாரகமந்திரமாக மாறிப்போனது, இறக்குமதியாளர்களின் குறைந்த விலை எதிர்பார்ப்பை ஈடு ஜசெய்யும் அண்டை நாட்டு ஏற்றுமதியாளர்களுக்கு அந்தந்த நாடுகளின் கொள்கைகள் வேறு விதமாக உதவிகரமாக இருக்கிறது. 

வளர்ச்சியடையாத நாடுகளிலில் இருந்து இறக்குமதியாகும் பின்னலாடைகளுக்கு இறக்குமதி வரி இலவசம் என்பது உருவாக மொத்தமாக அத்தனை இறக்குமதியாளர்களும் இந்தியாவை புறக்கணிக்கத் தொடங்கினர். இதனை FREE TRADE AGREEMENT ஃப்ரி டிரேட் அக்ரிமெண்ட் என்கிறார்கள்,

திருப்பூருக்குள் இரண்டு உலகம் உண்டு, ஒன்று இந்திய சந்தையை அடிப்படையாக வைத்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் உள்நாட்டு தயாரிப்புகளான பனியன் மற்றும் ஜட்டிகள், மற்றொன்று ஏற்றுமதி சார்ந்த அத்தனை வகையான ஆடை ரகங்களும், ஆனால் இரண்டு சந்தைகளுக்கும் நூல் என்பது முக்கிய மூலப்பொருளாக இருக்கின்றது, அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் முதல் இப்போதைய சரத்பவார் வரைக்கும் கொண்டு வந்த பல கொள்கைகள் பல்லாயிரக்கணக்கான பஞ்சாலைகளை மூட வைத்தன,  

பஞ்சாலைகளுக்கு தேவைப்படும் பருத்தி ஏற்றுமதி என்ற பெயரில் பறக்கத் தொடங்கியது. நம்மோடு தொழில் ரீதியான போட்டி போட்டுக் கொண்டுருக்கும் பக்கத்து நாடுகளான பங்களாதேஷ், பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளுக்கு பஞ்சு ஏற்றுமதியாக அவர்கள் நம்மிடம் வாங்கும் பஞ்சை வைத்துக் கொண்டே சவாலே சமாளியாக திருப்பூர் பின்னலாடைத் தொழிலை உண்டு இல்லை என்று ஆட்டிப் படைக்கத் தொடங்கினர்.
  

ஏற்றுமதி என்ற நோக்கத்தில் விளைந்த பஞ்சுகளும் பதுக்கல் மூலம் கடத்தப்பட, இதற்கு மேலாக ஆன்லைன் வர்த்தகம் மூலம் பஞ்சின் விலை வானம் அளவிற்கு உயரத் தொடங்கினமின் தடை காரணமாக டீஸல் போட்டு பஞ்சாலையை ஓட்ட முடியாதவர்கள் படிப்படியாக தங்கள் உற்பத்தியைக் குறைக்க நாங்கள் வைத்தது தான் விலை என்று சந்தடி சாக்கில் மற்ற பஞ்சாலைகள் சிந்து பாடிக் கொண்டுருக்கிறார்கள். 

திருப்பூரிலிருந்து ஏற்றுமதியாகும் பின்னலாடை விலைக்கும் அண்டை நாடுகளின் விலைகளின் வித்தியாசம் இருக்க அத்தனை இறக்குமதியாளர்களும் திருப்பூரை புறக்கணிக்கத் தொடங்க போட்டி போட முடியாத ஏற்றுமதியாளர்கள் தங்களின் உற்பத்தியை படிப்படியாக குறைத்து இன்று வங்கியில் வாங்கிய கடனுக்கு பயந்து கொண்டு தொழில் என்ற பெயரில் ஒரு ஷிப்ட்டை ஓட்டிக் கொண்டுருக்கிறார்கள்.  இறக்குமதியாளர்கள் சொன்னபடி ஏற்றுமதிக்கு தேவைப்படும் அத்தனை வசதிகளையும் ஒரே கூரையின் கீழ் அமைத்து விட்டு இன்று ஒப்பந்தங்கள் இல்லாமல் பல பெரிய நிறுவனங்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு பக்கம் வங்கிகளுக்கு கட்ட வேண்டிய வட்டித் தொகைமற்றொரு பக்கம் தங்களுடன் இருக்கும் பயிற்சி பெற்ற தொழிலாளர்களை தக்க வேண்டிய அவசியம்ஒரு நிறுவனம் ஒரு வாரம் தொடர்ச்சியாக வேலை இல்லை என்று சொல்லும் பட்சத்தில் ஒரு தொழிலாளி எளிதாக வேறொரு நிறுவனத்திற்கு மாறி விடுவார்மறுபடியும் நினைத்த நேரத்தில் அந்த தொழிலாளியை வரவழைப்பது மிகக் கடினம்,  

இதுவே அந்த தொழிலாளி பல நிறுவனங்கள் மாறிச் செல்ல அவரின் சுய திறமையும் மங்கிப் போய் இன்றைய பிழைப்புக்கு என்ன வழி என்று சிந்தனைகளும் மாறிப் போய்விடுகின்றது, எவரை குற்றம் செர்ல்ல முடியும்? உழைப்பாளர்களின் உலகமான திருப்பூர் இன்று ஒப்பாரி வைத்தாலும் கண்டு கொள்ளாத ஆட்சியாளர்களை மனதிற்குள் திட்டிக் கொண்டுருக்கின்றது,

சில வாரங்களுக்கு முன்னால் இங்கு திருப்பூர் வெற்றிப்பாதையில் 2012 என்றொரு கருத்தரங்கம் நடத்தப்பட்டது,  பின்னலாடைத் தொழிலில் நேரிடையாக மறைமுகமாக சம்மந்தப்பட்ட அத்தனை தொழில் முனைவோர்களும் அரசாங்கத்தின் சார்பாக வந்திருந்த அதிகாரவர்க்கத்தினரிடம் தங்கள் குமுறல்களை கொந்தளிப்பாக வெளிப்படுத்தினர்,  இலவச செல்போன் கொடுக்க திட்டம் தீட்டும் மத்திய அரசாங்கம் உழைக்க தயாராக இருக்கின்றோம் என்று சொல்லும் திருப்பூருக்கு எதிர்காலத்தில் என்ன திட்டி இந்த ஊர் மக்களை காப்பாற்றப் போகின்றார்களோ?

நன்றி - 'ஆழம்' மாதாந்திர இதழ் 

11 comments:

  1. திருப்பூருக்கு திருப்பம் விரைவில் வர வேண்டும்,,,

    அனைவரும் கவனிக்கப்பட வேண்டிய பதிவு,,
    ----- ----------- --------
    உங்கள் பதிவுகள் பலரையும் சென்று சேர
    தமிழ்பதிவர்கள் திரட்டியில் இணையுங்கள்
    -------- ---------- ----------

    ReplyDelete
  2. ஜோதிஜி ,

    ஒரு பின்னூட்டம் விரிவா போட்டேன் , பிளாக்கர்/ இணையம் சொதப்பிவிட்டது போல, மீண்டும் விரிவா அடிக்கவியலாது சுருக்கமாக சொல்கிறேன்,

    //பஞ்சாலைகளுக்கு தேவைப்படும் பருத்தி ஏற்றுமதி என்ற பெயரில் பறக்கத் தொடங்கியது. //

    இந்தியாவில் உற்பத்தியாகும் பஞ்சு குட்டை இழை வகையே, மேலும் 2007 இல் 2225 மில்லியன் டாலருக்கு ஏற்றுமதியான பஞ்சு 2010 இல் 255 மில்லியன் டாலர் என்ற அளவுக்கு சரிவுற்றே இருக்கிறது சுமார் 35% .

    ஏற்றுமதி செய்யப்படும் உயர் வகை துணிகள்,பின்னலாடைகளுக்கு நீள் இழை பஞ்சு இறக்குமதியாகிறது, அதனை வைத்தே உயர் வகை துணித்தொழில் நடக்கிறது.

    மேலும் இந்தியாவில் பருத்து விவசாயம் செய்ய இடு பொருள், ஆள்கூலி எல்லாம் உயர்ந்தாலும் விற்றால் நிகர நட்டம் ,மேலும் விளைச்சல் பொய்த்து கடன் எனப்பல பருத்திவிவசாயிகள் தற்கொலை செய்துக்கொண்டார்கள், எனவே தான் இந்திய பஞ்சு உற்பத்தி குறைந்தது.

    அவர்கள் சாகும் போது எந்த பின்னலாடை முதலாளியும் வருத்தப்படவில்லை, இன்று மூலப்பொருள் தட்டுப்பாடு ஆனதால் தொழில் படுத்துகிறதே என்றால் எப்படி ?

    மேலும் ஏற்றுமதி ரக டெக்ஸ்டைல் தொழிலுக்கு இந்திய பஞ்சு எந்த அளவுக்கு பயன்ப்படுகிறது? அத்துறையில் இருக்கும் நீங்களே சொல்லுங்கள்.

    இந்தியாவில் இருந்து நூலாக சுமார் 2 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதியாகிறது,அதனை செய்வதும் நூற்பாலைகள் தானே.

    பஞ்சு ஏற்றுமதி குறைவாக இருந்தும் பின்னலாடைக்கு நூல் கிடைக்காமல் இருக்க காரணம் இப்படி நூலாக ஏற்றுமதி செய்வதே.

    உள்நாட்டுப்பஞ்சு உள்நாட்டு ஆடை ரகம் ,போர்வை இன்ன பிற மோட்டா ரக உற்பத்திக்கு தான் அதிகம் பயன்ப்படுகிறது, அவர்கள் பஞ்சு ,நூல் விலைக்கு ஏற்ப துணி விலையை நிர்ணயம் செய்து நட்டம் வராமல் வியாபாரம் செய்ய முடிகிறது.

    இறக்குமதி செய்த பஞ்சு ,நூலினை வைத்து செய்யப்படும் ஏற்றுமதிக்கு தான் விலை நிர்ணயம் செய்ய முடியாமல் நட்டம் என நினைக்கிறேன் ,ஆண்டுக்கு சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கு யார்ன் & காட்டன் இந்தியாவில் இறக்குமதியாகிறது .

    நாம் ஏற்றுமதி செய்யும் பஞ்சினை விட இறக்குமதி செய்யும் பஞ்சின் அளவு கூட இருப்பதும், யார்ன் ஏற்றுமதியும் நடப்பதை வைத்து , நான் சொல்கிறேன், எனவே சரியான விவரத்தினை நீங்கள் தான் கூற வேண்டும்.

    ReplyDelete
  3. திருப்பூருக்கு எதிர்காலத்தில் என்ன திட்டி இந்த ஊர் மக்களை காப்பாற்றப் போகின்றார்களோ?

    பதிவில் உள்ள கடைசிவரிகள். இதை இப்படி வாசிக்க வேண்டும்..

    திருப்பூருக்கு எதிர்காலத்தில் என்ன திட்டம் திட்டி இந்த ஊர் மக்களை காப்பாற்றப் போகின்றார்களோ?

    ReplyDelete
  4. தொலை நோக்கு இல்லாத அரசாங்கம் ..கையாலாகாத நாம் ..கவலை தரும் நிலை .மாறுவது எந்நாளோ ?.

    ReplyDelete
  5. அன்பரே கடந்த 1971 ல் பிஷப் உபகாரசாமி உயர் நிலைப்பள்ளியில் படித்திருக்கிறேன்.அப்போது இருந்த திருப்பூருக்கும் இப்போது நான் கேள்விபடுகின்ற படிக்கின்ற திருப்பூருக்கும் சம்பந்தமே இல்லாமல் பயமாக இருக்கிறது
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete
  6. அருமையான கட்டுரை...
    விரிவாக எழுதியிருக்கிறீர்கள்.
    அனைவரும் படிக்க வேண்டிய பதிவு.

    ReplyDelete
  7. அருமையான விளக்கமான பதிவு நிச்சயம் ஒரு திருப்புமுனை திருப்பூருக்கௌ வரவேண்டும்.

    ReplyDelete
  8. அரசு கவனிக்க வேண்டிய பிரச்சினைதான். ஆனாலும் அப்படி கவனித்தால் அரசியல்வாதிகளுக்கு என்ன கிடைக்கும் என்று பார்க்கவேண்டும் அல்லவா?

    ReplyDelete
  9. தேவதாஸ்

    முழுமையாக இல்லாவிட்டாலும் கூட டாலர் நகரம் தொடரில் நீங்கள் வாழ்ந்த திருப்பூர் பற்றி ஒரு வடிவத்தை கொண்டு வந்துள்ளேன்.

    ரவி சேவியர்

    தொடர் வாசிப்புக்கு நன்றி.

    பழனி கந்தசாமி

    அரசியல்வாதிகளுக்குத் தான் கவனிப்பு பலமாகத்தான் நடந்து கொண்டேயிருக்கிறதே. இங்கே பிரச்சனைகள் இருக்கும் வரைக்கும் அதிகார வர்க்கத்தினருக்கு எப்போதும் கொண்டாட்டம் தான்.

    காளிதாஸ்

    விமர்சனம் ஒரு கவிதை போல இருக்கிறது.

    குமார்.

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு. உடல் நலம் இப்போது தேறிவிட்டதா?

    ReplyDelete
  10. வவ்வால்

    இந்த கட்டுரையின் முடிவில் இந்த திருப்பூர் சார்ந்த இணைப்புகளை (ஏற்கனவே நான் எழுதி உள்ள, இது சம்மந்தப்பட்ட) கொடுத்து இருந்தால் உங்களுக்கு பல விசயங்களை புரிய வைத்து இருக்கும். நாறும் உள்ளாடைகள் என்று ஒரு தொடராக எழுதி உள்ளேன்.

    முக்கிய பிரச்சனை ஆன் லைன் வர்த்தகத்தை இந்த பருத்தி வியாபாரத்திற்குள் கொண்டு வந்ததே ஆகும்.

    வருகைக்கு நன்றி தொழிற்களம். உங்கள் சிறப்பான பல முயற்சிகளுக்கு தேவியர் இல்லத்தின் வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. திருப்பூரின் தொழில் வீழ்ச்சி பற்றிய அருமையான பதிவு.
    எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி திரு ஜோதிஜி

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.