அஸ்திவாரம்

Thursday, December 15, 2011

பூலோக சொர்ககம் -- அமெரிக்கா

அதிகளவிலான மக்கள் "பூலோக சொர்க்கம் " என அமெரிக்காவைச்  சொல்கிறார்கள்.

படித்த மற்றும் படிக்காத மக்களுக்கு கூட இன்று வரை அமெரிக்கா என்றால் ஒரு ஏக்கப்பார்வை இருக்கத்தான் செய்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல, ஆசிய நாடுகளில் கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் அவரவர் விழிகளில் இந்த அமெரிக்கக் கிறக்கம் உருவாவது இயற்கையே.

அமெரிக்கா போய்விட்டால் நிச்சயம் நம்மால் பிழைத்துக் கொள்ளலாம் என்ற நோக்கத்தில் தான் இருக்கிறார்கள். இன்றைய உலகில் வணிக ரீதியான அத்தனை மேற்படிப்புகளும் மேலைநாட்டு கலாச்சாரத்தின் அடிப்படையிலேயே இருக்கிறது.

இன்று ஆங்கிலம் தெரிந்தால் அகிலத்தையும் ஆள முடியும் என உறுதிப்படுத்தப்பட்டாகி விட்டது. காரணம் நம்முடைய இன்றைய வாழ்க்கை தனிமனிதனின் பொருளாதார நிலைப்பாட்டினை அடிப்படையாக வைத்தே முடிவு செய்யப்படுகின்றது.


ஆப்ரிக்க, ஆசிய நாடுகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு வளர்ச்சியடைந்த நாடுகளை பார்க்கும் பார்வையென்பது அங்கங்கே டாலர்கள் அங்குள்ள மரங்களில் காய்த்து தொங்குவதாகத் தான் ஏக்கப்பார்வை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கேயும் திருவாளர் ஓட்டடையாண்டிகளும் உண்டு என்பது வெகுஜனத்திற்கு தெரிவதில்லை. பணக்காரர்களின் கடன்கள் அத்தனை சீக்கிரம் வெளியே தெரியாது.

இதுவே தான் நாடுகளுக்கும்.

உலகத்திற்கே நாட்டாமையாக இருக்கும் அமெரிக்கா தான் இன்று மிக மிகப்பெரிய கடனாளி நாடு. பிறகெப்படி இன்னமும் சட்டாம் பிள்ளையாக இருக்கிறார்கள்?

ஊரில் அடித்து உலையில் போடும் உள்ளூர் சண்டியர்களைப் போலவே உலகத்தையே அடித்து தன் வாயில் போட்டு மென்று கொண்டிருப்பதால் இன்னமும் அமெரிக்கா என்றால் ஆ.....வென்று பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறது.

தனக்குத் தேவைப்படும் எரிபொருளுக்காக பெட்ரோல் வளம் அதிகமுள்ள இஸ்லாமிய நாடுகளை ஒருபுறமும், உணவுப் பொருட்களுக்காக இயற்கை வள ஏழை நாடுகளை மறுபுறமும் வைத்துக் கொண்டு இன்னமும் பஞ்சாயத்துகாரனாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் அமெரிக்காவின் ராஜதந்திர அரசியல் அது.

இதன் அடிப்படையில் தான் இன்று வரையிலும் அமெரிக்கா பல நாடுகளையும் படுத்தி எடுத்திக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் ஆதிக்கத்தை ஒத்துக் கொள்ள மறுக்கும் சதாம் உசேன், கடாபி போன்றவர்களை போட்டுத் தள்ளிவிட்டால் அந்த பிரச்சனைகளும் முடிவுக்கு வந்து விடுகின்றது. ஒரு பொம்மையை தூக்கி உட்கார வைத்துவிட்டால் காலம் முழுக்க அந்த நாடு அமெரிக்காவுக்கு எழுதிக் கொடுக்கப்படாத அடிமையாக இருந்து விடுகின்றது. பொம்மைகள் பிடிக்கா விட்டால், அல்லது தங்கள் விளையாட்டிற்குப் பொருத்தமாக இல்லாவிட்டால் தூக்கி எறிந்தும் விடலாம்.

இன்று ஆப்கானிஸ்தான் அதிபராக இருப்பவர் யார் தெரியுமா?

அமெரிக்காவின் யூனோகால் எண்ணெய் நிறுவனத்தில் அதிகாரியாக இருந்த கர்சாய் தானே.

இது போலத்தான் ஒவ்வொரு நாட்டிலும் அமெரிக்கா உருவாக்கிய பொம்மைகள் ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். மற்ற நாடுகளும் நமக்கேன் வம்பு என்று அமைதிகாத்து விட சண்டியரின் சண்டித்தனம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேதான் இருக்கிறது. இந்த சண்டியருக்கு வால்பிடிக்க பிரிட்டன், கனடா முதல் ஐரோப்பிய நாடுகள் பலவும் தயாராக இருக்க எவருக்கு தைரியம் வரும்? ஆனால் இந்தியாவில் ஆண்டு கொண்டிருக்கும் மன்மோகன் சிங்கோ ஐரோப்பிய பொருளாதாரம் மோசமானால் இந்தியாவிற்கு அதிக கவலையளிக்கும் என்று அக்கறை காட்டுகின்றார்.  

இந்தியா உதவி செய்ய தயாராக இருக்கிறது என்று அறிக்கை விடுகிறார்.


அமெரிக்காவில் பணிபுரிந்த மன்மோகன் சிங்கிற்கு தான் மட்டும் அடிமையாக இருக்க விருப்பமில்லாமல், மொத்த நாட்டையும் இருக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கம் கூட காரணமாக இருக்கலாம். அவருடைய எண்ணத்தில், அது பொருளாதார சீர்சிருத்தம்; ஆனால் புடலங்காய் கூட வாங்க முடியாத அளவுக்கு கஷ்டப்பட்டே ஆக வேண்டிய துர்பாக்கிய சூழ்நிலை இந்தியாவில்.

அமெரிக்காவின் உண்மையான முகத்தை முந்தைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் அரசாங்கத்தில் இருந்த பாதுகாப்பு துறை செயலாளர் டோனல்ட் ரம்ஸ்ஃபீல்ட் "அமெரிக்கர்கள் அவர்களின் வாழ்க்கை முறையைத் தொடர வேண்டியதன் அவசியத்தை இவ்வுலகம் புரிந்து கொள்ள வைப்பதே பயங்கரவாத எதிர்ப்புப் போரில் தன் கடமையாக செயல்படுத்தப்படுகின்றது' என்பதை உலகத்திற்கு தெளிவாக புரியவைத்தார்.

சதாம் ஹுசேனிடமிருந்து குவைத்தை மீட்க 1991 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பன்னாட்டு படைகளின் துணை கொண்டு ஈராக் மேல் அமெரிக்கா போர் தொடுத்தது. அதனைத் தொடர்ந்து போர் முடிவுக்கு வந்த போதிலும், பல ஆண்டுகள் ஈராக் மீது பொருளாதார தடை என்ற பெயரில் நடந்த அக்கிரமத்தை இந்த உலகமே அமைதியாய் வேடிக்கை பார்த்தது. இந்த காலகட்டத்தில் ஈராக்கில் உள்ள ஐந்து இலட்சம் குழந்தைகள் அடிப்படை மருத்துவ வசதிகள் கிடைக்கப்பெறாமல் மடிந்தனர்.

அப்போது அமெரிக்காவுக்கான ஐ.நா சபை தூதர் மேடலின் ஆல்பிரைட் சொன்ன கருத்து வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று.

"அது ஒரு கடினமான முடிவுதான். இருந்தாலும் அடைந்த லாபத்தை எண்ணும்போது கொடுத்தவிலை சரியானது தான் என்று நினைக்கின்றோம்."

அமெரிக்காவை எத்தனை குறைகள் சொன்னாலும் ஒரு வகையில் நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

ஆமாம்! நான் இப்படித்தான். அதுக்கு என்னங்றே இப்போ? என்கிற தெனாவெட்டு இருக்கும்.

அது அமெரிக்காவின் அதிபராக இருந்தாலும் சரி செனட்டராக இருந்தாலும் சரி, காலம் காலமாக இப்படித்தான் அவர்களது அராஜக அரசியல் நடந்து கொண்டிருக்கிறது.

அமெரிக்காவுக்கு வெளியே உள்ள நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் அவர்களுக்கான கலாச்சார பண்பாட்டு வாழ்க்கை முறை இருக்கிறது என்பதை அமெரிக்கா ஏற்றுக் கொள்வதே இல்லை. இது தான் உச்சக்கட்ட கொடுமையான விசயம். இதைத்தான் ஜார்ஜ் புஷ், சீன இந்திய நடுத்தரவர்க்க வாங்கும் சக்தியினால் உலகில் உணவுப்பஞ்சம் ஏற்படுகின்றது என்றார்.

ஆனால் அமெரிக்கர்களின் வாழ்க்கை முறையில், அவர்களின் அத்தியாவசிய தேவைகளைப் போலவே அழிச்சாட்டியம் செய்து உணவுப் பொருட்களை வீணாக்கிக் கொண்டிருப்பதையும் இப்போது நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

2002 ஆம் ஆண்டு முதலே உலகளவில் விலைவாசிகள் ஏறத் தொடங்கியிருந்தாலும் இந்தியாவில் 2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு தான் அதிக அளவில் விலைவாசி உச்சத்தை நோக்கி சென்றது. இதற்கு எரிபொருள் விலையேற்றமே முக்கிய காரணமாக இருந்தது. அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளில் தங்களின் எரிபொருள் தேவைக்காக பயோ எரிபொருளை உருவாக்கத் தொடங்கினர்.

அதாவது உணவுப் பொருட்களை பயன்படுத்தி எரிபொருளை தயாரிக்கத் தொடங்கினர். சோயா, சர்க்கரை, பாமாயில், மக்காச் சோளம், மற்ற எண்ணெய் வித்துகளுடன் சூரியகாந்தி எண்ணெய் கூட இதற்காக

பயன்படுத்தப்பட்டது. இதற்கு மானியமும் வழங்கப்படுவதால் இன்று வரைக்கும் உணவுப் பொருட்களை அமெரிக்கா எரிபொருளாக பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.

இதன் காரணமாக உலகத்திற்கு தேவைப்படும் உணவின் அளவிற்கு பற்றாக்குறை ஏற்படுகின்றது. இதன் பாதிப்பு 3 சதவிகிதம் என்கிறது அமெரிக்கா. ஆனால் உண்மையான நிலவரம் என்பது வேறு.

மக்காச்சோள விலையில் 70 சதவிகிதமும், சோயா பீன்சின் விலை உயர்வில் 40 சதவிகிதமும் உயர்ந்துள்ளது என்கிறது உலக வங்கியின் ஆய்வறிக்கை.

இந்த அறிக்கை வெளியான பிறகு தான் ஜார்ஜ் புஷ் திசை திருப்பும் பொருட்டு தான் மேலே சொன்ன திருவாசகத்தை ஒப்புவித்தார். ஆனால் அமெரிக்கர்களின் வாழ்க்கை முறைக்கும் இந்தியர்களின் வாழ்க்கை முறைக்கும் உள்ள வித்யாசங்களை நாம் பார்த்தாலே மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்யாசங்கள் எனப் புரிந்து கொள்ள முடியும்.

சராசரியாக ஒரு அமெரிக்கன் ஒரு வருடத்திற்கு உண்ணும் இறைச்சியின் அளவு 126.6 கிலோ. ஆனால் இந்தியனோ 5.3 கிலோ. உணவு தானியங்களைப் பொறுத்தவரையில் ஒரு இந்தியனின் அளவு 175.1 கிலோ. ஆனால் அமெரிக்கன் உண்ணும் அளவு 953 கிலோ. இது சராசரி கணக்காக புள்ளிவிபரங்கள் சொன்னாலும் இந்தியாவில் அங்கன்வாடிகள் மூலமாக 44 சதவிகித மக்கள் அடிப்படை ஊட்டச்சத்துக்கே இன்று வரை அல்லாடிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

இப்போது புரியுமே?

இந்த பூவுலகில் ஒவ்வொரு அமெரிக்கனும் பூ போலவே வாழப்பிறந்தவர்கள். அவர்கள் நல்வாழ்க்கைக்காக உலகில் உள்ள அத்தனை நாடுகளும் தங்களை அர்ப்பணிக்க ஜென்மம் எடுத்தவர்கள். இவர்கள் இந்த அளவுக்கு ஆட்டம் போட்டுக் கொண்டிருக்க காரணமாக இருப்பது மூன்று நிறுவனங்கள்.

உலகவங்கி, பன்னாட்டு நிதியம், சர்வதேச வர்த்தக நிறுவனம்.


இந்த மூன்றின் செயல்பாடுகளுமே அமெரிக்காவின் விருப்படியே நடந்து கொண்டிருக்கிறது. இவை மூன்றுமே அமெரிக்காவின் ஆளுமையில் உள்ள அமைப்பு. இவற்றில் எடுக்கப்படும் முடிவுகள் ஒவ்வொன்றுமே ரகசியமாகத்தான் எடுக்கப்படுகின்றது. ஒவ்வொரு ரகசியத்தின் பின்னாலும் அமெரிக்காவின் நலனே மேலாங்கி நிற்கிறது. இவற்றை நிர்வகிப்பவர்களின் நியமனங்களும் ரகசியமாகத்தான் இருக்கிறது. ஒவ்வொரு முடிவும் உலகில் உள்ள நாடுகளை பாதித்துக் கொண்டேயிருக்கிறது.

இதன் காரணமாகவே உலக வர்த்தக அமைப்பில் உள்ள 149 நாடுகளில் 105 நாடுகள் உணவு இறக்குமதியை நம்பியே வாழ்ந்து கொண்டிருக்கிறது. தொடக்கத்தில் அன்னை இந்திரா காந்தி இந்தியாவில் அறிமுகப்படுத்திய உணவு உற்பத்தியில் தன்னிறைவு என்ற நோக்கத்தை மறந்து இன்றைய மன்மோகன் சிங் அரசாங்கம் ஏற்றுமதியில் உணவு உற்பத்தி என்ற பாதையில் பீடு நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

இது இந்தியாவின் வளர்ச்சியின் அறிகுறி தானே என்கிறீர்களா?

அப்படியென்றால் தன்னிறைவு அடைந்த உணவுப் பொருட்களின் விலை மலிவாக இருக்க இருக்க வேண்டுமே? ஆனால் மாதத்திற்கு மாதம் இந்தியாவின் விலைவாசி உயர்வு நடுத்தரவர்க்கத்தையே நடுத்தெருவுக்குத் தான் கொண்டு வந்து கொண்டிருக்கிறது.

இது தான் இன்றைய இந்தியாவின் பொருளாதார மேதைகள் உருவாக்கிக் கொண்டிருக்கும் வளமான இந்தியா.

காரணம் யுக பேர வர்த்தகம்.

இன்று உலகம் முழுக்க யுக பேர வர்த்தக அமைப்பு (ஆன் லைன் வர்த்தகம்) சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த யுகபேர வர்த்தகம் 2002 ல் .77 ட்ரில்லியன் (ஒரு ட்ரில்லியனுக்கு 12 பூஜ்யங்கள்) என்கிற அளவுக்குத்தான் இருந்தது. ஆனால் இன்றைய வளர்ச்சியில் 8 ட்ரில்லியன் அளவுக்கு என்ற பிரமாண்டத்தை தொட்டுள்ளது.

எதிர்காலத்தில் அந்நியச் செலவாணி நம் கையிருப்பில் இருந்தாலும் ஒவ்வொரு நாடுகளும் உணவுப் பொருட்களை பதுக்கி வைத்திருக்கும் உலக வர்த்தக நிறுவனங்களைத் தான் சார்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். அப்போது அவர்கள் வைத்ததே சட்டம்.

காரணம் அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட் வர்த்தகர்கள் நடத்தும் ராஜ்ய பரிபாலனங்களில் பாலுக்கும் மோருக்கும் அலைந்து, பச்சை தண்ணீரைக் கூடக் காசு கொடுத்தால் தான் வாங்கி குடிக்க முடியும் என்ற நிலை உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இப்போது எங்கே சென்றாலும் கைக்குழந்தை போல தண்ணீர் பாட்டிலையும் சேர்த்து தூக்கி செல்லும் நடுத்தர வர்க்கத்தைப் போல எதிர்காலத்தில் கிராமத்து மக்களும் செல்லக் கூடிய வாய்ப்பு அதிகம்.

காரணம் பயோ முறையில் விவசாயம் செய்கின்றோம் என்று ஏதோவொரு நிறுவனம் மொத்த நிலங்களையும் ஆக்ரமித்து இருக்கக்கூடும். ஆழ்குழாய் கிணறுகள் மூலம் எடுக்கப்படும் அளவுக்கு அதிகமான தண்ணீர் அந்த பகுதியை விரைவில் வறட்சியாக மாற்றிவிடும். வாழக்கூடிய மக்கள் நீர் ஆதாரத்திற்கு எங்கே செல்வார்கள்? தண்ணீரும் விலைபேசித்தான வாங்கும் சூழ்நிலை உருவாகும்.

ஒவ்வொருவரும் எதிர்காலத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டரையும் முதுகில் கட்டிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. காரணம் நம்மைச்சுற்றிலும் உள்ள உலகம் தொழிற்சாலைகளுக்கு மட்டும் முக்கியவத்தும் கொடுத்துக் கொண்டிருக்கிறது.


விலைநிலங்களை அரசாங்கம் துணை நகரம், புதிய பொருளாதார மண்டலம் என்று விருப்பப்படி மாற்றிக் கொண்டு இருக்கிறது. இந்தியாவை படிப்படியாக விலைபேசும் பன்னாட்டு நிறுவனங்கள் ஒவ்வொரு பகுதியாக கபளீகரம் செய்ய, இதந்த நிலை தான் எதிர்காலத்தில் உருவாகும்.

ஆனால் இந்த நேரத்தில் மற்றொன்றையும் நாம் பார்க்க வேண்டும்.

எந்த நாட்டுக்கும் இல்லாத அளவுக்கு, நம் நாட்டுக்கு இந்த பன்னாட்டு நிறுவனங்கள் அவர்களின் கோடிக்கணக்கான மூதலீடுகளைக் கொட்டி, நம்முடைய அந்நியச் செலவாணி கையிருப்பை வளர்க்கின்றார்கள். 

உள்ளூர் வேலை வாய்ப்புகளையும் பெருக்குகின்றார்கள். படித்தவர்களுக்கு வெளிநாடுக்கு வேலை தேடி செல்ல வேண்டிய அவசியமில்லாமல் இருக்கின்றதே? அவர்களைப் போய் நாம் ஏன் குறை சொல்ல வேண்டும் என்று சொல்ல வருகிறீர்களா?

ஓரிஸாவில் (இப்போது ஓடிஷா) உள்ள புயலைக் கிளப்பிக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்தைப் பற்றி மட்டும் இப்போது பார்த்து விடலாம். அப்போது புரியம்?  பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய மக்களை வாழ்விக்க வந்தவர்களா? அல்லது வாழ்வு அழித்து,  பாடைகள் தயார் செய்ய வந்த நிறுவனங்களா என்று?



16 comments:

  1. சும்மா எதுக்கெடுத்தாலும் குறை சொல்லுவதை விட்டு பாஸிட்டிவ் சைடில் பார்த்தால் அமெரிக்காவை அண்டியே வளர்ந்த நாடாக மாறியவை ஜப்பான் தென்கொரியா மற்றும் சீனா!

    இப்போது இருநாட்டு உறவு என்பதே ஒருநாடு இன்னோரு நாட்டினை எவ்வளவு சிறப்பாக சுரண்டுகிறது மன்னிக்க பயன்படுத்துகிறது என்பதுதான். அமெரிக்கா நம்மை சிறப்பாக பயன்படுத்துகிறது.ஆனா இந்தியாவில் அவனவன் தான் சம்பாதிப்பதில் கவனமாக இருக்கிறான். தமிழ்நாட்டின் மத்திய அமைச்சர்கள் சிறந்த உதாரணம்.

    ReplyDelete
  2. Really simple to understand about U.S policies and their original face..it's 100% true..Write more about it..

    ReplyDelete
  3. Well written! I hope it will change one day!

    ReplyDelete
  4. அனைவரும் அவசியம் படித்து மனதில்
    பதியவைத்துக் கொள்ளவேண்டிய
    அருமையான பதிவு
    பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்
    த.ம 3

    ReplyDelete
  5. சூப்பருய்யா பின்னீட்டீங்க!

    ReplyDelete
  6. நன்றி வாழ்க!

    ReplyDelete
  7. வருத்தம் மேலோங்குகிறது!

    ReplyDelete
  8. ஜோடிப்பொருத்தம் அபாரம். நல்ல படம்:-)))))

    அண்ணனைப்பற்றி இப்படிப் புட்டுப்புட்டு வச்சுட்டீங்களே!!!!

    ReplyDelete
  9. என்ன தல .. நம்ம கம்பனி ஆபர ஒத்துக மட்டேங்கிறீங்களெ...சரி .. 1.5 சி.. வீடு பிளேன் எல்லாம் வாங்கிகலாம் .. இப்ப ஒகெயா?

    ReplyDelete
  10. 15 சி டவுன் பஸ் தான எங்களுக்கு தெரிந்த சமாச்சாரம்.

    ReplyDelete
  11. அருமையான பதிவு. படங்களும் அருமை.
    பகிர்விற்கு நன்றி நண்பரே!
    என் வலையில் :
    "நீங்க மரமாக போறீங்க..."

    ReplyDelete
  12. ஓபா...மாவுக்கு பொருத்தமான ஜோடி மண்மோகினி

    ReplyDelete
  13. காட்டமான விமர்சனம்.அமெரிக்கா செய்கிறதென்றால் உள்நாட்டிலுள்ளவர்கள் ஒத்துழைக்கவேண்டிய தேவையென்ன?

    ReplyDelete
  14. Saathaarana paperla achu adicha kakithathai American dollar endru solli athukku oru value fix panni lead eduthukittathu americans. Namma naatila adimaigala thaan vaazhnthukittu irukkom. Rajinikku paal abisekham panni paala veenaakkarom

    ReplyDelete
  15. என் புருசன் கச்சேரிக்கு போனார், என்பது போல நானும் அமெரிக்கா போய் வந்தேன் , அங்கு என்னக்கு ஏதும் பிடிக்கவில்லை, அவர்களை பற்றிய செய்திகளில் எண்பது விழுக்காடு மிகைபடுதப்பட்டவை, நான் பார்த்தவரை அமெரிக்காவை விட பல நாடுகள் இன்று சுபிட்சமாக இருக்கிறது.அதில் ஒன்று இந்தியா.அமெரிக்காவின் வறுமை உள்ள இடங்களை
    பற்றி யாரும் உலகுக்கு காண்பிப்பது இல்லை என்பது
    ஒரு நிஜம்.

    ReplyDelete
  16. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.