ஒவ்வொரு முறையும் குழந்தைகளுடன் பழகும் போது நானும் குழந்தையாய் மாறிப் போய்விடுவதுண்டு. என்னுடைய குழந்தைகளிடம் மட்டுமல்ல? . நான் சந்திக்கும் எந்த குழந்தைகளிடமும் பேசும் போதும் இதே குணாதிசியத்தை தான் இன்று வரை கடைபிடித்துக் கொண்டிருக்கின்றேன். இதைப் போலவே என்னை விட மிக அதிக வயதுள்ளவர்களிடம் மிகுந்த ஆர்வத்துடன் உரையாடுவதுண்டு.
அவர்கள் அனுபவங்களை எந்த எதிர்கேள்விகளும் இல்லாமல் அமைதியாக கேட்டுக் கொள்வதுண்டு. அவர்கள் மூலம் பெற்ற சிந்தனைகளை பல சூழ்நிலையில் என்னுடன் ஒப்பிட்டு பார்த்துக் கொள்வதுண்டு. எது சரியோ என்னால் முடிந்தால் செயல்படுத்த முயற்சித்துக் கொள்வதுண்டு. அவர்கள் பேசுவது தவறாக இருந்தாலும் அவர்களுடன் எதிர் விவாதம் செய்வதில்லை. அந்த சிந்தனையென்பது அவர்கள் பெற்ற தாக்கம். அதற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.எப்போதும் என்னுடன் பழகுபவர்களை எந்த விதத்திலும் நான் மாற்ற விரும்புவதில்லை. அவர்களை எனக்குத் தகுந்தபடி மாற்றித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயமும் எனக்கில்லை.
அவரவர் வினைவழி அவரவர் வழி.
மனைவி முதல் என்னைச் சார்ந்த உறவினர்கள் வரை பல முறை என்னுடைய இந்த அந்நியன் குணாதிசியத்தை ஆச்சரியமாக பேசுவதுண்டு. காரணம் டீன் ஏஜ் முதல் 40 வயது வரைக்கும் உள்ளவர்களிடம் பேசும் போது அவரவர் குணாதிசியத்தை உள்வாங்கிக் கொண்டு நாம் கவனமாக பேச வேண்டும். கருத்து வேறுபாடுகள், நிமிட நேர மனக்கசப்பு என்று மோசமான சூழ்நிலையை உருவாக்கிவிடும். அவர்களுடன் நாம் கொண்டுள்ள உறவும், மரியாதையும் மொத்தமாக கேள்விக்குறியாக போய்விடும் அபாயமும் உள்ளது. இதன் காரணமாகவே நான் எப்போதும் பதின்ம வயது அல்லது மேம்பட்ட வயது உள்ளவர்களிடம் மிக அளவாகவே பேசும் பேசுவேன். பெரும்பாலும் கவனித்துக் கொள்வதோடு சரி. எவருடனும் விவாதமே செய்வதில்லை. சிரித்துக் கொண்டு பதில் அளிக்காமல் நகர்ந்து விடுவதுண்டு.
தொழில் சார்ந்த இடங்களில் மட்டும தான் அதிக அளவு பேசுவதுண்டு. அங்கும் கூட காரண காரியத்தோடு தான் பேசுகின்றேன். இது தான் இப்படித்தான் எனக்கு வேண்டும் என்று உரையாடல் தொடங்கும் போதே அவர்களுக்கு என் விருப்பங்களை புரியவைத்து விடுவதுண்டு. எதிர்மறையாக பதில்கள் வந்தால் அனுமதிப்பதே இல்லை. இறுதியாக. முடிந்தால் உன்னை மாற்றிக் கொள். இல்லாவிட்டால் இது தெரிந்த ஒருவரிடம் இந்த பணியை நான் கொடுத்து விடுகின்றேன் என்று சொல்லி விடுவதுண்டு.
இந்த பழக்கத்தின் காரணமாக என்னுடைய ஒவ்வொரு செயல்பாடுகளும் என்னைச் சார்ந்த மற்றவர்களுக்கு ஒரு வினோத எண்ணத்தை உருவாக்கும். ஆனாலும் என்னை நான் மாற்றிக் கொண்டதில்லை.
மற்றவர்களுக்கு என்னை பிடிக்கின்றதா? என்பதை விட அவர்களுக்கு என்னால் தொந்தரவு இல்லாமல் வாழ்கின்றேனா என்பதைத்தான் நான் கவனமாக எடுத்துக் கொள்கின்றேன். இதன் காரணமாக தேவையில்லாத மன உளைச்சலின்றி அமைதியான வாழ்க்கையை என்னால் வாழ முடிகின்றது. ஒவ்வொருவரும் வாழ்ந்த சூழ்நிலை, அவரவர்கள் வளர்க்கப்பட்ட விதம், சமூகத்திலிருந்து அவர்கள் எடுத்துக கொண்ட கருத்துக்கள் போன்றவை அவர்களை ஒரு உருவமாக மாற்றியுள்ளது என்பதை புரிந்து கொண்டால் பழகுபவர்களிடம் எந்த மனக்கசப்பும் உருவாகாது.
அய்யோ இவர் இவ்வளவு படித்துள்ளாரே? இப்படி கேவலமான எண்ணத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாரே? என்று தயை கூர்ந்து யோசிக்காதீர்கள்.
அவர் படித்த படிப்பு அவரை உருவாக்கவில்லை. அவர் எடுத்துக் கொண்ட கருத்துக்கள் தான் அவரை இந்த அளவுக்கு மாற்றியுள்ளது என்பதை நாம் முழுமையாக உணர்ந்து கொண்டாலே போதுமானது.
இப்போது நாங்கள் வசித்துக கொண்டு இருக்கும் வீடு முதல் பழைய வீடுகள் வரைக்கும் அருகே இருப்பவர்கள் யார் என்றே எனக்குத் தெரியாது. ஆனால் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தைப் பற்றி நன்றாகவே தெரியும். அதிலும் எங்கள் குழந்தைகள் பிரசித்தம். பல முறை பக்கத்து வீட்டுப் பெண்கள் என்னைப்பற்றி மனைவியிடம் இது குறித்து கேட்டுள்ளார்கள்.
" ரொம்ப நல்ல பையன் என்று உங்களைப் பற்றி தெரியாமலே ஆளாளுக்கு பெருமையாகச் சொல்கிறார்கள். கூட வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்குத்தானே உண்மை நிலவரம் தெரியும் " என்பாள் மனைவி.
பொதுவாக பெண் குழந்தைகள் என்றால் எனக்கு ரொம்பவே சந்தோஷமாக இருக்கும். குறிப்பாக ஊரிலோ, நான் இருக்கும் வீட்டுக்கு அருகே இருக்கும் சாதாரண குடும்பத்தில் உள்ள குழந்தைகள் எங்கள் வீட்டுக்கு விளையாட வரும் போது அவர்களுடன் உரையாடுவது எனக்கு பிடித்தமான ஒன்று.
பத்து வயதுக்கு கீழே இருக்கும் சிறுவர்களிடம் உரையாடும் போது அவர்களின் சிந்தனைகளை, வளர்ச்சியை நாம் புரிந்து கொளள முடியும். அதே சமயத்தில் அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களின் குணாதிசியங்களை இவர்கள் வாயிலாக உணர்ந்து கொள்ள முடியும். ஆனால் சற்று வசதியாக இருக்கும் குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் குணாதிசியங்கள் முற்றிலும் வேறானது. இதைப் போலவே பெரிய நிறுவனங்களின் முதலாளிகளின் குழந்தைகள் வாழ்க்கை முறை என்பது எல்லாவற்றையும் விட வேறொரு பாதையில் இருக்கும். பெரும்பாலும் பிஞ்சில் பழுத்த பழமாகவே இருக்கும்.
பத்தடி தள்ளி நின்று கொள்வதுண்டு.
எங்கள் வீட்டுக்கு அருகே ஒரு நீண்ட வாடகைக்குடியிருப்பு உண்டு. இது போன்ற வீடுகளில் ஏற்றுமதி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாள வர்க்க மக்கள் அதிகம் பேர்கள் வசிக்கின்றார்கள். ஓய்வு நேரங்களில் எங்கள் வீட்டுக்கு வெளியே பெரிய கேட்டை திறந்து வைத்துக கொண்டு, அந்த வாரத்தில் உள்ள விட்டுப் போன செய்திதாள்களை படித்துக் கொண்டிருக்கும் போது பல குழந்தைகள் சிறுவர்கள் வந்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். அவர்களின் நடவடிக்கைகளை கூர்மையாக கவனித்துக் கொண்டிருப்பேன். இது போன்ற சமயத்தில் நான் கடந்து வந்த பாதையை, பள்ளிக்கூட நினைவுகளை, பழைய நண்பர்கள் குறித்து மனதில் காட்சியாக ஓட்டிப்பார்ப்பதுண்டு.
முதல் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரைக்கும் படித்த பள்ளிக் கூடங்களில் நான் பார்த்த பழகிய வரைக்கும் 95 சதவிகித மாணவ மாணவியர் சுற்றிலும் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்களே. என்னுடைய ஊர் என்பது பேரூராட்சி என்ற தகுதியில் இருந்தது. இருபது வருடங்களுக்கு முன்னால் முப்பதுக்கும் மேற்பட்ட சாதாரண எந்த வசதியும் இல்லாத அரிசி ஆலைகள் இருந்தது. ஆனால் இன்று நூற்றுக்கணக்கான அரிசி ஆலைகள் என்று வளர்ந்துள்ளது. குறிப்பாக இப்போதுள்ள நவீன வசதிகள் அடங்கிய மார்டன் ரைஸ் மில் என்கிற நிலைக்கு உயர்ந்துள்ளது. ஒரு மார்டன் ரைஸ் மில்லின் மொத்த முதலீடு ஏறக்குறைய இரண்டு கோடிகளை தொட்டு நிற்கும். இதுவே பல வசதிகள் என்று மாறும் போது இன்னமும் உயரும்.
என்னுடைய ஊர் உள்கட்டமைப்பு என்கிற நிலையில் வைத்துப் பார்த்தால் இது மிகப் பெரிய முதலீடு.
இது போன்ற அரிசி ஆலைகள் இன்று ஊரில் 50க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. இது தவிர சிறிய முதலீட்டில் நூற்றுக்கணக்கான ஆலைகள் இருக்கிறது. ஒரு மார்டன் ரைஸ் மில்லில் இருந்து தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகள் சர்வ சாதரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிக்கும் சென்று கொண்டிருக்கிறது. இதில் பணிபுரிந்து கொண்டிருக்கும் எந்த தொழிலாளர்களும் பெரிய அளவில் உயர்ந்து நான் பார்த்ததே இல்லை. இவர்களின் குழந்தைகளும் நான் படித்த பள்ளிக் கூடங்களில் தான் படித்துக் கொண்டு இருக்கிறார்கள். நான் படித்த உயர்நிலைப்பள்ளியில் இப்போது ஆயிரம் மாணவ மாணவியர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அருகே உள்ள பெண்கள் உயர்நிலைப் பள்ளியிலும் இதே அளவுக்கு படித்துக் கொண்டிருக்கிறார்கள். இது தவிர ஐந்தாம் வகுப்பு வரைக்கும் உள்ள பள்ளிக்கூடம் இரண்டு உள்ளது. நான் படித்த இந்த பள்ளிகளில் என்ன வசதி வாய்ப்புகள் இருந்ததோ அதுவே தான் இன்று வரைக்கும் உள்ளது. அண்ணன் மகன், மகள் என்று இன்றுவரையிலும் ஏதோவொரு வகையில் இந்த பள்ளிக்கூடங்கள் எங்கள் குடும்பத்துடன் ஒட்டுறவாய் இருக்கிறது.
எனது ஊருக்கு அருகே கோட்டையூர் என்ற ஊரில் இரண்டு மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடமும், காரைக்குடியில் அழகப்பா கல்வி அறக்கட்டளை சார்பாக மற்றொரு மெட்ரிகுலேஷன் பள்ளியும் உள்ளது. இது தவிர அழகப்பா கல்லூரிப் பகுதியில் உள்ள சிக்ரி என்றொரு மத்திய அரசின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆராய்ச்சிகூடம் மற்றும் அதனைச் சார்ந்த பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இது கேந்திரியா வித்யாலயா என்ற சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் செயல்படுகின்றது. இது தான் நான் வாழ்ந்த ஊரின் சுற்றிலும் 15 கிலோ மீட்டருக்குள் சுற்றிலும் இருக்கும் கல்வி கற்க வாய்ப்புக்கான சூழ்நிலை.
புண்ணியவான் அழகப்பச் செட்டியார் இல்லாவிட்டால் நான் வாழ்ந்த ஊரின் சுற்றுப்புற மக்கள் அத்தனை பேர்களும் நிச்சயம் கூலிக்கு மாறடிக்கும் கூட்டமாகத்தான் மாறிப் போயிருக்கும். இன்று அழகப்பச் செட்டியார் உருவாக்கிக் கொடுத்த கல்விக் கூடங்களில் படித்த மாணவ மாணவியர்கள் உலகம் முழுக்க பரவி மிக உயர்ந்த பதவிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இப்போது நான் மேலே எழுதியள்ள ஆங்கில வழி பள்ளிக்கூடங்கள் குறித்த விபரங்களை கல்லூரி படிக்கும் போது தான் அறைகுறையாக புரிந்து கொண்டேன். பாடத்திட்டங்களில் பல வித்யாசங்கள் உள்ளது என்பதையே தாமதமாகத்தான் புரிந்து கொண்டேன்.
ஊருக்கு அருகே இருந்த கோட்டையூருக்கு பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளிக்கூடத்திற்கு மாணவியர்களை அழைத்துச் செல்ல பள்ளிக்கூட பேரூந்து எங்கள் ஊருக்கு வரும். அவர்கள் என்ன படிக்கிறார்கள் என்பதை விட நண்பர்களுடன் நின்று அவர்களை தரிசிக்கத்தான் காத்துக் கொண்டு நின்று கொண்டிருக்கின்றேன். அவர்களின் மினி ஸ்கர்ட் பார்த்து பலமுறை என்னுடைய இதயம் கன்னாபின்னாவென்று துடித்தது இப்போது நினைவுக்கு வந்து போகின்றது.
ஊருக்கு அருகே இருந்த கோட்டையூருக்கு பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளிக்கூடத்திற்கு மாணவியர்களை அழைத்துச் செல்ல பள்ளிக்கூட பேரூந்து எங்கள் ஊருக்கு வரும். அவர்கள் என்ன படிக்கிறார்கள் என்பதை விட நண்பர்களுடன் நின்று அவர்களை தரிசிக்கத்தான் காத்துக் கொண்டு நின்று கொண்டிருக்கின்றேன். அவர்களின் மினி ஸ்கர்ட் பார்த்து பலமுறை என்னுடைய இதயம் கன்னாபின்னாவென்று துடித்தது இப்போது நினைவுக்கு வந்து போகின்றது.
என்னைப் பொறுத்த வரையிலும் அவர்கள் இங்கிலிஸ் மீடியத்தில் படிக்கின்றார்கள் என்பதோடு என் யோசனை நின்று போய்விடும்.
இப்போது தான் குழந்தைகளின் பள்ளிக்கூட புத்தகங்களை வைத்து என்ன மாதிரியான வேறுபாடான கல்வித்திட்டத்தின்படி படித்து வந்துள்ளேன் என்று எனக்குப் புரிகின்றது. ஆங்கிலவழி பள்ளிக்கூடங்களில் படிக்க வைக்க எங்கள் குடும்பத்தில் வசதியிருந்தது. ஆனால் எங்கள் பெற்றோர்களுக்கு பக்கத்தில் பள்ளிக்கூடம் இருக்கும் போது அங்கே ஏன் படிக்க வேண்டும்? என்று நினைத்திருக்கக்கூடும். ஒருவேளை அவர்கள் அங்கே கொண்டு போய் என்னை படிக்க வைத்திருந்தாலும் கூட நான் நன்றாக படித்து இருப்பேனா என்பதும் சந்தேகம். காரணம் நான் வாழ்ந்த சூழ்நிலையைத் தான் முக்கியமாக கருதுகின்றேன்.
வீட்டுக்கு உண்டான தொழிலை பார்த்துக் கொண்டு படிக்கும் சூழ்நிலையில் இருந்தேன். நான் மட்டுமல்ல, என் குடும்பத்தில் உள்ள அத்தனை பேர்களும் அப்படித்தான் வாழ்ந்தோம். வளர்ந்தோம். என்னைச் சுற்றிலும் உள்ள நண்பர்கள், மற்றும் அவர்களின் குடும்பம் என்று அத்தனை பேர்களும் இது போன்றதொரு வாழ்க்கையைத் தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
முக்கியமான நேரங்களைத் தவிர வேறு எவருடனும் பேச முடியாது. பழக முடியாது. பள்ளி விட்டு வந்ததும் வீட்டில் கொடுக்கும் வேலையை செய்ய வேண்டும். அது முடிந்த பிறகு தான் படிக்க உட்கார முடியும். இதற்கு மேலாகத்தான் நண்பர்களுடன் பழக்கம், அரட்டை போன்ற மற்ற எல்லாமே.
கல்வி என்பது அனைவருக்கும் சமம் என்றும் சமச்சீர் கல்வி என்றும் எளிதாக நம்மால் பேசிவிட முடியும். ஆனால் நாம் படிக்கும் பள்ளிக்கூடத்தின் வசதிகள், கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களின் தரம், அவர்களின் அறிவ, நம் பெற்றோர்களின் பொருளாதார வசதிகள், பெற்றோர்களின் அறிவு சார்ந்த விசயங்கள், குடும்ப சூழ்நிலை என்று இது போன்ற காரணிகளையும் இந்த கல்வி விசயத்தில் நாம் பார்த்தே ஆக வேண்டும். ஒரு மாணவன் உருப்படியாக உருவாக பள்ளிக்கூடம் மட்டும் காரணமல்ல. பல காரணங்களில் ஒன்று இந்த கல்வி. வெறுமனே அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி என்ற வார்த்தை சொல்லிவிட்டு நகர்ந்து விடலாம். இன்றைய போட்டி சமூகத்தில் நாம் சந்திக்க வேண்டிய வாய்ப்புகளுக்கு ஒரு மாணவரை தயார் படுத்த முடியாமல் போனால் அந்த கல்வியால் என்ன பலன்?
ஒரு மாணவர் பள்ளிவிட்டு வந்ததும் அன்றைய பாடங்களை படிப்பதற்கான வாய்ப்புகள் எந்த அளவுக்கு இருக்கின்றது என்பது போன்ற பல காரணிகளை நாம் யாரும் கவனத்தில் எடுத்துக் கொளவதே இல்லை. குறிப்பாக கிராமங்கள், சிறிய நகர்புறங்கள் போன்றவற்றில் வாழும் மாணவர்களின் வாழ்க்கை முறையே வேறானது.
என்னுடன் படித்த ரவி என்பவனின் அப்பா சந்தையில் பழாப்பழத்தை கூறு கூறாக விற்று கஷ்ட ஜீவனத்தை நடத்திக் கொண்டிருப்பவர். அவர்களின் சொந்த ஊர் பக்கத்து கிராமத்தில் இருந்தது. அங்கிருந்து நடந்து தான் பள்ளிக்கூடத்திற்கு வருவான். இவனைப்போலவே மற்ற மாணவர்களும் பல கிலோ மீட்டர் தொலைவிலிருந்து பள்ளிக்கு வருவார்கள். ரவியை நாங்கள் அணைவரும் பழாப்பழம் என்று தான் அழைப்போம். காட்டுப்பய போல எங்களை அடிக்க வருவான். எனக்கும் இது போன்ற ஒரு நிக்நேம் வைத்து இருந்தார்கள். ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு பெயர் உண்டு. அவர்களின் தொழில் அல்லது ஜாதி என்பது இந்த இடத்தில் முக்கிய பங்கு வகித்தது.
இதைப் போலவே கல்யாண வீடு முதல் இழவு முதல் கீற்றுக் கொட்டகை போடுபவரின் மகன், சமையல் வேலை செய்து கொண்டுபவனின் மகன், வயல் வேலைகளில் கூலிக்குச் செல்பவர்களின் மகன்கள், அரிசி ஆலைகளில் தினக்கூலிக்குச் சென்று கொண்டுருப்பவர்களின் மகன்கள் என்று 95 சதவிகிதம் அன்றாட வயிற்றுப் பாட்டுக்கு உழைத்து வந்தவர்கள் தான் அதிகம். அத்துடன் ஒவ்வொரு பெற்றோர்களும் தங்கள் தொழிலுக்கு அவ்வப்போது தங்கள் வாரிசுகளையும் களம் இறக்க வேண்டிய சூழ்நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஒரே ஒரு மாணவனின் அப்பா மட்டும் அழகப்பா கல்லூரியில் எழுத்தராக பணிபுரிந்து கொண்டிருந்தார். இவன் அப்பா மட்டும் அரசாங்கப் பணியில் இருந்தார்.
அவன் முற்பட்ட வகுப்பு என்பதோடு அவனைச் சார்ந்த மற்ற குடும்பத்தினரும் அவன் படிப்பதற்கான சூழ்நிலையை உருவாக்கியிருந்தார்கள். நானும் என்னைச் சார்ந்த மற்ற நண்பர்களும் ஆட்டம் போட கண்மாய் பக்கம் செல்லும் போது அவர்கள் வீட்டைத் தாண்டி தான் செல்ல வேண்டும்.. அப்போது அவர்கள் குடும்பத்தில் உள்ள அத்தை, மாமா, தாத்தா, சகோதர சகோதரிகளுடன் அவன் விளையாடிக் கொண்டு இருப்பான்.
செஸ், கேரம் போர்டு என்று அறிவு சார்ந்த குறிப்பாக எங்களைப் போல அடிக்கும் அத்தனை வெயிலையும் தலையில் வாங்கிக் கொள்ளாமல் வீட்டுக்குள்ளேயே விளையாடிக் கொண்டிருப்பான்.என்னைப் போல நண்பர்களுடன் வந்து இயல்பான விளையாட்டுகளின் அவன் பங்கெடுத்துக் கொண்டதில்லை. நான் பத்தாம் வகுப்பு முடிக்கும் வரையிலும் டிக்சனரி என்றொரு விசயமே தெரியாது. கல்லூரி வந்த போது தான் தெரிய ஆரம்பித்தது. ஆனால் அவன் டிக்சனரியை தொடக்க கல்வி நிலையிலேயே இயல்பாக பயன்படுத்திக் கொண்டிருந்தான்.
அவனின் வாழ்க்கை முறையே வேறுபாடாக இருந்தது..
ஒவ்வொரு வகுப்பிலும் அவன் தான் முதல் ரேங்க். பாடத்திற்கு அப்பாற்பட்ட யோசிக்கத் தெரிந்தவனும் அவன் மட்டுமே. ஆனால் அவனும் ஆங்கில வழிக்கல்வியில் படிக்காமல் தமிழ் வழிக் கல்வியில் தான் எங்களுடன் படித்தான். ஆனால் அவனுக்கு கிடைத்த சூழ்நிலை, அவன் அதை எடுத்துக் கொண்ட விதம் என்று எல்லாவகையிலும் சாதகமாக மாற்றிக் கொண்டான். முற்பட்ட வகுப்பு என்ற ஒரு காரணத்தினால் சமூகத்தில் அவன் நிலைநிறுத்திக் கொள்ள ரொம்பவே போராடிக் கொண்டுருபபதை பலமுறை பார்த்து இருக்கின்றேன். அவன் சென்னை சென்றதும் ரயில்வே பரிட்சை எழுதி இன்று உயர்பதவியில் இருக்கின்றான்.
இவனைத் தவிர கல்லூரி வரைக்கும் என்னுடன் படித்த மற்றொரு நண்பன் குறுக்கு வழியில் ஆசிரியர் பணி பெற்று இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூவுக்கு தாவரவியல் பாடத்தை சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றான்.
இவன் கல்லூரியில் ஐந்து பாடங்களும் (தமிழ் பாடம் உட்பட) தேர்ச்சியடைநது நான் பார்த்ததே இல்லை. ஆனால் பிட் எழுதும் கலையை இவனிடம்தான் நானும் கற்றுக் கொண்டேன். இவன் இப்போது எம்எஸ்சி, எம்ஃபில், பி.எட்.
எப்படியோ உருண்டு புரண்டு படித்த படிப்பு முடித்ததும் இவன் அப்பா நான் திருப்பூரில் இருப்பதை அறிந்து கொண்டு என் தங்கியிருந்த அறைக்கு ஒரு நாள் அழைத்து வந்தார்.
" இரண்டு வருஷமாவது இங்கேயே இருக்கட்டும். அதற்குள் நான் இவனுக்கு ஆசிரியர் பணியை வாங்கி விடுவேன் " என்று சொல்லிவிட்டுச் சென்றார். எனக்குத் தெரிந்த ஒரு நிறுவனத்தில் தொடக்க நிலை சம்பளமாக 2000 என்கிற நிலையில் சேர்த்துவிட்டு என் அறையிலேயே தங்க வைத்துக் கொண்டேன். ஆனால் நாலைந்து நிறுவனங்களில் நுழைந்தும் அவனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. கடைசியாக பலவிதமாக அலைந்து தான் இவனை வேறொரு நிறுவனத்தில் உள்ளே தள்ளிவிட முடிந்தது.
கடைசியில் அந்த நிறுவனத்திலும் வெளியே அலையும் வேலைக்கு வைத்துக் கொண்டார்கள். அவன் அப்பா எவரையோ பிடித்து சொன்னது போலவே அரசாங்க ஆசிரியர் பணியில் சேர்த்து விட்டார். இன்று அவன் என்னுடன் பேசுவதே பாவம் என்கிற நிலைக்கு மாறிவிட்டான்,.
ஆனாலும் அவன் வாங்கும் ஒரு ஆண்டு சம்பளத்தை விட என்னுடைய வருமானம் அதிகம். ஆனால் அவனைப் போல நிரந்தரம் இல்லை. என்ன வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானலும் நடக்கலாம். நான் பெற்றுள்ள அறிவுக்கும், வாய்ப்புக்கும் அவன் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கைக்கும் சம்மந்தமே இல்லை. அவனுக்கும் திருமணம் ஆகி குழந்தைகள் இன்று பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
கடைசியாக அவனை குடும்பத்துடன் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பள்ளிக்குச் செல்லும் அவன் குழந்தைகளுடன் தனியாக பேசும் போது தான் பலவற்றை புரிந்து கொண்டேன்.
நகர்ப்புறத்தில் வாழும் குழந்தைகளுக்குண்டான எந்த சூட்டிகையும் அவர்களிடம் இல்லை. குறிப்பாக ஆங்கில வழிக்கல்வியில் தான் அவர்கள் படிக்கின்றார்களே தவிர அவர்களின் எண்ணங்கள் சிந்தனைகள் முழுக்க குறுக்குவழி சமாச்சாரங்களையம், எதிர்த்து பேசி மற்றவர்களை வழிக்கு கொண்டு வருவதில் தான் குறியாக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டு நகர்ந்து விட்டேன்.
முதல் காரணம் அப்பாவின் குணாதிசியங்கள். நண்பனின் மனைவி சீரியல் பைத்தியம்.
குழந்தைகளை எப்படி குறை சொல்ல முடியும்?
குழந்தைகளை எப்படி குறை சொல்ல முடியும்?
பள்ளி ஆசிரியராக பணிபுரிபவனுக்கு தன் குழந்தையின் கல்வி மேல் கூட அக்கறையில்லாதவன் எப்படி வருட்ந்தோறும் நூற்றுக்கணக்கான மாணவர்களை நல்ல விதமாக கொண்டு வரமுடியும்? என்பதை இன்று வரையிலும் நான் யோசித்துக் கொண்டிருக்கின்றேன்.
மற்றவர்களுக்கு என்னை பிடிக்கின்றதா? என்பதை விட அவர்களுக்கு என்னால் தொந்தரவு இல்லாமல் வாழ்கின்றேனா என்பதைத்தான் நான் கவனமாக எடுத்துக் கொள்கின்றேன்
ReplyDeleteஅருமையான பதிவு.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
கலக்கல்...ரசித்தேன்...என் சுதந்திர தின வாழ்த்துக்கள்...
ReplyDeleteகலக்கல்...
ReplyDeleteரசித்தேன்...
என் சுதந்திர தின வாழ்த்துக்கள்...
கலக்கல்....பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteதங்கள் உள்ளத் தெளிவும் நேர்மையும்
ReplyDeleteதங்கள் எழுத்தில் பிரதிபலிக்கிறது
தரமான பதிவு
தங்கள் பதிவைத் தொடர்வதை
பெருமையாகக் கருதுகிறேன்
தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்
பழாப்பழமா? தப்பாக எழுதினதுக்கு 100 தோப்புக்கரணம் போடுங்க. அதை அப்படியே விடியோ பண்ணி யூ டியூப்ல போடுங்க. ஹி ஹி பலாப்பழம்.
ReplyDeleteபணக்கார குழந்தைகள் எல்லோருமே இப்படி குட்டிச்சுவராகப் போனவர்கள் இல்லை. நாங்க நினைக்கிறதை விட ரொம்ப ஒழுக்கமாக பண்பாக இருக்கிறாங்க.
ReplyDeleteஎன் கிட்ட கேட்டீங்கன்னா, பசங்களை படிக்க வெளியூருக்கு அனுப்பனும். அப்பத்தான் பணத்தோட அருமை தெரியும். வாழ்க்கையோட கஷ்டம் தெரியும். ரொம்ப கெடுத்து வைக்கற பெற்றோருடைய தவறு தான் அப்படியே தொடர்கிறது. எங்களுக்கு வீட்ல எவ்வளவு செல்லம் கொடுத்தாலும், தவறு செய்யும் போது ஒரு பார்வையாலேயே அம்மா அடக்கிவிடுவாங்க. எங்கள் ஊரிலும் சிறுவர்கள் இப்ப எல்லாம் ரொம்ப வாய் காட்டப் பழகிவிட்டார்கள். சளாருன்னு வைக்கனும் என்று எனக்கே கை குறுகுறுக்கும். சில வேளைகளில் அவர்கள் பெற்றோர் முன்னிலையிலேயே, இப்படி எங்கள் வீட்டில் பேசினால் கன்னம் சிவக்கும் என்று. அம்மாவோ அப்பாவோ அடிச்சதில்லை. பட், இப்படி பேசினால் அறை விழும் என்று தெரியும்.
நல்ல கல்வி என்பது டெக்னிக்கல் அறிவை கொடுப்பதில்லை. மனிதத்தன்மையை வளர்க்க உதவுவது.
அருமையான அனுபவ பகிர்வு
ReplyDeleteசில விசயங்களை புதிதாக அறிந்து கொண்டேன் சார்
ReplyDeleteஅன்பின் ஜோதிஜி பழைய வாழ்க்கை நடைமுறைகளை திரும்பிபார்கையில் ரொம்பவே சுவராச்சியம் தான் போங்க...:))
ReplyDeleteஉங்கள் அனுபவம் நிறைய பாடங்களை சொல்லியது. பதிவுக்கு நன்றி சார்.
ReplyDelete//மற்றவர்களுக்கு என்னை பிடிக்கின்றதா? என்பதை விட அவர்களுக்கு என்னால் தொந்தரவு இல்லாமல் வாழ்கின்றேனா என்பதைத்தான் நான் கவனமாக எடுத்துக் கொள்கின்றேன்.///
ReplyDeleteஒவ்வொருவரும் கற்றுக்கொள்ளவேண்டிய பால பாடம்...
நல்ல அறிவுரை நண்பரே...
அனாமிகா
ReplyDeleteதுளசிகோபால், ரதிக்குப் பிறகு இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி.
நான் தோப்புக்கரணம் போட்டுக் கொண்டு இருக்கின்றேன்.
வருக ஷீ நிசி.
ReplyDeleteதொடர் வாசிப்புக்கு நன்றி இளா (இப்படி அழைக்கலாம் அல்லவா?)
உண்மைதானே தவறு.
சுரேஷ், சதிஷ் வருகைக்கு நன்றி.
அனாமிகா நீங்கள் சொல்வதும் சரிதான். ஆனால் இங்குள்ளவர்களின் வாழ்க்கை முறையைப் பார்க்கும் போது சரியாக வருமா?
மிக்க நன்றி ரமணி.
வருக விக்கி, கார்த்தி,ரேவரி, ரத்னவேல் அய்யா.
வழக்கம்போலவே..
ReplyDeleteமற்றவர்களுக்கு என்னை பிடிக்கின்றதா? என்பதை விட அவர்களுக்கு என்னால் தொந்தரவு இல்லாமல் வாழ்கின்றேனா என்பதைத்தான் நான் கவனமாக எடுத்துக் கொள்கின்றேன்./
ReplyDeleteஇதையே நானும் விரும்புகின்றேன்...
அழகான; அருமையான, அனுபவ பகிர்வு...
எழுத்தின் ஆழத்தில் உங்கள் திறன் புரிகிறது...
பதிவுக்கு அன்புடன் பாராட்டுக்கள்//