அஸ்திவாரம்

Friday, August 12, 2011

நான் திருந்தப் போவதில்லை.


நான் வீட்டுக்குள் நுழைந்த போது மூவரில் ஒருவர் வேகமாக " அப்பா வந்துட்டார்..............." என்று கத்திக் கொண்டே என்னை நோக்கி ஓடிவந்தார். சந்தின் முனையில் வீடு இருப்பதால் திடீர் என்று வாகனங்கள் எதிர்பாரத விதமாக உள்ளே வந்து விடும். பலமுறை எடுத்துச் சொல்லியும் குழந்தைகளுக்கு புரிவதில்லை. மனைவி ஏற்கனவே ஒரு நாள் போராட்டத்தில் அலுத்துப் போய் வாசல்படியில் அக்கடா என்று அமர்ந்திருப்பார். அதுவும் இவர்களை அன்றாட வீட்டுப் பாடங்களை எழுத வைத்து முடிப்பதற்குள் மனைவியின் முழி பிதுங்கி போயிருக்கும். வீட்டுப் பாடங்கள் எழுதி முடித்து அடுத்து படிக்கத் தொடங்க வேண்டும். மூவரும் சாதாரண நபர்கள் அல்ல. ஒருவருக்கு ஒருவர் சரியான போட்டி. யார் யாரை எந்த காரணம் கொண்டு மாட்டி விடலாம் என்ற பட்டி மன்றமே நடக்கும். 

இதற்கிடையே தினந்தோறும் தொலைத்து விட்டு வந்த பென்சில் கதை என்று தனியாக இருக்கிறது. பல முறை புலம்பியிருக்கின்றேன். வாரத்திற்கு பத்து பென்சில் தொலைப்பது இவர்களாகத்தான் இருக்கும் என்று.

இவர்களுடன் படிக்கும் பக்கத்தில் அமர்ந்திருக்கும் மாணவி வாங்கியிருப்பாள்.  இவர்களும் மறந்து போயிருப்பார்கள். அப்படியே வந்து இங்கே திட்டு வாங்கிக் கொண்டு இருப்பார்கள்.  மறுநாள் போய் கேட்க வேண்டும் அதை வாங்கிக் கொண்டு வர வேண்டும் என்று தோன்றாது. அது தான் உள்ளே ஸ்டாக் இருக்கிறதே? அதில் ஒன்று எடுத்துத் தாங்க என்று சட்டம் பேசுவார்கள்.

மீறிப் பேசினால் தந்தால் எழுதுகின்றேன். இல்லாவிட்டால் நீங்க தான் பொறுப்பு என்று மிரட்டல் வேறு.  நான் பலமுறை பார்த்துக் கொண்டு சிரித்துக் கொண்டே வெளியே வந்து விடுவதுண்டு.  

காரணம் இது ஒரு தொடர்கதை.

இவர்களை அடக்க முடியாமல் வாசல்படியில் "எக்கேடோ கெட்டி ஒழிங்கடி...........". என்று கத்திப்பார்த்து விட்டு நான் உள்ளே வீட்டின் உள்ளே நுழையும் போது மனைவி தேமே....... என்று அவர்கள் நடவடிக்கைகளை வெறுப்போடு வேடிக்கை பார்த்துக் கொண்டுருப்பாள். காரணம் குழந்தைகளை என் எதிரே திட்ட மாட்டார்.  திட்டினால் என்ன நடக்கும் என்று அவருக்குத் தெரியும்? 

ஒருவர் வண்டியை நிறுத்துவதற்குள் முன்புறம் நின்று கொண்டு டயருக்கு குறுக்கே காலை அகட்டி வைத்துக் கொண்டு நிற்க அடுத்தவர் பின் சீட்டில் ஏற, கடைக்குட்டி என் காலின் வழியே தொற்றிக் கொண்டு மேலே ஏற முயற்சிக்க என் பாடு திண்டாட்டமாகி விடும். இன்ஜின் சூடு கைகால்களில் பட்டு விடுமோ? என்று பதட்டமாக இருக்கும். நான் குழந்தைகளை திட்டாமல் மனைவியைத் திட்டினாலும் மனைவி வேண்டுமென்றே அப்படியே எங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டேயிருக்க நான் பலமுறை தடுமாறி போவதுண்டு.  


நான் பைக்கை வீட்டுக்குள் நிறுத்துவதற்குள்,  பைக்கில் ஏற முயற்சித்துக் கொண்டே "அப்பா ஒரு ரவுண்டுப்பா............." என்பார்கள். இப்போது இரண்டு பிரச்சனைகளை நான் சந்திக்க வேண்டும்.  ரவுண்டு அடிக்க வேண்டும். அடுத்து மூவரில் ஒருவர் பள்ளியில் இருந்து கொண்டு வந்துள்ள புகாரை கேட்டே ஆக வேண்டும்.  இல்லாவிட்டால் நான் வீட்டுக்குள் நுழைவதற்குள் ஒரு பெரிய ரணகளமே நடந்து முடிந்து விடும். இந்த இடத்தில் தான் நான் பொறுமையாக இருப்பேன்.  குழந்தைகளை அடக்க முடியாது.  காலையில் இருந்து அடுத்த 12 மணி நேரம் பிரிந்து இருந்த நேரத்தில் அவர்கள் பள்ளியில் சந்தித்த பிரச்சனைகளை என்னுடன் பேச வேண்டும் என்று விரும்புகிறார்கள். நான் வெளியே சந்தித்த பிரச்சனைகளை அதனால் உருவான மன அழுத்தம் குறித்து அவர்களுக்கு புரியாது.  

என் சிறுவயதில் ஒவ்வொரு நாளும் அப்பா கடை மூடியதும் இரவு நேரம் வீட்டுக்குள் நுழையும் போது நாங்கள் தூங்கியிருக்க வேண்டும். வீட்டில் இருந்த பல சட்டங்களில் இதுவும் ஒன்று.  நாங்கள் அவர் வரும் போது காச் மூச் என்று எங்களின் சப்தம் கேட்டால் அம்மா வாங்கும் திட்டுக்களை பல முறை கேட்டுள்ளேன். சில சமயம் எங்களை நோக்கி திட்டுக்கள், மிரட்டல்கள் வரும். அதென்னவோ அப்பாவுக்கு பிள்ளைகள் என்றாலே ஒழுக்கமாக இருக்க வேண்டும். படிக்க வேண்டும். அமைதியாக இருக்க வேண்டும்.  வேண்டும்.... வேண்டும் என்றொரு ஆயிரத்தெட்டு கட்டளைகள். 

ஆனால் நான் வளர்க்கும் குழந்தைகள் என் வேண்டுதல்கள் எதனையும் நிறைவேற்ற தயாராய் இல்லை என்பதோடு எகிறத் தொடங்கியும் விடுகிறார்கள்.  மனைவியிடம் கிடைக்காத சுதந்திரம் என்னிடம் அதிக அளவு கிடைப்பதே முக்கிய காரணம். என்னை மனைவி பலமுறை குற்றவாளி கூண்டில் நிறுத்துவார். அவளின் தீர்ப்பை வாய்தா கேட்காமல் வாங்கிக் கொண்டு இருக்கின்றேன்.

ஆனால் அவர்கள் நான் வீட்டுக்குள் நுழைவதற்குள் என்னுடன் பள்ளிக்கூட விசயங்களை பகிர்ந்து கொண்டே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் பைக்கை வீட்டுக்குள் கூட கொண்டு வர முடியாமல் அப்படியே நிறுத்தி விட்டு பேசத் தொடங்கி விடுகிறார்கள். ஒவ்வொரு நாளும் மனைவி கத்திக் கொண்டே பின்னால் வந்த போதிலும் மூவரையும் அடக்க முடிவதில்லை. பத்து நாட்கள் பிரிந்து வெளியே சென்று வந்தவனை எதிர்பார்ப்போடு காத்திருந்து பார்ப்பது போல தினந்தோறும் இப்படித்தான் நடக்கின்றது. பைக்கை விட்டு இறங்குவதற்குள் அவர் சொல்ல வேண்டிய விசயத்திற்காக ரோட்டிற்கே வந்து என்னை அப்படியே நிறுத்தி பேசத் தொடங்கி விடுகிறார்கள். .

மனைவி பேசிக்கொண்டிருக்கும் ஒருவரை தரதரவென்று இழுத்துக் கொண்டே சென்றாலும் "நான் அப்பாவிடம் சொல்லிவிட்டு அப்புறம் வருகின்றேன்...." என்று ஆர்ப்பாட்டம் தொடங்கி விடுகின்றது. நான் சாலையிலேயே வண்டியை நிறுத்தி விட்டு மனைவியை அடக்கி விட்டு ஒவ்வொருவரையும் அழைத்து " என்னம்மா? சொல்லும்மா? " என்றதும் ஒருவர் அழுது கொண்டே பேசத் தொடங்வார்.  

"அப்பா இன்றைக்கு நான் கொண்டு போன ஸ்நாக்ஸை ஹேமா புடுங்கித் தின்று விட்டாள்?  "

இது தான் பிரச்சனை.  

நான் வீட்டுக்குள் வந்து உட்கார்வதற்கு கூட அவர்களுக்கு பொறுமை இல்லை. நிச்சயம் பள்ளி விட்டு வந்தவுடன் அம்மாவுடன் பேசியிருப்பார்கள்.  ஆனால் இதன் முக்கியத்துவத்தை உணராமல் "சரிடி...... "என்று அடக்கியிருப்பார். இவர்களும் மீற முடியாமல் அமைதி காத்து நான் வந்ததும் பொங்கி விடுகிறார்கள்.  மொத்தத்தில் அவர்களுக்கு தீர்வு வேண்டும் அல்லது அவர்களை நான் தனிப்பட்ட முறையில் அக்கறை கொண்டு கேட்டேன் என்ற அவர்களுக்கு நம்பிக்கை வர வேண்டும். நானும் நடந்த சம்பவங்களை பொறுமையாக கேட்டு விட்டு, "சரி நாளை நானே வருகின்றேன்.  உங்க மிஸ்ஸிடம் கேட்டு பிரச்சனையை முடித்து வைக்கின்றேன்" என்று சொன்னபிறகே ஆசுவாசம் ஆவார்கள். இதுபோன்ற சமயங்களில் மனைவிக்கு பொறுமை எல்லை மீறி முதுகில் இரண்டு மொத்த ஆலைச்சங்கு போல அலறல் தொடங்கும். 

நான் யாருக்கு ஆதரவு என்பது இப்போது முக்கிய விவாதமாக இருக்கும்.  நான் குளியல் அறைக்குள் புகுந்து விடுவேன். 

அழுது ஆர்ப்பட்டம் முடிந்தவுடன் கதையை கேட்கத் தொடங்கி அவர்கள் மனதை மாற்றிய பிறகு போர் முடிந்த அமைதி வீட்டில் உருவாகும்.

குழந்தைகள் முதன் முதலாக பள்ளிக்குச் செல்லத் தொடங்கிய போது ஸ்நாக்ஸ் டப்பா வாங்க வேண்டும் என்று மனைவி சொன்னார். 

எனக்குப் புரியவில்லை? "அதென்ன ஸ்நாக்ஸ் டப்பா?" என்றேன்.  பள்ளிக்கூடத்தில் சாப்பிட ஒரு டப்பாவில் திண்பண்டங்களை வைத்து கொடுக்க வேண்டும் என்றார்.  எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. 

" என்னது? பள்ளிக்கூடத்தில் உட்கார்ந்து தின்பதா? படிக்க போறாங்களா? திங்கப் போறாங்களா? நாமெல்லாம் அப்படியா உள்ளே கொண்டு போய் வைத்துக் கொண்டு தின்றோம் அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்" என்றேன். ஆனால் மனைவி விடாமல் மூன்று டப்பாக்களை வாங்கி வந்தாள். அதிலும் அவர்களுக்கு பிடித்த நிறம், அதில் உள்ள படங்கள் என்று தேர்ந்தெடுத்து கொண்டு வர " நான் சம்பாரிக்கிற காசெல்லாம் இப்படி வீணாப் போகுதே.............." என்று அலுத்துக் கொண்டே வந்தேன்.  

ஆனால் குழந்தைகளை அவர்கள் பள்ளியில் விட்டு வரும் போதும் அவர்களை அழைத்து வரச் செல்லும் போது தான் நான் எத்தனை பட்டிக்காட்டானாக இருக்கின்றேன் என்பதை போகப் போக உணர்ந்து கொண்டேன். இப்போது நன்றாக வளர்ந்து விட்டார்கள்.  இன்னமும் இந்த ஸ்நாக்ஸ் டப்பா அவர்களின் பையில் ஒரு ஓரமாக இருக்கிறது. இப்போது டப்பாவின் அளவு சற்று பெரிதாக வேறு ஆகிவிட்டது. அதிலும் அஞ்சறை பெட்டி போல விதவிதமாக உள்ளது. பாடப்புததகங்களை வரிசையாக எடுத்து பைக்குள் ஒவ்வொருவரும் வைக்கின்றார்களோ இல்லையோ முதன் முதலாக இந்த ஸ்நாக்ஸ் டப்பாவில் அம்மா என்ன இன்று வைத்துள்ளார்? என்ற சோதித்து விட்டே வைக்கிறார்கள். அதிலும் ஒவ்வொருவருக்கும் பிடித்த சமாச்சாரம் வேறு. இத்துடன் தண்ணீர் டப்பா என்று தனியாக ஒன்று உள்ளது. 

ஒரு பொதி மூட்டை போலவே சுமந்து கொண்டு செல்கிறார்கள்.  மனைவி குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் போது அவரவர் முதுகில் ஏற்றி விடுவதுண்டு.  அவர்களும் அமைதியாக சுமந்து கொண்டு செல்வதை பார்த்துக் கொண்டு மனைவியை திட்டியிருக்கின்றேன். 

"நீ எடுத்துக் கொண்டு செல். அவர்களால் இந்த சுமையை எப்படி தூக்க முடியுமென்று?"

ஆனால் மனைவி " உங்க வேலையை பார்த்துக் கொண்டு கிளம்புங்க" என்று என்னை அதட்ட அமைதியாகி விடுகின்றேன். 

என்றாவது ஒரு நாள் நான் குழந்தைகளுடன் பள்ளிக்குச் செல்லும் சூழ்நிலை உருவானால் இருவர் தங்கள் பாரங்களை என் மேல் சுமத்தி விடுவார்கள்.  முழி பிதுங்கி விடும். மூச்சு முட்ட பள்ளியில் கொண்டு போய் சேர்த்து விடுவதுண்டு. பலமுறை ஆசிரியைகளிடம் கோவித்துக் கொண்டதுண்டு.  

"ஏன் இத்தனை புத்தக நோட்டுகள்? வகுப்பறையில் வைத்துக் கொண்டு தேவையானதை கொடுத்து விட வேண்டியது தானே?"

என் குணாதிசியம் தெரிந்து அந்த ஆசிரியை பொறுமையாக எனக்கு விளக்குவார்.  

மனதிற்குள் திட்டிக் கொண்டே அமைதியாய் வந்து விடுவதுண்டு.

நான் சிறுவயதில் ஒரு சிலேட்டையும் டவுசருக்குள் ஒரு அழுக்கான குச்சியையும் கொண்டு சென்றது நினைவில் உள்ளது. படிப்படியாக ஒரு சில புத்தகங்கள் என்று மொத்தத்தில் ஆறாவது படிக்கும் போது தான் நன்றாக நோட்டில் எழுதியதும், சண்முக சுந்தரம் வாத்தியர் என் கையெழுத்து மாதிரி இருக்க வேண்டும் என்று மற்றவர்களுக்கு என் நோட்டைக் காட்டியதும் இப்போது நினைவுக்கு வந்து போகின்றது. எந்த வகையில் யோசித்துப் பார்த்தாலும் எட்டாவது வரைக்கும் அதிக அளவு புத்தகங்களோ, நோட்டுக்களோ, மூச்சு முட்டும் அளவுக்கும் உள்ள சுமையோ எதுவுமில்லை. 

நானும் எழுதினேன், படித்தேன், ஓடினேன், ஆடினேன், விளையாடினேன் என்று அந்த பருவம் வித்யாசமாகத்தான் இருந்தது.  குழந்தைகளின் ஸ்நாக்ஸ் டாப்பா போல எந்த டப்பாவையும் எங்கம்மா கொடுக்கவில்லை.  ஒவ்வொரு தீபாவளிக்கும் வீட்டில் சுடும் கைமுறுக்கு, குழல் நெய் முறுக்கு, அதிரசம், லட்டு, சீயம் என்று கெட்டுப் போகாத பலகாரங்களை பல டகர டப்பாவில் அடுக்கி வைத்திருப்பார்கள்.  ஏறக்குறைய அடுத்த மூன்று மாதங்களுக்கு வரும்.  பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் முதலில் தூளானதை எடுத்துக் கொடுத்து விட்டு, படிப்படியாக உடையாத சமாச்சாரங்கள் என்று மெது மெதுவாக வெளியே வரும்.  மறுபடியும் அடுத்த தீபாவளி வரைக்கும் காத்திருக்க வேண்டும்.  இடையிடையே எந்த உறவினர்களாவது வீட்டுக்கு வந்தால் அவர்கள் கொண்டு வரும் திண்பண்டங்கள் தான்.


இது தவிர பள்ளியில் இடையிடையே வெளியே வரும் போது கையில் காசு எதுவும் தேற்றி வைத்திருந்தால் பக்கத்து ஊரில் இருந்து வரும் ஐஸ்கார பாய் பாம் பாம் என்று அலற வைத்துக் கொண்டு ஐஸ் விற்றுக் கொண்டிருப்பார்.  அவரிடம் ஐந்து காசு கொடுத்து அந்த ஐஸை வாங்கித் தின்பதை விட அவர் சைக்கிளின் முன்புறம் மாட்டி வைத்துள்ள அந்த பாம் பாம் அடிக்கத் தான் ஆர்வமாக இருக்கும்.   நாம் அவரிடம் ஒரு ஐஸ் வாங்கினால் அந்த பாம் அடிக்க அனுமதிப்பார். இல்லாவிட்டால் திட்டி அனுப்பி விடுவார்.  மற்றவர்கள் பால் ஐஸ் வாங்கித் தின்பதை பார்த்துக் கொண்டு நின்று விட்டு பெல் அடித்தவுடன் அதை மற்ந்து விட்டு உள்ளே ஓட வேண்டும்.  அப்புறம் அதுவும் நினைவில் இருக்காது.

பெரிதான ஆசைகள் இல்லாமல் வளர்ந்த காரணத்தால் பெரும்பாலான விருப்பங்கள் எதுவும் நமக்கு தேவையில்லாமல் இருந்தது. 

சாப்பாடு ஒன்றே போதுமென்ற சூழ்நிலையில் தான் இளமைப்பருவ்ம் சென்றது.  ஆனால் இன்று குழந்தைகளின் ஆசைகள், நோக்கங்கள், விருப்பங்கள் என்று ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் நம்முடைய பல மடங்கு உழைப்பு தேவைப்படுகின்றது.  

இது தவிர மற்றொரு சவால் உண்டு. 

மண்ணில் புரண்டு, கண்ட இடங்களில் திரிந்து, அழுக்கு கைகளோடு தோன்றியவற்றை வாங்கித் தின்று வளர்ந்த உடம்புக்கு அன்று ஒன்றும் ஆகவில்லை.  மழை பெய்யும் போது நடு சாலையில் ஆடிய ஆட்டங்கள், வீட்டுக்கருகே தேங்கும் குட்டைகளில் குதித்து விளையாடிய போக்கிரித்தனங்கள் என்று திகட்ட திகட்ட சந்தோஷத்தை அனுபவித்துள்ளேன்.  ஒரு தலைவலி இல்லை. காய்ச்சல் இல்லை. முதல் இருபது வருடங்களில் மொத்தமாகவே ஏழெட்டு முறைகள் மருத்துவரிடம் சென்றிந்திருந்தால் ஆச்சரியமே.  நான் மட்டுமல்ல.  குடும்பத்திலிருந்த அத்தனை பேர்களும் அப்படித்தான்.  பக்கத்து வீட்டுக் கிழவி கொடுக்கும் கசாயம் அல்லது நாட்டு மருந்து என்று ஏதோவொன்று தான் போன உயிரை திரும்ப வரவழைத்துள்ளது. 

ஆனால் இன்று?

குளிக்க வாட்டர் ஹீட்டர், குடிக்க சுடுதண்ணி, ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட கடையில் மட்டுமே வாரத்திற்கொரு முறை வாங்கி வந்து ஸ்டாக் வைத்திருக்கும் திண்பண்டங்கள் என்று இன்குபேட்டர் போலவே குழந்தைகளின் ஆரோக்கியம் இருக்கிறது.  தொடர்ச்சியாக இருமல் என்றால் நம் உயிர் போய் திரும்பி வருகின்றது.  ஒருவருக்கு காய்ச்சல் வந்தால் ஒரு ரவுண்டு போய் திரும்பி வருவதற்குள் காந்தி தாத்தா காணாமல் போய்விடுகிறார். ஒருவர் போய் அடுத்து, அடுத்தவர் போய் அடுத்து என்று இரவு நேரங்களில் படும் அவஸ்த்தைகளை எழுத்தில் வடிக்க இயலாது. பல சமயம் தெருவில் போகும் பஞ்சு மிட்டாய் கேட்டு ஒரு பெரிய ஆர்ப்பாட்டமே நடக்கும். மனைவி எச்சரிக்கையும் மீறி சட்டென்று நான் வாங்கி கொடுத்துவிடுவதுண்டு.  ஆனால் ஐந்து ரூபாய் செலவுக்கு அடுத்த இரண்டு நாள் அனுபவிக்கு நரக வேதனை இருக்கிறதே? சொல்லி மாளாது.  மனைவியிடம் இருந்து வரும் கந்த சஷ்டி கவசத்தை அமைதியாக கேட்டுக் கொள்வேன். 

இந்த பிரச்சனை வேறு விதமாக தொடர்ந்து கொண்டேயிருக்கும். 

வெளியே காலாற நடந்து சென்று விட்டு வருவோம் என்று அழைத்துக் கொண்டு சென்றால் திரும்பி வரும் போது எனக்கு ஒரு ஆப்பு காத்திருக்கின்றது என்று அர்த்தம்.  குறிப்பிட்ட கடையின் வழியாக என்னை பேச்சு வாக்கில் நகர்த்தி அழைத்து சென்று விட்டு சப்பரமாக அங்கேயே மூவரும் நின்று அவரவருக்கு தேவையானதை என்னைக் கேட்காமலேயே எடுத்துக் கொண்டு அப்பா காசை கொடுத்து விடுங்க என்பார்கள்.  நானும் ஒன்றும் பேசாமல் காசை கொடுத்து விட்டு வீட்டுக்கு உள்ளே வந்தால் அடுத்த சுப்ரபாதம் தொடங்கும்.  காரணம் தின்றவளில் ஒருத்தியே சற்று வேகமாக நடந்து வந்து நைஸாக போட்டுக் கொடுத்து விட்டு நான் அம்மாக்கிட்டே சொல்லிட்டேனே............ என்ற போது அடுத்த யுத்தம் தொடங்கும். 


நான் மாமன்னர் 23ம் புலிகேசி போல தாரை தப்பட்டை முழங்காமல் அமைதியாக தரையில் படுத்துக் கொண்டு என் தவறை உணர்ந்து கொள்வேன்.  

அடுத்த ஞாயிறன்று அப்பா நடந்து போயிட்டு வரலாமா என்று கேட்டு இந்த பயணம் தொடங்குவார்கள்.  மறதி நோய் போல குழந்தைகள் விருப்பம் போல சென்று கொண்டேயிருக்கின்றேன்.. என்ன செய்வது? 

நான் திட்டு வாங்க பிறந்தவன். குழந்தைகள் திகட்ட திகட்ட சந்தோஷங்களை அனுபவிக்க பிறந்தவர்கள்.

25 comments:

  1. திருந்தும் எண்ணம் துளியும் வேண்டாம். இதெல்லாம் மனப்பொக்கிஷத்தில் வச்சுப் பூட்டி வையுங்க. நாம் கடமைகளில் இருந்து ஓய்வு பெற்றபிறகு(?) எடுத்துப் பாருங்க. அனந்தபத்மனாபனின் பொக்கிஷ அறையைத் திறந்தாப்போல இருக்கும்:-)

    ReplyDelete
  2. இதுபோன்ற சமயங்களில் மனைவிக்கு பொறுமை எல்லை மீறி முதுகில் இரண்டு மொத்த ஆலைச்சங்கு போல அலறல் தொடங்கும். //

    அது வும்ம முதுகில விழ வேண்டியது, மாறி அங்கே விழுந்துருச்சு. எனக்குத்தானே தெரியும்.

    புள்ளகளுக்குத் தெரியுமிய்யா எங்க பப்பு வேக வைக்கமுடியும்னு. என் வீட்டிலும் இதே கதைதான். மூஞ்சில குத்தாதேடீ அவ்வ்வ்னா இன்னும் கையை பின்னாலே இழுத்து ஹிய்யான்னு குத்துறா... கண்டிக்க தெரியலயாம் :))

    ReplyDelete
  3. என்றாவது ஒரு நாள் நான் குழந்தைகளுடன் பள்ளிக்குச் செல்லும் சூழ்நிலை உருவானால் இருவர் தங்கள் பாரங்களை என் மேல் சுமத்தி விடுவார்கள்.//

    ஹாஹாஹா... இங்கிருந்துதான் ஆரம்பிக்கிது. எங்கே பப்பு வேக வைக்கலாம்னு. சில வும்மோட காணொளிகளை பார்த்த மட்டிலும் கண்டிப்பா வுமக்கு இருக்குடி இன்னும்... போகப் போக - எஞ்சாய். லவ்லி! :)))

    ReplyDelete
  4. //அவரிடம் ஐந்து காசு கொடுத்து அந்த ஐஸை வாங்கித் தின்பதை விட அவர் சைக்கிளின் முன்புறம் மாட்டி வைத்துள்ள அந்த பாம் பாம் அடிக்கத் தான் ஆர்வமாக இருக்கும்.//

    ஹே, முண்டாசு இந்த பதிவு படிக்க படிக்க வும்ம மேல இரக்கமே வரமாட்டீங்கிது ...சிப்பு சிப்பா வருது உன்ற நினைச்சா... :)))

    ReplyDelete
  5. குழந்தைகளின் படங்கள், கவிதைகளாய் பதிந்து விடுகிறது என்றால் - உங்கள் பதிவு ...... ஜாலி பட்டாசு! ரசித்து வாசித்தேன்.

    ReplyDelete
  6. ரசித்தேன் நானும்... வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  7. இயல்பான நகைச்சுவை , எனது பெண் தினசரி ஒரு பென்சில் , eraser, sharpener தொலைக்கிறாள்

    கேட்டால் சிரித்துக்கொண்டே பரவாஇல்லைப்ப

    வேறு பென்சில் கொடுப்பா என்கிறாள் .

    ReplyDelete
  8. தேவியர் மூவரும் தேவியர் தான்...ம்ம்ம்..அனுபவியுங்க அன்பின் ஜோதிஜி...இளையவர் தான் உங்கள ரொம்பவும் பெண்டு எடுக்கிறாராமே...

    ReplyDelete
  9. நல்லா மாட்டிக்கிட்டு முழுசிறீங்கன்னு மட்டும் புரியுது.நீங்க பண்ணினதெல்லாம் திரும்பி உங்களுக்கே வருது.அனுபவியுங்கோ ஜீ !

    ReplyDelete
  10. ஜோதிஜி சூப்பர்.. அப்புறமா விரிவா பின்னூட்டம் இடுறேன்.

    ReplyDelete
  11. //அப்பா இன்றைக்கு நான் கொண்டு போன ஸ்நாக்ஸை ஹேமா புடுங்கித் தின்று விட்டாள்? "//

    ஜோதிஜி,

    இதென்ன புதுக்கதையா இருக்கே!

    ReplyDelete
  12. விடுங்க ஜோதிஜி,

    பிள்ளைங்க அப்படித்தான். அதுக்காக 40 வருஷத்துக்கு முந்தின வாழ்க்கைய அவங்க எப்படி வாழ முடியும்?
    அவங்க குடுப்பினை நல்லதா இருக்கு. அனுபவிக்கிறாங்க.

    ReplyDelete
  13. அருமையான பதிவு.
    இப்போது தான் சற்று relaxed mood க்கு வந்திருக்கிறீர்கள்.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. //நான் திட்டு வாங்க பிறந்தவன். குழந்தைகள் திகட்ட திகட்ட சந்தோஷங்களை அனுபவிக்க பிறந்தவர்கள்//
    அருமையான பதிவு - நன்றி

    ReplyDelete
  15. படித்தேன்.ரசித்தேன்:)))

    ReplyDelete
  16. இங்கயும் ஸ்டார்ட் ஆயிடுச்சுப்பு... :-)))

    ReplyDelete
  17. வாங்க டீச்சர் நலமா? நியூசிலாந்து வெள்ளைப் பணி எப்படி உள்ளது. நான் திருந்த நினைத்தாலும் குழந்தைகள் ஒவ்வொரு முறையும் உன்னை திருந்த நாங்கள் விட்டு விடுவோமோ என்று என்னை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். கடமைகளில் இருந்து ஓய்வா? வாய்பே இல்லை. வழுக்கி விழுந்த இடங்களை துடைத்து முடிக்கவே இன்னும் நாலைந்து ஆண்டுகள் ஆயிடும் போலிருக்கே?

    அது வும்ம முதுகில விழ வேண்டியது, மாறி அங்கே விழுந்துருச்சு. எனக்குத்தானே தெரியும்.

    சரியாத்தான் சொல்லியிருக்கே ராசப்பா? அடிக்கடி வீட்டில் சொல்லும் வாசகம், அடுத்த ஜென்மத்தில் நான் ஆம்பிளையாக பொறக்க வேண்டும். நீங்க எனக்கு பொஞ்சாதியாக வர வேண்டும் என்கிறார். வாய்ப்பு இருக்குமோ????????????????

    கிரி

    பெரும்பாலும் உங்க குழந்தை சற்று மேம்பட்ட சிந்தனைகளுடன் வளர்ந்து கொண்டு இருக்கிறார் என்பதை நீங்கள் எழுதிய ஊர் திரும்பும் விமான நிலைய சம்பவத்தை வைத்து புரிந்து கொண்டேன்.

    நன்றி சித்ரா. ரத்னவேல் அய்யா சொன்னது போல மற்ற அரசியல் கட்டுரைகள் எழுதும் போது இல்லாத மனக்கிளர்ச்சி இது போன்ற பழைய நினைவுகளை எழுதும் போது உருவாவது உண்மையே.

    கந்தசாமி அய்யா, தொடர் வாசிப்பில் தொடர்ந்து வந்து கொண்டுருப்பீங்க போலிருக்கே. உங்கள் வயதில் நான் என்ன செய்து கொண்டிருப்பேன் என்று அடிக்கடி நினைத்துக் கொள்கின்றேன்.

    என்ன ரதி குறியோடு நிறுத்தி விட்டீங்க. நம்ம ஹேமா போல ஏதாவது போட்டுத் தாக்குவீங்க என்று நினைத்தேன்.

    வாங்க நிரோஷ். அதென்ன வித்யாசமான பெயர்?

    Sahajamozhi

    கவலைப்படாதீங்க நண்பா. அவங்களுக்கு சேர்க்க வேண்டிய நகைகளின் அளவில் இந்த பணத்தை மைனஸ் செய்து விடுவோம்.

    ReplyDelete
  18. சத்ரியன் இது போன்ற கதைகள் இன்னமும் உண்டு.

    வருக வருக முன்னுசாமி

    R.Elan.

    தொடர் வாசிப்புக்கு நன்றிங்க.

    ரோஸ்விக்

    அப்டி போட்டுத் தாக்கு. பத்தாக்குறைக்கு அடுத்தவர் வேறு வந்துள்ளார். இனிமே உங்க தலைமுடி ரொம்ப குறையப் போகுது.

    ReplyDelete
  19. இது தானுங்க வாழ்க்கை..அனுபவம் பேசுது.

    ReplyDelete
  20. //குழந்தைகளை என் எதிரே திட்ட மாட்டார். திட்டினால் என்ன நடக்கும் என்று அவருக்குத் தெரியும்?//

    என் வீட்டிலும் இதே தான் ஆனாலும் நடக்கும் பிறகு சண்டை வரும் :-)

    //ஒருவர் வண்டியை நிறுத்துவதற்குள் முன்புறம் நின்று கொண்டு டயருக்கு குறுக்கே காலை அகட்டி வைத்துக் கொண்டு நிற்க அடுத்தவர் பின் சீட்டில் ஏற, கடைக்குட்டி என் காலின் வழியே தொற்றிக் கொண்டு மேலே ஏற முயற்சிக்க என் பாடு திண்டாட்டமாகி விடும்.//

    :-))) நீங்கள் கூறுவதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிந்தது

    //நான் வெளியே சந்தித்த பிரச்சனைகளை அதனால் உருவான மன அழுத்தம் குறித்து அவர்களுக்கு புரியாது. //

    அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கவும் முடியாது.

    //என்னை மனைவி பலமுறை குற்றவாளி கூண்டில் நிறுத்துவார். அவளின் தீர்ப்பை வாய்தா கேட்காமல் வாங்கிக் கொண்டு இருக்கின்றேன்.//

    நானும் உங்களைப்போல தான் ஆனால் அவ்வபோது கண்டிப்புடன் நடந்து கொள்வதால் என்னிடம் ஒழுங்காக பேசுவான்

    //பத்து நாட்கள் பிரிந்து வெளியே சென்று வந்தவனை எதிர்பார்ப்போடு காத்திருந்து பார்ப்பது போல தினந்தோறும் இப்படித்தான் நடக்கின்றது. பைக்கை விட்டு இறங்குவதற்குள் அவர் சொல்ல வேண்டிய விசயத்திற்காக ரோட்டிற்கே வந்து என்னை அப்படியே நிறுத்தி பேசத் தொடங்கி விடுகிறார்கள். .//

    ஹா ஹா ஹா ரகளையா இருக்கு நீங்க சொல்வது

    //இதுபோன்ற சமயங்களில் மனைவிக்கு பொறுமை எல்லை மீறி முதுகில் இரண்டு மொத்த ஆலைச்சங்கு போல அலறல் தொடங்கும். //

    :-)) ஜோதிஜி இதற்க்குக் காரணம் அவங்க தான் அதிகம் நேரம் இவர்களை கவனித்துக்கொள்கிறார்கள் அதனால் கூடுதல் கோபம் வருவது இயல்பு தான். நாம் அவர்களுடன் இருக்கும் நேரம் குறைவு என்பதால் நமக்கு இவ்வாறு தோன்றுகிறது. இதை பலவித ஆராய்சிகளுக்கு பிறகு அறிந்தேன் ;-)

    //நாமெல்லாம் அப்படியா உள்ளே கொண்டு போய் வைத்துக் கொண்டு தின்றோம் அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்" என்றேன்//

    ஜோதிஜி அப்போதைய நிலை வேறு தற்போதைய நிலை வேறு.. இனி எல்லாம் "அந்தக்காலத்துல" என்று பேசுவதையே நாம் தவிர்க்க வேண்டும்

    //ஒருவருக்கு காய்ச்சல் வந்தால் ஒரு ரவுண்டு போய் திரும்பி வருவதற்குள் காந்தி தாத்தா காணாமல் போய்விடுகிறார்.//

    :-)) ஒரு நடுத்தர குடும்பத் தலைவரின் மன நிலையை பிரதிபலித்து இருக்கிறீர்கள்

    இப்பத்த பசங்க சக்கை போடு போடுறாங்க ஜோதிஜி.. என் பையனுக்கு மூன்று வயது தான் ஆகிறது.. என்னென்னமோ பேசுறான்.. எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்கு.

    ReplyDelete
  21. இந்த காலத்தில அம்மாக்கள் அப்பாக்களாகவும் அப்பாக்கள் அம்மாக்களாகவும் இருக்கும் ஒரு முரண் பல இடங்களில் இருக்கிறது. எப்படியோ ஒத்தர் கண்டிப்பும் ஒத்தர் அன்க்வாலிபைட் லவ் உம் இருந்தா சரிதான்! :-))

    ReplyDelete
    Replies
    1. அட நேரம் ஒதுக்கி படித்து விட்டீர்கள் போல. நன்றி நன்றி.

      இந்திய வாழ்க்கையில் பாதி குடும்பத்தில் விவகாரத்து ஆகாமல் கணவன் மனைவி பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் இருவரும் சேர்ந்து வாழ்ந்தே ஆக வேண்டும் என்ற நிலையில் வைத்திருப்பவர்கள் இந்த குழந்தைகள் தான். பலகுடும்பங்களில் பார்த்துக் கொண்டு இருக்கும் உண்மை இது.

      Delete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.