"பையன் என்ன பண்றான்?"
"சிங்கப்பூர்ல இருக்கிறான்."
"அப்படியா? சந்தோஷம். நானும் ஒன்னு பெத்து வச்சுருக்கேன், மேலே மேலே படிக்கனும்ன்னு காசை கரியாக்கி எங்களை பாடாய் படுத்திக்கிட்டு திரியுறான்."
"பொண்ணு என்ன படிக்கிறாள்?"
"ஐ.டி. படிக்கிறாள். கேம்பஸ் இன்டர்வ்யூல டாடா கம்பெனி தேர்ந்தெடுத்து இருக்காங்க. அடுத்த வருடம் பெங்களூர் போயிடுவாள்."
"சம்பளம் எவ்வளவு வரும்?"
"முதல் வருடம் மாதம் 20,000 வரும்.,ரெண்டு மூணு வருஷத்ல எப்படியம் டீம் லீடர் ஆயிடுவா?"
"என் பையனிடம் அப்பவே சொன்னோம். கேட்டபாடில்லை. எம்.எஸ்ஸி, எம்.எஃபில் முடித்தான். இப்ப வேலை கிடைக்காமல் தனியார் பள்ளிக்கூடத்துக்கு 5000 ரூபாய் சம்பளத்துக்கு போய்க்கிட்டு இருக்கான்."
இது போன்ற பல உரையாடல்களை நீங்கள் கேட்டு இருக்கலாம். படிக்கும் நீங்களே கூட ஒரு காலத்தில் இது போல பாதிக்கப்பட்டு இருக்கக்கூடும். மொத்தத்தில் படிப்பு என்பது சம்பாரிக்க உதவுவது அல்லது அதிக சம்பாத்யத்தை தரக்கூடியது எந்த படிப்போ அது தான் நல்ல படிப்பு. அதுவே சிறப்பான படிப்பாகத்தான் இந்த சமூகம் கருதுகின்றது. எவர் வீட்டிலாவது "அப்பா நான் படித்து முடித்தவடன் இந்த சுயதொழில் செய்யப் போகின்றேன்" என்றால் உச்சி முகர்ந்து வழியனுப்பி வைப்பார்கள் என்றா கருதுகிறீர்கள்? கேட்டுப் பாருங்க? உதைக்க வந்து விடுவார்கள்.
காரணம் பயம்?
ஒவ்வொரு முறையும் ஊரில் ஏதாவது விசேடத்தில் கலந்து கொள்ளும் பொருட்டு அக்கா தங்கைகளுடன் ஒன்றாக சேர்ந்து பேசும் போது நான் அவர்களிடம் மறக்காமல் ஒன்றைச் சொல்லிவிட்டு வருவேன்.
"இருக்கிற வேலைகளை விட்டு விட்டு ஒரே முறையாவது கோயமுத்தூர், திருப்பூர் பக்கம் வந்து பாருங்க. ஒவ்வொருவரும் வெளியுலகத்தை புரிந்து கொண்டு எப்படி தங்களை தயார் படுத்திக் கொண்டு இருக்காங்க. நீங்களும் கல்லூரி படிப்பு படித்து இருக்கேன் என்று பெயருக்குத் தானே ஒழிய ஒரு மண்ணுக்கும் லாயக்கில்லை " என்று திட்டிவிட்டு வருவேன். காரணம் நானும் அவர்களை போலவே இருந்தேன். வெளியே வந்த போது மூச்சு முட்டியது. தம் கட்டி தள்ளாடி அழுது புரண்டு இன்று என் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு வளர்ந்துள்ளேன்.
எனது பிறந்த மாவட்டத்தை விட கொங்கு மண்டலத்தை பலமடங்கு விரும்புகின்றேன். காரணம் இங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை அதற்கு மேலாக பணத்தை அடிப்படையாக வைத்து சிறுவயது முதலே தங்களை தயார் படுத்திக் கொள்ளும் விதம்.
அதிலும் குறிப்பாக பெண்கள் ஆண்களுக்கு சமமாகவே இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த முக்கால்வாசி முதலாளி குடும்பத்தில் பெண்களின் ஆதிக்கம் தான். கொடி கட்டி பறக்கின்றது. பல குடும்பங்களில் வயதான பெண்மணிகளை பார்த்து வியந்து போயிருக்கின்றேன். படிப்பறிவு சுத்தமாக இருக்காது. ஆனால் மனிதர்களை பார்த்தவுடன், பேசுவதை வைத்தே இனம் கண்டு பிடித்து விடுவார்கள். குறி தப்பாது.
இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டம் போல பெண்கள் அடங்கி ஒடுங்கியிருக்கும் வேலையெல்லாம் இங்கில்லை. புதிய தலைமுறைகள் வளர்ந்து கொண்டிருக்கும் இப்போதுள்ள சூழ்நிலையில் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் தங்கள் குழந்தைகளுக்காக செலவழிக்கும் தொகை சொல்லி மாளாது.
கௌரவம் சார்ந்தா? இல்லை உண்மையிலேயே அவர்களின் எதிர்காலம் குறித்த அக்கறையா? பல முறை குழம்பிப் போயிருக்கின்றேன்.
ஆக மொத்தத்தில் கல்வியென்பது ஒரு முதலீடு. ஷேர் மார்க்கெட் போல இருபது வருடங்களுக்குப் பிறகு டிவிடெண்ட் வரும் என்ற நினைப்பில் வாரி இறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் முக்கால்வாசி மாணவர்களுக்கு படிக்கும் துறை சார்ந்த படிப்பில் சிறப்பான நிலையை எட்டி இருக்கிறார்களோ இல்லையோ சமூகத்தில் நடந்து கொண்டிருக்கும் எந்த செயல்பாடுகளையும் புரிந்து கொள்ளாதவர்களாகத்தான் இருக்கிறார்கள். யார் தலைவர்? யார் ஆட்சியாளர்கள்? நடந்து கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளில் செயல்பாடுகள், அரசாங்கம் உருவாக்கும் கொள்கைகளின் பின்விளைவுகள், சர்வ தேச மாற்றங்கள், அதனால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் உலகப் பொருளாதார வீழ்ச்சிகள் என்று தொடர்ச்சியாக சொல்லிக் கொண்டே போகலாம்.
ஆனால் இது நமக்கு அவஸ்யமில்லை.
நமக்கு அரசியல் தேவையில்லாத விசயம்.
உலகம் மாறப்போவதில்லை.
நாம் அதைப்பற்றி தெரிந்து ஒன்றும் ஆகப் போவதும் இல்லை.
இது போன்ற எண்ணங்கள் ஒவ்வொரு மாணவன் மனதிலும் ஆழமாக வேரூன்றி விடுகின்றது. காரணம் குடும்பமே அப்படிச் சொல்லித்தான் வளர்க்கின்றது.
நன்றாக படி. நல்ல வேலையில் சேர். கல்யாணம் கட்டிக் கொள். குழந்தைகளை பெற்றுக் கொள். சொத்து சேர். கவனமாக இரு.
எவரும் மறந்து போய்க் கூட நிச்சயம் ஒரு நாள் செத்துப் போய்விடுவோம். அக்கிரம வழியில் சென்று அழிவை தேர்ந்தெடுத்து விடாதே என்று சொல்வதில்லை. எதிலும் முந்திக் கொள் என்று சொல்லியே முழி பிதுங்கும் அளவுக்கு ஆசைகளை வளர்த்து விட்டு கடைசியில் அவர்களை அறியாமலேயே பிஞ்சு மனதில் நஞ்சை விதைத்து விட காரணமாக இருந்து விடுகிறார்கள். இது போன்ற சூழ்நிலையில் வளரும் மாணவர்கள் தான் கல்லூரியை விட்டு வெளியே வரும் போது மனதளவில் சவால்களை சந்திக்க முடியாத, மனச்சோர்வு அதிகம் உடையவர்களாகத்தான் ஒரு பொம்மை போல வந்து விடுகிறார்கள். குடும்ப பின்புலம் ஓரளவுக்கு இருந்தால் சற்று சமாளிக்க முடியும். அந்த குடும்ப பொருளாதார சூழ்நிலையும் தள்ளாட்டமாக இருந்தால் பிரச்சனை தான்.
இப்போதுள்ள சூழ்நிலையில் நான் என்ன படித்து இருக்கின்றேன் என்பதற்கும் நான் இந்த சமூகத்தை எப்படி புரிந்து இருக்கின்றேன் என்பதற்கும் நிறைய வித்யாசங்கள் இருக்கிறது, நீங்கள் பட்டதாரியாக, முதுநிலை பட்டதாரியாக, கணினி துறை விற்பனராக என்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இதற்கு மேலாக இந்திரா நூயி போல எம்.பி.ஏ படித்து சிறப்பான தங்கப் பதக்கம் கூட வாங்கியிருக்கலாம். நீங்கள் படித்த படிப்பு என்பது வெறும் சான்றிதழ் மட்டுமே. அதுவொரு தகுதி மட்டுமே? அதை மட்டுமே வைத்துக் கொண்டு எந்த நிறுவனத்திலும் உங்களுக்கென்று ஒரு நிலையான இடம் கிடைத்து விடாது. பல படிகள் தாண்ட வேண்டும். ஒவ்வொரு படியும் தடைக்கல்லா இல்லை படிக்கல்லா என்பது உங்களுக்கே உங்கள் அன்றாட அனுபவங்கள் பல பாடங்கள் மூலம் புரியவைக்கும்.
உண்ர்ந்தால் உத்தமம். உணராவிட்டால்?
வேறொன்றுமில்லை. அந்த பட்டங்கள் உங்கள் கல்யாண பத்திரிக்கைக்கு உதவக்கூடும். அவ்வளவு தான்.
நீங்கள் எந்த இடத்தில் எப்படி பிரதிபலிக்கின்றீர்கள் என்பதை வைத்தே இந்த வியாபார சமூகம் உங்களுக்குண்டான மரியாதையை அளிக்கின்றது. ஒருவர் பெற்ற பட்டத்தினால் மட்டும் இந்த சமூகம் தனியாக மரியாதை அளிப்பதில்லை. இந்தியாவைப் பொறுத்தவரையிலும் எவரும் தாங்கள் படித்து முடித்தவுடன் சுய தொழில் மூலம் நம் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்போடு கல்லூரியை விட்டு வந்தவர்கள், வந்து கொண்டிருப்பவர்கள் நூற்றுக்கு ஐந்து சதவிகிதம் பேர்கள் கூட இருப்பார்களா என்பது சந்தேகமே?
முதல் காரணம் நம் இந்திய ஜனநாயக கோளாறுகள்.
உங்களுக்கு என்ன தனித் திறமை இருக்கிறது என்பதை கண்டு கொள்ள மேலைநாடுகள் போல எவரும் இங்கில்லை.
அதை ஊக்குவிக்கவும் எவருமில்லை. ஒன்று நீங்கள் அரசியல்வாதிகளுக்கு பிள்ளையாக பிறக்க வேண்டும். அல்லது அதிகாரத்தில் இருக்கும் ஒருவருக்கு வாரிசாக இருக்க வேண்டும். மற்றபடி சராசரி குடும்பத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் தன் கையே தனக்குதவி என்ற கொள்கையைக் கொண்டு தான் வாழ வேண்டும். சாதிக்க வேண்டும்..
முடிந்தவரைக்கும் போராடத்தான் வேண்டும். எவரையும் நீங்கள் குற்றம் சாட்ட முடியாது. நீங்கள் ஒருவரை கைநீட்டி பேசி முடிப்பதற்குள் உங்களை கடந்து பல ஆயிரம் பேர்கள் முன்னேறியிருக்கக்கூடும். நீங்கள் மேலும் காத்திருந்தால் கால வெள்ளத்தில் அடித்த சருகு போல பின்னால் வந்து விடக்கூடும். மூச்சு வாங்குகின்றதே என்று ஒதுங்கி நிற்கக்கூட இடம் கிடைக்காது. ஒரு வேளை நீங்கள் தட்டுத் தடுமாறி மேலேறி வந்தாலும் உங்களை கவிழ்க்கவென்றே கண்களுக்குத் தெரிந்த தெரியாத ஆயிரெத்தெட்டு பிசாசுகள் உங்களைச் சுற்றி இருக்கக்கூடும். நீங்கள் அத்தனையும் சமாளித்து உங்களை நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு மேலாக அரசியல்வாதிகள். அதிகார துஷ்பிரயோகம், லஞ்சம், ஊழல் என்று உங்களை இடை விடாமல் தாக்கிக் கொண்டேயிருக்கும். சேரும் அலுவலகத்தில் உழைப்பு முக்கியமா? காக்கா பிடிப்பது அவஸ்யமா? என்பது போன்ற பல புதிய பாடங்கள் கிடைக்கும். இது அத்தனையும் கடந்து மேலேறி வரவேண்டும். இடைஞ்சல்களுக்கிடையே இனிமையை கண்டு கொள்ள வேண்டும்.
வீட்டில் ஒருவருக்கு நன்றாக பாடத் தெரியும் அல்லது ஏதோவொரு இசைக்கருவியை நன்றாக வாசிக்கத் தெரியும் என்கிற சூழ்நிலையில் யாராவது அவரை ஆகா ஓகோவொன்று பாராட்டுவார்கள் என்றா நினைக்கிறீர்கள்?
எல்லாம் சரிப்பா? பொழைக்கிற வழியைப் பாரு. என்று சொல்லிவிட்டு அந்த ஆர்வத்தில் ஒரு புல்டோசர் மண் எடுத்து போட்டு விட்டு நகர்ந்து விடுவார்கள். ஒரே காரணம் இப்போதுள்ள சமூகத்தில் பணம் சம்பாரிக்க வேண்டும். நிறைய பணம் வேண்டும். அதற்குண்டான வழிகளில் சென்று கொண்டு இருக்க வேண்டும். படிக்கும் படிப்பு மூலம் ஒரு பதவியை அடைய வேண்டும். அந்த பதவி பக்கவாட்டு வருமானத்தை கொடுக்கும் என்றால் இன்னமும் சந்தோஷப்படும் சமூகத்தில் தான் நாம் அணைவரும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.
எது தவறு? எது சரி? என்பது குறித்து எவருக்கும் அக்கறையில்லை.
நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதுவும் மற்றவர்கள் பார்வையில் ஆச்சரியம் தரக்கூடியதாக இருக்க வேண்டும். இது தான் இங்கே இப்போது முக்கியம்.
//இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டம் போல பெண்கள் அடங்கி ஒடுங்கியிருக்கும் வேலையெல்லாம் இங்கில்லை. //
ReplyDelete:)
நல்ல பதிவுதான். கொஞ்சம் முன்னுக்குப் பின் முரணாக இருப்பது போல் தோன்றுகிறது. என் பார்வைக் கோளாறா? அரவிந்துக்குப் போகட்டுமா?
ReplyDelete//அந்த பட்டங்கள் உங்கள் கல்யாண பத்திரிக்கைக்கு உதவக்கூடும். அவ்வளவு தான்.//
ReplyDelete:))) அதென்னய்யா இப்பொழுதெல்லாம் ஒரு முதுகலை பட்டப்படிப்பு மாதிரி ஏதாவது ஒன்னு மேல கோடு போட்டு பத்திரிக்கையில பார்க்கிறேனே அப்படின்னா என்னவாம் ;) ...
வீட்டில் ஒருவருக்கு நன்றாக பாடத் தெரியும் அல்லது ஏதோவொரு இசைக்கருவியை நன்றாக வாசிக்கத் தெரியும் என்கிற சூழ்நிலையில் யாராவது அவரை ஆகா ஓகோவொன்று பாராட்டுவார்கள் என்றா நினைக்கிறீர்கள்? //
ReplyDeleteஅது போன்ற ஓர் ஆரோக்கியமான சூழ்நிலை நிலவ பணப்பேய் பீடித்திருப்பதி நம்மிடமிருந்து இறங்க வேண்டும். அதற்கு எப்படியும் இன்னொரு நூற்றாண்டுகள் எடுத்துக் கொள்ளும். குழந்தைகளுக்கு இயல்பாக வருவதனை ஆங்கீகரித்து அந்த தனித் திறமையை முற்றும் முழுதுமாக சமூகத்திற்கு வழங்க.
ஆனால், இப்பொழுது இருக்கும் இந்த ...நிறைய பணம் வேண்டும். அதற்குண்டான வழிகளில் சென்று கொண்டு இருக்க வேண்டும். படிக்கும் படிப்பு மூலம் ஒரு பதவியை அடைய வேண்டும். அந்த பதவி பக்கவாட்டு வருமானத்தை கொடுக்கும் என்றால் இன்னமும் சந்தோஷப்படும் சமூகத்தில் தான் நாம் அணைவரும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். சந்திப்பில் சாத்தியமே இல்லை.
//எவரும் மறந்து போய்க் கூட நிச்சயம் ஒரு நாள் செத்துப் போய்விடுவோம். அக்கிரம வழியில் சென்று அழிவை தேர்ந்தெடுத்து விடாதே என்று சொல்வதில்லை. எதிலும் முந்திக் கொள் என்று சொல்லியே முழி பிதுங்கும் அளவுக்கு ஆசைகளை வளர்த்து விட்டு கடைசியில் அவர்களை அறியாமலேயே பிஞ்சு மனதில் நஞ்சை விதைத்து ...//
ReplyDeleteதெரிக்கும் கருத்துக்கள்.
நல்ல பகிர்வு அண்ணா.
ReplyDeleteஅருமையான கட்டுரை.
நண்பர்கள் தின வாழ்த்துக்கள் அண்ணா.
//
ReplyDeleteஅதென்னய்யா இப்பொழுதெல்லாம் ஒரு முதுகலை பட்டப்படிப்பு மாதிரி ஏதாவது ஒன்னு மேல கோடு போட்டு பத்திரிக்கையில பார்க்கிறேனே அப்படின்னா என்னவாம் ;) ...
//
படிப்ப இன்னும் முடிக்கலையாம். அரியர்ஸ் க்ளியர் பண்ண முடியலைங்கறத சொல்லாம சொல்றாங்களோ என்னவோ?
இந்தியன் பல கிராமங்களில் நடக்கும் திருமண பத்திரிக்கைகளில் தைரியமாக எம்.ஏ என்று கோடு போடாமலேயே போட்டுக் கொள்ளத் தொடங்கி விட்டார்கள். ஆனால் அவர்கள் பத்தாவது கூட முடிக்காதவர்கள். என் உறவினர் வீட்டில் இது குறித்து கேட்ட போது எவனுக்குத் தெரியப் போகுது என்று சிரித்துக் கொண்டே சொன்னதைப் பார்த்து நொந்து போயிட்டேன்.
ReplyDeleteமுண்டாசு, இந்த பதிவின் முதல் புகைப்படத்தில இருக்கிற பொண்ணு என்னய்ய பூனை கண்ணை அது எடுத்து வைச்சிக்கிட்ட மாதிரி பார்க்கிது... terrific நான் பதிவ படிக்கிறதா இல்ல பொண்ண பார்க்கிறதா :P
ReplyDeleteஎன் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
ReplyDeleteவருடம் முழுக்க உங்களுக்கு என் நண்பர்கள் தின வாழ்த்துகள். அதென்ன ஓர வஞ்சனை. இன்று மட்டும்.
ReplyDeleteபயனுள்ள பதிவு.யதார்த்தத்தை விளக்கியுள்ளீர்கள்.பாராட்டுக்கள்.
ReplyDeleteஜோதிஜி நம்ம மக்கள் ஏன் வேலையை முக்கியமாக கருதுகிறார்கள் என்றால் ..பெரும்பாலானவர்களின் பொருளாதாரம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அதனால் அதை சமாளிக்கவே அவர்கள் தங்கள் சிந்தனைகளை அதன் போக்கில் யோசிக்கிறார்கள்.
ReplyDeleteதற்போதைய தலைமுறை (இது பற்றி விரிவாக எழுதுகிறேன்) கடனை சரி செய்வதிலேயே தங்கள் வாழ்க்கையை தொலைத்து விட்டார்கள். எனவே அடுத்து வரும் தலைமுறைகள் அதிக பொறுப்புகள் கடமைகள இல்லாததால் வழக்கமான வேலை என்கிற அளவில் சிந்திக்காமல் சுய வேலை, தொழில், புதிய துறையில் ஈடுபாடு என்று தங்கள் கவனத்தை திருப்புவார்கள்.
நாங்களும் வெளி நாட்டில் நிறைய பிராக்டிக்கல்ஸ் எல்லாம் இருக்கு என்று நினைச்சுத் தான் குப்பை கொட்ட வந்தேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள், பெரும்பான்மையான இடங்களிலும் கல்வி என்பது மெமரி பேஸ்ட் எக்சாம் தான். பாடமாக்கியே என்ஞினியரிங்க் படிப்பைக் கூட முடிக்கலாம். அறிவுக்கு படிக்கறது எங்கள் தலைமுறையில் ரொம்பவே கொறைவு. நிறைய டவுட்டு கேட்டால், அன்டர்க்ராஜுவேட்டுக்கு இந்த அறிவு போதும்னு சிலர் குட்டி உட்கார வைப்பார்கள். சிலர் ஆர்வமாக புத்தகங்கள் ஜேர்னலுகள் எடுத்து கொடுப்பார்கள்.
ReplyDeleteஉள் ஊரில் எப்படி பார்பபர்களோ தெரியவில்லை. இங்கே ப்ரொபசர்களுக்கு எல்லாம் தனி அறைகள். அவர்களும் ப்ரீ நாங்களும் ப்ரீ என்றால் போய் அரட்டை அடிப்பது போல எதைப்பத்தியும் விவாதிக்கலாம். அது அரசியலாக இருந்தாலும் சரி, பாட சம்மதம்மானதாக இருந்தாலும் சரி. அதைப் பற்றி குறிப்பிட்ட போது ப்ரொபஷர் ரூமுக்கெல்லாம் போவிங்களான்னு ஒரு மாதிரி சிலர் கேட்டார்கள். எ.கொ.சார். இங்கே சாதாரணமாகவே ஜிம்மில் பார்க்கும் போது சேர்ந்து ஓடுவார்கள். அல்லது ஏதாவது விளையாடும் போது சேர்ந்து விளையாடுவார்கள். ஆண் பெண் என்று பார்க்கும் பார்வை ரொம்பவே கொறைவு. கஃபிடேரியாவில் ஒன்றாக இருந்து சாப்பிடுவார்கள். அந்த நேரத்தில் கூட பாட சம்மந்தமானதைப் பற்றி விவாதிக்கலாம். அரசியலும் பேசலாம். வெள்ளைக்காரர்களைப் ஆ என்று பார்த்து வணங்கும் ஆள் நான் இல்லை. சில விடயங்கள் எங்கள் ஊரிலும் இதே போலவே இருக்கலாமே என்று ஒரு பேராசை மனதின் ஓரத்தில் எப்போதுமே இருக்கிறது.
எந்த நாட்டிலும் ஆஹா என்று நான் நினைப்பது போல கல்வி இல்லை. முற்று முழுதாகவே நானாகவே ஒரு கல்விக்கூடம் அமைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. பார்க்கலாம், காலம் ஆசிர்வதிச்சால் ஒரு நாள் நடக்கும். எந்த கரிக்குலத்தையும் சேராத ஒன்றை அமைக்க வேண்டும். புதிதாக ஒன்றை அமைப்பது இலகுவல்ல. அதுவும் காலம் காலமாக இருக்கும் கல்வி முறையை (கிட்டத்தட்ட உலகம் முழுதுமே ஒரே மாதிரித் தான்) மாற்றுவது குதிரைக்கொம்பு தான். ஆனால் பார்க்கலாம்.
எனது பிறந்த மாவட்டத்தை விட கொங்கு மண்டலத்தை பலமடங்கு விரும்புகின்றேன். காரணம் இங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை அதற்கு மேலாக பணத்தை அடிப்படையாக வைத்து சிறுவயது முதலே தங்களை தயார் படுத்திக் கொள்ளும் விதம். //இல்லைங்க எனக்குத் தெரிஞ்சு திருப்பூர் உருவாகறதுக்கு முன்னாடி எளிய வேளாண் சமூகமாகத் தான் இருந்தது திருப்பூர் "மாப்பிள்ளைகள்" ஆடம்பர கார்களில் ஊருக்குள் வந்ததைப் பார்த்து தான் பலரும் களத்துக்கு வந்தார்கள் கோவையின் கதை வேறு ஆனால் ஒரு விடயத்தில் உடன்படுகிறேன் எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஒரு அழுத்தம் இருந்துகொண்டே இருக்கிறது தண்ணி இருந்தா விவசாயம் தண்ணி இல்லைனா தறி,கோழிப் பண்ணை, பனியன் கம்பெனி என்று உந்துதல். தண்ணி இருக்கிற பகுதிகளை விட தண்ணி இல்லாத பகுதிகள் நல்ல அப்டேட்டடு ஆகா இருக்கிறார்கள் எ.கா பல்லடம், சோமனூர், கருமத்தம்பட்டி அவினாசி பகுதிகள் இங்கெல்லாம் தொழில் சிந்தனை அதனூடாக பல முயற்சிகள் வங்கி, பயண அனுபவங்கள் என்று பறந்து விரிகிறது ஆனால் வேளாண்மை செய்துகொண்டிருக்கிற எங்கள் பகுதிகள் விளைவிச்ச காய்கறிகளை மார்க்கட்டில் விற்றுவிட்டு ஊருக்கு வந்து விடுவதோடு எந்த அப்டேட்டும் இல்லாமல் தான் இருந்தார்கள் இப்ப கொஞ்சம் பரவாயில்லை.. நன்றி..!!
ReplyDeleteநான் சொல்ல நினைத்ததை கிரி சொல்லிவிட்டார்
ReplyDelete