"நானெல்லாம் அந்தக் காலத்துல எப்படி படித்தேன் தெரியுமா?"
" தாத்தா அந்த காலத்துல பேசுன இங்கிலீஸ் பார்த்து வெள்ளைக்காரனே மிரண்டு போயிடுவானாம்(?)"
" அரசாங்க உத்யோகத்துக்கு என்னை வீட்டுல வந்து கெஞ்சுனாங்க. எங்க வீட்டுல தான் வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க? "
இது போன்ற வசனங்களை நிச்சயம் உங்கள் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் பேசக்கேட்டு கடந்து வந்துருப்பீங்க. ஆனால் இவர்கள் சொல்வதில் எத்தனை சதவிகிதம் உண்மை என்பதோ அதன் எதார்த்த அளவீடுகளை நம்மால் கண்டுபிடிக்க முடியாது. ஒரு வேளை நம் அப்பா தாத்தா சொன்னபடி அவர்கள் உருப்படியாக படித்து நல்ல பதவி மற்றும் பொருளோடு வாழ்ந்திருந்தால் நிச்சயம் நாம் பொருளாதார ரீதியாக இப்போது இருப்பதை விட இன்னமும் கூட கொஞ்சம் வளமாய் வாழ்ந்திருக்க முடியும்.
என்ன செய்வது? அவர்கள் பேசுவதை மட்டும் கேட்கும் சூழ்நிலையில் மட்டும் தானே வாழ்ந்திருப்போம்.
நான் ஒரு விசயத்தில் மட்டும் தொடக்கம் முதல் உறுதியாய் உள்ளேன். குழந்தைகளிடம் எக்காரணம் கொண்டு என் (எங்கள்) பழைய பஞ்சாங்கத்தினை அவர்களிடம் சொல்வதில்லை. குறிப்பாக என்னைப் பற்றி பெருமையாய் எந்த இடத்திலும் சொல்லிக் கொண்டதும் இல்லை. நான் கடந்து வந்த பாதையில் நான் பெற்ற இழப்புகளை, என் பலவீனங்களைப் பற்றி அவர்களுக்கு புரியும் அளவிற்கு சொல்லிவிடுகின்றேன். கல்வி ரீதியாக நான் இன்னமும் பெற்று இருக்க வேண்டிய தரத்தினை நான் ஏன் அடையவில்லை? அதன் காரணம் என்ன? போன்ற பின்புலங்களை சொல்கின்றேன்.
தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பற்றி, அதற்குப் பின்னால் உள்ள ஏமாற்றுத் தனங்களை சொல்லிக் கொடுக்கின்றேன்.
நமக்கு இருக்கும் ஆசைகளும், நமக்கு உருவாகும் ஆசைகளுக்கும் உண்டான வித்யாசங்களை புரிய வைக்கின்றேன். நமக்கு என்ன வருமானம்? நாம் எந்த அளவுக்கு ஒரு பொருள் மேல் ஆசை வைக்க முடியும்? அப்படி இல்லாமல் அதிகப்படியான ஆசை வைத்து பொருட்களை வாங்கும் எங்கெங்கு கடன் வாங்க வேண்டும்? அதன் விளைவுகள் எப்படியிருக்கும் போன்ற விசயங்களை சொல்லிக் கொடுக்கின்றேன். இதையெல்லாம் விட சிக்கனமாக இருந்தால், சேமிக்கும் பழக்கம் நம் வாழ்வில் என்ன மாறுதல்கள் உருவாக்கும் என்று நடைமுறை வாழ்க்கையை அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதோடு நாங்கள் இருவரும் குழந்தைகளுக்கு முன் உதாரணமாக இருக்க முயற்சிக்கின்றோம்.
இதனை இன்றுவரைக்கும் கடைபிடித்துக் கொண்டு இருக்கின்றோம். சிலசமயம் குழந்தைகள் படிப்பு விசயத்தில் இதை வைத்துக் கொண்டே என்னை தாக்கத் தொடங்குவார்கள். சிரித்துக் கொண்டே என்னை நோக்கி வரும் தொடர்ச்சியாக வீசப்படும் மூன்று பந்துகளை சமாளித்துக் கொண்டிருக்கின்றேன். ஆனால் என்னைச் சார்ந்த உறவுகள், அவர்கள் வாழ்க்கை முறை, அழைக்க வேண்டிய விதம், அவர்களின் பின்புலம் என்று சமயம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லிவிடுவதுண்டு. காரணம் உண்டு?
சென்ற கல்வியாண்டு இறுதியில் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் ஒரு சுற்றறிக்கையை கொடுத்து அனுப்பியிருந்தார்கள். அடுத்த ஆண்டு முதல் சிபிஎஸ்சி கல்வித் திட்டம் தொடங்குகின்றது. உங்கள் குழந்தைகளை அதில் சேர்ப்பீர்களா? என்று கேள்வியாய் கேட்டு இருந்தார்கள். வீட்டுக்கு வந்ததும் குழந்தைகள் ஆர்வமாய் என்னிடம் கொண்டு வந்து கொடுத்த போது ஒரு நொடி கூட யோசிக்காமல் நோ என்ற காலத்தில் டிக் செய்தேன். வீட்டுக்காரம்மாவுக்குக்கூட சற்று வருத்தம்.
ஏன் அந்த பாடத்திட்டத்தில் சேர்த்தால் பின்னால் நல்லது தானே? என்றார்.
" இந்த கேள்வியை அப்படியே மனதில் வைத்துக் கொள். இந்த வருடம் நம் குழந்தைகள் முதல் பரிட்சை எழுதும் போது உனக்கு நாக்கு தள்ளப் போகின்றது? அப்போது நீயே புரிந்து கொள்வாய் " என்றேன்.
காரணம் தொடக்கம் முதல் குழந்தைகளின் பாடத்தில் பெரும்பாலும் நான் தலையிடுவதில்லை. வீட்டுக்காரம்மா பொறுப்பு என்று நான் ஒதுங்கி விடுவதுண்டு. இது கடந்த மூன்று வருடங்களாகவே இப்படித்தான் நடந்து கொண்டு இருக்கிறது. காரணம் குழந்தைகளை எந்திரம் போலவே படிக்க வைத்து ஒப்பிக்க வைத்து அதை திருத்தி ................. இது எனக்கு ஒரு எரிச்சலான சமாச்சாரம்.
என்ன செய்வது நம்முடைய கல்வித்திட்டம் இப்படித்தானே இருக்கிறது?
ஆனால் எனக்குத் தெரியும்.
மூன்றாம் வகுப்புக்கு செல்லும் குழந்தைகளின் கல்வியில் நாமும் இனி தலையிட வேண்டியிருக்கும் என்று மனதில் யூகித்து வைத்தபடியே இப்போது இரவு நேரங்களில் குறிப்பிட்ட நேரம் செலவழிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக அவர்கள் படிக்கும் பாடத்தில் உள்ள ஹிந்தி மொழிக்கு நான் மட்டும் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இது போன்ற பாடங்களுக்கு உருப்படியான ஆசிரியர்கள் தேவை. ஆனால் முக்கால்வாசி பள்ளிக்கூடங்களில் இதை ஒரு கௌரவமாக மற்றவர்களுக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்குத் தான் வைத்துள்ளார்கள். என் குழந்தைகளின் ஆசிரியையிடம் இதைப் பற்றி சொன்ன போதிலும் கண்டு கொள்வதே இல்லை. எனக்கு எழுதப்படிக்கத் தெரியும் என்ற நோக்கத்தில் எங்கள் வீட்டில் அந்த பிரச்சனையை ஓரளவுக்கு சமாளிக்க முடிகின்றது.
ஹிந்தி மொழியின் அடிப்படை தெரியாத பெற்றோர்களுக்கு?
50 குழந்தைகள் ஒரு வகுப்பறையில் இருக்கிறார்கள். இதைப் போலவே ஒவ்வொரு வகுப்புக்கும் செக்சன் வாரியாக ஜி என்பது வரைக்கும் வரிசையாக பிரித்துள்ளார்கள். போட்டிகள் அதிகமாகவே இருக்கும். ஒரு ஆசிரியை சர்வ நிச்சயமாக 50 குழந்தைகளின் மேலும் தனித்தனியாக கவனம் செலுத்த முடியாது. ஒவ்வொரு ஆசிரியர்களும் எந்திரம் போலவே செயல்பட வேண்டியள்ளது. அவர்களைப் பொறுத்தவரையிலும் சிலபஸ் முடிக்க வேண்டும். இதைப்போலவே ஒவ்வொரு மாணவர்களும் எந்திரம் போலவே மாறி தேர்வு சமயங்களில் துப்பி விட்டு வரவேண்டியுள்ளது.
தமிழ்நாட்டில் பெரும்பாலும் ஒவ்வொருவர் வீட்டிலும் பேசும் மொழி தமிழ்மொழி. ஆனால் குழந்தைகள் படிப்பதோ ஆங்கில வழிக்கல்வி. இப்போதுள்ள மெட்ரிகுலேஷன் சிலபஸில் உள்ள பாடங்களை படித்து குழந்தைகளை புரிய வைப்பதற்குள் முழி பிதுங்கி விடுகின்றது. நாம் படித்து வந்த லட்சணம் அப்போது தான் நமக்கே புரிகின்றது. இன்னும் அடுத்தடுத்த வகுப்புகள் செல்லும் போது எப்படி இருக்கும்? இதுவே கிராமப்புறம் சார்ந்த மாணவர்களின் பெற்றோர்கள் ஆசைப்பட்டு அங்குள்ள ஆங்கிலவழி கல்வி கூடங்களில் சேர்க்கின்றார்களே? அந்த மாணவர்களுக்கு பெற்றோர்கள் தங்கள் பங்களிப்பை எப்படி செலுத்த முடியும்?
பள்ளிக்கூடங்களைப் பொறுத்தவரையிலும் பாடத்தை விட கேட்கும் கேள்விகளுக்கு பரிட்சையில் நன்றாக பதில் எழுதினால் முதல் ரேங்க். அந்த பாடத்தில் உள்ள விசயங்கள் புரிந்ததா? இல்லையா? அதன் மூலம் என்ன உணர்ந்து கொண்டார்கள்? போன்றவைகள் எல்லாம் அத்யாவ்ஸ்யம். ஆனால் இந்த இடம் தான் எனக்கு முக்கியமாக படுகின்றது. நான் இப்போது செய்து கொண்டிருக்கும் வேலை இரண்டு நாளைக்கு ஒரு முறை வகுப்பாசிரியர் நடத்தும் பாடங்களை குழந்தைகளை விட்டே சப்தமாக படிக்க வைத்து அதன் தமிழ் அர்த்தங்களை, அந்த பாடம் சொல்லும் கருத்துக்களை புரியவைக்கின்றேன். இதனால் என்ன லாபம்?
நாம் பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது, ஒரு பத்தி ஒன்றை கேட்டு இடையே வெறும் கோடு மட்டும் போட்டு இடைபட்ட வார்த்தைகளை, வாக்கியங்களை நிரப்பச் சொல்வார்கள். நாம் தமிழ்வழிக்கல்வி மூலம் படித்து வந்த போது நமக்கு இருந்த ஒரு ஆங்கில பாடத்தில் மட்டும் தான் இப்படி வரும். மற்றபடி தமிழ்பாடங்களில் இது போன்ற கோடிட்ட இடங்களில் பட்டையை கிளப்பி நன்றாகவே எழுதிவிட்டு வந்திருப்போம். ஆனால் ஆங்கில பாடங்களில் நிச்சயம் ஒத்தையா ரெட்டையா என்று யோசித்து ஏதோவொன்றை நிரப்பிவிட்டு வந்துருப்போம். காரணம் அதன் தமிழ் அர்த்தம் நமக்குத் தெரியாது. நான் கண்களை மூடிக்கொண்டு சாமியை நினைத்துக் கொண்டு கீழே கொடுக்கப்பட்ட வார்த்தைகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து அதில் நிரப்பி வந்து இருக்கின்றேன். ஆனால் எந்த சாமியும் உதவவில்லை. எல்லாமே தப்பு தான். விடைத்தாள் வரும் போது அந்த பகுதியில் முட்டை தான் வாங்கியுள்ளேன்.
ஆனால் என் குழந்தைகள் இது போன்ற விசயங்களில் அட்டகாசமாக எழுதிவிட்டு வந்து விடுகிறார்கள். காரணம் முழுமையாக அர்த்தம் புரிந்த மகிமை இது. இதை விட மற்றொரு ஆச்சரியம். குழந்தைகளுடன் படிக்கும் மற்ற குழந்தைகளின் அம்மாக்கள் மூத்தவளிடம் தொலைபேசி வாயிலாக சந்தேகம் கேட்டு அவர்கள் குழந்தைகளுக்கு பாடம் நடத்துகிறார்கள்
இதை என்னவென்று சொல்வது?
இதில் நான் பெருமைப்பட்டுக் கொள்ள ஒன்றுமில்லை. குழந்தைகளுக்கு உதவும் சூழ்நிலையில் பெற்றோர்கள் இருக்க வேண்டும். அல்லது அந்த அறிவை வளர்த்துக் கொள்ளவாவது வேண்டும். ஆனால் எத்தனை வீட்டில் பெற்றோர்கள் இதில் கவனம் செலுத்துகிறார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி. தொலைக்காட்சி என்பது இன்று ஏறக்குறைய அனைவர் வீட்டிலும் இருக்கிறது. உங்களுக்குத் தெரிந்த ஒரு நூறு குடும்பத்தில் உள்ள பெற்றோர்களிடம் கேட்டுப் பாருங்கள். எத்தனை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை டிஸ்கவரி, நேஷனல் ஜியோகிரபிக், அனிமல் போன்ற சேனல்களை பார்க்க முன்னோடியாக உதவுகிறார்கள் என்று?
நிச்சயம் இருக்காது. குறிப்பிட்ட நாலைந்து சேனல்கள் மட்டும் தான் நான் பார்த்த வரைக்கும் பெரும்பாலான குடும்பத்தில் ஓடிக் கொண்டு இருக்கிறது. இதுக்கு மேலே இப்போது பிசாசு போல் ஆட்டிப் படைக்கும் சுட்டி டிவி மற்றும் இது போன்ற சேனல்களுக்கு குழந்தைகள் அடிமையாகவே மாறியுள்ளார்கள். இது தவறல்ல என்றாலும் இதன் அளவீடுகளை பெற்றோர்கள் தான் குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும்.
மூன்று ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு இப்போது இந்த வருடம் தான் குழந்தைகள் குறிப்பிட்ட நிகழ்ச்சி டிஸ்கவரி சேனலில் வரும் என்று சொல்லி காத்திருந்து பார்க்கும் சூழ்நிலையை உருவாக்க முடிந்தது. இது தவிர இடையிடையே ஆங்கில சேனல்களை சிறிது சிறிதாக அறிமுகம் செய்து கொண்டு இருக்கின்றோம்.
நம் குழந்தைகள் ஆங்கிலம் பேச வேண்டும் என்பதில் மட்டும் ஒவ்வொருக்கும் கொள்ளை ஆசை. இதுவே பல பெரிய மனிதர்களை பணம் இருந்தால் போதும் என்ற நோக்கத்தில் தனியார் பள்ளி மூலம் கொள்ளை அடிக்க வைத்துக் கொண்டு இருக்கிறது. இதுக்கு மேலே கல்வி என்பது பெற்றோர்களுக்கு ஒரு கௌரவம் சார்ந்த விசயமாக மாறி உள்ள காரணத்தினால் இந்த பள்ளிக்கூடத்தில் என் மகள் மகன் படிக்கின்றான் என்று மற்றவர்களிடம் பெருமையாய் பேச உதவுகின்றது.
சமகாலத்தில் குழந்தைகளின் உடைகள் மேல், அதுவே பெண் குழந்தைகள் என்றால் அவர்களுக்கு மேக்கப் செய்து அனுப்பவதில் அதிக கவனம் செலுத்தும் தாய்மார்கள் தங்களை நிறைய மாற்றிக் கொள்ள வேண்டும். இதுக்கு மேலாக அப்பாக்கள் கொஞ்ச நேரமாவது குழந்தைகளுடன் உரையாட வேண்டும். எதார்த்த வாழ்க்கையை அவர்களுக்கு புரியவைக்க வேண்டும். அடிப்படையில் அந்த குழந்தைகளின் பாடங்களின், 200 மடங்கு கவனம் செலுத்த வேண்டும். காரணம் குழந்தைகளின் எதிர்காலம் என்பது உலகளாவிய போட்டிச் சூழலில் நுழைந்து அவர்களுக்கு உண்டான இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலைக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். இதில் பள்ளிக்கூடம், ஆசிரியர், மற்றும் குழந்தைகள் மேல் மட்டும் குறையைக் கண்டு கொண்டு கும்மியடிப்பதை விட்டு விட்டு உண்மையான புரிந்துணர்வை அக்கறையை நாம் தான் தொடங்கி வைக்க வேண்டும். அல்லது அந்த குழந்தைகள் மேல் திணிக்கும் அழுத்தத்தையாவது நாம் குறைத்துக் கொள்ள வேண்டும். காரணம் இன்று ஆங்கில வழிக்கல்வி மூலம் படிக்க வைக்கும் பெற்றோர்கள் அணைவருக்கும் மனதிற்குள் இருக்கும் அத்தனை ஆசைகளுக்கும் பலிகிடா போலவே இந்த குழந்தைகளை பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்?
ஒரு பயிர் வளர்வதற்கே எத்தனை விதமான அக்கறையை நாம் செலுத்த வேண்டியுள்ளது. நம் குழந்தைகளின் உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியத்திற்கு பெற்றோர்கள் தான் முழுமையான உரமாக இருக்க வேண்டும்.
நல்ல கட்டுரை
ReplyDelete3 வயது கூட ஆகாத என் மகளை நினைத்து கொண்டிருக்கிறேன் ...
ஒவ்வொரு ஆசிரியர்களும் எந்திரம் போலவே செயல்பட வேண்டியள்ளது//
ReplyDelete100% உண்மை.
Please correct the title. kalavi illai; kalvi. - Ansar
ReplyDeleteநல்ல பதிவு,
ReplyDeleteஅருமையான அறிவுரைகள்.
இதில் நான் பெருமைப்பட்டுக் கொள்ள ஒன்றுமில்லை. குழந்தைகளுக்கு உதவும் சூழ்நிலையில் பெற்றோர்கள் இருக்க வேண்டும். அல்லது அந்த அறிவை வளர்த்துக் கொள்ளவாவது வேண்டும். ஆனால் எத்தனை வீட்டில் பெற்றோர்கள் இதில் கவனம் செலுத்துகிறார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி. தொலைக்காட்சி என்பது இன்று ஏறக்குறைய அனைவர் வீட்டிலும் இருக்கிறது. உங்களுக்குத் தெரிந்த ஒரு நூறு குடும்பத்தில் உள்ள பெற்றோர்களிடம் கேட்டுப் பாருங்கள். எத்தனை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை டிஸ்கவரி, நேஷனல் ஜியோகிரபிக், அனிமல் போன்ற சேனல்களை பார்க்க முன்னோடியாக உதவுகிறார்கள் என்று?
ReplyDelete.....சரியான கேள்வி...... சிந்திக்க பல விஷயங்களை தந்து இருக்கீங்க.... Society's outlook should change.
பெற்றோர்களுக்கு தான் முதல் கவுன்சிலிங் கொடுக்கணும் அன்பின். இப்பவும் பெரும்பாலான குடும்பங்களில் பெற்றோர்கள் எத்துனை கஷ்டபட்டு குழந்தைகளுக்கு தேவையானவற்றை பெற்றுதருகிறார்கள். அதற்கு பின்னால் உள்ள உழைப்பையும் முயற்சியையும் சொல்வதே கிடையாது அன்பின் ஜோதிஜி.
ReplyDeleteஇன்றைக்கும் குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கும் பெற்றோர்கள் மிகவும் குறைவே...
குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்க பெற்றோர்களுக்கு நேரம் இருக்கிறதா?
ReplyDeleteஜோதிஜி
ReplyDeleteஒரு குழந்தை எப்படிப்பட்ட மனிதனாக வளர்கிறான் என்பதை -பெற்றோர்,பள்ளி /ஆசிரியர் ,சமூகம் /அரசு ஆகியவை இனைந்து உறுதிசெய்கிறது .இன்றைய கல்விமுறை குழந்தைகளுக்கு இருக்கும் குழந்தை தனத்தை சூறையாடுகிறது,அவர்களது குழந்தை பருவத்தை களவாடுகிறது , நான் பார்க்கும் பல குழந்தைகள் மன சோர்வு உடையவர்களாக இருக்கிறார்கள்! இது அதிர்ச்சி !
பள்ளி -கல்விமுறை,அரசு சமூகம் இதன் குறைகள் அனைவருக்கும் பொதுவானது -நாளடைவில் இவைகளில் உள்ள குறைகளை நாம் சகித்துக்கொள்ள பழகிவிடுகிறோம் , அதனால் நீங்கள் சொல்லுவது போல் பெற்றோர்களின் பங்கு மிக மிக மிக முக்கியமானது .பல கேள்விகளை முன்வைக்கிறது .
சிக்கனமாக இருந்தால், சேமிக்கும் பழக்கம் நம் வாழ்வில் என்ன மாறுதல்கள் உருவாக்கும் என்று நடைமுறை வாழ்க்கையை அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதோடு நாங்கள் இருவரும் குழந்தைகளுக்கு முன் உதாரணமாக இருக்க முயற்சிக்கின்றோம்.
ReplyDeleteயோசித்து எழுதப்பட்ட அருமையான பதிவு.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
IT IS 100% TRUE SIR
ReplyDeleteஅப்படியென்றால் படிக்காத பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை படிக்க வைப்பது எப்படி ..
ReplyDeleteஇந்த கட்டுரையில் எனக்கு உடன்பாடில்லை ..
குழந்தைகளின் கல்வி சுமையை அரசு முதலில் குறைக்க வேண்டும் ..
ஆங்கிலம் என்றதும், பெற்றோர்களும் இந்த சமுதாயமும் ..வாயை பிளக்கிறது ..
அதை மாற்ற வேண்டும் ...
இந்த பாடதிட்டங்களால் மிகப்பெரிய மாற்றமும் சிந்தனையும் நம் குழந்தைகளுக்கு வரபோவதில்லை ..
முதலில் மதிப்பெண்களை மையப்படுத்தி பெருமை அடிக்கும் சமுதாயம் மாற வேண்டும்.
இந்த அற்புதமான கல்வி கட்டுரை தொடருங்கள்.
ReplyDeletehttp://adiraibbc.blogspot.com
அதிரை பிபிசியின் காணொளிகள்
கூடுதல் பொறுப்பு எடுக்க முடியாதவர்கள் பெற்றோராக தகுதி இல்லாதவர்களே..
ReplyDeleteஅருமையான பதிவு...
வாழ்த்துக்கள் சகோதரி...
எத்தனை வீட்டில் பெற்றோர்கள் இதில் கவனம் செலுத்துகிறார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி. //
ReplyDeleteதேவியர் கொடுத்துவைத்தவர்கள்.
ஹிஹி கலக்கல் பதிவு!!!!
ReplyDeleteஜோதிஜி,
ReplyDeleteஇது கட்டுரையா?
பெற்றோர்களுக்கான பாடம்!
இப்பாடத்தைக் ”கற்றபின் அதற்குத் தக நிற்க” எத்தனைப் பெற்றோர்கள் முன்வருவார்கள் எனத் தெரியவில்லை. ஆனால், பெற்றோராக இருப்பவர்கள் அந்தப் பதவிக்கு உரியவர்களாக இருக்க விரும்பினால் மீண்டும் உங்களின் ”இந்த பாடத்தைப்” படித்து “அதற்குத் தக நிற்க” வேண்டும்.
//குறிப்பாக என்னைப் பற்றி பெருமையாய் எந்த இடத்திலும் சொல்லிக் கொண்டதும் இல்லை. நான் கடந்து வந்த பாதையில் நான் பெற்ற இழப்புகளை, என் பலவீனங்களைப் பற்றி அவர்களுக்கு புரியும் அளவிற்கு சொல்லிவிடுகின்றேன். // no sir, i am differing here. .. pls tell your losses and pains , success and gains too... this will give an understanding that you are also an average human being, not as god nor as dog.. just kidding.. if u only tell about ur losses, you will get pitty in first, on latter ur daughter may feel that ur life only of sarrows / ur man of failures...
ReplyDeleteவினோத்
ReplyDeleteகிராமப்புறங்களில் வாழும் குழந்தைகளின் எதிர்பார்ப்பு மற்றும் ஏக்கங்கள் மிக குறைவு. இப்போது கூட ஒரு ரூபாய் இருந்தால் மிகப் பெரிய சொர்க்கம். ஆனால் நகர்ப்புறங்களில் வாழும் குழந்தைகளின் வாழ்க்கை முறையே வேறானது. குறிப்பாக ஒரு பொருள் வாங்க கிராமம் போன்ற சாதாரண கடைகளுக்கு போக முடியாது. ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் போன்ற கடைகளுக்குத் தான் செல்ல வேண்டியுள்ளது. பெரும்பாலும் அங்குள்ள அத்தனை பொருட்களையும் குழந்தைகள் பார்வையிடுகிறார்கள். விளம்பரங்களின் தாங்கள் கண்ட அத்தனை பொருட்களும் அவர்கள் கண்களுக்கு தெரிகின்றது. அது தேவையா இல்லையா அதன் விலை என்ன? என்பது கூட யோசிக்கத் தெரியாமல் அதன் ஆசையை அடக்க முடியாமல் நமக்கு கொடுக்கும் அவஸ்த்தையான மனோநிலை நிச்சயம் உங்களுக்கும் நடந்து இருக்கக்கூடும். இது போன்ற நிலையில் தகப்பன் வருமானம் முதல், நிகழ்கால சூழ்நிலை, இதற்கு மேலாக நான் கடந்து வந்த பாதைகளும், என் வாழ்க்கை முறைகளுக்கும் அவர்கள் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலைக்கும் உள்ள வித்யாசங்களை அவர்களுக்கு புரிய வைக்கும் போது அவர்களுக்கு பல எதார்த்தங்கள் புரியும். அப்படியே சொல்லி சொல்லி இப்போது நல்ல முறையில் அவர்களுக்கு உண்மையிலேயே எது தேவை? எது தேவையில்லை என்பதை உணர்ந்து கொள்ளும் பக்குவத்தை அவர்களே உருவாக்கிக் கொண்டு விட்டார்கள். அப்பறம் இப்போதெல்லாம் ஒரு பொருள் வாங்கிக் கொடுக்க நினைத்தாலும் அவர்கள் வைத்துள்ள (ஒவ்வொருவரும்) உண்டியலில் காசு சேர்க்கும் எண்ணம் அதிகம் போட்டி மனப்பான்மையில் உருவாக்கிய காரணத்தால் வருட இறுதியில் ஒரு மொத்த தொகை அவர்களுக்கு கிடைக்கின்றது. இந்த வருட்ம் பள்ளிக்கூட கட்டணத்தைக்கூட அவர்கள் சேமிப்பில் இருந்து பெருமையாக கட்டினார்கள்.
இப்போது சொல்லுங்க? அதற்காக அவர்களுக்கு தேவைப்படும் எந்த பொருட்களையும் நியாயமான ஆசைகளை நாங்கள் மறுப்பதில்லை.
TAMIZH said...
ReplyDeleteஉங்கள் கருத்தை மறுக்க முடியாது. இன்னும் இரண்டு பதிவுகளில் இதற்கான பதில் உண்டு நண்பா?
ஜமால் உங்கள் கருத்தின் மூலம் என் எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதிக் கொள்கின்றேன். நன்றி.
ReplyDeleteஅமுதா கிருஷ்ணன் நீங்களும் ஆசிரியர் பணியில் இருக்கீங்களா?
தமிழ். உண்மைதான். கல்வியில் புள்ளி சரியாக விழவில்லை என்பதை உங்கள் கருத்து மூலம் கண்டு கொண்டேன். நன்றி.
தாஜீதீன் இது எனக்கே நான் சொல்லிக் கொள்ளும் உரைகள். மற்றவர்களுக்கு பயன்பட்டால் மகிழ்ச்சியே.
சித்ரா உங்கள் வருகைக்கு நன்றி. இந்தியப்பயணம் எப்படி இருந்தது?
தவறு பல விசயங்களில் நம் இருவருக்கும் ஒத்த சிந்தனைகள் உள்ளது என்பது உண்மையே.
ReplyDeleteசண்முகவேல் பெற்றோர்கள் நினைத்தால் நிச்சயம் முடியும் தானே?
ரத்னவேல் அய்யா, நான் கூட சேமிப்பின் அருமையை கஷ்டம் அதிகமாக வந்த போது தான் உணர்ந்து கொண்டேன்.
செல்லப்பன் உங்கள் வருகைக்கு நன்றி.
நன்றி ரியாஸ்
கூடுதல் பொறுப்பு எடுக்க முடியாதவர்கள் பெற்றோராக தகுதி இல்லாதவர்களே..
மிக அருமையான உணர்ந்து எழுதிய வரிகளுக்கு நன்றி நண்பா.
இராஜராஜேஸ்வரி
ReplyDeleteஅவர்கள் குடுத்து வைத்தவர்கள். ஆனால் எங்கள் குடுமி முடி மட்டும் குறைந்து கொண்டே வருகின்றது. படுத்தும் பாடு அதிகம்.
சத்ரியன் மற்றவர்கள் உணர்கிறார்களோ இல்லை. நம்ம ஜமால் கருத்தைப் பாருங்க. அவர் குழந்தையை நினைக்கும் அளவுக்கு ஏதோ நெஞ்சம் தொட வைத்துள்ளது. உங்கள் நட்புக்கு எப்போதும் என் அன்பு.
ஒரு தகப்பான உட்கார்ந்து பொறுமையா யோசிச்சிருக்காருய்யா!
ReplyDeleteஇங்கு பின்னூட்டமிட்ட ’தமிழ்’ என்பவரின் கருத்தும் ரொம்ப முக்கியமானது.
//நான் கண்களை மூடிக்கொண்டு சாமியை நினைத்துக் கொண்டு கீழே கொடுக்கப்பட்ட வார்த்தைகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து அதில் நிரப்பி வந்து இருக்கின்றேன்.//
:))) ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...
இயந்திர தனமாய் இயங்க பிடிக்காமல் ஆசிரியர் வேலையினை விட்டு விட்டேன்.
ReplyDeleteஅமுதா
ReplyDeleteஆசிரியர் பணி மிக நல்ல பணி. எனக்கு பிடித்த வேலையும் கூட. ஒரு தேவியை அதற்காக தயார் படுத்திக் கொண்டு இருக்கிறோம். அவளின் ஆர்வமும் அதுவாகவே இருக்கிறது. உங்களுக்கு நன்றி.
கட்டுரை நன்றாக வந்திருக்கிறது.
ReplyDeleteஅப்புறம் CBSE திட்டத்தில் ஹிந்தி கட்டாயப் பாடமா?
என் மகளுக்கு மாண்டிசோரி கல்வி முறையை யோசித்திருக்கிறேன். அவளுக்கு வயது ஆறு மாதங்கள். :) வரும் வருடங்களில் ஒரு நல்ல பள்ளிக்கூடத்தைத் தெரிவு செய்து கர்ச்சீப் போடணும்.
ஹிந்தி என்பது கட்டாய பாடமல்ல. அதுவொரு மற்றொரு சிறப்பு. பள்ளிக்கூடங்கள் இப்படித்தான் சொல்லி கும்மியடிக்கிறார்கள். பெரும்பாலும் எல்லா சிபிஎஸ்சி பள்ளிக்கூடங்களிலும் இந்த ஹிந்தி மொழி இருக்கின்றது. மெட்ரிகுலேசன் பள்ளிகளிலும் ஹிந்தி இருக்கத்தான் செய்கின்றது. ஆனால் ஆசிரியர்களின் தரம் படு மோசம். என் குழந்தைகளுக்கு நான் தான் ஆசிரியர். வேறு வழியே தெரிய வில்லை. ஒரே ஆசிரியரை வைத்துக் கொண்டு நான்கைந்து வகுப்புகளுக்கு எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ReplyDeleteஜோதிஜி என்னால் இன்னும் சரியான முடிவிற்கு வர முடியவில்லை.
ReplyDelete