அஸ்திவாரம்

Monday, June 27, 2011

சீனா -- முத்துமாலை திட்டம்

இந்த தொடரின் தொடக்கம் இங்கேயிருந்து தொடங்குகின்றது. 

இப்போது மகிந்த ராஜபக்ஷே. தன் தம்பி கோத்தபய மூலம் உள்ளே நடத்திக் கொண்டிருந்த வீரவிளையாட்டுகளை கவனித்துக் கொண்டிருந்ததைப் போலவே மற்றொரு காரியத்திலும் கவனமாக இருந்தார். விடுதலைப்புலிகளை கூண்டோடு அழித்து முடிக்க வேண்டும்.

காரணம் அந்த அளவுக்கு உள்ளேயிருந்த சிங்கள இனவாத கட்சியான ஜேவிபி மகிந்தாவை படாய்படுத்திக் கொண்டிருந்தார்கள். கூட்டணியின் போது போட்ட ஒப்பந்தங்களை திரும்ப திரும்ப ராஜபக்ஷேவுக்கு நினைவூட்டிக் கொண்டிருந்தனர்.

விடுதலைபுலிகளை இராணுவ ரீதியாக தோற்கடிக்க வேண்டும்.

இது ஜேவிபியின் முக்கிய கொள்கையாக இருந்தது. ஜேவிபியை விட புலிகளை ஒழித்தே ஆக வேண்டும் என்று மகிந்தாவுக்கும் உள் மனதில் ஆசை தான். ஆனால் போர் என்றால் ஆயுதங்கள் வேண்டும். அதற்கு மாளாத பணம் வேண்டும்? என்ன செய்யமுடியும் என்று ஒவ்வொன்றின் சாதக பாதகங்களை பட்டியலிட்டுப் பார்த்தார்.

எந்த மேற்கித்திய நாடுகளும் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு என்று கேட்டால் அணைவருமே பணம் தரத் தயாராகயிருக்கிறார்கள். ஆனால் இராணுவ ரீதியான முன்னேற்பாடுகளுக்கு ஒரு பயபுள்ளைகளும் திரும்பிப் பார்க்கத் தயாராக இல்லை. ரணில் காலத்தில் ஜெனிவா ஒப்பந்தம் போட்டபிறகு ஒவ்வொரு நாட்டிலும் போய் இலங்கையால் பிச்சை எடுக்க முடிந்தது. ஆனால் இப்போது என்ன செய்வது? எதைச் சொல்லி கேட்பது. விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடிக்க வேண்டும் எனறால் எவராவது பணம் தருவார்களா?

போய்யா போ.. போய் உள்ளேயிருக்கும் புள்ளகுட்டிகளை படிக்கவைக்கப் பாருய்யா என்று எட்டி உதைத்து அனுப்பிவிடுவார்கள். இடையிடையே புலிகளை அடித்து ஒடுக்க முற்பட்ட போது இந்த மேற்கித்திய நாடுகள் தான் சமாதானம் என்ற புறாவை பறக்கவிட்டார்கள்.

என்ன ஆச்சு?

விடுதலைப்புலிகள் கொழும்பு அரசவைக்கு வராதது தான் மிச்சம். அந்த அளவுக்கு முன்னேறிவிட்டார்கள். இதை இப்படியே வைத்திருக்கக்கூடாது?
என்ன செய்யலாம்?

இந்தியாவில் இப்போதுள்ள மன்மோகன் சிங் அரசாங்கம் எத்தனை உதவிகள் செய்து கொண்டிருந்தாலும் அதன் ஒவ்வொன்றுக்கும் பின்னாலும் ஓராயிரம் விசயங்களை விட்டுக கொடுத்து தான் இந்தியாவின் உதவியை பெற முடிகின்றது. காலம் காலமாக இந்தியா நம் மேல் சவாரி செய்வதை அனுமதிக்கக்கூடாது? நாம் தான் அவர்களை குனிய வைத்து கும்மி தட்ட வேண்டும். அதற்கு நமக்கு ஒரே ஆள் சீனா தான்.

பார்க்கலாம் !

ஒரு ஆட்டம் ஆடி பார்த்து விடலாம் என்ற மகிந்தா நினைத்தபடியே அடுத்த கட்ட நகர்வுகள் நகர ஆரம்பித்தது. தம்பி கோத்தபய மூலம் உள்ளேயிருக்கும் ஜனநாயகவாதிகள் முதல் சந்தேகப்படுபவர்கள் வரைக்கும் புதைக்குழிக்குள் அனுப்பும் பணியும் சுணங்காமல் போய்க் கொண்டேயிருந்தது. ஆனால் தம்பியின் பணி தொடர்ந்து முன்னேற வேண்டுமென்றால் ஆயுதங்கள் தேவை. அதற்கு சீனாவை இலங்கையின் பங்காளியாக மாற்ற வேண்டும் என்று நினைத்துக் கொண்ட மகிந்தா அதன்படியே செயல்பட ஆரம்பித்தார்.

ஆனால் இந்தியாவை பகைத்துக் கொள்ள முடியாது. 2008 ஆம் ஆண்டு இந்தியாவின் விருப்பதிற்கேற்ற இலங்கை சந்தையை Comprehensive Economic Partnership Agreement (CEPA) முழுமையாக இந்தியாவிற்காக திறந்து விட தயாராக இருந்த போதிலும் நிச்சயம் ஒர் அளவுக்கு மேல் இந்தியாவை பக்கத்தில் வைத்துக் கொள்ள முடியாது. இந்தியாவின் கூட உருவாகப் போகும் ஒப்பந்தமென்றாலும், போரும், போருக்கு பின்னால் உருவான தமிழர் அழிப்புகளை தமிழ்நாட்டில் எழும் கூக்குரல் திசைதிருப்பி விடக்கூடும். ஆனால் நிச்சயம் மற்றவர்கள் போல இந்தியாவை ஓர் அளவுக்கு மேல் சார்ந்து இருக்காமல் இருக்க சீனாவை இலங்கையின் முக்கியமான பங்காளியாக மாற்ற வேண்டும்.

சந்திரிகா, ரணில் ஏற்கனவே தோற்றது போல் நாமும் இந்த முறை தோற்றுப் போய்விடக்கூடாது இது போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டுமென்றால் சீனாவின் உதவி நமக்கு ரொம்ப தேவை. மேலும் 1957 ஆம் ஆண்டு முதல் சீனாவுடன் கூடிய புரிந்துணர்வு இன்று வரைக்கும் நன்றாகவே உள்ளது. இவ்வாறு மகிந்தா மனதில் நினைத்துக் கொண்டிருந்ததைப் போலவே சீனாவும் மற்றொரு கணக்கு போட்டுக் கொண்டிருந்தது. அமெரிக்காவுடன் இந்தியா சேர்ந்து கொண்டு அடிக்கும் லூட்டிகளுக்கு அளவில்லாமல் போய்க் கொண்டேயிருக்கிறது. அமெரிக்கா வணக்கம் என்று சொன்னாலே இந்திய அரசியல்வாதிகள் சாஷ்டாங்கமாக கீழேயே விழுந்து கும்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதை இப்படியே விட்டுவிட்டால் நமக்குப் பின்னால் பல விதமான பிரச்சனைகள் உருவாகக்கூடும். இந்தியாவை தெற்காசியாவில் தனிமைப்படுத்த வேண்டுமென்றால் இலங்கையை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதன் காரணமாகத் தான் சீனா தனது முத்துமாலை என்ற திட்டத்தை உருவாக்க ஆரம்பித்தது. சீன அரசின் கொள்கையான வங்காள தேசம், பர்மா, இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுடன் கொண்ட கொள்கைகளால் திட்டமிட்டு நகர்த்த தொடங்கின.

படத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள நட்சத்திர குறீயிடுகள் முழுமையும் சீனாவின் திட்டமானதாக இருக்கிறது.

மத்திய கிழக்கு நாடுகளையே சீனா தனது எரிபொருள் தேவைகளுக்காக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. இங்கிருந்து சீனாவை நோக்கிச் செல்லும் எண்ணெய் கப்பல்களின் பாதுகாப்பு என்பது சீனா அரசுக்கு மிக முக்கியமானதாகும். இதனை சாத்தியப்படுத்துவற்காகவே சீனா எகிப்தில் தொடங்கி பாகிஸ்தான் இலங்கை, வங்காளதேசம், பர்மா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் தனது கால்களை பலமாக ஊன்றிக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு செயல்பாடுகளும் தங்களது கண்காணிப்பு மூலம் கவனிக்க முடியும். இதன் காரணமாக்கத்தான் அந்தந்த நாடுகளுடைய கடற்படையுடன் தன்து கடற்படையை ஒன்று சேர்ந்து செய்ல்பட வைக்க விரும்புகின்றது.

பாகிஸ்தானின் (Gwadar),க்வாடார், வங்காள தேசத்தின் சிட்டாங், பர்மாவின் சிட்வி, (Sittwe), தாய்லாந்தின் (Kra Canal) க்ரா கால்வாய், வியட்நாமிற்கு 500 மைல் கிழக்கில் அமைந்துள்ள (Woody Islands)வுடி ஐலேண்டு விமானத்தளம், சீனாவின் ஹைனான் தீவு போன்ற இடங்களில் சீனாவின் கடற்படை நிலை கொள்வதற்காக பணிகள் நடந்து வருகின்றது.

இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சீனா இலங்கையிடம் விரும்பி கேட்பது கடற்கரை நகரமான ஹம்பன் தோட்டா, இதை சீனா மிகப் பெரிய சரக்கு பெட்டமாக வளர்த்தெடுக்க விரும்புகின்றது

எனவே தான் சீனா இந்தியப் பெருங்கடலில் தனது நீண்ட நாள் பாதுகாப்பின் பொருட்டு இந்த முத்துமாலைத் திட்டத்தை செயல்படுத்த விரும்புகின்றது. இதனை புரிந்து கொண்ட மகிந்தா நிச்சயம் சீனா நமக்கு உதவும் என்று உறுதியாக நம்பினார். ராஜபக்ஷே தனது தம்பி கோத்தபயவிடம் உன் கடன் பணி செய்து கிடப்பதே என்று ஆசி வழிங்கி விட்டு அடுத்த கொள்முதல் வேலையில் இறங்கினார்.

6 comments:

  1. நல்ல பதிவு.
    உங்களது கடுமையான உழைப்பு.
    தொடர்ந்து படித்து வருகிறேன்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. //informative treasure.
    thanks//

    அண்ணே நிறையத்தகவல்கள்
    ஆச்சர்யம் தமிழில் படிப்பது.

    ReplyDelete
  3. நல்ல பகிர்வுக்கு இதய நன்றி ஜோதிஜி.
    இந்தியாவின் உயர் மட்ட அரசியல் தலைவர்கள் சீனாவின் இந்த ஆக்கிரமிப்புத் திட்டங்கள் குறித்து ஏதும் கவலை கொண்ட மாதிரி தெரியவில்லையே. :((

    ReplyDelete
  4. அப்பாடி..அப்புறம் அன்பின் ஜோதிஜி...

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.

Note: Only a member of this blog may post a comment.