இன்று அமெரிக்காவின் பொருளாதாரத்தின் ஆணிவேராக இருக்கும் யூதர்களைப் போலவே தெற்காசியாவின் பெரும்பாலான தொழில்களுக்கு சொந்தக்காரர்கள் சீனர்களே. இவர்கள் வாழும் நாடுகள் வேண்டுமென்றால் வெவ்வேறாகயிருக்கும். ஆனால் அடிப்படையில் தன் இனம், மொழி எதையும் விட்டுக் கொடுக்காமல் கலாச்சார பிடிமானத்தோடு வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள். .
மலேசியா, சிங்கப்பூர் தொடங்கி ஹாங்காங் வரைக்கும் உள்ள அத்தனை நாடுகளிலும் வாழும் சீனர்களின் தொழில் ரீதியான அத்தனை ஆணி வேர்களும் சீனாவில் தான் இருக்கிறது. சீனர்கள் எங்கு வாழ்ந்தாலும் சீனர்களாகத்தான் வாழ்வார்கள் இருப்பார்கள். இவர்கள் தாங்கள் செய்யும் தொழில் லாபத்திற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்கள். ஆனால் ஆனந்த கிருஷ்ணன் மலேசியாவில் வெற்றிக் கொடி நாட்டிக் கொண்டிருப்பதும் இந்த சீனர்களுக்கு மத்தியில் தான் என்பதையும் இப்போது நினைவில் கொள்ளவேண்டும். இன்று வரையிலும் கூட ஆனந்த கிருஷ்ணன் தன்னுடைய தனித்தன்மையை நிரூபித்துக் கொண்டிருப்பவர்.
இப்போது இவர் சீனர் ஒருவருக்கு பெப்பே காட்டிய தில்லாங்கடி ஆட்டத்தைப் பார்க்கும் போது தான் இவரின் தொழில் மூளையை நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
TANJONG என்பது மலேசியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனம். இதன் செயல்பாடு என்பது பித்தளை சுரங்கப்பணியில் ஈடுபடுவதாகும். 1980 ஆம் ஆண்டு வாக்கில் இதன் சுரங்க அனுமதி முடிந்து விட்ட காரணத்தால் செயலற்றுப் போய் இருந்தது. ஆனந்த கிருஷ்ணன் ஆடிய தொழில் விளையாட்டில் இந்த நிறுவனமும் இவரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஆனால் இந்த நிறுவனத்தை கைப்பற்ற ஆனந்த கிருஷ்ணன் ஆடிய விளையாட்டு தான் மற்றவர்களுக்கு அதிக ஆச்சரியத்தை கொடுத்தது. குறிப்பாக சீனர்களுக்கு.
TANJONG TIN DREDGING LTD என்ற முழுப் பெயர் கொண்ட இந்த சுரங்க நிறுவனத்தின் 70 சதவிகித பங்குகளை வைத்திருந்தவர் பெயர் ராபர்ட் குவோக் கின் (ROBERT KUOK). ஹாங்காங்கில் வசித்துக் கொண்டிருந்தவரிடம் நேரிடையாகப் போய் நின்று " எனக்கு உங்களிடமுள்ள பங்குகள் வேண்டுமென்று" கேட்டால் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிடுவார். காரணம் சீனர்களைத் தவிர அந்த பங்குகளை வேறு எவருக்கும் விற்க மாட்டார். இதை தெரிந்து வைத்திருந்த ஆனந்த கிருஷ்ணன் தனது சீன நண்பரான KHOO TEIK CHOOI ன் உதவியோடு Marlestone Investment Ltd. என்ற நிறுவனத்தை உருவாக்கி ஹாங்காங்கில் பதிவு செய்தார். சீன நண்பரை முன்னிலைப்படுத்தி 1991 பிப்ரவரி 13 அன்று ராபர்ட் குவோக்கிடம் இருந்த 70 சதவிகித பங்குளையும் எளிதாக கைப்பற்றினார். முதல் பிரச்சனை முடிவுக்கு வந்தது.
செயலற்று போயிருக்கும் நிறுவனத்தின் பங்கின் விலை சந்தையில் எப்படியிருக்கும்? வெறும் காகிதமாகத்தான் இருக்கும். இது போன்ற நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதால் ஆனந்த கிருஷ்ணனுக்கு என்ன லாபம்? அதில் உள்ள சூட்சமத்தின் மூலம் தான் இவரின் உண்மையான தொழில் மூளையை நம்மால் புரிந்து கொள்ள முடியும்?.
அடுத்து அதளபாதளத்தில் இருக்கும் இந்த பங்குகளுக்கு உயிரூட்ட வேண்டுமல்லவா?
தன்னுடைய பிரதான நிறுவனமான உஸா டெகஸ் மூலம் ஏற்கனவே எண் சூதாட்ட பந்தயத்திற்கென்று உருவாக்கப்பட்ட Pan Malaysian Pools என்ற நிறுவனத்தை இதற்காக பயன்படுத்திக் கொள்ள திட்டம் தீட்டப்பட்டது. ஏற்கனவே இந்த சூதாட்ட நிறுவனத்தின் மூலம் மூன்று போக விளைச்சல் போல ஆனந்த கிருஷ்ணன் அள்ளிக்குவித்துக் கொண்டிருந்த பணத்தை இப்போது நம் நினைவில் கொண்டு வர வேண்டும். ஹாங்காங்கில் தனது சீன நண்பரை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட Marlestone Investment Ltd. நிறுவனத்திற்கும் தனது சூதாட்ட நிறுவனத்திறகும் திடீர் என்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் தனது சூதாட்ட நிறுவனத்தின் மூலம் 9 கோடி டாலர் ஏற்பாடு செய்யப்பட்டு டம்மியாக ஏற்பாடு செய்திருந்த மேரிஸ்டோன் நிறுவனத்திடம் இருந்து மொத்த 70 சதவிகித பங்குகளையும் தனது பிரதான நிறுவனமான உஸா டெக்ஸ்க்கு மாற்றிக் கொண்டார். வெற்றிகரமாக இரண்டாவது படிக்கட்டில் ஏறியவர் அடுத்த படிக்கட்டில் ஏற வேண்டிய அவஸ்யமில்லாமல் சூது மூலம் வந்து கொண்டிருந்த பணம் இந்த பங்குகளை அழைத்துச் செல்ல ஆரம்பித்தது. .
இப்போது TANJONG நிறுவனத்தின் மொத்த கட்டுப்பாடும் ஆனந்த கிருஷ்ணன் கைவசம் வந்து விட்டதல்லவா? இத்துடன் ஹாங்காங்கில் உருவாக்கப்பட்ட மேரிஸ்டோன் நிறுவனமும் இவரின் முக்கிய நிறுவனத்தின் அங்கத்தினராக மாறியது. சூதாட்ட நிறுவனத்துடன் இணைத்துக் கொண்ட TANJONG நிறுவனத்தின் பங்கின் விலையும் இப்போது வானமே எல்லையென்று தாறுமாறாக பறக்கத் தொடங்கியது. 1991 ஆம் ஆண்டு இரண்டு ரூபாயாக இருந்த பங்கின் விலை அடுத்த ஒரு வருடத்தில் ஆறு மடங்காக உயர்ந்து விட்டது. இத்தனைக்கும் செயலற்றுப் போயிருந்த நிறுவனத்தின் பங்கு இப்படி பறக்க ஒரே காரணம் ஆனந்த கிருஷ்ணன் வைத்திருந்த சூதாட்ட நிறுவனத்தின் அங்கமாக மாறியிருந்ததே முக்கிய காரணம் என்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதள பாதாளத்தில் கிடந்த பங்குகளை வளர்க்க இனி வேறு எவரும் சொல்லியா தரவேண்டும். சந்தையில் இந்த பங்குகளும் முக்கியத்துவம் பெற இதனைத் தொடர்ந்து ஆனந்த கிருஷ்ணனின் பார்வை மலேசியாவில் மின்சார உற்பத்தித் துறையில் இறங்கினார். மிக குறுகிய காலத்தில் TANJONG நிறுவனத்தின் மூலம் (பங்குகளின் மதிப்பு உயர வேண்டுமல்லவா?) மூன்று மெகா மின் நிலையங்கள் உருவாக்கப்பட்டது.
இப்போதைய சூழ்நிலையில் ஆனந்த கிருஷ்ணனின் வாழ்க்கையில் தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம். அதனால் தான் இப்போது மண் கூட பொன்னாக மாறியது. மலேசிய சட்டவிதிகளையே உடைத்து அரசாங்கத்தின் நிலத்தையே வாங்கி அதை அரசாங்கத்திடமே விற்று லாபம் பார்த்த கெட்டிக்காரர் என்றால் இவருக்கு என்ன பட்டம் கொடுப்பீங்க?.
கோலாலம்பூரில் உள்ள ஒரு பகுதி சிலாங்கூர். இங்கே சிலாங்கூர் குதிரைப் பந்தய மையம் ஒன்று செயல்பட்டுக் கொண்டிருந்தது. இது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த அமைப்பு. இவர்கள் கைவசம் இருந்த 240 ஏக்கர் பரப்புளவு உள்ள இடம் இருந்தது. கோலாலம்பூர் பகுதிக்காக ஒரு பெரிய பூங்கா ஒன்று உருவாக்கித்தர வேண்டும் என்று மலேசியா அரசாங்கம் (1982) இந்த அமைப்பிடம் சொல்லியிருந்தது. இது போன்ற அரசாங்கத்தின் இடங்களை தனியார்கள் எவரும் வாங்க முடியாது. ஆனால் ஆனந்த கிருஷ்ணன் சட்ட விதிகளைப் பற்றி கவலைப்படாமல் இந்த (1989) இடத்தை கைப்பற்றினார். அரசாங்கத்திற்கும் அரசாங்கம் உருவாக்கியிருந்த குதிரைப் பந்தய மையத்திற்கும் இடையே இருந்த அத்தனை விதிகளும் காற்றில் பறக்க ஆனந்த கிருஷ்ணனுக்குச் சொந்தமான SERI KUDA என்ற நிறுவனம் 150 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. ஆனால் அப்போதைய சந்தை மதிப்பு என்பது வேறு. இது அப்போது பலத்த சர்ச்சையை உருவாக்கியது. இப்போதைய காலகட்டத்தில் ஆனந்த கிருஷ்ணனின் செல்வாக்கு எந்த அளவுக்கு இருந்தது தெரியுமா?
வாங்கிய இடத்தை அலங்கரித்து அப்படியே மலேசியாவின் PETRONAS நிறுவனத்திற்கு இந்த நிலத்திற்கான 51 சதவிகித உரிமையை விற்று விட்டார். வாங்கும் போது 150 கோடி. நிலத்தை அலங்கரிக்க 430 கோடி. விற்றது 900 கோடி.
மலேசியா அரசவையில் பிரதமர் மஹாதீரும், அன்றைய நிதி அமைச்சர் அன்வர் இப்ராகிம் ( யார் தெரிகிறதா? ஓரினச் சேர்க்கை குற்றச்சாட்டின் மூலம் தனது அரசியல் வாழ்க்கையை இழந்தவர்) ஆனந்த கிருஷ்ணனிடம் இருந்து PETRONAS வாங்கியது சரிதான் என்று வக்காலத்து வாங்கி சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்தனர். ஆனந்த கிருஷ்ணன் மச்சமுள்ள ஆளில்லை. உடம்பு முழுக்கவே மச்சத்துடன் பொறந்த ஆளாகயிருப்பார் போல?
இந்த நிலத்தை வளர்த்தெடுக்க கேஎல்சிசி (Kuala Lumpur City Center – KLCC) என்ற நிறுவனம் 1992 ல் தொடங்கப்பட்டது, இதன் மூலம் தான் உலகிலேயே உயரமான (அப்போதைக்கு) கட்டிடம் என்ற 85 மாடிகளைக் கொண்ட இரட்டைக் கோபுரம் கட்டப்பட்டது. இதற்கு முக்கிய காரணமும் ஆனந்த கிருஷ்ணனே. இந்த கேஎல்சிசி யில் தன்னிடம் இருந்த 48 சதவிகித பங்குகளையும் பெட்ரோனாஸ் நிறுவனத்திற்கே விற்ற வகையில் 1900 கோடி ரூபாய் லாபமும் கிடைத்தது. இந்த காலகட்டத்தில் தான் மலேசிய நாட்டிலிருந்த அத்தனை அதிகார வர்க்கத்தினருக்கும் ஆனந்த கிருஷ்ணன் என்றால் பயம் கலந்த மரியாதை உருவாகத் தொடங்கியது.
அடுத்து ஆனந்த கிருஷ்ணன் நுழைந்த துறை செல்போன் துறை.
தரையில் கிடந்த பங்குகளையே தாறுமாறாக பறக்க வைத்த ஆனந்த கிருஷ்ணனுக்கு வேட்டை ஆரம்பமானது. .
ஆனந்தகிருஷ்ணன் பற்றி எந்த இந்திய ஊடகங்களும் தராத தகவல்கள்.
ReplyDeleteசார் இண்ட்ரஸ்டிங், பயங்கரமான ஆளா இருப்பார் போல, இந்த மாதிரி தில்லுமுல்லு பண்ணுற ஆள்கள்தான் நல்லா டெவலப் ஆகுறாங்க, நேர்மை நியாயம் இதெல்லாம் ????
ReplyDeleteநன்றி ஜோதிஜி. அருமையாக செய்திகளை பகிர்ந்து கொள்கிறீர்கள். வியாபாரத்தில் நேர்மையாக இருக்க முடியாது என்று சொல்வார்கள். ஆனால் தொழில் செய்வோர் நேர்மையாக இருக்கவே கூடாது என்பதை விதியாக்கி விட்டவர் அனந்தகிருஷ்ணன் போன்றோர்.
ReplyDeleteநல்ல பதிவு.
ReplyDeleteஉழைத்து எழுதுகிறீர்கள்.
தொடர்ந்து படித்து வருகிறேன்.
வாழ்த்துக்கள்.
"இதை தெரிந்து வைத்திருந்த ஆனந்த கிருஷ்ணன் தனது சீன நண்பரான KHOO TEIK CHOOI ன் உதவியோடு Marlestone Investment Ltd. என்ற நிறுவனத்தை உருவாக்கி ஹாங்காங்கில் பதிவு செய்தார். சீன நண்பரை முன்னிலைப்படுத்தி 1991 பிப்ரவரி 13 அன்று ராபர்ட் குவோக்கிடம் இருந்த 70 சதவிகித பங்குளையும் எளிதாக கைப்பற்றினார்."
ReplyDeleteஒரு சீனாக்காரனை வைத்துதான் கைப்பற்றியுள்ளார். விற்றவன் தோற்கவில்லை. ஆனால் வாங்கியவர் வென்றுள்ளார். இது ஒரு முரண்.
அரிய பல தகவல்கள். ஆனால் பெரிய முதலாளிகளுக்குள் நடக்கும் கழுத்தறுப்புகளில் சீனன் தோற்றான், தமிழன் வென்றான் என்கிற இனக் கண்ணோட்டம் மட்டுமே விஞ்சி நிற்கிறது. இதில் சாமான்யன் மகிழ என்ன இருக்கிறது?
ஊரான் உங்கள் கருத்து முதல் முறையாக எனக்கு அதிக ஆச்சரியம் அளித்தது. மூன்று பதிவுகள் உள்ளது. மொத்தமாக படிக்கும் போது தான் உங்கள் மொத்த புரிதலும் மாறும். இங்க எங்கே தமிழன் அப்புறம் இன உணர்வு போன்றதெல்லாம் வருகின்றது?
ReplyDeleteஇரண்டு பதிவுகளையும் மீண்டும் படித்தேன்.
ReplyDelete"காரணம் சீனர்களைத் தவிர அந்த பங்குகளை வேறு எவருக்கும் விற்க மாட்டார். இதை தெரிந்து வைத்திருந்த ஆனந்த கிருஷ்ணன் தனது சீன நண்பரான KHOO TEIK CHOOI ன் உதவியோடு Marlestone Investment Ltd. என்ற நிறுவனத்தை உருவாக்கி ஹாங்காங்கில் பதிவு செய்தார். சீன நண்பரை முன்னிலைப்படுத்தி 1991 பிப்ரவரி 13 அன்று ராபர்ட் குவோக்கிடம் இருந்த 70 சதவிகித பங்குளையும் எளிதாக கைப்பற்றினார்."
இந்தப் பாராவில் உள்ள சொல்லாடல் அதாவது ”சீன நண்பரை முன்னிலைப் படுத்தி...70 சதவிகித பங்குளையும் எளிதாக கைப்பற்றினார்” என்பதை ஒரு சீனரை ஒரு தமிழன் வீழ்த்தினான் என்கிற புரிதலோடு உங்கள் பதிவை நோக்கியதால் என்னுடைய புரிதல் மாறுபட்டிருக்கிறது. தங்களின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். மாறுபாட்டை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!