டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி.
இப்போதுள்ள அரசியல் சூழலில் இவரை எத்தனை பேர்களுக்கு நினைவில் இருக்கும் என்று தெரியவில்லை. 'மக்கள் சக்தி இயக்கம்' என்றொரு அமைப்பை உருவாக்கி இளைஞர்களை வழி நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்டு அமெரிக்காவில் தான் பார்த்துக் கொண்டிருந்த அத்தனை வேலைகளையும் விட்டு விட்டு தமிழ்நாட்டுக்கு வந்தவர். நதி நீர் இணைப்பு குறித்து ஆய்வரங்கம் கருத்தரங்கம் போன்றவற்றை நடத்தியதோடு அப்போது ஜனாதிபதியாக இருந்த ஆர். வெங்கட்ராமனிடம் அறிக்கையை கொண்டு போய்ச் சேர்த்தவர். கல்லூரி சமயத்தில் இவருடன் செயல்பட்ட அனுபவத்தில் பலமுறை பேசியுள்ளேன். இவர் நடத்திய பல கூட்டங்களில் கலந்துள்ளேன். அப்போது அவர் கூறிய வாசகம் இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது. இவர் கொண்டு போய்ச் சேர்த்த அந்த அறிக்கையை வாங்கிய ஆர்.வெங்கட்ராமன் சொன்ன வாசகம் இது.
'ஏன் உங்கள் நல்ல வாழ்க்கையை கெடுத்துவிட்டு ஏன் இங்கே வந்தீங்க?'
நாம் இந்தியர்கள். இந்தியா என்பது வேற்றுமையில் ஒற்றுமை என்பது சொல்வதற்கு எத்தனை எளிதாக இருக்கிறதோ ஆனால் நடைமுறை எதார்த்தத்தில் தான் எத்தனை வேறுபாடு. கர்நாடகாவில் இருந்து சென்ற முன்னாள் அமைச்சர் ஜாபர் ஷெரிப், முன்னாள் பிரதமர் தேவகௌடா முதல் இன்றைய மம்தா பானர்ஜி வரைக்கும் ஏன் தங்களுடைய மாநில நலனில் மட்டும் அக்கறை கொண்டு அத்தனை திட்டங்களையும் தங்கள் பக்கமே திருப்பிக் கொள்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் இருந்து செல்பவர்களுக்கு மொழிப் பிரச்சனை என்பதை விட டெல்லிக்குச் சென்றதும் ந்யூரான்களில் என்ன மாறுதல்கள் உருவாகுமோ தெரியவில்லை. ஒவ்வொருவரும் நல்ல இந்தியக்குடிமகனாக மாறிவிடுவது அதிசியமான உண்மை. முந்தைய ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் சொன்னது முற்றிலும் உண்மை.
'குஜராத்தில் இருந்து வந்து இறங்கும் அமைச்சர்கள் தங்கள் மாநிலத்திற்கான நிதி ஆதாரத்தை பெற்று விட முனைப்பு காட்டுவதைப் போல தமிழ்நாட்டில் இருந்து எவரும் எதையும் வந்து கேட்பதில்லை'.
காரணம் அப்போது ஆட்சியில் இருந்த ஜெயலலிதாவின் தனிப்பட்ட குணாதிசியத்தை நாம் அணைவரும் அறிந்ததே. இது ஜெயலலிதா மட்டும் உருவாக்கிய பாதை அல்ல. இங்குள்ள ஒவ்வொரு அரசியல் தலைவர்களும் இப்படித்தான் இருக்கிறார்கள். மாநில நலன் என்பதை விட தம் மக்கள் நலன் அதைவிட மிக முக்கியம். அதனை விட தங்களுக்கான லாபம் மொத்தத்தில் முக்கியம். இல்லாவிட்டால் 63 சீட்டை கொடுத்து விட்டு நாயன்மார்கள் கதையை கலைஞர் பேசிக்கொண்டு இருக்கமாட்டார்.
இப்படித்தான் கடந்து போய் கடந்து போய் இன்று வல்லரசு என்ற பெயரைக் கேட்டாலே வாந்தி பேதி போவது போல அலர்ஜியாக உள்ளது. மற்ற மாநிலங்களிலும் அடிதடி, ஊழல், கவிழ்ப்பு என்று எத்தனையோ சமாச்சாரங்கள் இருந்தாலும் டெல்லிக்கு படையெடுக்கும் சமயத்தில் மட்டும் நான் மலையாளி, நான் கர்நாடகம், நான் பெங்காலி என்று வரிசை கட்டி நின்று விடுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் அந்த அற்புத காட்சியை காண இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ?
காரணம் தகுதியானவர்களை நாம் தேர்ந்தெடுக்க விரும்பாததே முக்கிய காரணம். படிக்காதவர்களிடத்தில் கூட ஒவ்வொரு அரசியல் கட்சி சார்ந்த சின்னங்கள் தான் அவரவர் சிந்தனைகளில் மேலோங்கியிருக்கிறது. தனி நபர்கள் அவர்கள் செயல்பாடுகள் குறித்து எந்த பொது நல அக்கறையும் வந்து விடுவதில்லை. என் வாக்கு ஜெயிப்பவர்களுக்கு போய்ச் சேர வேண்டும் என்ற எண்ணத்தின் காரணமாக இன்று ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்க்கையும் அவனின் கனவுகளும் எட்ட முடியாத உயரத்திற்கு போய்க் கொண்டிருக்கிறது.
திருப்பூர் புத்தக கணகாட்சிக்கு வந்திருந்த எழுத்தாளர், சிந்தனையாளர் ஞாநி அவர்களிடம் குறுகிய நேரம் இது குறித்து தான் சில கேள்விகளை கேட்டேன். அவர் 1975 முதல் பத்திரிக்கை துறையில் இருப்பதாக சொன்ன போது ஆச்சரியமாக இருந்தது. எத்தனை தலைவர்களை சந்தித்து இருப்பார்? எத்தனை கட்டுரைகளை எழுதியிருக்கக்கூடும்? மறுநாள் இறுதியாக விடைபெறும் போது சொன்ன வாசகம் அடுத்த இரண்டு மூன்று நாட்கள் மனதிற்குள் ஒலித்துக் கொண்டேயிருந்தது.
'நான் எழுதும் கட்டுரைகள் கூட படித்துவிட்டு நகர்ந்து விடக்கூடிய வகையில் உள்ளதாக மாறிக்கொண்டிருக்கிறதோ என்று யோசித்துக் கொண்டு இருக்கின்றேன்' என்றார்.
நாம் பள்ளி கல்லூரிப் பாடங்களைத் தவிர்த்து, மற்ற புத்தகங்களை வாசிக்கத் தொடங்கிய கால கட்டம் முதல் இன்று வரைக்கும் வாசிக்கும் பல எழுத்துக்களை எழுத்தாளர்களை நினைவுக்கு கொண்டு வருவோம். எத்தனை ஆயிரம் பேர்கள் எத்தனை விதமான கருத்துக்களை இந்த சமூக நலனுக்காக விதைத்துள்ளார்கள்? ஏன் இத்தனை பேர்களின் சிந்தனைகளும் இந்த சமூகத்தில் எந்த மாற்றத்தையும் உருவாக்கவில்லை.
ஒழுங்காக படித்தவர்கள் உருப்படியான வேலைக்கு சென்று விடுகிறார்கள். அவன் வாழ்க்கையின் தொடக்கமும் முடிவும் அப்பொழுதே முழுமையாக தீர்மானிக்கப்பட்டது போல் ஆகிவிடுகின்றது. அறைகுறையாக படித்தவர்கள், முழுமையாக தங்கள் திறமைகளை வெளிக் கொணராதவர்கள் அங்கங்கே கிடைத்ததை தொத்திக் கொண்டுமாய் வாழ்க்கை ஓட்டத்தில் நகர்ந்து கொண்டு தனக்கான வாழ்க்கை எல்லையை இயல்பாக வகுத்துக் கொள்கிறார்கள். தக்காளி விலை ஏறி விட்டாதா? ரசம் வேண்டாம். பெட்ரோல் விலை ஏறப் போகின்றதா? இந்த வாரம் பத்து லிட்டர் வாங்கி இருப்பு வைத்துக் கொள்வோம். போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.
மிச்சமும் சொச்சமும் ஏக்கத்தையும் வெறுப்பையும் சுமந்துக் கொண்டு அமைதியற்ற வாழ்க்கையை பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த மூன்று பிரிவுக்குள்ளும் அடங்காமல் எது குறித்தும் அஞ்சாமல் இந்த அரசியலை கர்மசிரத்தையாக கற்று தேறி வருபவர்கள் தான் நம்மை ஆட்சி புரியும் மக்கள் சேகவர்கள். படிப்பு, ஒழுக்கம், முதல் வேறெந்த தகுதிகளும் தேவையில்லை. எந்த நிலையிலும் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் களமிறங்க தைரியம் இருந்தால் போதுமானது. நிச்சயம் நகரம் ஒன்றியமாக மாறி இறுதியில் அமைச்சராக வந்துவிட வாய்ப்புண்டு. அப்படித்தான் நடந்து கொண்டும் இருக்கிறது.
ஆனால் படித்து முடித்து விட்டு வெளியே எவரும் தான் வாழும் சமூகத்திற்குத் தேவையான எந்த மாற்றத்தையும் உருவாக்கவில்லை என்பதை விட அதற்கு தயாராகவும் இல்லை என்பதே நிதர்சனம்.
டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தியின் முயற்சியைப் போலவே இந்த முறை கோவை தெற்கு தொகுதியில் மக்கள் சக்தி கட்சி சார்பாக விஜய் ஆனந்த போட்டியிடுகிறார். இந்த கட்சியின் சார்பாக பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இளங்கோ பாலசுப்ரமணியம் (கிணத்துக்கடவு) பி. தண்டபாணி (சிங்காநல்லூர்) கே. துரைராஜ் (கோவை வடக்கு) வி. விஸ்வநாதன் (கவுண்டம்பாளையம்) கண்ணம்மாள் ஜெகதீசன் (தொண்டாமுத்தூர்) தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.
விஜய் ஆனந்த் ' 5வது தூண் ' என்ற ' ஊழல் எதிர்ப்பு அமைப்பின் ' தலைவராகவும் செயல்பட்டுக் கொண்டிருப்பவர். அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் நகரில் மென்பொருள் நிறுவனத்தை 2008 ஆம் ஆண்டு வரை நடத்திக் கொண்டு வந்தவர். இவர் வாஷிங்டன் தமிழ் சங்க தலைவராகவும் (2007) செயல்பட்டுக் கொண்டிருந்தவர். ஐ.நா. சபையின் ஊழல் எதிர்ப்புக் கருத்தரங்கு பேச்சாளராகவும் உள்ளவர். இவருடைய நோக்கம் 2016 ஆம் ஆண்டு அமையப் போகும் அரசு படித்தவர்களால் உருவாக்கப்பட வேண்டிய அரசாக இருக்க வேண்டும் என்று அதற்காக பாடுபட்டுக் கொண்டிருப்பவர்.
கோவைக்குள் இருப்பவர்களுக்கோ, புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டு கட்சி சார்பாக எழுதிக் கொண்டிருக்கும் எத்தனை நண்பர்களுக்கு இவரைப் பற்றி தெரியக்கூடும்?
படித்தவர்கள், பண்பாளர்கள் அத்தனை பேர்களும் வெளியே இருந்து பார்த்து ரசிக்கக்கூடிய ஒரு விளையாட்டு இன்றைய அரசியல். நமக்கான களத்தை தேர்ந்தெடுக்க விரும்புவதில்லை என்பது எத்தனை உண்மையோ அந்த களம் உருவாவதற்குண்டான எந்த வாய்ப்புகளையும் நாம் தான் கெடுக்கவும் விரும்புகின்றோம். கடந்த பத்து நாளில் இந்த அரசியல் உள் அரங்கு விளையாட்டுகளை நேரிடையாக பார்க்க வாய்ப்பு கிடைத்தது. ஒரு ஏற்றுமதி நிறுவனத்தின் அத்தனை செயல்பாடுகளையும் அங்குலம் அங்குலமாக நேரிடையாக களமிறங்கி ரசித்த எனக்கு இந்த அரசியல் பாலபாடங்களில் உள்ள ஆரம்ப அரிச்சுவடியோ பயம் என்ற சொல்லில் தான் உருவாக்கப் படுகின்றதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
ஒவ்வொரு நடுத்தரவர்க்கத்திற்கும் உண்டான இருப்பு சார்ந்த விசயங்களுக்காக எத்தனையோ கொள்கைகளை விட்டுக் கொடுத்து வெளியே நிற்கவேண்டியாய் இருக்கிறது. முதலீட்டுக்ளை முடக்கியவர்களுக்கு தங்கள் சொத்துக்களை காத்துக் கொள்ள வேண்டிய அவசர அவஸ்யங்கள். படித்தவர்களுக்கு தங்களுக்குண்டான எந்த தேவைகளும் இந்த அரசியல் தந்து விடப் போவதில்லை என்ற கருத்து ஆழப் பதிந்து போய்விட்டது. அன்றாடங்காய்ச்சிகளுக்கு இது குறித்து எப்போதும் என்றும் அக்கறையிருப்பதில்லை. மீதி யார்?
விழிப்புணர்ச்சி என்பது நமக்கு விரும்பத்தாக ஒன்றாக இருப்பதால் ஊழல் என்பது இன்று இந்திய ஜனநாயகத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகவே மாறியுள்ளது. எத்தனை கேவலங்களை ஒருவர் செய்து இருக்கிறாரோ அவர் தான் இருப்பதில் சிறப்பு என்ற தகுதியும் எளிதில் வந்து விடுகின்றது. வேறென்ன வேண்டும். கேட்பவர்கள் தயாராக இருக்க சொல்பவர்களுக்கு புராண கதைகளுக்காக பஞ்சம்..
நமக்கு வசதியாக எத்தனையோ வார்த்தைகளும் வாசகங்களும் நமக்குள் வைத்திருப்போம்.
நம்மால் ஒன்றும் செய்யமுடியாது? வம்பை விலை கொடுத்து வாங்க வேண்டாம்? இயல்பை தாண்டிப் போனால் வரும் விளைவுகளை நம்மால் சந்திக்க முடியாது? நம் செயல்பாடுகளால் நம்முடைய தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை அமைதியிழந்து விடும்.
மொத்தத்தில் பயம்.
எங்கு திரும்பினாலும் பயத்தை தவிர வேறொன்றுமில்லை. இந்த பயமே இன்றைய அரசியலில் பிரதான பங்கு வகிக்கின்றது. இந்த பயத்தை வைத்துக் கொண்டு தான் அத்தனை பேர்களும் மேலே வந்து விடுகிறார்கள். அவர்களால் பயத்தை உருவாக்க முடியும். வீட்டுக்குள் வந்து மிரட்ட முடியும். வீட்டுக்குள் வெளியே நின்று கத்த முடியும். நடுத்தரவர்க்கத்தினர்களுக்குண்டான மிகப் பெரிய பலவீனமே இதில் இருந்து தான் தொடங்குகின்றது. தனக்குத் தேவையான சகிப்புத்தன்மையோடு வாழும் வாழ்க்கையை சமாதானப்படுத்திக் கொண்டு வாழவும் தொடங்கிவிடுகிறார்கள்.
அரசியல் என்பது சேவை மனப்பான்மை உள்ளவர்கள் வர வேண்டிய இடத்தில் இருந்து பதவியை வைத்து சம்பாரிக்க விரும்புவர்களின் இடமாக மாறியுள்ளது. எந்த காலத்திலும் மாளிகையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ஓட்டுப் போட வருவதில்லை. படித்தவர்களில் கூட குறைவான சதவிகிதம் தான் வாக்குச் சாவடிக்கு வருகிறார்கள்.
மீதி இருப்பவர்கள் யார்?
அன்றாடங்காய்ச்சிகளும்,அன்றாட வாழ்க்கைக்கே போராடிக் கொண்டிருப்பவர்களும் தானே?
எதைத் தருவாய்? எப்போது தருவாய்? என்று அவர்கள் கேட்பதில் என்ன தவறு? ஓட்டை வாங்க ஆட்கள் தயாராக இருக்கும் போது வாங்கத்தானே செய்வார்கள்.
ஒவ்வொரு தேர்தலில் வாக்களிக்காதவர்களின் உரிமைகள் பறிக்கப்படும் என்ற சட்டம் வரும்பட்சத்தில் இந்த மாளிகைவாசிகள் தெருவுக்கு வந்து தானே ஆக வேண்டும். நாங்கள் ஓட்டளித்தால் மட்டும் திருட வந்தவர்கள் திருப்பியா தரப் போகிறார்கள் என்ற ஆதங்கத்தை போக்க என்ன செய்யலாம்? சார்பாளர்களாக தேர்ந்தெடுத்தவர்கள் செயல்படாத பட்சத்தில் அவர்களை திரும்ப அழைத்துக் கொள்ளும் சட்டம் இந்தியாவில் வந்தால் எப்படியிருக்கும்?
உங்கள் ஓட்டு என்பது உங்கள் உரிமை.
நாம் உணர்ந்து போடப்போகும் நபர்கள் மூலம் தான் நம்மை நாமே பெருமை படுத்திக் கொள்ளமுடியும்.
//சார்பாளர்களாக தேர்ந்தெடுத்தவர்கள் செயல்படாத பட்சத்தில் அவர்களை திரும்ப அழைத்துக் கொள்ளும் சட்டம் இந்தியாவில் வந்தால் எப்படியிருக்கும்?//
ReplyDeleteதிரும்பி அழைக்காமல் இருக்கவும் பணம் கொடுப்பார்கள்
மனதில் உறுதி வேண்டும்
ReplyDeleteவாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கினப் பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகம் இங்கு தென் பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
ஓம்! ஓம்! ஓம்! ஓம்!
//அவர்களை திரும்ப அழைத்துக் கொள்ளும் சட்டம் இந்தியாவில் வந்தால் எப்படியிருக்கும்?//
ReplyDeleteசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்ள நம்ம அணைத்து அரசியல் பிழைபவர்கள் யாரும் தயாராக மாட்டார்கள்.
ஒரு வேலை, உச்ச நீதி மன்றம் தேர்தல் ஆணைய அமைப்புடன் சேர்ந்து இது போல ஒரு திருத்தம் கொண்டுவரவேண்டும் .
இது போன்ற ஒரு பொதுக்கருத்தினை முதலில் உருவாக்க வேண்டும்.
எங்கு திரும்பினாலும் பயத்தை தவிர வேறொன்றுமில்லை. இந்த பயமே இன்றைய அரசியலில் பிரதான பங்கு வகிக்கின்றது. இந்த பயத்தை வைத்துக் கொண்டு தான் அத்தனை பேர்களும் மேலே வந்து விடுகிறார்கள். அவர்களால் பயத்தை உருவாக்க முடியும். வீட்டுக்குள் வந்து மிரட்ட முடியும். வீட்டுக்குள் வெளியே நின்று கத்த முடியும். நடுத்தரவர்க்கத்தினர்களுக்குண்டான மிகப் பெரிய பலவீனமே இதில் இருந்து தான் தொடங்குகின்றது. தனக்குத் தேவையான சகிப்புத்தன்மையோடு வாழும் வாழ்க்கையை சமாதானப்படுத்திக் கொண்டு வாழவும் தொடங்கிவிடுகிறார்கள்.
ReplyDelete......மிகத் தெளிவாக - சரியாக சொல்லி இருக்கிறீர்கள். உங்கள் சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று.
எனது அரசியல் நிலைப்பாட்டை எம்.எஸ்.உதயமூர்த்தியின் படம் மூலம் சொல்லியுள்ளீர்கள்.
ReplyDeleteநாமெல்லாம் மாங்கு மாங்குன்னு எழுதி சாதிக்காததை தமிழக காங்கிரஸ் உட்பூசல்கள் சாதித்திருக்கிறது:)
நண்பர் விஜய் ஆனந்த் - தன் உயர்ந்த லட்சியங்களை இன்றைய இந்தியாவிலும் செயல்படுத்த முடியும் என்று பலமான நம்பிக்கை கொண்ட நல்ல மனிதர். அவர் தேர்தல் காப்புறுதித் தொகைக் காப்பாற்றப்படப் பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteமாற்றம் வேண்டும் என்பவர்கள் மக்கள் சேவகர்களுக்கு (அவர்கள் வெற்றிபெறுகிறார்களா, தோற்கிறார்களா என்று பார்க்காமல்) வாக்கு போட வேண்டும், அப்போது தான் வருங்காலத்திலாவது மாற்றம் வரும்.
ReplyDeleteவிஜய் ஆனந்த் என்னைப்போல இருந்தவர், நாம் ஏன் முயற்சிக்க கூடாது என்று களத்தில் இறங்கி உள்ளார். அவருக்கு கோவை தெற்கு மக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும். அவருக்கு மட்டும் இல்லை மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளர்கள் அனைவருக்கும் ஆதரவளிக்க வேண்டும்.
ஜோதிஜி!தற்போதைய சூழலிலும் வருங்காலத்திலும் மக்கள் சக்தி இயக்கம் தேவையான ஒன்றே.இவர்கள் குறைந்த பட்சம் தங்களை வெளிப்படுத்தவாவது செய்ய வேண்டும்.
ReplyDelete// கோவைக்குள் இருப்பவர்களுக்கோ, புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டு கட்சி சார்பாக எழுதிக் கொண்டிருக்கும் எத்தனை நண்பர்களுக்கு இவரைப் பற்றி தெரியக்கூடும்?//
நிகழ்வுகளும்,இதோ நீங்கள் அறிமுகப்படுத்துவது மாதிரி வெளிப்படுத்தலுமே மாற்று சக்தியும் இருக்கிறதென்று யோசிக்க வைக்கும்.மக்கள் சக்தி இயக்கம் வெளிச்சத்துக்கு வரட்டும் முதலில்.
இந்தப் பதிவும் சும்மா ஜிவ்வுன்னு எகிறுது, ஜி! எல்லாத்தையும் படித்துவிட்டு இப்பெல்லாம் சுலபமா ஜீரணித்துவிட்டு நகர்ந்து விடுகிறார்கள் என்பது ரொம்ப உண்மை...
ReplyDeleteநம்மூரில் பெரியளவில ஏதாவது ஜீம் பூம் பாம்னு மேஜிக் அளவில நடந்தாதான் உண்டு. திருடனுக்கு மாற்றுத் திருடனை எத்தனை காலம்தான் மாத்தி மாத்தி நம்மோட முகமூடியா பயன்படுத்திக்கிறது...
எம். எஸ். உதயமூர்த்திய நினைச்சா என்னாத்தை சொல்லுறது. என்னோட கல்லூரி காலங்களிலும் அவர்தான் ஹீரோ என்னளவில. இப்படி பண்ணிடுச்சே நாடு அவரையும்...
கோவையில் விஜய் ஆனந்தின் முயற்சி பெரியளவில் கவனிக்கப்பட வாழ்த்துக்கள்.
//எத்தனை ஆயிரம் பேர்கள் எத்தனை விதமான கருத்துக்களை இந்த சமூக நலனுக்காக விதைத்துள்ளார்கள்? ஏன் இத்தனை பேர்களின் சிந்தனைகளும் இந்த சமூகத்தில் எந்த மாற்றத்தையும் உருவாக்கவில்லை?//
ReplyDeleteஎழுத்து எல்லோரையும் சென்றடைவதில்லை.
அரசியலுக்கு மனச்சாட்சி இல்லாதவர்கள் மட்டுமே வருகிறார்கள்...வர முடியும்!!!.
ராசா, கல்மாடி செய்தது தெரியாதென்றால் நீ எதற்கு என்று மன்மோகனைக் கேட்பவர்கள், பங்காரு லட்சுமண் வாங்கியதற்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை என்று சொன்னவர்கள்தான். பங்காரு இப்பொழுது கட்சியில்...
மத்தியில் "பணத்திற்கு ஓட்டு" விமர்சிப்பவர்கள், கர்நாடகத்தில் எப்படி???
இதில் ஏமாறுவது / ஏமாற்றப்படுவது நாம் மட்டுமே...
"பணத்திற்கு ஓட்டு" ல் பணம் வாங்கிய சக உறுப்பினர்களை, பாராளுமன்றத்தில் விமர்சிக்காதது ஏன்?
அடிக்கிறமாதிரி அடிக்கிறேன். அழுகிறமாதிரி அழு....யார் ஆட்சியில் இருந்தாலும் 80:20.
வேறு விடை தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.
கேப்டன் கட்சி ஆரம்பிக்கும்போது இருந்த எதிர்பார்ப்பென்ன? இப்பொழுது நடந்தது என்ன?
மருத்துவர், கேப்டன் போல, ஓட்டு வங்கியை உருவாக்குங்கள். பேரம் பேசி பணம் பண்ணலாம்....
ரிப்பீட்:
//எத்தனை ஆயிரம் பேர்கள் எத்தனை விதமான கருத்துக்களை இந்த சமூக நலனுக்காக விதைத்துள்ளார்கள்? ஏன் இத்தனை பேர்களின் சிந்தனைகளும் இந்த சமூகத்தில் எந்த மாற்றத்தையும் உருவாக்கவில்லை?//
சிந்திக்கத்தூண்டும் ஆழம்.
ReplyDeleteNice Post..
ReplyDeleteஏன் உங்கள் நல்ல வாழ்க்கையை கெடுத்துவிட்டு ஏன் இங்கே வந்தீங்க?' //
ReplyDeleteஆழமான கேள்விதான் கேட்டிருகிறார் ஆர்.வெங்கட்ராமன் .
வானத்தை ஏக்கமுடன் பார்த்திருக்கும் விவசாயியின் நிலைக்கும், வாக்காளர்களின் நிலைக்கும் வித்தியாசம் இருக்கிறதா என்ன??
கனவு மெய்ப்படட்டும்.வாழ்வு வளம் பெறட்டும்.
என்னத்த சொல்ல !! பதிவை படிக்கும் பொழுது சங்கடமாக இருக்கிறது !!கலைஞரை எதிர்த்து ட்ராபிக் ராமசாமி நிக்கிறார் !!இந்த மனுஷனுக்கு என்ன தில்லு :) அவரும் எனக்கு தெரிஞ்சு எத்தனையோ தேர்தல்களில் நின்று கொண்டிருக்கிறார் ,மக்களுக்காகவும் மக்களின் பிரச்சனைகளுக்காகவும் களத்தில் இறங்கி போராடி இருக்கிறார் !
ReplyDeleteநல்ல மனிதர்களை இருக்கும் பொழுது நாம் அடையாளம் கான்பத்தில்லை .இறந்த பிறகு இவரை போல் வருமா என்று பாடம் நடத்துவோம் !
எத்தனையே விதமான சிந்தனைகள் இருந்தாலும் அன்பின் ஜோதிஜி கவலைப்படுபவர்களின் சதவீதம் மிகவும் கம்மி. நினைப்பவர்கள் செயல்படமுடியாதவர்களாய் இருக்க செயல்பட முடிபவர்கள் அனுபவிக்க கூடியவர்களாய் உள்ளனர். அதனால் மாற்றுசிந்தனை உடையவர்களின் ஆசையும் ஆவலும் நிராசையாக போய்விடுகிறது அன்பின்.
ReplyDeleteநாணயம் = நா நயம்
ReplyDeleteநாணயம் இன்மையே முதற்காரணமோ ?
சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.
ReplyDelete"....எத்தனை ஆயிரம் பேர்கள் எத்தனை விதமான கருத்துக்களை இந்த சமூக நலனுக்காக விதைத்துள்ளார்கள்? ஏன் இத்தனை பேர்களின் சிந்தனைகளும் இந்த சமூகத்தில் எந்த மாற்றத்தையும் உருவாக்கவில்லை...."
ReplyDeleteதனிநபர்களால் சமூகத்தை மாற்றிவிட முடியாது. தொலைநோக்குப் பார்வையுடன் ஒரு அமைப்பாக செயல்படும் போது மட்டுமே மாற்றங்கள் சாத்தியம். அதுவும் அவ்வளவு எளிதல்ல. பல்வேறு இழப்புகளை சந்திக்க வேண்டி வரும்.
தற்போதைய ஜனநாயக அமைப்பில் நல்லவர்கள் வந்தாலும் எதுவும் மாறாது என்பதற்கு வரலாற்றை பின்னோக்கிப் பார்த்தாலே போதும்.
தங்களின் சமூக சிந்தனை மேலும் கூர்மையடைய வாழ்த்துக்கள்!
பதிவிற்கு "சேவை மனப்பான்மை உள்ளவர்கள் அரசியலுக்கு ஏன் வருவதில்லை?": என்றும் தலைப்பு தரலாம்.
ReplyDeleteமுதலில் உதயமூர்த்தியை நினைவு கூர்ந்ததற்கு நன்றி.
அரசியலுக்கு பொது சேவை மட்டுமே குறிக்கோளாக உள்ளவர் என் வருவதில்லை? நாம் எதாவது செய்ய முடியுமா? இந்த கேள்வியை (என்னைப் போல்) பல நூறு பேர்கள் தினம் தினம் மனதுக்குள் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். அப்போது சிந்தனையை ஒருமுகப்படுத்தி ஓரிரு அடிகள் வைக்கிறார்கள். கருத்தொருமித்த நண்பரை அப்போதோ அல்லது அந்த சிந்தனையின் தாக்கம் இருக்கும் ஓரிரு தினங்களுக்குள் சந்தித்தால் தன கருத்துக்களை சொல்லி அவரையும் எண்ணத் தூண்டுகிறார் ; கொஞ்சம் விவாதம்; இது போல் ஓரிரு வாரங்களுக்குள் நான்கைந்து பேருடன் இதே போல் விவாதம்; மிகச்சில முறை இது அடுத்த படிக்கு செல்லும்: அனைவரும் ஒரே இடத்தில் விவாதம்; நெறிப் படுத்தப்படாத விவாதம்; சில கோப்பை தேநீர்; அடிதடியில் முடியவில்லை என்றால் மீண்டும் சுப யோக சுப தினத்தில் மீண்டும் கூடுவோம் என்று தீர்மானம் (இந்தியா-பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஒழிப்போம் என்று பேசுவதைப் போன்று). கூட்டம் ஒத்திவைப்பு. சுபம்.
இப்போது வலைப் பதிவுலகம் உள்ளதால், உணர்ச்சி வசமாக ஒன்றிரண்டு பதிவுகள்; இருபது-முப்பது பின்னூட்டங்கள்; சுபம்.
கோவைப் பகுதியில் மக்கள் கட்சி பற்றி குறிப்பிட்டு உள்ளீர்கள். அந்த முயற்சி மென்மேலும் அடுத்தடுத்து அடிகள் வைத்து முன்னேற வாழ்த்துக்கள்.
முடிக்கும் முன்: வேங்கடராமனின் reaction is disappointing. பொறி இயல் கல்வி கூடங்கள், சிறுதொழில் முயற்சிகளை ஊக்கியவர்; தொழிற்பேட்டைகள் அமைய காரணமானவர் என்று பேசப்பட்டவர்;
நல்ல தெளிவான பார்வை கொண்ட கட்டுரை நண்பரே...
ReplyDeleteஅப்புறம் மக்கள் சக்தி இயக்கத்தில், எனது அப்பா விருதுநகர் மாவட்டத்தின் அமைப்பாளராக இருந்தார்கள்... :)
என்றும் உங்கள் அருண் பிரசங்கி
அம்மணமாய் இருக்கிற ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்
ReplyDeleteஇப்போதுள்ள அரசியல் சூழலில் இந்தியதேசத்திற்கு உடனடி தேவை இந்தியதேச நலனில் மட்டுமே உண்மையான அக்கறையுள்ள ஒரு சர்வாதிகாரி!!!!
ReplyDeleteநன்றி சார்.
வணக்கம் உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன் பாருங்கள்.
ReplyDeleteநன்றி
இது நேற்றைய வடை!சூடா இருக்குதுன்னு இன்றைக்குத்தான் தமிழ்மணம் கொண்டு வருது:)
ReplyDelete////ஆனால் படித்து முடித்து விட்டு வெளியே எவரும் தான் வாழும் சமூகத்திற்குத் தேவையான எந்த மாற்றத்தையும் உருவாக்கவில்லை என்பதை விட அதற்கு தயாராகவும் இல்லை என்பதே நிதர்சனம்.
ReplyDelete/////
:-)
@ஊரான் said...
ReplyDelete//..தனிநபர்களால் சமூகத்தை மாற்றிவிட முடியாது. தொலைநோக்குப் பார்வையுடன் ஒரு அமைப்பாக செயல்படும் போது மட்டுமே மாற்றங்கள் சாத்தியம். அதுவும் அவ்வளவு எளிதல்ல. பல்வேறு இழப்புகளை சந்திக்க வேண்டி வரும்...//
தனி நபர்களை மட்டுமே நீங்க சந்திக்க முடியும் சமுதாயத்தை அல்ல.. தனி நபர்கள் மாறினால் தான் சமுதாய மாற்றம் வரும்..
Thomas Ruban said...
நிங்க தினமலர் அந்துமணி ரமெசு..வாசகரா ? அந்தாள் தன் இப்படி கேனதனமா எழுதுவான்.
சர்வாதிகாரி ஆண்ட நாடு எதாவது உருப்பட்டு இருக்க?
உலகின் எல்லா நாடுகளையும் பாருங்க... மக்களட்சி உலகின் சிறந்த விஷயம். அதற்கு மக்கள் பழக்கபட வேண்டும்.
நம்மக்கள் தனிநபர் வழிபாடு, பற்றாக்குறை வாழ்க்கைக்கு தான் பழகி இருக்கங்க. இன்றைக்கு வயது 25-30 க்குள் இருக்கும் பொருளாதாரா சுதந்திரம் பெற்ற மக்களிடம் பேசி பாருங்க. அப்பெ தெரியும் நம் அரசியல் பற்றி மக்களின் விழிப்புணர்வு.
நீங்களும் நானும் செய்யவேண்டியதும் இருக்கு. நமக்கு தெரிந்த அனைவரையும் வாக்களிக்க வலியுறுத்துவோம்.நாமும் தவறாது வாக்களிப்போம். இந்த முறை யாருக்கேனும் வாக்களீகனும் அவ்வளவே. அடுத்த முறை நாம் வாக்களித்த , வாக்களிக்க மறுத்த கட்சி செயல்பாட்டை அலசி , தவறாது வாக்களிப்போம். இப்படி செயல்பட்டல் எதிர் காலத்தில் குறைதது 99% வாக்கு பதிவு நிச்சயம். குழப்படி செய்பவர் தொற்பதும் நிச்சயம்.. செயல்படுத்த நீங்க ரெடியா ?
இதை பற்றி ஒரு பதிவு போடுங்க...
அதாவத் ...நமக்கு தெரிந்த அனைவரையும் வாக்களிக்க வலியுறுத்துவோம்.நாமும் தவறாது வாக்களிப்போம்.
ஜோதிஜி!இந்த இடுகையின் தலைப்பை அழகிரியின் அலறல் பதிவுக்கு தொடுப்புக் கொடுத்துள்ளேன்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete//மக்கள் சக்தி கட்சி சார்பாக விஜய் ஆனந்த போட்டியிடுகிறார்//
ReplyDeleteஇவர் இத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆவல் மட்டுமே நம்மிடமுள்ளது. ஆனால் நடைமுறையில் ...
:(
//ஏன் உங்கள் நல்ல வாழ்க்கையை கெடுத்துவிட்டு ஏன் இங்கே வந்தீங்க?' //
இப்படி கேட்டவரும் ஒரு அரசியல்வாதிதானே; பிறகென்ன கேட்பார்?