அஸ்திவாரம்

Monday, January 10, 2011

வரலாறு முக்கியம் அமைச்சரே


நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன் கதை உங்களுக்குத் தெரியுமா?  தமிழ்பட இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் நாடோடிகள் என்ற பெயரில் சமீபத்தில் வந்ததே?

இப்பொழுதுதாவது உங்கள் ஞாபகத்திற்கு வருகிறதா?

அந்த படத்தில் நடித்த நடிகர் சசிகுமார் தன்னோட தங்கைக்கிட்ட கேட்பாரே ஒரு கேள்வி?  அப்பா பெயர் என்ன? தாத்தா பெயர் என்னன்னு கேட்டுக்கிட்டு வந்தவரு அவருக்கு அப்பா, அவருக்கு அப்பான்னு போட்டுத்தாக்க கடைசியில் அந்த இயற்கையிலேயே வாய் பேச முடியாத அந்த நடிகை திருதிருவென்னு விழிக்க அப்போது லேசா குட்டு வைத்து ஒரு வசனம் சொல்லுவாரு.  

"நம்ம பாட்டன் பூட்டன் சரித்திரமே நமக்கு தெரியமாட்டுதுன்னு" போற போக்குல சொல்லிட்டு போவாரு. நாம் படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்தபிறகு அதன் அர்த்தத்தை புரிந்து கொள்ள விரும்பாமல் மறந்து போயிடுவோம்.  எதற்காக நம் வாழ்க்கையில் சரித்திர நிகழ்வுகள் தேவையாய் இருக்கிறது?  

இராமநாதபுரம் என்றொரு மாவட்ட மக்களில் ஒருவனாக வாழ்ந்த எனக்கும் இதில் வரப்போகும் மன்னர்களுக்கும் என்ன சம்மந்தம்? 

நான் இப்போது எழுதுவதை படிக்கக்கூட உங்களுக்குச் சங்கடமாக இருக்ககூடும்.என்னையே உதாரணமாக வைத்து சுட்டிக் காட்டிக் கொள்கின்றேன்.  அவரவர் தங்களைப் பொறுத்திப் பார்த்துக் கொண்டு சரியா? தவறா? என்று உணர்ச்சி வசப்படாமல் உணர்வுபூர்வமாக யோசித்துப் பாருங்கள்.

என் அப்பா பெயர் இராமநாதன்.  தாத்தாவின் அப்பா பெயர் சுப்பையா, இவரின் அப்பா பெயர் ரெங்கசாமி.  நான் கல்லூரி படிக்கும் வரைக்கும் என் குடும்ப பின்புலத்தை அறியும் ஆவல் இல்லாமல் தான் இருந்தேன்.சற்று வெளியுலகத்தை பார்க்க ஆரம்பித்தபிறகு ஒரு நாள் மதிய நேரத்தில் அம்மாவிடம் உட்கார்ந்து ஒவ்வொன்றாக கேட்டு ஒரு அட்டவணை போட்டு பார்த்த போது பல விசயங்களை அதில் கொண்டுவரமுடியவில்லை.  

அதற்கு மேலும் ஆர்வம் இல்லாமல் நானும் அந்த பழைய தாளை இன்று வரையிலும் பாதுகாப்பாய் வைத்துள்ளேன்.  இதைப் பற்றி எழுத வேண்டும் என்று யோசித்த போது தாத்தா வழியில் உள்ள சொந்தம் ஒருவரை அழைத்து ஒவ்வொன்றாக விசாரித்துக் கேட்ட போது மேலே சொன்னவர்களுடன் அதற்கு முன்னால் வாழ்ந்த மூன்று தலைமுறைகளைப் பற்றி கொஞ்சம் புரிந்து கொள்ள முடிந்தது.  பின்னால் அவற்றைப் பார்க்கலாம்.

ஆனால் இந்த இடத்தில் குறிப்பிட விரும்புவது என் குழந்தைகளுடன் ஆறு தலைமுறைகளைப்பற்றி மட்டும் தான் என்னால் சேகரிக்க முடிந்தது.  அதிலும் எங்கள் முன்னோர்களைப் பற்றிய முழுமையான தகவல்கள் இல்லை.  ஆனால் இந்த முன்னார்களின் வழியில் மரபு பாதையில் மேலே சென்றால் நாம் இனி பார்க்கப்போகும் பாண்டிய மன்னன் காலத்தில் எங்கள் குடும்பம் சார்ந்த எவரோ வாழ்ந்திருக்கக்கூடும். 

அவர்கள் கருப்பா? செவப்பா? குட்டையா? நெட்டையா?  என்ன செய்து கொண்டுருந்தார்கள்? எவ்விதம் வாழ்ந்தார்கள்.மன்னர் குடும்பத்தில் பணிபுரிந்தார்களா? இல்லை பஞ்சம் பிழைக்க ஊர் ஊராக அலைந்தார்களா? இடையில் எத்தனையோ கலப்பின படையெடுப்பாளர்கள் முதல் ஆங்கிலேயர்கள் ஆட்சி வரையிலும் தமிழ்நாடு முழுக்க பரவியிருந்தார்களே?  அப்போது இவர்களின் நிலைப்பாடு என்ன?

இப்போது எனக்கு கொடுக்கப்பட்டுருக்கும் இனம், மொழி, ஜாதி போன்ற மூலக்கூறின் உண்மையானவர்களாகத்தான் என் முன்னோர்களும் இருந்தார்களா? இல்லை இடையில் கலப்பினம் உருவானதா?  

ஏராளமான கேள்விகளை கோர்த்துக் கொண்டே போகலாம்.

இது போன்ற விசயங்களை நாம் படிக்கவே சற்று சங்கடமாகத்தான் இருக்கும்.   நாம் ஏதோவொரு நம்பிக்கையில் தான இந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுருக்கிறோம். அம்மா முதலில் சுட்டிக்காட்டிய இவர் தான் உன் அப்பா என்பதிலிருந்து தான் இந்த நம்பிக்கை தொடங்குகிறது.

இது இப்படியே இருக்கட்டும்.

நாம இப்பொழுது பாண்டிய மன்னர் காலத்தில் இருக்கிறோம். எழுதுறவனின் சொந்தக் கதையை சொல்லாமல் இது என்ன பாண்டிய மன்னர்களின் கதையை தெரிஞ்சு நமக்கென்ன ஆகப்போகுதுன்னு பாக்குறீங்களா?  

இங்கேயிருந்து நூல் புடுச்சு தம் கட்டி நடந்து வந்தால் தான் கடைசியிலே ஆங்கிலேயர்கள் ஆட்சி புரிந்த இந்த இராமநாதபுரம் (1910) வரைக்கும் வந்து சேர முடியும்.  அதுக்கு அப்புறம் தான் தன்னுடைய சொந்தக் காசப் போட்டு கவிஞர் கண்ணதாசன் செலவழித்து படம் எடுத்து போண்டியான சிவகங்கை சீமை வரைக்கும் வந்து நிற்கமுடியும். கட்டக்கடேசியாத்தான் காரைக்குடியில் இறங்கி அம்முற கூட்டத்தில் நம்மை அலுங்காம அமுக்கிக் கொண்டு பேரூந்தில் எங்க ஊருக்கு போய்ச் சேரமுடியும்.  


இவ்வளவு சுத்திப் போகனுமான்னு நினைக்கக்கூடாது.  ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம் உண்டு..  காரணம் நாம எப்போதும் இன்றைக்கு உள்ள வாழ்க்கை, இதில் உள்ள பிரசச்னை என்று ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டே பல விசயங்களையையும் எளிதில் மறந்து போயிடுறோம்.  பழைய விசயங்கள் எப்போதும் நமக்கு வேப்பங்காய் மாதிரி தான் இருக்கும்.  அதுவும் புதுசா பணம் வந்து திடீர்ன்னு பணக்காரனா வந்தவுங்க நடவடிக்கைகளை பார்த்தாலே தெரியும். செலக்ட்டீவ் அம்னீசியா நோய்க்காரன் மாதிரி அவர்களின் வாழ்க்கை முறை மாறிப் போன ஆச்சரியங்களை பார்த்துருப்பீங்க தானே? 

என்ன காரணமாய் இருக்க முடியும்.?  

எதையும் தெரிந்து கொள்ளாமல் இருந்தால் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதாக இருக்காது.  இனம், மொழி, பக்கத்து வீட்டுக்காரன், அடுத்த தெரு, பக்கத்து மாநிலம், அண்டை நாடு என்று எது குறித்தும் அக்கறையிருக்காது. "கண்டதே காட்சி. கொண்டதே கோலம்"  என்பது போல சிறு புள்ளியா வாழ்ந்து செத்தும் போயிடலாம். 

ஆனால் அடுத்த தலைமுறை?

பணமே சேர்த்து வச்சுட்டுலாம். இங்கீலீசு கத்துக் கொடுக்கலாம். வெளிநாட்டுல வேலை வாங்கியும் கொடுத்துடலாம். ஆனா நம்ம பய புள்ளைங்க பத்திரமா வச்சு அவங்களை காப்பாத்திக்கவாவது நல்லது கெட்டது கற்றுக் கொடுக்க வேண்டும் தானே? அதுக்கும் இந்த சரித்திரத்திற்கும் என்ன சம்மந்தம் இருக்க முடியும்னு கேட்குறீங்களா?

மேலே உள்ள படத்தை பாருங்க. இந்த படத்தில் இந்தியா எப்படியிருக்கு? இலங்கை என்ற வரைபடம் தெரியுதா?  கொஞ்சம் உத்துப் பாருங்க. ஆமாங்க.... நாம் நம்பித்தான் ஆகனும். இந்த லெமு காலத்திற்கு நீங்க போக வேண்டாம்.   7000 வருடங்களுக்கு முன்பு ஈழம் என்பது ஒரு தனித்தீவே அல்ல.  இப்ப நாம சொல்ற மன்னார் வளைகுடா அல்லது பாக் ஜலசந்தி போன்ற வார்த்தைகள் எல்லாமே காலப்போக்கில் இயற்கை உருவாக்கிய அற்புதம்.  

ஆங்கிலேயர்கள் தெளிவாக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தங்களோட பெயரையே சூட்டிக்கிட்டாங்க.இராமேஸ்வரத்திலிருந்து இப்ப உள்ள இலங்கைக்கு நடந்தே போயிடலாம்ன்னு சொன்னா நம்புவீங்களா?  

நம்ம குடும்பத்தில் உள்ள நமக்கு முன்னால் வாழ்ந்து இறந்து போன் ஒரு ஐந்து தலைமுறைகளைப் பற்றி கொஞ்சம் யோசித்துப் பாருங்க. அப்புறம் உங்களுக்கே ஆச்சரியமாயிருக்கும். என்ன செய்தார்கள்? எப்படி வாழ்ந்தார்கள்? என்ன முன்னேற்றம்? ஒவ்வொன்றையும் காரண காரியத்தோடு கோர்த்து பார்த்தாலே நாம் இப்போது வாழ்ந்து கொண்டுருக்கும் லட்சணத்திற்கு நாம் காரணமா? இல்லை நம்மோட அப்பன் பாட்டன் முப்பாட்டான் காரணமான்னு எளிதில் புரிந்து கொள்ளமுடியும். 

புத்திசாலித்தனம் என்பது வாழ்நிலை, சூழ்நிலை என்பது எத்தனை முக்கியமோ அந்த அளவிற்கு மரபு சார்ந்த விசயங்களும் ஒரு காரணம் தான் என்பது நான் சொன்னது அல்ல.  இது அறிவியல் உண்மையும் கூட. 

தாத்தா காலத்தில் ஐந்து கிராமங்களே சொந்தமாக இருந்த ஒரு குடும்பம் மூன்றாவது தலைமுறை வரும் போது மாதச் சம்பளத்திற்கு செல்லும் அளவிற்கு வாழ்க்கை மாறிப் போவது ஏன்? ஏராளமான ஜோதிடர்கள், பிராமணர்கள், ஆலோசகர்கள் என்று குழு வைத்து தங்கள் ஆட்சி பரிபாலணத்தை உருவாக்கிய சோழப் பேரரசில் இன்று எவர் மிஞ்சி இருக்கிறார்கள்? நானும் தஞ்சைப் பகுதியில் பிறந்திருந்தால் இந்த சோழர்களைப் பற்றி ஆராய்ச்சி செய்திருக்கலாம். 

ஆனால் என்னுடைய மாவட்டத்தைப் பற்றி யோசிக்கும் போது இந்த பாண்டிய மன்னர்கள் தான் முன்னால் வந்து நிற்கிறார்கள்.  ஒரு குடும்ப வரலாற்றை யோசிக்க நாம் நமக்கு முன்னால் வாழ்ந்தவர்களைப் பற்றி யோசிக்கும் போது அத்துடன் நாம் வாழ்ந்த ஒரு மாவட்டத்தை, அதில் வாழ்ந்த மக்களை, அவர்களின் கலாச்சார பின்புலத்தைப் பற்றி பேச வேண்டுமானால் எத்தனை விசயங்களை ஒரே சமயத்தில் தராசு தட்டில் நிறுத்த வேண்டும் என்பது புரியுதா?  

வரலாறு முக்கியம் அமைச்சரே? .

காரணம் ஒரு இனம் அல்லது குழு தாங்கள் ஒற்றுமையாக வாழ்ந்த போது உருவான சந்தோஷ நிகழ்வுகளையையும்,ஒற்றுமையில்லாமல் உள்ளுக்குள்ளேயே அடித்துக் கொண்டு செத்த போது உருவான தாக்கத்தையும் இந்த பாண்டிய மன்னர்கள் மூலம் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.  ஒரு சமூகத்தின் வீழ்ச்சியென்பதற்கு சாமி என்று நம்பப்படும் ஆண்டவனால் உருவாவது அல்ல.  அந்த மக்களை ஆண்டவனால் தான் உருவாகின்றது.  ஆட்சிக்கு வருபவர்களின் தனிப்பட்ட சுயலாப கொள்கைகள் காலப்போக்கில் உள்ளேயிருக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கு மறைமுக ஊக்கத்தை கொடுப்பதால் "வல்லான் வகுத்ததே வாய்க்கால்" என்று ஒவ்வொரு இடத்திலும் இனம் மொழி ஜாதி மதம் என்ற போர்வையில் காட்டு விலங்குகளை விட தலையில்லா பிண்டங்களைப் போல வாழ்வதன் காரணம் என்ன? 

இன்றைய ஆட்சியாளர்களின் சுரண்டல் மனப்பான்மை இப்போது உருவானது அல்ல.  இது தான் காலங்காலமாக ஆளப்படுபவர்களால் கொள்கை என்ற பெயரில் மக்கள் மேல் திணிக்கப்படுவது.

இன்று இலவச திட்டம்.  அன்று அன்னதானம்.  பெயர் தான் வித்தயாசம்.  இது போன்ற விசயங்களை பழைய வரலாற்று நிகழ்வுகளோடு ஒப்பிடும் போது தான் நாமே சில முடிவுக்கு வர முடியும்.

நம் நாட்டைப் பற்றி நம்முடைய மனதிற்குள் இருக்கும் பல விடை தெரியாத கேள்விகளை நீங்கள் சேர, சோழ, பாண்டிய மன்னர்களைப் பற்றி முழுமையாக விரிவாக படித்துப் பார்த்தாலே ஒரு முடிவுக்கு வந்து விடலாம்.  

இப்போது உள்ள சூழ்நிலையில் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தான் வாழ்ந்து வந்த வாழ்க்கையின் அடிப்படையும் தெரியவில்லை. அடுத்தவனையும் வாழ விடவும் ஆசையில்லை.மொத்தத்திலும் ரத்தம் நாடி நரம்பு என்று அத்தனையிலும் பொறாமை கோபம், வெறி என்று ஓடி இறுதியில் பணம் ஒன்றே பிரதானம் என்கிற ரீதியில் "என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.  அதற்காக எந்த எல்லைக்கும் செல்லலாம்" என்பதே சமீப சமூக வாழ்க்கையாக மாறியுள்ளது.  

நம்முடைய உண்மையான வரலாறு தெரிந்தால் வாய்ச்சவடால்கள் மட்டும் பேசிக் கொண்டுருக்கும் இன்றைய அரசியல் வியாதிகளை நாம் ஆள அனுமதித்து இருப்போமோ? இல்லை அவர்கள் பேசுவதைத்தான் வாய்திறந்துக் கொண்டு கேட்டுக் கொண்டுருப்போமா? இல்லாவிட்டால் ஒரு இனமே ஈழத்தில் அழிக்கப்பட்ட போது நம் தமிழினம் அமைதி காத்திருக்குமா? 

தமிழனுக்கு வரலாறும் தெரியாது.  அப்படியே தெரிந்தாலும் திரித்து மறைத்து கூறப்பட்ட வரலாறே காரணமாக இருப்பதால் எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்க்கும் மனோநிலைக்கு வந்துள்ளோம். இது போன்ற காரணங்களினால் தான் நாம் உண்மைகளைத் தேடிப் போக விருப்பமில்லாமல் சற்று நேரம் நம்மை உணர்ச்சிபடவைக்கும் கலைகளை கண்டு ரசிக்கத் தொடங்குகிறோம். 

தமிழ மன்னர்களின் வீரஞ்சொறிந்த போர்களைப் பற்றியும், அவர்கள் ஆளுகையில் இருந்த நாடுகளைப் பற்றியும் நம்மால் உணர முடிந்தால் இத்தனை சிறப்பு வாயந்தவர்களால் அப்போது வாழ்ந்து கொண்டுருந்த மக்களை மேம்பட்டு வாழ வழி செய்யமுடியவில்லை என்பது கேள்வியாக எழும்தானே? ஏன் இந்த மன்னர்கள் காலத்தில் வாழ்ந்த மக்கள் பஞ்சம், பட்டினியில் இறந்தார்கள் என்பதை யோசிக்க முடியும்?

என் தாத்தா செய்யாத காரியங்களை என் அப்பா செய்ய முற்பட்ட போது அவரால் ஒரு சிறிய எல்லையை மட்டும் தான் உடைத்துக் கொண்டு வெளியே வர முடிந்தது. தாத்தாவுக்கு ஆயிரம் ரூபாய் என்பது லட்சமாக தெரிந்தது. இதன் காரணமாகவே அவரின் ஆசைகள் ஒரு சிறிய எல்லைக்குள் இருந்தது. ஆனால் என் அப்பாவுக்கு கோடி ரூபாய் என்பது பெரிதாக தெரிந்தது. ஆனால் இவர்கள் வாழ்ந்த அந்தந்த காலகட்டத்திலே என் நண்பனின் அப்பா கடல் தாண்டி சென்று கணக்கில்லாமல் செல்வம் சேர்த்தவர். அவர் கூட்டை உடைத்துக் கொண்டு வெளியே வர தயாராக இருந்தார்.  அவரிடம் செல்வம் ஒட்டிக் கொள்ளத் தொடங்கியது.  

ஆனால் நான் என் குடும்பத்தினர் தீர்மானித்த எல்லையைத் தாண்டி வெளியே வந்த காரணத்தினால் இன்று சர்வ தேசத்தையும் உற்றுப் பார்கக என்னால் முடிகின்றது. இதுவே என் குழந்தைகளின் பார்வை எங்கள் குடும்ப தலைமுறையை விட வீர்யமாக சிந்திக்க தயாராக இருப்பதால் அவர்களின் வீச்சும் வெகு தூரம் செல்ல முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் உருவாகின்றது. 

நாம் கற்றுக் கொள்ளத் தயாராக வேண்டும். அல்லது நம்மால் முடியாததை நம் தலைமுறைகளுக்காவது கற்றுக் கொடுக்க முயற்சிக்க வேண்டும்.  இந்த இராமநாதபுரம் என்றொரு தனிப்பட்ட மாவட்டத்தைப் பற்றி யோசிக்க படிக்க தேட என்று ஒவ்வொன்றாக உள் நுழைந்து வரும் போது என் முன்னோர்களும் இந்த பெருந்திரளுக்குள் தானே இருந்து வாழ்ந்து இருக்கிறார்கள் என்பதை யோசிக்க வைக்கின்றது. 

என் தாத்தா 84 வயது வரைக்கும் வாழ்ந்தார்.  இறக்கும் கடைசி நொடி வரைக்கும் எந்த நோய் நொடியும் இல்லை. என் அப்பா 70 வயதை தொடுவதற்குள் தாத்தாவிடம் இல்லாத சர்க்கரை நோய் முதல் ரத்த அழுத்தம் வரைக்கும் இருந்தது. 

தாத்தாவிற்கு நோய் எதுவும் இல்லாத காரணத்தால் அவர் வாயைக் கட்ட வேண்டிய அவஸ்யமில்லாமல் கால்லிட்டர் செக்கு எண்ணெய் போட்டு காரமான மிளகாய் துவையலை மூணு ஈடு இட்லியை விழுங்க முடிந்தது.  அப்பாவும் அதே போல் தான் சாப்பிட்டார்.  கூட மாத்திரைகளை வைத்துக் கொண்டு.  எங்கே தவறு?

ஆனால் இவர்களின் சாப்பாட்டு வெறியைப் பார்த்தே என் பாதி ஆசைகளை குறைத்து அது இப்போது இல்லாமலே போய் சுயக்கட்டுப்பாடு என்ற வட்டத்திற்குள் கொண்டு வந்து நிறுத்தியாகி விட்டது.  அவர்களுக்கு இருந்த எந்த மரவு வழி நோய்களும் என்னிடம் இல்லை.  என்ன காரணம்? ஆனால் அவர்களால் படுத்தவுடன் தூங்கி விட முடிந்துள்ளது. அது என்னால் முடியவில்லை.அவர்களுக்கு வருடத்தின் அத்தனை இரவுகளும் தூங்குவதற்கான பொழுதுகள்.  அதுவே எனக்கு பாதி இரவுகள் உழைத்தே ஆகவேண்டிய தருணங்கள்.  எனக்கு உருவாகும் நோய்கள் நானே உருவாக்கிக் கொள்வது அல்லது வாழ்நிலை உருவாக்கி விடுவது. 

தன்னை உணர்தல்.  தன்னால் என்ன முடியும்? தனக்கு என்ன சாத்தியம்?  எது சிறப்பு?  என்பதை நம் வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு கற்றுக் கொடுக்கும் அல்லது இது போன்ற பழைய வரலாற்று நிகழ்வுகளை படிக்கும் போது நம்மை சிந்தனைகளை சிறிதேனும் மாற்ற உதவும்.


பழைய சரித்திர நிகழ்வுகளை படிக்கும் போது நம்முடைய தனிப்பட்ட பழக்கவழக்கங்கள் மாறுகிறதோ இல்லையோ மண்டைக்குள் இருக்கும் உலுத்துப் போன எண்ணங்களை ஒரு உலுக்கு உலுக்கென்று கண நேர நிகழ்வு உருவானாலே போதுமானது தானே.

வாங்க வெரசா நடையை கட்டி பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா என்று பாடிக் கொண்டே நுழைவோம். இவர்களை சுருக்கமாக பார்த்துவிட்டு அங்கிட்டு போனாத்தான் நம்ம சாதி சனங்க கொளுத்தும் வெயிலில் பட்ட பாட்டை பார்க்கமுடியும்.. .  

24 comments:

  1. இந்த காலத்தில் சொந்த தாத்தா பாட்டியே நிறைய பசங்களுக்கு தெரிய மாட்டேங்குது. அந்த காலம்போல் எல்லா சொந்தங்களும் தெரியுமா? அவர் யாரு? சொந்தக்காரரு! ஆனா எந்த சொந்தம்னு கூட தெரியாது!

    வரலாறுங்கிறது பெரும்பாலானவர்களுக்கு கசப்பான விசயமாகவே இருந்து வருகிறது பள்ளி நாட்களிலிருந்து. இதில் வரலாறு மீது ஆர்வம் வைத்து கற்பவர்கள் மிகக் குறைவு.புதைபொருள் ஆராய்ச்சி படிக்க எத்தனை பேர் விரும்புகிறார்கள்?

    உண்மையில் வரலாறு ஒரு வித்தியாசமான உணர்வை அளிக்கும். நமக்கு முன் இப்படி நடந்துள்ளதா என கேள்விப்படும்போது நமக்கு ஏற்படும் ஆச்சரியம், அனுபவங்களை வேறெதுவாலும் தர முடியாது! வரலாற்றின் மீது எல்லோருக்கும் லேசான ஆர்வம் இருந்தாலும் அதை ஆழ்ந்து கற்க அதிகம் பேர் விரும்புவதில்லை!

    ReplyDelete
  2. நானும் என் தலைமுறை மூத்தோர்கள் பற்றி தெரிந்துக்கொள்ள விசாரித்த பொது எனக்கே வியப்பாக இருந்தது இப்படிப்பட்ட தலைமுறையை சேர்ந்தவனா நான் என்று!

    ReplyDelete
  3. காரணம் ஒரு இனம் அல்லது குழு தாங்கள் ஒற்றுமையாக வாழ்ந்த போது உருவான சந்தோஷ நிகழ்வுகளையையும்,ஒற்றுமையில்லாமல் உள்ளுக்குள்ளேயே அடித்துக் கொண்டு செத்த போது உருவான தாக்கத்தையும் இந்த பாண்டிய மன்னர்கள் மூலம் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.


    ............ very interesting fact.

    ReplyDelete
  4. பழைய சரித்திர நிகழ்வுகளை படிக்கும் போது நம்முடைய தனிப்பட்ட பழக்கவழக்கங்கள் மாறுகிறதோ இல்லையோ மண்டைக்குள் இருக்கும் உலுத்துப் போன எண்ணங்களை ஒரு உலுக்கு உலுக்கென்று கண நேர நிகழ்வு உருவானாலே போதுமானது தானே.


    ...Sure....

    ReplyDelete
  5. ஒன்றுக்கு ஒன்று தொடர்பற்ற வகையில் இந்தக் கட்டுரையின் எண்ணங்கள் அங்கே இங்கே என்று வளைந்து நெளிந்து ஒடித் திரிவதனைப் போன்ற ஒரு பிம்பத்தை வழங்கினாலும் இழுத்து கட்டும் பொழுது ஒரு புள்ளியில் இணைவதைப் பார்க்கலாம்.

    எத்தனையோ சிறப்பு மிக்க மன்னாதி மன்னர்கள் இந்தப் பூமியை ஆண்டிருந்தாலும் இன்னமும் பீடித்திருக்கும் தரித்திரியமும், அவ நம்பிக்கைகளும், சமூகத்தில் விரவிக் கெடக்கும் ஏற்றத் தாழ்வுகளுக்கும் வரலாற்றின் எந்தப் பகுதியிலும் பஞ்சமே இல்லாமல் இருந்திருக்கிறது என்றே தெரிகிறது. சங்க காலத்தில சாதி, மதம் கிடையாதமே தமிழர்களுக்கு, அப்படியா?

    பாரம்பர்யமிருப்பவர்கள் ”மரபு வழி மரத்தை” தேடி அமைத்துக் கொள்வதில் ஒரு கிரக்கம் கிடைக்கலாம் அதனைப் போன்ற ஒரு வாய்ப்பே/வசதியோ மறுக்கப்பட்டு நமக்கு பக்கத்து கோட்டிலேயே ஓடி வந்தவர்களுக்கான எண்ணம் எப்படியாக இருக்கும் என்று எண்ணச் செய்கிறது.

    ஜோதிஜி, இந்த பதிவு இன்றைய தினத்தில் எனக்குள் ஓடிக் கொண்டிருக்கும் எண்ண ஓட்டங்களை பிரதிபலிக்கிறது. அதுவும், உங்க இராசராச சோழன் தொடர்பான காணொளியைச் சார்ந்து படிக்க ஆரம்பிச்ச விசயங்களைக் கொண்டு...

    ReplyDelete
  6. இன்றைய தலைமுறையினருக்கு பாட்டி தாத்தா மடியிலிருந்து கதை கேட்கும் கொடுப்பனவு குறைவாகத்தானே இருக்கு ஜோதிஜி !

    ReplyDelete
  7. தனசேகர்January 11, 2011 at 6:24 AM

    //நம்ம பாட்டன் பூட்டன் சரித்திரமே நமக்கு தெரியமாட்டுது

    எனக்கும் இந்தக் கேள்வி மண்டையில் குட்டாக விழுந்தது . நான் சிறிய வயதில் கேட்டு மூன்று தலைமுறைகளுக்கு மேல் தெரிந்துகொள்ள முடியவில்லை. ஒவ்வொரு முறையும் யாராவது பற்றி, அவர்களின் சொந்த விவரம் கேட்கும்பொது, கவனிக்காமலேயே விடுகிறேன் :( . விவர வரலாறை விட, அவர்களைப்பற்றிய செய்தியே முக்கியத்துவம் பெறுகிறது :(. மாற்ற முயற்சிக்க வேண்டும் !

    ReplyDelete
  8. பரம்பரை பெருமைகள் தான் மறுபக்கம் அடிமைகளையும் தாழ்த்தப்பட்டவர்களையும் உருவாக்குகிறது என்பது எனது தாழ்மையான எண்ணம். நல்ல சந்ததிகளை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணம் தவிர்த்து பரம்பரைகளை நான் நினைப்பது கிடையாது. சாதிப் பெயரில் இருந்த தெருக்கள் ஒருகாலத்தில் குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே வசித்தனர், தற்போது அப்படி இல்லை, எதிர்காலத்தில் சாதிப் பெயரில் தெருக்களே இருக்காது. பல சாதி சமூகத்தில் இருக்கும் நாம் பல இன சமூகமாக (சிங்கையை போல்) மாறுகின்ற சூழலை இன்றைய உலகமயமாக்கள் ஏற்படுத்திவருகிறது. தமிழனுக்கு தனி அடையாளம் மொழி என்பது தவிர்த்து பிற அடையாளங்கள் மறைந்துவிடுவது நல்லது. தனிமனிதனுக்கு கிடைக்கும் புகழை / இழிவை அவனுடைய பிற்காலத்தினருக்கும் பொருத்தில் பார்த்து போற்றுவது தூற்றுவது என்பதை என்னளவில் நான் தவிர்த்தே வருகிறேன்

    ReplyDelete
  9. எனக்கு ஆறு தலைமுறைகள் வரலாறு தெரியும்...

    ReplyDelete
  10. வெள்ளத்த தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத தனைய துயர்வு.

    ReplyDelete
  11. அன்பின் ஜோதிஜி திரைப்படத்தை மேற்கோள் காட்டி ஒரு கருத்தை சொல்வருவதை ஏற்றுக்கொள்ளமுடியுமா தெரியவில்லை.

    இன்றைக்கு பெருவாரியான படங்களின் தரம் உங்களுக்கு என்னவென்று தெரியும். இந்த திரைப்படத்தை ஏன் பார்த்துகொண்டு ஒதுங்கியவர்கள் நிறைய இருப்பினும் தாங்கள் சொல்லும் குறிப்பிட்ட திரைப்படத்தை தங்களுடைய பதிவை படிப்பவர்களிலேயே பாதி பேர் பார்த்திருக்கலாம் பாதி பேர் பார்க்காமலிருக்கலாம் ஆகையால் தாங்கள் அதன் மூலம் உணர்த்தவரும் கருத்தை உள்வாங்கி கொள்வதில் சிரமங்கள் ஏற்படலாம் என்பதை தெரிவிக்கின்றேன்.

    வரலாறு அவசியம். சோறு போட்ட வேலை செய்வாங்க பழையகாலம். குவாட்டர்,பிரியாணி போட்ட இப்ப வேலை செய்யிறாங்க இது இப்போ...

    ReplyDelete
  12. உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்

    ReplyDelete
  13. பள்ளி,கல்லூரிகளில் படிக்கும் போதுதான் அதன் மகத்துவம் தெரியாமல் விட்டு விட்டேன்.உங்கள் மூலமாகவாவது கொஞ்சம் தெரிந்து கொள்கிறேன்.இன்று [11-ஜன-11] காலை கலைஞர் தொலைக்காட்சியில் சந்தித்த வேளை நிகழ்ச்சியில் மருத்துவர் ஒருவர் வலி மேலாண்மை என்ற தலைப்பில் கூடிய மட்டும் நல்ல தமிழில் உரையாற்றிக் கொண்டிருந்தார்.அதில் ஒரு நோயாளியின் வரலாறும்,நோயின் வரலாறும் தெரிந்திருந்த ஒருவர் சிகிச்சை அளிக்கும் போது நிவாரணம் சிறப்பாக இருக்கும் என குறிப்பிட்டார்.அப்படி ஒரு தனிப்பட்ட மனிதனின் நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ துறைக்கே வரலாறு பயன்படும் போது நமக்கு,நாட்டிற்கு என எத்தனையோ பயன்கள் இருக்கும்.வாழ்த்துகளோடு வரலாற்று தொடரை வரவேற்கிறேன்.

    ReplyDelete
  14. நானும் ஆர்வத்துல விசாரிச்சேன், என்னால ஆறு லெவல் தான் போகமுடிஞ்சது. அந்த தாத்தா வீட்டு மாப்ளைய வந்தவராம்!!!! என்னத்த சொல்ல நம்ம வரலாறு இப்படி!!!

    ReplyDelete
  15. கோவி கண்ணனின் பின்னூட்டத்தை வழிமொழிகின்றேன்.

    கத்தம் ஓதுதல் என்று ஒரு நிகழ்வு (முன்னர்) வருடா வருடம் எங்கள் வீட்டில் நடைபெறும். (திதி கொடுப்பது போல்). என்னுடைய சிறு வயதில், முன்னோர்களின் பெயர்களை வீட்டுப் பெரியவர்கள் சொல்லச் சொல்ல நான் எழுதுவேன். எங்கள் குடும்பத்தில் சாதாரணமாகவே ஒவ்வொருவரின் பெயரும் ஒரு மைல் நீளத்துக்கு இருக்கும். இதில், 30, 40 பெயர்களையெல்லாம் நினைவில் நிறுத்துவது என்பது சிரமம் என்பதை விடவும் எனக்கு விருப்பமில்லா ஒன்றாக இருந்துள்ளது. அதிலும் எங்கள் குடும்ப முன்னோர் ஒருவர் அன்றைய மன்னனின் அரசவையில் கவிஞராக இருந்தார் என்று சில கவிதைகளையும் சொல்வார்கள். இருக்கும் கவிஞர்கள் இம்சை போதும் என்று நான் முன்னோர் வரலாறு பக்கம் தலைவைத்தும் படுக்கவில்லை. :-)

    எங்கள் சொந்த ஊரில் ஊர்த்தலைவர் குடும்பத்தாரை மரைக்காக் குடும்பத்தார் என்று அழைப்பார்கள். இன்றும் அந்த நடைமுறை இருக்கின்றது. 50 வயது முதியவர் ஒருவர் மரைக்காக் குடும்பத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவனை மரைக்கா என்று அழைப்பது இன்றும் இருக்கின்றது. குடும்பப் பெருமைகள் இருக்கும் வரை இதுபோன்ற ஏற்றத் தாழ்வுகள் இருந்துகொண்டுதான் இருக்கும். ஏழு அல்லது எட்டுத் தலைமுறை முன்னோர்களைப் பற்றி, முயற்சி எடுத்தால் அறிந்து கொள்ள முடியும். ஆனால், சக மனிதனை மனிதனாகப் பார்க்கவிடாத இந்தக் குடும்பப் பெருமையை அறிந்து கொள்ள நான் விரும்பவில்லை. என் தாத்தா தலைவராக இருந்ததால், ஊர் மக்கள் என்னையும் என் வாரிசுகளையும் தலைவராகவே பார்க்க வேண்டும்; விளிக்க வேண்டும் என்று எண்ணுவது மடமைத்தனம்.

    ----
    மரைக்காயர் என்ற சொல்லின் மூலம் மரக்கலம் + ஆயர், மரக்கலாயர். ஆனால், எங்கள் ஊரிலும், அதைச் சுற்றியிருக்கும் பகுதிகளிலும் மரைக்கா என்னும் சொல் தலைவர் என்னும் அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகின்றது.

    ---
    என்னுடைய ஊர் என்று மட்டுமில்லாமல், பரவலாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் அந்தந்த ஊர் தலைவர்கள்/செல்வந்தர்கள்/நிலச்சுவான்தார்கள் குடும்பங்கள் தத்தம் குடும்பப் பெருமையை காரணம் காட்டி இன்னும் பிரிவினைகளைத் தொடர்ந்துதான் வருகின்றன.

    மூப்பனாரின் குடும்பத்தில் ஒரு திருமணம் சர்ச்சைக்குள்ளானதே. அடிப்படைக் காரணம் என்ன?

    சாருபாலா (தொண்டைமான்) மேயரானது எந்த அடிப்படையில்?

    எட்டயபுரத்தில் 'எட்டு' என்ற எண்ணை உச்சரிப்பதைத் தவிர்ப்பது ஏன்?
    ----

    இனப்பெருமையையும் இனத்தின் வரலாறையும் அறிவது அவசியம். குலப்பெருமையையும், குடும்பப்பெருமையையும் அறிவது அநாவசியம். இனப்பெருமை ஒற்றுமைக்கு வழிவகுக்கும். குலப்பெருமை/குடும்பப்பெருமை வேற்றுமைக்கு வழிவகுக்கும்.

    மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை.

    .

    ReplyDelete
  16. //பாரம்பர்யமிருப்பவர்கள் ”மரபு வழி மரத்தை” தேடி அமைத்துக் கொள்வதில் ஒரு கிரக்கம் கிடைக்கலாம் அதனைப் போன்ற ஒரு வாய்ப்பே/வசதியோ மறுக்கப்பட்டு நமக்கு பக்கத்து கோட்டிலேயே ஓடி வந்தவர்களுக்கான எண்ணம் எப்படியாக இருக்கும் என்று எண்ணச் செய்கிறது.//

    இப்பொழுதுதான் செந்தழல் ரவியின் பதிவில் பின்னூட்டப் புயல்கள் பட்டியலில் தெகா பெயரைக் கொடுத்துவிட்டு வந்தேன்.

    நான் பக்கம் பக்கமாக அடித்த பின்னூட்டத்தை, இங்கே ஒரே பத்தியில் சொல்லிவிட்டார் தெகா. பின்னூட்டக் கலையை அறிய பயணிக்கவேண்டிய தூரம் இன்னும் நிறைய உள்ளது.

    ReplyDelete
  17. * சக மனிதனை மனிதனாகப் பார்க்கவிடாத இந்தக் குடும்பப் பெருமையை அறிந்து கொள்ள நான் விரும்பவில்லை.

    * இனப்பெருமையையும் இனத்தின் வரலாறையும் அறிவது அவசியம். குலப்பெருமையையும், குடும்பப்பெருமையையும் அறிவது அநாவசியம். இனப்பெருமை ஒற்றுமைக்கு வழிவகுக்கும். குலப்பெருமை/குடும்பப்பெருமை வேற்றுமைக்கு வழிவகுக்கும்.


    கும்மி, அருமை! அழகாக எடுத்துப் போட்டுட்டீங்க. Liked it a lot!!

    ReplyDelete
  18. தெகாவும் கும்மியும் சொல்லிவிட்டபின் புதுசாக சொல்ல என்ன இருக்கின்றது? ஆமாம்... ஏன் இந்த இடுகை கொஞ்சம் அலைபாய்கின்றது?

    ReplyDelete
  19. நீண்ட பதிவு.
    எல்லோரும் சொல்லியதை திரும்பச் சொல்ல வேண்டியதில்லை. எனவே எல்லாருடைய கருத்தும் எனக்கும் பொருந்தும்.

    ReplyDelete
  20. என்னமோ தெரியவில்லை..முதன் முதலில் பிள்ளையார் பட்டிக்கு சென்ற போது அந்த இடம் நான் ஒடி விளையபடிய இடமாகவே மனதில் பதிந்தது..அது போல உங்க எழுத்தும்......

    ReplyDelete
  21. சொல்ல வந்தது அறோமை. ஆனால் கட்டுரை ஒரு கோர்வையா இல்லை. என்ன ஆச்சு?

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.