இந்தியா பேசியபடி எதுவும் நடந்த பாடில்லை. பிரபாகரனுக்கோ இப்போது அமைதியாய் இருப்பதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை. ஆனால் தினந்தோறும் பலவிதமான வலிகள், இதற்கிடையே தங்களை விழுங்கத்துடிக்கும் மற்ற சகோதர போராளிக்குழுக்கள். நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் பிரச்சனைகள் பூதாகரமாகிக்கொண்டுருந்தது. இந்த நிலைமையில் தான் திலீபன் " நான் உண்ணாவிரம் இருக்கப் போகின்றேன். இந்தியா நம்மை ஏமாற்றி விட்டது " என்று (செப்டம்பர் 15) சாகும் வரைக்கும் உண்ணாவிரதம் என்று காந்திய பாதையை தேர்ந்தெடுத்து தொடங்கினார்.
இவரின் உண்மையான பெயர் இராசையா பார்த்திபன். இவர் அப்போது விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவில் பணியாற்றிக்கொண்டுருந்தார். மொத்த ஒப்பந்தத்தையும், பின்னால் பேசப்பட்ட ரகசிய பேரங்களையும் நன்றாக அறிந்தவர். பின்னாளில் சுப. தமிழ்செல்வனை ஆன்டன் பாலசிங்கம் தனக்கு உதவியாக வளர்த்தெடுத்ததை போலவே இப்போது இந்த திலீபன் பாலசிங்கத்தால் வளர்க்கப்பட்டுக் கொண்டுருப்பவர்.
அமைதிப்படை உள்ளே நுழைந்தது முதல் மொத்த நிகழ்வுகளையும் பார்த்துக்கொண்டுருந்த ஜே.என்.தீட்சித் திலீபன் உண்ணாவிரதம் தொடங்கியதும் பறந்து வந்து பிரபாகரனை மிரட்டத் தொடங்கினார். "உங்களால் மொத்த அமைதியும் சீர்குலைந்து விடுமோ? " என்று அஞ்சுகிறேன்.
ஆனால் அப்போது இவர் பிரபாகரனை பார்ப்பதற்கு முன் அமைதிப்படை தளபதிக்கு இட்ட கட்டளை " பிரபாகரனை கைது செய்து விடுங்கள். முடிந்தால் பேச்சு வார்த்தைக்கு வரும் போது சுட்டுக்கொன்று விடுங்கள்". என்ற கட்டளை மறுக்கப்பட்டது. முதல் காரணம் முறைப்படியான அறிவிப்பு இராணுவ தலைமை தளபதியிடம் இருந்து வரவில்லை. மற்றொன்று அமைதிக்கான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டுருக்கும் போது தான் தோன்றித்தனமாக கோழைத்தனமாக சுட்டுக்கொல்வதில் விரும்பாத அமைதிப்படை தளபதி தீட்சித் கொடுத்த கட்டளையை மேலே அனுப்பினார்.
அதுவே அப்போது இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் ஒரு சலசலப்பை உருவாக்கியது. இந்த நிகழ்வுகள் அத்தனையும் பின்னாளில் தளபதி ஊடகத்தில் சொன்ன போது தான் அன்றைய தீட்சித் கோர முகம் அணைவருக்கும் புரிந்தது.
ஏற்கனவே போராடிக்கொண்டுருந்த மிதவாத தலைவர்களை இலங்கை ஆட்சியாளர்கள் பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தம் என்று பழியெடுத்துக்கொண்டுருந்தார்கள். நம்பியவர்களும், நம்பவைத்தவர்களும் இப்போது இல்லை. ஆனால் மொத்த நோக்கத்தையும் இந்தியா வேறொரு பாதையில் தீட்சித் என்றொரு ஆளுமையில் கேள்விக்குறியாய் மாற்றிக்கொண்டுருந்தது. இப்போது இந்தியா பிரபாகரனை வறுத்துக்கொண்டுருந்தது
பிரபாகரன் ஆயுதப்பாதைக்கு திரும்பிய நாள் முதல் இன்று தான் முதன் முதலாக இயக்கத்தில் உள்ளவர் காந்திய பாதையின் வழியே சென்று உண்ணாநோன்பு (நல்லூர் கந்தசாமி கோவில்) போராட்டம் தொடங்கியது இலங்கைக்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. செப்டம்பர் 26 தண்ணீர் கூட அருந்த மறுத்து உயிர் துறந்தார் திலீபன். இலங்கைக்கு எப்போது இது குறித்து அக்கறையில்லை. காரணம் அவர்கள் அரை இறுதி ஆட்டத்தை எதிர்பார்த்துக் காத்து கொண்டுருக்கிறார்கள். ஆனால் காந்தி தேசத்திற்கோ எப்போதும் போல இதுவும் கடந்து போகும் என்பது போல் அலட்சியம். மக்கள் மத்தியில் கேள்விக்குறி உருவாகத் தொடங்கியது. இது முதல் கோணல்.
தீலிபன் கேட்ட உடனடி சிங்கள குடியேற்றங்களை தடுத்தல், ஒப்பந்தப்படி விரைவான நடைமுறைகள், தொடர்ச்சியாக சிங்கள அரசாங்கம் போட்டுக்கொண்டுருக்கும் போலித்தனமான குற்றச்சாட்டுகளை நிறுத்துதல், பயங்கரவாதிகள் என்று சொல்லிக்கொண்டு உள்ளே சிறையில் அடைத்து வைத்துருப்பவர்களை விடுதலை செய்தல், தமிழர் பகுதியில் நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்பட்டுருக்கும் ராணுவ முகாம்களை மூடுதல்.
ஆனால் அவரை சவக்குழியில் தான் இறுதியில் மூடினார்கள். ஆனால் இவருடைய சாவு எதற்கு உதவியது தெரியுமா? அந்த நிமிடம் வரைக்கும் ஏற்கனவே பேசிய அமைதி உடன்படிக்கை பற்றி பேசி புரிந்துணர்வுகளை உருவாக்க பலாலி இராணுவ தளத்திற்கு வருமாறு பிரபாகரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஒரு வேளை திலீபன் சாகவில்லை என்றால் தொடக்கப்புள்ளி கூட தொடங்காமல் அன்றே முற்றுப்புள்ளியாய் முடிந்து இருக்கும்.
விடுதலைப்புலிகளின் இயக்கத்தில் உருவான இந்த இறப்பு மக்கள் மத்தியில் ஒரு சலசலப்பையும், இந்திய அமைதிப்படை குறித்த தவறான எண்ணங்களையும் உருவாக்கக் காரணமாக மட்டும் தான் இருந்தது. மிச்ச சொச்சம் என்று நம்பிக்கைகள் குறித்தான எண்ணங்கள் மக்கள் மத்தியில் இருந்து இருக்கலாம். அதைப்போலவே பிரபாகரன் மனதிலும் ஊசலாட்டம் தொடங்கியிருந்ததே தவிர அது முழுமையாக வெறுப்பு என்று மாற்றம் பெற்றது எப்போது தெரியுமா?
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்த குமரப்பா மற்றும் புலேந்திரன். இவர்கள் அப்போது கமாண்டர்கள் என்ற பதவியில் இருந்தவர்கள். இலங்கை இராணுவத்திற்கு சிம்ம சொப்பனமாக இருந்து பல தாக்குதல்களுக்கு காரணமானவர்கள். ராமேஸ்வரத்தில் இருந்து இவர்கள் இருவரும் மற்ற பதினைந்து பேர்கள் என்று மொத்தமாக 17 பேர்கள் இலங்கையை நோக்கி வந்து கொண்டுருந்தனர். இப்போது இலங்கை இராணுவத்தினர் அத்தனை பேரும் ஹாயாக ஓய்வெடுத்துக்கொண்டுருக்க மொத்த பாதுகாப்பு இந்திய அமைதிப்படையின் கைகளில். எங்கெங்கு காணினும் இந்திய ராணுவத் தலைகள். பயணித்துக்கொண்டு வந்த விடுதலைப்புலிகளுக்கு அலாதியான நம்பிக்கை. இப்போது மொத்த பாதுகாப்பும் அமைதிப்படையின் கைகளில் இருக்கிறது. நமக்கு ஏதும் நேராது?
விதி அங்கிருந்து தான் விளையாடத்தொடங்கியது. பகவான் நேரிடைப் பார்வைபட பட்டாசு வெடிக்க காலன் பார்த்திருந்த நேரம் உருவான காலம் அது. வந்தவர்களை அமைதிப்படை கைது செய்து விட தகவல் பஞ்சாய் பறந்து ஜெயவர்த்னேவுக்கு சென்றது. போதாதா? பாதுகாப்புத்துறை அமைச்சர் லலித் அதுலத் முதலி தன்னுடைய மொத்த அன்றாட கடமைகளை அத்தனையும் அக்கட ஒதுக்கிவைத்து விட்டு இவர்களை தொடர ஆரம்பித்தார். பலாலி என்ற இடத்தில் இருந்து அவர்கள் கொழும்புக்கு கொண்டு வர ஆணை.
இந்த இடத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம். அமைதிப்படைக்கு தலைமை தாங்கி வந்த தலைமைத்தளபதியின் குணாதிசியங்கள். அவருக்கு கொடுக்கப்பட்ட கட்டளை இலங்கையின் உள்ளே உருவாக்கப்பட வேண்டிய அமைதி. ஆனால் உள்ளே வந்தது முதல் நடந்து கொண்டுருக்கும் மொத்த அரசியல் மற்றும் அதைச் சார்ந்த தேவையில்லாத விமர்சனங்கள் அவருக்கு கண்களைக் கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது. போர் என்றால் வெளியே சென்று போராடலாம். ஆனால் போர் செய்யக்கூடாது. ஆனால் போராட தயாராய் இருக்க வேண்டும். இதைப்போன்ற வினோதமான மனோநிலையில் எந்த வீரனை எப்படி தயார் படுத்துவது. அவரே அன்று குழப்பிப்போயிருந்தார் என்பது தான் சரியாக இருக்கும்.
இது போக தீட்சித் கட்டளை என்பது அடியாளுக்கு இடப்படுவது போல். முறைப்படி பெற்ற பயிற்சி என்பதற்கு சம்மந்தம் இல்லாமல் அன்றாடம் ஒவ்வொரு கட்டளையும் மாறிக்கொண்டே இருந்தது, இந்த போர்க்களம் என்பது இங்கு அவரின் போதாத காலத்தை நினைவு படுத்துவதாக இருந்தது. இவரின் தீவிர முயற்சியும் பலிக்கவில்லை. கொழும்பு கொண்டு செல்லப்படுவதில் எந்த மாற்றமும் இல்லை. இந்தியா முயற்சி செய்ததே தவிர முழுமை இல்லை. இந்த இடத்தில் நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய ஒன்று. மொத்த அதிகாரமும் ஜெயவர்த்னே கையில் இருந்ததே தவிர உள்ளே உள்ள ஆளுமை அத்தனையும் அமைதிப்படையிடமும், அதன் ரிமோட் இந்தியாவிடமும் இருந்தது. உண்மையான அக்கறையிருந்து இருந்தால் அன்றைய நிகழ்வு வேறு விதமாக மாற்றம் பெற்றதாக இருந்தது இருக்கும்.
ஒப்பந்தப்படி உண்டான வாக்குறுதிகள் கூட அந்த சமயத்தில் காற்றில் பறக்கவிடப்பட்டன. பிடிபட்டவர்கள் கொழும்பு சென்றால் என்ன நடக்கும்? கொழும்பு நாலாவது மாடி சித்ரவதை என்பது இன்று வரையிலும் புகழ்பெற்றது. ரசித்து ருசித்து சிங்களர்கள் செய்யும் அலாதியான வேலைப்பாடு நிறைந்த நுணுக்கமான சித்ரவதைக்கூடம். இவர்கள் புலிகள் வேறு. கொண்டாட்டத்திற்கு சொல்லவா வேண்டும். அன்றைய மொத்த ஆட்சியாளர்களும் இந்த 17 பேர்கள் மேல் தான் கவனத்தில் வைத்து இருந்தார்கள் என்றால் அது மிகையல்ல.
கொழும்பு செல்லப்படுவதற்கு முன் பிரபாகரன் கொடுத்து அனுப்பிய 17 சயனைடு குப்பிகள் அவர்கள் வீரமரணத்தை உலகிற்கு உணர்த்தி அதிர்ச்சியலையை உருவாக்கியது. இந்தியாவிற்கு ஆயாசத்தை ஏற்படுத்தியது. இலங்கைக்கு ஆவேசத்தை உருவாக்கியது. பிரபாகரன் நெற்றிக்கண் வேலை செய்யத் தொடங்கியது. ஆட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டுருந்த இந்திய அமைதிப்படையின் தாயக்கட்டை தவறாக விழுந்து பாம்பு வாயில் சிக்கி கீழே இறங்கத் தொடங்கியது. அமைதி காக்க போனவர்கள் அழிவுப்படையாக மாற வாங்க ராசா என்ற வரவேற்ற பொதுமக்கள் அத்தனை பேரும் விடுதலைப்புலிகளின் பின்னால் அணிதிரளத் தொடங்கினர்.
கோப்பில் உள்ள புள்ளிவிபரங்களை நம்பிக்கொண்டு ராஜீவ் காந்தி ஒரு பக்கம். இந்திய இராணுவ தலைமை தளபதி சுந்தர்ஜி பார்வையாளராக மறுபக்கம். இவர்கள் நடுவில் தீட்சித் இவருக்குத் துணையாக ரா உளவுத்துறை.
அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஜெயவர்த்னே. எப்படி சாதகமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற அவரின் சிஷ்யகோடிகள் மறுபக்கம். குற்றால குறவஞ்சி கொண்டாட்டத்தில் இலங்கை இராணுவத்தினர்.
இந்த இரு அணிகளுக்கும் இடையே பிரபாகரன். இவருக்கு வெளியே ஆட்டத்தின் கோட்டுக்கு அருகே காத்துக்கொண்டுருக்கும் மற்ற போராளிக்குழுக்கள். காரணம் இவர்கள் ஆட்டத்தில் பங்கெடுப்பதை விட வெற்றிக்கோப்பையை எப்படி கைப்பற்றலாம் என்ற எண்ணத்தில் மட்டும் இருந்தனர். காரணம் நடக்கப்போகும் தேர்தலில் தங்களுடைய ஆளுமையை எப்படி நிலைநிறுத்தலாம் என்ற எண்ணத்தில் தயாராக இருந்தனர்.
புலி பசித்தால் புல்லை உண்ணுமா? பிரபாகரன் அப்போதைய சூழ்நிலையில் உண்ணும் சூழ்நிலையில் இருக்க வைத்தது விதியா? அவர் நம்பாத சக்தியா?
அட்டகாசமா சொல்றீங்க. எப்டி?
ReplyDeleteஅமைதிப்படை பிரபாகரனை 4 முறை கைது செய்தது. ஆனால் அவரை விடுவித்து விட்டதாகவும் அப்பொழுதே கொன்று இருந்தால் ராஜிவ் காந்தி கொலை நடந்து இருக்காது என்றும் சொல்லப்படுகின்றதே ?
ReplyDeleteநன்றி அண்ணாமலையான். வினோத் நீங்கள் சொல்வது போல் நான் படித்தது கேட்டது புரிந்தது இல்லை. அமைதிப்படைக்கும் பிரபாகரனுக்கு விடுதலைப்புலிகள் 17 பேர்கள் இறந்த பிறகு உண்டான சந்திப்புகள் மிகக்குறைவு. ஜெயவர்த்னேவுடன் கையெழுத்து போட்டது கூட மாத்தையா. பேச்சு வார்த்தை என்பது வரைக்கும். வேறு எவரும் இது குறித்து தெரியப்படுத்துகிறார்களா என்று பார்க்கலாம்?
ReplyDelete//இந்திய அமைதிப்படையின் தாயக்கட்டை தவறாக விழுந்து பாம்பு வாயில் சிக்கி கீழே இறங்கத் தொடங்கியது. அமைதி காக்க போனவர்கள் அழிவுப்படையாக மாற வாங்க ராசா என்ற வரவேற்ற பொதுமக்கள் அத்தனை பேரும் விடுதலைப்புலிகளின் பின்னால் அணிதிரளத் தொடங்கினர்.
ReplyDeleteபுலி பசித்தால் புல்லை உண்ணுமா? பிரபாகரன் அப்போதைய சூழ்நிலையில் உண்ணும் சூழ்நிலையில் இருக்க வைத்தது விதியா? அவர் நம்பாத சக்தியா?//
மிக அருமையா எழுதுறீங்க ஜோதிஜி நெருப்பும் உண்மையும் பற்றியெரியுது உங்க எழுத்துல
அமைதிப்படை பிரபாகரனை 4 முறை கைது செய்தது. ஆனால் அவரை விடுவித்து விட்டதாக///////
ReplyDeleteஅந்நாளில் இந்த செய்தி பரப்பப்பட்டது. ஆனால் இது முழுக்க முழுக்க பொய். அப்படி விட்டவர்கள் ஏன் மாத்தையா, பிரபாகரனை கொன்றார் என்று கதை கட்ட வேண்டும். யுத்தக்களத்தில் முதலில் கொல்லப் படுவது உண்மை தானே. பிறகு தானே எதிரிகள்.
தேனம்மை வாழ்க்கை முழுவதும் தேடி அலைந்து ஆசைப்பட்ட எத்தனையோ விசயங்களில் இன்று உங்கள் விமர்சனம் அண்ணாமலையான் விமர்சனம் மூலம் ஏதோ ஒரு நம்பிக்கை முனை தென்படுகிறது. ஆனால் பயணிக்க வேண்டிய தூரம் கடைசி வரைக்கும் கொண்டு செல்ல வேண்டும். நன்றி தமிழ்உதயம் ரமேஷ்
ReplyDeleteGood writing. Keep it up!
ReplyDeleteகாந்திய பாதையில் அழிவுப்படை... இந்த தலைப்பு இப்படி இருக்க வேண்டுமோ. அழிவுப் பாதையில் காந்தியப் படை என்று .
ReplyDeleteதலைப்பு என்பது பொதுவானதாக எடுத்துக் கொண்டு பின்வருவனவற்றை ஊன்றி கவனித்துப்பாருங்கள்.
ReplyDeleteதமிழ்நாட்டில் கூட தொடக்ககால தலைவர்களாக இலங்கையில் இருந்த குமாரசாமி,அருணாசலம்,இராமநாதன் போன்றவர்கள் தமிழர்களில் இனி யாராவது பிறப்பார்களா என்பது சந்தேகம். அருணாசலத்தை பிரிட்டன் நாடாளுமன்றமே வந்து இங்கு அமர மாட்டீர்களா என்று கெஞ்சியது. குமாரசாமி தான் தொடக்க கால ஆங்கிலேயர்களுக்கு மொழிபெயர்ப்பு முதல் எல்லாமே. இராமநாதன் வாயை அடைப்பதற்கு ஆங்கிலேயர்கள் கொடுத்த சர் பட்டம் முதல் பல பட்டங்கள் பல மைல் நீளம்.
இவர்கள் உருவாக்கிய கட்சி மகாத்மா காந்தி உருவாக்கியதைப் பார்த்து தான்.
1948 முதல் 1980 வரைக்கும் போராடிப்பார்த்த தந்தை செல்வா சென்ற பாதையும் காந்திய பாதைதான்.
ராஜீவ் காந்தி அமைதியை உருவாக்குகிறேன் என்று உருவாக்கிய பாதையும் இதே.
காந்தி என்பது குறியீடு. பாதையின் நோக்கம் முடிவு ?
அன்றும் இன்றும்? இலங்கைக்கும் இந்தியாவுக்கும்?
தெளிவா இருக்குங்க.... தொடருங்க.
ReplyDelete