அஸ்திவாரம்

Thursday, February 25, 2010

இறந்து பிறந்த பிரபாகரன்

இலங்கையின் ஆட்சி பொறுப்புக்கு வருபவர்கள் சிங்களர்களாக மட்டும் தான் இருக்க முடியும்.  அதுவும் மேலாதிக்க சக்தியாகத் தான் இருந்து தொலைக்க முடியும்.  வருகின்றவர்கள் அத்தனை பேர்களும் மோசம் என்று ஒதுக்கிவிட முடியாது.  பின்னால் வரப்போகின்ற சந்திரிகா அவர்களின் கணவர் சிங்களராக இருந்தாலும் தமிழர்களின் நலனை மனதார விரும்பியவர்.  ஆனால் சிங்கள இடது சாரிகளால் அவரின் உயிரும் போக்கடிக்கப்பட்டது.  இலங்கை சுதந்திரம் பெற்ற போது மலையக தமிழர்களுக்கு ஆதரவாக அவர்களும் இந்த நாட்டில் வாழ வேண்டியவர்கள் என்பதாக ஒருமித்த குரல் எழுப்பியவர்கள் எவருமே தமிழர்கள் அல்ல.  அப்போது எதிர்கட்சியாக இருந்த இடது சாரி தலைவர்களே.

ஆட்சியாளர்கள் நல்லவர்களாக இருந்தால் உள்ளே இருக்கும் அமைச்சர்கள் தமிழர்களுக்கு எதிராக இருப்பார்கள்.  இருவரும் நல்லவராக இருந்தால் வெளியே மறைமுக ஆட்சி நடத்திக் கொண்டுருக்கும் புத்தபிக்குகள் பார்வையில் தப்பிவிட முடியாது.  இவர்கள் அத்தனை பேர்களையும் தாண்டி வெளியே வந்து விட்டால் இதற்கு மேல் உள்ளே செயல்பட்டுக் கொண்டுருக்கும் இனவாத சங்கங்கள் , கட்சிகள் முன்னால் வந்து நிற்பவர்களை உண்டு இல்லை என்று ஆக்கி விட தயாராய் இருப்பார்கள்.  எவருக்கு தைரியம் வரும்?  

இந்த வலைபின்னலை தொடக்கம் முதல் தந்தை செல்வா உணராத காரணமே அவருடைய இறப்பு வரைக்கும் அவருக்கு தோல்வியை மட்டுமே தந்தது.  அவர் பொறுப்பில் அடுத்து வந்தமர்ந்த அமிர்தலிங்கம் ஒரு வகையில் பார்க்கப்போனால் இறுதியில் மக்கள் செல்வாக்கை முழுமையாக இழந்து தொகுதி மாறி போட்டியிட்டதும், தேர்தலில் தோல்வியைத் தழுவி நானும் அரசியலில் இருக்கின்றேன் என்பது போலத் தான் வாழ்ந்து கொண்டுருந்தார்.

இலங்கையில் ஆட்சிக்கு வரும் ஒவ்வொவருக்கும் ஒவ்வொரு குணாதிசியம். அவரவர் வாழ்ந்து வந்த வாழ்க்கையில் கிடைத்த பாதிப்புகள் காரணமாக சிலர் தமிழர் சார்ந்த நல்ல விசயங்களை செயல்படுத்த தயாராய் இருந்தாலும் உள்ளே உள்ள இது போன்ற இடியாப்பச் சிக்கல்கள் அவர்களை பயமுறுத்தி வைத்து விடும். ஒரு அளவிற்கு மேல் வேண்டாம்டா சாமி என்பதாக மாற்றிவிடும்.  இது தான் இன்று வரைக்கும் இந்த இலங்கை பிரச்சனையை ஆண்டு கொண்டுருக்கிறது.  முடிவுக்கு வராமலே முடிந்தவரைக்கும் இழுத்துக்கொண்டே இருக்கிறது.  அதுவும் சமீப காலமாக சர்வதேச அரசியல் ஒரு பங்காக உள்ளே நுழைந்ததும் அதன் தாக்கம் மொத்தத்திலும் வேறு திசையில் பயணித்து இனி வாய்ப்பு இருக்குமா? என்கிற அளவிற்கு கொண்டு போய் நிறுத்தியுள்ளது?

இப்போது ஆட்சியில் இருக்கும் பிரேமதாசா பௌத்த இனத்தின் சிங்கள தலைவராக இருந்தாலும் ஆட்சிக்கு வந்த தொடக்க காலத்தில் தமிழர் பிரச்சனைகளை ஒரு முடிவுக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்பதை நோக்கி தான் நகர்த்தினார்.  காலம் செய்த கோலம் உள்ளேயிருந்த சக அமைச்சராலே அவரும் மாற்றம் பெற்று விட்டார் என்பதே சரியாக இருக்க முடியும். சிங்களர்களின் தந்தையாக கருதப்படும் முதல் பிரதமர் சேனநாயகா உருவாக்கிய ஐக்கிய தேசிய கட்சி என்பது பிறகு ஜெயவர்த்னே மூலம் வழி நடத்தப்பட்டு இப்போது பிரேமதாசாவை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் மூலமாக ஆட்சிக்கு வந்த இவர் இதுவரையிலும் இல்லாத அளவிற்கு அடித்தட்டு மக்களின் சார்ப்பாளராகத் தான் உள்ளே வந்தார். ஆனால் ஆண்டு விட்டுப் போன ஜெயவர்த்னே மொத்தத்திலும் சிறப்பான அரசியல் ஞானி. அரசியலில் ஜெயிக்க முதல் தகுதியே எதை செய்யக்கூடாதோ அதன் பக்கம் திரும்பவே கூடாது.  அதுவே மக்கள் நலனாக இருந்தாலும் பரவாயில்லை. காலப்போக்கில் மக்களை வேறு பக்கம் மாற்றி விடலாம்.  ஆனால் பதவி போய்விட்டால் அந்த மக்கள் மறுபடியும் தேர்ந்தெடுப்பார்கள் என்ற நிச்சயமில்லை. அவருக்கு ஒரு படி மேல் அவரின் சிஷ்யகோடிகள் இரண்டு பேர்களும்.  நான்கு பேர்களை வெட்டி விட்டு வாங்கப்பா என்றால் அமைச்சர்களாக இருந்த அதுலத் முதலியும், காமினி திச நாயகாவும் ஒரு கிராமத்தையே வெட்டி வோரோடு கொண்டு வந்து காலடியில் சமர்பித்தவர்கள்.  இதனால் மட்டுமே அவரால் எந்த உள் நாட்டு எதிர்ப்பும் இல்லாமல் நிம்மதியாக தானுண்டு தான் செய்து கொண்டுருந்த தமிழர் அழிப்பு உண்டு என்று கனஜோராக பத்து வருடங்கள் குப்பை கொட்ட முடிந்தது.  ஆனால் பிரேமதாசாவின் கெட்ட நேரம் என்பது உள்ளேயிருந்த இந்திய அமைதிப்படை மூலம் பிரபாகரனுக்கு நல்ல நேரமாக அமைந்து இருந்தது.

இவரால் ஆட்சிக்கு வந்து முழுமையாக இரண்டு ஆண்டுகள் கூட ஆட்சியில் அமர்ந்து நிம்மதியாக ஆள முடியவில்லை என்பதை விட இவருடைய ஆட்சி காலத்தில் நடந்த நிகழ்வுகள் அத்தனையும் திடுக்கிட வைக்கக்கூடிய நிலமெல்லாம் ரத்த சம்பவங்கள். அத்தனையும் 1989 முதல் 1991 மே முடிவதற்குள் வரிசையாக நடந்த படுகொலைகள்.  அதிலும் 1989 ஜுலை என்பது 1983 கருப்பு ஜுலை போலவே இருந்தது.  அந்த அளவிற்கு ஒன்றுக்கொன்று துப்பறியும் நாவலில் வரும் திடுக்கிடக்கூடிய சம்பவங்களாகவே இருந்தது.  அமிர்தலிங்கம், உமா மகேஸ்வரன் படுகொலை ஒரு பக்கம்.  அதனைத் தொடர்ந்து மாத்தையாவால் பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற உச்சக்கட்ட நகைச்சுவை சமாச்சாரம் என்றும் நடந்தது. 

இவர் காலத்தில் நடந்த ஒன்று கூட இயற்கை மரணம் அல்ல. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணங்கள்.  இது போக இலங்கையின் உள்ளே வாழ்ந்து கொண்டுருந்த முஸ்லீம் மக்களின் இடப்பெயர்வும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும், பிரபாகரனுக்கும் கிடைத்த அவப்பெயரும் மறக்க முடியாத அளவிற்கு அதுவே கடைசியில் அவர் மனதார மன்னிப்பு கேட்கும் அளவிற்கு கொண்டு வந்து நிறுத்தியது. ஈழ இரண்டாம் யுத்தமும் இதன் காரணமாகத் தான் தொடங்கியது.  ஒவ்வொரு காலகட்டத்திலும் பிரபாகரன் வளர்ச்சிக்கு மறைமுக காரணமாக இலங்கை ஆட்சியளார்களே இருந்தனர். ஜெயவர்த்னேவைப்போலவே இப்போது ஆண்டு கொண்டுருக்கும் பிரேமதாசவோ நேரிடையான காரணமாக இருப்பதையும் நாம் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும். 
Add caption
பிரேமதாசா மனிதவெடிகுண்டால் சாகடிக்கப்படுவதற்கு சில நொடிகளுக்கு முன்
எம்ஜிஆர் பிரபாகரனுக்கு பிரியத்துடன் கொடுத்த பணத்திற்குப் பிறகு வேறு வழியில்லாமல் தன்னிடம் இருந்த விடமுடியாத பயத்தினால் மட்டுமே எல்லாவிதங்களிலும் அன்றைய சூழ்நிலையில் பிரேமதாசா விடுதலைப் புலிகளுக்கு சாதகமாக செயல்படத் தொடங்கினார். இந்திய அமைதிப்படையை எப்படியாவது வெளியே விரட்ட வேண்டும் என்று மில்லியன் கணக்காக பணமும் ஆயுதமும் பிரேமதாசாவால் விடுதலைப்புலிகளுக்கு வழங்கப்பட்டது.  இதில் குறிப்பிட்டத்தக்க அம்சம் என்னவென்றால் பதுங்கு தாக்கு என்ற தொடங்கிய விடுதலைப்புலிகளின் கொரில்லா தாக்குதல் என்பதில் இருந்து வலிமையான இராணுவ ரீதியான தாக்குதல்களும், அதன் மூலமாக கிடைத்த வெற்றிகளும் உருவாகி விடுதலைப்புலிகளின் இயக்க வளர்ச்சியை இப்போது நடந்த போராட்டங்கள் அடுத்த கட்டத்திற்கு நகர்த்த உதவியது.  மூன்று மாதங்கள் இடைவிடாத போராட்டத்திற்குப் பிறகு இலங்கை இராணுவத்தை வென்று யாழ் கோட்டையைப் பிடித்தது என்பது பிரபாகரன் ஆளுமைக்கு கிடைத்த ஒரு மைல் கல் சாதனை சாதனையே.

இதற்கு மேல் நடந்த சிறப்பு சமாச்சாரம் பிரபாகரன் இறந்து விட்டார் என்று தமிழக ஊடகங்கள் வெற்றிவிழா கொண்டாடியதும் நடந்தேறியது.  உருவாக்கியது இந்திய உளவுத்துறை.  அவமானப்பட்டது ஊடகங்கள்.  வந்த செய்தி தவறு என்றாலும் காத்துக் கொண்டுருந்தவர்கள் போல கட்டம் கட்டி வெளியிட்டனர். பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார் என்ற செய்தி வந்த போதும் அடுத்த பரபரப்பு செய்திகளுக்கு தாண்டி விட்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

முதலில் பட்டியலை பார்த்து விடலாம். அமிர்தலிங்கம் படுகொலை, உமா மகேஸ்வரன் படுகொலை, இவை இரண்டும் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் இடைவெளியில் நடந்தது.  அமிர்தலிங்கம் கொழும்புவில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டது 1989 ஜுலை 13.  உமா மகேஸ்வரன் ஜுலை 16ந் தேதி.  இதன் தொடர்ச்சியாக ஜுலை 24 அன்று மாத்தையாவால் பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று பரபரப்பு செய்திகள்.  ஒன்றுக்கொன்று சம்மந்தம் இல்லை என்றாலும் அமிர்தலிங்கம் இறப்பால் பலத்த கண்டனங்களை பெற்றது விடுதலைப்புலிகள் இயக்கம்.  உமா மகேஸ்வரன் இறப்பு என்பது அவர்கள் இயக்கத்திற்கு உள்ளே இருந்தவரால் கொல்லப்பட்டாலும் இது இரண்டுக்கும் உள்ள தொடர்பு என்பதை பிரபாகரன் இறந்து விட்டார் என்று உருவாக்கிய செய்தி மூலம் தான் மாத்தையா இதற்கு பிறகு தொடர்ச்சியாக கவனிக்கப்பட்டதும், அவரின் திருவிளையாடல்களும், இதற்கு பின்னால் இருந்த உளவு வலைபின்னல்களும் கண்டு உணரப்பட்டது.  

பிரேமதாசா ஆட்சிக்கு வந்த தொடக்கத்தில் தான் பதவிக்கு வர எல்லா விதங்களிலும் உதவியாய் இருந்த ரஞ்சன் விஜயரத்னேவுக்கு சிறப்பிக்கும் பொருட்டு பாதுகாப்பு துறையை அவருக்கு ஒதுக்கி சிறப்பாகத் தான் வைத்து இருந்தார்.  பிரேமதாசாவுக்கோ அமைதிப் பாதையை இனி உருவாக்கி விடலாம் என்ற லேசான எண்ணத்தை மனதில் வைத்திருந்தவர். முழுமையாக விரும்பினாரா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி?

ஆட்சிக்கு வந்த மூன்று மாதத்தில் விடுதலைப்புலிகளை அழைத்து சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்தெல்லாம் போட்டு அஸ்திவாரத்தை பலமாகத் தான் பிரேமதாசா தோண்டினார்.  ஆனால் இவர் அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சன் விஜயரெத்னெ உருவாக்கிய அலங்கோலமும், இவர்கள் இருவருக்கும் நடந்த பதவிப் போரில் இருவரும் இறந்து போகும் அளவிற்கு கொண்டு வந்து நிறுத்தியது.

பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பில் இருந்த ரஞ்சன் விஜயரெத்னேவுக்கோ எப்போது தனக்குண்டான வாய்ப்பு கிடைக்கும் என்று காத்துக்கொண்டுருந்தவர். இந்த இடத்தில் ரஞ்சன் என்ற மகா மனிதரைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.  ஜெயவர்த்னே ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த அதுலத் முதலி தமிழர்களுக்கு செய்த கொடுமைகள் கொடூரத்தை விட இவர் ரசித்து செய்தது ஒவ்வொன்றும் அதையும் தாண்டி புனிதமானது.  உள்ளே இடது சாரி சிந்தனைகள் உள்ள JVP இயக்கத்தினரையும், அவர்களை ஆதரித்த அத்தனை பேர்களையும் தயவு தாட்சண்யம் இல்லாமல் கூண்டோடு அழித்து ஒழித்தார். அப்போது மனித உரிமை கமிஷன் கணக்குப்படி இவரால் கொல்லப்பட்ட ஜேவிபி மற்றும் தமிழர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் மேல்.  காயம் பட்டு வாழ்க்கை இழந்தவர்களின் கணக்கு இதில் அடங்காது.பேச்சு என்பதே கூடாது.  உடனே முடித்து விடவேண்டும் என்று தன்னால் முடிந்த அத்தனை முயற்சிகளையும் முடித்துக்காட்டியவர்.

 இந்திய அமைதிப்படை உள்ளே வந்தது முதல் ஓய்வெடுத்துக்கொண்டுருந்த இலங்கை இராணுவத்தை சோம்பலில் இருந்து விழித்துக் கொள்ள நேரம் வந்து விட்டது என்பதை குறிப்பால் உணர்த்தி மறைமுக குதியாட்டம் போட வைக்க காத்துக்கொண்டுருந்தார்.   பிரேமதாசா உருவாக்கியிருந்த அமைதி ஒப்பந்தத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வர இவர் உருவாக்கிய அணர்த்தங்கள் மூலம் தான் ஈழ இரண்டாம் யுத்தமும் நடந்தேறத் தொடங்கியது. தொடங்குவதற்கு பல காரணங்கள்.  ஆனால் மொத்தத்தில் அதன் பெருமை அத்தனையும் இவருக்கே போய்ச் சேரும். 

விடுதலைப்புலிகளை எப்படியும் ஒழித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டுருந்தவர் தான் கூட்டும் பாதுகாப்பு கூட்டங்களைக் கூட பிரேமதாசாவிடம் தெரிவிக்காத அளவிற்கு தன்னை தனி ஆளாக தனி ஆவர்த்தனம் நடத்தும் ஆளாகவும் மாற்றிக்கொண்டுருந்தார்.  வளர்ந்து கொண்டுருந்த அவரின் புகழ் என்பது பிரேமதாசாவிற்கு எள்ளும் கொள்ளும் வெடிக்க வைத்தது. தன்னிடம் தெரிவிக்காமல் தனி ஆவர்த்தனம் நடத்த தொடங்கியபோது உணர்ந்த பிரேமதாசா அதன் மூலம் இருவருக்கும் இடையே உருவான அதிகாரப் போட்டி என்பது ரஞ்சன் விஜயரெத்னே உயிரை பறிக்கவும் காரணமாக அமைந்து விட்டது. கொழும்பு சாலையில் இவர் பயணித்த வாகனத்தில் வந்து மோதிய வெடி மருந்து நிரப்பட்ட வண்டி மூலம் கதை முடிவுக்கு  கொண்டு வரப்பட்டது. இவருடைய இறப்பு எந்த அளவிற்கு கோரமாக இருந்தது என்றால் நிகழ்ச்சி நடந்த இடத்தை பார்வையிட்ட பத்திரிக்கையாளர்கள் சொன்னபடி அந்த இடம் விமான தாக்குதல் நடத்தப்பட்டது போல் இருந்து.  இவரின் தனிப்பாணியான சுட்டு தொங்கவிடுதல் போல் இவருடைய உடம்பும் பிய்ந்து போய் தனியாக தொங்கிக்கொண்டுருந்தது. இவரின் வீர்யத்தைக்குறைக்க அதிகப்படியான வெடிமருந்து நிரப்பப்பட்ட வாகனத்தை உருவாக்கியது அரசா இல்லை வேறு எவரா? என்பதை இறுதி வரைக்கும் கண்டு பிடிக்கப்படவில்லை. பிரேமதாசா எப்போதும் போல் இவருக்கும் சிறப்பு பட்டம் கொடுத்து விட்டு கண்ணீர் செலுத்தி அடுத்த வேலைக்கு நகர்ந்து விட்டார். அப்போதும் இவர் இறப்பு விடுதலைப்புலிகள் மேல் சுமத்தப்பட்டது. இவர்கள் தான் செய்தார்களா என்பதை விட செய்து இருந்தால் பரவாயில்லை என்று சிங்களர்களும் தமிழர்களும் சேர்ந்து சந்தோஷப்படும் சூழ்நிலையில் தான் ரஞ்சன் என்பவரை காலன் தன்னுடைய வரவு கணக்கில் வைத்தார்?

விடுதலைப்புலிகளின் இயக்கத்திற்கு பலத்த கண்டனங்களை உருவாக்கியது அமிர்தலிங்கம் படுகொலை.  சிறீ சபாரெத்தின படுகொலைக்குப் பிறகு இவரின் படுகொலையென்பது மெல்லிய அரசியல் வலை பின்னல் போன்றது.  கொன்றது விடுதலைப்புலிகள் தான்.  ஆனால் மாத்தையா மூலம் உருவாக்கப்பட்ட பல புதிரான நிகழ்வுக்கு பின்னால் உளவுத்துறையின் பங்கும் இதில் இருக்கிறது. காரணம் அமிர்தலிங்கம் இறந்த 1989 ஜுலை 13க்கு பிறகு அடுத்த மூன்று நாளில் பிரபாகரனுடன் தொடக்கம் முதல் ஒன்றாக இருந்த உமா மகேஸ்வரனும் சுட்டுக்கொல்ப்பட்டார். இதன் தொடர்ச்சியாக ஊடகத்தால் ஊதிப் பெரிதாக பேசப்பட்ட மாத்தையாவால் பிரபாரன் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற செய்தியும்.  இதன் தொடர்ச்சியை அன்று ஊகித்தவர் விடுதலைப்புலிகளின் உளவுத்துறை தலைவர் பொட்டு அம்மான் மட்டுமே.  ஆயுதக் கொள்முதல் முடித்து திரும்பி வந்து கொண்டுருந்த கிட்டு கப்பல் காட்டிக்கொடுப்பு மூலம் தான் இதன் பின்னால் உள்ள மாத்தையா உளவுத்துறையிடம் விலை போயிருந்ததை கண்டு பிடிக்க முடிந்தது.  எப்போதும் போல அமிர்தலிங்கம் படுகொலைக்கு நாங்கள் சம்மந்தம் இல்லை என்ற விடுதலைப்புலிகள் இயக்கம் அறிக்கை விட்ட போதிலும் நம்ப எவரும் தயாராய் இல்லை.  புதைக்கப்பட்ட ரகஸ்யமாகவே போய்விட்டது.  இப்போதைய சூழ்நிலையில் பிரபாகரன் செய்யாமல் இருந்தாலும் கணக்கு என்பதோ அவர் பக்கத்தில் வரவு என்று வைக்கப்படும் சூழ்நிலை தான் இருந்தது.

இன்று வரைக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்று அரசியல் பாதைக்கு இயக்கத்தை கொண்டு வந்து இருக்கலாம் என்பதே.  ஆனால் பிரேமதாசா காலத்தில் அதற்கும் முயன்று பார்த்தவர் பிரபாகரன்.  தொடங்க வேண்டும் என்று உறுதியாய் இருந்து பிரபாகரன் மனத்தை மாற்றியவர் ஆன்டன் பாலசிங்கம்.  விடுதலைப்புலிகள் மக்கள் முன்ணணி (PEOPLE'S FRONT OF LIBERATION TIGER'S (PFLT) )  தலைவராக மாத்தையாவும், பொதுச் செயலாளராக யோகியும் பதவியில் அமர்த்தப்பட்டு முறைப்படியான அரசாங்க பேச்சு வார்த்தைகள் கூட தொடங்கப்பட்டது.  காரணம் கிழக்கு மகாணங்களில் ஆட்சி அமைப்பு மூலம் இனியாவது மக்கள் செல்வாக்கை மீட்டு எடுக்கலாமென்ற நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.  அரசியல் கட்சியாக பதிவும் செய்து அதன் சின்னமாக பாயும் புலி என்பதும் தீர்மானிக்கப்பட்டது.  பிரேமதாசாவின் அழைப்பை ஏற்று  பேச்சு வார்த்தை கூட தொடங்கப்பட்டது. ஆனால் பிறகு பிரேமதாசாவின் மனம் மாறியதும் அதுவே மனித வெடிகுண்டு மூலம் அவர் உயிரைப் பறிக்கும் அளவிற்கும் கொண்டு போயும் நிறுத்தியது.

வட கிழக்கு மகாண தேர்தல் நடத்தினால் நிச்சயம் விடுதலைப்புலிகள் ஜெயித்து வந்து விடுவார்கள்.  இவர்கள் அதிகாரத்தை கைப்பற்றினால் காலப்போக்கில் தனியாட்சி வரைக்கும் வந்து விடுவார்கள்.  கணக்குப் போட்ட பிரேமதாசா காலம் கடத்தத் தொடங்கினார்.  சிங்களர்கள் என்றால் தந்திரம் என்று தானே அர்த்தம்.  முதன் முதலாக ஆயுதங்களை கை விடுவோம் என்று விடுதலைப்புலிகளை அறிக்கை விட வேண்டும் என்றார்.  விடுதலைப்புலிகள் புரிந்து ஒதுங்கி விட்டனர்.  அப்போது தான் பாதுகாப்புதுறை அமைச்சராக இருந்த ரஞ்சன் விஜயரெத்னே உள்ளே இருந்த மொத்த தீவிரவாத இயக்கங்களையும் பூண்டோடு அழித்து தும்சம் செய்து சற்று ஓய்வெடுத்துக் கொண்டுருந்தார்.  இப்போது அவர் பார்வையில் விடுதலைப்புலிகள்.  விடுவாரா?  காத்துக்கொண்டுருக்கும் இலங்கை இராணுவம் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கினர்.
இந்திய அமைதிப்படை உள்ளே யிருந்தவரைக்கும் தினவெடுத்த தோளுடனும், அமைதி கால சூழ்நிலையை கருத்தில் வைத்து வெளிநாடுகள் கொடுத்த நல உதவித் திட்ட பணத்தை ஆயுதமாக மாற்றி வைத்திருந்தது எவருக்கு உதவியதோ இல்லையோ ரஞ்சன் விஜயரெத்னேவின் சிந்தனை களுக்கும் கைகளுக்கும்  அரிப்பெடுக்கத் தொடங்கியது.  ஆட்சிக்கு வந்த மூன்றாவது மாதத்தில் பிரேமதாசா உருவாக்கி இருந்த அமைதிப்பாதை முழுக்க கெட்டுப்போனதற்கு முக்கிய காரணம் இவரே.

இவரால் உருவாக்கப்பட்ட  உருவாக்கிய அணர்த்தங்களால் முறைப்படியான இராணுவ பலம் என்பதையும் பெற்று, புதிய கொள்கைகள், நோக்கங்கள், பாதைகள் என்று பயணித்து வந்த விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியான தாக்குதல்களையும் இலங்கை இராணுவத்திற்கு எதிராக மூன்று மாதங்கள் இடைவிடாமல் நடத்தி யாழ் பகுதியை தங்களது கோட்டையாக்கினர்.  பொறுத்துக்கொள்ள முடியாமல் பிரேமதாசாவும், ரஞ்சன் விஜயரெத்னேவும் வடகிழக்கு மக்கள் மேல் வன்முறையை ஏவி விட இதன் தொடர்ச்சியாக உருவானது தான் முஸ்லிம் மக்களை அவர்கள் பகுதியில் இருந்து இடம் பெயர வைத்தது வேறு பகுதிக்கு அவர்களை அகதியாக சொத்துக்களை இழந்து நடக்க வைத்து அவல பாதைகளை உருவாக்கியதும் நடந்ததேறியது.

இடப்பெயர்ச்சியும் அவர்களின் அவல வாழ்க்கையும்.  இது ஒரு தனிப்பிரிவாக ஈழ இரண்டாம் யுத்தத்திற்கு கொண்டு செலுத்தினாலும் எந்த வகையில் பார்த்தாலும் இறுதியில் பிரபாகரன் மன்னிப்பு கேட்டது போல் கொடுமையான கொடூரமாக இந்த இடப்பெயர் நடந்தேறியது.  பிரபாகரன் ஆளுமையில் நடந்த இந்த கொடுமை கொடூரம் பலத்த கண்டனங்களை அவருக்கு ஏற்படுத்தியது.

மீதம் உள்ள ரத்த தடங்களை பார்த்து விட்டு ஒரு முடிவுக்கு வந்து விடலாம். முதலில் பதவியை எதிர்பார்த்து கிடைக்காத அதுலத் முதலி.  இவர் ஜெயவர்த்னே ஆட்சி காலத்தில் மிகுந்த செல்வாக்குடன் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர்.  பிரேமதாசாவை எதிர்த்து வெளியே வந்து தனிக்கட்சி தொடங்கி ஊரெல்லாம் மேடை போட்டு முழங்கிக்கொண்டுருந்தார். 

பதவியை எதிர்பார்த்து ஏமாந்து போன அதுலத் முதலி, காமினி திசநாயகா போன்றவர்கள் கட்சியில் இருந்து பிரிந்து தனியாக கட்சி( DUNF DEMOCRATIC UNITED NATIONAL PARTY) நடத்தி உண்டு இல்லை என்று ஆக்கிக்கொண்டுருந்தனர்.  அதிலும் அதுலத் முதலிக்கு சற்று வீராவேசம் அதிகமாக இருந்தது. பொதுக்கூட்ட மேடையில் முன்னால் இருந்து பார்த்துக்கொண்டுருந்தவர் கையில் இருந்த துப்பாக்கி குண்டின் மூலம் அதுலத் முதலியின் (1993 ஏப்ரல் 23) கதை முடிவுக்கு வந்தது. இது முதல் ரத்த ஆறு. விடுதலைப்புலிகள் நாங்கள் தான் இதற்கு காரணம் என்பதை தெளிவாக தைரியமாக முரசறிவித்தனர்.  இவரின் இறப்பு அந்த அளவிற்கு தமிழர்களிடம்  மகிழ்ச்சியை உருவாக்கியதை இங்கு குறிப்பிடலாம்.  தவறில்லை.

ரஞ்சன் அந்த அளவிற்கு ஜனரஞ்சகமான பல நல்ல காரியங்களை தமிழர்களுக்கு எதிராக பார்த்து பார்த்து செய்து கொண்டுருந்தவர்.

இத்தனை ஓய்வில்லா வேலைகளுக்கிடையே  கடின பணிகளுக்கிடையே, போராட்டங்கள், வெற்றிகளுக்கிடையே இரண்டு வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்ட பணியும் வெற்றிகரமாக இன்று முடிவுக்கு வந்தது.

மே மாதம் 1991 இரவு 10.20 ஸ்ரீ பெரும்புதூர்.  தமிழ்நாடு. இந்தியா.

ஆற அமர அதன் புலனாய்வு பக்கங்களை உணர்ந்து தான் ஆக வேண்டும்.

வீர்யமும் திட்டமிடுதலும் புரியும்.  உளுத்துப் போன நிர்வாகத்தையும் உணர்ந்து கொள்ள முடியும்.  அதிலும் கூட, தன்னுடைய தனிப்பட்ட முயற்சியினால் உருவான சாதனைகளையும் இந்த உலகத்திற்கு பறைசாற்ற முடியும் என்று உணர்த்தியவரையும் நமக்கு புரியவைக்கும். ......?

எதிர்மறை நியாயங்கள் ஒரு பக்கம்,  ஆனால் இரண்டு பக்கமும் தமிழர் என்பதே ஆதங்கம்.
இங்கு தலைமைப்பொறுப்பில் இருந்து டிஆர் கார்த்திகேயன் மற்றும் அவரின் குழுவினர்.  அங்கு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவருக்கு பக்க பலமாக இருந்த குறைவான குழுவினர்.காரணம் அன்றைய தினத்தில் பின்னால் விலகிப்போன இரண்டாம் கட்டத்தில் இருந்த கருணாவிற்கே இந்த நிகழ்ச்சி நடந்தபிறகு தான் தெரிந்தது. கிடைத்த மொத்த ஆதாரங்களை வைத்து ஆச்சரியப்படலாம் இல்லையேல் ஆதங்கப்படலாம்.

ஆதாரங்கள், ஆச்சரியங்கள், அவமானங்கள், கோரங்கள், கொடுமைகள் என்று தொடர்ந்து எழுதினாலும் இதன் முழுமையான தீர்க்கப்படாத பல உண்மையான விசயங்கள் இன்னமும் இருக்கிறது என்பதோடு சம்மந்தப்பட்டவர்கள் இன்னமும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டுருப்பது ஒரு கொடுமை என்றால் சம்மந்தம் இல்லாமல் மாட்டிக்கொண்டவர் இன்னமும் தண்டனை காலம் முடிந்தும் அதற்கு மேலும் அனுபவித்தும் உள்ளே புழுங்கி வாழ்வது அதைவிடக் கொடுமையானது.  இபிகோ சொல்வதைப்போல குற்றவாளியைப் போல குற்றத்திற்கு உடந்தையாக இருந்தவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்பது இந்தியாவில் சாத்யமில்லாத பாதையில் தான் பயணித்துக்கொண்டுருக்கிறது.  இது நடக்கப் போகிறது?  இவ்வாறு ஒன்று நிகழப் போகிறது என்று உணர்ந்தவர்கள் பல பேர்கள்.  ஆனால் இன்று வரையிலும் உண்மையைத் தவிர அத்தனையையும் பேசிக்கொண்டு இருப்பதும் வாழ்வதும் மொத்ததிலும் வியப்புக்குரியது.  இது தான் இந்தியா.  இது தான் இந்தியச் சட்டத்தின் சிறப்பம்சம்.

(இடைவேளை......தொடர்வோம்....)

Wednesday, February 24, 2010

ரத்த ஈழ பூமி

குடியாட்சி என்பதும் குடிமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சார்பாளர்களால் ஆளப்படுவது.  ஆனால் நவீன கால அரசியல் என்பது சேவை மனப்பான்மையை அடிப்படையாகக் கொண்டது அல்ல. முயற்சிப்பவர்களுக்கும், முன்னேறிக் கொண்டு இருப்பவர்களுக்கும் இடையே நடக்கும் யுத்தம் அது.  உலகமெங்கும் இதே கதை தான்.  திரைக்கதை மட்டும் அங்கங்கே வேறுபடும்.  முடிந்தவர்கள் ஆட்சியில் அமர்ந்து திருவாளர் பொதுஜனத்திற்கு ஆதர்ஷணமாய் மாறி விடுகிறார்கள்.  முடியாதவர்கள் முட்டி பெயர்ந்தால் கூட மீண்டும் ஒரு முறை முயற்சிப்போம் என்று விடமுடியா சோகமாய் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறார்கள். பராவாயில்லை மெதுவாக பார்க்கலாம் என்றால் கூட அவர்களின் பாதையால் அவர்களின் மூச்சும் முடிக்கப்பட்டு முகவரி இல்லாமல் மண்ணுக்குள் புதைந்து விடுகிறார்கள். அடுத்தவர் தொடர்கிறார். இதுவே வாரிசு போர் என்று வந்து மீண்டும் தொடர்கிறது.  ராஜ போதை ஆட்டம் இது.

ஜெயவர்த்னே ஆட்சியில் இருந்தவரைக்கும் அவரது ஐக்கிய தேசிய கட்சியில் எடுப்பும் தொடுப்புமாக இருந்தவர்கள் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த அதுலத் முதலியும் மற்றொரு அமைச்சரான காமினி திச நாயகாவும்.  ஆனால் ஜெயவர்த்னேவுக்குப் பிறகு அவர்களால் பதவிக்கு வர முடியவில்லை என்பதோடு அதுலத் முதலி பிரேமதாசா ஆட்சியின் போது விடுதலைப்புலிகளால் சுட்டுக் கொல்ப்பட்டார். காரணம் அவர் தமிழர்கள் வாழ்வில் கொடுத்த ஒவ்வொரு அடியும் அந்த அளவிற்கு ரசித்து ருசித்த இடியாகத் தான் பார்த்து பார்த்து செய்தார்.  

ஆனால் ஜெயவர்த்னேவுக்குப் பிறகு இவர்களை மீறி பிரேமதாசாவை பதவிக்கு  கொண்டு வருவதற்கு மிகவும் பக்க பலமாக இருந்தவர் ரஞ்சன் விஜயரத்னே.  1989 ஜனவரி 2 அன்று பிரேமதாசா ஆட்சியைத் தொடங்கினார்.  சரியாக முழுமையான 5 வருட பதவிக்காலத்தைக்கூட முழுமையாக அவரால் ஆண்டு அனுபவிக்க முடியவில்லை.  இலங்கை முழுவதும் ரத்தமும் சகதியுமாக மாற்றம் பெற்றது.  இவர் முடிந்து போகும் தருவாயில் இந்தியாவில் ராஜிவ் காந்தி மரணமும் நிகழ்த்தப்பட்டது.  ஏன்?

பிரேமதாசா பதவிக்கு வர காரணமாக இருந்து உழைத்த ரஞ்சன் விஜயரத்னே, அவரே பிறகு பிரேமதாசாவிற்கு எதிரியாக மாறிப் போனார்.  மாறிய அவரை பொறுத்துக்கொள்வது அரசியல் ஞானப்படி தவறு.   வெடிகுண்டு நிரம்பிய சிறிய ரக பேரூந்து மூலம் அவரின் வாழ்க்கை கதை முடித்தும் வைக்கப்பட்டது. ரஞ்சன் விஜய ரத்னேவை கொன்றது விடுதலைப்புலிகள் அல்ல.  பிரேமதாசா அரசாங்கமும் அதை பெரிது படுத்தவில்லை என்பதில் இருந்து எவர் கொன்று இருப்பார்கள் என்பதை நீங்கள் தான் யூகித்துக்கொள்ள வேண்டும். 

தன்னை, தன் பதவியை காப்பாற்றிக்கொள்ள ஒரு தலைவன் என்ற மனிதன் எந்த அளவிற்கு செல்ல முடியும் என்பதும், சிங்களர்களின் தனிப்பட்ட குணாதிசியங்கள் என்னவென்பதும் இதன் மூலம் உணர்ந்து கொள்ள முடியும்- காரணம் இதே இந்த ரஞ்சன் விஜயரத்னே ஜேவிபி என்ற சிங்கள இளைஞர்களால் உருவாக்கப்பட்ட இடது சாரி எண்ணங்கள் கொண்டவர்களால் வழி நடத்தப்பட்ட புரட்சிகர இயக்கத்தை அழித்து ஒழித்து துடைத்தும் எறிந்தனர்.  அரசாங்க கணக்குப்படி குறிப்பிட்ட கால கட்டத்தில் அதில் உள்ள 15000க்கு மேற்பட்டவர்களை சுட்டுக்கொன்றனர்.  சீனாவின் தியாமென் சதுக்கம் போல் தரைமட்டமாக்கி துடைத்து ஒழித்தனர்.  காரணம் இது அரசியல்.  விட்டுக்கொடுத்தால் கெட்டுப்போவதில்லை என்ற பழமொழியெல்லாம் வெளியே தான்.  ஆட்சிக்கு வந்தவுடன் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.  மொத்தத்தில் இது தான் அரசியல் தரும் வெறியும் வெற்றியும்.  இந்த ஆடு புலி ஆட்டத்தில் ஜெயிப்பார்கள் மட்டுமே தலைவர்கள்.   கருணை, காருண்யம், மனிதாபிமானம் எல்லாவற்றையும் வீட்டில் இருந்து கிளம்பும் போதே பத்திரமாக பரணில் ஏற்றி வைத்து விட வேண்டும்.  வேண்டுமென்றால் பொதுக்கூட்டத்தில் பேசும் போது இந்த வார்த்தைகளை மட்டும் எடுத்து பேசிக்கொள்ளலாம்?  நடைமுறையில் காத தூரம்.

சிங்களர்களின் தந்தையாக சுதந்திர இலங்கையின் முதல் ஆட்சியில் வந்து அமர்ந்த சேனநாயகாவின் குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த பண்டாரா நாயகாவைப் போலவே இப்போது ஜெயவர்த்னே என்ற மகா ஆளுமையை முடிவுக்கு வந்து இருக்கிறார். இப்போது சில பழைய விசயங்களை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.  தந்தை செல்வா என்ற செல்வநாயகம் 1949 தமிழரசு குடியரசு கட்சி உருவாக்கி இலங்கை தமிழர்களுக்கு அமைதி வழியில் போராடி உரிமைகளை மீட்டெடுப்போம் என்றவரை அத்தனை சிங்கள தலைவர்களும் ஏமாற்றி உண்டு இல்லை என்று ஆக்கினர்.  சுதந்திரம் பெற்றது முதல் அவர் 1977 இறப்பு வரைக்கும் கால் நூற்றாண்டு காலமாக அவர் பெற்ற அவமானங்கள் மன உளைச்சல்கள் வேறு எந்த தலைவர்களும் பெற்று இருப்பார்களா என்பது சந்தேகமே.  இலங்கை தமிழினமே அவரை போற்றிக் கொண்டாடியது.  பண்டார நாயகா ஆட்சிக்கு வர உள்ளே இருந்த இனவாத கட்சிகளும், இடது சாரி கட்சிகளுமே அப்போதைக்கு போதுமானதாய் இருந்தது.  ஆனால் அதே இடது சாரிகளுடன் முட்டல் மோதல் உருவான போது பண்டாரா நாயகாவின் பார்வைக்கு முதன் முதலாக தென்பட்டவர் தந்தை செல்வாவின் தமிழரசு கட்சி.  இருவரும் கை கோர்த்துக்கொண்டனர்.   உருவானது பண்டா செல்வா ஒப்பந்தம்.  தமிழர்கள் போற்றிக்கொண்டாடினார்கள் விடிவு வந்து விட்டது என்று.  ஆனால்?

பண்டார நாயகா மரபின் படி தமிழர்.  சிங்களராக மாற்றம் பெற்றவர்.   300 ஆண்டுகளில் அவரது முந்தைய தலைமுறையினர் கொண்டு வந்த கலப்பும், மாறிய மதமுமாய் இறுதியில் இவரை சிங்கள தலைவராக மாற்றம் பெற வைத்துள்ளது என்பதையும் சற்று கவனத்தில் வைத்துக்கொள்ளலாம்.
இருவரும் போட்டுக்கொண்ட பண்டா செல்வம் ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்து இருக்குமேயானால் அப்போதே மொத்த பிரச்சனைகளும் முடிவுக்கு வரவில்லை என்றாலும் ஒரு பாதைக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கும்?

ஏன் வெற்றியடையவில்லை. காரணம் புத்த பிக்குகளின் எதிர்ப்பும் அதுவே எல்லை மீறி பண்டார நாயகாவை சுட்டுக்கொன்று தமிழர்களுக்கென்று போடப்பட்ட அந்த ஒப்பந்தமும் ஒரு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.  அப்போது தான் சிங்களர்களின் இன வாதம் என்பது எந்த அளவிற்கு உச்சமாய் வளர்க்கப்பட்டு வந்துள்ளது என்பதை அணைவரும் உணர்ந்து கொண்டனர்.  ஆனால் இந்த சிங்கள இனவாதத்தை வளர்த்தவர்களில் முக்கியமானவர் பண்டார நாயகாவும்.  அவரே இறுதியில் அதற்கே பலியானர்.

ஆனால் தந்தை செல்வா அப்போதுகூட இதை உணரவில்லை.  அதற்குப் பிறகு வந்த டட்லி சேனநாயகா, சீறீமாவோ பண்டார நாயகா ஒப்பந்தம் வரைக்கும் கை கோர்ப்பதும், காரியம் ஆனதும் தமிழர்களின் ஒப்பந்தத்தை மறந்து விடுவதும், கிழித்து எறிந்து விடுவதும் கண ஜோராக கண்ணாமூச்சி காட்டிக்கொண்டுருந்தனர். 

தந்தை செல்வாவின் கீழ் இருந்த இரண்டாம் கட்ட தலைவர்கள் இனியாவது இவர்களை நம்பி ஏமாந்தது போதும் என்ற போதும் கூட எதிர்த்து பேசியவர்களை அமைதியாய் இருங்கள் என்று சொல்லி ஆசுவாசப்படுத்தினாரே தவிர அவர் அப்போது உணர்ந்தாரா என்பது கேள்விக்குறி?  அமைதி வழியே இறுதியில் வெல்லும் என்பதை தீர்மானமாய் நம்பிய செல்வா கடைசியில் நரம்பு நோயால் பாதிக்கப்பட்டு, செவிப்புலன் கேட்கும் திறன் குறைந்து, கோமா என்ற நிலையிலேயே இறக்கும் தருவாய் வரைக்கும் அவரால் ஒரு அடி கூட முன்னேற்த்தை காட்ட முடியவில்லை.   காலம் அந்த அளவிற்கு அவரின் நம்பிக்கைகளை குலைத்து முழுக்க முழுக்க துரதிஷ்டத்தை மட்டுமே அவருக்கு வாரி வழங்கி இருந்து.  ஒவ்வொருவரும் ஆட்சிக்கு வரும் போது தங்களின் மைனாரிட்டி அரசாங்கத்தை காப்பாற்றிக்கொள்ள தமிழரசு கட்சியை நாடுவதும், விரைவில் இருவருக்கும் ஒப்பந்தம் உருவாக்கலாம் என்று ஆசை வார்த்தை காட்டுவதும், ஒப்பந்தம் உருவாக்குவதும் அதுவே காரியம் முடிந்ததும் கழட்டி விடுவதும் நடக்கும்.  அவ்வாறு நடக்கும் போதே அந்த உருவான ஒப்பந்த நகல் வெறும் காகிதமாக மாறி இருக்கும். இப்போது பிரேமதாசா ஆட்சியிலும் சில நிகழ்வுகள் நடக்கத் தொடங்கியது.  ஆனால் இப்போது இருப்பவர் தந்தை செல்வாவின் வாரிசு அல்ல.  இவரின் அப்பா மட்டுமே தந்தை செல்வாவை தெய்வமாக பூஜித்தவர்.  இவரோ இலங்கைக்கு வெளியே இருந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டவர்.

பிரபாகரனைப் பொறுத்தவரையிலும் செயலில் காட்டாதவர்கள் எவருமே தலைவர்கள் அல்ல.  தந்தை செல்வாவை கண்டும் காணவில்லை என்பதை விட இதில் கருத்து சொல்ல எதுவும் இல்லை என்று இவர்களுடன் சேராமலே தன்னை தனியாக பிரித்துக்கொண்டவர். இவர்கள் கூட்டும் கூட்டம் என்றால் தூரத்தில் இருந்து ஒரு பார்வையாளர் போல் பார்த்து விட்டு பாதியிலேயே பொறுக்க முடியாமல் நகர்ந்தவர். தந்தை செல்வாவிற்கு பிறகு அவரது இடத்துக்கு வந்த அமிர்தலிங்கம் பார்வையில் மட்டுமே பட்டு இருந்தவர். 

அதுவும் தொடக்க காலத்தில் மட்டுமே.  பின்னாளில் அவரும் எதிரியாக மாறிப் போனார். அந்த அளவிற்கு சிங்களர்களின் ஒப்பந்தம் என்றால் பிரபாகரனுக்கு பாகற்காய் கசப்பை விட அதிகமாக இருக்கும்.புரிந்து தொடங்கியவர் பிரபாகரன்.  புரியாமல் இறுதியில் ஏமாந்தவர் பிரேமதாசா. விடுதலைப்புலிகள் பிரேமதாசாவுடன் தொடக்கத்தில் உருவாக்கிய அமைதிக்கான ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வருவதற்குள் மிகத் தெளிவாக தங்களை வளர்த்துக்கொள்ளவும், சூழ்நிலையை காரணம் காட்டியே ஆட்சி அதிகாரத்தை தங்களுக்கு சாதகமாக திசை திருப்பி தங்கள் ஆளுமையை மேம்பட்டதாக மாற்றிக்கொண்டதும் நடந்தேறியது.   அமைதி வழி தான் நாம் இருவரும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற போது அமைதியின் வடிவமாகவே காட்சியளித்தார்கள்.  மாறிய போது அதற்கான தண்டனையும்   கிடைக்கும்படி இருந்தது.

தந்தை செல்வா என்றால் நடந்த துரோகத்தைப் பார்த்துவிட்டு சரி நடப்பது நடக்கட்டும். அமைதி வழியே இறுதியில் வெல்லும் என்று பிரோமதாசாவின் நம்பிக்கைத் துரோகத்தை துடைத்து இருப்பார்.  ஆனால் இப்போது நடைமுறையில் இருப்பது அமைதி மொழியல்ல.  பதிலாக ஆயுத மொழி.  

உருவாக்கிக்கொண்டுருக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் மிகத் தெளிவாக பயன்படுத்திக்கொண்டு முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும். ஒரு படி இறங்கினால் கூட இனி சிங்களர்களின் ஆதிக்கம் நம்மை இடியாகத் தாக்கும் என்பதை பிரபாகரன் மிக் தெளிவாக உணர்ந்து வைத்திருந்தார்.

பிரேமதாசாவிற்கு உள்ளே ஓடிக்கொண்டுருந்தது இரண்டு யோசனைகள் என்றால் பிரபாகரனுக்கோ நூறு சிந்தனைகள்.  பிரேமதாசா பிரபாகரன் இருவருமே சிந்தித்த காரணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் இருவரின் மையப்புள்ளி ஒரே இடத்தில் ஆதாரப்புள்ளியாய் வந்து இருவரையும் இணைத்து. அமைதிப்படை வெளியே செல்ல வேண்டும். மற்றவை பிறகு பேசிக்கொள்ளலாம் என்பதே.  கை கோர்த்துக்கொண்டனர்.  விடுதலைப்புலிகளின் வரலாற்றில் கொழும்புவில் உள்ள உயர்தர நட்சத்திர உணவு விடுதி அறிமுகமானதும், அதில் பிரேமதாசா அரசாங்கத்துடன் நடத்துப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் என்று வேறு ஒரு தளத்திற்கு இட்டுச் சென்றது.  

ஒப்பந்தத்திற்கு தலைமைப் பொறுப்பு எப்போதும் போல ஆன்டன் பாலசிங்கம்.  இப்போது பிரபாகரன் புகழ் எட்டுத்திக்கும் புகழ் பெற்று பட்டொளி வீசிக்கொண்டுருக்கிறது.  இலங்கை ஆட்சியாளர்கள், இராணுவம் கூட பவ்யமாய் பயமாய் இவர்களை பார்த்த நாட்கள்.  காரணம் பெரிய வல்லரசை வகை தொகையில்லாமல் வாட்டி வதைத்த பொடியன்கள் இப்போதைக்கு மகா பராக்கிரமசாலிகள்.  ஏற்கனவே பல பய நிலையை உருவாக்கி வைத்திருந்த பிரபாகரன் இப்போதைய சூழ்நிலையையும் மிகத் தெளிவாக பயன்படுத்திக்கொண்டார். 

எந்த அளவிற்கு என்றால் அமைதிப்படை வெளியேற்றுவது எங்கள் பொறுப்பு. ஆனால் நீங்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று சொல்லி மில்லியன் கணக்காக இலங்கை அரசாங்கத்திடம் இருந்தே பண உதவி பெற்றுக்கொண்டது, ஆயுத கொள்முதல்கள், வெளிநாட்டில் இருந்த பிரபாகரன் மனைவியை குழந்தைகளை இலங்கைக்கு உள்ளே வரவழைத்துக்கொண்டது. தலைமறைவாக இயங்கிக்கொண்டு ஆயுத கொள்முதல் விற்பனர் பத்மநாபன் அதிகாரப்பூர்வமாக தைரியமாக விமானநிலையத்தில் பிரபாகரன் குடும்பத்துடன் நடந்து வந்ததும் என்று ஏற்கனவே நடந்தேறிய பல பாதக அம்சங்களை இப்போது தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டுருந்தனர்.

இப்போது கூட பிரேமதாசா பிரபாகரனை நாடுவதற்கும் காரணமாக இருந்தவர் ராஜிவ் காந்தியே.  நீங்களே வெளியே போய் விடுங்கள் என்றதற்கு முடியாது என்பதோடு உள்ளே என்ன பிரச்சனையை உருவாக்கலாம் என்றபடி அலைந்து திரிந்து கொண்டுருந்தனர்.  இது எந்த அளவிற்கு என்றால் பிரேமதாசா இனி நீங்கள் வெளியே வந்தால் எங்கள் இராணுவம் உங்களை சுடத் தொடங்கும் என்பதற்கு உள்ளேயிருந்த இந்திய இராணுவ தளபதி நீங்கள் ஆரம்பித்தால் நாங்கள் மொத்தத்தையும் முடித்து வைப்போம் என்கிற வீர வசனமாய் முற்றிப்போகும் அளவிற்கு வந்து நின்றது.  பிரேமதாசாவிற்கு வேறு வழியில்லை.  சண்டைக்காரன் காலில் வந்து விழ பிரபாகரன் காட்டில் அடை மழை. பிரேமதாசாவுக்கோ இந்தியா இங்கு இதைக் காரணம் காட்டியே டேரா போட்டுருந்தால் இலங்கை என்பது இந்தியாவின் ஒரு மாநிலமாக மாறி விடுமோ என்ற அச்சம்.  நடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அமிர்தலிங்கம் தோல்வியுற்றுப்போக இப்போது நடந்த மற்றொரு இந்திய மாறுதல் டெல்லியில் விபிசிங் தமிழ்நாட்டில் கலைஞர் மு கருணாநிதி. பிரேமதாசா ஆட்சிக்கு வந்த 45 நாட்களில் தமிழ்நாட்டில் இருந்து மாயமாய் மந்திரமாய் வைகோ பிரபாகரனை சென்று சந்தித்ததும் அவருடன் 24 நாட்கள் இருந்து வந்ததும் நடந்தேறியது.

இந்திய அமைதிப்படை உள்ளே இருந்த போது எவ்வாறு பிரபாகரன் தன்னுடைய ஆளுமையை வளர்த்துக்கொண்டாரோ அதே போல் வெளியேறாமல் முரண்டு பிடிக்கும் போது மறைமுகமாக அவருக்கு பிரேமதாசா உதவும் அளவிற்கு காரணமாக இருந்ததும் இந்திய அமைதிப்படையே.  

பிரேமதாசாவின் முதல் பகுதி முழுவதும் இந்தியாவை விரட்ட விடுதலைப்புலிகளை சார்ந்து இருக்க காலம் உருவாக்கி வைத்தது.  இரண்டாவது பகுதி முழுவதும் உள்ளே இருந்த ரஞ்சன் விஜயரத்னேவால் எடுக்கப்பட்ட முடிவுகள் தவறாகவும் மாறிவிட இவரும் தப்பிப் பிழைக்க முடியாத சூழ்நிலையில் கொண்டு போய் நிறுத்தியது.

Monday, February 22, 2010

வழங்கிய முனிவர் வாங்கிய பிரபாகரன்

1947 முதல் தொடங்கிய இந்திய ஜனநாயகப் பாதை இன்றைய சூழ்நிலையில் இலங்கையில் பெற்ற அவமானம் என்பது நினைத்தே பார்க்க முடியாதது.  இந்திய அதிகாரவர்க்கத்தின் உள்கட்டமைப்பு எந்த அளவிற்கு இருந்தது என்று உலகம் முழுக்க முரசு அறிவிக்காத குறைதான். ஏன்?   ஒரே முக்கிய காரணம் உளவுத் துறையின் மோசமான செயல்பாடுகள்.  அதுவே தான் இன்று வரைக்கும் தொடர்ந்து கொண்டுருக்கிறது.  பிராந்திய நலன் முக்கியம் என்ற அளவிற்கு அதை மீட்டு எடுக்க உபயோகித்த முறைகள் தான் மொத்தத்திற்கு அவமானத்தை பரிசாக பெற்று தந்தது.

உள்ளே நுழைந்து பூர்வாங்க ஏற்பாடுகளை கவனிக்காமல் இருக்க அதுவே தீலிபன் மரணம் வரைக்கும் கொண்டு வந்து நிறுத்தியது.  அதை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பாளராகயிருந்த தீட்சித்க்கு அப்போது உளவுத்துறை கொடுத்த கேவலமான அறிக்கை, " இதற்குப் பிறகு புலிகளின் அரசியல் தந்திரம் இருக்கிறது"  என்பதாக இருந்தது.  அதைப்பார்த்து தீட்சித் பின்வாங்கியதும் அதுவே பிள்ளையார் சுழியாக இருந்தது.

மொத்த அமைதிக்கும் சட்ட ஒழுங்குமுறைகளுக்கு இந்திய அமைதிப்படை தான் இனி பொறுப்பு என்ற சூழ்நிலையில் படகில் இலங்கையை நோக்கி பயணித்து வந்த 17 விடுதலைப்புலிகளை கைது செய்தது முதல் தவறு என்றால், அவர்களை இலங்கையிடம் ஒப்படைத்தது முக்கிய தவறாகவும் முடிந்து விட்டது.  அமைதிப்படை நினைத்து இருந்தால் அந்த கைது சம்பவம் வெளியே தெரியாமல் அப்போதே அதை முடித்து இருக்கலாம்.  மோப்பம் பிடித்த ஜெயவர்த்னே துள்ளிக் குதித்து வந்ததும், இதையே காரணம் காட்டி பாதுகாப்பு அமைச்சராக இருந்த அதுலத் முதலி " அவர்களை விடுதலை செய்ய காரணமாக நீங்கள் இருந்தால் நானும் என்னைச் சார்ந்தவர்களும் அமைச்சரவையில் இருந்து வெளியேறிவிடுவோம் "  என்று மிரட்டத் தொடங்க ஜெயவர்த்னே அமைதியாகி விடவேண்டிய சூழ்நிலை.  உறுதியான முடிவு எடுக்க வேண்டிய தீட்சித் அப்போதும் அமைதி காக்க, கொழும்பு சென்றால் சித்ரவதைக்கு ஆளாக நேரிடும் என்று சயனைடு சுவைத்து பிடிபட்டுருந்த 17 பேர்களும் மரணமடைய தொடங்கிய பிரச்சனைகள் விஸ்ரூபம் எடுத்தது.  அப்போது தான் குமரப்பா, புலேந்திரனுக்கு திருமணம் ஆகியிருந்தது.  இவர்களுக்கு எப்படி இருந்து இருக்கும்.  இலங்கை ராணுவத்திற்கு சிம்ம சொப்பனமாக இருந்த இவர்களின் மரணம் பிரபாகரனுக்கு எத்தனை பாதிப்புகளை உருவாக்கியிருக்கும்.

ஆனால் இதைத் தடுக்க முயற்சித்த இந்தியத் தூதுவர், தளபதி ஜெனரல் ஹக்கிரட் சிங், போன்றவர்களின் மொத்த உழைப்பும் அதுலத் முதலியின் கடுமையான பிடிவாதத்தால் தோற்றுவிட்டது.  அவர்கள் ஜெயித்தார்கள் என்பதை விட இவர்கள் அதற்கு காரணமாக இருந்தார்கள் என்பது தான் இங்கு முக்கியம்.
இந்தக் குழப்பத்திற்கிடையே இந்திய அமைப்படைக்கு தலைமையேற்று வந்த தளபதிக்கும் அரசாங்கம் சார்பாளரான தீட்சித்க்கும் சரியான புரிந்துணர்வு இல்லை.  மறைமுகமாக இருவரின் பகைமையும் வளர்ந்து கொண்டேயிருந்தது. தீட்சித்க்கு நான் சொல்வதை நீ கேள் என்ற மனோபாவம்.  தளபதிக்கோ எனக்கு கட்டளையிட நீ யார் என்ற நியாயமான கோபம், அன்றைய சூழ்நிலையில் நேர்மையான வழியில் அமைதிப்படையின் செயல்பாடுகளை கொண்டு செல்ல அத்தனை முயற்சிகளை எடுத்தவர் என்றால் இந்த தளபதி தான்.  கைது செய்யப்பட்ட புலிகளை ஒப்படைத்தால் முற்றிலும் வேறு பாதைக்கு பயணிக்க வேண்டியிருக்கும் என்று அவர் கதறியது எவருக்கும் அப்போது புரியவில்லை.  புரிந்தபோது மொத்தமும் கைமீறியிருந்தது.

ஜெயவர்த்னே எதிர்பார்த்துக்கொண்டுருந்த கலவரம் வெடிக்க அதுவரைக்கும் புலிகளுக்கு கொடுக்கப்பட்டுருந்த பொதுமன்னிப்பை விலக்க அது மேலும் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் ஆயிற்று. கலவரங்களை இந்தியாவிற்கு தெரிவிக்க, நடந்த மந்திர ஆலோசனைகளுக்குப் பிறகு விடுதலைப்புலிகளின் கையில் உள்ள ஆயுதங்களை வலுக்கட்டாயமாக பிடுங்க உத்தரவு வர பொங்கியிருந்த பானையை தரையில் போட்டு உடைத்தாகிவிட்டது.  பிறகென்ன?  அவசரம். அலங்கோலம், இறுதியில் அவமானம்.

உச்சகட்டமாய் இனி இந்தியாவுடன் போரிட்டுத்தான் ஆக வேண்டும் என்று பிரபாகரன் தீர்மானமாய் நம்புவதற்கு முன் அவர் தரப்பு விசயங்களை, ராஜீவ் காந்திக்கு (12.10.1987 முதல் 13,01,1988) வரைக்கும் கடிதம் வாயிலாக தெரியப்படுத்த ஒவ்வொரு கடிதமும் ராஜீவ் கைக்கு கிடைத்த போது அவருக்கு உளவுத்துறை கொடுத்த தகவல் " அவர்கள் வலுவிழந்து கொண்டுருக்கிறார்கள் " என்கிற அடிப்படையில் இருந்த காரணத்தால் ராஜீவ் அந்தக் கடிதங்களை பொருட்படுத்தாமல் இருக்க முற்றியது தீராப் பகை.

மக்களை மிரட்டுதல், தாக்குதல், எறிகணை வீச்சு, அப்பாவிகள் சாவு, என்று தொட்டுத் தொடரும் சொந்தங்கள் போல் மக்கள் மொத்த அமைதியையும் இழந்த போது பாரபட்சம் இல்லாமல் விடுதலைப்புலிகளின் பின்னால் அணிதிரளத் தொடங்கினர்.  காட்டுப்பாதை புதிது.  மேலே இருந்து வரும் கட்டளைகளும் வினோதம்.  எவரை அடிப்பது?  எவரை பிடிப்பது?  செயலில் காட்டிய இந்திய வீரர்கள் மாண்டு போனார்கள்.

இது போக உளவுத்துறை கொடுத்துக்கொண்டுருக்கும் தகவல்களுக்கும், போரை தலைமையேற்று நடத்திக்கொண்டுருந்த தளபதி மூலம் அனுப்பப்பட்ட, உள்ளே நடந்து கொண்டுருக்கும் எதார்த்த சூழ்நிலை அறிக்கைக்கும் முரண்பாடுகளின் மொத்த வடிவமாய் இருந்தது. ஆட்சியாளர்கள் உளவுத்துறைக்கு கொடுத்த மதிப்பு என்பதை கடைசி வரைக்கும் உண்மை நிலவரத்திற்கும் கொடுத்து இருந்தாலே புதிய பாதை அன்றே கிடைத்து இருக்கும்.  கொடுக்க எவருமே இல்லை என்பதை விட அந்த அறிக்கைகள் ராஜிவ் காந்திக்கு சென்றுவிடக்கூடாது என்பதிலும் கடைசி வரைக்கும் உறுதியாய் இருந்தனர்.  தலைமைத் தளபதி திபேந்தர் சிங் பின்னாளில் இதை அவர் புத்தகத்தில் சொல்லி வருத்தப்பட்டுருக்கிறார்.
தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பொம்மை அரசு என்பதை இந்தியா மட்டும் எதிர்பார்க்கவில்லை.  ஜெயவர்த்னேவும் அது போன்ற ஒரு பொம்மையைத் தான் உள்ளே அமைய வேண்டும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டுருந்தார். வலுவானவர்கள் வந்தால் அதுவே எதிர்காலத்திற்கு விபரீதத்தை உருவாக்கிவிடும் அல்லவா? சிங்கள தந்திரத்தில் அன்றைய இந்திய ஆட்சிப் பொம்மைகள் என்ன செய்வார்கள்? என்ன செய்ய முடியும் என்பதைக்கூட உளவுத்துறை உணரத் தயாராய் இல்லை என்பது மொத்ததிலும் சோகமான ஆச்சரியம்.

இந்த பொம்மை அரசு மூலம் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட வரதராஜப்பெருமாள் தங்களுடைய ஆட்சி அதிகார அலுவலகத்தை திருகோணமலையில் வைத்து ஆள விரும்பினர்.  இதில் விருப்பம் இல்லாத ஜெயவர்த்னே அங்கு அவர்களுக்கு தேவைப்படும் கட்டிடங்கள் கொடுக்க மறுக்க தேர்ந்தெடுத்தவர்கள் நொந்தவர்களாக இருந்தனர். ஒப்பந்தப்படி அதிகாரப் பகிர்வும் கொடுக்க தயாராய் இல்லை.  ஜெயவர்த்னே அரசியல் ஓய்வு பெற்ற 1988 இறுதி வரைக்கும் இப்படித்தான் போய்க்கொண்டுந்தது. இவர்களை ஆட்சி என்ற பெயரில் உள்ளே அமர வைக்க வேண்டும் என்பதை விரும்பிய இந்தியா அவர்கள் வலுவானவர்களாக மாற்ற ஏன் முயற்சிக்க வில்லை என்பதை விட பிரேமதாசா உள்ளே வந்த போது கூட இதில் எவரும் அக்கறை செலுத்தவும் தயாராய் இல்லை.  இந்திய வரிப்பணத்தை கொண்டு போய் கொட்டி தீர்த்து ஆடி அலங்கோலப்படுத்தி அவமானப்பட்டு இறுதியில் இது போன்ற முறைப்படியான விசயங்களில் கூட ராஜீவ் காந்திக்கு தெளிவான முறையில் எவரும் புரிய வைக்க தயாராய் இல்லை.

இந்தியா என்ற இறையாண்மை மிக்க நாட்டின் கௌரவம் என்பதை நடுத்தெரு சாக்கடையில் கொட்டி கவிழ்த்த அதிகாரவர்க்கத்தினர் ராஜீவ் காந்திக்கு வாழ்நாள் முழுக்க போக்க முடியாத களங்கத்தை உருவாக்கியிருந்தனர்.  பின்னால் வந்த பிரேமதாசாவிடமும் முரண்பட்டு முட்டி மோதிக்கொண்டு இருந்தனர். பல விதங்களிலும் தன்னுடைய செல்வாக்கை இழந்து இருந்த ராஜீவ் காந்தி அப்போது இந்தியாவில் தொடங்கப் போகின்ற தேர்தல் அறிவிப்பு காரணமாக தன்னுடைய தோல்வி மொத்தமும் வெளியே தெரிந்து விடுமோ என்று அமைதிப்படை இலங்கையில் இருந்து வெளியேறவேண்டிய விலகலை தள்ளிப்போட்டுக்கொண்டே நகர்த்தினர். இந்தப் பிரச்சனைகளில் தொடக்கம் முதல் பாய்ந்தவர்கள் இந்திய உளவுத்துறையினர். இவர்களுக்கு மேலே வானளாவிய அதிகாரம் உள்ளவராக பாய்ச்சல் காட்டியவர் தீட்சித்.  இறுதியில் பலிகடா ஆகியதென்னவோஅமரர் ராஜீவ் காந்தி.
 காசி ஆனந்தன், பழ, நெடுமாறான், பிரபாகரன், மாத்தையா, 
ஆனால் இத்தனை விசயங்களிலும் தோற்ற உளவுத்துறையினர் ஒரு வகையில் அன்றே சில அவர்கள் பாணியிலான நல்ல விசயங்களை செய்யத் தொடங்கினர்.  பிரபாகரனுக்கு சமமாக இருந்த மாத்தையாவை வளைத்துப் போட்டதும், விடுதலைப்புலிகளின் உளவுத்துறை தலைவர் பொட்டு அம்மன் பயணித்த காரில் வெடிகுண்டு வைக்கும் அளவிற்கு அவரை மாற்றியதும், கிட்டு மேல் வெடிகுண்டு வீசி அவரின் காலைப் போக்கியதும் நடந்தது. அதுவே இறுதி வரைக்கும் மாற்றம் பெறாமல் ஆயுதக்கொள்முதல் செய்துவிட்டு,  கிட்டு பயணித்து வந்த கப்பலை மாத்தையா மூலம் கண்டு கொண்ட இந்திய கப்பற்படை சுற்றிவளைக்க ஆயுதக்கப்பலையும் தன்னையும் அழித்துக்கொண்டு விடுதலைப்புலிகளின் வரலாற்றில் கிட்டு வீரமரணம் எய்தினார்.  அன்று தான் இந்திய உளவுத்துறையிடம் விலை போயிருந்த மாத்தையாவின் துரோகத்தை கண்டு உணர காரணமாக அமைந்தது. இது போன்ற மூன்றாந்தர காரியங்களில் இந்த விசயத்தில் அன்று கெட்டியாக இருந்தவர்கள் ராஜீவ் காந்தி மரணத்திலும் இருந்து இருக்கலாமே?  ஆனால் இதை விட மொத்ததிலும் கொடுமை இந்திய அமைதிப்படையின் தொடக்கம் முதல் கதாநாயகன் போல் காட்சியளித்தவரும், பிரபாகரனை அழிக்காமல் விட்டு விடுவேனா என்று டெல்லி அசோகா உணவு விடுதி முதல் இறுதி படை விலக்கல் வரைக்கும் உறுமிக்கொண்டுருந்த தீட்சித், பின்னால் அவர் எழுதிய புத்தகத்தில் நடந்த நிகழ்வுகளைப்பற்றி, பிரபாகரனைப் பற்றி எப்படி எழுதியுள்ளார் தெரியுமா?

" நான் பார்த்தவரைக்கும் மற்ற போராளிகுழுக்களின் தலைவரை விட எல்லாவிதங்களிலும் பிரபாகரன் மேம்பட்டவராக காணப்பட்டார். இவரைப் பற்றி தப்பாக புரிந்து வைத்துருக்கின்றேன். இவரது ஆழமான லட்சியம், அரசியல் அறிவு, ராணுவ போர்த்தந்திரங்கள், போர்த்திறமைகளை நான் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இவருடைய மதிநுட்பம் நிறைந்து பல சாதனைகளை போற்றத்தான் வேண்டும்.  அமைதிப்படைகளின் போருக்குத் தாக்கு பிடித்து தொடர்ந்து போராட்டத்தை முன் நடத்திய காரணத்தால் இவர் மக்களின் ஆதர்ஷ்ண நாயகனாக மதிப்பைப் பெற்றார் "

" தமிழீழ லட்சியத்தில் பிரபாகரனிடமிருந்த தணியாத வேட்கை, தீராத வெறி, தொடர்ந்த போராட்டங்கள் அத்தனையிலும் இழக்காத மன உறுதி ஆகியவற்றை நாங்கள் குறைவாக மதிப்பீடு செய்தமையே இந்தியா செய்த மாபெரும் தவறாகும் "

வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி என்ற பட்டம் போல? காரணம் இவரும் முனி பிடித்தவர் போலத்தான் எப்போதும் கோபப்பார்வையாய் வாழ்ந்தவர். இவர் எளிதாக பாராட்டுரை வழங்கி விட்டு போய்விட்டார். இவர் உருவாக்கிய இவரால் உருவாக்கப்பட்ட உருக்குலைத்த அடிப்படை இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமை போராட்டங்களின் எச்சமும் மிச்சமுமாய் உலகை ஸ்தம்பிக்க வைத்த காந்தி, இந்திரா மரணத்திற்குப்பிறகு ராஜிவ் காந்தி மரணம் வரைக்கும் கொண்டு வந்து நிறுத்தியது.  அவருக்கென்ன போய்விட்டார்?  அகப்பட்டவர் ராஜிவ் காந்தி?

ஜெயவர்த்னேவுக்குப்பிறகு ஆட்சிக்கு வந்த பிரேமதாசா மொத்தத்திலும் வித்யாசமான பார்வை. ஜெயவர்த்னே ஆட்சியில் பிரதமராக இருக்கும் போதே அமைதிப்படை உள்ளே இருப்பதை வெறுத்தவர். காரணம் அமைதிப்படை இன்னமும் உள்ளே இருந்து கொண்டுருக்கிறார்கள்.  இதையெல்லாம் விட மிகப்பெரிய ஆச்சரியம் மேல்தட்டு மக்கள் வந்து அமர்ந்த இலங்கை அதிபர் பதவி என்பது இவர் வந்து அமர்ந்ததும் மொத்த ஆச்சரியம்.  ஆமாம் இவர் சலவைத்தொழிலாளி வம்சத்தில் பிறந்து வந்த அடித்தட்டு மக்களின் சார்பாளர்.

Sunday, February 21, 2010

விடாது துரத்திய கருப்பு முள்ளிவாய்க்கால் வரைக்கும்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது.  வேறு வழியே இல்லை.  இந்தியா ஓப்பந்தம் மூலம் சொன்னாலும் ஜெயவர்த்னே வேறுவழியின்று ஒத்துக்கொண்டு இருந்த போதிலும் இந்த தேர்தல் நடத்தத்தான் வேண்டுமா? என்று இருவருமே நினைக்கும் அளவிற்கு தள்ளிப் பார்த்தார்கள்.  ஆனால் மொத்தமாக எல்லை மீறிப் போய்விடுமோ? என்ற அச்சத்தில் அறிவித்தே ஆக வேண்டிய சூழ்நிலையில் இருந்தார்கள் என்பது தான் பொருத்தமாக இருக்கும்.

இது வரையிலும் இந்திய அமைதிப்படையுடன் பிரபாகரன் புரிந்த வீரதீர சாகசங்கள், மற்ற போராளிக்குழுக்களை இந்தியா ஒன்றிணைத்து த்ரி ஸ்டார் என்று பெயரும் சூட்டி தங்களுக்கு கீழே வைத்துக் கொண்டு பல புனித சேவைகளை இவர்கள் மூலம் உருவாக்கிக்கொண்டுருந்ததையும் பார்த்தோம்.  ஆனால் இப்போது தேர்தல் காலம்.  மொத்தமாக இவர்களின் தராதரம் குறித்துப் பார்க்க வேண்டும்.  அப்போது தான் பிரபாகரன் குறித்து சில விசயங்கள் நமக்குப் புரியும்.
என்னதான் மொத்தமாக இலங்கை அரசாங்கத்துக்கு பிரபாகரன் என்ற ஆளுமை சிம்ம சொப்பனமாக இருந்தாலும் கூட யாழ்பாணத்தில் கிழக்கு பகுதியில் மக்கள் செல்வாக்கு பெற்றவர்கள் EPRLF மற்றும் EROS போன்றவர்களும் தான்.  காரணம் மலையக மக்களின் ஆதரவும், முஸ்லீம் மக்களின் ஆதரவைப் பெற்றவர்கள்.  இதற்கு பல காரணங்கள்.

யாழ்பாண மேலாதிக்கம், பிரபாகரன் குறித்து அச்சங்கள் என்று தொடர்ந்து கொண்டே இருக்கிறது.  இதற்கு மேலாகவும் மேல் சாதிக்காரர்கள் என்ற வகையில் வருபவர்களுக்கு பிரபாகரன் என்றாலே அலர்ஜி.  அந்த அளவிற்கு இவரும் புரிதலை உருவாக்கவில்லை.  உருவாக்கும் சூழ்நிலையில் காலமும் அவருக்கு அவகாசம் வழங்கவில்லை.  இதுவே தான் பின்னாளில் கருணாவை பொறுப்புக்கு கொண்டு வரும் வரைக்கும் நடந்தது.  கருணா ஆளுமையை குறை சொன்னாலும் நான் இனியும் நீடிக்க வேண்டுமென்றால் உளவுத்துறை தலைவர் பொட்டு அம்மான், அரசியல் பொறுப்பாளர் நடேசன் இருவரையும் நீக்க வேண்டும் என்ற போது தான் அவரின் உள் மன ஆசையை பிரபாகரன் அன்று முழுமையாக புரிந்து கொண்டார். தாமதமான கருணாவைப்பற்றிய இந்த முதல் புரிதல் முதல் ஆச்சரியம்.

புலம் பெயர்ந்தவர்கள் என்பதையும் தாண்டி பரவலாக மற்ற நாடுகளிலும் வேறு வழியே இல்லாமல் பிரபாகரனுக்கு தொடக்கம் முதல் ஆதரவை வழங்கி வந்தவர்கள், மனதார விரும்பியவர்கள், ஆதர்ஷ்ணமாக கருதி வணங்கியவர்கள் என்று தொடர்ந்து கொண்டே வரும் கூட்டத்தில் இந்த கூட்ட மக்களையும் நாம் கருத்தில் கொள்ளத்தான் வேண்டும். அச்சம் என்பது பணிய வைக்குமே தவிர அன்பை உருவாக்குமா? என்ற கேள்வியை இந்த இடத்தில் கேட்டுத்தான் ஆகவேண்டும். ஆனால் அதையும் உருவாக்கி கருணா இறுதியில் பிரியும் போது சொன்ன வாசகம் " ஒவ்வொரு மாதமும் பிரபாகரன் தலைமைக்கு 50 ஆயிரம் கோடி வருமானம் வந்து சேர்கிறது.  என்னுடைய பகுதிக்கு ஒரு கோடி தான் கொடுக்கிறார்கள்.  நான் எப்படி இதில் திருட முடியும்"  என்பதில் இருந்தே கடைசிகட்ட 5 ஆண்டுகளில் தந்தை செல்வாவிற்கு அதிகபட்சமாக இலங்கை தமிழ் மக்கள் கொடுத்த 16 சீட்டுக்கள் போல உச்சபட்ச நிர்வாக பரிபாலண நிர்வாகத்தை உள்ளே நடத்திக்கொண்டுருந்தார்.  சொல்லப்போனால் புலம் பெயர்ந்தவர்கள் விரைவில் தனித் தமிழ் ஈழத்தில் நாம் வாழ முடியும் என்ற நம்பிக்கை செடியாக மரமாக மாறிக்கொண்டுருந்தது.

விடுதலைப்புலிகள் அழித்த சீறி சபாரெத்தினத்தை, இவர்களே அழிக்காமல் இருந்து இருந்தாலும் அவருடைய TELO இயக்கமே அழித்து தான் இருக்கும்.  காரணம் டெலோ இயக்கம் என்பது பெயர் ஒன்றே தவிர சிறு சிறு குழுக்கள் போலத்தான் செயல்பட்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாதையில் பயணித்துக்கொண்டுருந்தனர்.  தன்னுடைய கட்டுப்பாடு என்பது இனி செல்லுபடியாகாது என்பதை உணர்ந்த சிறீ சபாரெத்தினம் அடங்காதவர்களை அழித்ததும், அழிக்க முற்பட்ட போது சபாரெத்தினத்திடம் இருந்து தப்பியவர்களே இவரை துரத்திக்கொண்டுருந்ததும் ஒரு பக்கம் நடந்து கொண்டுதான் இருந்தது.

யாழ் தளபதி கிட்டு முந்திக்கொண்டார்.  முடித்தவர்கள் விடுதலைப்புலிகள் என்ற பெயரும் உருவாகிவிட்டது.  என்ன லாபம்?  மற்றவர்களிடம் " இனி இங்கு நாங்கள் தான் .  ஜாக்கிரதையாக இருங்கள் " என்ற பயத்தை உருவாக்க பயன்பட்டது.  இதன் தொடர்ச்சியாக ஈராஸ் பாலகுமார் கூட போதுண்டா சாமி என்று பிரபாகரன் பக்கம் சாய்ந்து விட்டார்.  அப்போதும் கூட ஈபிஆர்எல்எப் பத்பநாபா தெளிவாகத்தான் இருந்தார்.  ஜெயவர்த்னே அரசில் இருந்த அமிர்தலிங்கத்தை மக்கள் நலன் இல்லாதவர் என்று தங்களுடைய ஈழப் பேராளி என்ற பத்திரிக்கையில் கேலிச்சித்திரம் மூலம் தங்கள் எதிர்ப்பை காட்டியவர்களே காலத்தின் கோலத்தில் அமைதிப்படை உள்ளே வந்ததும் பதவி ஆசையில் மொத்த கொள்கைகளும் மாற்றம் பெற்றது.    இதிலும் பிரிவு உருவாகி டக்ளஸ் தேவனாந்தா வேறொரு ஜீவனாக மாறியிருந்தார். இன்றைய கருணா போல் இவரும் தப்பி பிழைத்ததும் இன்று வரையிலும் உயிருடன் இருப்பது அடுத்த ஆச்சரியம்.

தன்னுடைய ஆதிக்கத்தை மட்டும் நிலைநாட்டுபவர் என்று பிரபாகரன் குறித்து சொன்ன இவர்களின் அத்தனை வார்த்தைகளும் இவர்களே ஒவ்வொருவரும் பிரிந்து தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநாட்ட நடத்தப்பட்ட போராட்டங்களும், விழுந்த தலைகளும், ரத்தமும் இவர்களுக்குள்ளே எவரையும் திருப்திபடுத்தவில்லை.  திருந்தவும் தயாராய் இல்லை.  பிரபாகரன் இவர்களை ஒப்பிடும் போது பராவாயில்லை.  ஆமாம்.  நான் இப்படித்தான் என்று வெளிப்படையாக அறிவித்து தன் மேலாதிக்கத்தை நிலை நிறுத்தியவர்.  இவர்கள் கத்திக்கொண்டு வெளியே வந்து கதறும் வாழ்க்கையை தாங்களும் வாழ்ந்து சார்ந்த மக்களையும் சாகடித்தவர்கள்.

இன்னமும் தெளிவாக புரிய வேண்டுமென்றால் EPRLF ஆட்சி அதிகாரம் என்று வந்ததும் தாங்கள் உருவாக்கிய அடியாள் பட்டாளமும், இந்திய அமைதிப்படை மூலம் உருவாக்கப்பட்ட " குடிமக்கள் படை" என்ற ஆள் தூக்கிகளும் எவருக்கும் இன்றும் நினைவில் இருக்கும்.  எவரைப் பார்த்து சர்வாதிகாரம் என்று சொன்னார்களோ இவர்களே அந்த சர்வாதிகாரத்தையும், தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் போலத்தான் தங்கள் கைக்கு ஆட்சி அதிகாரம் என்று வந்ததும், சுத்தமான அரசியல்வாதியாக வாழ்ந்தார்கள்.  மக்கள் நலன் என்பது அந்தப்பக்கம் என்பதாகத் தான் செயல்பட்டார்கள்.  பிரபாகரன் மூலம் பத்பநாபா கொல்லப்பட முக்கிய காரணம் பின்னால் வரப்போகும் பிரேமதாசாவுடன் வெளியே தெரியாத ஒப்பந்தமே முக்கிய காரணம் ஆகும். பிரேமதாசா இலங்கையின் உள்ளேயிருந்த சங்கரி என்பவர் மூலம் பத்பநாபாவால் பிரபாகரனை அழிக்க என்று உருவாக்கப்பட்டது. இவர்களுக்கு முன்பே அதை உணர்ந்த பிரபாகரன் வேறு வழியே இல்லாமல் பத்மநாபாவையும் செலவு கணக்கில் கொண்டு போய் சேர்த்தார்.

அமைதிப்படை வெளியேறியதும், பொம்மை அரசில் இருந்த முதல் அமைச்சர் வரதராஜப்பொருமாளும், பத்பநாபாவும் சென்னையில் அடைக்கலம் ஆக வேண்டிய சூழ்நிலையில் தான் வீராதி வீரர்களாக உள்ளே வாழ்ந்தனர். விடுதலைப்புலிகள் ரவுண்டு கட்டி தங்கள் தாக்குதல்களை தொடுத்தனர்.  இவர்கள் விடுதலைப்புலிகளிடம் இருந்து தப்பித்து கிளம்பிச் சென்றவர்கள்  இருக்கும் இடத்தில் அமைதியாக கிள்ளாமல் இருந்தால் பரவாயில்லை.   ஆசை யாரை விட்டது?  சென்னையில் இருந்து கொண்டே பிரபாகரனை கிள்ளத் தொடங்கியதும் வேரோடு சாய்க்கப்பட்டனர். அதில் இருந்தும் தப்பியவர் வரதராஜப் பெருமாள். ராஜீவ் காந்தி மரணத்திற்கு முன்பே இவரை கண்டு பிடிக்க விடுதலைப்புலிகளின் முயற்சி இறுதி வரைக்கும் தோல்வியில் தான் முடிந்தது.  வட நாட்டில் ஏதோ ஒரு மூலையில் இவரை இந்திய உளவுப்படையினர் பொத்தி பொத்தி சமஞ்ச பெண் பிள்ளை மாதிரி வைத்திருந்தனர். ராஜஸ்தான், டெல்லி வரைக்கும் அலைந்த போது கூட விடுதலைப்புலிகளின் சார்பாளராக வந்தவர்கள் இவரின் நிழலைக்கூட கண்டு பிடிக்க முடியவில்லை. காரணம் அந்த அளவிற்கு உளவுத்துறையினர் தங்கள் மக்கள் சேவையை திறம்பட செய்து கொண்டுருந்தனர். இன்றுவரையிலும் அரசாங்க செலவில் வாழ்ந்து கொண்டு மகளை நடிகையாக்கி கலைச்சேவை புரியவைக்க ஆசைப்படுவர் தான் இந்த முன்னாள் மக்கள் சேவகர்.

சிதறிக்கிடந்த நெல்லிக்காய்கள் போல் இருந்த பிளாட் இயக்கமும் அமைதிப்படை உள்ளே வந்த போது முடிந்தவரைக்கும் போராடித்தான் பார்த்தார்கள்.  உமா மகேஸ்வரன் கூட இந்தியாவை பகைத்துக்கொண்டு " வங்கம் தந்த பாடம் "  என்ற இந்திய உளவுத்துறைக்கு எதிராக வெளியீடுகளை வெளியிட்ட போதும், இந்தியா தொடக்கத்தில் அமைதிப்படை உள்ளே வருவதற்கு முன்பு இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பின்னால் இருந்தவர்கள் என்று ரா உளவுத்துறை தான் என்ற உண்மையை போட்டு உடைத்து ஊடகத்தில் பேட்டியாக சொன்ன போதே அவரின் விதி தீர்மானமாய் முடிவு பாதைக்கு வந்து இருந்தது.  மொத்த ரகஸ்யங்களையும் வெளியிட்ட சில தினங்களில் தான் அவர் இயக்கத்தில் இருந்தவர்களால் கொல்லப்பட்டார்.  உடன் இருந்தவர்கள் கொன்றார்கள் என்று அந்த கோப்பு முடிவுக்கு வந்தது.  ஆனால் அதற்குப் பின்னாலும் திரைமறைவு ரகஸ்யங்கள் உண்டு என்பதை உணர்ந்தவர்கள் பல பேர்கள். அப்போதைய சூழ்நிலையில் உள்ளே பிரபாகரனை பகைத்துக்கொண்டால் சாவு என்பது போல் ரா உளவுத்துறையை முறைத்துக்கொண்டாலும் சாவு தான் என்பதை உணர்த்திக்காட்டிய சம்பவங்கள் இது. பிரபாகரன் எங்களின் வாழ்வுரிமை போராட்டத்திற்கு தொந்தரவு கொடுத்தால் இது தான் முடிவு என்றவர்.  உளவுத்துறையினரே நீங்கள் ஆதரவு கொடுத்தால் இது தான் கதி என்பதைக் காட்டி கதிகலக்கியவர்கள்.  மத்தளத்திற்கு ரெண்டு பக்கமும் இடி என்பது இது தான்.

யாழ்பாண மேயர் ஆல்பர்ட் துரையப்பாவை பிரபாகரன் சுட்டுக்கொன்ற முதல் சம்பவத்தின் போது அவரின் வயது 21.  அப்போது முதல் மற்றவர்களிடம் பயத்தை உருவாக்கி வைத்து தன்னுடைய திறமையால், கொண்டு வாழ்ந்த தன்னம்பிக்கையால், தன்னை மட்டும் நம்பி தன் ஆளுமையை வளர்த்துக் கொண்ட பிரபாகரன் அவரை அறியாமலே சில தவறுகளை கண்டும் காணாமல் தான் தன்னிடமே வைத்திருந்தார், தன்னை பிடிக்காதவர்கள் என்று  வாழ்ந்து கொண்டுருந்த இலங்கையின் கிழக்கு மகாண மக்கள் குறித்து அக்கறையோ, அதனை மாற்றிவிட வேண்டும் என்ற எண்ணமே இருந்ததா? என்று தெரியவில்லை.  இனிமேல் நீங்கள் மாறித்தான் ஆக வேண்டும் என்ற தன்னம்பிக்கை ஒரு காரணமாக இருந்து இருக்கலாம். இதைத்தவிர யாழ்பாணம் என்றால் மற்ற மகாண மக்களுக்கு ஒரு விலகல் எப்போதும் இருந்தது என்பதை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.  தொடக்கம் முதலே சாதீயப் பார்வை, மேலாதிக்க எண்ணங்கள், மேல்தட்டு வாழ்க்கை என்று அவர்களின் வாழ்க்கை முறைகளும், அரசாங்க பதவிகளின் மூலம் பெற்ற பொறாமைப்பட்டுத் தான் தீர வேண்டிய வாழ்க்கை அமைப்பும் ஒரு காரணமாக இருக்கலாம்.  இதற்கெல்லாம் மீறி ஆச்சரியப்பட வேண்டிய சமாச்சாரம் இலங்கையின் ஒரு பகுதியான யாழ்பாண தீபகற்பத்திற்கும் இலங்கை வரைபடத்தில் கீழே லேசான புருவ நெற்றி போல் இருக்கும் காலி (இந்த இடத்தில் தான் முதன் முறையாக டச்சு படையினர் வந்து இறங்கினர்) என்ற இடம் வரைக்கும் உள்ளே வாழ்ந்து கொண்டுருந்த மொத்த இலங்கை வாழ் தமிழ் மக்களின் வாழ்க்கை முறையும் நம்பவே முடியாத ஆச்சரியம் அதிசயம்.

யாழ்பாண மக்களின் வாழ்க்கை முறைகளும், வழிபாடு, கலாச்சாரம், உணவு முறைகள் அத்தனையும் மன்னார் மாவட்டத்தில் மிகுந்த வேறுபாடு.  இரண்டு வன்னியாக இருக்கும் வன்னிப்பகுதியில் அதைவிட இந்த இரண்டு வாழ்க்கை முறையும் மொத்த வேறுபாடுகள்.  தலைநகரம் கொழும்புவில் வாழ்பவர்கள் மொத்தத்திலும் வேறொரு தளத்தில் தான் வாழ்ந்தார்கள்.  கடற்கரையோர மொத்த இலங்கையில் வாழ்ந்து கொண்டுருப்பவர்கள், தமிழ் மொழி பேசிக்கொண்டு தமிழ்நாட்டு கலாச்சாரத்தை நிணைவு படுத்தும் விதமாக இருக்கும் முஸ்லிம்களின் வாழ்க்கை முறையும், சற்று உருது, வேறு சில மொழிகள் என்று வாழும் முஸ்லீம்கள் என்று அவர்கள் ஒரு தனி அத்தியாயம்.
மொத்தத்தில் ஜாதியால், மதத்தால், இனத்தால், கலாச்சார பின்பற்றுதல் என்ற முறைகளால் முறைத்துக்கொண்டு அங்கொன்றும் இங்கொன்றுமாய் பிரிந்து வாழ்ந்து கொண்டுருந்த ஒன்றுபடாத தமிழின மக்களை பிரபாகரனின் அச்சம் கலந்த ஆளுமை தான் ஒரு புள்ளியில் கொண்டு வந்து நிறுத்தியது. வேறு வழியில்லை என்பதாக ஒரு புள்ளியில் கொண்டு வந்து நிறுத்தியதாகவும் இருக்கலாம்.  இனி வேறு வழியில்லை என்பதாகவும் இருக்கலாம்..  காரணம் சுதந்திரம் முதல் இப்போது நாற்பது ஆண்டுகளாக ஆன போதும் கூட ஜாதியால் தீண்டத்தகாதவர்கள், வெறுக்கப்பட வேண்டியவர்கள் என்பவர்கள் எல்லோருமே விடுதலைப்புலிகளின் இயக்கத்தில் பின்னாளில் ஜாதி இல்லாத தன்மையை மெதுமெதுவாக உருவாக்கியதை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும்.  யாழ்பாணத்தில் சைவ வேளாளர் என்ற இனமே மேலாதிக்கம் நிறைந்தவர்கள்.  தமிழ்நாட்டைப் போல பிராமணத்தன்மை இலங்கையில் இல்லாத போதும் கூட நெருக்கமான அடுத்தவர்கள் நுழைய முடியாத அளவிற்கு இவர்களின் கட்டுக்கோப்பு மற்றவர்களை விலக்கி வைத்திருந்தது. இதற்கு அடுத்த பிரிவில் வரும் பிரபாகரன் குறித்து இந்த ஆதிக்க மக்கள் கடைசி வரைக்கும் தங்கள் பார்வையை மாற்றிக்கொள்ளவும் தயாராய் இல்லை ஆதரவு கொடுக்கவும் முன்வரவில்லை.

நீ என்னை விரும்புகிறாய்? விரும்பவில்லை?  விடுதலைப்புலிகளின் கொள்கைகள் உனக்கு பிடிக்கவில்லை? பிடிக்கிறது? என்பது அல்ல இங்கு முக்கியம்.  உன்னுடைய தனிப்பட்ட கொள்கைகள் நோக்கங்கள் விருப்பங்கள் எதுவும் எனக்கு முக்கியமல்ல.  வீட்டில் ஆண் பிள்ளைகள் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள்?  ஒருவரை இயக்கத்திற்கு தந்து விடு?  என்ன வருமானம் வருகிறது?  வரியாக தீர்மானிக்கப்பட்டுள்ள தொகையை கொடுத்து தான் ஆக வேண்டும்.  பணமா இல்லை நகையா இல்லை வேறு ஏதோ ஒரு வழியில் நீயும் இதில் பங்கெடுத்து தான் ஆக வேண்டும்.  நான் ஜாதி மதம் இனம் எதையும் பார்ப்பது இல்லை?  எனக்குத் தேவை தனி தமிழ் ஈழம்.  அதை நான் அடைய இந்த பாதை தான் சிறந்தது என்று ஏற்கனவே தீர்மானித்து விட்டேன்.  உன்னுடைய ஆலோசனை இருக்கட்டும்.  வலி பெற்றவனுக்கு வழி தெரியாமலா இருக்கும். நான் கேட்டதை முடிந்தால் கொடுத்து உதவியாய் இரு.  வெளிநாட்டில் இருக்கிறார்களா?  அவர்களிடம் சொல்.  இல்லாவிட்டால் எமது ஆட்கள் அவர்களை தொந்தரவு செய்யக்கூடும். எந்த வகையிலும் நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஆதரவு கொடுத்து தான் ஆக வேண்டும்.  ஏற்கனவே இருந்தவர்கள் அத்தனை பேர்களும் உருவாக்கிய உருக்குலைத்த பாதைகளை பேசி உட்கார்ந்து தீர்மானித்து ஒரே நேர்கோட்டில் இனி நான் கொண்டு வர வேண்டுமென்றால் அடுத்த நூற்றாண்டு ஆகி விடும்.  உனக்கு அது புரியாது?

சர்வாதிகாரம் தான்.  காரத்தை விரும்பித்தான் ஆக வேண்டும்.  சர் பொன்னம்பலம் அருணாச்சலம், சர் பொன்ம்பலம் இராமநாதன், தந்தை செல்வா பாதைபோல இது வேலுப்பிள்ளை பிரபாகரன் பாதை.

ஆனால் இவை அத்தனையும் இந்த இந்திய அமைதிப்படை உருவாக்கிய அலங்கோலங்கள் மக்களின் மனத்தை மாற்றியதும் உண்மை.  உருக்குலைத்த வாழ்க்கையை மீட்டு எடுக்க வேண்டும்.  பிரபாகரன் எதிர்பார்க்காத மொத்த மக்களின் ஆதரவும் ஒருங்கே பெற்றதும் இதன் தொடர்ச்சியே.

உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தின்படி தேர்தலை அறிவிக்க எத்தனை காரணங்கள் இருந்ததோ அத்தனை ரகஸ்யங்களும் இருக்கத்தான் செய்தது.  இலங்கை தேர்தல்களில் இந்தியா தலையிடாது என்ற தீட்சித் ஊடகத்தில் கிளிப்பிள்ளைப் போல் ஒப்புவித்தாலும் அவரின் முழுமையான வேலையே பேரங்களும், ரா வை முடுக்கிவிடுவதும் தான். மொத்த புரிதலுடன்படி இவர்கள் விரும்பியபடியே யாழ்பாணத்தில் வடக்குப் பகுதியில் ஈபிஆர்எல்எப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.  தேர்தலை புறக்கணிக்கச் சொன்ன விடுதலைப்புலிகளின் கோரிக்கையை மீறி ஒவ்வொன்றும் இந்திய உளவுத்துறையின் மேற்பார்வையில் நடந்தேறிக்கொண்டுருந்தது. ஆனால் மக்களும் ஓட்டுச் சாவடிக்கு வந்து ஓட்டளித்தனர்.  காரணம் ஓட்டளித்த மக்கள் பகுதியில் இந்திய அமைதிப்படையின் தாக்கம் என்பது தெரியாத சூழ்நிலையில் வாழ்ந்த காரணமே இதற்கு முக்கியம். இந்தியா தொடக்கம் முதலே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற காரணம் என்பது ஏன் என்று இறுதியில் தான் புரிந்தது?  இப்படித்தான் நடக்கும் என்று ஏற்கனவே புரிந்து கொண்ட பிரபாகரன் தேர்தலை புறக்கணிக்கின்றோம் என்ற வார்த்தைகள் ஆச்சரியமல்ல.

வடக்கே விடுதலைப்புலிகளுக்கு அஞ்சி தேர்தல் பணி செய்ய எவரும் முன்வரவில்லை.  இந்திய ராணுவ விமானங்கள் முழுமையாக ஈடுபடுத்தப்பட்டது.  கொழும்புவில் இருந்து ஜெயவர்த்னே எதிர்ப்புகளை மீறி தேர்தல் அதிகாரிகளை தூக்கி வந்து, மனுத்தாக்கல் போன்ற சம்பிரதாயங்களை மாற்றி கிழக்குப் பகுதியிலும் ராணுவ " பாதுகாப்பில் "  தேர்தல் நடத்தப்பட்டது.  முழுக்க EPRLF ஆளுமையில் நடந்தேறியது.  64 இடங்களை " பெற்று "   அறுதிப்பெரும்பான்மை கிடைத்ததாக அறிவிக்கப்பட்டது.  மக்கள் ஓட்டு அளிக்க வந்ததும், அராஜகங்களை மீறி தானாகவே வந்து வரிசையில் நின்றதும் ஒரு காரணமாக இருந்தாலும் இந்திய அமைதிப்படையின் தாக்கம் என்பது இந்தப்பகுதியில் முழுமையாக வந்து அடையவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. போட்டியிட வந்து முஸ்லிம் வேட்பாளர்கள் துரத்தியடிக்கப்பட்டதும், வாக்குச் சாவடிகளை EPRLF தங்களுடைய ஆளுமைக்குள் வைத்திருந்ததும், அவர்கள் எத்தனை தூரம் இந்த வாய்ப்புக்காக காத்து இருந்தார்கள் என்பதை நாம் புரிந்து கொண்டால் தமிழன் என்பவனின் தனிக்குணத்தை தனியாக தெரிந்து கொள்ளத்தான் வேண்டுமா?

இந்திய வெளிப்படையான அரசாங்க கணக்குப்படி ஆயிரம் கோடிகளுக்கு மேல் கொண்டு போய் இலங்கையின் உள்ளே அமைதியை நிலைநாட்டுகிறோம் என்று சொல்லி கொட்டினார்கள்.  விரும்பியபடியே பொம்மை அரசாங்கத்தையும் நிறுவினார்கள்.  நிறுவிய அரசாங்கத்தையும் இந்தியா வெளியேறிய பிறகு ஜெயவர்த்னே கண்டு கொள்ளவில்லை. பின்னால் வந்த பிரேமதாசாவுக்கு இதை வைத்துக்கொண்டு எப்படி ஆட்டத்தை தொடங்கலாம் என்ற தனி கணக்கு. இந்தியா ஒப்பந்தபடி, பேசியபடி அதிகாரங்கள் வழங்கப்பட வில்லை.  அவர்களும் சரியான முறையில் நடந்து கொள்கிறாரா? என்பதை கவனிக்க இந்தியாவிற்கும் அதற்குப்பிறகு அக்கறையும் இல்லை.  பதவிக்கு வந்தவர்களும் தங்களுடைய ஆளுமையை நிலைநாட்டும் அளவிற்கு அவர்களிடம் வலிவும் இல்லை.

அவமானத்துடன் வீரர்கள் திரும்பினார்கள்.  எதற்காக இறந்தோம் என்று ஏராளமான வீரர்களும், ஏனிந்த காயம் என்று ஆறாத ரணத்துடனும் இந்தியாவிற்கு திரும்பி வந்து இறங்கிய வீரர்களை வரவேற்க யாருமில்லை. படை விலகல் என்று படிப்படியாய் மாறி மொத்தமும் விலகி மூன்றாவது நாளில் இரண்டாவது முறையாக அனிதா பிரதாப் என்ற செய்தியாளருக்கு பிரபாகரன் நீண்ட பேட்டி அளித்தார். பேட்டி முடிந்ததுமே அன்றைய அவரது பிறந்த நாளான 26ந் தேதியில் எடுத்துக்கொண்ட ஓய்வில் ஒரு வேளை ராஜீவ் காந்தி " கணக்கு " குறித்து சிந்தித்து இருக்கலாம்?

தன்னுடைய தன்னம்பிக்கை தவிர வேறு எதையும் நம்ப மறுக்கின்ற பிரபாகரன் தொடக்கம் முதல் வைத்திருந்த கொள்கை தொடக்க தேதியான 8 முடிவு என்று வரக்கூடிய 8  வரக்கூடிய எந்த நாட்களிலும் தனக்கு சாதகமாக வரவில்லை என்பதை கருத்தில் கொண்டு அந்த நாட்களில் அவர் எதையும் செய்வதில்லை.  ஆனால் இந்த கணக்கு எங்கு கொண்டு வந்து நிறுத்தியது.  முள்ளிவாய்க்கால் மே 17 வரைக்கும் கொண்டு வந்து நிறுத்தியது.  ஒவ்வொரு வீரத்திற்கும் ஒவ்வொரு கணக்கும்.  நாம் நம்ப மறுக்கின்ற காலத்திற்கும் அது போட்டு வைத்திருப்பதும் தனி கணக்கு. சில சமயம் காலங்கள் தோற்று ஓதுங்கி விடும்.  அதற்கும் நம் முன்னால் உதாரணமாக காட்சியளித்தவர் யாசர் அரபாத், காட்சியளித்துக்கொண்டுருப்பவர் பிடல் காஸ்ட்ரோ, முறைகள் வேறு.  முயற்சிகளும் வெவ்வேறு.

ஜெயவர்த்னே கூட இனி போதும்டா சாமி என்கிற மனோநிலையில் ஓய்வெடுக்க தயாராய் இருக்க பிரேமதாசா உள்ளே நுழையும் தருணம் இது.

Friday, February 19, 2010

அமைதி வெடியும் ஆறுமாதமும்

மற்ற போராளிக்குழுக்கள் வலிமை இழந்ததும், விடுதலைப்புலிகள் மட்டும் மக்கள் ஆதரவு பெற்றதும் ஏன்?  என்பதை ஊன்றிக்கவனித்துப் பார்த்தால் இந்திய அமைதிப்படை உள்ளே இருந்தபோது நடந்த ஒவ்வொன்றும் நமக்கு பல விசயங்களை உணர்த்தும்.  பிரபாகரன் சர்வாதிகாரம், சந்தர்ப்பவாதம் என்ற எத்தனையோ குற்றச்சாட்டுக்களை பக்கத்தில் வைத்து பார்த்தாலும் கூட இந்திய " அமைதி படையே வெளியேறு " என்று போராடிய விடுதலைப்புலிகளுடன் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து போராடிய காட்சிகளும், வயது முதிர்ந்தோர்கள் கூட தங்களால் முடிந்த பங்களிப்பை பார்த்தோமேயானால் அவர்களைப் போல தமிழ் மக்கள் என்ற சொல்லில் தங்களை அடக்கிக்கொண்டு வாழ்ந்து கொண்டுருக்கும் தமிழ்நாட்டில் எப்போதாவது நடக்குமா என்பது சந்தேகமே? சில நிகழ்வுகளைப் பாருங்கள்.

இந்திய இராணுவச் சிப்பாய்களை ஏற்றிக் கொண்டு லாரிகள் வரிசையாகப் புறப்படுகின்றன.  நகரின் எல்லையில் ஒரு குறுகிய வளைவில் திரும்புகிறது.  சற்று தூரத்தில் ஒரு வீட்டின் முன்புறம் வாசலில் கிழவி ஒருவர் வெற்றிலையை பாக்குடன் அமைதியாக இடித்துக் கொண்டுருக்கிறார்.  முதல் இராணுவ லாரி அவரைக் கடந்து செல்கிறது. உடனே தனக்குப் பின்னால் வைத்திருந்த ஒயரை மற்றொரு ஒயருடன் சேர்த்து இணைத்து விட்டு மீண்டும் தனது வேலையை பார்த்துக்கொண்டு இருக்கிறார்.  பின்னால் வந்த அத்தனை லாரிகளும் பல காத தூரம் தீப்பிழம்புடன் வெடித்து சிதறுகிறது.  மொத்த வீரர்களும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று இறங்கி ஓட்டம் பிடிக்கிறார்கள்.

பெண்கள், சிறுவர்கள் இராணுவ வீரர்களை நோக்கி வருவது போல் இல்லாமல் வேடிக்கை பார்க்கும் நோக்கம் போல கடந்து செல்கிறார்கள்.  எப்போது தங்கள் உடம்பில் மறைத்து வைத்திருந்த குண்டுகளை இராணுவ வாகனத்தில் வீசினார்கள் என்று யோசிப்பதற்குள் வண்டி சிதறுகிறது.  இவர்களைப் போல மற்ற பெண்கள் வேறொரு பாதையில் போராடிக்கொண்டுருப்பதையும் பார்த்துவிடலாம்.

அன்னம்மா டேவிட், நேசம்மா வடிவேலு ஆகிய இரு தாய்மார்கள் மட்டக்கிளப்பு முருகன் கோவிலில் சாகும் வரை உண்ணாவிரதம் என்ற போராட்டத்தை தொடங்குகிறார்கள்.  அவர்களின் கோரிக்கை " இந்திய அரசே போரை நிறுத்து.  விடுதலைப்புலிகளுடன் பேச்சு வார்த்தையை தொடங்கு" .

பின்னாளில் சென்னையில் வந்து இறங்கிய ஒவ்வொரு இந்திய வீரர்களும், அதிகாரிகளும் மறைக்காமல் பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்தனர்.  " நாங்கள் நினைத்து சென்றது போல் விடுதலைப்புலிகள் சாதாரணமானவர்கள் அல்ல.  அவர்களின் தீரம் வியப்புக்குரியது.  ஆச்சரியமாக அதிசியமாக இருக்கிறது " என்றார்கள்.  காரணம் அவர்கள் சந்தித்த அன்றாட ஒவ்வொரு நிகழ்வுகளும் அவர்களுக்கு உணர்த்தியது ஒன்றே ஒன்று தான்.  போராளிக்குழுக்கள் என்பதெல்லாம் தாண்டி, வீரம் என்பதை வீரனாக ஒவ்வொரு தனிப்பட்ட விடுதலைப்புலிகளும் தான் களமாடியது மூலம் நிரூபித்துக் காட்டினார்கள்.  இந்தியாவின் நவீன உபகரணங்கள் அத்தனையும் அவர்களின் சுதேசி சிந்தனைகள் மூலம் உருவானவைகளின் முன்னால் கண் முன்னாலே பொடிப் பொடியாக உதிர்ந்தது.  உதாரணமாக இராணுவ வாகனங்கள் கடந்து செல்லும் போது தென்னை மரத்தில் இருந்து வந்து அடிக்கும் வெடிகுண்டுகளும், சுதாரிப்பதற்குள் வாகனங்கள் முகர்ந்து பார்க்கும் கண்ணி வெடிகளுக்குள் காணாமல் போயினர்.
கண்ணிவெடி வைப்பதில் புதிய உத்திகளை கையாண்டனர் விடுதலைப்புலிகள்.  கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்க இந்திய ராணுவம் உலோக சாதனங்களைப் பயன்படுத்தினால் அவர்கள் தாங்கள் உருவாக்கி வைத்திருந்தவைகளை நவீன உபகரணங்கள் கண்டுபிடிக்காத அளவிற்கு திரவ கண்ணி வெடிகளை பயன்படுத்துகிறார்கள்.  இதில் இருந்து தப்பிக்கும் நோக்கத்தில் அப்போது பிரான்சில் இருந்து சிறப்பு மோப்ப நாய்களை கொண்டு வந்தனர். இதிலும் தோற்றுப்போய் வீடு வீடாக உள்ளே புகுந்து விடுதலைப்புலிகளைத் தேடுகிறோம் என்று தொடங்கி கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட போது இதற்கென்று தயாரிக்கப்பட்ட பெட்டிகளை வைத்து வீரர்களை வீட்டுக்கு வரவழைக்க, அந்த பெட்டியே வெடிகுண்டாக அவர்களின் உயிரைப் பறித்தது.

விடுதலைப்புலிகள் அன்று முதல் கடைசி வரைக்கும் போராட்ட களத்தில் வென்றெடுக்க முக்கிய காரணங்கள் பல என்றாலும் இந்த கண்ணிவெடி நுட்பம் தான் அவர்கள் மேல் பலருக்கும் பயம் கொள்ள வைத்தது.  அதுவே மனித வெடிகுண்டு தாக்குதல்கள் என்று தொடக்கம் பெற்ற போது ஒவ்வொருவரும் உயிர்ப்பிச்சை என்று கேட்கும் அளவிற்கு ஆனது.  பிரேமதாசாவிற்கு பிறகு ஆட்சி அதிகாரத்திற்கு வரும் வாய்ப்பு இருந்தவர்கள் கூட பயந்து ஒதுங்கியதும் நடந்தது.

இவையெல்லாம் கோரம், கொடுமை என்று எத்தனை வார்த்தைகள் போட்டு நமக்கு நாமே சமாதானங்கள் சொல்லிக்கொண்டாலும் சிங்கள வெறி என்பது கொடுமையானது.  அதிலும் சிங்கள ஆட்சியாளர்களின் தூண்டப்பட்ட தமிழர் வேட்டை என்பது மொத்தத்திலும் வெட்கக் கேடானது. தந்தை செல்வா அமைதி வழியில் போராடுகின்றேன் என்ற 1949 ஆம் ஆண்டு தொடங்கப் பெற்ற தமிழரசு கட்சி உருவாகி 9 ஆண்டுகளுக்குள் 1958 ஆம் ஆண்டு வெளிப்படையாக சிங்களர்கள் உள்ளே வைத்திருந்த வன்மத்தை கட்டவிழ்த்த போது அன்று போராடிக்கொண்டுருந்தவர்களால் அதை நிறுத்தவும் தெரியவில்லை.  மக்களை காக்கவும் வழி தெரியாமல் மாண்டவர்கள் பல பேர்கள்.  தமிழினமே அன்று தான் சாவுக்குழியை நோக்கி பயணப்படத் தொடங்கியது. அன்று பிரபாகரனுக்கு நான்கு வயது.

இதனால் உருவான இயக்கம் என்பதை பிரபாகரன் தொடக்கத்தில் சொன்னபோதிலும் மிகத் தெளிவாக அவரால் உருவாக்கப்பட்டது என்ன தெரியுமா?   பயம்.  ஆமாம் பயம் ஒன்றே சிங்களர்களை பணியவைக்கும்.   பேச்சு வார்த்தைகள் என்பது அவர்களைப் பொறுத்தவரையிலும் விளையாட்டு.  அது போலத்தான் பாராளுமன்றத்திற்குள் அடிபட்டு இரத்தம் சொட்டச் சொட்ட உள்ளே வந்த அமிர்தலிங்கத்தை காயம் பலமோ? என்று கிண்டலுடன் வரவேற்றனர்.  இது போன்ற பல செய்திகளை, நடந்த நிகழ்வுகளை கேட்டு படித்து, பார்த்து வந்த பிரபாகரன் உருவாக்கிய பயமென்னுபதும், பயந்தவர்களை மேலும் மேலும் பணியவைக்க அவரிடம் இருந்த மூர்க்கம் உதவியது.  அதுவே அவருக்கு இறுதிவரைக்கும் முகவரியாய் போய்விட்டது.

ஆனால் சிங்களர்களுக்கு என்று தொடக்கம் பெற்றதே தவிர இந்தியாவுடன் கொண்டு போய் இப்போது இதைவைத்துக்கொண்டு விளையாடலாம் என்று நினைத்தே இருக்க வாய்ப்பு இல்லை.  இவர்கள் உருவாக்கிய பாதை மொத்தமும் சிங்களர்கள் உருவாக்கிய சாவுக்குழியை விட மிக மோசமாக சாக்கடை குழியாக போய்விட அதுவரையிலும் உள்ளே தூங்கிக் கொண்டுருந்த மிருகம் வெளியே வந்தது.  பிரபாகரன் மேல் இங்குள்ள அறிவுஜீவிகள் சொல்லும் அத்தனை புறக்காரணங்களையும் ஒதுக்கி வைத்து விட்டு பார்த்தால் இலங்கையின் உள்ளே வந்த இந்திய அமைதிப்படையுடன் போராட வேண்டும் என்று சூழ்நிலைக்கு வருவதற்கு முன் ஒரு தடவை அல்ல கிடைத்த கிடைக்காத அத்தனை வாய்ப்புகளை பார்த்து முயற்சித்தவர் பிரபாகரன் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்?

நான் உங்களிடம் இனி அடங்கிப் போகிறேன் என்று பிரபாகரன் ஜெயவர்த்னேவிடம் கொடுத்த மகாண சபை நபர்களை வைத்து அன்றே இந்தியா மேலாதிக்கம் செய்து ஒரு முடிவுக்கு கொண்டு வந்துருக்க முடியும்?  அப்போதும் இந்தியாவிற்கு சட்டாம்பிள்ளைத்தனம் தான் முன்னால் வந்து நின்றது.  நான் இருக்கும் போது நீ ஏன் முந்திக்கொண்டு அவரிடம் செல்கிறாய்?  நீ வாழ்ந்து விடுவாயா பார்க்கலாம்? என்ற அசிங்க ஒரங்க நாடகம் அரங்கேற பல அணர்த்தங்களும் தழைத்தோங்கியது.

"புலிகளை ஒடுக்கிவிட்டோம் " என்று ஊடகத்தில் அறிக்கை கொடுத்துக்கொண்டே பல இழப்புகளையும் தொடர்ச்சியாக சந்தித்துக்கொண்டே இருந்தனர்.  இந்தியா அப்போது தான் ரஷ்யாவில் இருந்து பி.எம்.பி 2  அதி நவீன ஆயுத வாகனத்தை இங்கு பயன்படுத்தினர்.  இதன் சிறப்பு அம்சம் இரவில்கூட தெளிவான பார்வையும், எளிதில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லக்கூடிய வசதியும், இதற்கு மேலும் ஹெலிகாப்டரில் மிக எளிதில் பொருத்தி செயல்படக்கூடிய, இதற்கப்பாலும் அணு ஆயுத போர் நடந்தாலும் பாதுகாப்பாய் பல்முணை தாக்குதல்கள் நடத்தக்கூடிய பலவித முன்னேற்பாடுகள்.    ஆனால் இது போன்ற ஐந்து ஆயுத வாகனங்களை புலிகள் தகர்த்து அழித்தனர். அழிவுகள் அதிகமான போது, இழப்புகள் இந்தியாவிற்கு தொடர்ந்து வந்து கொண்டுருந்த போது இதை வேறு விதமாக சொல்லி ஊடகத்தின் கவனத்தை திசை திருப்பினார்கள்.

" 1971 ஆம் ஆண்டு வங்க தேச போராட்டத்திற்குப் பிறகு களத்திற்குப் பிறகு இப்போது தான் நாங்கள் களத்தில் இறங்குகிறோம்.  மேலும் இதற்கு மற்றொரு முக்கிய காரணம் ஏற்கனவே கொள்முதல் செய்துள்ள, தரமில்லாத ஆயுதங்கள் தான் முக்கிய காரணம்" என்றனர்.  இதையே காரணம் காட்டி அமைதிப்படை அதிகாரிகள் கடைசி வரைக்கும் சப்பைக்கட்டு கட்டிக்கொண்டுருந்தார்கள். 

இந்திய வீரர்களின் கோரமான நடவடிக்கைகளும், இதற்கு மேலான கற்பழிப்பு நிகழ்ச்சிகளும் பிரபாகரன் பக்கம் வேறொரு வகையில் அதிர்ஷ்ட காற்று அடிக்கத் தொடங்கியது.  பெண்கள் அதிகளவு போராளிகளாக மாற்றம் பெறத் தொடங்கினர். இதற்கு மேலும் சிறுவர், சிறுமியர் என்று தொடங்கி முதியவர்கள் வரைக்கும் உணவு, ஆயுதங்கள், செய்தித் தொடர்பு என்று எல்லாவகையிலும் உதவி புரியத் தொடங்கினர்.

ஒவ்வொரு இடத்திலும் விடுதலைப்புலிகளின் துப்பாக்கிச் சூட்டில் இறக்கும் இந்திய வீரரைப் பார்த்த மற்ற வீரர்கள் படைபட்டாளத்துடன் வந்து குவிந்து விடுகிறார்கள்.  யாழ் நகர் கடைவீதியை மொத்தமாக முற்றுகையிட்டனர்.  அந்த குறிப்பிட்ட பகுதியில் வாழ்ந்த அத்தனை மக்களையும் வெட்ட வெளியில் நிறுத்தி வெயிலில் நாள் முழுக்க நிற்க வைத்து வாட்டி எடுத்தனர்.  மொத்தமாக எதிர்ப்பு கிளம்பியதும் கையில் பட்டவர்களை அடித்து சித்ரவதை செய்துவிட்டு கலைந்து போயினர்.  விடுதலைப்புலிகளையும் பிடிக்க முடியவில்லை.  அவர்களின் தாக்குதல்களில் இருந்து தப்பிக்கவும் முடியவில்லை.  பொது மக்கள் ஆதரவையும் பெற முடியவில்லை.  ஆனால் தினந்தோறும் வானொலி மட்டும் சகஜநிலைமை திரும்பிவிட்டது என்ற ஒரே பல்லவியை பரப்பிக்கொண்டேயிருந்தது.

முதல் ஆறு மாதங்களில் எதற்காக இந்திய அமைதிப்படை இலங்கைக்குச் சென்றதோ அதன் முதல் அடியைக் கூட எடுத்து வைக்கவில்லை என்பதை விட அது தொடர்பாக எந்தவித முன்னேற்பாடுகளைக்கூட ஏற்பாடு விருப்பமில்லாமல் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் தான் கொண்ட கொள்கையிலேயே முன்னேறிக்கொண்டுருந்தது.  பிரபாகரன் தவறானவர்.  அவரை ஒடுக்கப்பட வேண்டியவர்.  எதிர்கால இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கப் போகின்றவர் என்று எத்தனை கணக்குகள் தனக்குள் வைத்துக்கொண்டாலும் அதை அங்கே செயல்படுத்தி காட்டிக்கொண்டுருக்கும் விதம் தான் நாளுக்கு நாள் கோரத்தின் வாயிலில் போய் நின்று கொடுமையின் நுழைவு வாயிலை இலங்கை தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்தது.

விடுதலைப்புலிகளை விரும்பாதவர்கள், த்ரி ஸ்டார் என்று இந்தியா வளர்க்கும் ஏனைய மற்ற போராளிக்குழுக்களை வெறுப்பவர்கள், எந்த போராட்டத்திற்கும் நாங்கள் சம்மந்தம் இல்லாதவர்கள் என்ற இது போனற திருவாளர் பொதுஜனம் ஏதோ ஒரு வகையில் அமைதிப்படையில் உள்ள வீரர்களின் அக்கிரமத்தால் பாதிக்கப்பட்டு இனி வேறு வழியே இல்லை.   இவர்களை விரட்ட விடுதலைப்புலிகளை ஆதரித்துதான் ஆக வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் மக்கள் எண்ணிக்கைகளும் அதிகரித்துக்கொண்டே இருந்து.

திடீர் என்று யாழ் முற்றுகையிடப்பட்டது.  தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் ஊரடங்கு அமுல்.  இரண்டு லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்டு மொத்த அந்த பரப்பில் இந்த தொகைக்கு நாலில் ஒரு பங்கு இராணுவ துருப்பை கொண்டு போய் நிறுத்தினர்.  மொத்த மக்களையும் வெளியே வரச்செய்து, தாங்கள் உருவாக்கி வைத்திருந்த த்ரி ஸ்டார் ஆள்காட்டிகளை வைத்துக்கொண்டு ஒவ்வொருவரையும் அடையாளம் காண அணிவகுப்பு பேரணி நடத்தினார்,

இறுதியில் மிஞ்சியவர்கள் கொண்டு செல்லப்பட்டு " கவனிக்கப்பட்டனர்". அது உண்மையான விடுதலைப்புலிகளா? இல்லை ஆள்காட்டிகளுக்கு பிடிக்காத ஆட்களா?  எவருக்குத் தெரியும். இந்தியாவிற்கு விடுதலைப்புலிகள் ஒழித்து விட வேண்டும்.  ஆள்காட்டிகளுக்கு தனக்குத் எதிராக எவரும் உள்ளே இருந்து விடக்கூடாது.  நோக்கம் ஒன்று.  அணர்த்தங்கள் பலப்பல.

தமிழ்மக்களுக்கு மட்டுமல்ல.  நாளாக சிங்கள மக்களுக்கும் பெருத்த சந்தேகம் எழத் தொடங்கியது.  இவர்கள் இனி மொத்தமாக இலங்கை முழுக்க ஊடுருவி நம்மை இவர்கள் ஆளப்போகிறார்கள்?  என்று உருவான அச்சம் பல பிரச்சனைகளை உருவாக்கத் தொடங்கியது.  தமிழ்நாட்டில் உருவான விலைவாசி உயர்வும், கொண்டு போய் கொட்டிக் கொண்டுருக்கும் ராணுவ ஓதுக்கீடுகளும், சென்னையில் இருந்து கொண்டு போய்க்கொண்டுருக்கும் காய் முதல் அடிப்படை மளிகை சாமான்கள் வரைக்கும் இங்கு சராசரி பாமரன் தலையில் விழ ராஜீவ் காந்திக்கு எதிர்ப்பு என்பது இயல்பாக உருவாக ஆரம்பித்தது.  முதல் ஆறு மாதங்களில் செலவழித்தது என்று 600 கோடிகள் என்று இந்தியா கணக்கு சொன்னாலும் எவரும் நம்பத் தயாராக இல்லை.  ஆயிரம் கோடியை தாண்டியிருக்கும் என்று பரவலாக பேச்சு வலுப்பெற படையணி திருப்ப் பெற என்ற கோஷமே ஒரு வருடத்தின் இறுதியிலும், மகாணசபை தேர்தல் முஸ்தீபுகள் என்று ராஜீவ் காந்தி வேறொரு கணக்கு போய் காய் நகர்த்த தொடங்கினார். தனக்கு வசதியாக தமிழ்நாட்டில் கவர்னர் ஆட்சியும் நீட்டிக்கப்பட்டது.

"ஆப்கானிஸ்தானில் ரஷ்யா பெற்ற பாடங்கள், வியட்நாமில் அமெரிக்கா பெற்ற பாடங்கள் போல அல்ல.  இது உண்மையான அமைதியை நிலைநாட்டுவதற்கான அக்கறை"  என்று எத்தனை சமாதானங்கள் சொல்லிக்கொண்டாலும் அன்றைய பொழுது இந்தியாவிற்கு ஒரு அடி அல்ல ஒரு இன்ஞ் கூட முன்னேற்றம் இல்லை என்பது தான் சரியாக இருக்கும்.

இத்தனை அடிவாங்கிக்கொண்டுருக்கும் போது ஏன் ராஜீவ் காந்தி யோசிக்க மறந்தார்? என்பது மில்லியன் டாலர் கேள்விக்கான பதில் ஒன்றே ஒன்று தான்.  தெற்காசியாவில் தன் ஆளுமை நிலை நாட்ட வேண்டிய அவசரம், வங்கதேசம், பூடான், பாகிஸ்தான், மியன்மர் போன்ற நாடுகள் தங்கள் தலைமையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று உணர்த்த வேண்டிய அவஸ்யம், இராணுவம், உளவுத்துறை கொடுத்துக் கொண்டுருக்கும் நம்பிக்கை புள்ளி விபரங்கள், இதற்கு மேலும் உள் நாட்டில் எழுந்த செல்வாக்கை மேலே கொண்டு வரக்கூடிய அவசர அவஸ்யங்கள் என்று ஒன்றுடன் ஒன்ற கோர்த்து மாலையாகி அதுவே இறுதியில் இலங்கை அப்பாவி மக்களின் பிணத்தின் மேல் போடும் சவமாலையாக மாற்றம் பெற்றது.

1983 அன்று சிங்களர்கள் உருவாக்கிய கருப்பு ஜுலை கலவரத்திற்கு எதிராக ஒன்று சேர்ந்த தமிழ் மக்கள் போல நான்கு வருடங்களுக்குப் பிறகு மொத்த மக்களிடத்திலும் ஒரு புதிய எழுச்சி தோன்றியதும், அதுவே இந்திய அமைதிப்படைக்கு எதிராக வலுப்பெறத் தொடங்கியதும் முதல் ஆச்சரியம் என்றால், யாழ் நகர வீதியில், ஒவ்வொரு முனைக்கும் இரண்டு என்று பதுங்கு குழி மூலம் இந்திய இராணுவ துருப்புகள் காவல் காத்ததும், உள் நாட்டு மக்களையே அனுமதி சீட்டு பார்த்து அவர்களை நடமாட அனுமதிக்க வைத்ததும் அடுத்த உச்ச கட்ட சோகம்.

Wednesday, February 17, 2010

அமைதிப்படை(IPKF) உருவாக்கிய பாதை

 திலீபன் இறந்த சமயத்தில் நான் அங்கு பயணப்பட்டேன்.  அந்த செய்தி அப்போது தான் பொது மக்கள் மத்தியில் தாக்கத்தையும் இந்தியாவின் மீது சொல்லமுடியாத எரிச்சலையும் அதிகப்படுத்தியிருந்தது.  விடுதலைப்புலிகள் கையில் ஒப்படைக்கப்பட்ட பண்டத்தரிப்பு என்ற இடத்தில் மக்கள் ஏராளமாக கூடியிருந்தனர்.  அவர்கள் இறப்பு நிகழ்ச்சிக்கு கூடினார்கள் என்பதை விட அடுத்து என்ன நடக்கப்போகின்றதோ என்ற அச்சம் தான் முக்கியமாக இருந்தது.

ஆனால் அடுத்த நாள் புலிகள் தரப்பில் மக்களைக் கூட்டி ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.  கூட்டத்தின் இறுதியில் அமைதிப்படை அதிகாரிகளிடம் மகஜர் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுருந்தது.  ஆனால் அதிகாரிகள் அதை வாங்க மறுத்தனர்.  பலாலிக்குச் செல்லும் அத்தனை பாதைகளிலும் இராணுவ முகாமும், வீரர்களின் தலைகளைத் தாண்டித்தான் அலுவலகத்தை சென்று அடைந்தனர்.  அதிகாரிகள் எவரும் மக்களின் தார்மீக கோபத்தையோ, அவர்கள் கொண்டு வந்த மகஜர் குறித்து அக்கறை ஏதுமின்றி    "  உங்களை காப்பதற்குத் தான் நாங்கள் இங்கு வந்துள்ளோம்.  மகஜர் தேவையில்லை "  என்று மறுக்க ஆசேமடைந்த பொதுமக்கள் கல்வீச்சில் இறங்கினர்.  அங்கே தேவையில்லாத பதட்ட சூழ்நிலை உருவானது.
புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் சண்டை தொடக்கம் பெற்ற போது இருதரப்பில் கடுமையான சேதம் உருவான செய்திகள் வரத்தொடங்கிய போது கயட்ஸ் தீவுக்கு வந்து விட்டேன்.   மூளாய்க்கும், காரைநகர் கடற்படைத்தளத்திற்கும் இடையே இருந்த கடல்பாலத்தை புலிகள் தாக்கி அழித்து இருந்தனர்.  அப்போது சிங்கள இராணுவத்தினர் அந்த பாலத்தை உருவாக்குவதில் ஈடுபட்டுக்கொண்டுருந்தனர்.  காரணம் அப்போது அங்கு கடுமையான உணவுப் பஞ்சம்.  விலைகள் மூன்று மடங்காக தாறுமாறாக ஏறத்தொடங்கியது.

ஒரு மழை ஓய்ந்துருந்த போது திடீர் என்று வந்து இறங்கிய இந்திய இராணுவத்தினர் ஹெலிகாப்டலில் இருந்தபடியே காரைநகர் தளத்தில் இருந்து குண்டு வீசத் தொடங்கினர்.  அரைமணி நேரத்திற்குப் பிறகு தான் அந்த புகைமூட்டத்தில் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள ஓடத்தொடங்கினார்கள்.  தங்களை காப்பாற்றிக்கொள்ள அருகில் இருந்த கோவிலுக்குள் சென்ற மொத்த மக்களையும் சுற்றி வளைத்து, பரிசோதனை செய்யப்பட்டு இறுதியில் 35 பேர்களை பிரித்து சுட்டுக்கொன்றனர்.  பிடியில் இருந்த பெண் கற்பழிக்கப்பட்டதும், அவர் அன்றே தூக்கில் தொங்கியதும் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.  இந்த இடத்தில் இருந்து புலிகள் யுத்தம் தொடங்கிய போதே வெளியேறி விட்டார்கள்.  வெளியேறியவர்களை, உள்ளே தான் இருக்கிறார்கள் என்றபடி வந்தவர்கள் அடைந்த ஏமாற்றமும் அதுவே இறுதியில் வானொலியில் தீவு கைப்பற்றப்பட்டது என்றும் ஒலிபரப்பப்பட்டது.

மொத்தமாக ஒவ்வொரு இடத்திற்கும் கமாண்டர்கள் வருவதும், மொத்த மக்களையும் கூட்டத்தை ஒரு இடத்தில் நிறுத்தி " உங்களில் புலிகள் எவராவது இருந்தால் எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள்" என்ற கேட்டு இறுதியில் ஏமாற்றத்துடன் சிலரை வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டுப் போய் அடித்து உதைத்து பாதி வழியில் விட்டுவிட்டு சென்று விடுவதும் தொடர்ச்சியாக நடந்து கொண்டுருந்தது.

நடு இரவில் வழி தெரியாமல் வந்த ஒரு இராணுவ சிப்பாய், பேசிய ஹிந்தி மொழி புரியாமல் மொத்த மக்களும் சூழ்ந்து கொண்டு காப்பாற்றி கொண்டு வந்து சேர்த்தனர். அவர் பேசியதே பரிதாபமாக இருந்தது.  மூன்று நாட்களாக சாப்பிட வழி இல்லாமல், மறுபடியும் முகாம்க்கு போக வழியும் தெரியாமல் இருந்தவரை கொண்டு வந்தவரை அவர் பயந்து போய் வானத்தைப் பார்த்து சுட ஆரம்பித்தார்.  இவர் இருப்பதை கேள்விப்பட்டு புலிகள் வந்து சேர அவர்களை சமாதானப்படுத்தி பொதுமக்கள் அனுப்பி வைத்தனர்.  அவர் பேசிய ஆங்கிலத்தில், இலங்கை இந்திய ராணுவத்தின் மொத்த பயமும், இந்தியாவிற்கு திரும்பிச் செல்ல எப்போதும் செல்ல தயாராய் இருக்கும் துயர வாழ்க்கையும் புரிந்தது.

கயிட்ஸ் தீவில் உணவுப்பஞ்சம் கடுமையாக இருக்க யாழ்பாணம் சென்று விடலாம் என்று நினைத்தோம்.  நெடுந்தீவு மக்கள் பட்டினியால் செத்துக்கொண்டுருந்தார்கள். அப்போது இலங்கை கடற்படையினர் தங்களின் உணவுகளை சிறிதளவு கொடுத்து உதவினார்கள். அப்போதைய சூழ்நிலையில் யாழ்பாணம் முழுக்க இந்திய இராணுவம் வைத்ததே சட்டம்.  அவர்களைப் பார்த்தவுடன் சைக்கிளில் சென்றாலும் இறங்கி நடந்து செல்ல வேண்டும்.  குறிப்பிட்ட தூரத்தில் இருந்து கைகளை தூக்கியபடியே செல்ல வேண்டும்.  ஆண், பெண் என்ற பேதம் இல்லாமல் அவர்களே உடம்பு முழுக்க சோதனை என்ற பெயரில் அவர்கள் செய்யும் வக்கிரங்கள் வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாது.

புலிகளை பிடிக்கிறோம் என்று கைகளில் படங்களை வைத்துக்கொண்டு ஒவ்வொரு வீடாக வீரர்கள் உள்ளே வரும் போது மக்கள் மொத்தமாக பயந்து கொண்டு வீட்டின் பின்புறம் வழியாக தப்பி ஓடி மறைவும் அன்றாட நிகழ்ச்சியாய் இருந்தது.  யாழ்பாணம் முழுக்க கடுமையான பஞ்சம் நிலவியது.  எவரும் அன்றாட பணிகளைக்கூட செய்ய முடியாமல் துன்பப்பட்டனர்.  மண்டை தீவுக்கு அருகே இந்தியா ஒரு பெரிய போர்க்கப்பலை நிறுத்தியுள்ளனர்.  மீனவர்களை மீன்பிடிக்கு அனுமதிப்பது இல்லை.

யாழ்பாணத்தில் இருந்து கிளிநொச்சிக்கு வந்து சேர்ந்தேன்.  வழியெங்கும் இராணுவ முகாம்களும், அவர்களின் சோதனைகளும் தாண்டி வர வேண்டியதாய் இருந்தது.  யாழ்பாணத்தில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு போக வேண்டுமென்றால் கச்சேரி என்ற இடத்தில் போடப்பட்டு இருந்த இராணுவ முகாமில் போய் அனுமதிசீட்டு வாங்க வேண்டும்.  தங்க வசதிகள் இல்லாத காரணத்தால் சர்ச்சிலில் அடைக்கலம் கிடைத்தது.  காலையில் வவுனியா செல்ல திட்டமிட்டேன்.

கிளிநொச்சியில் ENTLF ( THREE STARS CAMP) தனியாக முகாம் அமைத்துள்ளார்கள்.  புலிகளுக்கு எதிரான மற்ற இயக்கங்களை ஒன்றாக இணைத்து இந்திய இராணுவத்தின் பாதுகாப்புடன் மொத்த சோதனைகளும் அவர்கள் மூலம் நடந்து கொண்டுருந்தது.   அவர்கள் தாண்டி எவரும் சென்றுவிடமுடியாது.  வவுனியாகவுக்கு வரும் வழியில் மாங்குளத்துக்கு அருகே சுமார் 1500 சீக்கியர்கள் கொண்ட முகாம் இருந்தது.  இது போக மொத்தவழியிலும் மொத்தமாக இராணுவ தலைகளாகவே தென்பட்டது.  உடன் இருக்கும் இலங்கை காவல்துறைக்கும் இந்திய இராணுவத்தினர்களுக்கும் முட்டல் மோதல் தொடர்ந்து கொண்டே இருந்ததை பார்க்கமுடிந்தது.

பேரூந்து வரும் வழியில் ஓமந்தை கிராமத்தில் இருந்த மொத்த வீடுகளையும் இந்திய இராணுவத்தினர் ஆக்ரமித்து குடியேறியிருந்தனர்.  அவர்கள் கேம்பில் பரிசோதனைகள் என்ற பெயரில் ஆண் பெண் பேதம் இன்றி ஆடைகளுக்குள் கையை விட்டு வக்ரத்தை நிறைவேற்றிக்கொண்டுருந்தனர்.  வவுனியா நகரை வந்தடைந்த போது ஏழு முறை பரிசோதனைகளும், இடையில் நிறுத்தி அடையாள கேள்விகளும் முடிந்து சேர்ந்த போது மூச்சு திணறியது.  வழக்கமாக இரண்டு மணிக்கு சற்று குறைவாக வந்தடைய வேண்டிய தூரத்தை பரிசோதனைகள் காரணமாக 6 மணிக்கு மேலாக கடந்து வந்து அடைந்த போது ஆயாசமாக இருந்தது.

வவுனியா நகரில், இந்திய இராணுவத்தினர், இலங்கை இராணுவத்தினர், இந்திய மத்திய ரிசர்வ் போலிஸ், இலங்கை போலிஸ், இது போக விடுதலைப்புலிகளுக்கு எதிரான த்ரி ஸ்டார் போராளிக்குழுக்களின் கேம்ப் என்ற எங்கு பார்த்தாலும் இவர்களின் தலைகள் தான் அதிகமாகத் தெரிந்தது.   இது போக மாலை 4 மணி முதல் மறு நாள் காலை 6 மணி வரையிலும் மொத்தமாக இங்கு ஊரடங்குச் சட்டம் வேறு அமலில் இருந்தது.  வரும் வழியில் த்ரி ஸ்டார் போராளிக்குழுக்கள் பரிசோதனை முடிந்தது ஒவ்வொருவரிடமிருந்து கட்டணம் என்று வாங்கி அப்பட்டமாக கொள்ளையடித்துக்கொண்டுருந்தனர். இலங்கை காவல்துறை போல் இந்த த்ரி ஸ்டார் செயல்பட்டுக்கொண்டுருக்கிறது.

சிங்கள கிராமத்தில் இருந்த சிங்களர்களுக்கும் இந்திய இராணுவத்தினர் மீது பயமாக இருந்தனர்.      " உங்களை காக்க வந்தவர்களே இன்று உங்களை கொன்று குவிக்கிறார்களே?  இவர்கள் எங்களையும் கொன்று விடுவார்களோ? " என்று கிழக்கு மகாண சிங்கள மக்கள் சொன்ன பயம் பொதுவாக அங்குள்ள எல்லோரிடத்திலும் இருந்தது.

புலிகள் மீது மதிப்பும், இந்திய இராணுவத்தினர் அப்பாவி மக்களை தாக்குவதால் தான் புலிகளை அவர்களை திருப்பி தாக்குகிறார்கள் என்ற ஆதங்கம் பொதுமக்கள் மத்தியில் இருந்தது.  அதுவே புலிகளுக்கு மறைமுக ஆதரவாக மாறிக்கொண்டுருந்தது.  யாழ்பாண பொதுமருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவர்கள், தாதியர்கள், நோயாளிகளை இந்திய இராணுவத்தினர் வெறியாய் சுட்டுக்கொன்றது மக்கள் மனதில் ஆழமான வடுவாய் போய்விட்டது.
கொக்குவில், உரும்பிராய் பகுதிகளில் பெரும்பாலான வீடுகள் தரைமட்டமாய் இருந்தது.  அழுகிய சடலங்களை எடுக்க ஆள் இல்லாமல் நாறிக்கொண்டுருந்தது.  இலங்கை இராணுவத்தினர் கூட புலிகளைப் பார்த்து, அவர்களைத் தேடி போர் செய்தனர். ஆனால் இவர்களுக்கு தமிழ் மக்கள் எல்லோருமே புலிகளாக தெரிந்தனர்.

யாழ்பாண பல்கலைக்கழக வளாகம் இப்போது மொத்தமாக இந்திய இராணுவத்தினர் கட்டுப்பாட்டில்.  இவர்கள் உருவாக்கிய பிரச்சனையால் மொத்தமாக இந்த பகுதியின் பொருளாதாரமே இன்னும் 25 வருடங்கள் பின்தங்கிடப்போகின்றது என்ற அச்சம் அனைவரிடத்திலும் இருந்தது.  குறிப்பிட்ட நேரம் மட்டும் தான் மின்சாரம். எந்த அடிப்படை வசதிகளும் இராணுவத்தினர் கட்டளையின்படி நடந்தது.  இதற்கிடையே அகில இந்திய வானொலியின் தொடர்ச்சியான பொய்த்தகவல்கள்.

ஈழமுரசு தாக்கப்பட்டு அழிக்கப்பட்டதை தொடர்ந்து, சில நாட்களிலேயே சிறிய அளவுகளில் வெளியிடத் தொடங்கினார்கள். காரணம் அகில இந்திய வானொலி ஆகாச புளுகுணியாக ஒலிபரப்பிக்கொண்டுருந்தது.

மொத்தத்தில் மக்கள் அத்தனை பேர்களும், இந்திய இராணுவம் அமைதி என்ற பெயரில் உள்ளே வந்து விட்டது.  இனி இவர்கள் இதைவிட்டு நகர இன்னும் 25 வருடங்கள் ஆகும் என்று அவரவர் தீர்மானமாக நம்பி எதிர்க்கத் தொடங்கினார்கள்.

போர் தொடங்கிய காலத்தில் அங்கு பயணப்பட்ட பெர்ணாண்டஸ் என்ற பத்திரிக்கையாளரின் மொத்த அனுபவத்தின் சுருக்க பகிர்வு.

Monday, February 15, 2010

பேனா போர் கொஞ்சம் அவலம்

இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளுடன் தொடங்கிய போரில் முதல் 15 நாட்கள் பற்றி பார்க்கலாம்.

சாதகமான பத்திரிக்கையாளர்களைத் தவிர இந்திய அமைதிப்படை இலங்கையை விட்டு வெளியேற்றினாலும் பத்திரிக்கை மக்கள் லேசுபட்டவர்களா?  ஒவ்வொரு பத்திரிக்கையும் ஒவ்வொரு போர் காலத்திலும் உள் பகுதி வரைக்கும் ஊடுருவி செய்தி சேகரித்த நிகழ்வுகள் எல்லாம் நாம் கனவிலும் நம்ப முடியாத ஆச்சரியங்கள்.  இன்றைய இலங்கையின் மொத்த நிகழ்வுகளையும் இன்று வரைக்கும் உலகம் ஊன்றி கவனித்துக்கொண்டுருக்க இந்த ஊடகமே காரணம்.  ஆனால் அன்று மொத்தமாய் அவஸ்த்தைப்பட்டவர்கள் இவர்கள் தான் என்றால் அது ஆச்சரியமல்ல.  இவர்களுக்கோ செய்தி வேண்டும்.  அமைதிப்படைக்கோ தாங்கள் பெற்றுக்கொண்டுருக்கும் அவமானங்கள் காற்றில் பறந்து விடக்கூடாது என்ற நோக்கம்.  ஆனால் அத்தனையும் மீறி காற்றில் பறக்கத்தான் தொடங்கியது.

அப்போது ஊடகத்தில் வந்த ஒவ்வொருவரின் அனுபவமும் ஒவ்வொரு வகையானது.

பாலசந்தர் (நியூஸ் டைம்)

இந்திய ராணுவம் இன்று என்றில்லை.  இன்னும் எத்தனை நாட்கள் இங்கு இருந்தாலும் புலிகளை அடக்கிவிடமுடியாது. கோபமாய் இருக்கும் யாழ் மக்களுக்கு சோறும், மருந்தும் கொடுத்துச் சாந்தப்படுத்தி விடலாம் என்ற தப்புக்கணக்கு போட்டு செயல்பட்டுக்கொண்டுருப்பது இறுதியில் தோல்வியில் தான் முடியும்.  இங்குள்ள ஒவ்வொரு தனி மனிதர்களும் மிகத் தெளிவாக புத்திசாலித்தனமாக இருக்கிறார்கள்.  நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களுடைய வாழ்க்கையில் இனி அமைதி திரும்பிவிட்டது என்று எண்ணம் கொண்டு அமைதிப்படையை வரவேற்றவர்கள் இன்று அப்படியே திரும்பி அடிக்கத் தொடங்கி விட்டார்கள்.

கே.வி. நாராயணன் (UNI)

வியட்நாமில் கூட எங்களின் சொந்த ரிஸ்கில் சென்று வந்துள்ளோம்.  ஆனால் இங்கு யாழ் கோட்டை வாயிலோடு எங்களை தடுத்து நிறுத்தியது மொத்தத்திலும் கொடுமை.

அவர்களின் வார்த்தைகளைப்போல போராடிக்கொண்டுருந்த இராணுவ வீர்ர்களின் வார்த்தைகள் மொத்தத்திலும் கொடுமையிலும் கொடுமை.

" போர் தொடங்கி  இரண்டு வாரங்கள் தான் முடிந்துள்ளது.  எந்த யுத்தத்திலும் இந்த அளவிற்கு நாம் வீரர்களை இழந்தது இல்லை.  இது வரைக்கும் 153 பேர்கள் இழந்துள்ளோம்.  538 பேர்கள் படுகாயமுற்று சாவுக்கு போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.  47 வீரர்கள் காணாமல் போயுள்ளனர்.  இது நாங்கள் யோசித்ததை விட கடுமையாக போய்க்கொண்டுருக்கிறது.  கடந்த ஐந்து நாட்களாக ஒரு விநாடி கூட தூங்காமல் போராடிக்கொண்டுருக்கிறோம்.  எங்களை நோக்கி வரும் சிறுவர் சிறுமியர் கூட கையிலிருக்கும் கண்ணிவெடியை எங்கள் வாகனத்தின் உள்ளே வீசிவிட்டு மறைந்து விடுகின்றனர்.  வரும் பெண்கள் அத்தனை பேர்களும் புடவையின் உள்ளே இருந்து திடிர் என்று வெடிகுண்டுகளை எடுத்து எங்களை நோக்கி வீசி விட்டு செல்கின்றனர்.  இந்த வித்யாசமான சூழ்நிலையை எப்படி சமாளிக்கப்போகின்றோம் என்பதே புரியவில்லை "

இந்த இடத்தில் மற்றொரு விசயத்தையும் கவனித்துக்கொள்ள வேண்டும்.  இந்திய அமைதிப்படையின் அடிப்படை ஒப்பந்தத்தின்படி மொத்த இலங்கை இராணுவமும் அவரவர் முகாமில் இருப்பார்கள்.  மொத்த ஆளுமையும் அமைதிப்படையின் கையில் தான் இருக்கும் என்றது.  ஆனால் யுத்தம் தொடங்க காரணமாக இருந்த அமைதிப்படைக்கு மேலே உள்ளவர்களின் தனிப்பட்ட ஈனப்புத்தியின் காரணமாக போரில் ஈடுபட்ட நேரிடையான இந்திய இளநிலை ராணுவ அதிகாரிகள் தொடக்கம் முதலே அதிகமாக பாதிக்கப்பட்டனர்.  மேலும்  அப்போதே ஒப்பந்தமும் ஒவ்வொன்றாக மீறப்பட்டது.  ஒவ்வொரு நிகழ்விலும் இலங்கை இராணுவத்தினரையும் கூட்டணியில் சேர்த்துக்கொண்டனர்.

ஒப்பந்தத்தின்படி கிழக்கு மகாண பகுதியில் இருந்த சிங்கள கிராமங்களில் அமைதிப்படை செல்லாது.  அது போலவே அமைதிப்படை இருக்கும் இடங்களிலும் இலங்கை இராணுவத்தினர் செல்லமாட்டார்கள் என்பதெல்லாம் அப்பட்டமாக மீறப்பட்டது.  சிங்கள கிராம குடியிருப்புகள் பத்திரமாக பாதுகாக்க நம்முடைய வீரர்களும் உடந்தையாக இருந்தனர். கனரக ஆயுதங்கள் பயன்படுத்துவதில்லை, ஹெலிகாப்டர் மூலம் தாக்குதல்கள் இருக்காது போன்றவைகளும் மீறி மேலிருந்து குடியுருப்புகள் முதல் மொத்த இடங்களிலும் சரமாரியாக குண்டுமழை பொழியப்பட்டது.

நோக்கம் புலிகள். பாதிக்கப்பட்டது அப்பாவி வாழ்வாதாரங்கள்.    அமைதிப்படை போட்ட குண்டுவீச்சின் கரும்புகையை படம்பிடித்து விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட சீரழிவுக்காட்சிகள் என்று தொலைக்காட்சியில் காட்டப்பட்டதை அப்போதைய தி வீக் நிருபர் வின்சென்ட் டிசௌஸா போட்டு உடைத்தார்.

யாழ்பாணத்தில் இருந்து பயந்து சென்னைக்கு அகதிகளாக வந்தவர்கள் " சிங்களர்களின் தாக்குதல்களை விட அமைதிப்படையின் தாக்குதல்கள் கோரமாக இருக்கிறது"  என்றனர்.

தொடக்கத்தில் விமான தாக்குதல்களை மறுத்த அமைதிப்படை பிறகு, புலிகளின் கோட்டையான யாழ் பகுதியை கைப்பற்றி விட்டோம்.  இனி எங்கள் நோக்கம் சாவகச்சேரி மட்டுமே.  இழப்புகளை தடுக்க, விரைவுபடுத்தும் பொருட்டு வான் தாக்குதல்களை தொடங்கினோம் என்று உளற ஆரம்பித்தனர்.  சண்டையினால் சின்னாபின்னமான யாழ் நகரின் விதிகளில் முதன் முறையாக ஊடக மக்களை அழைத்துக்கொண்டு சென்ற போது திகைத்துப் போய்விட்டனர்.

ஏறக்குறைய மயான அமைதி.  சீர்குலைந்து மக்கள் நடமாட்டம் இல்லாத இடமாக காட்சியளித்தது. மத்திய தந்தி அலுவலகம், துறைமுக நிர்வாக அலுவலகம், என்று அங்கு இருந்த அத்தனை முக்கிய நிர்வாக ஸ்தலங்களும் அழிக்கப்பட்டு சீர்குலைந்து போய் இருந்தன.  அத்தனையும் கண்களை மூடிக்கொண்டு நடத்தப்பட்ட வான்தாக்குதல் காரணமாக உருவான காட்சிகள் இது.

முள்ளிவாய்க்கால் கடைசிகட்ட கோரகாட்சியில் உலகமெங்கம் ஊடக ஒப்பாரி வைத்த ஒரு வசனம் நம்முடைய அணைவரின் கண்களுக்கும் வந்து சேர்ந்து இருக்கும்.  அதாவது " புலிகள் பொதுமக்களை ஆயுத கேடயமாக வைத்துக்கொண்டு அவர்களை வெளியே விடாமல் இம்சிக்கின்றார்கள் " என்றது.

இதே வசனத்தை அன்றைய அமைதிப்படையும் ஊடகத்தில் பரப்பியது.  " தெருவில் மொத்தமாக கூட்டமாக வருகின்றார்கள்.  முதியவர்கள், பெண்கள், சிறுவர்கள் என்று அவர்கள் பின்னால் இருந்து கொண்டு எங்களைத் தாக்குகிறார்கள்.  எங்களால் ஒன்றுமே செய்யமுடியவில்லை"

ஆனால் பொதுமக்கள் அத்தனைபேரும் புலிகள் பின்னால் நின்றதற்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா?

ஒரு குறிப்பிட்ட இடத்தில் போர் தொடங்கப் போகிறது என்றால் முதல் நாளே வந்து அந்த இடத்தில் உள்ளவர்களை ஒன்றிணைத்து அவர்கள் அனுமதியுடன் போரிடத் தொடங்கினர்.  போரிடத் தொடங்கும் போது பொதுமக்களே தங்களால் ஆன உதவிகளையும் செய்யத் தொடங்கினார்.  இதுவே மொத்த அமைதிப்படைக்கும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் சவாலாக இருக்கத் தொடங்கியது.

காரணம் எந்தப் போராளிக்குழுக்களும் ஒரு தடவை இரண்டு தடவை வேண்டுமானால் வலுக்கட்டாயப்படுத்தி பொதுமக்களை பலிகடா ஆக்க முடியும்.  ஆனால் ஒவ்வொரு நாளும் இதே போல் நடக்கின்றது என்றால் பொதுமக்கள் அனுமதி இல்லாமல் நடக்க வாய்ப்பே இல்லை.  ஆனால் இதையும் மீறி அமைதிப்படை தனது வேகத்தை குறைத்தபாடில்லை.  இந்திய வீரர்களின் மனோதிடம் குறைய குறைய அது தவறான பாதையையும், வக்கிர பாதையையும் உருவாக்கத் தொடங்கியது.

இதன் தொடர்ச்சியாகத் தான் பாராசூட்டில் இருந்து இறங்கிய இந்திய வீரர்களை பிரபாகரன் தாக்குதல் நடத்தி (இலக்கணம் படிக்காத பிரபாகரன் தலைப்பில் பகிரப்பட்டுள்ளது) மிகப் பெரிய திருப்பு முனை உருவாக்கப்பட்டு மொத்த படையும் அழிவுப்படை என்று தமிழ்நாட்டில் கூக்குரல் தொடங்கப் பெற்றது.
ஏன் இந்த அளவிற்கு பிரபாகரன் உள்மத்தம் பிடித்து அலைந்தார் என்பதற்கு மற்றொமொரு சம்பவம்.  அப்போதைய பிடிஐ நிருபர் சொன்ன வாசகம் இங்கே குறிப்பிடத்தக்கது.

" பெயரை குறிப்பிட விரும்பாத இரண்டு போராளிக்குழுக்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரை பிரபாகரனை கொல்வதற்கு என்று சிறப்பு பயிற்சி கொடுக்கப்பட்டு உளவுத்துறை அவர்களை முடுக்கிவிட்டுக்கொண்டுருந்தது. அவர்கள் தினசரி வேலையே பிரபாகரன் குழுவினரை கவனிப்பது மட்டுமே"

இத்தனை பெரிய இந்திய இராணுவத்தின் வீரம் என்பது ஏன் கேலியாகப் போனது?

ஒரே காரணம் சுயநலம்.  பெரிய நாட்டுக்கு தன்னுடைய இறையாண்மைக்காக சுயநலமாக இருப்பது கூட பராவாயில்லை.  ஆனால் ஈடுபட்ட அத்தனை மேல்மட்ட அதிகாரிகளுக்கும் ஒரே நோக்கம் பிரபாகரனை அழித்து விட வேண்டும்.  காரணம் அவ்வாறு அந்த மொத்த அதிகாரிகளையும் மனம் மாற வைத்தது டெல்லி அரசியல் லாபியும் ரா வின் தவறான வழிகாட்டுதல்களும்.  பிரபாகரனை அழிந்து விட்டால் மொத்தமும் ஒரு முடிவுக்கு வந்து விடும் என்று நம்பியது, அந்த நம்பிக்கையே அவர்களை வழி நடத்தியதும், மேலே இருந்தவர்கள் அதன் படியே நம்பவைத்தது மட்டுமல்லாமல் பல்லாண்டு காலம் பயிற்சி பெற்ற அதிகாரிகளையும் . வீரர்களையும் இழக்க வைத்தது தான் சோகத்தின் உச்சம்.

அமைதிப்படைக்கு இலங்கை இராணுவம் என்பது ஒத்துழைப்பு என்பது உப்புசப்பில்லாதது.  சொல்லப்போனால் அன்றைய சூழ்நிலையில் அவர்கள் ஆளை விட்டால் போதுமடா சாமிங்ற அளவிற்கு இருந்தவர்கள் தான். ஆனால் நமது அமைதிப்படைக்கு மேலே இருந்தவர்கள் கட்டளையிட்டவர்கள் அத்தனை பேர்களும் நடைமுறை தெரியாமல் தப்பு மேல் தப்பு செய்து கொண்டுருந்தவர்கள்.  இதில் உச்சகட்டம் என்ன தெரியுமா?  முறைப்படியான போர் தொடக்கம் பெறுவதற்கு முன்பே அக்டோபர் 8ந் தேதியே இந்தியாவில் இருந்து ஆறு ஐ ஏ எஸ் அதிகாரிகளையும் இரண்டு ஐ பி எஸ் அதிகாரிகளை கொண்டு போய் உருவாக்கப்போகும் (?) நிர்வாக பரிபாலணத்திற்காக தயார் படுத்தி வைத்தனர்.  அதாவது முதல் இரவு நடக்கப் போவதற்கு முன்பே பிறக்கப்போகும் பிள்ளைக்கு பெயர் தேர்தெடுத்த ஆச்சரியம்.

இது போக பொதுமக்களின் வாழ்வாதாரங்கள் கேள்வி குறியாக்கப்பட்ட அந்த ஒரு காரணமே மொத்த மக்களும் பிரபாகரன் பக்கம் சேரத் தொடங்கினர்.  அதுவே பிரபாகரன் தொடக்க வெற்றிக்கு காரணமாக இருக்கத் தொடங்கியது. இது போக இலங்கையின் உள்ளே உள்ள அடிப்படை புவியியல் அறிவு பெற்றவர்களுக்கும் அந்த அறிவு மற்றவர்கள் மூலம் கற்றவர்களுக்கும் நடந்த போர் எங்கு கொண்டு வந்து நிறுத்தும்.  வியட்நாமில் அமெரிக்கா பெற்ற பாடம் , ஆப்கானிஸ்தானில் ரஷ்யா பெற்றது போல இங்கு இந்தியா பெற்றது மிக வருத்தமான விசயம்.  ஆனால் வெறி அடங்குவதாக இல்லை. வெறியுடன் மட்டும் வாழ்ந்து கொண்டுருந்தவர்களை அவர்கள் விரும்பும் ஒரு வேலிக்குள் கொண்டு வரவும் முடியவில்லை. போகப்போக சிக்கல் வலைபின்னலாகி, அவிழ்க்க முடியாத சின்னாபின்னமாக்கியது. மழை விட்டாலும் தூவானம் நிற்கவில்லை.