அஸ்திவாரம்

Monday, December 28, 2009

பிரபாகரன் முன் (3)

" சிங்கள மன்னன் விஜயன் வங்காளத்தில் இருந்து வந்த வழித்தோன்றலில் மூலமாக வந்தவர்கள் தான் நாங்கள்.  நாங்களும் ஆரியர் தான்"  பின்னால் ஆட்சிக்கு வரப்போகும் பிரேமதாசா சார்க் மாநாட்டில் கூறியது.  யஸ்வின் குணரத்னே என்பவர் பண்டாரா நாயகா பண்டாரம் என்ற தமிழர் இனத்தில் இருந்து வந்தவர் என்பதை மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

ஜெயவர்த்னே 300 ஆண்டுகளுக்கு முன் சோழ மண்டலத்தில் இருந்து வந்த செட்டியார் என்ற இனத்தில் இருந்து வந்தவர் என்று ஹிந்த என். ராம் (1989) மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இதுவே ஓர் அளவிற்கு எல்லை மீறி ஜெயவர்த்னே மூக்கை இந்திரா காந்தி மூக்கோடு ஒப்பிட்டு பேசும் அளவிற்கு வந்தது. அதையும் தாண்டி அமிர்தலிங்கம் மூக்கோடு ஒப்பிட்டு நீ தமிழனே இல்லை? என்கிற அளவிற்கு போய் முடிந்தது.

சிங்களர்களின் பெரும்பான்மையினர் தென்னிந்தியர்கள் தான்.  இவர்கள் சிங்களப் பெருமையை மீட்டெடுப்பது என்பது சுத்த சாணித்தனம் (Bull Shit) என்று கிண்டல் செய்தவர் 1954/55ல்  இலங்கைப் பிரதமாக இருந்த சர்.ஜான் கொதலவால என்பவர்.  ஆனால் ஒவ்வொரு சிங்கள தலைவர்களும், புத்த குருமார்களும் தங்களுடைய இனத்தூய்மை திரிபுடன் படைக்கப்பட்ட "மகாவம்சம்" மூலமாக தங்களை நிலைநாட்டிக் கொள்வதில் மிகக் கவனமாக இருந்ததுள்ளனர்.

இது ஒரு புறம் என்றால் தமிழ்த்தலைவர்கள் தொடக்க கால வரலாற்றைப் பார்த்தாலும் சரி , இலங்கை என்பது இரண்டு மக்களும் ஒன்றாக அமைதியுடன் வாழவேண்டிய பூமி என்று "தரிசன" பார்வை மூலம் பார்த்த தொடக்க கால இனவாதி தலைவர்களும் அப்போதைய ஐரோப்பிய பெண்மணிகளை திருமணம் செய்து (ஆங்கிலேயர்கள் உருவாக்கி வைத்திருந்த சிறப்பு சலுகை) அவர்களின் வழித்தோன்றலாக வந்து, மேல்நாட்டு கலாச்சாரம், மொழி, பழக்கவழக்கங்கள் என்று மேல்தட்டு வாழ்க்கை வாழ்ந்தவர்கள்.  அதுவே கடைசியாக அஹிம்சை வழியில் போராடிய தந்தை செல்வா வரைக்கும்.  தந்தை செல்வா மலேசியாவில் ஈப்போவில் பிறந்தவர்.  கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவர். மிகப்பெரிய கல்வியாளர்.  வாதப்புலி. செல்வக்குடிமகன்.  காந்திக்கு இணையாக இன்று வரைக்கும் இலங்கை மக்களால் பார்க்கப்படுபவர்.

ஆனால் தந்தை செல்வா கூறிய "தனி நாடு தான் இனி தமிழர்களுக்கு" என்று கூறியதற்கு முன்பே இந்த தமிழீழத்தை குரல் எழுப்பியவர் அப்போது தந்தை செல்வாவில் தமிழரசு கட்சியில் இருந்த  நவரத்னம் என்பவர்.

" இப்போதாவது நாம் விழித்துக்கொள்வோம்.  டட்லி சேனநாயகா, பண்டாரா நாயகா,  இப்போது சீறீமாவோ பண்டாரா நாயகா என்று வந்தவர்கள் அத்தனை பேரும் நம்மை ஏமாற்றி விட்டனர்"  என்று தொடக்கத்திலேயே குரல் எழுப்பியவர்.  ஆனால் தந்தை செல்வாவின் செல்வாக்கு அவரின் குரலை அமுக்கிவிட்டது.  பின்னாளில் இதே இந்த தந்தை செல்வா வருந்தி மன்னிப்பு கேட்கும் அளவிற்கு கொண்டு வந்து விட்டது.  அப்போதைய தலைவர்கள் சுந்தரலிங்கமும், நவரத்னமும் தெளித்த விதைகள் தான் பின்னாளில் உருவான சிவகுமரன் முதல் தொடங்கி கட்சியில் இருந்து விலகிய தங்கத்துரை, குட்டிமணி உருவாக்கிய TELO முதல் பின்னாளில் தனியாக ஆளுமை செலுத்தும் அளவிற்கு வளர்ந்த (LTTE) பிரபாகரன் வரைக்கும்.  இவர்கள் உருவாக்கிய பாதையில் வந்து சேர்ந்த மொத்த இளைஞர்களும் சிங்கள ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட கல்வி "தரப்படுத்துதல்" மூலமாக பாதிக்கப்பட்டு பாதியில் படிப்பை விட்டவர்களும், வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களும்.  ஆயுதப் பாதையை மறைமுகமாக வளர்த்தவர்களும் சிங்கள ஆட்சியாளர்களே.

தமிழ்நாட்டைப் போலவே இலங்கை தமிழர்களிடத்திலும் சாதீய ஈடுபாடும், தாழ்த்தப்பட்டவர்களின், ஒடுக்கப்பட்டவர்களின் உரிமை மொத்தமும் அடக்கி ஆண்ட விதமும் இங்கே குறிப்பிடவேண்டும்.  காரணம் தமிழன் எங்கு வாழ்ந்தாலும் சுத்த தமிழன் தான்.  எந்த சந்தேகமும் இல்லை.

1984 வரைக்கும் இந்த இலங்கைப் பிரச்சனையில் மக்களுடன் போய் பேசி, அவர்களுடைய அடித்தட்டு மக்கள் வரைக்கும் பழகி கேட்டு உண்மையான தீர்வுக்கு பாடுபட்டவர் என்கிற வகையில் இந்திரா காந்தி காலத்தில் தூதராக செயல்பட்ட ஜி.பார்த்தசாரதி குறிப்பிடத்தக்கவர்.  மொத்த மலையக தமிழர்கள் என்று தொடங்கி அத்தனை தமிழர்களிடமும் தமிழில் பேசி இறுதியாக இணைப்பு சி என்ற வழிமுறையை உருவாக்கியவர்.  அவருடைய பங்களிப்பு எந்த அளவிற்கு இருந்தது என்றால், " இனி இவர் இலங்கைக்கு வந்தால் நாங்கள் பேசத் தயாராக இல்லை"  என்று ஜெயவர்த்னே கூறும் அளவிற்கு?

இதே போல் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் ஜெயவர்த்னே கூறியதும் குறிப்பிடத்தக்கது.

" இலங்கையுடன் இந்தியா தெளிவான புரிந்துணர்வுடன் இருந்தாலும் தென்னிந்தியாவில் தீவிரவாத ஆதரிப்பு ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல"  என்று எள்ளும் கொள்ளுமாக வெடித்து சீறீனார்.

சிறிமாவோ சாஸ்திரி ஒப்பந்தத்தின் போது பிரதமர் நேரு " இது என்ன சுத்த நான்சென்ஸ்"  என்று பொறுப்பை தட்டிக்கழித்ததும், அப்போது இருந்த தமிழக பக்தவச்சலம் " எத்தனை பேர்களை இங்கு ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று எண்ணிக்கை ரீதியாகவே இந்த இலங்கைப் பிரச்சனையை பார்த்ததும் அன்று முதல் இன்று வரையிலும் இந்திய தமிழ்நாட்டு ஒத்துழைப்பு இந்த அளவில் தான் இருக்கிறது.

சாஸ்திரி ஒப்பந்தம் முதல் ராஜபக்ஷே ஒப்பந்தங்கள் வரைக்கும் இந்த தமிழர்களின் பிரச்சனைகள் மொத்தமும் தமிழ் மொழி, தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றி, இலங்கையின் உண்மையான பிரச்சனையை புரிந்து கொள்ள என்று சம்மந்தப்பட்டவர்கள் என்று பார்த்தால் ப.சிதம்பரம், பின்னால் ராஜிவ் காந்தி படுகொலை புலனாய்வுக்குழுவில் தலைமைப் பொறுப்பில் இருந்த டி.ஆர். கார்த்திகேயன்.

ராஜிவ் காந்தி இலங்கை பிரச்சனையில் நுழைந்த போது பணியை ஒப்படைத்தது ப. சிதம்பரத்திடம்.  ஆனால் ப. சிதம்பரத்திடம் பிரபாகரனை கொண்டு போய் சேர்க்க காரணமாக இருந்தவர் புலவர் புலமைபித்தன். இது போக டி.என்.சேஷன் மூலமாக " நீங்கள் இலங்கை சென்று அமைதிப்படை ஏன் அடிவாங்குகிறது? என்ன தான் அங்கு நடக்கிறது?  உண்மை நிலவரத்தைத் தாருங்கள்"  என்று டி.ஆர். கார்த்திகேயனிடம் பணி ஒப்படைக்கப்பட்ட போது அவர் கொடுத்த அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது.

1. விடுதலைப்புலிகளை சேர்க்காமல், கலந்து ஆலோசிக்காமல் இலங்கைப் பிரச்சனையில் தீர்வு கண்டு விட முடியாது.

2.  பேசியபடி உண்மையான அதிகாரங்கள் கொடுக்கப்படவில்லை என்பதைவிட கொடுக்கும் எண்ணத்திற்குக்கூட ஆட்சியாளர்கள் தயராக இல்லை. அமைதிப்படையை வாபஸ் வாங்கிக்கொள்வதே சிறந்தது என்கின்ற அளவிற்கு தீர்க்கதரிசனமாய் செயல்பட்டார்.

இலங்கையில் இந்தியா சார்பாக தூதரகத்தில் பணியாற்றிக்கொண்டுருந்த வடக்கத்தியர்க்கு மொத்தமாக உள்ளே நடக்கும் பிரச்சனைகள் முழுவதும் அப்போது தான் புரிந்த கொடுமையும் நடந்தது.  தொடக்கம் முதல் இறுதி வரைக்கும் ப. சிதம்பரத்தின் கருத்து இதே போல் இருந்தது.  ஆனால் இவர்களைத் தாண்டி மிகப்பெரிய லாபி டெல்லியில் அன்றும் இன்றும் என்றும் இருந்து கொண்டே இருப்பதால் எந்த தமிழனும் தலையிட்டாலும் இறுதியில் தலைவலி திருகுவலியாகத் தான் முடியும் துர்பாக்ய நிலைமை.  அதனால் இன்றுவரையிலும் தேர்தல் சமயத்தில் மட்டும் தொட்டுக்கொள்ளும் ஊறுகாய் போல வாய்ச்சவடாலில் கழிந்து விடுகின்றது.

வட கிழக்கு மகாணங்களில் வாழும் மொத்த தமிழ்மக்களும் காலை எழுந்து இரவு வரைக்கும் ராணுவ வீரனை, அவர்களின் துப்பாக்கியயை பார்த்துக்கொண்டு வாழ்க்கையை கடத்துவது அன்றாட நிகழ்வாக விட்டது.  காரணம் சிங்கள ஆட்சியாளர்கள் உருவாக்கிய 60 ஆயிரம் ராணுவ வீரர்கள் என்பது அவர்களைப் பொறுத்தவரையில் 9 பேருக்கு ஒரு ராணுவ வீரன் என்கிற ரீதியில்.  அந்த அளவிற்கு அச்சமும், அயர்ச்சியும் நிறைந்த தமிழர்களின் வாழ்க்கை. இந்த நிலைமை 1983ல் ராணுவத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி 1700 கோடி என்பதில் இருந்து 2006ல்  6950 கோடி வரைக்கும் உயர்ந்து நாலில் ஒரு பங்கை இராணுவத்திற்கு கொண்டு போய் கொட்டும் அளவிற்கு இந்த இன அழிப்பு வெகு ஜோராக நடந்து கொண்டு இருக்கிறது.

உள்நாட்டில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இத்தனை பிரச்சனைகள் என்றால் தமிழக மீனவர்களுக்கு இன்று வரையிலும் சொல்லி மாளாத துன்பங்கள்.  வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை முதல் தனுஷ்கோடி வரைக்கும் அமைந்த கடல்பகுதிக்கு பாக் நீரிணை என்று அழைக்கப்படுகிறது.  இதற்கு இந்தப்பெயர் வந்தது மற்றொரு சுவையான சம்பவம்.  அப்போது ஆண்டு கொண்டுருந்த (1975 முதல் 1763 வரை) ஆங்கிலேய கவர்னர் ராபர்ட் பாக் என்பவர் அதிரடியாக தன்னுடைய பெயரை சூட்டியதும் அதுவே இன்று வரை நிலைத்து இருப்பதும் நாம் அவருக்கு செலுத்தும் விசுவாசம் தானே?

மொத்த 175 கடற்கரை கிராமங்களும் ஏறக்குறைய நான்கு லட்சம் மீனவர்களுக்கும் கச்சத்தீவு ஒப்பந்தப்படி அந்தோணியார் கோவிலில் வழிபடலாம், மீன்வலைகளை உலர்த்திக்கொள்ளலாம் என்று ஆயிரெத்ட்டு லாம் என்றாலும் அன்றாடம் பார்த்துக்கொண்டுருக்கும் கோர காட்சிகளும் வாய் மௌனியாக இருக்கும் வல்லரசும், வால்பிடிப்பவர்களுக்கும் இந்த தமிழ்நாட்டு மீனவர்களும் பிரபாகரன் போல தீவிரவாதியாகத் தான் தெரிகிறார்கள் போல?

மும்மை தீவிரவாதி கசாப் கூட நான் மும்பைக்கு வந்தது திரைப்பட வாய்ப்பு கேட்டு என்பதாக தெளிவாக பேசும் போது இந்தியா என்ற நாடு வல்லரசா இல்லை எப்போதுமே வாய் மூடிய அரசா? என்று சராசரி இந்தியனின் மனசில் ஒலித்துக்கொண்டுருக்கும் கேள்விகள் எங்கே கொண்டு போய்விடுமோ?

7 comments:

  1. அருமையான பகிர்வு ஜோதிஜி
    உணர வேண்டியவர்கள் உணர வேண்டும்
    புத்தாண்டு நலமாக இருக்கட்டும்

    ReplyDelete
  2. நன்றி. உணரும் காலம் தான் எப்போது என்று தெரியவில்லை? வளர்க வாழ்க புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. எண்களின் நாட்டு வரலாறு.
    அருமையாக எழுதுறிங்க தொடருங்கள்

    ReplyDelete
  4. எங்களின் நாட்டு வரலாறு.
    அருமையாக எழுதுறிங்க தொடருங்கள்

    ReplyDelete
  5. நன்றி தியாவின் பேனா.

    நீங்கள் கொடுத்த இந்த விமர்சனம் இது வரை உழைத்த உழைப்பின் மொத்தமாக நிறைவு செய்த மனப்பான்மைக்கு கௌரவம் என்பது போல் அளித்தமைக்கு நன்றி.

    வெகுஜன வாசிப்பு உள்ள பிரபல்யமான புத்தகம் போல்,குறைவாக நிறைவாக காழ்ப்புணர்வு,தனி நபர் துதி, வெறுப்பு என்பதாக இல்லாமல் மொத்தமாக என்றாவது இந்த ஆய்வுக்கட்டுரை போல பலருக்கும் உதவட்டும் என்பது போல் படைத்த இந்த இலங்கைத் தொடர் என்பது இந்த 2009ல் என்னால் முடிந்த வாழ்வுரிமை போராட்டக்காரர்களுக்கு, புலம் பெயர்ந்து வாழும் அத்தனை லட்ச இலங்கை தமிழர்களுக்கு தேவியர் இல்லம் திருப்பூர் கொடுத்த பங்களிப்பு.

    தனி மனிதன் என்பவனால் செய்யக்கூடியதும் முடிந்த முயற்சியும் இதைவிட வேறு என்ன இருக்க முடியும்?

    ReplyDelete
  6. பிரபாகரன் போல தீவிரவாதியாகத் தான் தெரிகிறார்கள் போல????????????????????????????? மீண்டும் மீண்டும் பிரபாகரனை தீவிரவாதி என்று அழைப்பது சரி தானா

    ReplyDelete
  7. மன்னிக்கவும் தமிழ் உதயம்.

    நான் குறிப்பிட்ட பார்வை என்பது இந்திய கடற்படை, மற்றும் இந்திய அரசாங்கத்தின் பார்வை.

    என்னுடைய பார்வை என்பதும் என்னுடைய உள்ளார்ந்த விருப்பம் என்பதை இந்த நிமிடம் வரைக்கும் எந்த இடத்திலும் பதிவு செய்யப்படவே இல்லை.

    தொடர்ந்து கவனித்து படித்து வந்து இருந்தால் உங்களால் புரிந்து இருக்க வாய்ப்புண்டு. சரித்திர சுவடுகள், தடங்கள் என்பது அந்தந்த இடங்களில் அவரவர் பார்வையை பதிவு செய்வது என்பதே சரியானது,அதுவே சரியாக இருக்க முடியும் என்பதே என்னுடைய கருத்து?

    நல்லவர் கெட்டவர் தீவிரவாதி என்பதை எவராலும் அறுதியிட்டு கூறமுடியாது. வாழ்ந்தவர்களுக்கும், வலியுடன் புலம்பெயர்ந்தவர்களுக்கும் உண்மையானது தெரியும்?

    பகத்சிங் என்பவர் ஆங்கிலேயர் பார்வையில் தீவிரவாதி. அதுவே இன்று இந்திய சரித்திரித்தில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரன்.

    புரியும் என்று நிணைக்கின்றேன்.

    குறிப்பிட்ட காலம் வரும் போது உண்மை எது? பொய்மை எது? அதை தானாகவே காலம் உணர்த்தும்.

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.